கலாநிதி. கலாமணியின் பூதத்தம்பி – இசைநாடகத்தின் விமர்சனம்

By | 12. marts 2017

 

சூழ்ச்சியால் வெட்டுண்ட பூதத்தம்பியின் தலையைநிமிர்த்தி வைத்திருக்கின்றது இந்த இசைநாடகம்! வி. ஜீவகுமாரன்

கோயில் திருவிழாக்களுக்கு ஓலைப்பாயையும் எடுத்துச் சென்று, இவ்வாறான இசை நாடகங்களை கண்விழித்து விடிய விடிய பார்த்தது ஒரு காலம்.

காலம் சென்ற நடிகமணி திரு. வைரமுத்துவின் அரிச்சந்திர மயான காண்டம் இசைநாடகத்திற்கு பின்பு சுமார் 60 தடவைகளில் மேடையேற்றப்பட்ட பூதத்தம்பி இசை நாடகத்தை ஒளி-ஒலி வடிவில் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது.

இந்த பூதத்தம்பி இசைநாடகம் 2 மணிநேரம் 10 நிமிடங்களில் 25 காட்சிகளாக விரிந்து செல்கின்றது.

இசைநாடகத்திற்குரிய ஆர்மோனிய இசையுடனும் மிருதங்க ஒலியுடனும் கருணை செய்வாய் கஜராஜ முகாஎன இறைவணக்கத்துடனும் தொடங்கும் இந்த இசை நாடகத்தின் முதல் ஓரிரு நிமிடத்தினுள் கதை நடைபெறும் களத்தை மிகவும் அழகாகவும் சாதுரியமாகவும் அறிமுகப்படுத்தி விடுகிறார்கள்.

உலகெங்கும் எம் தமிழர்கள் பரந்து வாழும் இந்நாளில் பூதத்தம்பியின் வரலாறே தெரியாத ஒரு புதிய தலைமுறையினருக்கு தில்லையில் நடம் செய்யும் ஈசா எங்கள்நல்லூரிலே சட்டநாதாஎனத் தொடங்கும் இந்த கள அறிமுகம் மிக முக்கியமானது.

மேடையில் தனியொருவராய் தோன்றும் பூதத்தம்பியைத் (கலாநிதி கலாமணி) தொடர்ந்து அவரின் மனைவி அழகவல்லி (கலைமணி தை.ஜஸ்ரின்) மகன் சோதிநாதன், மைத்துனர் கைலாயபிள்ளை என்போரின் வருகை பாத்திர அறிமுகத்தை இயல்பாகவே நடாத்தி மேடையின் முழுப்பரப்பும் நடிகர்களால் நிறைகின்றது.

அரங்கை முழுவதுமாகப் பாவிக்க வேண்டும் என்பது அரங்க நாடகநெறியாள்கையில் அரிச்சுவடிப் பாடம். அதனை இந்த இசை நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் காணலாம். தனியொருவராய் பூதத்தம்பி தோன்றும் காட்சியில் என்றாலும் சரி… அதி கூடியது ஆறு பேர் தோன்றும் நகரவீதியுலாக் காட்சியில் என்றாலும் சரி இதனைக் காணலாம். குறிப்பாக நகரஉலா காட்சியில் அரசனுடன் காவலாளிகளை வெளியே செல்ல விடாமல் மந்திரிகள் இருவரும் பாடிக் கொண்டு இருக்கும் பொழுது இந்த காவலாளிகள் மேடையின் இருபுறத்தில் நிறுத்தி வைத்திருப்பது அந்தக் காட்சிக்கு அரங்க நிறைவைக் கொடுக்கின்றது.

அவ்வாறே காட்சிகள் மாற மாற பாடல்களும் பின்னணி இசையும் பார்வையாளர்களை நாடகத்தினுள் முற்றாக சங்கமிக்க வைக்கின்றது.

கலாமணியின் தலையில் கட்டியிருக்கும் தலைப்பாகை போல்,நவரசங்களை அனைத்துக் கலைஞர்களும் கையாண்ட முறை பூதத்தம்பி இசைநாடகத்திற்கு ஒரு மகுடம்.

குறிப்பாக பண்பட்ட நடிகர்களின் குரல் வளமும் நடிப்பும் பாடல்களும் தாளமும் ஜதியும் அங்கிங்கு அசையவிடாது பல இடங்களில் கட்டிப் போடுகின்றது. இறுதிக்காட்சிகளில் கூட எதிர்வினையாற்றிய கதைமாந்தர்களான அட்மிரலும் அந்திராசியும் இன்னும் ஒரிரு பாடல்கள் பாட மாட்டார்களா என்று இருந்தது. நாடகத்தின் நீளம் கருதி அதனைத் தவிர்த்திருக்கலாம் என மனம் சமரசம் செய்து கொண்டது.

குறிப்பாக, நகர்வலம் வரும் காட்சியில் பூதத்தம்பி,அட்மிரல்,அந்திராசி மூவரின் கம்பீரமும் நடிப்பும் பாட்டும் அதனை வெளிப்படுத்தும் வகையும் மூவருக்கும் ஒரு பலப்பரீட்சை போல் அமைந்தது எனலாம். பொதுவாக இறுதிக் காட்சிகளில் தான் இந்த நிகழ்வுகள் நடைபெறும். இது ஒரு சாதாரண காட்சி. 25 காட்சிகள் கொண்ட நாடகத்தல் 5வது காட்சியாக வருகிறது. மொத்த இசைநாடகத்தின் உச்சக்கட்டம் எனச் சொல்லலாம். இந்தக் காட்சியில் அனைத்து நடிகர்களின் வெளிப்பாடானது தொடர்ந்த 20 காட்சிகளையும் கவர்ந்திழுத்து வைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.

கீழே வசனவடிவில் இது இணைக்கப்பட்டிருந்தாலும் இசை வடிவில் நடிப்புடன் இணைத்துப் பார்க்கும் போது ஒவ்வொரு வசனமும்…சொல்லும்…சொல்லில் உள்ள எழுத்துக்களும் அழுத்தி உச்சரிக்கப்படும் விதம் மிகச் சிறப்பு.

poothathamby3

 

 

 

 

இக்காட்சியில்…

அட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்):நல்ல மனது கொண்ட மந்திரிமாரே இத்தெரு எங்கே செல்கிறது? இத்தெரு செல்லும் ஊரெது என்பதைதிட்டமாகவே எனக்குரையும் என அட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்) கேட்பதும்…

பூதத்தம்பி (கலாநிதி கலாமணி):சொல்லுமென உரைத்த மணிமுடி மன்னாஇத்தெரு செல்வது செட்டித்தெரு!நீண்டுஇத்தெரு செல்வது செட்டித்தெருஎனப் பதில் அளிப்பதும்,

மீண்டும் அட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்)அத்தெரு கடந்து இத்தெரு வந்தோம்இத்தெரு செல்லும் ஊரெது?என மீண்டும் மீண்டும் கேட்பதும்,

பூதத்தம்பி (கலாநிதி கலாமணி):சந்தன குங்கும கெந்தம் ஜவ்வாதுடன் நல்மணி தரளம் பவளம் முத்துஅத்தனையும் விற்று செல்வம் கொழிக்கும் வணிகர் வாழுமிடம் இது மன்னா?எனப் பதிலளிப்பதும்,

அந்திராசி (கலைத்தேவன் தைரியநாதன்):தொன்று திரண்டிடு இன்று இலங்கிடுசீர்பெறு யாழ் நகரேஇன்று கண்ட நல் இனிய காட்சிகள் சிந்தை கவர்ந்திடுதேஎனச் சொல்வதும்,

பூதத்தம்பி (கலாநிதி கலாமணி):

நல்லைநகர் தனில் தொல்லைகள் இதுவரை

தோன்றியதில்லையதேஎன நல்லூரின் அமைதியைப் பற்றி உரைப்பதும்…. தொடர்ந்து மந்திரியாரை அவர் வீட்டுக்கு விருந்துண்ண அழைப்பதும்…அப்பொழுது சகுனப்பிழையாக பல்லி சொல்வதும்…அன்றிலிருந்து நல்லூரின் களையிழக்க ஆரம்பிக்கும் கதையின் மாற்றத்திற்கான காட்சியாகக் கூட இந்த ஐந்தாவது காட்சியைச் சொல்லலாம்.

இந்தக் காட்சியில் தொடங்கி இன்றுவரை பிற பெண்களில் மீது கொள்ளும் காமம், அவமானம், தனி மனித வாழ்வில் ஏற்படும் தோல்விகளை பொது வாழ்விலும் தொழில் வாழ்விலும் அரசியலிலும் திருப்பி விடும் பாங்கும்,இறுதியாக அன்று கொல்லும் அரசநீதி பூதத்தந்தியின் உயிரை காவு கொள்வதும்…நின்று கொல்லும் தெய்வநீதியால் மந்திரியை யானை அடித்துக் கொல்வதும்…புயலில் சிக்கும் கப்பலில் இயற்கை அட்மிரல்; உயிரை எடுப்பதும்.. எவ்விடத்திலும் சோடை போகாமல் இந்த இசை நாடகம் வீறுநடை போட்டுச் சென்றமைக்கு ர்யவள ழகக.

 

தமிழரின் வாழ்வுடன் இணைந்த சாதகம் பார்த்தல், சகுனப் பிழை பார்த்தல் போன்றவற்றை இணைத்திருப்பது மிகவும் இயல்பானதாகவும் ரசிக்கும் வண்ணமாயும் இருந்தது. “மொட்டைத் தலையுடன் ஒற்றைப் பிராமணன் முன்னிதோ வாறானே”என்ற பாடல் பூதத்தம்பியின் மனக்கிலேசத்தை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது.

இந்த பூதத்தம்பியின் சரித்திரம் தெரிந்த ஒருவர் இந்த இசைநாடகத்தினைப் பார்க்கும் பொழுது, மிகப் புத்திசாதுரியமாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில விடயங்களை அடக்கி வாசித்திருப்பதையும் அதனைக் காட்சிப்படுத்தியிருப்பதையும் கவனிக்கலாம்.

மந்திரியான அந்திராசியின் ;சாதியை இந்த நாடகத்தில் எங்கும் சுட்டிக் காட்டாமல் நகர்த்தியிருக்கின்றார்கள். பெண்கள் மீது பலவீனம் கொண்ட ஒரு மந்திரியின் செயல்பாடுகள் இன்று அந்த சாதியினைச் சார்ந்தவர்களுக்கு ஒரு அவப்பெயரைத் தந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கின்றார்கள். பாராட்டுகள்.

இதுவரை முதன்மந்திரியாகக் காட்டப்பட்டு வந்த அந்திராசியின் இயற்கைக் குணத்தை ஆரம்பத்தில் இருந்து எந்த இடத்திலும் சொல்லாமல்,முதல் தடவையாக பூதத்தம்பியின் வீட்டில் விருந்துண்டு விட்டு களவாக அழகவல்லியை எட்டிப் பார்ப்பதில் வெளிப்படுத்துவது மிகச் சிறப்பு.

poothathamby2

 

மிக அமைதியான தாயாக,மனைவியாக தன்னை வெளிப்படுத்திய அழகவல்லி முதன்மந்திரியின்ஈனச்செயல் கண்டு பொங்கி எழுவதில் ஆரம்பித்து பின்பு சோகம்,கவலை போன்றவற்றை வெளிப்படுத்தும் இடங்களில் மிகத் திறம்பட நடித்திருக்கின்றார்.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் சாதாரணமாக குடும்ப பெண்களுக்கு உள்ள “உத்தியோகம் புருஷ லட்சணம்”என்ற மனோபாவம் தான் முதல் காட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்தது என்பதை உற்று நோக்கும் நாடக ரசிகர்கள் விளங்கிக் கொள்வார்கள். இறுதிக் காட்சியில் பூலோக மந்திரி தொழிலெனக்கே வந்த புதுமையை நினைந்தழுவேனோஎன பூதத்தம்பி அழும் பொழுது நெஞ்சம் வலிக்கின்றது. நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்லாமல் இவ்வாறான சிறு சிறு செய்திகளினூடாக நாடகத்தை நகர்த்தி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

அவ்வாறே அன்று தொடக்கம் இன்றுவரை நமக்கு நாமே எதிரி…நமக்கு நாமே துரோகம் இழைக்கின்றோம் என்பதை சரித்திரக் கதையாக இருந்தாலும் இரண்டு தமிழ் கதாபாத்திரத்தினூடு காட்டுவது மிகச் சிறப்பு. இதில் அட்மிரல் அப்பாவி. அவன் அரச அதிகாரி அவ்வளவுதான். பெண்ணாசை,பதவியாசை,சூழ்ச்சியால் ஒருவரை ஒருவர் எவ்வாறு அழிக்கின்றார்கள் என்பதையும் இறுதியில் அவர்களே அழிவினைச் சந்திக்கின்றார்கள் என்பதை தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கலை வடிவத்தினூடு எந்த விதத் திணிப்பும் இன்றி; காட்டியிருப்பது மிகச் சிறப்பு.

எந்தவொரு கலைவடிவத்திற்கும் கண்பட்டு விடுவது போல தெரிந்தோ தெரியாமலோ சிறு தவறுகள் நடந்து விடுவதுண்டு.

அவ்வகையில் மிகவும் சிறியளவிலான தவறு என்று என் கண்களை உறுத்தியது பூதத்தம்பியின் வீட்டிடமும் அரசமாளிகையின் அரங்க அமைப்பும் (பின் காட்சித் திரை) ஒன்றாக இருந்தன. காட்டுக் காட்சியில் இரு திரைச்சேலையை இணைத்தது போல ஒரேயொரு சிறைக்காட்சிக்கு பயன்படுத்திய வீட்டு திரைச்சேலையையும் பின்னணியில் தோட்டக்காட்சியையும் இணைத்து பல தடவைகள் இடம் பெற்ற வீட்டுக் காட்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

அடுத்து பெரிதும் நெருடிய விடயம் – பூதத்தம்பியின் மகன் சோதிநாதனாக வரும் சிறுவனின் முகத்தில் எந்தவொரு பாவனையும் இன்றி பல காட்சிகளில் வந்து போகின்றார். அரிச்சந்திர மயானகாண்டத்தில் வரும் லோகிதாசனைப் போன்று சிறிய பாடல்கள் கொடுத்து அந்தச் சிறுவனையும் நடிக்க வைத்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இதனை எதிர்காலத்தில் கவனிப்பது நன்று.

இந்த இசைநாடகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்றால் அனைவரும் பண்பட்ட மேடை நடிகர்கள். பல மேடை கண்டவர்கள். அனைவருக்கும் பாடும் திறன் இருந்தது முக்கிய காரணம்.

அதிலும் நாடகத்தை தன் தோள்களில் சுமந்து சென்று கதையின் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்த பேராசிரியர் கலாநிதி. கலாமணியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு தன் நவசரத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாத்திரப்படைப்பு அமைந்ததும் அதனை அவர் பயன்படுத்திய விதத்தையும் இந்த விமர்சனத்தை தாண்டி பார்ப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள். மறைந்த அண்ணாவியார் ஒருவரின் மகன் என்பதனை நிருபித்திருக்கின்றார். பாராட்டுகள்!

மொத்தத்தில் ஆண்டுக்கொரு முறை திருவைகையாற்றில் நடைபெறும் இசைவிழா போன்று இந்த நாடகம் நகர்ந்த 2 மணி 10 நிமிடங்களும் ஒரு இசை விழாவே.

நாடகம் முடிந்த பின்பும் கலாவித்தகர் திரு. றொபேட்டின் ஆர்மோனிய வாத்தியமும் லயவேந்தன் முருகையாவின் மிருதங்கமும் அன்று முழுக்க காதில் கேட்டுக் கொண்டே இருந்தன.

கையில் வைத்து வாசிக்கும் ஒரு சிறுகதைக்கோ…அல்லது நாவலுக்கோ ஒரு வாசகன் தன் கற்பனையில் வடிவம் கொடுப்பது போல இந்த இசைநாடகத்தைப் பார்க்கும் பொழுதும் அதன் பாத்திரங்களும் களமும் அவரவர்களுக்குரிய விதத்தில் அவரவருக்குள் ஒரு கற்பனை உலகைத் தோற்றுவிக்கின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் ‘ஒரு சிங்கம் – 3’பார்வையாளனுக்கு அவனது கற்பனைக்கு அங்கு இடமில்லை. இங்கு அது இருக்கிறது.

இந்த இசை நாடகத்தில் அனைவரின் இசையும் இனியது. மழையாகப் பொழிந்தது. அருவியாக கண்களில் கண்ணீராக ஓட வைத்தது. காட்டாறாக அனைத்து உணர்வுகளையும் தகர்த்து பார்வையாளரை கட்டிப் போட்டு வைத்திருந்தது. ஆம் பல இசைகளின்…ஜதிகளின்…தாளக்கட்டுகளின் சங்கமமே இந்த இசை நாடகம். இவ்வாறான இசை நாடகங்கள் எதிர்காலத்தில் பல அரங்கேற்றம் செய்யப்பட வேண்டும்.

எதிர்காலம் என்னும் பொழுது பெரியதொரு கேள்வி என் மனதில் எழுகின்றது.

குறும்படங்களும்…அவற்றின் விரைவான ஓட்டங்களும் நகர்வுகளும்…சின்னத் திரையும் பெரிய திரையும் கலை உலகத்தை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய உலகில் இந்த இசை நாடகங்களின் எதிர்காலம் தான் என்ன?

முகநூல்களில் இடப்படும் ஸ்டேட்மென்றுகளுக்கு கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பட்டமும் கொடுக்கப்படும் இந்த அவசர உலகில்,இந்தக் கலையை அழிந்து போகாமல் பாதுகாக்க பல்கலைக்கழங்கள் மட்டத்தில் சரி…. தமிழ் அரசியல் அரசாட்சி புரியும் மாகாண பிரதேச சபை மட்டங்களில் சரி உரிய நடவடிக்கை எடுப்பார்களா??

விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் இன்று கிடைக்காவிட்டாலும் நாளைய விடியல்கள் பதிலைத் தரும் என்று எதிர்பார்ப்புகளுடன்…..

அன்புடன்வி. ஜீவகுமாரன்

பி.கு.: இந்த இசை நாடகத்தை கீழேயுள்ள இணைய இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.

https://www.youtube.com/watch?v=l6VKvaYqUlc

 

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)