கணினித் திரைக்கு முன் சுஜித்தா.
ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம்.
”அங்கிள்… ஹமோன்… வந்து பாருங்கோ… அப்பா அம்மாவும் வாங்கோ” – சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள்.
அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர். வயது 22.
அவள் அமர்ந்திருந்த எனது அறைக்குள் மூவருமே ஓடிச் சென்றோம்.
எனது கணினியில் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களும் சுற்றிக் கொண்டிருக்க பூமிப்பந்து மட்டும் தனித்து மேலே நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
அடுத்த வினாடியில் அமெரிக்காஇ அந்தாட்டிக்காஇ அவுஸ்திரேலியாஇ ஆசியாஇ ஆபிரிக்காஇ ஐரோப்பா என அகரவரிசைப்படி அனைத்து கண்டங்களும் பூகோள உருண்டையில் இருந்து மேலெழுந்து வந்து வந்து பின் மறைந்து கொண்டிருக்கின்றன.
எழுந்து வந்து மறைந்து போகும் கண்டங்களில் மனிதர்களின் அசைவுகளும் தெரிகின்றது.
கணினித் திரையின் வெளிச்சத்தைக் கூட்டியும் தெளிவை இன்னமும் கூர்மைப்படுத்தியும் கொண்டு கிட்டவாகச் சென்று அவதானிக்கின்றேன்.
மேலே வரும் மனிதர்கள் தங்கள் கைகளை அசைத்துக் காட்டி விட்டுப் போவது போலப் புலப்படுகிறது.
இன்னமும் உற்றுப் பார்க்கின்றேன்.
அவைகளில் அதிகம் தெரிந்த முகங்களாய் இருக்கின்றன.
ஒவ்வொரு கண்டங்களின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஓட்டப் பந்தயம் ஆரம்பிக்கின்றது போலப் புலப்படுகின்றது.
ஒலிம்பிக் பந்தயத்தில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு ஓடுவது போல இங்கு ஒவ்வோர் கைகளிலும் வெற்றி வாகைச் சூடிய வகையில் வெற்றிக் கொடிகள். அவற்றில் அதிகமானவை ஐரோப்பிய நாட்டுக் கொடிகள் போல இருக்கின்றன.
அவர்கள் ஐரோப்பாவில் வென்ற கொடிகளா?… அல்லது ஐரோப்பாவை வென்ற கொடிகளா??… வென்றவர்கள் அவர்கள் என்றால் தோற்றவர்கள் யார்???
இன்னமும் உற்றுப் பார்க்கின்றேன்.
அதில் ஓடுபவர்களின் உடலில் யாதொரு துண்டுத் துணியும் இல்லை.
“யூ நோட்டி சுஜி” என அவளின் காதை செல்லமாக பிடித்து திருகினேன்.
“நீங்கள்தான் இவளைத் திருத்த வேண்டும். இவளை டென்மார்க்கிலேயே விட்டு விட்டுப் போறம். இவளை கட்டி அவிழ்க்க எங்களால் ஏலாது”இ சாந்தியும் ஆமோதித்தாள்.
வுயதான ஆண்கள்… பெண்கள்… இளம் குடும்பத்தினர்… இளைஞர்கள்.. யுவதிகள் என அனைவரும் தமிழர்கள் போலத் தெரிகின்றது.
எனக்குத் தெரிந்த… நான் சந்தித்த… நான் பேசி மகிழ்ந்த.. என்னுடனேயே விருந்துண்ட… என்னுடன் கிறிக்கட்டும் காட்ஸ்சும் விளையாடிய தமிழர்கள் போலத் தெரிகின்றார்கள். ஆனால் யாரும் நிர்;வாணத்தைப் பற்றிக் கவலைப்படாது வெட்கம் ஒரு துளியும் இல்லாது ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆளுக்கால் கதைத்துக் கொண்டும்… அரசியல் விவாவித்துக் கொண்டும்… கடைசியாக கூறிய சீட்டின் கழிவு பற்றி சிலேகித்துக் கொண்டும்…தங்களுக்கு வேண்டியவர்களை அணைத்துக் கொண்டும் வேண்டாதவர்களை விலத்தியும் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.
குழந்தைகளும்; பிள்ளைகளும் நிர்வாணமான இல்லாது நல்ல அழகான உடுப்புகள் அணிந்தபடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாணமான ஒடிக்கொண்டிருக்கும் வளர்ந்தோர்கள் தாங்கள் வழமையாக அணியும் கண்ணாடியை அணிந்து இருக்கின்றார்கள். அவ்வாறே சிலரின் காதில் ‘வாக் மென்’ தொங்குகின்றது.
இங்கு நிர்வாணமாய் ஓடுபவர்களுக்கிடையே ஏதோவொரு ஒற்றுமையுண்டு.
நன்றாக யோசிக்கின்றேன்.
ஆம்! இவர்கள் அனைவரின் படங்களும் என் பேஸ்புக்கில் இருக்கின்றன. அல்லது என் நண்பர்களின் பேஸ்புக்கில் இருக்கின்றன.
“என்ரை பேஸ்புக்கை ஹாக் பண்ணினியா?”
அவள் மீண்டும் குழந்தையாகச் சிரித்தாள்.
“இவங்கட மானத்தை வாங்க ஹக் பண்ணுறதில் தப்பில்லை அங்கிள்…. ஆவனவன் தப்பச் செய்யேக்கை சமுதாயம் தங்களை இப்படிப் பார்க்கும் என்று இவங்களே பீல் பண்ண வேண்டும். இவங்களுக்கு ஏன் அங்கில் கோட்டும் சூட்டும்.. கோயிலும் குளமும்… பூவும் நகையும்” தாய் சற்று முன்பு ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளியதை மகள் ஆமோதிக்கும் வண்ணம் அமைந்திருந்தது அந்த கிரபிக் வேலைகள்.
தொடந்ந்து கவனித்தேன்.
சுஜி சொன்னவற்றையும் தாண்டி அவர்களுக்குள் ஏதோவொரு ஒற்றுமையுண்டு.
அனைத்துக் கண்டங்களிலும் இருந்து ஆரம்பிக்கும் இந்த மரதன் ஓட்டம் ஐரோப்பாவின் திசைகளையே நோக்கியே நடைபெறுகிறது. அனைத்து நாட்டு ஆரம்ப புள்ளிகளில் இருந்து ஆரம்பிக்கும் அம்புக் குறிகள் ஐரோப்பாவின் தலைநகரையே நோக்கி சுட்டி நிற்கின்றன.
அதில் ஒரு பகுதியினர் காடுகள்… மலைகள்.. ஆறுகள்.. பாலைவனங்கள்… அனைத்தையும் தாண்டி டென்மார்க்கை வந்தடையப் போகின்றார்கள்.
குளிர், மழை, பனிஇ காற்று, வெயில் இவற்றினிடையே உடம்பில் ஒரு ஒட்டுத் துணியும் இல்லாது இவர்கள் எப்படி இங்கு வந்து சேரப் போகின்றார்கள்.
“காசு கிடைக்கும் என்றால் வருவாங்கள்… பிணமும் வாய் திறக்கும் என்றால் இதெல்லாம் யுயூப்பி”
சுஜி கதிரையில் இருந்தபடியே அரைகுறை நித்திரையில் அலட்டுவது போலத் இருந்தது.
“சுஜி… எழும்புங்கோ… எழும்புங்கோ… போய் கஅப்பா அம்மாவோடை படுங்கோ”
நல்ல குளிரான ஒரு யூஸ் கிளாசை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து கணினிக்கு முன்னால் அமர்ந்தேன். இன்னும் சிலரை அந்த நிர்வாணமனிதர்களின் ஓட்டத்தில் இணைப்பதற்காக.
இன்ரநெற் தொடுப்பு அற்றுப் போய் இருந்தது.
வைரஸ் கம்பியூட்டரை தாக்கியிருந்தது.
“ஸிட்… “ என திட்டியபடி சோபாவில் போய் விழுந்தேன்.
*
சாந்தியின் புகையிரம் மேடைக்கு வர இன்னமும் ஐந்து நிமிடம்தான் இருந்தது.
நான் ஸ்டேசனில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் றவிக்கில் மாட்டிக் கொண்டு விட்டேன்.
இன்று றொஸ்கிலில் மியூசிக் பெஸ்ரிவல் என்பதனை மறந்து போய்விட்டேன்.
ஐரோப்பாவில் உள்ள இளைஞர்கள்இ யுவதிகளும் கலந்து கொள்ளும் நான்கு நாள் இசைத்திருவிழா. உலகம் முழுக்க இருந்து மிகச் சிறந்த பாடகள்கள் கலந்து கொள்வார்கள்.
ஓராண்டு விழா முடிந்து அடுத்த ஆண்டு அறிவி;ப்பு வந்தவுடனயே அனைத்து ரிக்கற்றுகளும் இணையத்தளத்தில் விற்பனையாகி விடும்.
இந்த நாட்களுக்கும் இசை என்பது ஒரு முகம் என்றால் காதல்இ காமம்இ கஞ்சாஇ தூள்இ தண்ணி என்பது அடுத்த முகங்கள்.
இரவு முழுக்க ஆட்டமும்… பாட்டும்… பகல் வெயில் வந்து முகத்தில் சுட்டு எழும்வரை தூக்கமும்… மாலையில் இசை விழா தொடங்கும் வரை வீதிகளில் அலைதலும் இந்த நான்கு நாட்களின் அட்டவணையாக இருக்கும்.
இளைஞர்களும் யுவதிகளும் ஆளைஆள் அணைத்தபடி அரைகுறை ஆடைகளுடன் கோடைகால வெயிலை அனுபவித்தபடி… எந்தக் கட்டுப்பாடும் இல்லாது இளமையை இனிதே அனுபவித்தபடி….
சில ஜோடிகள் பிரியும்… சிலதுகள் இணையும்… ஐம்பதினாயிரமான றொஸ்கில் நகரின் சனத்தொகை ஒரு இலட்சமாக இரட்டிப்பாகும். பாதையோரங்களில் கடைகள் விரியும். விபச்சாரமும் விலை போகும்.
எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கங்கள் வீதிக்கு வீதி நின்று ஆணுறைகளை இலவசமாக வழங்கிக் கொண்டு நிற்பார்கள்.
இந்த நெரிசலில் தான் புகையிரதம் வந்து விடப்போகின்றதென்ற படபடப்புடன் நான் ஸ்ரேறிங்கை இறுகப் பிடித்தபடி.
“சாந்தி” அவளின் பெயரை என்னையறியாமல் என் உதடுகள் உச்சரி;கின்றது.
மிகத் தூரத்து சொந்தம். மச்சாள் முறை. பெரிய பணக்காரர்கள்.
இந்த வீதிகளை நிறைத்திருக்கும் இதே இளைஞர்களினதும் யுவதிகளினதும் வயதில் அவள் புத்தகங்களை நெஞ்சுடன் கட்டிக் கொண்டு பல்கலைக்கழகத்துள் வரும் பொழுதும் போகும் போது ஒரு தேவதை வந்து போவது போல இருக்கும்.
கம்பி வேலியில் நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் எனக்கு பக்கத்தில் நின்ற பெரிய மலைவேம்பின் குளிர்காற்றை அப்போதுதான் அனுபவிப்பது போலத் தோன்றும்.
எனது காதலை சொல்லவா… விடவா… என முதலாம் வருடத்தில் ஆரம்பித்த தயக்கம் மூன்றாம் ஆண்டுவரை தொடர்ந்து கொண்டே வந்தது. அவள் மறுத்து விடுவாளா என்ற பயம் ஒரு பக்கம்…. விடயத்தை வீட்டில் அறிந்தால் உரித்து விடுவார்கள் என்ற பயம் மறுபக்கம்.
கடைசியாக ஒரு நாள்… பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடலில் வைத்து கூட்டைத் திறந்து விட்டேன்.
நான் பயந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை.
புன்னகைத்து விட்டு போய் விட்டாள்.
‘அப்பாடா’ என்று இருந்தது.
அதன் பின்பு அவளது புத்தகங்களை நான் வாங்கிக் கொண்டு அவளின் கைகளை என் கைகளுடன் கோர்த்தபடி பல்கலைக்கழக பின் ஒழுங்கையில் நடந்து செல்லவும்…. சனக்கூட்டம் இல்லாத சினிமாக் கொட்டையின் ஒரு மூலையில் இருவருமாக அமர்ந்திருந்து படம் பார்க்கவும்… சைக்கிளில் அவளை முன்னே இருத்தி பனங்கூடல்களுக்கும் புகையிலைத் தோட்டங்களுக்கும் நடுவே ஓட்டிச் செல்ல எல்லாம் மனம் ஏங்கும்.
சாந்தி அசைந்தால் தானே.
“உன்னை விட பெரிய மாத கோயிலில் உள்ள ஒரு சிஸ்டரைப் பார்த்திருக்கலாம்”
அதுக்குப் பிறகு இரண்டு கிழமையாக எங்களுக்குள் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை.
அவள் என்னுடன் கோபமாம் என அவள் தோழி வந்து சொன்னாள்.
பின்பு சண்டை சமாதானமாகி ஒரேயொரு வெள்ளிக் கிழமை இருவருமாய் நல்லூர் கோயிலுக்குச் சென்றோம். அங்கும் ஆளுக்கால் ஐந்தடி இடைவெளி.
பூஜை முடிந்து நடையைச் சாத்த முதல் மூலஸ்தானத்தைச் சுற்றி வந்த பொழுது கையில் இருந்த சந்தனத்தை அவள் நெற்றியில் இட்டு விட்டேன்.
முதலில் முழிசி விட்டு பின்பு புன்சிரிப்புடன் நகர்ந்து விட்டாள்.
கட்டியணைத்து முத்தம் இட்டுக் கொண்டு போகும் வேகத்தில் என் கார் ஊர்வதைப் பொருட்படுத்தாத ஒரு கானாக்காரனும் டெனிஸ்காரியும் என் காரில் தாங்களே தட்டுப்பட்டு விழுந்து தாங்களே எழுந்து கொண்டார்கள்.
பிழை தங்களது எனத் தெரிந்தும் ஒரு சொறி கூடசஇ சொல்லாது இருவரும் தங்கள் நடுவிரலைத் தூக்கி எனக்கு காட்டி விட்டு இன்னமும் இறுக்கி அணைத்தபடி செல்லுகின்றார்கள். இருவரின் இரு மறுகைகளும் இருவரின் பின் புறத்தை வருடியபடி.
றெயின் வந்து விடப் போகின்றது என்ற படபடப்பு மட்டும் இல்லாதிருந்திருந்தால் விரலைத் தூக்கி காட்டியதற்காக காரில் இருந்து இறங்கி “ஆபிரிக்க பன்டியே” என அவனை” ஆங்கிலத்திலும்…. “அவித்த இறால்காரியே” என அவளை டெனிசிலும் திட்டியிருப்பேன்.
சுமார் 25 வருடங்களுக்குப் பின் சாந்தியையும் அவளது கணவனையும் சந்திக்கப் போகின்றேன் என்பது மட்டுமே எனு;னை நிறைத்திருந்தது.
செல்வி சாந்தி கருணாகரன் திருமணத்தின் பின்பும் திருமதி. சாந்தி கருணாகரனாகவே இருப்பாள் என மலைவேம்பின் கீழ் நின்று மணிக்கணக்கில் பேசியிருப்போம்.
அனுபவம் இல்லாத அரசியல்… பல்கலைக்கழக மாணவன் என்ற திமிர்… கல்லை உண்டாலே செமிக்கும் வயது… எதையும் தட்டிக் கேட்கலாம் எனப் புறப்பட்ட பொழுதுதான் சில பயங்கர உண்மைகளை தரிசிக்க வேண்டி வந்தது.
தலை மறைவாக வேண்டும்… அல்லது தலையாட்டிகளின் தலைகள் என் பக்கம் திரும்பினால் என் தலையே போகும் என்ற நிலை… நல்லவனிடமும் ஆயுதம் கெட்டவனிடனும் ஆயுதம் எனு;ற நிலை வந்த பொழுது ஐரோப்பாவின் கதவுகளும் திறந்திருந்தது.
பனைவளர் நாட்டுப் பிரஜைக்கு பனி படர் நாட்டில் வதியிடவுரிமை கிடைத்தது – அகதி என்ற பெயருடன்.
“அங்கை போய் கக்கூஸ் கழுவுறவனுக்கு கடைசிவரை என்ரை பிள்ளையைக் கட்டிக் கொடுக்கு மாட்டோம் என உறுதியாகச் சொல்லி விட்டார்களாம்.
சாந்தி அழுதிருப்பாள். என்னைப் போல் மனதினுள்… அல்லது பலமாக…. பின்பு எல்லாம் அடங்கிப் போயிருக்கும்….வேறு அவளால் என்ன செய்திருக்க முடியும்.
மாலையில் துப்பரவுத் தொழிலாளியா கக்கூஸ்வரை கழுவினேன் என்பது உண்மைதான். ஆனால் பகலில் கணினிக் கல்வி கற்றுக் கொண்டு இருந்தேன் என்பதை யாரும் நம்பவில்லை.
எல்லோரும் தங்கள் தங்கள் கைகளில் உள்ள அளவுகோலால் தானே மற்றவர்களை அளப்பது.
ஜேர்மனியில் இருந்து போன ஒரு காரைநகர் எஞ்ஜினியர் பையனுக்கு சாந்தியைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என திருமணத்தின் பின்பு ஒரு செய்தி வந்தது.
அத்துடன் சாந்தி வீட்டுடன் இருந்த தூரத்துச் சொந்த உறவும் எங்கள் வீட்டாருக்கு அற்றுப் போய்விட்டதாம். திருமணத்திற்கு வந்து சொல்லியும் எங்கள் பகுதி ஆட்கள் போகவில்லையாம்.
இரண்டு மாதங்கள்… அவளின் படத்தை மீண்டும் மீண்டும் வைத்துப் பார்த்துக் கொண்டு… ஒரு பைத்தியக்காரன் போல்… சவரம் செய்யாம முடி… வழிக்காத தாடி… ஒரு நாள் வொட்கா கூட வாங்கிக் குடித்துப் பார்த்தேன்…. பின்பு எனது எந்த முட்டாள் தனமான
வேலைகளும் எனக்கு சாந்தியை மீண்டும் எனக்கு தரப்போவதில்லை என உணர்ந்த பின்பு… அவளின் படத்தை எடுத்து லாச்சியுள் வைத்து பூட்டிவிட்டு… அனைதது தேவதாஸ் எண்ணங்களையும் தூக்கியெறிந்து விட்டு கணினியுள் மூழ்கினேன்.
ஸ்டேசனை அடைந்து விட்டாலும் காரை நிறுத்துவதற்கு பெரும்பாடாய் இருந்தது.
கார் நிறுத்தும் இடங்கள் எல்லாம் காதல் காம ஜோடிகள்.
ஆட்கள் யாரிலும் கார் தட்டுப்பட்டு விட்டால் அடுத்த இரண்டு வருடத்திற்கு லைசென்ஸ் இல்லாமல் போய்விடும்.
கட்டாயம் இப்போது றெயின் வந்திருக்கும்.
தூரத்தில் தானியங்கி பத்திரிகைகள்… சஞ்சிகைகள் விற்கும் மெனினுக்கு முன்னால் பரமகுரு அண்ணை நின்று கொண்டு செக்ஸ் மக்கசீன்களின் நிர்வாண அட்டைப்படங்களைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
எனக்குள் வாய்க்குள் சிரிப்பு. நிச்சயமாக அது வந்திருக்க கூடாது. ஆனாலும் வந்து விட்டது.
அவருக்கு சென்றவருடம் 65 வயதாகியிருக்க வேண்டும். எனக்கு ஞாபகம் சரியாக இருந்தால் ஐந்து வருடத்துக்கு முதல் அவரின் வைரவிழாவை குடும்பத்தினரும் நண்பர்களும் சிறப்பாகச் செய்தார்கள்.
அவருக்கு பேரப்பிள்ளைகளும் இருக்கின்றார்கள். கையில் ஒரு தினசரிப் பத்திரிகை. அது பெரிய தரமான பத்திரிகை இல்லை. அரசியல் இலக்கியம் என்று எந்த ஆழமான பக்கங்களும் இருப்பதில்லை. கொலைஇ களவுஇ சுடச்சுட கிசுகிசுப்புகள் தான் பக்கங்களை நிரப்பி நிற்கும். அதன் 9வது பக்கத்தில் தினமும் ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருக்கும். இது அந்தப் பத்திரிகையின் வியாபார உத்தி. பேப்பரை மனுசன் கையினுள் உருட்டி வைத்திருக்கின்றார். வீட்டிற்குள் போக முதல் வீதியில் வீசி எறிந்து விடுவார்.
அவரைப் பற்றிய எண்ணங்களை பிளாட்பாரத்தின் ஒரு புறத்தில் தள்ளி விட்டு சாந்தியும் அவளது குடும்பமும் எனக்காக காத்திருப்பார்கள் அல்லது தேடிக்கொண்டு நிற்பார்கள் என்ற அவசரத்தில் ஐரோப்பா புகையிரதங்கள் வரும் பகுதிக்கு மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன்.
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் அப்படியே இருந்தாள். முன் தலையில் மட்டும் சின்னதாய் சில நரை முடிகள். பக்கத்தில் அவளது கணவனும் மகளும்.
கணவன் ”ஹலோ” என்று கை தந்தார் மகள் ” ஹாய் அங்கிள்” என்று என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.
அவர்களது சூட்கேசுகளை தூக்குவதில் நானும் பங்கு கொண்டேன்.
குறிப்பாக சுஜியின் சூட்கேசு அதிக கணமாய் இருந்தது.
”ஏன் இப்படிக் கணக்கின்றது”
சுஜியைப் பார்த்துக் கேட்க சாந்தி பதில் சொன்னாள்.
”எல்லாம் சுஜின்ரை விதம் விதமான சப்பாத்துகளும் செருப்புகளும் தான். இவளை ஒரு காலணிக் கடைக்காரனுக்குதான் கட்டி வைக்க வேண்டும்”
”இல்லை அங்கிள்… அதுக்குள் அம்மா உங்களுக்கு சுட்ட பலகாரங்களும் இருக்குது”
தாய்க்கும் மகளுக்கும் இடையேயான கடிபாடுகளை ரசிக்கத்தக்கதாக இருந்தது.
நாங்கள் மேலே ஏறிவரும் பொழுது பரமகுரு அண்ணை இப்பவும் கண்ணாடிப் பெட்டியுள் அடுக்கி வைத்திருக்கும் அந்த நிர்வாணப்பட மக்கசீன்களைப் பார்த்தபடி…. பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக ரசிக்கின்றார் போலும்…
தற்செயலாக அவரின் பார்வையும் எனது பார்வையும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட பொழுது அவருக்கு சங்கடமாய் இருந்திருக்க வேண்டும். சங்கோஜத்தில் நெளிந்தார்.
”இந்த அரியண்டங்களை எல்லாம் ஆட்கள் வந்து போற இடங்களிலை வைச்சிருக்கிறான்கள்” அசடு வழிந்தார்.
மீண்டும் எனக்குள் அதே சிரிப்பு.
சாந்தியின் குடும்பம் அவரைத் தவிர்க்கப் பார்த்ததை புரியக் கூடியதாக இருந்தது.
”யாரு ஆட்கள்… விடுமுறைக்கு வந்திருக்கினம் போலை” பரமகுரு அண்ணை.
”எங்கடை ஊர் ஆட்கள்தான்” என்றவாறு நானும் அவரைத் தவிர்த்துக் கொண்டேன்.
”உங்கட பிறண்டா அங்கிள்?”
கொஞ்சம் நகர்ந்ததும் சுஜி கேட்டாள்.
”இல்லையே ஏன்?”
”முழுக்கள்ளன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருக்கு” சொல்லி விட்டுச் சிரித்தாள்.
”சுஜி பி சைலன்ட்” தந்தையார் எச்சரித்தார்.
”நீங்க கெஸ் பண்ணினது சரிதான்!…. ஊரிலை இருந்து ஆட்களை கொண்டு வாறது… ஐரோப்பிய போடருக்குள்ளாலை ஆடகளை கடத்துவது…. எத்தனையே பேருக்கு நாமமும் போட்டிட்டார்… ஆனால் ஜென்ரில்மென்றாய் திரியுறார்”
”ஏன் எங்கடை சனங்கள் தொடர்ந்தும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்” சாந்தியின் கணவன் கேட்டார்.
”பழகும் பொழுது பூதக்கண்ணாடி பிடிச்சுக் கொண்டா பழகுவது?… இங்கு வந்த எல்லோரும் அண்ணா… அக்கா.. ஐயா.. அன்ரி என்று நல்லாய் தான் தொடங்கின்றோம்…” கதைத்தபடியே காரடிக்கு வந்து விட்டோம்.
”பார்த்தீர்களா? எங்களின் சிட்டியில் சனங்களை” பேச்சை எமது நகரத்துக்குள் திருப்பினேன்
”ஆம்!… றெயினுக்கையும் இங்கே வரும்வரையும் சரியான சனம். நல்லூர்த் திருவிழா போலிருக்கு” எனத் தொடங்கிய சாந்தியை நல்லூரின் நினைவுகள் நிறுத்தியிருக்க வேண்டும்.
எனக்கும் ஒரு தரம் மூச்சு மேலே எழுந்து கீழே தாழ்ந்தது.
மீண்டும் என்னை நான் சுதாகரித்துக் கொண்டுஇ ”நீங்கள் இங்கு நிற்க இருக்கும் நான்கு நாட்களும் சிற்றியிலை இப்படித்தான் சனம் நிறைந்திருக்கும். ஏதாவது சாமான்கள் வாங்குவது என்றால் கூட பக்கத்து நகருக்குப் போய் வந்தால் விரைவாக வேலை முடிந்து விடும்.
கடைகளில் தள்ளுவண்டியையே எடுக்க முடியாது. விழா நடக்கும் இடங்களுக்கு தள்ளுவண்டியை பியர்கேசுகளுடன் கொண்டு போய் விடுவார்கள் என்று கடைக்காரர் அதனை இந்த நாலு நாளும் பூட்டி வைத்து விடுவார்கள்”.
கார் சிற்றியை விட்டு கடற்கரைச்சாலை வழியே ஓடத் தொடங்கியது.
திறந்திருந்த யன்னலூடு நல்ல காற்று காரினுள் வந்து அனைவரையும் தழுவியது.
”கொழும்பிலை கோல்பேஸ் பீச் றோட்டில் காரிலை போய்க் கொண்டு போற மாதிரி இருக்கு. ஜேர்மனிலை இப்படி பீச் றோட்டுக்கு சான்ஸ்சே இல்லை”இ சாந்தியின் கணவன் டென்மார்க்கின் இயற்கையை ரசித்தார்.
”இல்லை அங்கிள்… அப்பாக்கு தெரியாது… ஜேர்மனிலை ரொம்ப தூரத்திலை இருக்கு… அப்பாதான் கூட்டிக் கொண்டு போறதில்லை” சுமி குற்றப்பத்திரியை தாக்கல் செய்தாள்.
”ஓகே…ஓகே… இங்கே நிற்கும் வரை ஆசைதீர கடலிலை குளியுங்கள்”
கொஞ்சத் தூரம் செல்ல கடற்கரை முழுவதும் ஆண்களும் பெண்களும் உள்ளாடைகளுடன் மட்டும் சூரியக்குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சூரிய வெளிச்சமும் சூடும் உடம்பில் படும்படி நிமிர்ந்தும் குப்புறமாயும் தனித்தனியாக அல்லது குடும்பம் குடும்பமாக கடற்கரை மண்ணில் படுத்துக் கொண்டு இருந்தார்கள்.
சில பெண்கள் மார்புக் கச்சை கூட அணிந்திருக்கவில்லை.
”இந்தக் கருமம் இங்கையுமா?” சாந்தி விசனப்பட்டாள்.
நான் சிரித்துக் கொண்டேஇ ”உங்களுக்குத் தெரியுமா? வருடம் முழுக்க கஸ்ட்டப்பட்டு வேலை செய்யுறதே.. விடுமுறை எப்போது வரும்?… சூரியன் எப்போது வரும்?…. சூரியக்குளியலும் கடல் குளியலும் எப்போது வரும் என்று கனவுடனேயேதான் வாழுகின்றார்கள். உங்கடை ஜேர்மன்காரர்கள் கூட அதிகமாக இங்கே வருகிறார்கள். கடற்கரை விடுதி முழுக்க ஜேர்மன்காரன்கள் தான்…
எனக்கென்னவோ இவர்கள் தங்கள் விடுமுறையை தாங்கள் விரும்பிபடி கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாய்தான் இருக்கிறது… நாங்கள் விடுமுறை என்றவுடன் ஏதாவது நாட்டுக்குச் சென்றாலும் அங்கு போய் உறவினருடன் புட்டு-சோறு-புட்டு என்று சாப்பிட்டு விட்டு அது செமிக்கும் வரை சோபாவிலை இருந்து பழைய கதைகளை கதைத்துக் கொண்டிருக்கிறம்… பிள்ளைகளுக்கு அதில் அரைவாசி விளங்காமல் முழிசிக் கொண்டு இருக்குங்கள்…. அதை விட குடும்பமாக இவர்கள் தங்கள் விடுமுறையை அனுபவிப்பதை பிழை என்று என்னால் சொல்ல முடியாது இருக்கின்றது. அவர்களுக்கு விடுமுறை புதிய சக்தியைக் கொடுக்கிறது. எங்களுக்கு களையைத் தான் கொடுக்கிறது”
நான் நீண்ட ஓர் உரையாற்றியது போல இருந்தது.
”எதையும் எதிர்பாராதது அவர்கள் வாழ்வு – எல்லாத்துக்கும் ஓர் எதிர்பார்க்கு இருப்பது எங்கள் வாழ்வு”
நான் மகாபாரதம் போல் சொன்னதை சாந்தி திருக்குறளாக சொன்னாள்.
இது பல்கலைக்கழக காலத்தில் இருந்து சாந்தியின் இயல்பு.
கார் எனது அடுக்கு மாடி முன்னே வந்து நின்றது.
நான் வசிப்பது பன்னிரண்டாம் மாடி.
*
”பொம்பிளையள் இருக்கிற வீட்டை விட அழகாக வைத்திருக்கிறயள்”
மூவரும் நற்சாட்சிப் பத்திரம் தந்தபடி உள்ளே வந்தார்கள்.
”வேலையால் வந்த என்ன வேலை… ஒரு ஹோல் – ஒரு குசினி – ஒரு படுக்கையறை…” சொல்லியபடியே தேனீர் வைக்க ஆயத்தம் செய்தேன்.
”நாங்கள் நிற்கிற வரை நாங்களே எல்லாத்தையும் செய்யுறம் அங்கிள்” என என் பின்னே குசினியுள் வந்த சுமி ஜன்னலினூடு தூரத்தில் தெரிந்த விழா நடக்கவிருந்த மைதானத்தையும் அதில் தெரியும் மனிதத் தலைகளையும் பார்த்து அதிசயப்பட்டுப் போனாள்.
”பொறுங்கோ சுஜி… இது பன்னிரண்டாவது மாடி… மொட்டை மாடி இருபத்தைந்தாவது மாடியில் இருங்கு. அங்கேபோய்ப் பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும். இரவில் அவர்கள் பாடுவது கேட்காவிட்டாலும் அங்குள்ள வர்ணவிளக்குள் வானத்தில் கோலம் போடுவது போலத் தெரியும்… சனங்கள் தலையாட்டி ஆடுவது அலைகள் மேலெழுந்து கீழே தாழ்ந்து அலைகள் மித்து கொண்டு போவது போலத் தெரியும்”
இரண்டு பேருக்கு ஒரு சின்ன ரென்ற் என்று பார்த்தாலும் 50 ஆயிரம் பேருக்கு 25 ஆயிரம் ரென்றுகள். வண்ண வண்ண நிறங்களில் வெளிமைதானங்கள் அனைத்தையும் நிறைத்திருக்கும். அனைத்தும் வரும் பொழுது அவர்கள் எடுத்து வந்து போகும் பொழுது எறிந்து விட்டுப் போவவைதான். ஆளுன்கு 5க்கு 5 அடி நிலம். பொதுவாக எல்லா ரென்றுகளுக்கும் வெளியே கால்கள் நீட்டியபடி இருக்கும் . அந்தக் கால்கள் கிடக்கும் பாங்கில் அவர்கள் தூங்கி விட்டார்களா… விழித்திருக்கிறார்களா… என்பதனை ஊகித்துக் கொள்ள முடியும்.
”எத்தினை மணிக்கு அங்கிள் ஆரம்பமாகும்”
”இரவு எட்டு மணிக்குமத்தான்… ஹய் லைட்டான விடயங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்… உலகப் புகழ் பெற்ற பல பொப்பிசைக் கலைஞர்களை நீங்கள் இன்று இரவு பார்க்கலாம்”
தேனீருக்குப் பிறகு… அனைவரும் சேர்ந்து சமையல்.. சாப்பாடு… சாந்தியின் கண்வன் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.
சுஜி தனது இமெயில்களை செக் பண்ணிக் கொண்டு இருந்தாள்.
நானும் சாந்தியும் பழைய கதைகள்.. புதிய கதைகள்.. குறிப்பாக எங்களுடன் கல்வி கற்ற சக மாணவர்கள் மாணவிகள் பற்றிய கதைகள்… இயக்கத்திற்குப் போனவர்கள்.. தலைமறைவாய்ப் போனவர்கள்.. என பொழுது பலவாறாய் போய்க் கொண்டிருந்தது.
எங்கள் சொந்தக்காரர்கள்… அவர்களின் கோபங்கள்… சாந்தியின் கல்யாணத்துடன் பிரிந்த குடும்பங்கள் அம்மாவின் செத்தவீட்டன் ஒன்றாகியன… அவ்வாறே சாந்தி பக்கத்து நாட்டில் இருந்தும் இத்தனை வருடங்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் இருந்தது… இத்தியாதி இத்தியாதி விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
எங்களுக்குள் நாங்கள் போடும் சின்னச் சின்னக் கோடுகளும் கோபங்களும் எத்தனை பெரிய பள்ளத்தாக்குகளாக பிளந்து போய் விடுகின்றன.
ஒரு இடத்தில் சாந்தி கேட்டாள்இ ”மறைக்காமல் சொல்லுங்கள்.. நீங்கள் ஏன் இதுவரை திருமணம் செய்யவில்லை?”
”உங்களுக்கு டெலிபோனிலை சொன்ன அதே காரணம் தான்… செய்யக் கூடாது என்று என்று நான் இருக்கவில்லைNயு… ஒன்றிரண்டு மாதம் தேவதாஸ் வாழ்க்கை வாழ்ந்தது உண்மைதான். பிறகு ஒரே படிப்பு… சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம்…. அதிலை கரைகண்ட பிறகு வீட்டாரின் ஆக்கினை தாங்காமல் என்னைப் போலை கொழும்பில் கம்பியூட்டர் துறையில் வேலை செய்த ஒரு பெட்டையை பேசி இங்கே அனுப்ப அது ஹொலண்டிலை இறங்கி தன் பழைய காதலனிடம் போய் விட்டது. பிறகு இந்த கலியாணப் பேச்சுகள்… நாதகங்கள்.. எல்லாத்திலையும் நம்பிக்கை இல்லாமல் போயிட்டுது… மற்றது அது அதுகளை அந்தந்த வயதிலை சந்தோசமாய் செய்திருக்க வேணும். சந்தோசமாய் வாழ்ந்திருக்க வேணும்.”
சாந்தியின் தலை குனிந்திருந்தது. : ’தன்னால் என கவலைப்படுகிறாளோ என்னவோ’
நான் நினைத்தமாதிரி அவள் தலையை நிமிர்த்திய போது கண்கள் சிவந்திருந்தது.
”சாந்தி என்ன நடந்தது?”
ஒன்றுமில்லை எனச் சொல்லி விட்டு எழுந்து வோஷிங் ரூமுக்குள் போனாள்.
அவளைக் கவலைப்படுத்தி விட்டோனா என மனம் கஷ்டப்பட்டது.
சாந்தி வோஷிங் ரூமுக்குள்அதிக நேரம் நிற்பது போல தோன்றியது…. அழுகின்றாளோ…
சாந்தியின் கணவனும் தூக்கத்தில் இருந்து எழுந்து வர எல்லோருக்கும் நானே தேநீரை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தேன்.
சாந்தியும் தன் தலையை நன்கு வாரிஇ முகத்திற்கு பவுடர் போட்டுக் கொண்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்தாள்.
கண்கள் இன்னமும் சிவந்திருந்தது.
பின்பு என்ன நிளைத்தாளோ எழுந்து சென்று தான் செய்து கொண்டு வந்h பலகாரங்களை எடுத்து வந்து என் முன்னால் வைத்தாள்.
அவ்வளவு பலகாரம். அடுத்த இரண்டொரு மாதங்களுக்கு எனக்கு போதுமாயிருந்தது.
இப்போது தேநீருக்கு மிகப் பொருத்தமாய் இருந்தது.
அனைவரும் ருசித்துச் சாப்பிட்டபடி எங்கள் கதை றொஸ்கில பெஸ்ரிவெலில் வந்து நின்றது.
அந்த விழாவில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் நாலு நாளைக்கும் குறைந்தது இரண்டாயிரம் குறோன்கள் செலவாகும். அதனை சேர்ப்பதற்காக அனைத்து இளைஞர்களும் வருடம் முழுக்கு பாடசாலைகள் முடிந்த பிறகு மாலையில் கடைகளிலும் றெஸ்ரோரன்களிலும் வேலை பார்த்திருப்பார்கள்.
இந்த நிகழ்ச்சி நடாத்துபவர்களும் மேலாதிகமாக வரும் இலாபத்தில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். இலங்கையில் சுனாமி வந்த பொழுது கூட இவர்கள் உதவினார்கள்.
எனது கை ரீவியின் ரிமோட்டை அழுத்தியது.
இசைவிழா தொடங்கி விட்டிருந்தது.
”சனத்தைப் பாருங்கோ”
”இடிபட்டே இறந்து போவார்கள் போலிருக்கு”
ரீ.வி.யின் கமரா எல்லா இடங்களையும் சுற்றி சுற்றி வந்தது.
மேடையை… பாடகர்களை…. சனக்கூட்டத்தை… அதிலும் ஆண்களின் தோள்களில் ஏறியிருந்து கொண்டு வானத்தை நோக்கி இரு கைகளையும் நீட்டிக் கொண்டு சந்தோஷ மிகுதியால் துள்ளும் பெண்களை கமரா சுற்றி வளைத்துக் காட்டிக் கொண்டிருந்தது.
“கஞ்சா.. அல்லது தூள் பாவிக்காட்டி இந்தளவு உற்சாகம் வாராது” நான் சொல்லிக் கொண்டு இருந்தேன்.
எங்கள் நால்வரின் கண்கள் ரீ.வி.யை விட்டு விலகவேயில்லை.
ரீ.வி.யின் கமரா மேடையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தை தள்ளி போக்கஸ் பண்ணியது.
அங்கு கிட்டத்தட்ட 100 ஆண்களும் பெண்களும் உடம்பில் ஒரு சொட்டுத் துணியும் இல்லாது. அனைவரும் ஓட்டப்பந்தயத்திற்கு செல்லும் வீரர்கள் போல தங்களைத் தயார் படுத்திக் கொண்டு நின்றார்கள்.
இப்போது அந்த மேடையையும் மைதானத்தையும் சுற்றி ஓடப் போகின்றார்கள்.
இடையில்.. சகதிகள்.. சேறுகள்…. சுற்றி நிற்பவர்கள் பியரைர் நுலைகளைப் பீச்சியடிக்கு அதனiயும் ஏற்றுக் கொண்டு ஓடுவார்கள். இடைக்கிடை சேற்றுச் சகதியில் புரண்டு எழுந்து ஓடுவார்கள்;.
“ரீ. வீ.யை ஓவ் பண்ணட்டா”
“வேண்டாம் அங்கிள்” சுஜி கத்தினாள்.
அவர்களின் ஓட்டம் தொடங்கி விட்டது.
மிக மகிழ்ச்சியாக… எந்தக் கூச்சமும் இல்லாது… கமரா எவ்வளவு தூரம் அவர்களுக்கு கிட்டச் சென்றாலும் எந்த வெட்க மானமும் இன்றி….
“சாந்தி உங்களுக்கு பார்க்க அருவருப்பாய் இல்லையா?”
“எது அரியண்டம்!…. ஜேர்மன்காரியை தன் மகன் வைத்திருக்கிறான் என்று தெரிந்தும் சுஜியைப் பெண் கேட்டு வந்தாவே ஒரு யாழ்ப்பாண மனுசி…. உன்னைக் கட்ட என்று வந்து விட்டு ஹொலண்டிலை இறங்கி தன் லவ்வரோடை போனாளே ஒருத்தி… எல்லை தாண்டும்
பொழுது சின்னப் பெண்ணுக்கு மயக்க மருந்தைக் குடுத்து அவளுக்கு பிள்ளை குடுத்தானே ஒருத்தன்… இந்தியாவிலை பிளட் வாங்கித்தாறன் என்று சொல்லி காசு எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு கோயில் காணியைக் காட்டிப் போட்டு போனானே ஒருத்தன்… அண்ணா அண்ணா என்று இவருடன் உயிராய் பழகி இவரைக் கொண்டு பாங்கிலை கடன் எடுப்பித்து விட்டு கனடாக்கு இரவிராய் ஓடினானே ஒருத்தன்….ஒவ்வொரு நாட்டிலும் சீட்டுப் போட்டு மற்றவைக்கு நாமம் போட்டு விட்டு பக்கத்து நாடுகளிலை போய் அகதி அந்தஸ்து எடுத்துக் கொண்டு நல்ல மனிதர்களாய் நடித்துக் கொண்டு இருக்கிறான்களே… அவன்கள் ஓடுறதுதான் நிர்வாண ஓட்டம்! அருவருப்பு!! அதோடை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்களும் பெண்களும் ஓடுறதிலை என்ன இருக்கு?”
இருபத்தைந்து வருடங்களுக்கு முதல் கைலாசபதி அரங்கில் சாந்தி பேசும் பொழுது இருந்த அதே ஆவேசம் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.
இந்தக் கோபம் இவளுக்கு எங்கிருந்து வந்தது.
இந்த சாந்திக்குள் இப்படியொரு நெருப்புக் கோளமா?
“சாந்தி! பிளீஸ் ரிலாக்ஸ்” கணவன் ஆறுதல் படுத்தினார்.
கதைத்து கதைத்து அதே களைப்பில் சோபாவில் கண்ணயர்ந்தால். நிர்வாண ஓட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அவள் சொன்னது எத்தனையும் நிஜம்.
சுஜி எழுந்து போய் என் கம்பியூட்டர் முன் அமர்ந்தாள்.
”அங்கிள் உங்களிடம் பேஸ்புக் இருக்கா?”
”ஆம்” எதுக்கு”
”சும்மாதான்”
*
அடுத்தநாள் நான் எழும்ப முதல் சாந்தி எழுந்து முழுகி தலையைத் துவட்டிக் கொண்டு நின்றாள்.
”உங்களுக்கு தேநீர் ஊற்றட்டா… அல்லது குளித்த பின்புதான் குடிப்பீர்களா?”
”தினமும் குளிக்கிற பழக்கம் குறைவு… பொறுங்கோ முகம் கழுவிக் கொண்டு வாறன்”
நான் முகம் கழுவிக் கொண்டு வந்த பொழுது அவர்கள் மூவரும் குசினி யன்னல் வழிNயு முதன்நாள் இசைவிழா நடந்த இடத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஒரு மனித அசைவும் இல்லை.
”இனி வெயில் வந்து இராத்திரி அடிச்சது எல்லாம் முறியத்தான் சனம் எழும்புங்கள்…. அது சரி உங்களுக்கு இராத்திரித் தூக்கம் எப்பிடி?”
”என்ன கவலை எண்டாலும் படுத்தவுடன் ஒழுங்காய் நித்திரை கொள்கின்றனான். ஆனால் இரவு முழுக்க… என்ன என்ன கனவுகள் எல்லாம் வந்தது தெரியுமா? பயங்கரம்!”
”அப்பிடி என்ன கனவு?”
”இங்கே ஏதோ ஒரு ஐரோப்பா நாடு போல இருக்குது…. தேர்த் திருவிழா நடந்து கொண்டு இருக்குது… ஒரே சனக்கூட்டம்…. நீங்களும் அதுக்குள்ளை நிக்கிறமாதிரி இருக்குது…. திடீரெனப் பார்த்தால் தேரை இழுத்துக் கொண்டு வாற ஆட்களிலை நாலைந்து பேருக்கு உடம்பிலை ஒரு துணியும் இல்லை… அதுபோலை கற்பூரச்சட்டியுடன் போய்க் கொண்டிருக்கிற ஒரு அன்ரியும் நிர்வாணமாய்ப் போய்க் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. திடுக்கிட்டு முழிச்சிட்டன்”
சுஜி விழுந்து விழுந்து சிரித்தாள்.
”நேற்று கதைத்ததை நினைத்துக் கொண்டு படுத்திருப்பியள்… சுஜி செய்ய கிராபிக் நிர்வாண ஓட்டம் உங்களை நல்லாய் இன்ஸ்பிரேஷன் செய்திருக்க வேண்டும்”
”ஜெஸ்” என்று சுஜி தன் கட்டை விரலை உயர்த்தி தனது வெற்றிக்கான அங்கீகாரத்தை தெரிவித்தாள்.
”எழும்பி கொஞ்சம் தண்ணியைக் குடித்து விட்டு படுப்பம் என்றால் அந்த ஜேர்மன் அன்ரியும் உங்களுக்கு பேசி வந்த அந்தப் பெட்டையும் ஒரு கோப்பி பாரில் உடுப்பில்லாமல் சனங்களுக்கு நடுவே இருந்து கோப்பி குடித்துக் கொண்டு இருக்கினம்… இப்படி இரவு முழுக்கு நித்திரையே இல்லை”
”இப்படிக் கனவு காணத் தொடங்கினால் எத்தனை பேரைக் கனவு காணவேண்டி வரும் தெரியுமா?”
மௌனமாக இருந்த சாந்தி கெக்கட்டம் விட்டு சிரித்தாள்.
அவளது கணவனும் சுஜியும் நானும் இணைந்து கொண்டோம்.
நேற்றுப் பின்னேரம் கண்கள் சிவக்க அழுதிருந்தவள் இப்போது சந்தோசமாக இருப்பது மனத்துக்கு நிறைவாய் இருந்தது.
*
அடுத்த மூன்று நாட்களும் ஓடியது தெரியாமலே ஓடிவிட்டன.
இந்தப் பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் அதிலும் அதிகமாக மகிழ்ந்திருந்தது நானும் சுஜியும் தான். அவள் நித்திரை கொண்ட நேரத்தை தவிர மற்றைய நேரம் முழுக்க என்னையே சுற்றி சுற்றிக் கொண்டு இருந்தாள்.
என்னிடம் இருந்து பல கணினி நுட்பங்களை அறிந்து கொண்டாள். nதே மாதிரி கிராபிக் பக்கத்தில் எனக்கு தெரியாத பல விடயங்களை அவளிடம் இருந்து நானும் கற்றுக் கொண்டேன்.
டென்மார்க்கின் மிகப் பெரிய கம்பியூட்டர் மியூசியத்தை அழைத்துச் சென்று காட்டிய பொழுது பிரமித்துப் போய்விட்டாள்.
பகல் முழுக்கு உலாத்து… மாலையில் சனநடமாட்டம் குறைந்த கடற்கரைகளில் சாந்தி எங்கள் உடுப்புகளை காவல் காத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் மணிக்கணக்காக குளித்துக் கொண்டிருப்போம். குளித்து முடிய நான்கு பேரும் கடற்கரையை ஒட்டிய காட்டுப்
பகுதியில் இறைச்சி வாட்டி உண்டு மகிழ்ந்தோம்.
வாழ்க்கை என்னுடன் மீண்டும் ஒட்டிக் கொண்டமாதிரி ஒரு மகிழ்ச்சி.
தினமும் வீடு திரும்பும் பொழுது சாந்தி சொல்வாள்இ “கட்டாயம் இனி இவள் தனியே றெயின் எடுத்து உங்களிட்டை வந்து விடுவாள்…. இவள் யாருடனும் இப்படி ஒட்டியதில்லை” என்று.
*
இன்று அவர்களின் பயணம்.
எனதும் சுஜியின் மனதுள் ஒரே மூட்டம்.
இருவருமே வெளிக்காட்டவில்லை.
சாந்தி தங்கள் பயணத்திற்கும் எனக்கு ஒரு கிழமைக்கு போதியளவு உணவை தயாரித்து பிறிச்சில் வைத்து விட்டு தங்களுக்கானதை பாசலில் சுற்றி எடுத்துக் கொண்டாள்.
”இனி எப்ப வருவீர்கள்?”
”நாங்கள் வரவில்லை… நீங்கள் ஜேர்மனிக்கு வாருங்கள்”
அனைவரும் லிவ்ற் வழியே கீழே இறங்கினோம்.
கார் மீண்டும் கடற்கரைச் சாலையில்.
இப்போதும் மனிதர்கள் சூரியக் குளியலை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
அது பற்றி யாருமே அலட்டிக் கொள்ளவில்லை.
காரினுள் பெரிய அமைதி.
காரை புகையிர நிலையத்தில் நிறுத்திய பொழுது இன்னும் அதே சனக்கூட்டம். அதிகமானோரின் உடைகள் மிகவும் அழுக்காகி இருந்தன.
இசைவிழாவிற்கு வந்தவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள் – சிலர் புதிய காதலன் அல்லது காதலிகளுடன் – சிலர் புதிய நோய்களுடன்.
சுஜி மிகவும் இறுகிப் போனவள் போலிருந்தாள்.
எப்போது வெடித்து உடைவாள் என்று தெரியாதது மாதிரி நின்றாள்.
எனக்கும் அப்படித்தான் – என் தொண்டை கட்டியது போலுணர்ந்தேன்.
இந்த அடர் மௌனத்தை உடைத்து அவளை மகிழ்ச்சியாக புகையிரத்தில் ஏற்றிவிட வேண்டும் என்பது போல இருந்தது.
தூரத்தில் பரமகுரு அண்ணை.
இப்போதும் அதே இடத்தில் நின்று இந்த புது வாரத்துகுரிய செக்ஸ் மக்கசீன்களை கண்ணாடிப் பெட்டியுள் பார்த்துக் கொண்டும்….கையில் உள்ள தொலைபேசியுள் யாருடனோ கதைத்துக் கொண்டும்….”நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிட வேண்டும். இலங்கையிலை காசு கொடுத்து ஒரு கிழமைக்குள் பெடியன் டென்மார்க் போடரிலை நிற்பான். பிறகு நீங்கள் காரிலை வந்து பிரான்சுக்குகோ… இத்தாலிக்கோ கூட்டிக் கொண்டு போங்கோ”.
பரமகுரு அண்ணையின் உடம்பில் ஒரு துண்டுத் துணியையும் காணவில்லை.
எனக்கு சிரிப்பை அடக்க முடியவி;ல்லை.
சுஜியை திரும்பிப் பார்த்தேன்.
”அங்கிள் நீங்கள் எதுக்கு சிரிக்கிறியள் என்று எனக்கு தெரியும்” என்று விட்டு தாயின் முழங்கையில் கிள்ளினாள்.
சாந்திக்கும் புரிந்து விட்டது.
சாந்திக்கு சிரிப்பை அடக்க முடியாது கண்களில் நீர் தழும்பியது.
(முற்றும் சிறுகதை. நிர்வாண மனிதர்களின் ஓட்டமல்ல)