முகம் தெரியாத முகநூல் நட்பில்… அதுவும் ஆண் பெண் என்னும் பொழுது அவர்கள் நடாத்தும் சம்பாசணைகள் நட்பு என்ற எல்லையைத் தாண்டி… காதல் என்ற எல்லைக்குள் போவது வியப்பு ஒன்றும் இல்லை.
சொந்த வாழ்வில் உள்ள வெற்றிடங்களை இந்த கணனித் திரையின் வார்த்தைகள் நிரப்பும் பொழுது மறு முனையுடன் எங்களை அறியாமல் நாங்களே முடிச்சுப் போட்டுக் கொள்வதும் இயல்பாகவே நடந்து விடுகிறது. மேலும் காதல் வாழ்க்கையின் அனுபவம் இல்லாது நேரடியாக திருமணப் பந்தத்தில் இணைந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த கணனிக் காதல் அனுபவம் அலாதியாக அமைந்து விடுவதுண்டு.
ஒரு காலத்தில் காதல் செய்திகளை கடித மூலமாகவோ… மற்றவர்களுக்கு தகவல் சொல்ல அல்லது மற்றவருக்கு ஒரு செய்தி அனுப்ப பல நாட்கள் ஆகும். ஆனால் இன்று அடுத்த செக்கனில் காதோரமும் கண்ணுக்கு முன்பேயும் சம்பந்தப்பட்டவர் தோன்றும் பொழுது அதனுடன் சேர்ந்த நெருக்கமும் அதிகமாவது தடுக்க முடியாது போகின்றது.
பொழுது போக்கு என்பதை மட்டும் கருத்திற் கொண்டு இதில் களம் இறங்கினால் இது ஒரு மொழி விளையாட்டு. சின்ன சின்ன வார்த்தைகள்… சின்ன சின்ன கவருதல்கள்…. இதில் உள்ள திறமை அல்லது சவால் என்பது தொடர்புக்குள் வந்து விட்ட நண்பரை சோம்பலடைய வைக்காமல் அவரை தொடர்பிலேயே வைத்திருத்தல் தான்.
அது இலக்கியம் சம்மந்தமான விடயமாக இருக்கலாம். பக்தி மார்க்மாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். அல்லது காதலைத் தாண்டிய காமமாக இருக்கலாம்.
விரும்பும் நண்பரை இழுத்து வைக்கவும் விரும்பாத நண்பரை விலத்திப் போக வைக்கவும் இதே மொழி விளையாட்டே பயன்படுகிறது.
”சுகமாக இருக்கிறீங்களா”
”ஆம்”
”என்ன சாப்பிட்டீர்கள்”
”சோறு கறி”
”உங்க மனைவி நல்லாய் சமைப்பாவா”
”ஆம்”
”சரி.. வேறு ஒரு நாளில் சந்திப்போம்”
”ஓகே”
இதே சம்பாசணை பின்வருமாறும் அமைவதுண்டு:
”சுகமாக இருக்கிறீங்களா”
”ஆம்”
”என்ன சாப்பிட்டீர்கள்”
”சோறு கறி”
”உங்க மனைவி நல்லாய் சமைப்பாவர்”
”ஆம்”
”நானும் நல்லாய் சமைப்பேன் தெரியுமா?”
”அப்பிடியா?”
”ஒரு நாளைக்கு சமைத்து தரட்டா” (முதல் கொளுக்கி)
”வித் பிளசர்… வேறு என்ன தெரியும்?”
”அது சஸ்பென்ஸ்” (இது இரண்டாவது கொளுக்கி)
”உங்க கணவர் மிக அதிஸ்டசாலி போலும்” (இது இந்தப் பக்கத்தில் இருந்து புறப்படும் அன்பு கலந்த அம்பு)
”அவர் அதிஸ்டசாலிதான்… ஆனால் நான்தான்…” (இது மூன்றாவது)
”கேட்க கஸ்டமாய் இருக்கு… இங்கும் அப்பிடித்தான்” (இத்துடன் தொடர்கதை ஆரம்பிக்கும்)
இந்த நெருக்கம் தரும் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பின்மை எத்தனையோ சுவர்களை உடைத்து விட்டுப் போக காரணமாகிறது. சில சந்தர்ப்பங்களில் அது ஒரு புனித உறவாகவே வாழ்க்கை முழுக்க தொடரும்.
சில சந்தர்ப்பங்களில் அதுவே சில மிரட்டல்களுக்கம் தொந்தரவுகளுக்கும் உள்ளாவது உண்டு.
அதிகம் பேருக்கு இந்த கணனிக் காதல் ஒரு வழிப் பாதையில் செல்லும் one way trafic வாகனம் மாதிரி திரும்பி வர முடியாத அளவுக்கு பிரச்சனையை வளர்த்து விடுகிறது.
ஒரு மயக்க நிலைக்கு உள்பட்ட ஒருவருக்கு அந்த மயக்க நிலையில் இருந்து வெளியே வர விரும்ப மாட்டார்கள். அதில் ஒருவர் வெளிவர முயன்றாலும் மற்றவர் தனது தோழனை அல்லது தோழியை இலேசில் வெளியே வர அனுமதிக்கமாட்டார்கள்.
மிரட்டல்— கெஞ்சல்… அனுதாபம் தேடல் போன்ற பல வழிகளில் தொந்தரவு கொடுக்கவே முயற்சிப்பார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கே இந்த உறவு சலிப்பைத் தர அவர்கள் வேறு தேடலுக்கு சென்று விடுவார்கள்.
கணனியால்தான் கண்ணுக்குள் சத்திர சிகிச்சை நடக்கின்றது. அதே கணனிக்குள் தான் வைரஸ் புகுகின்றது.
கந்தகப் பூமியின் சிறப்பினால் தான் எங்களுக்கு 7 வெந்நீர்க் கிணறுகள் கிடைத்தது. அதே கந்தகக் குண்டுகள் தான் ஒரு இனத்தையே அழித்தது.
ஒளி கொடுக்கும் தீப்பந்தம் தான் குப்பத்து குடிசைகளையும் அழிக்கின்றது.
இனி நீங்களே தீர்மானியுங்கள் – சூரிய வணக்கம் செலுத்தப் போகின்றாமா அல்லது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா செய்யப் போகிறாமா என்று.
தப்பு செய்யாதவர்கள் யாரும் இல்லை.
அதை செய்திருந்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு தீக்குளிப்பாகலாம்.
அதுவே சாபவிமோசனம் ஆகலாம்.
சாபவிமோசனம் என்பது இராமனின் காலடி பட்டுத்தான் கிடைக்கு வேண்டும் என்றில்லை.
தீக்குளிப்பு என்பது சீதைக்கு மட்டுமில்லை… எங்களுக்குத்தான்!
நாங்களே தீக்குளிப்போம்!
நாங்களே எங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம்!
கணனியில் மூலையில் கண்ணடிக்கும் கண்ணன்களுக்கும்… கன்னிகைகளுக்கும்… சேலை கட்டிய ஆண்களுக்கும்… வேட்டி கட்டிய பெண்களுக்கும் நாளை என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என்பதை நாங்களே தீர்மானிக்க வேண்டும்.