2009முதலாவது காலாண்டில் தகவம் அமைப்பின் முதற்பரிசு பெற்ற சிறுகதை
*
முதல்காதல், முதல் நாள் பள்ளிக்கூடம், முதல்நாள் ஓடிய சைக்கிள், முதல் நாள் விளையாடிய முன்நூற்றுநாலு சீட்டாட்டம், முதன்நாள் களவாய்ப் போய்ப் பார்த்த படம். . .மனத்திலும் வாழ்விலும் எப்போதாவது வலிகளும் நோக்களும் வரும் போது இவைகள் அவ்வப்போது வந்து ஒத்தடம் தந்து விட்டுப் போகும்.
போன வின்ரரில் சாந்தி காரில் அடிபட்டு இறக்கும் வரை எனக்கு பெரிதாக எந்த ஒத்தடமும் தேவைப்படவில்லை. . .அல்லது அந்த குட்டி சங்கரை நினைத்துப் பார்க்க நேரமிருக்கவில்லை.
கோடைகாலத்தில் ஒரு மணியாலத்தை முன்னாலும், பனி காலத்தில் ஒரு மணியாலத்தை பின்னாலும் மணிக்கூட்டில் திருகி விட்டு விட்டு அதன் பின்னால் அவசர அவசரமாக பணத்தையும் வசதிகளையும் தேடி ஓடும் வாழ்க்கையில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட பிறகு அல்லது தொலைத்து விட்ட பின்பு எதையும் அதிகமாக யோசிப்பதற்கு நேரம் கிடைத்ததில்லை.
என்றோ ஒரு நாள் இலங்கையில் இருந்து வரும் கலியாணக் காட்டுகள், ஏதோ ஒரு கோடைகாலத்தில் இந்தியா. . .அல்லது முடிந்தால் இலங்கைக்கு போய் உறவுகளைப் பார்த்து அவர்களுடன் கிணற்றடியிலும் செம்பருத்தி வேலியடியிலும் தென்னைமரத்தடியிலும் எடுத்து வரும் படங்கள், இன்னநெறு;றில் வரும் யுத்தசெய்திகள் இவைகள் தான் அதிகமான புலம்பெயர்வாழ் தமிழருக்கும் நாட்டுக்கும் உள்ள கடைசிநேர தொப்புக்கொடி உறவுகள்.
இதை விடவும் சிலருக்கு தங்கள் குடும்பங்களை வெளிநாட்டுக்கு கூப்பிடுதல், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்தல் என பொருளாதார சுமைகள் சற்று அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான உண்மை, ஆறதலாய் நின்று சமைந்து, இருந்து சாப்பிட நேரமில்லாமல் மக்டொனாசில் பாஸ்ட் பூட் சாப்பிடுவது போல் வாழ்க்கையை அவசர அவசரமாகத் தொலைத்து விட்டோம் என்பது தான்.
ஆட்டுக்கு முன்னால் குழையை நீட்டிக் கொண்டு போக போக பின்னால் அது ஓடி வருமே. . .அது போலத்தான் பணத்தை ஈட்டுவற்கு ஆயிரம் வழிகள் முன்னால் நிற்க, அதன் பின்னே ஓடும் ஆடுகளாய் நாங்கள். . . அப்பொழுது எந்த வலியும் தெரியவில்லை.
போன டிசம்பர் மாதத்தின் அதிகாலைளில் சாந்தி பேப்பர் போடப் போக. . பின்னால் வந்த ஒரு கார் பனியில் சறுக்கி . . .நடைபாதையில் போடப்பட்டிருந்த இரும்புக் கிறாதிகளில்; மோதி; அதே வேகத்தில் திரும்பி அவள் மீதும் மோதி அவளை என்னிடம் இருந்து பிரித்து. . . அவளை ஆஸ்பத்திரியின் சவக்காம்பிராக்குள்ளும் என்னையும் மகளையும் தனியே வீட்டை அடைத்த அன்றுதான் வாழ்க்கையை எங்கோ நான் தொலைத்திருந்ததாக உணர்ந்து கொண்டேன்.
எங்கள் இருவரின் பக்டரி வேலைகளினால் வந்த வருமானம் எங்கள் வீட்டுக்கும், புதிதாக வேண்டியிருந்த காருக்கும், மகளின் படிப்புக்கும் நிச்சயம் போதுமானதாயே இருந்தது. பின் எதற்கான நான் இரவில் பிற்ஸர் றெஸ்றோரன்ரிலும். . .சாந்தி காலையில் பேப்பர் போடவும் போயிருக்க வேண்டும்?
எல்லாம் காலம் கடந்த ஞானங்கள். . .அவர் அவர்களுக்கு வரும்வரை அவர் அவர்கள் ஓடிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இப்போதிருக்கும் தனிமையில் அடிக்கடி மனம் இலங்கையை எட்டிப் பார்க்கின்றது. சுகிக்கு கல்யாண வயது வரும் பொழுது அங்கேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து செய்து வைக்க வேணும் போல் மனம் ஏவுகிறது.
பகல் முழுக்க பக்டரி வேலை, பின்நேரத்தில் தனியே சமையல், இரவில் சுகிக்கு பள்ளிக்கூட வேலைகளில் உதவிசெய்தல் என வாரத்தின் ஐந்து நாட்களும் அவசர அவசரமாக ஓடினாலும் சனி, ஞாயிறுகள் அசைவது கொஞ்சம் கஷ்டமாகவேயிருந்தது. சனி, ஞாயிறுகளில் கலியாணவீடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என வந்து போனாலும் சாந்தியில்லாது தனியே போயிருப்பதும் கஷ்டமாய்த் தான் இருந்தது.
வழமைபோல எல்லா ஆண்கள் மூலைக்கு மூலை இருந்து தண்ணியடித்துக் கொண்டு நாட்டு அரசியல், நன்மை தீமை கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அவர்களுடனு; என்னால் ஐக்கியப்பட முடிந்தாலும் அவர்கள் தங்கள் மனைவிமார், குடும்பங்கள் என்று கதைக்கத் தொடங்கும் பொழுது நானே எனக்குள்ளும் அவர்களுடனும் இருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கின்றேன் என்பதை எத்தனையோ தடவை எனக்குள் உணர்ந்திருக்கின்றேன். மேலாக சாந்தி இருந்த பொழுது பொது இடங்களில் விழுந்து விழுந்து சிரித்துக் கதைக்கும் பெண்கள் கூட ஒரு புன்சிரிப்புடன் மட்டும் விலத்திப் போகும் பொழுது மனது இன்னமும் கஷ்டப்படும்.
எனவே பொதுவாக இப்படியான ஒன்று கூடல்களை பெரிதாக தவிர்கவே பார்ப்பேன். முடியாவிட்டால் விழாக்களுக்கு கொஞ்சம் பிந்திப் போவேன். . .அல்லது முந்தி வெளிக்கிட்டு வருவேன். விதவை என்று ஒரு பெண்ணை சமுதாயம் தள்ளி வைப்பது ஒரு ரகம் என்றால் ஆணைத் தள்ளி வைப்பது இன்னேர் ரகம் என்பதை இந்த ஒரு வருடத்துள் நன்கு அனுபவித்திருந்தேன்.
எனவேதான் சனி, ஞாயிறு என்பது எனக்கு ஒரு போராட்டம் தான். அதிலிருந்து தப்ப பொதுவாக ரி. வி. அல்லது படங்கள் அல்லது எப்போது யாரோ ஊரில் இருந்து அனுப்பியிருந்த கலியாண வீட்டு டி. வி. டி. கொப்பிகள். . .
இப்போ கொஞ்ச நாட்களாக இந்த டி. வி. டி. கொப்பிகளுள் அதிகமாக ஐக்கியப்பட்டு விட்டேன். இது எனக்குத் தெரிந்த எங்கள் பகுதி ஆட்களினதும் சரி. . . அல்லது எனக்குத் தெரியாத சாந்தியின் ஆட்களினதும் சரி;. . . கலியாண வீட்டுக்குப் பின்னால் தெரியும் ஒரு யாழ்ப்பாணம் அல்லது கோப்பாய் அல்லது மருதனாமடம். . .ஆட்களை ஏற்றிக் கொண்டு ஓடும் மினி பஸ்கள். . .அவை கிளப்பும் புழுதிகள் . . பக்கத்தே தெரியும் பனைமரங்கள் என அன்று முழுக்க நான் யாழ்ப்பாணத்தினுள் தான்.
போனமாதம் நடுப்பகுதி என்று நினைக்கின்றேன். தங்கச்சி தனது மகளின் சாமத்தியச் சடங்கு கொப்பி அனுப்பியிருந்தாள். சுகியும் வாரவிடுமுறைக்கு பள்ளிக்கூடத்துடன் நோர்வேக்கு காம்பிங் போயிருந்தாள். எனக்கு அந்தக் கிழமை சுகிக்கு சாப்பாடு செய்ய வேண்டும் என்ற வேலையும் இருக்கவில்லை. எனவே தங்கச்சியின் மகளின் சாமத்தியப்படக் கொப்பியும் நானும் தான். . .கட்டம் கட்டமாக லயித்திருந்தேன்.
அதில் இருந்தவர்கள் அத்தனை பேரும் எனக்குத் தெரிந்தவர்களே. . .ஆனால் காலம் அவர்கள் மீது போட்டிருந்த கஷ்டங்களின் கோடுகள் முகத்தில் மட்டும் எங்கேயோ தெரிந்திருந்தது. மற்றும்படி அவர்கள் இன்றும் அப்படியே தான். . .எனக்கு முன்நூற்றிநாலு சொல்லிக் கொடுத்த பொன்னையா தாத்தா. . .தமிழ் படிப்பீத்த சண்முகராசா மாஸ்டர். . . அம்மாக்கு புளியங்காய் உடைத்துக் கொடுக்கும் தங்கமணி அக்கா. . .என்னுடன் களவாய் படத்துக்கு வரும் மனோகரன். . . .நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். . .ஒவ்வோர் கட்டம் கட்டமாக. . . அவர்கள் வாழ்க்கையும் என்னையும் இணைத்தபடி. . . நேரம் போவது தெரியாமல் பார்த்தபடி. . .
இப்பொழுது தங்கச்சியின் மகளுடன் படம் எடுக்க வந்திருக்கிறது. . .என் கைகள் கொஞ்சம் நடுங்கின்றது. . . மேகலா தானா அது? . . எப்பிடி மாறிப்போயிருக்கிறாள்? பக்கத்தில் வளர்ந்த மூன்று பெண்பிள்ளைகள், சின்ன இரண்டு பையன்கள். . .மற்றது புருஷனாகத் தான் இருக்க வேண்டும். என்ன கோலங்கள். . . .
நான் உன்னைக் காதலிக்கிறன். . .நான் உன்னைத் தான் கட்டிக் கொள்ளுவன் என நான் அவளுக்கோ. . .அவள் எனக்கோ எந்த வாக்குறுதிகளும் கொடுக்கவில்லையே தவிர நிச்சயம் ஒருவகையில் நான் அவளைக் காதலித்துதான் இருந்திருக்க வேண்டும். . .அப்படியே அவளும் இருந்திருக்க வேண்டும். . . அல்லது இப்ப எதற்காக இந்த வாக்குறுதிகளும் ஒப்பந்தங்களும் என அவை பற்றிக் கவலைப்படாது நாம் இருவருமே பள்ளிக்கூட காலத்தில் சந்தோஷங்களாக இருந்திருக்கின்றோம். சின்னச் சின்னச் சிலுமிஷங்குள். . . சின்னச் சின்ன அன்பளிப்புகள் . . .சின்ன சின்ன சிரிப்புகள். . .சின்ன சின்ன கோபங்கள். . . .
எங்கள் கிராமத்தின் பெரியவீடு மேகலா வீட்டுடையது. பேரன் மலேசியா பென்ஷனியர் என்று அம்மா சொல்லக் கேள்வி. எப்பொழுதும் வாசல் இரும்புக் கதவிற்கு தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கும். ஆட்கள் போய்த் தட்டினால் அல்லது பெரிதாய் குரல் கொடுத்தால் மட்டும் மேகலாவின் தாய், அல்லது பேத்தி வந்து ஏன் எதற்கு என்று கேட்டு கதவைத் திறப்பார்கள். பல சமயம் கதவைத் திறக்காமலே பதில் சொல்லி அனுப்புவார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் அங்கு விதிவிலக்கு இருந்தது. சைக்கிளில் பெல் அடிக்கும் விதத்திலேயே அவர்களுக்கு நான் எனத் தெரிந்து விடும். வந்து கேற்றைத் திறப்பார்கள். நானும் மேகலாவும் கொஞ்சம் படிப்பும்கொஞ்சம் விளையாட்டும் செக்கல் வரும்வரை முன் கூடத்தில் இருப்போம். சிலவேளை அவர்கள் வீட்டிலேயே சாப்பிடுவதுண்டு. நான் நினைக்கின்றேன் சுமார் நாலாம் வகுப்பில் தொடங்கிய எங்கள் இந்த உறவு அவள் வயதுக்கு வரும்வரை தொடர்ந்தது.
பின்பும் அப்படி நான் போயிருந்து அவளுடன் விளையாடி வருவதை அவர்களின் வீட்டிலும் சரி, எங்களின் வீட்டிலும் சரி பெரிதாய் விரும்பவில்லை எனினும் சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் இரண்டொரு மணித்தியாலம் மேகலா வீட்டுக்கு போயிருந்து விட்டு வருவேன்.
ஆனால் பள்ளிக்கூடத்தில் எங்கள் இருந்த மாதிரியே உறவு தந்தது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. . . ஒரு நாள் அட்வான்ஸ் லெவல் படிக்கும் வளர்ந்த தடித்த ஒரு மாணவன் ஒருத்தன் ஒரு கடிதத்தை என்னிடம் தந்து மேகலாவிடம் கொடுக்கச் சொன்னான். அவனின் தோற்றத்துக்கு பயந்து வேண்டிக் கொண்டாலும் அடுத்த வினாடியே அவனுக்குத் தெரியாமல் கிழித்து வயல் கிணற்றுக்குள் எறிந்து விட்டேன்.
இரண்டு நாள்களுக்குப் பின் அவனே என்ன பதில் எண்டு மேகலாவிடம் கேட்டிருக்கின்றான். அவள் அவனை முழிசிப் பார்த்து விட்டு, என்னிடம் வந்து என்னை மிரட்டினது போல் கேட்டாள், ஏன் அவன் தந்த கடிதத்தை தன்னிடம் தரவில்லை என்று.
நான் தலைகுனிந்தபடியே நின்றேன்.
என் செல்லமடா நீ என என் தலையைக் கோதிவிட்டுப் போனாள்.
இப்பவும் இனிக்கின்றது – இளமையும் நானும் அவளும் ஒன்றாய்த் திரிந்த காலங்கள்.
இப்பொழுதோ . .மேகலா சரி பாதியாய் இருந்தாள். கன்னங்கள் இரண்டும் குழி விழுந்து. . . கழுத்தில் சின்ன கயிறோ சங்கிலியோ. . .காய்ந்து போய் பின் வளவில் விழுந்த கங்குமட்டையாக.
பக்கத்தில் நிற்கும் புருஷன். . . எங்கள் ஊர் ஆளாய்த் தெரியவில்லை. கண்கள் தாண்டு. . .பற்கள் மிதந்து. . .நிறை குடிகாரனான காட்டியது.
டென்மாhக்கிற்கு வந்த பின்பு சாந்தியின் சம்பந்தம் மாற்றுச் சடங்காக சீதன, பாதனத்துடன் சண்டிலிப்பாய் சாத்திரியாருடன் கூடி வந்த போது மேகலாவை ஒரு கணம் மனம் நினைத்தது உண்மைதான். ஊரிலிருந்த மனோகரனிடம் மெதுவாக விசாரித்தேன்.
மேகலாக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே இளவாலையில் கலியாலியாணம் முடிந்திருந்ததாம். வவுனியா பாங்க் ஒவ்வீசராம். தவிரவும் பெரிய பாட்ஸ்கடை ஒனு;றில் பங்காம்;. கட்டி நல்லாய் இருக்கிறாளாம். வவுனியாவில் தான் இருக்கிறாளாம். நல்லது கெட்டதுக்கு ஊருக்கு வந்து போவாள் என மனோகரன் சொன்ன பொழுது ஆறதலாய் இருந்து விட்டேனோ என மனத்துள் என்னையே நான் நொந்து கொண்டாலும், எங்கை இருநு;தாலும் அவளும் நானும் நல்லாய் இருப்பம் என்ற நினைப்புடனேயே சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினேன்.
இப்போ சாந்தியும் போய். . .இவளும் உருக்குலைந்து. . . என்ன நடந்தது?
தங்கச்சிக்கு தொலைபேசி எடுத்தேன்.
வீ. டீ.யோ பார்த்தேன். . .நல்லாய் இருந்தது. . .இத்தியாதி. . .இத்தியாதிகளுக்குப் பின்பு மெதுவாக கேட்டன், மேகலாக்கு என்ன நடந்தது எண்டு.
கேட்க கஷ்டமாய் இருந்தது. . . நல்லாய் தான் இருந்தவர்களாம் வன்னியில். . . பாங்கில் காசை அளவுக்கு மீறிக்கடன் எடுத்து வியாபாரத்தில் போட்டிருக்கிறாராம். . .புருஷனுக்கு கூடாத கூட்டங்கள் வேறு. . . கொஞ்சம் குடி. . . அளவுக்கு மீறிய அளவில் வியாபாரங்கள். . .நாட்டின் சீரற்ற நிலை. . . கொடுத்த கடன்களை திருப்பி வேண்ட முடியாத நிலை. . . கொஞ்;சம் கொஞ்சமாய் வட்டி வளர்ந்து முதலை அழுத்த கடைசியில் வவுனியா சொத்துகள் எல்லாம் அரைவிலைக்கும் கால் விலைக்கும் வித்துப் போட்டு ஊரொடு வந்து விட்டார்களாம். பணத்துடன் புரண்ட கை. . .காசில்லாத போது கையைக் கடிக்கவே செய்தது. . . வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் இருந்து கொண்டு கை நீட்டி வேண்டிய லஞ்சம் ஆளை வீட்டுக்கு அனுப்பி விட்டது. தவிரவும் இரண்டு ஆண்டுக்கு ஒன்றாக ஐந்து பிள்ளைகள் வேறு. வீட்டுக்காணியாலும் தோட்டக் காணியாலும் வரும் வருமானம் மட்டும் தான் வாழ்க்கையை கொண்டு போகுதாம். மேலாக புருஷன்காரன் ஊர் மூலையில் கள்ளச் சாராயம் காச்சுற ஆக்களோடை சேர்ந்து ஒரே குடியாம்; என தங்கச்சி சொல்லி முடித்தாள்.
அன்றைய நாள் கழிவது எனக்கு பெரிய சங்கடமாய் இருந்தது.
அச்சாணி ஆட வெளிக்கிட்டால் வண்டியின் குடை சாய்வது பெரிய விடயம் இல்லை.
ஆனால் அது மேகலாக்கு நடந்திருக்க வேண்டாம் மனம் அழுதது. . . .ஊரில் பெரிய வீட்டுக்காரி இப்பொழுது ஊரின் நகைப்புக்கு இடமாக. . .பின்னேரத்தில் பிள்ளைகளுக்கு கொஞ்சம் ரியூஷன் சொல்லிக் கொடுக்கிறாளாம். . .
இவற்றை எல்லாம் கேட்ட பின்பு ஒரு தடவை ஊருக்குப் போக வேணும் போல் இருந்தது. . .
மேகலாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. . .அவளுடன் கதைக்க வேணும் போலிருந்தது. . .என்ன கதைப்பது என்று தெரியாவிட்டாலும் அவள் நல்லாய் இருந்த காலத்தில் அவளுடன் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருந்த நாட்களுள் மீண்டும் ஒரு தடவை போய் முடங்க மனம் ஆசைப்பட்டது.
அன்று முழக்க என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், எங்கு திரும்பினாலும் மேகலா தான்.
அவள் வீட்டின் பின்புறத்தே அமைந்திருந்த பெரிய மாட்டுத் தொழுவத்தில் நின்று கொண்டு மாடுகள் இரைமீட்டுவது போல அன்றை சனிக்கிழமை முழுக்க எனக்கு நினைவு மீட்டல் தான்.
ஒரு நாள் பகிடியாகவே அவளைப் பேசினேன், நீ இந்த மாடுகள் போல் பிறந்திருந்தாலாவது பள்ளிக்கூடத்தில் படிப்பதை வீட்டில் இரைமீட்டி நல்ல கெட்டிக்காரியாய் வந்திருப்பாய் என்று. . .
வந்ததே அவளுக்கு கோபம். . .மாட்டுக்கு முன்னால் வைத்திருந்த தவிட்டுத் தண்ணி என் மேல். . .
நான் கோவித்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை வந்து விட்டன். . .பின் இரண்டு கிழமையாய் இரண்டு பேரும் கோபம். . .பள்ளிக்கூடத்திலும் கதைக்கவில்லை. . .
ஒருநாள் பள்ளிக்கூடம் முடியும் சமயம் அவள் எனக்கு கிட்டவாக வந்து, ‘கோவக்காறனை அம்மா பின்னேரம் வீட்டை வரச்சொன்னவா”, என்றாள்.
நானும் சரி என்று விட்டு அன்று பின்னேரம் அவள் வீட்டை போனேன்.
வீட்டில் அவள் மட்டும் தான் நின்றிருந்தாள்.
‘அம்மா எங்கை?”
‘அவை கோயிலுக்கு போட்டினம்”
‘அப்போ அம்மா வரச்சொன்னது எண்டு நீ சொன்னது?”
‘அது சும்மாடா. . .இனியும் உன்னோடை கோபிச்சுக் கொண்டிருக்க ஏலாது. . .சொறியடா. . .
எனக்கு இத்தனை நாளும் மனமே சரியில்லை. . .நீயாய் கதைப்பாய் எண்டு பார்த்துக் கொண்டு இருந்தன். . .நீ பெரிய ரோஷக்காரன். . அது தான் நானாக. . .”
‘போடி. . .நீயும் உன்ரை கோபமும் சமாதானமும்”. என்றுவாறு அவள் கையிலிருந்த பனங்கிழங்கை கேட்டு கையை நீட்டினேன்.
‘பொறு. . பொறு” என்று விட்டு வீட்டுப்படியில் இருந்து பனங்கிழங்கை தும்பு வார்ந்து வார்ந்து எனக்குத் தநது கொண்டிருந்தாள். . .நானும் மாலை இருட்டாகும் வரை அதனை வேண்டிச் சாப்பிட்டுக் கொண்டேன்.
சின்னச் சின்ன ஹைக்கூ கவிதைகள் போல அவளும் நானும் கழித்த அந்த இனிமையான நாட்கள். . . எங்களைச் சுற்றி எப்படி ஒரு சின்ன ஒரு நூல் வேலியை எங்கள் இருவராலுமே போட முடிந்திருந்தது. . .இன்று அவள் கோலத்தை பார்த்த பொழுது அப்படி ஒரு நூல் வேலியைப் போட்டிருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றியது.
இளமையும் இனிதாக அமைந்திருக்கும். . . அவளுக்கும் இப்படி ஒரு வாழ்வில் சறுக்கல் வந்திராது. . .நானும் கையில் ஒரு பன்னிரண்டு வயதுப் பெண்ணுடன் தன்னந் தனியே. . .
எனக்கு நன்கு தெரியும் இந்தக் கூட்டல் கழித்தல் கணக்குகளை வாழ்க்கையில் போடமுடியாது என்று. ஆனால் வாழ்வின் தோல்விகளுக்கு ஒத்தடம் போட இந்த மனக்கணக்குகள் சிலநேரம் உதவும் போல் இருக்கும். அவ்வளவு தான்.
எப்படியோ இந்தக் கோடை விடுமுறைக்கு சுகியையும் கூட்டிக் கொண்டு ஒரு தடவை ஊருக்குப் போய் வருவது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
*
டென்மார்க் – பிராங்பேட் வழியாக அதிகாலை 4.45க்கு ஏர்லங்கா கட்டுநாயக்கவில் தரையைத் தொட்டது.
பிளேனினுள் அடுத்து அடுத்து போட்ட மூன்று தமிழ்ப் படங்களுடன் சுகி ஐக்கியமாயிருந்;தாள். எனவே அவளுக்கு இந்த பதின்மூன்று மணித்தியாலப் பிரயாணம் பெரிதாக இருக்கவில்லை.
எனக்குத்தான். . . மேகலா வந்து வந்து குழப்பிக் கொண்டிருந்தாள். . .சுமார் பதினாறு வருடங்களுக்குப் பின்பு. . . பக்கங்கள் தொலைந்த கட்டுரைக் கொப்பியின் பக்கங்களைத் தேடும் முயற்சி. . .
என்ன கதைக்கப் போறம். . .?
விடை தெரியாத கேள்விகளை மனம் அடுக்கி கொண்டதாலோ என்னவோ ஒழுங்காக நித்திரையும் கொள்ளமுடியவில்லை. . . சுகியைப் போல் சந்தோஷமாயிருந்து படங்களைப் பார்த்துக் கொள்ளவும் முடியவில்லை. . .
இடையில் சுகி கேட்டாள், ‘ஏதாவது பற்றிக் கவலைப்படுகிறீங்களா அப்பா” என்று.
‘இல்லை. . .ஏன் கேட்கிறாய். . . ”
‘கொஞ்சம் அப்நோர்மலாய் இருக்கிறமாதிரி இருக்கிறியள். . . ”
‘இல்லையடா. . .பதினாறு வருசத்துக்கு பிறகு ஊருக்கு தனிய போறன். . .அது தான். . . ”
‘அம்மாவை நினைச்சிட்டீங்களா. . . ”
‘ஓம் ” எனப் பொய்யாக தலையாட்டினன். . .
இமிக்கிரேஷன். . .கஸ்டம்ஸ். . .அனைத்தையும் தாண்டி வர தங்கச்சி, அத்தார், மருமகள் அனைவரும் நின்றார்கள். . .
தங்கச்சி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். . .சாந்தியுடன் என்றைக்குமே அவள் நல்ல சகோதரி போலவே இருந்தவள். சராசரி யாழ்ப்பாணத்து மச்சாள் சண்டைகள் அவர்களுக்குள் என்றுமே இருந்ததில்லை.
சரி. . .சரி. . .என அவளை நானே சமாதானப்படுத்திக் கொண்டு எயர்போட்டை விட்டு வெளியேறி நேராக இரத்மலானைக்குப் போனோம். அங்கு பத்து மணிக்கு புறப்படும் விமானத்தில் எமக்கு சீற் பதிவாயிருந்தது.
மீண்டும் ஒரு குட்டி விமானப் பயணம்.
சுகியும் தங்கச்சி மகளும் நன்கு சேர்ந்து கொண்டு அந்தப் பயணத்தை ரசித்தார்கள்.
நான் எனது மௌனத்துடன். . அல்லது மேகலா பற்றிய நினைவுத் தவத்துடன். . .
‘என்ன பேசாமால் வாறாய் என தங்கச்சி இரண்டொரு தரம் கேட்டாள். . .
‘பிளேனிலை நித்திரை அது தான். . . ”
மீண்டும் மனமறிந்த ஒரு பொய்.
‘இன்னும் கொஞ்ச நேரத்திலை பலாலி வந்திடும்” அத்தார் சொல்லி அதிக நேரம் இ;ல்லை. . பிளேன் ரன்வேயில் ஓடத்தொடங்கியது.
பலாலி. . . அங்கிருந்து ஆமியின் பஸ்ஸில் யாழ்ப்பாணம். . .பின் ஒரு வாடகைக் காரில் மருதனாமடம்.
வழியெங்கும் போர் பதித்த தடங்கள் வடிவாகத் தெரிந்தது. . .அது கட்டடங்களில் என்றாலும் சரி. . .மக்களில் என்றாலும் சரி. . .இது நான் வாழ்ந்த யாழ்ப்பாணம் இல்லை என மனது சொல்லுகிறது.
கார் இப்பொழுது மருதனாமடத்துள் நுழைகிறது. . .
றோட்டுகள் இருந்த தெருக்கள் கல் ஒழுங்கை போல. . .நாடு நன்றாகத் தான் மாறிவிட்டிருந்தது.
நாங்கள் போய் இறங்கும் பொழுது சாந்தி வீட்டாக்கள் முன்பே வந்து எங்களுக்காக காத்திருந்தார்கள். சுகியையும் என்னையும் கட்டிப் பிடித்து தங்கள் கவலை தீரும் வரை அழுதார்கள். எனக்கும் ஏதும் கதைக்க முடியவில்லை.
என்ன நடந்தது ஏது நடந்தது என்று எல்லாம் விசாரித்தார்கள். . .எனக்காகவும் சுகிக்காகவும்
மிகவும் கவலைப்பட்டார்கள்.
தங்கச்சி வீட்டை முன்பே அத்தார் குடும்பம் வந்து எல்லோருக்குமாய் சமைத்து வைத்திருந்தார்கள்.
வந்த களை மாற நன்கு குளித்துச் சாப்பிட்;டு முடிய பின்னேரம் நாலு மணியாகி விட்டது.
நான் வரப்போறதை முன்னே அறிந்திருந்த அயல் அண்டை ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத் தொடங்கினார்கள்.
பொன்னையா தாத்தா. . .சண்முகராசா மாஸ்டர். . . தங்கமணி அக்கா. . .மனோகரன். . . .இன்னும் எத்தனை எத்தயோ பேர். . .இரவு ஒன்பது மணியாகியும் ஆட்கள் வருவது குறையவேயில்லை.
தங்கச்சிக்கும் எல்லோருக்கும் தேத்தண்ணி ஊத்தி கை ஓய்ந்திருக்கம்.
ஒவ்வொருத்தர் வரும் போது முன் படலை திறந்து மூடும் பொழுது என்னையும் அறியாமல் வாசல் கதவடியை கண்கள் திரும்பிப் பார்க்கும் – மேகலாவாக இருக்குமோ என்று. . . .
அன்று முழக்க அவள் வரவேயில்லை.
அடுத்தநாள் காலமை சாந்தி வீட்டார் வரச்சொல்லியிருந்தார்கள். நானும் சுகியும் நிலம் வெளிக்கும் முன்பேயே புறப்பட்டு விட்டோம். அப்போது நான் வேளையுடன் திரும்பி வரலாம் என்பது ஒரு காரணம். . .மேகலா என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பக் கூடாது எண்டது இரண்டாவது காரணம். . . அப்படி அவள் வராட்டியும் நானாக இருட்ட முதல் அவள் வீட்டிற்கு போகவேண்டும் என்னது மூன்றாவது காரணம்.
சைக்கிளில் முன்னேயிருந்து தோட்ட வெளிகளுக்கும் பனை வெளிகளுக்கும் நடுவே பயணிப்பது சுகிக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஏன் படலைக்கு படலை ஆமி நிக்குது?. . .ஏன் டென்மார்க் போலை எல்லோரும் சந்தோமாய் இருக்க ஏலாது?. . . வழி முழுக்க அவள் துருவித் துருவி எத்தனையே கேள்விகள். . .; முடிந்தவற்றை தெரிந்தளவிலும் முடியாதவற்றைக் கற்பனையுடன் சொல்லிக் கொண்டு போனேன்.
சாந்தி வீட்டார் நேற்றளவு இன்று அழவில்ii.
நடக்க முடியாமல் இருந்த சாந்தியின் பேத்தி தான் சுகியை மடியில் வைத்துக் கொண்டு அழுதா. . .எப்பிடி உன்னை விட்டுட்டு போக அம்மாக்கு மனம் வந்தது என்று. . .சுகிக்கும் கண்கலங்கியது போல இருந்தது.
பத்துமணிக்கு கிட்டவாக வெயிலுக்கு முதல் போவம் என வெளிக்கிட சாந்தியின் பெற்றோர் விடவில்லை. கட்டாயம் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
அத்துடன் சுகியை தம்முடன் இரண்டொரு தினம் வைத்திருக்க விரும்பினார்கள்.
நானும் மத்தியானம் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளிக்கிட பின்நேரம் ஆகி விட்டது.
வீட்டை போன பொழுது இரண்டொரு ஆட்கள் வந்து எனக்காக காத்திருந்தார்கள். . .இன்னும் இரண்டொரு ஆட்கள் காலமை வந்துவிட்டு பொழுதுபட திரும்ப வாறம் என்று விட்டு போனவையாம் என தங்கச்சி சொன்னாள்.
யார் யார் வந்தது எனக் கேட்டேன். . .அதில் மேகலா இல்லாதிருந்தது எனக்கு பெரிய ஏமாற்றமாய் இருந்தது.
மீண்டும் ஆட்கள். . .சுக துக்க விசாரிப்புகள். . .இரவாகி விட்டது. . .
அடுத்தநாள் விடியலுக்காக காத்திருந்தேன்.
காலமை தங்கச்சியுடன் இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது என்னைப் பார்க்க வந்தவர்களில் யார் யாருக்கு உண்மையில் ஊரில் கஷ்டம். . .எவ்வளவு எவ்வளவு கொடுத்தால் உதவியாக இருக்கும் என ஒரு கணக்கு எடுத்துக் கொண்டன்.
‘நீ இன்னமும் மாறவேயில்லை”, என செல்லமாக என்னைக் கண்டித்து விட்டு உள்ளே போனாள்.
நான் பாங்கடி மட்டும் போட்டு வாறன் எனச் சொல்லிவிட்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு முதலில் போய் பாங்கில் ஐந்து லட்சம் மாற்றக் கேட்டன்.
அவர்கள் சிரித்தபடி, ‘உங்களுக்கு நாட்டு நிலைமை தெரியேல்லை. . .அவ்வளவு காசு நாங்கள் வைச்சிருக்கிறதில்லை. . .ஒரு நாளைக்கு ஒரு லட்சபபடி ஐந்து நாளுக்கு வந்து மாற்றுங்கள். .அல்லது யாழ்ப்பாண வங்கிக்கு போய் மாற்றுங்கள்”, என பதில் சொன்னார்கள்.
‘சரி! ஒரு லட்சத்தை தாருங்கள”,; என வேண்டிக் கொண்டு நேரே மேகலா வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்தினேன்.
இதுதான் வீடு என்று நம்ப முடியாமல் இருந்தது. . . வீட்டிற்கு முன்னால் இப்பவும் அந்த இரும்;புக் கதவு தாழ்ப்பாள் போட்டபடியேதானிருந்தது. ஆனால் கதவு முழுக்க கறள் பிடித்து. . .பெயின்றைக் கண்டு அந்தக் கதவுகள் சரி. . வீட்டின் முன் சுவர்கள் சரி எத்தனையே வருடங்கள் இருக்கலாம். வீட்டைச் சுற்றிவர இருந்த வேலிகள் பாறிப்போயும். . . கறையான் அரித்தும். . .அவள் வாழ்க்கையைப் போல. . .
சைக்கிளில் இருந்த படியே பெல்லை அழுத்தினேன். . .எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும். . .அதே தாள சுருதியில். . . எனக்கே அதிசயமாக இருந்தது. . மேகலாக்கு கேட்டிருக்க வேண்டும்.
அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தாள். . . என்னைக் கண்டதும் அவள் கால்களின் வேகம் தானாக குறைந்தது. . .
வெளிச் சுவரில் தொங்கியிருந்த திறப்பை எடுத்து வந்து கேற்றின் பூட்டை திறந்தாள்.
சைக்கிளில் இருந்து இறங்காமலே அவர்கள் வீட்டு முன்தாழ்வாரம் போய் வீட்டு முன் விறாந்தையில் உட்கார்ந்து கொண்டன்.
மேகலா வந்து விறாந்தையின் முன் படியில்மற்றத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.
நான் ஏதும் பேசாமல் இருந்தேன்.
கொஞ்ச நேரம் மேகலாவும் பேசாமல் இருந்தாள்.
நான் இரண்டு நாளும் உன்னைப் பார்க்க வரேல்லை எண்டு தானே உம்மெண்டு கொண்டு இருக்கிறாய். . .
மேகலாக்கு என்னை நல்லாய்த் தெரியும். . .சின்ன சின்ன கோபம் வந்தால் நாம் உம் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பேன் என்று. அந்த வினாடியில் நான் குட்டிச் சங்கராய் மாறியிருந்திருக்க வேண்டும்.
‘ஓம்”; என்பது போலத் தலையாட்டினேன்.
‘என்ன எண்டு உன்னை வந்து பார்க்கிறது. . .கண் காணாத தேசத்திலை நல்லாய் இருக்கிறாய் எண்டு நினைச்சு சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தன். . . ஆனால் இந்த சின்ன வயதில கையிலை ஒரு பொம்பிளைப் பிள்ளையோடை நீ தனிச்சுப் போட்டாய் எண்டு கேள்விப்பட்ட இரண்டொரு நாளாய் என்னாலை எதுவுமே சாப்பிட முடியேல்லை. . .உன்னை நினைச்சு அழுது கொண்டு இருந்தனான். . இப்ப நீ வாறாய் எண்டு கேள்விப்பட்டனான். . .முந்தநாளே வந்து பார்க்க நினைச்சனான். . .எண்டாலும் என்னாலை முடியேல்லை. . . ”
என்னுள் நான் அதிர்ந்து போனேன். . .
படியில் இருந்தபடியே தும்பை வார்ந்து எடுத்து விட்டு எனக்கு கிழங்கைத் தந்தாள்.
“பிள்ளையள் பள்ளிக்கூடத்துக்கோ?”எங்கை எனக்கு குரல் விக்கியது.
‘ஓம்”; எனத் தலையாட்டினாள்.
‘அப்ப அவரெங்கை?”
‘நீ கட்டாயம் அறிஞ்சிருப்பாய் தானே. . .காலமையே கச்சேரிக்கு போறமாதிரி வெளிக்கிட்டு போயிடும். . .பின்னேரம் இஞ்சை அங்கை வேண்டிக் குடிச்சிட்டு வரும்”
‘எப்பிடி நீ?”
‘என்ன செய்யுறது. . .ஏதோ அப்பர் அம்மா தேடி வைச்ச சொத்து இருக்கிறதாலை ஐஞ்சு பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊத்துறன்”
காலம் அவளை எப்படி மாற்றி வைத்திருக்கிறது.
பாங்கில் எடுத்துக் கொண்டு வந்த காசுக்கட்டை மெதுவாக வெளியில் எடுத்தேன்.
‘என்ன உது”
“இதிலை ஒரு லட்சம் ரூபாய் இருக்கு. . . “, நான் சொல்லி முடிக்க முதல் அவள் பத்திரகாளியா எழுந்தாள். அவள் மடியில் தட்டில் இருந்த அத்தனை பனங்கிழங்கும் நிலத்தில் சிதறியது.
‘இப்பவே சொல்லிப் போட்டன் நீ உந்தக் காசோடை எழுப்பு. . . நான் இப்பவும் தாரிட்டையும் கை நீட்டாமல் மரியாதையாகத் தான் வாழுறன். . .எனக்கு தாரும் பிச்சை போட வேண்டாம். . . ”
‘மேகலா நான் சொல்லுறதை”, என்று தொடங்க முதல் தனது இரண்டு கைகளையும் எடுத்துக் குவித்தாள்.
‘தயவு செய்து நீ போட்டு வா”
என்னால் மேலும் எதுவும் கதைக்க முடியவில்லை.
சைக்கிளை உருட்டியபடி அவள் வீட்டின் கேற்றுக்கு வெளியே போனேன்.
கொஞ்சத் தூரம் போன பின்பு திரும்பிப் பார்த்தேன்.
அந்த கிராமத்து பெரிய வீட்டுக்காரி வாசல் கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே போய்க் கொண்டிருந்தாள்.
*
‘என் மேகலா எங்கே தொலைந்து போனாள்?”
விடைதெரியாத என் நாட்டு யுத்தமாய் மீண்டும் நான் எயர்லங்காவில் டென்மார்க்கை நோக்கி. . .
இப்போதைக்கு ஒரு இலங்கைப் பயணம் இனி எனக்கில்லை!
(முற்றும்)
அருமை அருமை அண்ணா நெஞ்சை தாக்குகிறது அபாரம்