என் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை.
இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்குப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கிறது.
சாப்பிட்டபிறகுதான் தெரிந்தது – அதில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருந்தது என்று.
கையை வாய்க்குள் விட்டு வாந்தியா எடுக்க முடியும்?
ஆனால் அதன் ருசி நன்றாகக் தான் இருந்தது என்பது இப்பொழுதும் எனக்கு ஞாபகம்.
அதற்காக அதனைத் தேடிப் பின்பு போகவில்லை – போகவிருப்பம் இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பாவம் கிடைக்கும் என்று அம்மாவும் அம்மம்மாவும் சின்னனில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது இப்பவும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
*
வெள்ளிக்கிழமை தவிர எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் இருக்கும். காலநிலைக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு எந்த மீன்கள் மலிவோ அதுவே அதிகமாக எங்கள் வீட்டுச் சட்டிக்குள் வரும். பொதுவாக மாதச்சம்பளத்தில் வண்டியோட்டும் குடும்பங்களின் நிலையும் இதுதான்.
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது – மழைகாலம் என்றால் ஒட்டி ஓராவும், முரல் காலம் என்றால் முரல்புட்டும் எங்கள் வீட்டில் எப்பொழுதும் இருக்கும்.
எதுவுமே இல்லாவிட்டாலும் இறால் எல்லாக் கறிகளுக்கும் கொஞ்சமாகவோ அன்றில் அதிகமாகவோ போடப்பட்டிருக்கும். தவிரவும் வெந்தயக் குழம்பாக. . . சொதியாக. . . சின்ன வெங்காயத்துடன் சேர்த்து பொரித்த பொரியலாக. . .
இதில் இறாலுக்கு மட்டும் ஒரு விசேடம் உண்டு. முதன்நாளோ. . .அன்றில் அதிகாலையில் பிடிக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக பத்துமணிக்கு சந்தை கூடும் பொழுதும் அதில் பல இறப்பதில்லை. அம்மா, அல்லது அம்மம்மா அதன் தோலை நீக்க முதல் அவற்றைச் சட்டிக்குள் போட்டு சுடுநீரை ஊற்றும் பொழுது அவை ஒரு தரம் துள்ளிவிட்டு அடங்கிப் போகும்.
பாவங்களாய்த்தான் இருக்கும். ஆனால் அந்த பரிதாப உணர்ச்சியும் கண்களால் பார்ப்பதோடு செத்துப் போகும். இறால் பொரியலை கடைசியாக சாப்பிடும் பொழுது அது ஒன்றும் கண்ணுக்கு முன் வருவதில்லை.
*
ஆனால் டென்மார்க்கிற்கு வந்த பின்பு கடற்கரையில் விற்ற கல்லுப் போன்ற ஒரு மீனை
குசினித் தொட்டியில் போட்டு விட்டு அதனைக் கழுவுவதற்காக கொஞ்சம் சுடுநீரைத் திறந்து விட்ட பொழுது அவை இறக்காமல் இருந்ததனால் அவை துள்ளிப் பாய்ந்து நிலத்தில் விழுந்து துடித்ததும். . .சியாமளா பயந்து சத்தம் போட்டுக் கொண்டு மாடிப்படியில் ஓடியதும். . . நான் மீன்களைப் பிடித்து உடனே ஐஸ் பெட்டியில் போட்டு அவற்றை விறைக்க வைத்து சாக்கொண்டதும். . . பின் ஒரு கிழமையாக சியாமளா என்னுடன் கதைக்காமல் ஒரு கொலைபாதகனைப் பார்த்துக் கொண்டு திரிந்தது போல நடந்தது கொண்டமையும். . . எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.
அப்பொழுது அவள் நாலுமாதக் கர்ப்பம் வேறு.
மாமிசம் என்றாலே என்ன என்று தெரியாமல் வளர்ந்த அவளுக்கு அன்று நான் செய்தது பெரிய உயிர்க்கொலை தான்.
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு!
எங்கள் வீட்டில் கோழி சமைக்கப்படும் நாட்களில் கோழி உரிப்பதற்கு என்று ஒரு வயோதிபர் வருவார். அவருக்கு கோழி உரிப்பதற்கான காசு ஒரு போத்தல் கள்ளிற்கான காசு தான்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கள்ளின் விலை கூடிக்கொண்டு போகப் போக எங்கள் வீட்டில் கோழி உரிப்பதற்காக அவருக்கு கொடுக்கபட்ட காசும் கூடிக்கொண்டே வந்தது. கடைசியாக அவருக்கு 60 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுதாக ஞாபகம்.
அவர் வீட்டிற்கு பின்னால் நின்ற கொய்யா மரத்தில் உருவு தடம் போட்டு கோழியின் கழுத்தை அதனுள்; வைத்து தடத்தை இறுக்க அது தன் செட்டைகளை அடித்து, துடித்து இறக்கும் வரை என்னை பின் வளவுக்குள் போகக்கூடாது என்பது அம்மாவின் கட்டளை.
ஆனாலும் பாவட்டைப் பற்றைக்குப் பின்னால் ஒழிந்து நின்று பார்த்தபடியால் தான் இப்போது அவை எப்படிச் சாகடிக்கப்பட்டன என என்னால் நினைவுகூர முடிகின்றது.
அப்பொழுதும் அடிக்கடி யோசிப்பேன் ஏன் இவற்றை வலி தெரியாமல் கொல்லக்கூடாது என?
அந்த நினைப்புகள் நினைப்பவற்றுடன் போய்விடும்.
மதியம் வந்தால் மணக்க மணக்க கோழிக்கறியும் புழுங்கல் அரிசிச் சோறும். . .
ஆனால் சென்னை, திருச்சி, மதுரை என நான் இந்தியாவில் அலைந்து திரிந்த காலத்தில் இந்தியச் சந்தைகளில் நாங்கள் கைகாட்டும் கோழிகளை பிடித்து. . . எடைபோட்டு. . . பின் மரக்குத்திகளில் வைத்து. . . ஓங்கிய கத்தியால் கழுத்தில் ஒரே போடாய் போடும் போது வலி குறைவாக இவைகள் இறக்கின்றனவே என்று எண்ணினாலும் அதனைப் பார்த்துக் கொண்டு பரிதவிக்கும் மற்றைய கோழிகளை நினைத்துப் பரிதாபப்படுவேன்.
அந்த நினைப்பும் அன்றைக்கு நன்கு முழுகி நாட்டுச் சாராயத்துடன் அந்தக் கோழியை சாப்பிடும் பொழுது மறைந்து விடும்.
*
ஆனால் வாழ்க்கையில் இரண்டு தடவைகள் ஆடுகள் வெட்டப்பட்டு;பட்ட பொழுது அல்லது நெற்றிப் பொட்டில் வெடிவைத்துக் கொள்ளப்பட்ட பொழுது பக்கத்தில் நின்ற அனுபவத்தில் அந்த இரண்டு தடவையும் நான் ஆட்டிறைச்சி சாப்பிடவில்லை என்பது உறுதி.
முதலாவது சென்னையில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது!
புதுவருடத்துக்கு ஆடும் வெட்டி தண்ணியும் அடிப்பது என்பது ஏற்பாடு.
சுற்றிவர ஐயர்மார் வீடுகள்.
விசயம் வெளியில் தெரிந்தால் அடுத்தநாள் நாங்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்பது திண்ணம்.
எனவே குளியலறையில் வைத்து நடுச்சாமத்தில் கழுத்தை அறுத்து அதனைச் சாகடிப்பது என ஏற்பாடு. அப்படிச் செய்ய முதல் அது சத்தம் போடாமல் இருக்க வாயைத்துணியால் கட்டிவிடுவதும் என்று நானும் சேர்ந்து திட்டம் போட்டாலும், ஆட்டின் கழுத்தை அறுக்கும் பொழுது அந்த இடத்தில் நான் நிற்க மாட்டேன் என உறுதியாகச் சொல்லி விட்டேன்.
நடுநிசியாகும் வரை நித்திரை கொள்ளாமல் இருப்பதற்காக சீட்டாடிக் கொண்டு இருந்தோம். இடைக்கிடை சுற்றவர உள்ள வீடுகளில் உள்ளவர்கள் நித்திரைக்குப் போய்விட்டார்களா என நான் தான் அடிக்கடி போய்ப் பார்த்துக் கொண்டேன்.
ஊர் ஒரளவு அமைதியாக தூங்கிக் கொண்டு இருந்தது.
குளியலறை வாசலில் நின்ற தென்னை மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஆடு நிலத்தில் பரப்பப்பட்டிருந்த அளவுக்கு அதிகமான இலை குழைகளின் மீது தூங்கிக் கொண்டு இருந்தது.
அதற்கு இன்னமும் ஆயுள் அதிகூடியது இரண்டு மணித்தியாலங்கள் தாள். . .நினைக்க பாவமாய் இருந்தது.
இரண்டு மணிநேரத்தில் இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து ஊர் முற்றாக அமைதியாகி விடும். அதன்பின் எல்லாம் திட்டமிட்படி நடக்கப் போகின்றது.
கரன் குளியலறைக்குள் கொண்டுபோய் ஆட்டின் வாயைக்கட்ட. . .சிவா முன்னங்கால்களை இழுத்துப் பிடித்திருக்க. . .றகு பின்னங்கால்களை பிடித்திருக்க. . .கருணாகரன் கழுத்தில் கத்தியால் ஓங்கிப் போடுவான் – இதுதான் திட்டம்.
மீண்டும் போய் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனாலும் அன்று சீட்டாட்டத்தின்பொழுது அதிகமாக பிழை விட்டுக் கொண்டிருந்ததும் என் சக தோழன் என்னைப் பேசிக் கொண்டிருந்ததும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.
றோட்டின் அமைதி குலைந்தது போலிருந்தது.
இரண்டாவது ஆட்டம் முடிந்து விட்டது போலும். . . உரத்த குரலில் கதைத்துக் கொண்டு போனார்கள். அது ஏதோ ஒரு பாரதிராஜாவின் படம் என்று நினைக்கின்றேன். இப்பொழுது ஞாபகம் இல்லை.
சைக்கிளில் போனவர்களை றோட்டோரத்தில் நின்ற நாய்கள் குலைத்துக் கொண்டு துரத்துவதும். . . சைக்கிளில் இருந்தபடியே ஒருவன் அதனை கெட்டவார்த்தையால் ஏசியபடி உதைந்து விட்டுப் போனதும். . . நாய் வலியால் குழறிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு பின்னால் ஓடிவந்ததும். . .பின் அது ஊளையிடத் தொடங்க ஊர் நாய்கள் எல்லாம் சேர்ந்து கொள்ள
பின்னால் கட்டி நின்ற ஆடு ஆரவாரப்படத் தொடங்கியது.
“நாய்கள். . .நாய்கள். . .நன்றி கெட்ட நாய்கள். . .உந்த நாய்கள் எல்லாத்தையும் குழப்பப் போகுது” என நாய்களை நாய்கள் என கருணாகரன் திட்டிய பொழுது எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும் ஆரவாரம் கொஞ்ச நேரத்தில் அடங்கி விட்டது.
இரவு மணி 1.30ஐ காட்டியது.
சரி மச்சான் எழும்புவம் என நால்வரும் எழுந்து கொண்டார்கள்.
தம் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் என்னை மீண்டும் ஒரு தரம் தம்முடன் சேரும்படி கேட்டுக் கொண்டார்கள்.
நான் மறுத்து விட்டேன்.
”விடடா பயந்தாங் கொள்ளியை. . .” என கரன் சொல்லிக் கொண்டு முன்னே போக மற்ற மூவரும் பின்னே போனார்கள்.
நான் என் அறைக்குள் போய்விட்டேன்.
அறைக்குள் போய் நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்துக் கொண்டு நுளம்புகளின் தொல்லைகளுக்குப் பயந்து பெற்சீற்றால் தலை முதல் கால் வரை மூடிக் கொண்டு படுத்தாலும் என் நினைவு, எண்ணங்கள், காது அனைத்தும் வீட்டின் பின்புறமும் கறுத்த ஆட்டின் மேலும் தான்.
ஒரு ஐந்து நிமிடமாய் எந்தச் சத்தமும் இல்லை.
திடீரென ”பா” என்ற ஆட்டின் அலறல் சத்தமும், ”அம்மா” என்ற கரனின் சத்தமும் ஒன்றாகக் கேட்டது.
போர்வையை உதறிப் போட்டு எழுந்து ஓடினேன்.
குளியலறைக்குள் நால்வரும் அமளிப்பட்டு நின்றார்கள்.
ஆடு திமிறும் சத்தம் கேட்டது – கூடவே கரண் முணுகுவதும். கேட்டது.
”திறவுங்கோடா கதவை – கரனுக்கு என்ன நடந்தது”
கதவு நீக்கலூடு சத்தம் போட்டன்.
”போடா. .ப . – – – – – – ” கெட்ட வார்த்தையால் என்னைத் திட்டினார்கள்.
நான் பெரிது படுத்தவில்லை.
”கரனுக்கு என்னடா நடந்தது” என்றவாறு கதவைத் தள்ளித் திறக்க முதலே ஆடு துடித்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தது.
கரனின் காலில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
கருணாகரனும் சிவாவும் விழுந்த ஆடு ஓடாமல் இருக்க ஆட்டின் பின்னால் வந்து அதனை இழுத்துப் பிடித்தார்கள்.
ஆனால் அது அவர்களைத் திமிறி விட்டு பக்கத்து பற்றையுள் மறைந்து விட்டது.
நான் போய் கரனைப் பிடித்துக் கொண்டு எனது சாரத்தினை கிழித்து அவன் கால்களுக்கு கட்டுப் போட்டேன்.
அவன் ஆட்டின் கால்களை இறுக்கமாக இழுத்துப் பிடிக்காததாலும், கருணாகரனுக்கு ஆட்டை வெட்டும் பொழுது கை நடுங்கியதாலும், மேலாக ஆடு திமிறியதாலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
அன்றிரவு பற்றை முழவதிலும் ஆட்டைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் அதன் அலறல் சத்தம் இன்றும் எனக்குள் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
அடுத்தநாள் சுலைமான்பாயின் இறைச்சிக்கடையில் வேண்டிய ஆட்டு இறைச்சிக்கறியை கூட சாப்;பிட என் மனம் ஏகவில்லை.
பின்நாளில் கரனின் மனைவி, ”காலில் என்ன காயம்” என கேட்டதும். . . கரன் ”கட்டாய றெயினிங்கில் நடந்தது” என்று சொன்னதும். . . நாங்கள் நால்வரும் எங்களுக்குள் ”ஓம். . .ஓம். .. அவர் கட்டாயம் றெயினிங் எடுத்திருக்க வேண்டும்” என எங்களுக்குள் சிரித்ததும் இப்பவும் அந்த கொடுமையான இரவின் இனிய பக்கமாக என்னுள் வந்து போகும்.
*
மற்றைய ஆட்டுச் சம்பவம் டென்மார்க்கில் நடந்தது.
எனது இரட்டைப் பெண் பிள்ளைகளின் ஐந்தாவது பிறந்தநாள் நெருங்கிக் கொண்டு இருந்தது.
மனைவி மிகப் பெரிதாகவே அதனை ஏற்பாடு செய்திருந்தாள்.
சுமார் 300 பேருக்கு சொல்லியிருந்தாள்.
டெனிஷ்காரரின் கலியாண வீடு என்றாலும் சரி. . .செத்தவீடு என்றாலும் அதிகூடியது ஐம்பதில் இருந்து 75பேர் தான் வந்திருப்பார்கள். என்னுடன் வேலை செய்யும் சக ஊழியரின் மனைவியின் செத்தவீட்டிற்கு எண்ணி 8 பேர் வந்தது நல்ல ஞாபகம் இருக்கிறது. அது அவர்கள் உலகம்.
எனது வாழ்க்கை. . . எனது விருப்பம். . . என்பது அவர்கள்;.
எங்கள் வாழ்க்கை. . .எங்கள்; விருப்பங்கள். . . என்பது நாங்கள்.
வரவேற்ற 300 பேருக்கும் கடையில் ஆட்டிறைச்சி வேண்டுவதை விட ஊராடு வேண்டுவதே மலிவு என விமலநாதண்ணை சொல்ல அவரின் ஏற்பாட்டின் படி ஆட்டுக்கார ஜென்ஸிடம் தொலைபேசியிலேயே பேரம் பேசப்பட்டது.
அதன் பிரகாரம் தொடர்ந்து வந்த சனி அதிகாலை 4 மணி போல் ஜென்ஸின் வீட்டு மணியை அழுத்தினேன். ஏன்னுடன் விமலநாதண்ணையும் வந்திருந்தார்.
ஜென்ஸ் எங்கள் இருவரையும் பின்னால் ஆடு மாடுகள் கட்டி நிற்கும் பெரிய மாலுக்கு அழைத்துப் போனான்.
ஒரே இருட்டு.
அவனின் டோச் லைற் வெளிச்சத்தில் பின்னால் சென்று கொண்டு இருந்தோம்.
எங்கள் காலடிச் சத்தம் கேட்டு ஆடு, மாடு, கோழிகள் எல்லாம்; எழுந்து விட்டன.
குதிரை ஒன்றும் கனைத்தது.
இதுவும் இறைச்சிக்கா என ஜென்ஸிடம் கேட்டேன்.
அவனும் ஆம் எனத் தலையாட்டினான்.
நான் எதுவும் பேசவில்லை.
திரும்பி விமலநாதண்ணையைப் பார்த்தேன்.
”கிறிலுக்கு நல்லாய் இருக்கும்” என்றார்.
எனக்கு அவருடன் நட்பு வைத்திருப்பதே ஏதோ போல இருந்தது.
ஆடுகள்கட்டியிருக்கும் இடத்துக்கு வந்ததும் ஜென்ஸ் ஒவ்;வோர் ஆடுகளின் முகத்திலும் டோர்ச் லைற் வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.
அவை கொஞ்சம் மிரண்டன.
பெரிய ஆடுகள் கொஞ்சம் முத்தலாக இருப்பதால் சிறியதாக இரண்டு ஆடுகள் வேண்டுவோம் என விமலநாதண்ணை அபிப்பிராயப்பட்டார்.
ஜென்ஸ்சும் வெள்ளைநிறத்தில் நின்று இரட்டை ஆட்டுக்குட்டிகளை காட்டினான்.
அவையே நல்லது என விமலநாதண்ணை முடிவு செய்தாலும் எனக்கு மனத்தினுள் என்னவோ செய்தது. . . . இரட்டைப் பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு இரட்டை ஆட்டுக்குட்டிகள். . .
ஜென்ஸ் இரண்டையும் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவை மறுப்பது நன்கு தெரிந்தது.
”எப்பிடி சாக்கொல்லப் போறான்”
”பொறுத்திருந்து பாரன்”
ஜென்ஸ் முதலாட்டின் கால்களை இறுகக் கட்டிவிட்டு கையில் ஒரு சின்ன கைத்துப்பாக்கியை எடுத்தான்.
எனக்கு புரிந்து விட்டது.
நான் மறுபக்கம் திரும்பி விட்டேன்.
”சன்னம் தலைக்குள்ளை பாயாது. ஆனால் அது மூளையை சாகடித்து விடும்” என விமலநாதண்ணை சொல்லி முடிக்க முதல் ”படக்” என்று சத்தம் கேட்டது.
தொடர்ந்து ஆடு விழும் சத்தம்.
திருப்பி பார்த்தேன்.
ஜென்ஸ் தனது கூரிய கத்தியால் தென் குரல்வளையை வெட்டிவிட்டான்.
இரத்தம் ஓடத்தொடங்கியது.
நான் காருக்குள் போய் உட்காந்து விட்டேன்.
விமலநாதண்ணையே மற்ற ஆட்டையும் ஜென்சுடன் சேர்ந்து சாக்கொண்டு. . . பின் உரித்து. . .பாகம் பாகமாக பெரிய பையில் போட்டுக் கொண்டு காரில் கொண்டு வந்து ஏற்றினார்.
வீடு வரும்வரை ஏனோ நான் மௌனமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
அன்று சரி. . .அடுத்த வாரத்தில் நடைபெற்ற எம் பிள்ளைகளின் பிறந்தநாளிலும் சரி. . .நான் அந்த ஆட்டிறைச்சிக்கறி சாப்பிடவில்லை என்பது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. . .
*
இதெல்லாம் நடந்து இப்பொழுது பதினெட்டு வருடங்களாய் போச்சுது.
பிள்ளைகளுக்கும் கலியாண வயது வந்திட்டுது.
இலங்கையிலும் எத்தனையோ நடந்து முடிந்து போச்சுது. . . பாய் இடுக்குகளில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை ஒவ்வொன்றாக நசுக்கி கொல்வது போல போராட்டத்தையும் போராட்டக் களத்தில் நின்ற மக்களையும் கொன்றாயிற்று. . . கம்பிவேலிகளுக்கு பின்னால் நிற்பவர்களை வைத்து அரசியல் பேரம் பேசிக் கொண்டு இருக்கின்றோம். . .புலம் பெயர் தமிழரும் கொடிகளைச் சுற்றி வைத்துவிட்டு தம்தம் கருமங்களில். . . மீண்டும் கோயில்கள். . . சனி ஞாயிற்று மதியத்தில் தேர்த்திருவிழாக்களும். . . மாலையில் பிறந்தநாள் கொணஇடாட்டங்களும் என அவர்கள் ஐக்கியமாகி விட்டார்கள். . . .
ஐம்பதாவது. . . அறுபதாபது. . . பிறந்தநாள் விழாக்களும். . . . இருபத்தைந்தாவது திருமணவிழாக்களும்தான் தற்போதைய லேற்றஸ் ஸ்டண்ட். . .
இடைக்கிடை ஏதாவது இந்தியத் திரைப்படங்களை பகிஸ்கரிக்கச் சொல்லி எஸ். ஏம். எஸ். வரும். . . . அல்லது நாடு கடந்த தமிழீழப் பிரகடனம் பற்றிய கூட்டங்களுக்கு அழைப்பு வரும். . . . முன்பு கூட்டங்கள் நடந்த அதே இடங்களில். . .
நாம் தொடர்ந்து பிழை விடுகின்றோம் என மனம் சொல்லிக் கொள்ளும்.
இன்று சனிக்கிழமை. . . வீட்டில் ஆட்டிறைச்சிக் கறி.
இந்த பதினெட்டு வருடத்தில் எத்தனையோ தடவைகள் ஆட்டிறைச்சிக் கறி சாப்பிட்டு இருந்தாலும் இன்றென்னவோ எனக்கு மனம் சரியில்லை.
ரீ. வீ. ஐ ஓட விட்டுவிட்டு முன்னே இருந்த சோபாவில் கை சோற்றுக் கோப்பையை பிசைந்து கொண்டு இருக்கிறது.
கையும் வாயும் மனமும் ஒன்று சேர மறுக்கின்றது – எனக்கு நன்றாக தெரிகின்றது.
ரீ. வீ.யில். . .
ஒரு கடற்கரையோ. . ஆற்றங்கரையோ. . .ஆடைகள் களையப்பட்ட நிலையில் இளைஞர்கள். . .கண்களும் கைகளும் கறுத்த துணியால் கட்டப்பட்படி. . . .இழுத்து வந்து முழங்காலில் இருத்திவிட்டு. . . பின்னால் ஒரு இராணுவீரன் .பின் தலையைக் குறிபார்த்து. . .
”டுமீல்”
இரத்த வெள்ளம் அவன் நிர்வாணமாக. . .
அடுத்து இன்னெருவனையும் இழுத்து வருகிறார்கள். . .
எனக்கு பிரக்கேற கைகளில் இருந்த சாப்பாட்டுக் கோப்பை தானாகவே நிலத்தில் விழுந்து விட்டது.