22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல்

By | 22. juli 2018

Pulam 22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளளில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் வி. ஜீவகுமாரன். யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த கணிணிப் பகுதியின் முழுநேரப் பொறுப்பாளராயும் , டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் கடமை புரிந்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், பதிப்புத்துறை போன்றவற்றில் தடம்பதித்துவரும் இவரது படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவை. டெனிஷ் – தமிழ் – ஆங்கில மருத்துவ அகராதியும் கையேடும், யாவும் கற்பனைஅல்ல (சிறுகதை தொகுதி), மக்கள் மக்கள் மக்களுக்காக (நாவல்), சங்கானைச் சண்டியன் (சிறுகதை தொகுதியும் குறுநாவல்களும்), இப்படிக்கு அன்புள்ள அம்மா (மொழி பெயர்ப்பு நூல்), ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் (சிறுகதைத் தொகுப்பு) ஜீவகுமாரன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) குதிரை வாகனம் (நாவல்), நிர்வாண மனிதர்கள் (சிறுகதைத் தொகுப்பு) ஆகியவற்றை தமிழ் உலகுக்குத் தந்துள்ளவர். இதனைவிட புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள் 50 பேரின் சிறுகதைகளை தொகுத்து ‘முகங்கள்‘ எனும் பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவ்வாறே டென்மார்க் இளையோரின் படைப்புகளை “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டுள்ளார் புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்கள் தொடர்பில் ஜீவகுமாரனுக்குள்ள அறிவு, ஈடுபாடு காரணமாக கடந்த டிசெம்பரில் தமிழ் நாடு, ஈரோட்டில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். “புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்கள்”, “ஜீவகுமாரனின் படைப்புக்கள்” என்ற தலைப்பில் ஆய்வரங்குகளும் அங்கு இடம்பெற்றன. இதன் தொடர்சசியாக மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கம் கடந்த மாதம் அவரை அழைத்து கௌரவப்படுத்தியது. “உலகத் தமிழ்ச் சிறுகதைகள்: நோக்கும் போக்கும்” என்ற தலைப்பில் அவரது ஆய்வு நூல் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது. இதன்பின்னர் கொழும்பிலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த கருத்தரங்கு ஒன்றை நடத்திய ஜீவகுமாரனை, ஞாயிறு தினக்குரலின் சார்பில் சந்தித்துப் பேசினோம்.

கேள்வி 01: புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் என்ன என்பதில் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. இதற்கான உங்களுடைய வரைவிலக்கணம் என்ன?

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – புகலிட இலக்கியம் – குடிபுகுந்தோர் இலக்கியம் – இடம்பெயர்ந்தோர் இலக்கியம் என சிறிய சிறி வேறுபாடுகள் காரணமான வெவ்வேறு சொற்களினால் பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டாலும்…. ஆங்கிலத்தில் Diaspora literature, Expatriate literature என்ற இரு ஆங்கிலச் சொற்பதங்களுக்கு இணைவாக தமிழ்பெயரை கண்டறியும் முயற்சியிலும் தான் முரண்பாடுகள் இருக்கின்றவே தவிர இந்த புலம் பெயர் இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு முறையான ஒரு வரைவிலக்கணம்; இதுவரை தோற்றுவிக்கப்படவில்லை என எண்ணுகின்றேன். இது பற்றிய பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர இதற்கான ஒரு வரைவிலக்கணத்தை முன் வைத்து அதன் மீது வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. புலம்பெயர்ந்தோரின் படைப்புகள் மூலம் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்கு ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டும்…. சுமார் 10 ஆண்டுகளுக்குள் போரும் அது ஏற்படுத்திய புலம்பெயர்வு அல்லது புகலிடம் கோரியது அல்லது குடிபுகுந்தமை என்பன போன்ற நிலைப்பாடுகளை முன்வைத்து ஒரு தோற்றப்பாட்டை இந்த துறையில் ஆய்வு செய்தவர்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் ஆய்வுகள் மூலம் இந்த இலக்கியத்தின் வலிமையையும் அது இன்று தனித்த ஒரு இலக்கியவடிவமாக எழுந்து நிற்பதையும் மறுத்து விடுவதற்கில்லை. ஆனால் புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியை முன்வைக்கும் மாணவனுக்கு இந்த உதாரணங்கள் மட்டும் பதிலாகி விட முடியாது. இந்த இலக்கியத்தினுள் மறைமுகமாக தொக்கி நிற்கும் பொருளாக போரும் அது தந்த அகதி வாழ்வும் இடம் பெயர்வும் மற்றும் கல்வித் திறமை அடிப்படையில் தம்மை பிற நாடுகளுடன் இணைத்துக் கொண்டமையையும் எம்மால் காணமுடியும். அத்துடன் ஒவ்வோர் நாட்டின் அரசியல் – கலாச்சாரம் – வாழ்வுமுறை என்பன ஒரு தனிமனிதன் மீது அல்லது இனத்தின் மீது ஏற்படுத்திய மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட அடையாளச் சிக்கல்களும் மேலாக குடியுரிமை மாற்றங்களையும் இணைத்தே நான் புலம் பெயர் இலக்கியத்தினைப் பார்க்கின்றேன். அவ்வகையில் புலம் பெயர் இலக்கியம் என்பதனை நான் பின்வருமாறு வரையறை செய்து கொள்கின்றேன். ஒரு தனிமனிதன் அல்லது ஓர் இனம் அகதி அந்தஸ்துப் பெற்று தான் வாழப்புகுந்த நாட்டில் தன் அடையாளத்தையும் தன் குடியுரிமையையும் இழக்கும் நிலையிலும்… கல்வி அல்லது தொழில் காரணமாக இன்னோர் நாட்டுக்கு குடிபெயர்ந்த நிலையில் தன் அடையாளத்தையும் குடியுரிமையையும் இழந்து அந்த நாட்டின் குடியுரிமையை பெறும் நிலையிலும் சரி;… உள்ள மக்களை புலம்பெயர்ந்த மக்கள் என வரையறுத்துக் கொள்ள முடியும். இவர்களின் படைப்புகள் புலம்பெயர் இலக்கியம் என்ற பெயரைப் பெறுகிறது. இந்த வரைவிலக்கணத்தை போருக்கு முன்பு கல்வி தகமை காரணமாக குடிபெயர்ந்த மக்களுக்கும், போர் காரணமாக அகதியாக குடிபெயர்ந்த மக்களுக்கும், தொழில் காரணமாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் – மலேசியா – இலங்கைக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

கேள்வி 02: புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறித்து எஸ்பொ ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களே தமிழ் இலக்கியங்களில் மேன்மையானதாக இருக்கும் என அவர் கூறியிருந்தார். இது குறித்த உங்கள் பார்வை என்ன?

முதலாவது அவர் சொன்ன கூற்று : பனைவளர் நாட்டில் இருந்து பனிபடர் நாட்டிற்கு சென்றவர்களின் இலக்கியமே புலம்பெயர் இலக்கியம் என்பதாகும். அவரின் இந்தக் கூற்றில் சில உண்மைகள் தொக்கி நின்றாலும் அகில உலகத் தமிழ் இலக்கியத்துடன் புலம் பெயர் இலக்கியத்தை பொருத்திப் பார்ப்பதற்கு இந்த வரைவிலக்கணம் போதாது என்றே கருதுகின்றேன். அவரின் கூற்றை ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் நான் இன்று ஒரு வரைவிலக்கணத்தை முன் வைத்திருப்பதற்கு அவரின் கூற்றும் ஒரு காரணம் என்பது உண்மை. இரண்டாவது அவர் கூறியது யாதெனில், ”புத்தாயிரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழில் புதியன படைத்து உலகளாவிய தழிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குவார்கள்” என்பதே. தன் தாய்க்கு தன் பிள்ளை எப்போதும் பெரியவன் தான் என்ற உணர்ச்சி மிகுதியால் கூறியது போன்றே பார்க்கின்றேன். பாரதியார் கூட “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்பொழிபோல் இனிதான மொழி ஏதும் என்றில்லை” எனக் கூறினார். நிச்சயமாக ஒவ்வோர் மொழிக்கும் அதன் அழகும் சிறப்பும் உண்டு. அவ்வாறே புலம் பெயர் இலக்கியம் ஆரோக்கியமாக வளர்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் புலம் பெயர் இலக்கியமே மேன்மையானது என்று கூறமுடியாது. அவ்வாறு இருந்திருந்தால் இன்று உலக மட்டத்தில் வழங்கப்படும் இயல் விருதுகள் பலவற்றை புலம் பெயர் எழுத்துகள் பெற்றிருக்க வேண்டும்

கேள்வி 03: புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

கவலையான விடயத்தான் என்றாலும் ஒரு உண்மையை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்று நாம் எடுத்துச் செல்லும் வடிவம் எமது தலைமுறையுடன் அல்லது அடுத்த தலைமுறையுடன் காணமால் போகும் நிலையும் அதே வேளை எமது சந்ததி அந்த அந்த நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் அடைந்து அந்த அந்த மொழிகளில் தம் இலக்கிய திறனை நாட்டுவார்கள். கூடவே எம் சந்ததியினர் அந்த அந்த நாட்டு மொழிகளில் இன்று எழுத ஆரம்பித்துள்ளமையை ஆரோக்கியமான நிகழ்வாகவே பார்க்கின்றேன்.

கேள்வி 04: எமது புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நாம் வாழும் நாடுகளில் பேசப்படும் மொழிகளில் படைப்புக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கின்றது.

நிச்சயமாக பெரிய வரவேற்பு கிடைக்கிறது. காரணம் அவர்களுக்கு எங்கள் களம் புதிது. வாழ்வு முறை புதிது. கலாச்சாரம் புதிது. எனவே அவற்றை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி வாசிக்கின்றார்கள். இந்த அவர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக் கொள்வதில் படைப்பாளிகள் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும். அல்லது அது புறம் தள்ளப்பட்டுவிடும். புதிய புதிய சிந்தனைகளும், யதார்த்தமான இலக்கியங்களும் படைக்குப்பட வேண்டும் . இல்லையாயின் அந்த வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் எம் படைப்புகள் காலாவதியாகி விடும். இதற்கு நல்ல உதாரணமாக மிகுதியான ஆர்வம் காரணமாக எங்கள் உணவகங்களுக்கு முதலில் அந்த நாட்டு மக்கள் பெருமளவில் வருவதும் பின்பு எந்த மாறுதலும் இல்லாத எண்ணை வதக்கல் கறிகளும் மிளகாயின் உறைப்பும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவம் கண்கூடு. எனவே ஆர்வத்துடன் வாசிக்க வரும் வாசகனின் இலக்கியச் சுவைப்புக்கு ஏற்ப நாங்கள் எங்கள் படைப்புகளை படைக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய பெரியதொரு கடமை எமது எழுத்தாளருக்கு உண்டு.

கேள்வி 05: நீங்கள் மொழிபெயர்ப்பு இலக்கியம் ஒன்றையும் வெளியிட்டுள்ளீர்கள். அது குறித்த உங்கள் அனுபவத்தைச் சொல்ல முடியுமா?

அதன் மூலம் எனது மனைவியார் திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் டெனிசில் உரைவீச்சு நடையில் எழுதிய Kærlig hilsen Mor என்ற நாவல். அதற்கான முன்னுரையை டென்மார்க்கின் மிகச் சிறந்த மூத்த படைப்பாளி பெனி அனர்சன் வழங்கியிருந்தார். இந்த நாவல் வெளியீட்டுக்கு மட்டும் 300 டெனிஸ் மக்களும் 400 தமிழர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். அந்த நூலை இன்றும் மக்கள் அன்னையர் தினத்திற்கு வாங்கி தம் அன்னையருக்கு பரிசளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாவலின் சிறப்பு உலகத்திற்கே பொதுவான தாய் – மகன் பாசம் எமது மண்ணின் வாசனையுடனும் டெனிஸ் மண்ணின் வாசனையுடனும் சொல்லப்பட்டிருந்தமையும் எனக் கூறின் அது மிகையாகாது. இதனை நான் மொழிபெயர்ப்பு செய்தேன் என்பதனை விட மொழிமாற்றம் செய்தேன் என்பதே பொருத்தம். ”கிணற்றில் மொண்டு அள்ளும் தண்ணீரை தலையில் கொட்டுவது…”, ”முன்னே நீட்டிய குழையை நோக்கி ஆடு நடந்து செல்வது.” போன்ற பல உதாரணங்களை இணைத்திருந்தேன். பின்பு இந்த மொழிமாற்று வடிவம் ஆங்கிலம் . ஹிந்தி . மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஐரோப்பிய மக்களுக்கு மட்டுமின்றி வட இந்திய மற்றும் கேரள மாநில மக்களுக்கும் அவர்களின் வரவேற்பறை வரை எமது நாட்டுப் பிரச்சனையை இலக்கிய வடிவில் கொண்டு சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

டென்மார்க்கில் முதலாம் சந்ததி பிற மொழியில் உருவாக்கிய புலம் பெயர் இலக்கிய வரிசையில் இந்நூல் முக்கிய இடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி 06: தாயகத்தில் இலக்கியங்களை வாசிப்பவர்களின் தொகை கணிசமாகக் குறைந்துகொண்டுவருவதாகச் சொல்லப்படுகின்றது. புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இந்த நிலை எப்படியுள்ளது?

அதேதான் இங்கும் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொள்ளவே வேண்டும். தொலைக்காட்சித் தொடர்களின் பெருக்கம், வலைத்தளங்கள், முகநூல்கள், பெருகி வரும் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் இவைகள் காரணங்களாக இருப்பினும் இலக்கியச் சுவையை ஊட்டக் கூட்டிய தளங்கள் குறைவு என்பதனை ஒத்துக் கொள்ளவே வேண்டும். ஒரு பட்டி மன்றம் என்றால் கூட நகைச்சுவைப் பட்டிமன்றமும் கலை நிகழ்ச்சி என்றால் இந்திய சினிமாவின் தாக்கமும் அதிகம் இடம் பெறுவதால் ஆரோக்கியமான இலக்கிய முயற்சிகள் கூட மொட்டுவர முதலே பனியின் குளிரில் கருகி விடும் வின்ரர் காலச் செடிகள் போல் ஆகி விடுகிறன. மேலாக இலக்கியவாதிகள் கூட பல அரசியல் கட்சிகளின் ஊதுகுழால்களாக இருப்பது இவ்வாறான வளர்ச்சிக்கு தடையாகப் போய்விட்டது. போருக்கு முன்பாக போருக்கு முன்பாக பிரச்சார வடிவத்திற்கு தங்கள் எழுத்துகளைப் பயன்படுத்திய பல எழுத்தாளர்களின் எழுத்துகள் போருக்குப் பின்னால் காணாமல் போனவையும் துர்பாக்கியமே.

கேள்வி 07: நீங்கள் ஒரு பதிப்பாளராகவும் இருப்பதால் இந்தக் கேள்வி. தமிழ்ப் பதிப்புத்துறையின் நிலை இன்று எப்படியுள்ளது? குறிப்பாக வர்த்தக ரீதியாக தாக்குப் பிடிக்கும் நிலை உள்ளதா?

இந்தியாவில் கூட அரச நூலகங்களின் கொள்வனை நம்பியே எத்தனையோ பதிப்பகங்கள் தம் காலத்தைக் கடத்துகின்றன. அதனைத் தவிர நாங்கள் இலக்கியச் சேவை செய்யவில்லை… இலக்கிய வியாபாரம் செய்கின்றோம் என்று புத்தக வியாபாரம் செய்யும் பதிப்பகங்கள் தப்பித்துக் கொள்கின்றன. மற்றவை ஆசிரியரின் பணத்தில் தம்மை தக்க வைத்துக் கொண்டு பெயருக்கு பதிப்பகம் என்ற நிலையில் இயங்கி வருகின்றன. இருப்பார்கள். இன்றுள்ள கணணி வசதியும் பண வசதியும் பல நூல்கள் வரக் காரணமாய் இருந்தாலும் நூலின் தரம் காரணமான மறுபதிப்பு வர முடியாத நிலையே உள்ளது. மறுபதிப்பு நிலை உயரும் பொழுதுதான் ஒரு பதிப்பாளனும் உயர்வான்…. கூடவே இலக்கியத் தரமும் உயரும் என்பது என் அபிப்பிராயம்.

கேள்வி 08: ஈழத் தமிழர்களை பொதுவாக யூதர்களுடன் ஒப்பிடும் வழமை ஒன்றுள்ளது. புலம்பெயர்ந்த யூதர்கள் படைத்த இலக்கியங்களுடன் ஈழத் தமிழர்களின் இலக்கியங்களை ஒப்பிட முடியுமா?

ஈழத்தமிழர்கள் யூதர்கள் போல் சென்ற நாடுகளில் எல்லாம் தம் திறமையால் பொருளாதார ரீதியில் நன்கு காலூன்றி உள்ளார்கள் என்பது முற்றுலும் உண்மையான செய்தி. ஆனால் நூல்களின் படைப்புகளின் எண்ணிக்கையிலும் விற்பனையிலும் அந்த இலக்கை எட்டவில்லை என்பதே உண்மை. காரணம் அவர்களது படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவருகிறது. அதற்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். எமது படைப்புகளும் ஆங்கிலத்தில் வெளிவரும் பொழுதே இவ்வாறான ஒப்பீட்டை செய்ய முடியும் என நினைக்கின்றேன். கட்டாயம் தமிழின் மிகச் சிறந்த புலம் பெயர் இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். கனடா பல்கலைக்கழக பேராசிரியர் திருவாளர். கனகநாயகம் அவர்கள் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால் இந்த இலக்கை அடைய பல வழிகளில் உதவியிருப்பார் என்பது திண்ணம்.

கேள்வி 09: ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கியங்களை நீங்கள் தொடர்ந்தும் படித்து வருவீர்கள். அதன் அண்மைக்காலப் போக்குகள்இ மாற்றங்கள் குறித்த உங்களுடைய அவதானிப்புக்கள் என்ன?

இரண்டு அவதானங்கள் எனக்கு உண்டு. போர் என்ற அடக்குமுறை தகர்ந்த பொழுது சொல்லாத சேதிகளாய் இருந்த பல விடயங்கள் இலக்கிய வடிவங்களை தாங்கி முன்னே வந்தது மிகவும் ஆரோக்கியமான விடயம். போர் நடந்து கொண்டிருந்த பொழுது பல புலம்பெயர் எழுத்தாளருக்கு வெளிநாட்டில் வசித்ததால் கிடைத்த கருத்து சுதந்திரம் எவ்வாறு ஆரோக்கியமான படைப்புகளை படைக்க வழி வகுத்ததோ அவ்வாறே போர் முடிந்த பின்பு பல ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு புதிய களம் கிடைத்தது. எனது மக்கள்… மக்களால்… மக்களால் என்ற அரசியல் நாவல் கூட போர் காலத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. அவ்வாறான ஒரு நாவலை போர்க்காலத்தில் இலங்கையில் வெளிக் கொணரவே முடியாது. அடுத்தது புற்றீசல் போல பெருகும் கவிதை – சிறுகதைத் தொகுப்புகள் கவலையைத் தருகிறன. இந்த இடத்தில் நல்ல இலக்கிய எழுத்தாளராக வருவதற்கு நல்ல வாசகனாய் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்க விரும்புகின்றேன். நல்ல படைப்புகளைக் கொடுப்பதற்கு எழுத்தாளன் தன்னைத் தானே புடம் போட்டுக் கொண்டாலே அவன் மேலும் மிளிருவதுடன் அவனது படைப்புகளும் ஒளிவீசும்.

கேள்வி 10: ஈழத்து இலக்கியத்தில் போர் ஏற்படுத்திய தாக்கம் என்ன? போர் இலக்கியங்கள் என எவற்றை நீங்கள் அடையாளம் காண்பீர்கள்?

முதல் கேள்வியின் முதல் பகுதிக்கான விடையின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கின்றேன். மேலும் அண்மையில் ஒரு சிறுகதையில் எழுதியிருந்தேன் ”போர் முடிந்து விட்டது என்ற ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” என. ஆம்! எங்கள் போராட்டம் என்பது 50களின் ஆரம்பத்தில் தொடங்கி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களைப் பெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது பெரிய ஆய்வுக்குரிய விடயமாகும். அந்த அந்த காலங்களில் அது சார்ந்த படைப்புகளும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் போர் உச்சக்கட்டத்திற்கு சென்ற காலத்தில் போருக்கு சார்பான பிரச்சார இலக்கிய வடிவங்களுக்குரிய களம்தான் இலங்கையில் நிலவியது. இது காலத்தின் தேவையாக பிரகடனப்பட்டிருந்தது எனச் சொல்லலாம். இதனையும் தாண்டி எழுதியவர்கள் சில பல விடயங்களை குறியீட்டு மூலமே எழுதினார்கள். புலம் பெயர் நாடுகளில் போரை நடுநிலையில் நின்று விமர்சிக்கும் வகையிலான ஆரோக்கியமான படைப்புகள் வெளிவந்த நிலை காணப்பட்டது. அதேவேளை பிரச்சார நெடி அதிகம் வீசும் படைப்புகளும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் போர் முடிந்த பின்பு சொல்லாமல் இருந்த சேதிகள் பல படைப்புகளாக பல வடிவங்களில் வெளிவந்துள்ளமை இலக்கிய உலகிற்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வாகவே நான் பார்க்கின்றேன். மேலும் இன்றைய உலக மக்கள் போர் என்பதனை வெள்ளித் திரையில் தான் பார்த்திருக்கின்றார்கள். ஆனால் ஈழத்து மக்கள் அதனுடன் தூங்கி அதனுடன் வாழ்ந்து அதனுடன் இறந்தும் கொண்டிருப்பவர்கள். அந்த அனுபவத்தை எந்த இதிகாசங்களும் கொடுத்து விடப் போவதில்லை. உயிர்பயம் என்பதை அனுபவித்தவர்கள் ஈழத்து மக்கள். எனது ” செல்வி ஏன் அழுகிறாள்?” என்ற கதையில் வரும் செல்வி மாதவிடாயின் பொழுது மாற்றுத் துணி கிடையாமல் தன் பாவாடை துணியைக் கிழித்து கட்டிய அனுபவத்தை போர் மட்டுமே அவளுக்கு தந்திருக்க முடியும். எந்த ரமணி சந்திரனின் நாவலும் தந்து விடப்போவதில்லை. பப்பாசி குழாயும் சைக்கிள் கம்பியும் கொண்டு செய்யப்பட்ட கருக்கலைப்பில் கருவும் தாயும் கலைந்து போகும் கதைகளை போர்க்கால இலக்கியம் மட்டும் தான் தந்து விட முடியும். இந்த அனுபவங்கள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கான உரத்தை எம் இலக்கிய உலகுக்கு அளித்துள்ளன. அந்த மண்ணில் களைகளை பெருக விடாமல் ஆரோக்கியமான அறுவடை செய்ய வேண்டியது எம் எழுத்தாளர்களின் தலையாய கடமை ஆகும். Thinakkural_22july2018

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)