புதுப்பொம்மைகள்

By | 8. maj 2014

புதுப்பொம்மைகள்

 ”எதுக்காக என்னைக் கட்டினியள்?”

 இந்த இலையுதிர் காலத்தில் மரங்கள் எல்லாம் இலைகளைக் கொட்டி விட்டு சூனியம் கவ்வி நிற்பது போலவே, அந்தக் கேள்வியின் பின் மூர்த்திக்கும் இந்த இரண்டு நாட்களாக மனதுள் இருள் கவ்வியிருந்தது.

 பகற்காலம் குறைந்து இருள் காலம் கூடியிருந்தது போலவே, இந்த இரண்டு நாளும் அவனுள்ளும் ஓர் சரிசமனற்ற நிலை நிலவிக் கொண்டு இருந்தது.

 இரண்டு நாட்களாகவே அவனாக அறையினுள் முடங்கிக் கொண்டான். வீட்டில் எந்தச் சாமான் குறைந்தாலும் வாங்கி வந்து ”இந்தா தேவி” என் கொடுத்து விட்டு, பிள்ளைகள் விளையாடக் கேட்டால் ”அப்பாக்கு வேலையிடத்து வேலை இருக்கு. செய்து முடிக்க வேணும்” எனத் தப்பித்துக் கொண்டு, தனக்குத் தானே தாப்பாழ் போட்டுக் கொண்டு அறையினுள் முடங்கிக் கொண்டான்.

 தேவிக்கும் காரணம் தெரியாமல் இல்லை.

 தன் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்காமல். . . . இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல. . . அவளும் காலையில் எழுதல், குளித்தல், உணவாக்கல், உணவு பரிமாறுதல், வேலைக்குப் போதல், பிள்ளைகள் தூக்கத்திற்கு போகும்வரை அவர்களுடன் பொழுது போக்குதல், தவிரவும் நேரம் இருப்பின் ஓர் படம் போட்டுப் பார்த்தல், ரெலிபோனில் தெரிந்த மற்றைய தமிழ் பெண்களுடன் சின்ன சின்ன அரட்டைகள் என சராசரி டென்மார்க் + யாழ்ப்பாண பெண்ணாக இயங்கிக் கொண்டு இருந்தாள்.

 மனதுக்குள் மட்டும் அவரைக் குற்றவாளிப் போட்டன் என்ற பெருமிதமும், இப்போது மனத்துள் குமைகிறார் என்ற பரிவிரக்கமும் இருந்தாலும் இரண்டையுமே அவள் வெளிக்காட்டவில்லை.

 மூர்த்தி மட்டும் பக்கவாடாக போடப்பட்டிருந்த சோபாவில் சாய்ந்தபடி யன்னலினூடு மப்புக் கட்டியிருந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கூடவே தன்னைப் பொறிகலந்த வைத்த தேவியின் கேள்விக்கான பதிலை மனம் தேடிக்கொண்டு இருந்தது. அதுவும் ரகு, ரேவதி என்ற இரண்டு பிள்ளைகள் வாழ்க்கையில் வந்து பாடசாலை செல்லும் வயதுக்கு வந்த பின்பு கேட்கப்பட்ட கேள்வி, ”எதுக்காக என்னைக் கட்டினியள்?”

 நேற்றைக்கு முதல்நாள் சனிக்கிழமையும் இப்படித் தான் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

 ரகுவையும் ரேவதியையும் தமிழ் வகுப்பிற்கு கொண்டு போய் விட்டு விட்டு ஆறுதலாக இருந்த பொழுது, ”நாலுவருடமாய் ஒரு இடத்துக்கும் போகேல்லை. இந்த கிறிஸ்மஸ் லீவுக்கு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு போவமோப்பா?” எனத் தேவி கேட்க, ”அதுக்கென்ன. . . . போகலாம் தான். . . .இருக்கிற காசு போதுமோ”, வழமையான பொருளாதாரத் தயக்கத்தினூடு மூர்த்தியின் பதில் வந்தது.

 நத்தார் வரையிலான சேமிப்பு, வங்கியில் கடனாக எடுக்க கூடிய மொத்த தொகை, விடுமுறைச் சம்பளம் ஆகியவற்றை ஓர் தட்டிலும். . . பயணச் செலவு, லொட்ஜ் வாடகை, இடம் சுற்றிப்பார்ப்பதற்கான செலவுகள், ரேவதிக்கும் தேவிக்கும் இரண்டொரு நகைகள், கொஞ்சம் உடுப்புகள், போய் வந்த பின் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில அன்பளிப்புப் பொருட்கள் என்பவற்றின்; செலவுகளை மறு தட்டிலும். . . .போட்டுப் பார்த்தாலும் ஓர் ஐயாயிரம் குறோன்கள் கைகளைக் கடிக்கவே செய்தது. சரி தை மாதத்தில் வரும் பிள்ளைகளுக்கான காசு மூவாயிரம் போக யாரிடமாவது இரண்டாயிரம் கை மாத்தாய் வேண்டினால் போதும் என்கின்ற வகையில் தேவியின் பட்ஜட் மீதான விவாதம் சுபுகமாக நிறைவேறியது.

ஆனால் மூர்த்தி மட்டும் மொத்த செலவாக உள்ள முப்பதாயிரம் குறோன்களையும் மனதால் இருபது ரூபாயால் பெருக்கி ஆறு லட்சம் இலங்கை காசு எனக் கணக்கு பார்த்து விட்டு தேவிக்கு தெரியாமல் தனக்குள் தானே ஓர் பெருமூச்சை விட்டபடி லைபிரறிக்கு வாரத்துக்கொரு முறை இலங்கையில் இருந்து வரும் வீரகேசரி வாரமலரைப் பார்க்க சைக்கிளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

வெளியில் மெல்லிய தூறலும் பலத்த காற்றும் தொடங்கியிருந்தது. இவையிரண்டும் தான் டென்மார்க்கில் இலையுதிர் காலம் வந்தமைக்கான சரியான அறிகுறிகள். அத்துடன் பழுத்த இலைகள் றோட்டின் இரு கரையிலும் நிரம்பி வழுக்கப் பார்க்கும். சைக்கிளை மிகக் கவனமாக ஓட்ட வேண்டும்.

குடும்பமாய் சிங்கப்பூருக்கு போவது என்கின்ற நினைவு மனத்துள் மகிழ்ச்சியாய் இருந்தாலும் இந்த ஆறு இலட்சமும் இலங்கைக்கு போனால் தன் மூன்று சகோதரிகளின் குடும்பத்துக்கும் எத்தனையோ வகைகளில் உதவும் என்பதும் அதனால் தாய் சிவபாக்கியம் மகிழ்வாள் என்பதுவும் மூர்த்திக்குள் ஓர்; சின்ன ஓர் கனவோடை.

 ஆனால் தேவியினதும் பிள்ளைகளினதும் சந்தோசங்களுக்கு இடையில் தனது சுய விருப்பு வெறுப்புகள் எந்த விடயத்திலும் குறுக்கே நிற்கக் கூடாது என்பதில் முழு உறுதியாக இருந்தான்.

 மெல்லிய மழைத்துளிகள் இப்போது பெரிய மழைத்துளிகளாக கொட்டத் தொடங்கியது.

 வீரகேசரியில் யாழ்ப்பாணம் போர்க்கோலம் கொண்டிருந்தது. மக்கள் துப்பாக்கிகளுக்கும், பம்பர்களுக்கும், பதுங்கு குழிகளுக்கும் மத்தியில் நாளை என்பதில் எந்த நம்பிக்கைகளும் அற்று இன்றைய பொழுது மட்டும் இழவற்றதாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.

 பேச்சு வார்த்தைகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், அரசியல் கொலைகள், யார் நண்பன், யார் எதிரி, யாரை யார் எப்போ கடத்துவான், யார் யாரை எப்போது காட்டிக் கொடுப்பான் என்ற நிலையில் யார் யாருக்கோ எவர் எவருக்கோ கலிங்கத்துபரணி பாடும் புதினங்களே பத்திரிகையின் அதிக பக்கங்களை நிறைத்திருந்தது.

 மூர்த்திக்கு வீரகேசரியின் புதினங்கள் சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்க மீண்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீட்டுக்கு திரும்பினான்.

 சைக்கிளை முன்புறமாக நிறுத்தி விட்டு நெற்றியில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை வழித்தபடி வீட்டுக்குள் துவாயைத் தேடினான்.

 ”இந்தாங்கோ துவாய். . . உங்கடை அக்கா கடிதம் போட்டிருக்கிறா. மேசையிலை இருக்கு”

 நாட்டுப்பிரச்சனைகளில் குடும்பங்கள் எப்படியோ என்ற நினைப்பில் வாசிகசாலையில் இருந்து வீட்டை திரும்பிவனுக்கு கடிதம் வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ”மூத்த மச்சாள்” என கூப்பிடும் தேவி, ”உங்கடை அக்கா” என்று சொல்லிக் கடிதத்தை கொடுத்தது மூர்த்திக்கு சற்று வியப்பைக் கொடுத்தது.

 ”உங்கடை அக்கா” என பிறத்தியில் தேவி சொன்னதன் அர்த்தத்தை கடிதத்தின் முதல் பந்தி நன்கு விளக்கியது.

மூத்த சகோதரி மாலதியின் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப தேவையான பத்து லட்சத்தில் ஓர் ஏழு இலட்சத்தை வீட்டை ஈடுவைத்து கடனாகப் பெற்றாலும் கடைசி மூன்று இலட்சத்தை தம்பி என்ற முறையில் மூர்த்தியிடம் எதிர்பார்த்து கடிதம் வந்திருந்தது.

 சிங்கப்பூருக்கு புறப்பட இருந்ததில் பாதிப் பணம்.

 பளீர் என ஓர் கிளாஸ் குசினியுள் விழுந்து சத்தம் கேட்டது. இன்னோர் பாத்திரம் சரிந்தது போலவும் இருந்தது.

 ”என்னது சத்தம் தேவி”

 ”அது சனியன் வழுக்கிப் போட்டுது”

வழுக்கியது கிளாஸ் மட்டுமில்லை. அவளின் சந்தோஷங்களும் வழுக்கப் போகுதோ என்ற அவளின் பயங்களும் தான் என மூர்த்திக்கு நன்கு தெரியும்.

எப்படியும் காசு அனுப்பத்தான் வேண்டும் என மூர்த்தி தனது மனத்துக்குள் தீர்மானித்தாலும், ”அப்ப மாலதி அக்காக்கு என்ன செய்வம்” குசினிக்குள் வந்து தேவியிடம் கேட்டான்.

 எப்போ மூர்த்தி கேட்பார் என காத்திருந்தது போல அவன் சற்றும் எதிர் பார்க்காத வகையில் தேவியின் வார்த்தைகள் வேதனையின் வெளிப்பாட்டாக எள்ளும் கொள்ளும் வெடித்துப் பாய்ந்தது.

 ”அப்ப என்ன செய்யுறது? எல்லாத்தையும் அனுப்புங்கோ. நாளைக்கு இரண்டாவது அக்காவின்ரை மகளுக்கும் கலியாணம் வரும். அதுக்கும் அனுப்புங்கோ. பிறகு கடைசி அக்காக்கு. . . .உங்களுக்கு என்னைப் பற்றியோ, பிள்ளையளைப் பற்றியோ என்ன கவலையள் இருக்கு. . . அங்கை இருக்கிற எல்லாரும் உங்களை தெய்வமாய் கும்பிட்டால் போதும்.. . . என்னை விட குறைஞ்ச சீதனத்திலை கட்டினதுகள் எல்லாம் எவ்வளவோ நல்லாய் இருக்குதுகள். நான் தான். . . ”

கோபத்தில் வெடித்த குரல் ஓர் விம்மலுடன் விக்கித் தவித்தது.

 கடைசியாக அவள் சொன்னது அவனை ஓர் தரம் உலுக்கியது. ஆனாலும் தன்னைத் தானே அடங்கிக் கொண்டு கேட்டான்.

 ”அப்ப நான் என்ன செய்யிறது தேவி? எளியவனாய் பிறந்தாலும் இளையவனாய் பிறக்க கூடாது எண்டு சொல்லுவினம்.. நானும் ஒரேயொரு ஆம்பிளைப் பிள்ளையாய் போயிட்டதாலை எல்லாப் பொறுப்பும் என் மேலை விழுந்திட்டுது.”

 ”அப்ப ஏன் என்னைக் கட்டினியள்”

 வெளியில் வீசிய காற்றில் கூரை படபடத்தது.

 அழுத்தம் திருத்தமாக மூர்த்திக்கு முன்னால் நின்று கேட்டு விட்டு தன் ஆற்றாமையையும் இயலாமையையும் மறைப்பதற்காக ஓடிப்போய்க் கட்டில் மீது விழுந்தாள்.

 சின்னக் கேள்விதான். ஆனாலும் அவனின் உடம்பின் ஒவ்வோர் அணுவையும் மேலாக அவன் ஆண்மையைத் துளைத்துக் கொண்டு போய் திரும்ப திரும்பக் கேட்டது,

 ”ஏன் என்னைக் கட்டினியள்?”

 ”ஏன் என்னைக் கட்டினியள்??”

 ”ஏன் என்னைக் கட்டினியள்???”

 இந்த இரண்டு கிழமையும் இந்த அறையுள் இருந்து இதனைத் தான் தன்னிடம் தானே கேட்டுக் கொண்டு இருக்கிறான்.

 ”எதுக்காக அவளைக் கட்டினன்”

 மனத்தைக் கேள்விகள் துளைத்தது.

 ”கடைசி அக்காண்டை கலியாணத்துக்காகவா சீதனம் வேண்டி தேவியைச் செய்தனான்????

இல்லை! வடிவாக பாங்கிலை ஓர் சின்னக் கடன் போட்டு அக்காக்கு கலியாணம் செய்திருக்கலாம்”

”நான்கு வருடம் தனிமையில் டென்மார்கிலை வாழ்ந்த களைப்பாலா தேவியைச் செய்தனான்???

இல்லை!! நிச்சயமாக இருந்திராது. . . ஆறு நாள் வேலையும் ஓர் நாள் நண்பர்களுடன் கூத்து என சந்தோசமாகத் தானே இருந்தன்!”

 ”மற்றவர்கள் சொல்லுறது போலை தாம்பத்திய சுகத்தோடை ஒருத்தியோடை வாழ வேண்டும் என்றா தேவியைச் செய்தனான்????

இல்லை!!! நிச்சயம் இல்லை. வேலையிடத்தில் ஊர் அறிந்த ஓர் வெள்ளைக்கார விதவையுடன் யர்ரும் அறியாத உறவை வைத்திருந்தவன் தான் நான். பின்பு ஏன் தேவியைக் கட்டினனான்?”

மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்பது போல எதுக்காக கட்டினேன்?, எதுக்காக கட்டினேன்? என்ற கேள்வியை ஆயிரம் தடவைகள் ஆயிரம் கோணத்தில் இருந்து கேட்டுப் பார்த்தாலும் பதில் என்னவோ கலங்கலாகவே இருந்தது.

 சின்ன வயதிலிருந்தே அவன் மூர்த்தியாக வாழவில்லை. கைம்பெண் சிவபாக்கியத்தின் சாயலிலே அவன் வளர்ந்தான் – அச்சில் போட்டு எடுத்த சீமெந்துக் கட்டிகள் போல.

 ”கோயிலுக்குப் போ” – போனான்.

”படத்துக்கு போகாதே” – போகவில்லை.

”எஞ்ஜினியருக்கு படி” – படித்தான். ஆனால் பாஸ் ஆகவில்லை.

”வெளிநாட்டுக்குப் போ” – போய் விட்டான்.

”மூன்று அக்காக்கும் நீதான் துணை” – தலையாட்டினான்.

 முதல் இரண்டு கல்யாணத்தை டென்மார்க்கில் இருந்து சிறப்பாக செய்து வைத்த போது ஊரே அவனைப் புகழ்ந்தது – தாயின் கலி தீர்த்து வைக்க வந்த பிள்ளை என்று.

மூன்றாவது தமக்கையாருக்கு கலியாணம் வந்த பொழுது கொஞ்சம் காசு இடித்தது உண்மைதான். அதை எப்படி சமாளிப்பது என்று யோசிப்பதற்கு முன்பாகவே தேவியின் சாதகத்துடனும் படத்துடன் புறோக்கர் ஒருத்தர் சிவபாக்கியத்தை சந்தித்தார்.

”தம்பி நல்ல சம்மந்தம். நல்ல பிள்ளை. அதையே நீ செய்” – அப்படியே செய்தான்

 இவ்வளவும் கண்முன் ஓடிய போது, எதிலுமே தான் சம்மந்தப்பட்டிராதது போல ஓர் உணர்வு அவனுள் தோன்றியது.

 எவ்வாறு தன் சுயவிருப்பத்தில் அவன் பிறக்கவில்லையோ அவ்வாறே தான் பிறந்த பின்பும் தன் சுயத்தில் எதிவும் நடக்கவில்லைப் போல் தோன்றியது. மேலாக தன் சுயத்துடன் வளர தன்னை யாரும் விடவில்லைப் போல் தெரிந்தது.

அவனுள் தன்னைக் காணவில்லை. சிவபாக்கியத்தைக் கண்டான். இந்து சமய தத்துவங்களைக் கண்டான். உண்மையும் பொய்யும் கலந்த கலாச்சாரப் பதிவுகளைக் கண்டான். விருப்பத்தின் பெயரிலோ அன்றி வலிந்து திணிக்கப்பட்ட அரசியல் சித்தாங்களைக் கண்டான்.

 காலடியில் கிடந்த ரேவதியின் பொம்மைபோல, துணியுள் பஞ்சைப் போட்டு அடைஅடையென்று அடைந்து அதற்கு ஓர் ரையையும் கட்டி கோட்டையும் போட்டு உலாவவிட்டது போல தன்னையும் தன் வயதொத்த பலரின் வாழ்வு அமைந்தது போல அவனுக்குப்பட்டது.

 எல்லாவற்றையும் கண்டு கொண்டதாலோ இல்லை அறிந்து கொண்டதாலோ இப்போ என்ன பலன்? இனியொரு சுயமான வாழ்வைத் தேடிப் போகமுடியுமா? ஏற்படுத்திக் கொண்ட உறவுகளைத் தான் தள்ள முடியுமா? எதற்காகக் கட்டினோம் என்று தெரியாமல் கட்டியிருந்தாலும், கட்டியபின்பு இன்று கண்டு கொண்ட உண்மையால் தேவியை விட்டுப் பிரியமுடியுமா? ரகுவையும் ரேவதியையும் நடு றோட்டில் விடமுடியுமா?

 ”நான்” அற்ற நிலையில் தொடங்கிய வாழ்வை ”நானை” ஆராய்ந்த பின்பு தலைமுழுகுவது தன்னைச் சரி, தேவியைச் சரி, குழந்தைகளைச் சரி, இன்னமும் தன்னை நம்பியிருக்கும் தாய்-சகோதரிகளின் வாழ்வை சிதறித்துவிடும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டான்.

 எனது வாழ்க்கைப் பாடம் இனி எனக்கு உதவாவிட்டாலும், ரகுவையும் ரேவதியையும் நன்கு வளர்க்க நிச்சயம் உதவும் என மனதுள் திடமானான். அதுகளுக்கை எந்தப் பஞ்சையும் போட்டு நானும் தேவியும் திணிக்க வேண்டாம். அதுகள் ஆவது புதுப்பொம்மைகளாக உருவாகட்டும்.

 ஆனால் இந்த தத்துவார்த்த விசாரணைகளை தேவியின் முன் வைத்து ஓர் ஏமாற்றத்தின் விளிம்பில் நிற்பவளை இன்னும் கோபமடையச் செய்யாமல் அவள் வழியில் போய்த்தான் அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் அறையிலிருந்து ஹோலுக்கு வந்தான்.

***

 தேவி சாண்டில்யனின் கடல்புறாவினுள்; ஒன்றிப் போய் இருந்தாள். அவளைக் குழப்பாமல் முன்னே போய் சோபாவில் அமர்ந்தான். மூர்த்தி வந்தது அவளுக்குத் தெரிந்திருந்தாலும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருந்;தது.

 கடைசிப் பக்கத்தையும் படித்து முடித்தவளுக்கு ஏற்பட்ட சோம்பலை முறித்துக் கொண்டு புத்தகத்தை ஓர் கரையில் போட்டாள்.

 ”என்னப்பா தேத்தண்ணி வைக்கிறதோ”

 ”அதை பிறகு குடிப்பம். இப்ப உன்னட்டை ஒரு விசயம் கேட்கவேணும். நீ கேட்ட கேள்வியை இரண்டு நாளாய் என்னையே நான் கேட்டுட்டன். எனக்கு பதில் தெரியேல்லை. அதுதான் உன்னட்டை கேட்கிறன். ”நீ ஏன் என்னைக் கட்டினனீ” என்றாவது உனக்குத் தெரியுமா?”

 சற்றும் எதிர்பாராத இந்தக் கேள்வியாலை தேவி ஓர் கணம் தடுமாறினாள்.

 ”இது என்ன கேள்வி.. . .அப்பா, அம்மா, அண்ணர் எல்லோரும் நீங்கள் நல்ல ஆள்.

என்னைக் கஷ்டப்படுத்தாமல் பார்ப்பியள் எண்டு சொல்லிச்சினம். அதுதான் கட்டினனான்”

 ”அப்ப நீயாக என்னைக் கட்ட விரும்பேல்லை”

 இதை அழுத்தியே கேட்டான்.

 ”என்ன இது கேள்வி. . .கலியாணம் செய்து இரண்டு பிள்ளையுமாகி அதுகளுக்கும் 7 வயதும் 5 வயதுமாகிப் போட்டுது” தேவி தடுதடுத்தாள்

 ”உனக்கு எதுக்காக என்னைக் கட்டினனி என்று உனக்கே பதில் தெரியாதோ அதே மாதிரித்தான் எனக்கும் ஏன் உன்னைக் கட்டினனான் எனத் தெரியாது. இப்பிடித் தான் எங்கடை பலபேரின்ரை வாழ்க்கை அலையிலை அள்ளுப்பட்டு போற தேங்காய் மட்டையள் போலை. . .

 ஆனால் இங்கை வந்த பிறகு நதிமூலம் ரிஷிமூலம் என்று நினைச்சிருந்த எத்தனையோ விடயங்களை அக்குவேறு ஆணிவேறாய் பிரிச்சு பார்க்கேக்கை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட அருவருப்பாய் தோன்றலாம். அல்லது வேறுமாதிரி இதை அமைச்சுக் கொண்டிருக்க கூடாதோ எனத் தோன்றும்.

 இண்டைக்கு உன்ரை அண்ணர் கனடாவிலை இருக்கிறார். நாங்கள் இஞ்சை வராமல் ஊரிலை இருந்து ஏதாவது பணக்கஷ்டம் என்று எழுதி உன்ரை அண்ணி அந்த ஆளிலை பாய்ஞ்சு விழுந்தால் அந்த ஆள் எவ்வளவு பாவம்.. . . ” பேச்சை நிறுத்தி தேவியைப் பார்த்தான்.

 தேவியின் கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடிப் கொண்டு இருந்தது.

 ”ஏன் இப்ப அழுகிறாய்?”

 ”உங்கடை மனத்தை சரியாய் நோகடிச்சுப் போட்டன்”

 ”இல்லை. . .நீ கேட்ட கேள்வியாலை எனக்கு சில விசயங்கள் நல்லாய் தெளிவாயிருக்கு. எனக்குள்ளை இண்டைக்கும் ஓர் சிவபாக்கியம் இருக்கிற மாதிரி இ;ல்லாமல், உனக்குள்ளையும் இஞ்சை வந்த மற்ற சராசரி பொம்பிளையள் இருக்கிற மாதிரி இ;ல்லாமல், எங்கடை ரகுவையும் ரேவதியையும் இன்னுமோர் மூர்த்தியாகச் சரி, தேவியாகச் சரி இல்லாமல் அதுகளை அதுகளாக வாழ வைக்க வேண்டும். அதுகளை புதுப் பொம்மைகளாக இந்த உலகத்திலை உலாவவிட வேண்டும். அதுக்கு நீ தடையாக நிற்கமாட்டாய் எண்டு நினைக்கிறன்”

 மூர்த்தி சொன்னவற்றை தேவி நன்கு உள்வாங்கிக் கொண்டாள்.

 ”மச்சாளுக்கு காசை அனுப்புங்கோ. அடுத்த முறை சிங்கப்பூருக்கு போவம்”

 ”உங்கடை அக்கா மீண்டும் பெரிய மச்சாள்” ஆகியது மூர்த்திக்கு

மனநிறைவைக் கொடுத்தது.

”இல்லைத் தேவி. . . அக்காக்கு முழுக்காசும் அனுப்ப போறதில்லை. பாதி தானே அனுப்ப போறம். மிகுதிக்காசுக்கு வடிவாய் .லண்டனுக்கு  போய் வரலாம். எங்கை நாலு பேரும் போறது என்பதை விட எப்பிடி நாங்கள் நாலு பேரும் சந்தோசமாய் போயிட்டு வரப்போறம் எண்டது தான் முக்கியம் தேவி!”

தேவிக்கு கங்கையில் குளித்து எழுந்தது போல் இருந்தது

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)