தோன்றாத்துணை –வி. ஜீவகுமாரன்
ஜானு என்னை விட்டுப் போகும் வரை அம்மன் கோவில் திருவிழா தொடங்கி விட்டால் பகல் நேரத்தில் சண்டியனை எனது வீட்டில் காண்பது அரிதாகி விடும்.
மாமிச சாப்பாட்டிற்காக மாமிசம் சமைக்கும் பக்கத்து வீடுகளுக்கு அல்லது சந்தையடிக்கு வலது புறமாக இருக்கும் அசைவ உணவுக் கடைக்கு அல்லது மீன் சந்தைப் பக்கமோ ஓடிவிடும்.
பொழுதுபடும் பொழுதுதான் வீடு திரும்பும்.
சிலவேளை ஊர் நாய்களுடன் கடிபட்டு அணுங்கி கொண்டு வந்து என் காலடியில் அல்லது ஜானுவின் காலடியில் படுக்கும்.
எங்கள் இருவரில ஒருவர் அதனைத் தடவி விட வேண்டும்.
ஒரு நாள் பின்நேரம் போல் முன் தோள் பட்டையில் இருந்து நுனிவிரல் வரை விறைத்துக் கொண்டு வருகிறது போல இருக்கின்றது என்று சொன்னவள் தான் ஜானு. ஆட்டோ பிடித்துக் கொண்டு வருவதற்குள் இடையில் முன் விறாந்தையில் இயலாமல் படுத்து விட்டாள். ஆட்டோவின் அமளிகேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டு சரசுமாமி ஜானுவின் கையைப் பிடித்து பார்த்து விட்டு ”இனி அவளைக் கொண்டு போகாதை தம்பி”என்று சொல்லி விட்டா.
என் பலம் எல்லாம் என்னை விட்டுப் போனதாய் உணர்ந்த நாள் அது.
சண்டியன் வளவின் ஒவ்வோர் மூலையிலும் போய் நின்று குலைத்துக் கொண்ட நின்றது.
அன்று இரவு எங்களில் பலர் தூங்காமல் இருந்தோம். ஜானுவை நடுவீட்டில் கிடத்தி தலைமாட்டில் தலைமாட்டில் குத்து விளக்கேற்றி வைத்திருந்தோம். அடுத்த நாள் தான் கிரிஜைகள்.
நடுநிசி நெருங்கிய பொழுது சண்டியன் பலத்து ஊளையிட்டான்.
எல்லோருக்கமே அதிசயமாய் இருந்தது.
அன்று வரை அவன் என்றுமே ஊளையிட்டது இல்லை.
பதினைந்து வருட தாம்பத்தில் குழந்தையே கிடைக்காத எங்களுக்கு கடைசி இரண்டு வருடமும் சண்டியன்தான் பிள்ளை.
ஓர் அதிகாலை பேக்கரியில் இருந்து பாண் வேண்டி வரும் பொழுது வேலிக்கரையில் அணுங்கிக் கொண்டு நின்றது.
கண்களில் பூழை வழிந்து உடம்பிலும் சின்ன சின்ன சிரங்கு புண் வந்தது போல நடுங்கிக் கொண்டு நின்றிருந்தான்.
பிறந்து ஒரு மாதத்துக்குள்தான் இருக்க வேண்டும்.
வீட்டுக்கு தூக்கி வந்து விட்டேன்.
முதலில் ஜானுவால் அதனுடன் ஒட்ட முடியாமல் இருந்தது.
நான் ரவுணுக்கு கொண்டு போய் வைத்தியம் பார்த்து அதற்கு நன்கு சடை வைக்கத் தொடங்க அவளும் அதனுடன் மிகவும் ஒட்டிக் கொண்டாள். அதுவும் அவளுடன் நன்கு ஒட்டிக் கொண்டது.
ஏதோ ஒரு அல்சேஷன் நாய் இனத்தின் கலப்பாய் இருக்க வேண்டும் என அக்கம் பக்கத்தார்கள் பேசிக் கொண்டார்கள்.
ஜானுவிற்கு அனைத்து கிரியைகளும் நடந்த பொழுது அதுவும் என் பின்னால் சுற்றி சுற்றியே வந்தது.
சாவீட்டுக் வந்தவர்கள் எல்லோருக்கும் அதிசயமாய் இருந்தது.
பின்பு பெட்டியைத் தூக்கி கொண்டு போய் பாடையில் வைத்த பொழுது பாடையை சுற்றி சுற்றி குலைக்கத் தொடங்கி விட்டது.
எனக்கு அதனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
வந்தவர்கள் எனக்கு ஆறுதல் சொல்வதா…அல்லது நான் அதுக்கு ஆறுதல் சொல்வதா என்ற நிலை போல இருந்தது.
பின்பு பாடையைத் தூக்கும் பொழுது எல்லோரும் உரத்த குரலில் குழறிய பொழுது அது தான் என்ன செய்கின்றேன் எனத் தெரியாமல் செய்வது போல எங்கள் முன் வளவு…கிணற்றடி…அதனை ஒட்டிய சின்ன வாழைத் தோட்டம் எல்லாம் குலைத்தபடி குறுக்கு மறுக்காக ஓடியது.
அதற்கு ஏதும் ஆகிவிடுமோ என மனம் பயந்தது.
என் இடது தோளில் கொள்ளிக் குடத்தையும் வலது கையில் கொள்ளிச் சட்டியையும் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.
மனம் கனத்தது.
திரும்பி வரும் பொழுது ஜானு வீட்டில் இருக்கமாட்டாள் என நினைத்த பொழுது ஏதோ நெஞ்சை அழுத்தியது.
உச்சி வெயில். கால்கள் சுடவே செய்தது.
இறுதி ஊர்வலத்துக்கு ஊரே திரண்டு இருந்தது என்று சொல்லலாம் – அதில் எனக்காக பாதி என்றால். ஜானுவிற்காக பாதி.
அவள் நடத்தி வந்த சிறுவர் அநாதை இல்லம்…பெண்களுக்கான மாலைவகுப்புகள்…முதியோர் இல்லங்களில் தன்னார்வுத் தொண்டு பணிகள் என எல்லோருடனும் நட்புக் கொண்டிருந்தாள்.
எனவே தான் இத்தனை கூட்டம்.
அரைவாசித் தூரத்தை தாண்டி போய்க் கொண்டிருந்தோம் என நினைக்கின்றேன்.
திடீரென றோட்டின் இருகரைகளிலும் இருந்த வீட்டு நாய்கள் அதிகமாக குலைக்கத் தொடங்கின. ஏற்கனவே அவை வெடிச்சத்தத்திற்கு வேறு பயந்திருந்தன.
என் கால்களை உரசியபடி சண்டியன் ஊர்வலத்துக் முன்னால் ஓடத் தொடங்கினான்.
அனைவருக்குமே அதிசயம்.
றோட்டில் வீசி வீசி நடந்த நெல்லுப் பொரியின் மணத்தை அல்லது வேறு ஏதோ ஒன்றை வைத்து அது எங்களைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.
அடுத்த பத்து பதினைந்து நிமிடத்துள் சுடலையை அடைந்து விட்டோம்.
நான் தீ மூட்டும் இடத்துக்கு தூரமாய் நின்ற பூவரசு மரநிழலில் நின்று கொண்டேன்.
என்னால் அவளுக்கு நெஞ்சாங்கட்டை வைப்பது.. அது .. இதுகளைப் பார்க்க முடியாது.
தள்ளியே நின்றேன்.
சண்டியன் தான் அந்த இடத்தை சுற்றி சுற்றி வருவதும் பின்பு அங்கே நிற்பவர்கள் கலைக்க என்னிடத்தில் ஓடிவருவதுமாய் நின்றது.
கொஞ்ச நேரத்தில் என்னை கிட்டவாக வரும்படி கூப்பிட்டார்கள்.
உரத்த தொனியில் பாடிக்கொண்டிருந்த பட்டினத்தார் பாடல்கள் வேறு என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
“எவ்வாறு தீ மூட்டுவேன்”
மனம் படபடத்தது.
இடம் வலமாக கொள்ளிக் குடத்துடன் சுற்றினேன். சண்டியனும் என்னுடன் சேர்ந்து சுற்றினான்.
ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் பொழுதும் கொள்ளிக் குடத்தில் ஒரு கொத்து விழுந்தது.
இரண்டாம் முறை கொத்து விழுந்த பொழுது மனம் நடுங்கியது.
இன்னும் ஒரு சுற்றுத் தான்.
அடுத்து…. அவள் சுவாலையாகப் போகின்றாள்.
கண்களால் ஓடியது.
“ஜானு…ஜானு…என்னையும் அறியாது என்றாவது நான் உன்னைக் கோபித்திருந்தால் என்னை நீ மன்னித்துக் கொள்”
மனத்தினுள் சொல்லிக் கொண்டு வந்து முடிப்பதற்குள் மூன்றாவது சுற்று முடிந்து கொள்ளிக் குடம் நிலத்தில் விழுந்து சிதறியது.
என் பிறங்கையை யாரோ சிதைக்கு கிட்டவாக கொண்டு போகின்றார்கள்.
தீ சுடுவது போல இருக்கின்றது.
கற்பூர மணம் வருகின்றது.
நெருப்பைக் கண்டு சண்டியன் குலைத்து குலைத்து முன்னும் பின்னும் ஓடுகின்றான்.
பின்பு அலறுவது போல சுடலை முழுக்க ஓடுகின்றான்.
“நாய் நெருப்புக்கை விழுந்து சாகப் போகுது போலை கிடக்கு”என யாரோ சொல்லுகின்றார்கள்.
திரும்பிப் பார்க்க மனம் சொல்லுது.
திரும்பி பார்க்க கூடாது என சொல்லியிருந்தார்கள்.
அப்பிடியே வீடு வந்து விட்டோம்.
அன்று முழுக்க சண்டியன் வீட்டை வரவில்லை.
அடுத்தநாள் காடாத்து செய்வதற்காக சாம்பல் அள்ள ஆட்கள் போன பொழுது சண்டியன் நான் நின்ற பூவரசக்கு கீழை படுத்திருந்தானாம்;.
பின் அவர்களைத் தொடந்து வீட்டை வந்து சேர்ந்திருந்தது.
பிறகென்ன…வந்திருந்த எல்லா சொந்த பந்தங்களும் போய்விட நானும் சண்டியனும் தனித்துப் போனோம்.
ஜானு காலையில் கொண்டு வந்து ஊற்றும் பால்தேனீர் சிரட்டையை முணந்து கொண்டு நிற்பான். நானும் பால் தேனீர் ஊற்றிக் கொடுப்பேன். அப்பிடியே பழஞ்சோறோ.. காலையில் எனக்கான உணவின் மிகுதியோ…அவ்வாறே மத்pயானம்…இரவு என…நான் சாப்பிட விரும்பம் இல்லாது படுத்திருக்க நினைத்தாலும் அவனுக்காக இயங்க வேண்டியிருந்தது.
ஆம்! அவன் என்னை இயங்க வைத்தான்.
சிலவேளை என் காலடியில் வந்து படுத்துக் கொண்டு ஜானுவின் படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பான்.
*
இப்போ ஜானு போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த மூன்று வருடத்திலும் சண்டியனில் ஒரு மாற்றத்தைக் கண்டேன்.
அம்மன் கோயில் திருவிழா தொடங்கி முடியும் வரை முன்போல் வேறு இடத்துக்கு மாமிசச் சாப்பாட்டுக்கு போனதேயில்லை.
என்னுடன் சேர்ந்து அதுவும் மரக்கறி உணவுதான்.
எனக்கு மனம் கேட்கவில்லை – ஒருநாள் பக்கத்து வீட்டு சரசுமாமி சந்தைக்கு போன போது பத்து ரூபாய் கொடுத்து சுறா ஈரல் வாங்கி வரச் சொன்னேன். அது அந்தப் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. என்னுடன் சேர்ந்து கரணைக்கிழங்கு குழம்பும் பருப்பும் தான் சாப்பிட்டது.
இப்படியொரு பிறவியா என நான் வியப்படைவதுண்டு.
என்னதான் சண்டியனுடன் ஒரு நாளைய பொழுதின் சில மணிநேரங்கள் கழிந்தாலும் மிகுதி நேரங்களில் தனிமை ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.
39 வயதில் மனைவியை இழப்பது கொடுமை என்பதிலும் பார்க்க மனைவியை இழந்த பின்பு அக்கா-தங்கை சகோதரங்கள் போல பழகிய பல உறவுகள் அன்னியமாய் போவதுதான் மனதுக்கு மிக கடினமாக இருக்கும்.
இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டு இருந்த பொழுது தான் சிவாஜினி ரீச்சர் எனக்கு வெள்ளைச் சேலையில் அறிமுகமானாள்.
எங்கள் பாடசாலைக்கு வன்னியில் இருந்து மாற்றாலாகி தனது ஐந்து வயது மகனுடன் வந்திருந்தாள்.
ஒரே விதமான இரு பயணிகள் ஒரு படகில் பயணப்படுவதில் தப்பில்லை என மனம் சொன்னது.
உற்றம் சுற்றம் எல்லாம் ஆதரவாய் இருந்து அம்மன் கோயிலில் வைத்து எங்களுக்கு அமைதியாக கல்யாணத்தை நடாத்தி வைத்தார்கள். அங்கேயே எல்லோருக்கும் மதிய உணவு.
கோயிலால் சிவாஜினியுடனும் மகனுடனும் வேறு சிலருடனும் வீட்டை வர சண்டியன் பயங்கர குலைச்சல்.
பையன் பயந்து சிவாஜினியை விட்டு இறங்கவே இல்லை.
பின் சண்டியனை நான் கொஞ்சம் கோபத்துடன் அடக்கத்தான் அது அணுங்கியபடியே போய் கதிரைக் காலடியில் அணுங்கி கொண்டு படுத்தது.
அடுத்த நாள் விடிய அதனுடைய சிரட்டையில் பால் தேனீரை ஊற்றி வைத்துக் கொண்டு அதற்கு குரல் கொடுத்தேன்.
அதனைக் காணவில்லை.
அன்று முழுக்க அது வீட்டுக்கு வரவேயில்லை.
பின்னேரம் போல் எங்கும் தேடினேன்.
சுடலையடிப் பக்க ஒழுங்கையால் ஓடிப்போனதாய் யாரோ சொன்னார்கள்.
மனத்திலே பயம் வர அங்கும் சென்று பார்த்தேன்.
அதனை அங்கும் காணவில்லை.
*
பின்பு எங்குமே அதனை நான் காணவில்லை.
(முற்றும்)