இது இவர்களின் கதை – சிறுகதை

By | 9. marts 2014

மரணஅறிவித்தல்

அகிலம்சிதம்பரநாதன்
தோற்றம்
: 10-06-1958
இறப்பு
: 15-03-2013
பார்வைக்கு : நேற்று

கிரியைகளும்தகனமும் : இன்று

எனக்குத்தான் இந்த கிரியைகளும் தகனமும். வடிவான பெட்டியுள் என்னை கிடத்தியிருக்கினம். நான் செத்தால் என்ரை முதல் கூறையைத்தான் கட்டவேணும்எ ன்று சொல்லியிருந்தனான். அது போலை வடிவாய் கட்டியிருக்கினம். மகளும் அவரும்
வந்துதான் எனக்கு சீலை கட்டினவை. மருமகள்கள் இரண்டு பேருக்கும் பயம் என்று வரவில்லை.

அவர் கல்லுப் போலை நிற்கிறார். சந்தோசம் துக்கம் இரண்டையும் வெளியில் காட்டத் தெரியாத சீவன் அது. ஆனால் இந்த 31 வருடமும் எனக்குச்ச ரி,பிள்ளைகளுக்குச் சரி எந்தக் குறையும் இல்லாது பார்த்தவர்.

அதிலை வாறது மதுஷினி போலை இருக்கு!

வெள்ளைச்சீலை கட்டியிருக்கிறாள்.

 பூப்போட வந்தவர்களின் வரிசையில் அவளும் நின்றிருந்தாள்.

வெள்ளைச்சீலைகட்டியிருக்கிறபடியாலை கலியாணம் கட்டி புருஷனும் செத்திட்டான்; போலை கிடக்கு.

இவர் கொஞ்சம் பதட்டபபடுகிறார் போலைகிடக்கு.

”இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரியைப் போடுங்கோ”

ஐயர் உரத்தகுரலில் சொல்ல கனடாவிலும் ஜேர்மனிலும் இருந்து வந்திருந்த என்ரையும் அவரின்ரை ஆக்களும் முன்னாலை வருகினம்..

முந்தித்தவம் கிடந்து
முந்நூறு நாளளவும்
அந்தி பகலாச்
சிவனை யாதரித்துத்
தொந்தி சரியச்சுமந்து பெற்ற
தாயார் தமக்கோ எரியத்தழன் மூட்டுவேன்

சிவன் கோயில் ஓதுவார்கள் உச்சஸ்தாயில் பாட மூத்தவன் விக்கி விக்கி கடமையைச் செய்து கொண்டு இருக்கிறான். இவனும் என்னைப் போலை தொட்டாச்சுருங்கி. மற்ற இரண்டு பிள்ளையளும் அவரைப் போல இறுக்கம்தான்.

”அப்புராசாஅழதை” என அவருக்கு சொல்லத் தெரியேல்லை.

அவற்றை கண் சனத்துக்கை யாரையோ தேடுது. அவளைத்தான்அவர்தேடுறாரோ?

”ஐயா நீங்கள் சுத்தி வந்து பூப்போட்டுக் கும்பிடுங்கோ.

பின்னாலை மகன் கொள்ளிக்குடத்தோடை வரட்டும்” கிரியை செய்யும் சைவம் அவருக்குச் சொல்லுகின்றார்.

கை நிறைய உதிர்த்தியிருந்த பூக்களை கொண்டு வாறார். அதுக்கை மல்லிகைப்பூ மணக்குது.

குசினிச் சுவரிலை நான் வளர்த்த மல்லிகை பூத்திருக்க வேண்டும்.

என்ரை காலடியில் இருந்து தலைமாட்டை நோக்கி மெதுமெதுவாய் வாறர்.

இந்த 31 வருசத்திலை அவருக்குசரி…அவர் தந்த 3 பிள்ளைகளுக்குசரி எந்தக் குறையையும் நான் வைக்கேல்லை.

அப்பிடித்தான்அவரும்.

அவரை ஒருநாளுமே அது வேண்டித்தாங்கோ இது வேண்டித்தாங்கோ என எந்த ஆக்கினையும் செய்யுறேல்லை.

அவருக்கு தெரியும் எனக்கு என்ன வேணும் எண்டு.

கொஞ்ச நேரம் கடையிலை நிண்டு ஆசையாய் எதையும் பார்த்துக் கொண்டு நிண்டால் வேண்டித் தந்துபோடுவார்.

அப்பிடித்தான் இந்த வீடு முழுக்க பூக்கண்டுகள் நிறைந்தது.

அப்பிடித்தான் இப்ப அவர் கொண்டந்திருக்கிற மல்லிகையும் வீட்டுக்கை வந்தது.

எனக்கிருந்த ஆசையெல்லாம் ஐயா தந்த ஊர்க்காணிக்கை ஒரு வீடு கட்டி என்ரை பேரப்பிள்ளைகளுக்கு குடுக்க வேணும் எண்டதுதான்.

எங்கடை கிணற்று தண்ணிக்கு அப்பிடி ஒரு ருசி.

அதுகள் லீவுக்கு இலங்கைக்குப் போகும் பொழுது மற்றவையாரின் வீட்டுத் திண்ணைகளில் போய்க் குந்த வேண்டாம். உரிமையோடை தங்கடை பாட்டிவீடு என்று போய் வரட்டும்.

”கொஞ்சம் கெதிப்படுத்துங்கோ. நேரம் போகுது” சடங்கை செய்பவர் அவரசப்படுத்துகின்றார்.

அவருக்கும் இப்பிடித்தான் அவரசம். பகிடியாக சொல்லுறனான் ;”என்ரை பிரேதம் மட்டும் ஆறுதலாய் போக வேணும் எண்டு”

அவர் என்ரை தலை மாட்டிலை பூக்களைப் போட்டு விட்டு என் கன்னங்களை தடவுகிறார். அவரின் கைகள் விரல்கள் நடுங்கிறது. பாவம் அவரை தனிய விட்டுட்டு போறன்.

மதுஷினி வந்து நிற்கிறது தான் மனதுக்கு சங்கடமாய் இருக்கு. இந்தனை வருசமும் மானம் மரியாதையோடை வாழ்ந்தாச்சு. அந்த சிறுக்கியாலை ஒருக்கால் எங்கடை மானம் போகப் பார்த்தது. கடவுள் காப்பாற்றிப் போட்டார். இப்ப ஏன் வந்தவள்?
”அப்பிடியே போய்கால் மாட்டிலை விழுந்து கும்பிடுங்கோஐயா”

கடவுளே அவர் என்ரை காலடியிலை விழுறதோ? அந்த தெய்வத்தை நான்தானே; இவ்வளவு நாளும் கும்பிட்டுக் கொண்டு இருந்தனான்.

பேரப் பிள்ளைகளும் இளையமகளுமாக அவரைத்; தூக்குகினம்;.

எனக்கு கண் எல்லாம் முட்டி அழுகை வாறமாதிரி இருக்கு. ”ஐயாவை இனி வெளியிலை கொண்டு போங்கோ. கொள்ளிக்குடம் உடைக்கேக்கை அவர் உள்ளுக்கை நிற்க வேண்டாம்”

இன்னும் கொஞ்ச நேரம்தான் என்னை மின்சார அடுப்புக்குள் வைத்து விடுவார்கள்.

இனி அவர் தனித்துப் போகப் போகிறார்.

பிள்ளையளும் மருமக்களும் இருக்கினம் தான். ஆனால் என்னைப் போலை யார் அவரைப் பார்க்கிறது.

பசி எண்டாலும் கேட்டு வேண்டிச் சாப்பிடமாட்டார். அவையாக குடுத்தால் தான் உண்டு. அதுதான் எனக்குப் பயமுமாய் இருக்குது.

உவள் மதுஷினி வந்திருக்கிறது தான் இன்னமும் பயமாய் இருக்கு.

முந்தி வேலையிடத்திலை இவரோடை ஒட்டி ஒட்டித்திரியிறாள் எண்டு சனம் கதைக்க தொடங்கேக்கை நான் இவரிட்டை எதுவும் கேட்கேல்லை. கடவுளோடைதான் இருந்து மன்றாடினனான். நல்லகாலம் அவளாய் அவரையும் விட்டுட்டு தன்ரை வீட்டையும் விட்டு ஓடிட்டாள். இனியும்கடவுள்தான்அவரைக்காப்பாற்றவேணும். அவளையும்தான்.

”தம்பி! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு திரும்பிப் பார்க்காமல் போங்கோ”

என்ரை பிள்ளையள் துடிக்கப் போதுகள்.

இனிப்பெட்டியையும் மூட என்னவென்று தாங்கப் போதுகளோ தெரியாது.

மூன்று பிள்ளையளும் கலியாணம் கட்டினாலும் கூட தகப்பனிடம் எதுவும் கேட்கப் பயம் எண்டால் மூன்றும் குசினியுள் நின்று என்னைத்தான் துளைத்தெடுக்குங்கள். நான் சொன்னால் அவர் புன்சிரிப்புடன் கேப்பார். இனி அதுகளுக்கு யார் இருக்கினம்.

மண்டபத்தில் ஆள்மாறி ஆள்மாறி கண்ணீர் அஞ்சலிகள் வாசிக்கினம்.

அதில் அதிகம் அவரின்ரை முன்னேற்றம் எல்லாத்துக்கும் எப்பிடி நான் பக்கத்துணையாக இருந்தனான் எழுதி வாசிச்சினம். இவையள் உது எல்லாம் வாசிக்க வேண்டுமென்றோ என்ரை ராசாவை நான் பார்த்தனான்.

ஆனால் அவர் இண்டைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறது எனக்குத்தானே பெருமை.

இறுதியாக  யாரோ ஒருவர்  “இவ்வளது காலமும் இன்பத்திலும் துன்பத்திலும் இந்தப் பத்தினித் தெய்வத்தை கண்கலங்காமல்….”ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு கண்கள் பாரமாய் இருந்தது.

அவர் தனக்குள்ளை தான் எரிச்சல்படுவார். ஆனால் கோபிக்க மாட்டார். இந்த எரிச்சல்படுறது…கோபப்படுறது… எல்லாம் அவள் ஊரைவிட்ட ஓடும் வரையும் தான். அதுக்குப் பிறகும் கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான் இருந்தார்.

பிறகு எல்லாம் சுபுகமாகப் போட்டுது.

அடுத்த 18 வருசமும் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

இரண்டு வருஷத:துக்கு முதல் ஒருநாள் பேஸ்புக் பார்த்துக்கொண்டு இருந்தவர் சரியாக மூட்அவுட் ஆகிவிட்டார். ஆனால் நானாகஏதும் கேட்கவில்லை. ஆனால் உவள் மதுஷினிதான் திரும்பி வந்திட்டாளோ என எனக்குள்ளை ஒருந டுக்கம்.

இப்போ அவளை மண்டபத்துக்கை காணேல்லை. போய்வி;ட்டாளோ தெரியேல்லை. அப்பிடியே போய் தொலைந்து விட்டால் போதும்.

எல்லோரும் எழுந்து நின்று சிவபுராணம் சொல்ல மூத்தமகன் மின்சாரசு விட்சை அழுத்த பெட்டிமின் அடுப்பினுள் நகரத் தொடங்கிறது.

என் பிள்ளைகளை தனியாக விட:டு விட்டுப் போறன் என்ட கவலைதான். கண்கள் குழமாகுது.

அவர் என்னவோ சொல்லுகிறார் போலை இருக்கு.

எனக்கு கேட்குதில்லை.

இரண்டு பக்கத்தாலையும் நெருப்பு சுவாலை வீசுகிறது.

*

சுந்தரேசன்வயது 57

இருபது வருடங்களுக்கு பின்பு அவளைக் காணுறன்;;.

மதுஷினி ! வெள்ளைச் சேலையில்!!

அதுவும் என் மனைவியின் மரணவீட்டில்!!!

என் பிள்ளைகள்…மருமக்கள்…பேரப்பிள்ளைகள் எல்லோரும் அகிலாவின் பெட்டியைச் சுற்றி நின்று கதறிக் கொண்டிருக்கும் கடைசி நேரத்தில் வரிசையாக பூப்போடவந்தவர்களின்வரிசையில்அவளும்நிற்க்கின்றாள்;.

 அவளின் கோலத்தை எனக்குப் பார்க்க சகிக்கேல்லை.

மனைவியின் காலடியில் பூக்களைப் போட்டு விட்டு குனிந்ததலை நிமிராமல் மெதுவாக கண்களை மட்டும் நிமிர்த்தி என்னைப் பார்த்து விட்டு நகர்ந்து செல்கின்றாள்.

 அதேபார்வை!! பார்வை மட்டும்தான் மாறவில்லை – மற்றும்படி அவளின் தோற்றம் முற்றாக மாறியே இருந்தது.

 ”இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரியைப் போடுங்கோ” ஐயர் உரத்த குரலில் சொல்ல கனடாவிலும் ஜேர்மனிலும் இருந்து வந்திருந்த எனதும் அகிலத்தினதும் nருங்கிய உறவினர்கள் அனைவரும் முன்னே வருகின்றார்;கள்.

முந்தித்தவம் கிடந்து
முந்நூறு நாளளவும்
அந்தி பகலாச்
சிவனை யாதரித்துத்
தொந்தி சரியச்சுமந்து பெற்ற
தாயார் தமக்கோ எரியத்தழன் மூட்டுவேன்

சிவன் கோயில் ஓதுவார்கள் உச்சஸ்தாயில் பாட மூத்தவன் விக்கி விக்கி கடமையைச் செய்யுறான்.

என் கண்கள் மதுஷினிவைத் தேடிக் கொண்டு இருக்கிறது. ”ஐயா நீங்கள்சுத்தி வந்து பூப்போட்டுக் கும்பிடுங்கோ. பின்னாலை மகன் கொள்ளிக் குடத்தோடை வரட்டும்”கிரியை செய்யும் சைவம் எனக்குச் சொல்லுகின்றார்.

கை  நிறைய  உதிர்த்தியிருந்த பூக்களையும் என்னுடனேயே எடுத்து வந்திருந்த அகிலத்தின் மல்லிகைப் பூக்களையும் எடுத்துக் கொண்டு அகிலத்தின் காலடியில் இருந்து தலைமாட்டை நோக்கிப் போகின்றேன்.

அகிலம்!

இன்னமும் முகத்தின்களை மாறவே இல்லை.
இருபது வயதில் என்னிடம் வந்தவள். இந்த 31 வருடமும்என்னுடன்எனக்குப் பின்னால்எனக்காகவும் பிள்ளைகள்
பேரப் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டுப் போய் விட்டாள்
.

சென்ற வாரம்கூட சொல்லிக் கொண்டிருந்தாள். தனக்கு சீதனமாக கொடுத்த 2 பரப்புக் காணிக்குள்ளைஎல்லாவசதிகளோடையும் ஒரு சின்ன வீடு கட்டி எல்லாப் பேரப்பிள்ளைகளின் பெயரில் எழுத வேண்டும் என்று. –லீவுக்குபோகும்போது”இதுபாட்டி எங்களுக்கு தந்த வீடு”என்று அவர்கள் சொல்ல வேண்டுமாம். இதைத் தவிர அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

எதுவாயினும் நானாக யோசித்து அவளுக்குச் செய்தால் உண்டு.

அவளின் வங்கிக் கணக்கும் எனது வங்கிகணக்கும் இணைந்தே இருந்தது.

எவ்வளவு வருகிறது எவ்வளவு போகிறது என எதுவுமே அவளுக்குத் தெரியாது.

என்னுடன் கடைக்கு வரும் பொழுது மட்டும் ஏதாவது அழகான பூக்கண்டு களைகண்டால் அதை ஆசையுடன்

பார்த்துக் கொண்டு நிற்பாள்.

”வேண்டித்தாருங்கள்”எனக் கேட்கமாட்டாள். ஆனால் வேண்டிக் கொடுத்தால் மிகவும் மகிழ்வாள்.

டென்மார்க்குளிருக்கை செத்து விடாமல் அவள் பார்த்து பார்த்து வளர்ந்த மல்லிகையில்

இன்று காலை ஆறு ப+க்கள் பூத்திருந்தது.

அதனையும் கையில் எடுத்து வந்திருந்தேன்.

அவள் விரும்பி வளர்த்த மல்லிகை.

அவளின் சின்ன சின்னச் சந்தோசங்களை அவளுடன் பங்கு போட்டமல்லிகை.

”கொஞ்சம் கெதிப்படுத்துங்கோ. நேரம்போகுது” சடங்கை செய்பவர் அவரசப்படுத்துகின்றார்.

இதே மாதிரி நான் காரில் ஏறியிருந்து அவசரப்படுத்தும் பொழுது அகிலம் அடிக்கடி சொல்வாள்” என்ரை பிரேதத்தை ஆவது அவசரப்படாமல் எடுங்கோ”என்று. இன்று எல்லாமே முடிந்துவிட்டது.

அவளின் தலைமாட்டில் பூக்களைப் போட்டு விட்டு கன்னங்களை வருடி விடுகின்றேன்.

முகம் நல்லாய் குளிர்ந்;திருக்கிறது.

”அப்பிடியே போய் கால் மாட்டிலை விழுந்து கும்பிடுங்கோ ஐயா” சுற்றிவரும் பொழுது என்னையும் அறியாது என் கண்கள் மதுஷினியைத் தேடுகிறது.

இந்த 31 வருடமும் ஒவ்வொரு கலியாண நாளன்று அகிலம் என் கால்களில் விழுந்து கும்பிடுவாள். எத்தனையோ தரம் சொல்லிப் பார்த்தும் அவள் அதனை நிறுத்தவே இல்லை. ஐரோப்பாவுக்குவந்தபின்பாவதுநிறுத்துவாள்எனநினைத்தேன்.

அது நடக்கவே இல்லை.

இப்ப முதல்தடவையாக அவளின் காலடியில் நான் விழுந்து கும்பிடுகிறன்.

பேரப்பிள்ளைகளும் இளையமகளுமாக என்னைத் தூக்குகின்றார்கள்.

எனக்கு கண் எல்லாம் முட்டி இருக்கிறது எதுவுமே தெரியவில்லை.

”ஐயாவை இனி வெளியிலை கொண்டு போங்கோ. கொள்ளிக்குடம் உடைக்கேக்கை அவர் உள்ளுக்கை நிற்க வேண்டாம்”

ஐரோப்பாவில் எல்லாத்தையுமே ஒரு இடத்தில் தான் செய்யுறது.

இனி அவள் மின்சார அடுப்புக்குள்ளை போயிடுவாள்.

நான் தான் தனியே….

கண்கள் தானாக மதுஷினிவைத் தேடுகிறது.

எதுக்காக?

இருபது வருடங்களுக்குள் வாழ்க்கை அவளை எப்படி மாற்றிப் போட்டிருக்கு.

எல்லாமே நேற்றுப் போல் இருக்கின்றது.

நான்கு காலங்களின் சுழற்சி வேகத்தில் இலங்கையை விட இந்த ஐரோப்பாவில் காலம் கொஞ்சம் வேகமாக ஓடுவது போலத்தான் தெரிகிறது.

அப்போ அவளுக்கு 23. எனக்கு 38. எனது மூன்றாவது கடைக் குட்டிக்கு 1½மாதம்என்று நினைக்கின்றேன். அகிலம் பிள்ளையுடன் வீட்டில். நான் தனியத்தான் வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தேன்.

வேலையிடத்தில் எனது மேற்பார்வையில் பயிற்சிக்காக மதுஷினி வந்திருந்தாள்.

அன்று முழுக்க நான் நானாக இருக்கவில்லை. என் வாழ்வில் ஏதோ தவறு நடக்கப் போகின்றது என் மனம் அடிக்கடி சொல்லிக் கொண்டது. அந்த தவறை என் மனம் ஏற்கத் தயாராகிக் கொண்டு இருந்தது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கும் தகப்பனாகிய பின்பு 15 வயது வித்தியாசத்தில் 23 வயதுப் பெண்மீது ஏற்படும் சபலம் தப்புத்தான்.

உலகமே நான் என அகிலம் எண்ணியிருக்க மதுஷினி; மீது நான் கொண்ட சபலம் தப்புத்தான். ஆனாலும் அந்த தப்பை மனம் விரும்பியது.

ஐரோப்பியக் கலாச்சாரம் அதற்கு துணை போனது. அவள் பயிற்சிக்கு வந்து ஒரு மாதத்தின் பின்பு என நினைக்கின்றேன்.

அந்த தப்பு அல்லது சரி நடந்து விட்டது.

நிச்சயம் அகிலத்திடம் இல்லாத ஒன்று அவளிடம் இருந்திருக்க வேண்டும்.

அல்லது அவ்வாறு காரணப்படுத்திக் கொண்டு அவளுடனான தொடர்பை நான் வளர்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின்பு அவளுக்கு என்னுடனான நெருக்கம் இன்னமும் கூடியது. என்னால் விலத்தவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை.

ஆனால் விடயம் சக ஊழியர்களுக்குள் பரவத் தொடங்கியது.

நாங்களோ தொடர்ந்தும் கண்ணை மூடிய பூனைகளாக…..

”தம்பி! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு திரும்பிப் பார்க்காமல் போங்கோ”

எழுந்துபார்க்கின்றேன்.

தொடர்ந்து பெட்டி மூடலும் அதன் மேல் அடித்துக் கொண்டு எல்லோரின் கதறலும்கேட்கிறது.

இந்த உலகத்தினோடான அவளது வாழ்வு முடிந்துவிட்டது.

பெட்டியை மின்சார அடுப்புடன் இணைந்திருந்த மண்டபத்துக்கு தூக்கிக் கொண்டுபோகிறார்கள். என்னையும் கைத்தாங்கலாக கூட்டிக்  கொண்டு போகிறார்கள். போகும் பொழுது மெதுவாக திரும்பிப் பார்க்கின்றேன்.

 மதுஷினியைக் காணவில்லை.

எங்கள் விடயம் மதுஷினி வீட்டில் அரசல்புரசலாக தெரியத் தொடங்கியதும் கட்டாயமாக அவளுக்கு திருமணம் பேசப்பட்டதும் அவள் அதை மறுத்து வீட்டை விட்டு ஓடியதும் அடுத்தடுத்து ஒரு மாதத்துள் நடந்து முடிந்தது.

எங்கள் நகரம் மௌனமாகவே இருந்தது.
ஏதோ ஒரு இருள் எனக்குள் சூழ்ந்த உணர்வு.

மேலாககுற்றஉணர்வு.

எதிலுமே விருப்பற்று.. எல்லாத்திற்குமே குடும்பத்தில் கோபித்துக்கொண்டு…அந்த ஒரு வருடமும் நான் நானாக இருக்கவில்லை.

அகிலமும் காரணம் தெரியாமல் தவித்தாள்.

பின்பு பிள்ளைகளும் வளர வளர அவளின் நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. தூக்கமில்லாத சில இரவுகளில் மட்டும் அவளின் நினைவுகள் வந்து என்னை மகிழ்வித்து விட்டுப் போனது..
மண்டபத்தில் ஆள்மாறி ஆள்மாறி கண்ணீர் அஞ்சலிகள் வாசிக்கப்படுகின்றன. அதில் அதிகம் என் முன்னேற்றம் எல்லாத்துக்கும் எவ்வாறு அகிலம் பக்கத் துணையாக விளங்கினாள் என்றே சொல்லப்பட்டது.
இறுதியாக யாரோ ஒருவர்   ” இவ்வளது காலமும் இன்பத்திலும் துன்பத்திலும் இந்தப் பத்தினித் தெய்வத்தை கண்கலங்காமல்….”ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
எனக்கு மனதுள் குற்றியது.
சென்ற வருட இறுதிப் பகுதியில் எனது பேஸ் புத்தகத்தில் மதுஷினியின் அழைப்பு வந்திருந்தது.

ஒருதரம் அதிர்ந்து போனேன்.

உள்ளே போய் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

இருபது வருடமாக எந்த தொடர்பும் இல்லாது எதற்காக இந்தப் பக்கத்தை எனக்கு காட்டவேண்டும்.
அதிர்ந்துபோனேன்.

ஐரோப்பாவிற்கு இப்படி ஒரு முகமும் இருக்கா?
ஏன் இதை எனக்கு காட்ட வேண்டும்? என்னைத் தண்டிக்கின்றாளா?
பெண்களும் பெண்களும்…பெண்களும் ஆண்களும்…ஒரு குடும்பத்தின் ஆணும் இன்னோர் குடும்பத்தின் பெண்ணும்அவ்வாறே இந்தக் குடும்பத்தின் ஆணும் மற்றக் குடும்பத்தின் பெண்ணும்…அவர்களுக்கிடையில் இடையில் மதுஷினியும்…. எல்லோரும் பணக்காரர்களாகத் தெரிந்தார்கள்…எல்லோர் கண்களிலும் போதை தெரிந்தது…அவர்கள் புகைப்பது போதை வஸ்தாகத்தான் இருக்கவேண்டும்….

ஒரு படத்தில் ஒரு ஊசியை மதுஷினி தனது தொடையில் ஏற்றிக் கொண்டு நின்றாள்.
”ஸ்ரில் ஐ லவ்யூ” என எழுதியிருந்தது.
”நீ எனக்குத் சொல்லாமல் போன போதே நான் இறந்து விட்டேன்”எனப் பதில் போட்டிருந்தேன்.

நிச்சயம் அவள் போனபோது எனக்கு ஏமாற்றமே.

அது இந்தனை வருடத்தின் பின்பும் அவள் மீது மாறவி;ல்லை.

அது தான் அப்படி நான் எழுதியிருக்க வேண்டும்.
”நீங்கள் இறந்திருந்தால் நானும் விதவையே”என எதிர்பதில் வந்திருந்தது.

அதன் பின்பு அவளின் பேஸ் புத்தகப்பக்கத்துக்கு செல்வதில்லை.

அவ்வாறு தொடர்ந்து அவளுடன் பேஸ்புக்கில் கதைத்தால் இந்த 57 வயதிலும் அவளை நான் தேடிப் போவேன் என எனக்குத் தெரியும்.
இறுதியாக எல்லோரும் எழுந்து நின்று சிவபுராணம் சொல்ல மூத்தமகன் மின்சார சுவிட்வை அழுத்த பெட்டி மின் அடுப்பினுள் நகரத் தொடங்கியது.

எனக்கு தொண்டை கட்டத் தொடங்கியது.

”அகிலம்என்னை மன்னிச்சுக் கொள்”எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.

 

*

மதுஷினிவயது 42

சரியாக 20 வருசத்துக்கு பிறகு அவரை இன்றைக்கு கண்டிருக்கிறன்.

நான் சா வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாமோ என எத்தனையே தடவை யோசித்தன்.

20 வருடங்களுக்கு முதல் எப்படி என் அறிவு சொன்னதை மனம் கேட்காமல் அவரிடம் போனேனோ அப்படியே இன்றும் அவரைப் பார்க்க வேண்டும்போலஇருந்தது.

அகிலம் அக்காவின் பிரிவு அவரை ரொம்ப பாதித்து இருக்கும். நிச்சயம் என்னைக் கண்டால் அவர் ஆறுதல்படுவார்.
”நீ  எனக்குத் சொல்லாமல் போன போதே நான் இறந்துவிட்டேன்” என சில மாதங்களுக்கு முன்பு அவர் பதில் போட்டதும்… ”நீங்கள் இறந்திருந்தாள் நானும் விதவையே” என நான் எதிர் பதில் போட்டதும் விளையாட்டாக நடந்தது அல்ல.

கொஞ்சம் நாடகத் தன்மையானது தான்.
ஆனால் அன்று நானாகவே எடுத்துக் கட்டிய இந்த வெள்ளைச்சேலை –  வெள்ளைக் கோலம் என்னை ஒரு புதிய வாழ்க்கைக்கு அழைத்து வந்தது.

அதை அவர் பார்க்க வேண்டும்.

தொடர்ந்;தும் நான் அந்த உலகத்தில் இல்லை என நம்ப வேண்டும்.
எப்பிடி அவர் தாலி கட்டாமலேநான் அவர்மீது உரிமை எடுத்துக் கொண்டனோஅப்பிடியே அவர் இறக்காமல் இருக்கும் பொழுதே நான் விதவையாகிவிட்டேன். அவர் அதைபார்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதத்திலை தான் இங்கு வந்திருக்கின்றேன்.
எல்லோரும் பூப்போட எழுந்து சென்ற பொழுது நானும் போனோன். பல பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு கிட்டாவாக அவரை விலத்திச் சென்ற பொழுது அவர் என்னை நன்கு அடையாளம் கண்டு கொண்டார்.

அவரின் முகம்… கை… கால்கள் எல்லாமே ஒரு தரம் உதறிக் கொண்டது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. வயதுதான் போயிருந்ததே தவிர அவர் அப்படியேதான் இருந்தார்.

”இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரியைப் போடுங்கோ” ஐயர் உரத்த குரலில் சொல்ல கனடாவிலும் ஜேர்மனிலும் இருந்து வந்திருந்த அவரினதும் அவரின் மனைவியினதும் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் முன்னே வந்தார்கள்.
நானும் சொந்தக்காரி தானே என மனம் சொல்லிக் கொண்டது.

இல்லை என மனச்சாட்சி மறுதலித்தது.

முந்தித்தவம்கிடந்து
முந்நூறுநாளளவும்

அந்திபகலாச்

சிவனையாதரித்துத்

தொந்திசரியச்சுமந்து பெற்ற

தாயார்தமக்கோஎரியத்தழன்மூட்டுவேன்

சிவன்கோயில் ஓதுவார்கள் உச்சஸ்தாயில் பாட அவரின் மூத்தமகன் விக்கிவிக்கி கடமையைச் செய்துகொண்டு இருந்தான்.

 என் கண்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து அவரையே வைத்த கண்வாங்காமல்பார்த்துக் கொண்டு இருந்தது.

ஆனால் அவருக்கு எங்கே நான் இருக்கின்றேன் எனத் தெரியாமல் சனக்கூட்டத்துக்கை என்னை தேடிக்கொண்டு இருந்தார்.

 

20 வருடங்களுக்கு முதல் தப்பான உறவு உது என அப்பா அம்மா சொன்னபோது அவர்களின் சொல்லைக் கோட்காமல் அவரிடம் இருந்த அதே ஈர்ப்பு இப்போதும் அவரிடம் எனக்கு இருந்தது.

–  அதுவும் மரண வீட்டில்.

 இப்போ அவருக்கு 57. எனக்கு 42. வாழ்வில் நான் சந்தித்த ஒரு நல்ல ஆண் அவர் என்பதைத் தவிர எந்தக் காரணமும் இருக்கவில்லை.

 நான் பருவம் அடைய முதலே வீட்டுக்கு சுருட்டு சுருட்ட வந்த மாமாக்கள்.. தாத்தாக்கள் விளையாட்டாக என் மார்பை பிடித்துக் கசக்கியதும் தொடையில் கை வைத்து விளையாடியதும் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. வெத்திலை வாயிலிருந்து வரும் புகையிலை மணங்களை இப்ப நினைத்தாலும் வயிற்றைக்கு மட்டுகிறது.

பெரிய பிள்ளையான பிறகு ரியூசனுக்கு படிக்க போன பின்பும் சரி…வீட்டுக்கு அதிகாலையில் படிப்பீக்க வந்த வாத்தியார்கள் சரி என்னுடன் செய்த சிலுமிசங்கள் கொஞ்சம் இல்லை..

போருக்கு பிறகு கலாச்சாரம் பிறழ்ந்து விட்டுது என்று எல்லாரும் கூய்மாய் போடுறாங்கள். ஆனால் அது என்றைக்கோ பிரண்டு விட்டது என்டதுக்கு நான் தான் சாட்சி.

 ”ஐயா நீங்கள்  சுத்தி  வந்து பூப்போட்டுக்  கும்பிடுங்கோ. பின்னாலை மகன்  கொள்ளிக்குடத் தோடை வரட்டும்” கிரியை செய்யும் சைவம் சொல்ல கைநிறைய  உதிர்த்தியிருந்த பூ க்களையும்  எடுத்துக் கொண்டு தலைமாட்டை நோக்கிப் போகின்றார். எனக்கும் இப்பிடிச் செய்வாரோ? அவர்தான்தான் செத்திட்டேன் என்று சொல்லி விட்டாரோ? நான்தான் விதவையாகி விட்டேனே?

”மதுஷினி நீ இனிமேலும் விளையாடதே”

 எனக்கு நான் சொல்லிக் கொள்கின்றேன்.

 நான் அவர் வாழ்க்கையில் விளையாடி விட்டேனா? இல்லைஅ வர் என் வாழ்வில் விளையாடி விட்டாரா?

 அப்படிஏதும்இல்லை.

 அவரை நான் சந்திக்கேக்கை அவருக்கு 3 பிள்ளைகள். எங்களுக்கை 20 வயது வித்தியாசம். ஆனால் எதுவுமே எனக்கும் அவருக்கும் குறுக்காய் இருக்வில்லை.

 நான்என்னைக்கொடுத்தேன். அவர்எடுத்துக்கொண்டார். அதற்குஎன்னபெயர்வைத்தாலும்சரி!

”தம்பி! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு திரும்பிப் பார்க்காமல் போங்கோ”

 தலையை நிமிர்த்திப் பார்க்கின்றேன். மூத்தமகன் கொள்ளிக் குடத்தோடை மூன்று முறை சுற்றி வந்து சின்னக்நெருப்புக் கொள்ளியை தலைமாட்டினுள் செருகிவிட்டு சின்னப்பிள்ளை போலை கதறி கதறிக் கொண்டுவெளியேபோறான்.

 பெட்டியை இருவர் மூட அதன் மேல் எல்லோரும் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள். சனம்சுற்றிநிற்பதால் இவரை வடிவாக தெரியவில்லை.

தொடர்ந்து பெட்டியை மின்சார அடுப்புடன் இணைந்திருந்த மண்டபத்துக்கு தூக்கிக்கொண்டு போகிறார்கள். அவரை கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு போகிறார்கள். போகும் பொழுது மெதுவாக திரும்பிப் பார்க்கிறார்.

 என்னால் தொடர்தும் மண்டபத்துள் இருக்கமுடியவில்லை.

எழுந்து வெளியே வந்து விட்டேன்.

வெளியே வந்த பிறகு கடைசிரை உள்ளே இருந்திருக்கலாமோ என மனம் தவித்தது.

இப்பிடித்தான் வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் ஒன்றைச் செய்வதும்…பின் அதனை யோசித்து பதற்றப்படுவதும்…இது முதல் தடவையில்லை. இவரோடை இருந்த தொடர்பு வீட்டை தெரிந்ததும்…முன்பின் தெரியாத ஒருத்தனை கட்டாயமாக கலியாணம் செய்யவீட்டார் வெளிக்கிட்டதும்…பின் நான் வீட்டை ஓடினதும்…பின்அதுக்காக வருத்தப்பட்டதும்…இப்பிடித்தான் ஒவ்வொரு விடயத்தை செய்வதும் பின் வருத்தப்படுவதும். ஆனாலும் வீட்டை விட்டு ஓடாமல் என்ன செய்யுறது? எனக்கு பேசியது ஊரில் ஒரு புகையிலை கடை முதலாளியின் மகனாம் அப்போதே எனக்கு வயிற்றைப் பிரட்டியது.

 வீட்டை விட்டு வந்தது நூறு வீதம் பிழையில்லாவிட்டாலும் போய் விழுந்த இடம்தான் பிழை. இன்று எனக்கு தெரியுது. ஆனால் அன்றையவெறுமையில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை.

 ஒரு டெனிஷ் வீட்டின் மேலே வந்து வாடகைக்கு குடியிருந்த பொழுதுதான் முதல் தப்பு அல்லது அந்த பழக்கம் ஏற்பட்டது.

 ஹெரோயின்!

வாழ்வே சூனியமாய் போச்சு என நினைத்த பொழுது அந்தவீட்டு டெனிஷ்காரி காட்டிய வழிதான் ஹெரோயின்!

 குளிர்மலையின் உச்சியில் அவருடன் கைகோத்துக் கொண்டு பறந்துபோவது போல இருக்கும்.

பூமிக்கு திரும்பி வந்ததும் மீண்டும் பறக்கத் தோன்றும்.

மீண்டும் ஒரு ஊசி!

 மீண்டும் ஒரு பறப்பு!!

ஆரம்பத்தில்  தனியேயும்  பின் அந்த வீட்டுக்காரியின் சில நண்பர்களுடனும் பின் அவளின் நண்பர்களின் குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது வீட்டின் வரவேற்பறையில்இருந்துமாறிமாறிஊசிபோட்டுக்கொள்வோம்.

 எத்தனை பேர் சுற்றியிருந்தாலும் என் மனமும் கையும் அவரை அரவணைத்தப்படிதான். அந்த எணணங்கள்தான் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அல்லாவிட்டால் நிச்சயம் நான் சீரழிந்து போயிருப்பேன்.;

 ஏன் அந்த வாழ்க்கையுள் போனோன்? ஏன் அதற்கு சம்மதித்தேன்? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு நரகம் எனத் தெரிந்தும் வெளியில் வராமுடியாது தவித்தேன். ஆனால் வாழ்வு தன்பாட்டில் போனது.

 கடைசியாக 18 வருடம் கழிந்து ஒருநாள் பேஸ்புக்கில் அவரைச்ச ந்தித்தன். “நீபோனஅன்றுநான்செத்திட்டன்”எனஉரிமையாக அவர் திட்டிய பொழுதுதான் நான் விழித்துக் கொண்டன்.

 “அவர் செத்தால் நான் விதவைதானே”.

 ஏன் அப்படி ஒரு எண்ணம் எனக்குள் அன்று வந்தது?

 அன்றுடன் எல்லாத்தையும் விட்டு விட்டு வெளியில் வந்தன்:

 ஹரேராம இயக்கத்திலை போய்ச் சேர்ந்திட்டன். என்னைப் போலை அங்கு எத்தனையோ பேர். தொலைந்துபோன கன்றுக் குட்டிகள் வீட்டுக்கு திரும்புவது போல அங்கு நாங்கள் அடைக்கலம் வேண்டி நின்றோம். கிருஷ்ணனிடமே என் வாழ்வைக் கொடுத்தேன். அவரிடம் என் வாழ்வைக் கொடுத்தது போன்றிருந்தது.

 அதன் பிறகும் பிறகும் அவரை நான்; குழப்பேல்லை.

எனது பேஸ் புக்கிற்கும் மூடுவிழா நடாத்திவிட்டேன்.

அது இருந்தால் மீண்டும் அவரையும் குழப்பி என்னையும் குழப்பிப்போடுவேன் என்று ஒரு பயம்தான்.

கடைசியாக நேற்று லங்காசிறியில் மரணஅறிவித்தலைப் பார்த்த போது அவர் தனித்துப் போய்விட்டார் என மனம் படபடத்தது.

 எல்லோரும் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து புகைகூண்டில் இருந்து வரும்புகையைப் பார்க்கின்றார்கள்.

 “அம்மம்மா கடவுளைவிடம்போறா”…அவரின்மகளாகஇருக்கவேண்டும்.

 அவரும்; வெளியே வருகிறார்.

 சுற்றும் முற்றும் பார்க்கின்றார்.

 நிச்சயம் என்னைத்தான் தேடுகிறார்.

 தொடர்ந்து இந்த இடத்தில் நின்றால் நானே என்னையும் பலவீனப்படுத்தி அவரையும் பலவீனப்படுத்திப் போடுவேன்.

 ஓடிப் போய் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது விடுவேன் என பயமாய்க்கிடக்கு.

 அவரின் பிள்ளைகள்…பேரப்பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நான் அவர்களில் ஒருத்தி இல்லை.

மெதுவாகஅந்தஇடத்தில்இருந்துவெளியேறினேன்.

மலர்வளைத்துடன் வைத்திருந்த என் பெயர் பொறித்த அட்டையை மட்டும் தினம் தினம் இனி எடுத்துப் பார்ப்பார்.

 (முற்றும்)

மரண அறிவித்தல்

அகிலம்சிதம்பரநாதன்
தோற்றம்: 05-06-1958
இறப்பு: 15-03-2013
பார்வைக்கு : நேற்று
கிரியைகளும்தகனமும் : இன்று

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)