மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

By | 11. december 2021

கொரானா வருவதுற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன் தாஜ்மகாலுக்குப் போயிருந்தேன்.

நீண்ட காலக் கனவு அது.

காலையில இளம் சிவப்பு நிறத்திலும் மதியத்தில் வெள்ளை நிறத்திலும் மாலையில் தங்க நிறத்திலும் நிலவு வெளிச்சத்தில் பளிங்கு போல மின்னும் அந்த அதி அற்புத கலைவடிவக் கட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.

மாலையில் ஜமுனை நதிக்கரை வீசும் காற்றை அனுபவித்தபடி அதன் அருகில் அமர்ந்திருந்தபடியும்;… பசும் புற்தரையில் ஒருக்களித்துப்; படுத்தபடியும்… அதன் அழகை அனுபவிக்கும் சுகமே தனி.

16ம் நூற்றாண்டின் ஒரு காதல் சின்னம் அடுத்த ஐந்து நூற்றாண்டுவரை அசையாது நின்று அந்த மொகாலய சாம்பிராயத்தின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் அந்த இரண்டு சமாதிகளின் கீழறையில் இருந்து இருவர் மெதுவாக கதைக்கும் குரலகள் கேட்டன.

செவிப்பறைக்கு சாணை தீட்டிக் கொண்;டேன்.

அது சாஜகானினதும் மும்தாஜினதும் குரல்கள் தான்.

”அன்பே… இந்தக் காதல் சின்னத்தை நீங்கள் எனக்காக தானே கட்டினீர்கள்?”

”உம்….”

”உங்கள் தாத்தா ஜலால்-உத்-தின்-முஹமட் அக்பர் தனது காதல் மனைவியான மனைவியான ஜோதா பேகத்தை என்றுமே இஸ்லாம் மதத்தை தழுவும்படி நிர்ப்பந்திக்கவில்லை. அவளது கண்ணன் வழிபாட்டுக்கும் காளி வழிபாட்டுக்கும் துளசிமாட வழிபாட்டுக்கும் என்றும் அவர் தடை விதித்தவில்லை. போருக்குச் செல்லும் போதெல்லாம் ஆராத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு வழி அனுப்ப அனுமதித்திருந்தார்”

”அது எங்கள் மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்குப் பெருமை தானே. என் பூட்டி அமீதா பானு பேகம் கூட ஆராத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு வழி அனுப்புவதை என் பாட்டியிடம் கற்றுக் கொண்டு அவர் இல்லாத சமயங்களில் அவ்வாறு செய்தாரே”

”ஆனால்….”

”சொல்லு. மும்தாஜ்… என்ன ஆனால்”

”அவரோ தனது மகனின் காதலி என்று தெரியாமல் நாதீரா என்ற நடன மங்கைக்கு அனார்க்கலி என்று பெயர் சூட்டினார்”

”எதற்காக நாதீரா என்ற அழகான பெயரை அனார்க்கலி என்று மாற்றீனார் என்று உங்களுக்குத்; தெரியுமா”

”தெரியும். அனாhகலி என்பது மாதுளம் மொட்டு என்று அர்த்தம். அவர் மாதுளம் மொட்டின் நிறத்தில்; இருந்ததாலும் அது விரியும் பாங்கில் அவர் நடனத்தின் சாயல் இருந்ததாலும்… அவரது உடல் லாவமாக வளைந்து வளைந்து ஆடியதாலும் அவருக்கு அவர் அந்தப் பெயரை அளித்திருந்தார்”

”ஆனால் அவ்வாறு ஒரு ஆடலரசிக்கு அழகான பெயரைச் சூட்டி அழகுபார்த்த அவரே….”

”நீ எங்கே வருகிறாய் என்று புரிகிறது மும்தாஜ். அவளைக் கல்லறைக்குள் வைத்துக் கட்டியதை குறை கூறப்போகின்றாயா?… அவளை அதே கல்லறையின் சுரங்க வாசலினால் தப்பிக்க வைத்துவிட்டது உனக்குத் தெரியாதா?”

”தெரியும். ஆனாலும்…”

”என்ன ஆனாலும்?;”

”அவர் தப்பிக்க வைத்தாரோ இல்லையோ என்பதல்ல என் விவாதம்.  என் மாமனார் சலீம்… அவரின் காதலி  அனார்க்கலி… இருவரின்; காதலுக்கு அவர் கல்லறை கட்டி விட்டாரே. அந்த மாதுளம்  மொட்டின் உணர்வுகளை மதிக்கவே இல்லையே. உங்கள் காதலுக்கு உலகம் வியக்கும் இந்த தாஜ்மகால் சாட்சி. ஆனால் உங்கள் தந்தை மன்ஜு சலீம் அக்பர் என்ன செய்தார்? அனார்க்கலியின் காதலுக்கு லாகூரில் சின்னதொரு கல்லறை மட்டுமே கட்டினர். பின்பு ”என் காதலியிக் முகத்தை இன்னோர் தடவை தரிசிக்க அல்லா அருள் புரிவார் என்றால் நான் இறந்த பின்பும் கூட நான் அவருக்கு நன்றிக்கடன் உடையவனாக இருப்பேன்” என்ற வாசகத்தைப் பொறித்தார். வேறு என்ன செய்தார்?”  

சாஜகான் மௌனமானார்.

மும்தாஜ் தொடர்ந்தார்.

”உங்கள் காதலை விட உங்கள் தந்தையின் காதல் எந்த வகையில் குறைந்தது? பணமும் அதிகாரமும் எல்லாக் காலகட்டத்திலும் சரித்திரத்தை காலின் கீழே போட்டு நசித்துக் கொன்றது மட்டுமல்ல…. அதனை சரித்திரத்தில் இருந்து மறக்கவும் மறக்கடிக்கவும் செய்கிறதல்லவா??

அதன் பின் எனக்கு எதுவும் கேட்கவில்லை.

ஆனால் மாதுளம் மொட்டுகளை எங்கெங்கு காண்கின்றேனோ அப்போதெல்லாம் அனார்க்கலியின் நினைவு மட்டும் என் முன்னே வந்து போகும்.

அவ்வாறே மறந்து போன… அல்லது மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள் என் கண் முன்னே தோன்றி மறையும் பொழுதும் இந்த மாதுளை மொட்டுகள் என் கண்முன்னே வந்து போகும்.

*

எனக்கு அறிவு தெரிந்த பருவம் தொடக்கம் 1971 வரை எங்கள் வீட்டுக்கும் எங்கள் மாமா வீட்டுக்கும் எப்போதும் ஒரு சண்டை வருவதுண்டு.

இலங்கையின் பாராளு மன்ற தேர்தல் பொழுது தொடங்கி தேர்தல் முடிந்த பின்பும் மழை விட்டாலும் விடாத தூறலாக அந்தக் கட்சி சண்டைகள் சில காலம் தொடரும்.

எனது தந்தையார் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். சட்டத்தரணி பொன்னம்பலத்தின் ஆதரவாளர். மாமா வீட்டாரோ மற்ற ஊர்க்காரர்களோ தந்தை செல்வநாயத்தின் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள்.

பொன்னம்பலத்தாருக்கோ செல்வநாயகத்தாருக்கோ எங்கள் தந்தையையும் தெரியாது. எங்கள் மாமாவையும் தெரியாது. ஆனால் இருகுடும்பங்களுக்கும் தேர்தல் காலத்தில் இரு வீட்டாருக்கும் பொதுக்காணியாக இருந்த கிணற்றடியில் அரசியல் சண்டை நடந்து கொண்டேயிருக்கும்.

அம்மாக்கும் மாமிக்கும் இவர்கள் இருவரின் சண்டையால் மனங்கள் கலங்கியபடியே இருக்கும். ஆனால் மச்சான்மார் மச்சாள்மார் நாங்கள் அனைவருமே இந்தச் சண்டைகளை ரொம்ப ரசித்தபடியும் கொஞ்சம் பயந்தபடியும் இருப்போம். 

அவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் கிணறு தூரும் பொழுது மேலே வரும் தொலைந்து போன பொருட்கள் போல பழைய பழைய குடும்ப விவகாரங்கள் எல்லாம் மேலே வரும்.

ஆச்சி சொன்ன அளவு அம்மாக்கு நகைகள் போடாதது…. சீதனம் கொடுத்த பொழுது மாமியின் காணி ஈட்டில் இருந்தது… கல்வீடு என்று தரகர் சொன்னதில் முன் ஹோல் மட்டுமே சீமெந்துக் கல்லால் கட்டியிருந்தது. புpன் அறை இரண்டும் களிமண்ணால் கட்டியது… இத்தியாதி… இத்தியாதி

தேர்தல் முடிந்த பின்பும் சில மாதங்களுக்கு அந்தச் சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் – இரண்டு குடும்பத்தில் ஏதோ ஒரு குடும்பத்தில் ஒரு நல்ல காரியம் அல்லது கெட்ட காரியம் நடக்கும் வரை.

ஆனால் 1972ம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் கூட்டணி என்ற கட்சி உருவாகிய பொழுது இரண்டு வீட்டுச் சண்டைகளும் ஒய்ந்து விட்டன.

இரண்டு வீட்டுச் சுவரிலும்; செல்வநாயகத்தாரும் பொன்னம்பலத்தாரும் கை குலுக்கும் கலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.

அந்த சின்ன வயதில் யோசித்தேன் – ”இவ்வளவு நாட்களும் நடந்த சண்டைகள் எல்லாம் புஸ்வானமாகி விட்டதே?… அம்மாவும் மாமியும் வடித்த கண்ணீரும் வீண்தானே??”. என்று.

அப்பாவைக் கேட்டாலும் சரி… மாமாவைக் கேட்டாலும் சரி… எனக்கே புரியாத அரசியலில் பதில் சொன்னார்கள்.

ஒன்று மட்டும் புரிந்தது – அவர்களைக் கேட்டு எதுவுமே நடப்பதில்லை என.

அவர்கள் சொன்னார்கள். இவர்கள் கேட்டார்கள் என்பது தான் நிஜம்.

அனைத்து தொகுதிகளிலும் வாக்களித்து எங்களைப் பாராளுமன்றம் அனுப்பினால் உங்களுக்கு தமிழீழம் பெற்றுத் தருவோம் என்றார்கள்.

அப்பாவும் மாமாவும் வாக்களித்தார்கள்;. ஆவ்வாறே அப்பாவும் மாமாவும் சொன்னதால் அம்மாவும் மாமியும் வாக்களித்தார்கள். 

எதுவுமே கிடைக்கவில்லை.

எங்களை அவர்கள் மறந்து விட்டார்கள் – அனார்கலியை மறந்தது போல.

கிணற்றடியில் நின்ற மாதுளையில் அணில்கள் கொறித்தவையே அதிகமாய் இருந்தன.

ஆனால் ஒவ்வோர் ஆண்டும் பூக்கும் மாதுளை மொட்டுகள் அழகாகவே இருந்தன.

*

விடுதலைத் தீ இளைஞர்கள் மத்தியில் கொழுந்து விடத் தொடங்கிய கால கட்டம் அது.

எதிரியை நோக்கி நீட்டப்பட வேண்டிய துப்பாக்கிகள் தங்கள் தங்கள் சகோதர இயக்கங்களையும் நோக்கிச் சுட்ட காலகட்டம்.

எனது பெரியப்பா மகன் என் சொந்த மச்சானுக்கு மரண தண்டனை விதித்ததும்… பின்பு அது பின்னொருநாள் கடற்கரையில் பனைகளுக்கிடையில் வைத்து நிறைவேற்றப்பட்டதும் எங்கள் குடும்பத்தில் நேர்ந்த மிகப் பெரிய சோகம்.

அந்தச் சோகம் இன்றுவரை எங்கள் குடும்பத்தில் மறையவே இல்லை.

அந்தச் சோகம் மாற முதல் என் நண்பியும் முதல் காதலியுமான செல்வராணி  இயக்கத்துக்குப் போய் விட்டாள். அவளைப் பற்றி பின் எங்களுக்கு எந்த தகவல்களும் இல்லை.

83 யூலை கரிய நாளாகியது. ஆனால் 1984 ஏப்ரல் மாதம் உத்தியோக பூர்வமாக பட்சமாக தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.

தலைவர்கள் செல்வநாயமும் பொன்னம்பலமும் கை கோர்த்தபடி வலம் வந்த கலண்டர்கள் போல இப்போ நான்கு இயக்கத் தலைவர்களும் எங்கள் வீட்டு வாசலில் கலண்டரில் கை கோர்த்தபடி நிற்றிருந்தார்கள். 

இது முன்பே நடந்திருந்தால் எங்கள் மாமாவீடு இழவு வீடாக மாறியிராது என்று கவலைப்பட்டுக் கொண்டேன்.

என் காதலியையும் இழந்திருக்க மாட்டேன்.

செல் அடித்தாக்குதல்களால் மாதுளம் மொட்டுகளும் மாம்பிஞ்சுகளும் கருகியிராது.

பனைகளும் தென்னைகளும் முறிந்திராது.

மீண்டும் யுத்தங்களும்…. சாமாதானப் பேச்சு வார்த்தைகளும்… பிரகடனங்களும்… தொடர்ந்து கொண்டே வந்தன. இறுதியில் ஆயுதங்களும் விடுதலைக்கான குரல்களும் மௌனமாகும் வரை.

சூனியம் கவிந்த பூமியாயிற்று.

எல்லாத் தியாயங்களும் கல்லறைகளுக்குள் அடங்கி விட்டன.

போருக்கு பலம் சேர்த்த புலம் பெயர் தொப்புள் கொடி உறவுகளும் மௌனமாகி விட்டிருந்தன.

முள்ளிவாய்க்கால் தனது சோகத்தை ஏற்றுக் கொண்டு சுற்றுலாத் தலமாகி விட்டது.

போராட்டத்தில் இழப்புகள் இயல்பானவை என ஒவ்வோர் வீட்டு படலையிலும் எழுதி தொங்க விடப்பட்டன.

உள்ளே வறுமை தாண்டவமாடியது.

அனைத்து இழப்புகளையும் தியாயங்களையும் மறந்து விட்டு உலகம் உருளத் தொடங்கியது.

சொல்லாத  சேதிகள் பல இலங்கியங்களாக உருவெடுத்து உலகத்தின் முன்னே வலம் வரத் தொடங்கின.

மீண்டும் தேர்தல்கள்… வாக்குறுதிகள்… ஏமாற்றங்கள்…

எத்தனையோ மறக்கப்பட்ட தியாகிகளின் கல்லறைகள் ஆங்காங்கே.

*

2021

ஆயுதங்கள் மௌனமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிய போதும் போராட்டங்கள் ஓயவில்லை.

ஆயுதமில்லாத போராட்டங்கள் பலப் பல வடிவங்களில் – அரசியலில்… தேர்தல்களில்… எழுத்துலகில்….

என் தந்தையும் மாமாவும் சிக்கிக் கொண்டது போல எதனிலும் சிக்கிவிடக் கூடாது என்று அதிஜாக்கிரதையாக இருந்தாலும் அஜாக்கிராயையாக எங்கேயாவது சிக்கி விடுவேனோ என்று பயமாக இருக்கின்றது.

”இலக்கிய உலகம் அமைதியாக இருக்கும் கடல் போன்றது. இறங்கிப் பார்த்தால் சுழிகளும் சுறாக்களும் இருக்கும. இதனிடையே சிக்கிக் கொள்ளாமல் நீந்துவதுக்கு கற்றுக் கொள்ள வேண்டும்” கற்றுக் கொண்டது ஞாபகம் வருகிறது.  

”எங்குதான் கசப்பும் துரோகமும் வன்மமும் இல்லை. இதெல்லாம் நிறைந்திருக்கும் சமூகத்திலிருந்து தானே எழுத்தாளனும் வருகின்றான்” என எவர் எவரோ என்னை மிரட்டுகின்றார்கள்.

அக்பரின் முதல் பேகம் ருக்கையா கருவுற்ற பொழுது அதனை வஞ்சகமாக அழித்தது அவரின் மாகாமந்திரியான பெரியதாயாரான மகாமங்காவே.

அவரது அடுத்த பேகமான ஜோதிபா அக்பரின் இரட்டைக் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொலை செய்ததது அவரின் தங்கையின் கணவனே.

அடுத்துப் பிறந்த இளவரசர் சலீமுக்கு இளம் வயது முதல் அபினுக்கு அடிமையாக்கியது முதல் பேகமான ருக்கையா பேகம்தான் தான்.

இளவரசர் சலீம் தன் தந்தைபோல் பார் போற்றும் மொகாலயப் பேரரசராக தலைதூக்க முடியாததுக்கு இந்த அபினும்; அனார்கலியின் இழப்பும் தான்.

கைகுலுக்கிக் கொண்டு காலை வாரும் இன்றைய ஜனநாயங்களை நினைக்க மனம் கொஞ்சமாக இல்லை;… ரொம்பவே பயமாகத் தான் இருக்கின்றது.

கொரானா மரணங்கள் உலகம் முழுக்க.

அதே கொரானா மீண்டும் புது வடிவம் எடுக்கத் தொடங்கி விட்டது.

அகத்தைக் காட்டும் அனைவரின் முகத்திற்கும்; முகமூடிகளையும் அது கொடுத்து விட்டது.

கண்களையும் உதடுகளையும் பார்த்துக் கதைக்க முடியாதவாறு முகமூடிகள்.

வீட்டிற்குள் சிறைவைக்கப்பட்ட வாழ்வுக்கு அதே கொரானா தந்த சின்ன ஆறுதல் பரிசு தான் ZOOM சந்திப்புகள்.

நண்பர்கள் இடையில்….

குடும்பங்களுக்கு இடையில்….

தொழில் சந்திப்புகளுக்கு இடையில்…

இலக்கிய அரசியல் கூட்டங்கள் இடையில்….

கவியரங்கங்கள்….

பட்டி மன்றங்கள்…

புதிய நண்பர்களையும…

பழைய நண்பர்களையும்…

மறந்து போன பல உறவுகளையும்…

மறக்க வேண்டிய உறவுகளையும் இந்த zoomகள் ஞாபகப்படுத்திக் கொண்டு  நகர்ந்துக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் காலம் எதனையும் முற்றாக மறந்து விடுவதில்லை.

எதுவும் கடந்து போகலாம்… ஆனால் நினைவுகள் இலகுவில் கடந்து போய்விடாது. காயங்களையும் தழும்புகளையும் நினைப்பூட்டிக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும்.

குழாய்க் கிணறு வந்தாலும் தூர்ந்து போய் கவனிப்பாரற்று இருக்கும் எங்கள் வீட்டுக் கிணறு… கண்ணாடிச் சட்டத்துள் கறுப்பு வெள்ளை படத்தில் அப்பாவும் மாமாவும்… எந்தப் படங்களும் இல்லாது என் மனத்தில் நிழலாடும் என் மச்சானின் முகம்… அவனைப் பனங்காணியுள் இருந்து தூக்கி வந்து எங்கள் மாமாவீட்டு வாசலில் கிடத்தியது…. இயக்கத்துக்குப் போன என் இளம் வயதுக் காதலி….

மனம் சஞ்சலப்படும் நாட்களில் ஏனோ மாதுளைப்பூக்களும்… மாதுளம் மொட்டுகளும்…. மாதுளம் பிஞ்சுகளும்… பௌவுர்ணமி நிலவில் பால் வெண்மை நிறத்தில் மின்னும் தாஜ்மஹால் மீது அனார்கலி; தன் சோகம் ததும்பும் முகத்துடன் கால்களையும் கைளiயும் வானத்தை நோக்கி வீசியபடி நடனமாடுவது போலவும்… காட்சிகள் என் கண் முன்னே தோன்றி மறைந்து கொண்டு இருக்கின்றன.

ஆக்ரா நதிக்கரையில் உள்ள பசிய புல் வெளியை விட்டு எழுந்து வர மனது மறுத்தது.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)