செக்கல் நேரம்.
”உனக்காகத்தான் கொஞ்ச நாட்களாக உன் முன்னாலும் பின்னாலும் திரிந்து கொண்டிருக்கின்றேன்”
கண்களில் அழைப்பு!
அமைதியான அழைப்பு!!
ஆக்கிரோசம் இல்லாது அரவணைக்கும் அழைப்பு!!!
என்னுடைய பிறப்பு எவ்வாறு என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… என் வாழ்வு எப்படி என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… அவ்வாறே என் இந்த மரணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை.
ஐம்பத்தியொன்பது வயதில் தொண்ணூற்று ஐந்து வயது வயதுவரை வாழ்ந்த களைக்கு, கடவுளாய் எனக்கு தந்திருக்கும் வரம் தான் என்னருகில் நிற்கும் இந்த மரணம்.
மிக அருகில்… மிக மிக அருகில். . . என்னுடன் கை குலுக்க வலது கையை நீட்டியபடி புன்னகைத்தபடி நிற்கின்றது.
எனக்கு எந்தப் பயமும் இல்லை. மெதுவாய் வந்து பக்கத்தில் வந்து நின்று ” எங்கே சார் போக வேணும்” எனக் கேட்கும் ஆட்டோக்காரனைப் போலத்தான் அது என்னருகில் வந்து நிற்கின்றது.
ஏறி உட்கார வேண்டியதுதான் பாக்கி.
அதற்கு முதல்…
சின்ன ஓர் ஆசை.
நான் பிறந்த பொழுது என்னைப் பெற்ற களையில் அம்மாவும், பிறந்த களையில் நானும் வெளியுலத்தை மறந்து ஒரு சிலமணித்தியாலம் தூங்கிக் கொண்டு இருந்தோமே அப்படி இப்போது நான் தூங்க வேண்டும்.
எந்த எண்ணங்கள்…எந்த எதிர்பார்ப்புகள்…எந்தக் கவலைகள்…எந்தக் கணக்கு வழக்குகள்…எவரைப் பற்றிய நினைப்புகள் எதுவும் இல்லாது சில மணி நேரம் தூங்க வேண்டும். அவ்வாறே தூங்கியபடி அந்தத் தூக்கத்தில் இருந்து எழுந்து போய் ஆட்டோவில் போய் அமர்ந்து “சரி நீ போப்பா” எனச் சொல்ல வேண்டும்.
எழுதி வைப்பதற்கோ சொத்தை பிரித்துக் கொடுப்பதற்கோ எந்தத் தேவையுமில்லை. சட்டம் தானாகவே சரியாக தன் வேலையைச் செய்யும். அந்த வகையில் நான் டென்மார்க்கில் மரணிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். மரணத்தின் பின்பு கூட நான் யாரையும் ஏமாற்றாமல் எல்லாத்தையும் சரியாகச் செய்திருக்கின்றேன் என்பதில் எப்போதும் போல கர்வம் நிறைந்த ஒரு பெருமைதான்.
நல்ல நிலையில் உள்ள பிள்ளைக்கு கொஞ்ச பங்கும், கஸ்டத்தில் உள்ள பிள்ளைக்கு அதிக பங்கும் என என்னால் பங்கு பிரிக்க முடியாது. நல்ல நிலையையும் கஸ்ட நிலையையும் தீர்மானிப்பதற்கு நான் யார்? அது அவர் அவர் மனம் சம்பந்தப்பட்ட விடயம். என்னை விடப் பணக்காரன் எங்கள் குடும்பத்தில் யார் இருந்தார்கள்? ஆனால் நான் நல்லாய் இருந்தேனா என எனக்கு மட்டும் தானே தெரியும்.
ஓ! ஒரு விடயம் மறந்து விட்டேன். அதை கட்டாயம் எழுதி வைக்க வேண்டும். அல்லது அதற்கு ஆவன செய்ய வேண்டும். அஃதில்லையாயின்; உயிர் பிரியும் கடைசி வேளைவரை என்னையும் உயிரோடு இருக்கும் என் குடும்பத்தையும் ஆளுக்கு ஆள் கஷ்டப்படுத்திப் போடுவார்கள்.
என் உயிர் போன பின்பு மரணச் சான்றிதழ் கொடுக்க கட்டாயம் ஆறு மணித்தியாலம் வைத்தியத்துறை காத்திருக்கும். அப்போது எவரும் என்னை வந்து பார்க்கட்டும். அதற்குப் பின்புதான் என்னைக் குளிர் அறைக்குள் கொண்டு போய் வைப்பார்கள்.
அதன் பின்பு மரணச்சடங்கை நடாத்தும் நிறுவனத்தினருடன் குடும்பத்தினரின் கலந்தாலோசனைகள்… எந்த வகைப்; பெட்டியுள் என்னை வைப்பது?… என்ன நிறப் பூக்களால் பெட்டியை அலங்கரிப்பது?… எந்தத் தினத்தில் சைவ முறைப்படி கிரியைகள் செய்வது?… லங்காஸ்ரீயில் எவ்வாறு மரண அறிவித்தல் போடுவது?… யார் யார் எங்கள் வீட்டுக்கு எந்த எந்த தினத்தில் சாப்பாடு கொண்டு வருவது?… கொள்ளி வைப்பது யார்?… பஞ்சமியில் செத்தாரா?… கோழிக்குஞ்சையா, இளம் தென்னம்பிள்ளையையா பெட்டிக்குள் வைப்பது என்ற விசாரணைகள்?… எட்டுச் செலவு எப்போ செய்வது?… அந்தியேட்டி எப்போது செய்வது?… யார் கல்வெட்டு அடிப்பது என அத்தனையும் நடக்கும்.
எனக்கு இதில் எதுவுமே வேண்டாம் என எழுதி வைக்க வேண்டும்.
என்னை அறிந்த என் மனைவியும் மகளும், மகனும் என் இறுதிநேர சாசனத்திற்கு மதிப்புக் கொடுத்து இவற்றைத் தவிர்க்கட்டும். அல்லது அவர்களுக்கு இந்தச் சடங்குகள் ஒரு நிம்மதியைக் கொடுக்குமாயின் அவற்றைச் செய்யட்டும். என் வாழ்வில் அவர்களும் அவர்கள் வாழ்வில் நானும் விரும்பியோ விரும்பாமலோ தலையிட்ட எத்தனையோ சந்தர்ப்பங்கள் போல இதிலும் அவர்களின் தலையிடு இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாய் நல்ல ஒரு தந்தையாய், கணவனாய் அதற்கு அனுமதி நான் கொடுத்தே ஆக வேண்டும்.
வாய் வழியாகச் சொன்னால் எதுவும் நடக்காது. என் குடும்பத்தையும் மீறி;; அவர் அவர் விருப்பத்துக்கும் வசதிக்குமாய் எல்லாவற்றையும நடாத்தியே தீர்வார்கள். எனவே சட்டமுறைப்படி எழுதி வைக்க வேண்டும்.
நானே உயிருடன் இருக்கும் பொழுது தெரிவு செய்யும் மரணச்சடங்கை பொறுப்பேற்று செய்யும் நிறுவனம் என்னைக் கொண்டு போய் என்னை எரித்து விட்டுப் போகட்டும். சாம்பலை குப்பையிலேயே போடட்டும். என்னால் மீண்டும் ஒரு தடைவ அழகிய இந்தக் டென்மார்க்கின் கடற்கரையோ அல்லது மக்கள் நடமாடும் சந்திகளோ அசுத்தப்பட வேண்டாம். இலங்கை இந்தியா மாதிரி கட்டாக்காலி மாடுகளோ நாய்களோ இங்கில்லை – படைப்பவற்றை உண்டு விட்டுப் போவதற்கு. குளிரில் அனைத்து படையலும் விறைத்துப் போய் நாட்கணக்கில் கிடக்கும். பின் நகரசபை வண்டி வந்து அள்ளிக் கொண்டு போய் கொட்டும்.
இத்துடன் இந்த உலகத்துக்கு ஒருவனின் பாரமும் இந்த உலகத்தின் மீது ஒருவனுக்கு இருந்த பாரங்களும் அற்றுப் போய் விடட்டும்.
கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாய் இருக்கின்றதா?
சராசரியுடன் சமசரங்கள் செய்து கொள்ளாதவைகள் என்றும் பைத்தியங்கள் தான். ஆனால் இந்த சராசரியின் அளவுகோலின் நீள அகலம் இந்த ஐம்யொன்பது வருடத்தில் எத்தனையே தடவைகள் மாறி மாறி கொண்டு வந்ததை உற்றுப் பார்த்த சாட்சிகளில் நானும் ஒருவன்.
தமிழரசுக்கட்சிக்கு வாக்களியாது தமிழ் காங்கிரசுக்கு வாக்களித்திருந்தால் ஒருகால் அவர்கள் சராசரித் துரோகிகள். பின் இரு கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இணைந்த பின்பு
அதற்கல்லாது எந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அவர்கள் சராசரித் துரோகிகள், பின் கூட்டணியினரின் நெற்றிக்கு எதிரில் துப்பாக்கிகள் நீண்ட பொழுது கூட்டணி பற்றிக் கதைத்தால் அவர்களும் சராசரித் துரோகிகள், மேலாக மேலைநாடுகளில் விடுதலைக் குழுக்கள் எவரை விமர்சித்தாலும் அவர்கள் தமிழ்தேசியத்திற்கு எதிரான சராசரித் துரோகிகள்.
வெள்ளைக்காரனுக்கு கீழே கிடந்த தமிழன், சிங்கள அரசாங்கத்துக் கீழே கிடந்த தமிழன், புலிகளின் கட்டுப்பாட்டுக்கை கிடந்த தமிழன், புலம் பெயர்ந்து வந்த தமிழன், புலம் பெயர்ந்த பின்; போராட்டத்து நேரடியாகவோ மறைமுகமாகவே உதவிய தமிழன், ஆயுதங்கள் மொளமாகி விட்ட பின்பு எதுவுமே நடாக்காத்து போல மௌனம் காத்த தமிழன், தற்பொழுது போர்க்குற்றங்குள் பற்றி கதைக்க ஆரம்பித்திருக்கும் தமிழன் என அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த சராசரிக் கோட்பாடுகளும் மாறி மாறிக் கொண்டுதான் இருந்தது.
சாதியாலும் பணத்தாலும் பழக்க வழக்கங்களாலும் தீர்மானிக்கப்பட்ட திருமணங்கள் இங்கு படிப்பாலும் உத்தியோகத்தாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது. கற்பு பற்றி அதிகம் கதைத்துக் கொள்வதேயில்லை. ”லிவ்விங் ருகெதர்” என்ற புதுக்கலாச்சாரம் வந்த பின்பு கன்னிகாதானம் செய்யும் அவசியம் இனிவரும் காலங்கலங்களில் குருக்கள்மாருக்கு இராது.
ஊரில் வெள்ளிக்கிழமைகளில் பூசிய அதே விபூதியைத் தான் இங்கு வெள்ளியிலும் பூசிக் கொண்டு கடைத்தெருவுக்கு போயிருந்தேன்;. தமிழர்களே என்னை அதிகமாகவே திரும்பிப் பார்த்தார்கள். அதைக் கொஞ்சம் ஸ்ரையிலாய் பூச வேண்டுமாம்.
மாறாதிருந்தவனும் பைத்தியக்காரன் தான். அதிகமாய் மாறியவனும் பைத்தியக்காரன் தான். அவ்வகையில் நான் மாறாமலும் இருந்திருக்கின்றேன். அதிகமாய் மாறியும் இருந்திருக்கின்றேன்.
அந்தப் பைத்தியக்காரத் தனங்கள் எனக்கு தந்தப் பாடங்கள் தான் இந்த குளிருள்ளும் இருட்டினுள்ளும் வாசம் செய்யும் அப்பிள் தோட்டங்களில் இருந்து வெளியேறி நிலவு வீசும் எங்கள் தென்னைத் தோட்டத்தின் நடுவில் அமைந்த சிறு குடிலில் மரணத்தை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டு நிம்மதியாக தூங்குவதற்கு எனக்குள் பெருகிக் கொண்டிருக்கும் தீராத ஆசை.
தூரத்தே கேட்கும் மெயில் வண்டிச் சத்தம், கடைசி பட பஸ்சில் இருந்து ஆட்கள் கதைத்துக் கொண்டு செல்லும் அரவங்கள், கொழும்புக்கு சாமான்கள் ஏற்றிச் செல்லும் லொறிகளின் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிய பின்பு இரவின் தாலாட்டுப் பாடல்களை கேட்டபடி நானும் கண்ணயர்ந்து அடங்கிப் போக வேண்டும்:
அரசடி வைரவரின் அதிகாலை பூஜை மணி கேட்டு ஊர் எழும்பும் போது நானும் இந்த உலகத்தில் இருந்து போய் இருக்க வேண்டும். என் உடலும் அந்த தென்னந்தோட்டக் கொட்டிலில் இருந்து மறைந்திருக்க வேண்டும்.
எப்படி? எப்படி அது சாத்தியமாகும்? அது எனக்குத் தெரியாது ஆனால் அது என் விருப்பமாய் இருக்கின்றது.
இதே வினாடியில் இந்தியாவின் ஒரு தெருக்கோடியில் காசநோயால் செத்துப்போகும் ஒரு மூதாட்டியின் இறப்பும், பீக்கிங்கில் சுரங்கத்துள் நெரிபட்டுப் இறந்து போகும் ஒரு சீனத் தொழிளாயின் மரணமும், ஆபிரிக்காவில் எயிட்ஸ் நோய் முற்றி மார்பகங்களே மறைந்து எலும்புகளே எஞ்சி கிடக்கும் ஒருத்தியின் இழப்பும் இந்த உலகத்தையா உலுக்கி விட்டுப் போகிறது. அவ்வாறே தான் என் மரணமும் என எனக்குத் தெரியும். ஏன்னுடன் வாழந்தவர்களுக்கு மட்டும் அந்தக் கண உலுக்கம். பின் “நாளை” அதுவே மற்றொரு நாளாகிப் போய்விடும்.
இருக்கும் வரையில் தான் மன்னர்கள். அல்லது மன்னர்கள் என்ற நினைப்பு. நாங்களே சூடிக்கொள்ளம் முடிகள். அதற்கான போட்டிகள். பொறாமைகள். கோபங்கள். வாதங்கள், அறிக்கைகள், காகித கணனிச் சண்டைகள், இரத்த அழுத்தங்கள்.
இப்போ எனக்குள் எந்த போட்டியும் இல்லை. எந்த தோல்வியும் இல்லை. எந்த எதிரியும் இல்லை. ஏல்லோரும் நண்பர்கள். முதுகில் குற்றியவர்களையும் நண்பர்களாய் பார்க்கும் பக்குவம். அல்லது அவர்களுக்காக பரிதாபப்படும் பக்குவம். இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வந்து விடுகின்றதா? இல்ல இந்த மரணப்படுக்கை எனக்கு அதை தந்திருக்கின்றதா? உள்ளும் புறமும் ஒன்றாகவே இருக்கின்றது.
மைக் டொனாசில் பாஸ்ட் பூட் சாப்பிட்டது போல அவசரமாகவே இங்கு வாழ்ந்து விட்டேன் போல் எனக்குத் தெரிகிறது.
ஆற அமர்ந்து சாப்பிட அவகாசமே கிடைக்கவில்லை.
எத்தனையோ நாட்கள் காலைத் தேனீர் தொடக்கம் இரவு உணவுவரை காரின் ஸ்ரேறிங்கை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் குடித்திருக்கின்றேன் – சாப்பிட்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஓட்டம். 24 வயதில் தொடங்கிய ஓட்டம். 33 வயதை அடைந்த போது குடும்ப பாரங்களின் முதலாம் அத்தியாயத்தை பூர்த்தி செய்திருந்தேன். அதுவரை எனக்கு ஒரு வாலிபப்பருபம் இருக்கிறது என்பதை நானோ அல்லது என் பெற்றார்களோ எண்ணிப் பார்க்காத ஓட்டம்.
வயது 33: “தம்பி பெட்டையும் டென்மார்க்கிலைதான். இருக்குது. இப்ப இஞ்சை லீவுக்கு வந்திருக்கினம். எங்கள் எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு”
வயது 34: “தம்பி நீ இலங்கைக்கு வர ஏலாது தானே. சுpங்கப்பூர் எண்டால் எல்லாருக்கும் வசதி”
வயது 35: “அம்மா சொல்லி விட்டவா பிள்ளை பெறுகிறதை தள்ளி வைக்க கூடாது எண்டு”
வயது 36: “அப்பா… பிள்ளையைப் பிறைவேற் பள்ளிக்கூடத்திலைதான் சேர்க்க வேணும்”
வயது 37: “வீடு வேண்டேக்கை இரண்டு கார் விடக்கூய வீடாய்த்தான் வேண்ட வேண்டும்”
வயது 38: “தம்பி.. உன்ரை தங்கச்சிக்கும் வயதாகிட்டுது… இனி ஏதும் முயற்சி எடுக்க வேணும்”
வயது 39: “தம்பி… உன்ரை தம்பியனை இனி இஞ்சை வைச்சிருக்க ஏலாது. நாட்டு நிலைமை அப்பிடி.”
வயது 40 – 49: அப்பிளிக்கேசன்கள். அப்பிளிக்கேசன்கள். எதுவும் நிராகரிக்க முடியாத அப்பிளிக்கேசன்கள். அதை நிறைவேற்ற ஒரே வழி! வேலை…வேலை…வேலை… கிழமைக்கு 38 மணித்தியால வேலையை 37 மணியாக குறைக்க டென்மார்க்கில் தொழிற்சங்கங்கள் றோட்டில் இறங்கி
போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொழுது நான் கிழமையில் 104 மணித்தியாலங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன்.
கலிதீர்க்க வந்த பிள்ளை என அம்மாவும் என் பிள்ளையை கண்கலங்காமல் பூப்போலப் பார்க்கும் மருமகன் என மாமியாரும் சொல்லிக் கொண்டு நல்லூர் கந்தன் வாசலில் அர்ச்சனை தட்டுடன் நின்றார்களாம்;.
செய்தி வந்த அடுத் நாள் தான் இரத்தப் பரிசோதனையின் மறுமொழியும் வந்தது.
வாழ்வில் முதன் முதலாய் கண்கலங்கிய நாள்.
வயது 50: ஐம்பதாவது பிறந்தநாளை எல்லோருடனும்; சந்தோசமாக கொண்டாடி விட்டு அடுத்த நாள் ஆபீசு விடயமாக வெளிநாடு போகின்றேன் என்று விட்டு ஒரு கிழமை ஆசுபத்திரியில் படுத்துக் கொண்டேன்.
அப்போதான் எனக்கு முதன் முதலில் கான்சருக்கான ஹீமோ சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது.
வயது 51 – 59 இந்த ஒன்பது வருடத்தில் எதிலும் என் வேகம் குறையவில்லை – வருடத்தில் இரண்டொரு தடவை யாருக்கும் தெரியாமல்… யாருக்கும் வேதனை தராது இடைக்கிடை ஆசுபத்திரியில் போய்ப்படுத்ததை தவிர.
மூத்தவளுக்கு மெடிசின் முடிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கு. யாரோ எங்கள் சனம் சாதி இல்லாத பையனை விரும்புகின்றாளாம். அவளும் இதுவரை சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. கேட்டும் எதுவும் ஆகப்போவதில்லை – அவளாக வீட்டை விட்டுப் போவதை தவிர.
கமலா, என் அம்மா, என் மாமியார் வடிவில் நிச்சயம் ஒரு நாள் பூகம்பம் வெடிக்கத்தான் போகின்றது. இங்கு பெரிதாக தெரியாவிட்டாலும் ஊரில் சம்மந்தம் கலக்க எப்படி அந்தக் கொட்டில் வீடுகளுக்குப் போவது என.
அதுவும் என் தாய்வழிப் பாட்டனார் சாதியில் குறைந்த ஒருவன் கடுக்கன் போட்டுவிட்டான் என்று மடியில் செருகியிருந்த ஊசிக்காம்புக் கத்தியால் அவனின் கததையும் கடுக்கனையும் சேர்த்து வெட்டி எறிந்து விட்டு ஆறு மாதம் ஜெயிலுக்குப் போனவர். அவர் விடுதலையான அன்று குதிரை வண்டிலிலை மேளதாளத்துடன் அழைத்து வந்தவர்களாம். அவர் இறக்கும் வரையில் அந்த இனத்தில் யாருமே காதில் கடுக்கன் அணிந்து கொள்ளவில்லையாம்.
மாற்றங்கள் ஒன்றுதான் உலகில் மாறாதது என்பதை அவர்கள் இறுதிவரை அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
மகனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை. தானாகவே விரும்பி பெரிய வாகனங்கள் ஓட்டுகின்றான். ஐரோப்பா முழுக்க திரிவான். தாயுடன் மட்டும் தினசரி டெலிபோனில் கதைப்பான்.
அந்த வகையில் அவர்கள் இருவரைப் பற்றியும் எனக்கு கவலையிருக்கவில்லை.
கடைசியாக ஒரு நாள்… போன மாதம்… அதிகாலை…
பிறைவேற்றாக செய்யும் கிளீனிங் வேலைக்கு போய்விட்டு, ஒவ்வீசுக்கு போக முதல், காரில் ஏற முதல் ரையை எடுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு தலை சுற்றிக்
கொண்டு வந்ததும் பின்னால் ஒரு கார் பனியில் சறுக்கிக் கொண்டு வந்ததும் நினைவிருக்கு…. அதன் பின் கமலாவின் விசும்பல் சத்தம் கேட்ட பொழுதுதான் இந்த 10வது மாடிக்கட்டடத்தில் கண் விழித்தேன்.
என்னைச் சுற்றி எங்கள் முழு நகரமே நின்றது.
ஒரே இரைச்சல்.
மகள் டாக்டர்மாருடன் பேசிக்கொண்டு நின்றாள்.
அன்றுதான் என் நோய் பற்றிய விபரங்கள் அனைத்தும் கமலாக்கும் பிள்ளைகளுக்கும் தெரிய வந்தது. அடுத்த வினாடியே ஊருக்கும் மற்றைய மற்றைய நாட்டில் இருந்த உறவினருக்கும் 1000 ஜெராக்ஸ் கொப்பிகள் அனுப்பப்பட்டது போல செய்திகள் போய்விட்டது.
ஆஸ்பத்திரிக்கு டெலிபோன்கள்…டெலிபோனுக்கு மேல் டெலிபோன்கள்…
நான் விரும்பிய அந்திமக்கால அமைதி எனக்கில்லை என உறவுகள் என்னைப் பயம் காட்டத் தொடங்கியது.
எனக்கு நல்ல நினைவிருக்கு சிவசம்பு அண்ணை இதே ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது கடைசி ஒரு கிழமையும் அவரைச் சுற்றி நின்று ஆளுக்கு ஆள் நமச்சிவாயப் பதிகம் பாடியதும்… அவரின் இறுதிச்சடங்கை எந்த நாளில் எந்த விதமாய் செய்வது என ஆட்கள் விவாதிக் கொண்டு இருந்ததும்… கொழும்பில் வந்து நிற்கும் தங்கச்சியாரை இழவு வீட்டுக்கு டென்மார்க்கு அமைப்பதா இல்லையா என ஆளுக்கு ஆள் விவாவித்துக் கொண்டதை எல்லாம் அவர் கேட்டுக் கொண்டுதானே இருந்திருப்பார்.
அவரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
அன்று எடுத்த முடிவு தான் இது.
யாருக்ககாவும் என்னைச் சமசரம் செய்யாது எனது ”என்னுடன்” ”நானே” தனித்திருக்க விரும்பிய என் இறுதி நிமிடங்கள்.
***
“ரமணா. . . குமோன்”
என் நெற்றியை தன் குளிர்ந்த கைகளால் வருடியபடி நின்றாள் அதிகாலைத்தாதி சுசானா.
கண்ணை விழிக்கின்றேன்.
எதுவுமே தெரியவில்லை.
வைத்தியத்துறையும் நானும் எதிர்பார்த்த ஒன்று தான் அது இன்று நடந்திருக்கு.
நோயைப்பற்றி சொல்லிய பொழுது எனக்கு இதையும் சொல்லியிருந்தார்கள். வரும் போது பார்ப்போம் என்பதை விட இந்த நிலை வராது எனவே நம்பியிருந்தேன்.
உயிருக்கு பின் பிரிய வேண்டிய பார்வை உயிருக்கு முன் என்னிடம் இருந்து போய்விட்டிருந்தது.
கவலையில்லை என்று என்னால் தத்துவம் கதைக்க முடியவில்லை.
கவலையாய் தான் இருக்கு.
“ஐ வில் கம் வித் எ டொக்டர்”
சுசானா விரைந்து நடக்கின்றாள்.
கண்கள்! என் மிகப் பெரிய பலம். நான் வாயினால் பேசியதை விட கண்களால் பேசியதே அதிகம். என்றுமே என் கண்கள் குனிந்து பார்ப்தில்லை. மறு பக்கம் பார்ப்பதில்லை. கண்ணுக்கு நேரே கண் வைத்து பேசித்தான் பழக்கம். அது என் பலமாயும் இருக்கலாம். எனக்குள் இருந்த உறுதியாயும் இருக்கலாம்.
என் சின்ன வயது தோழி கூட ஒரு நாள் சொன்னாள், “உன்ரை கண் தான் ரமணா பெட்டையளைக்; கெடுக்குது” என்று.
நான் வகுப்பில் பாடம் எடுக்க முதல் அமைதியாய் இருங்கள் என்று என்றுமே சொன்னதில்லை. வகுப்பைச் சுற்றி ஒரு பார்வை தான். வகுப்பு தானே அமைதியாகும். அவ்வாறோ நான் பங்கு கொள்ளும் மேடைப்பேச்சுகளிலும்.
இப்போ அந்தக் கண்கள். திறந்திருந்தும் மூடிய நிலைக்குப் போய்விட்டது.
டாக்டர்கள் இரண்டு மூன்று பேர் என்னைச் சுற்றி நிற்கிறார்கள். சுசானாவின் குரலும் கேட்கிறது.
“ரமணா நல்லாய் பரவீட்டுது. பரவுற வேகத்தை குறைக்க மருந்து தரலாம். அது உங்களை இன்னும் கொஞ்சகாலம் வாழ வைக்கும். ஆனால் அது இழந்த பார்வையை மீட்டுத் தராது”
டெனிசில் அவர்கள் சொல்வதை மனம் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்கிறது. நான் தமிழில் மனத்துள் நினைப்பதை வாய் டெனிசில் மொழி பெயர்க்கின்றது.
“வேண்டாம் டாக்டர்… இனி றீற்மெண்டை நிற்பாட்டுங்கோ… “
“உங்கள் முடிவு நல்ல முடிவு ரமணா” – இது பெரிய டாக்டர்.
“உங்களுக்கு கடைசி விருப்பம் ஏதாவது…”
“என் உயிர் பிரியும் வரையும் யாரும் வந்து என்னை பார்ப்பதற்கு நீங்கள் அனுமதிக்க கூடாது”
“உறுதியாகத்தான் சொல்லுகின்றீர்களா?”
“ஆம்… மற்றது …என் இறுதி அடக்கத்திற்கு பொறுப்பான நிறுவனத்துடன் கதைக்க வேண்டும்”
“கட்டாயம் ஒழுங்கு செய்கின்றோம்…. கட்டாயம் இன்று மாலைக்குள் ஒழுங்கு செய்கின்றோம்…. “
அவர்கள் விலகிப் போகின்றார்கள்.
“ரமணா வித்தியாசமான ஒரு இலங்கையராய் இருக்கிறார்….இல்லையா?”
தமக்குள் பேசிக் கொண்டு போவது எனக்கு மெதுவாய்க் கேட்கின்றது.
***
“நீ வா… “
திரும்பிப் பார்க்கின்றேன்.
மரணம் தான் கூப்பிடுகிறது.
கமலாவும், மகளும், மகனும் அழுது கொண்டு நிற்கிறார்கள்.
யாரோ எனது இரண்டு கால் பொருவிரலையும் இணைத்துக் கட்டுகிறார்கள்.
தலைமாட்டில் குத்துவிளக்கின் திரி கருகும் மணம்.
“ஆட்டோவை இந்த பத்தாம் மாடிக்கு கொண்டுவர முடியாது. மழை பெய்து றோட்டு வெள்ளமும் சகதியுமாய் இருக்கு… நீ விரும்பிய செம்பாட்டுக்காணி.. புகையிலைக் கண்டுகள்… தென்னங் காணிகளுக்குள்ளாகவே நடந்து போவோம் … “
லிவ்ற்றுக்கு காத்திராது என் உயிர் போகும் வேளையில் வைத்தியத்தாதிமார் திறந்து விட்ட யன்னல் வழிகாகவே இறங்கி றோட்டுக்கு வந்தோம்.
“மகளின்ரை கலியாண விடயத்திலை உனக்கும் கமலாக்கும் பிரச்சனையாம் அதுதான் அவளையும் பிள்ளைகளையும் கடைசி நேரத்திலை நீ பார்க்க விடேல்லை என்று ஊருக்கை கதைக்கினம்…. அதோடை ஊரிலை இருக்கிற உன்ரை வயதான ஐயா அம்மாக்கு கொஞ்ச காசை எழுதி வைச்சிருக்கலாம் எண்டும் சனங்கள் கதைக்குதுகள்
“கொஞ்;சம் தொண தொணக்காமல் வாறியா”
மரணம் மௌனிக்கின்றது.
கற்பூர மணம் கலந்த மெல்லிய குளிர்ந்த காற்று வீசுகின்றது.
என்னுடன் எனது பயணம் தொடர்கிறது. (முற்றும்)