முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?
யுவன் சங்கர் ராஜா என்ற ஒரு இந்தியப் பிரஜை இந்து மதத்தில் இருந்து இஸ்வாமிய மதத்துக்கு மதம்மாறி விட்டார் என்பதற்கு ஏன்தான் இத்தனை ஒப்பாரி என்று எனக்குப் புரியவே இல்லை.
அவரின் தொழில் காரணமாக அவர் அறியப்பட்டிருக்கின்றார். அவரின் தொழிலுக்குரிய சம்பளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்குவபர்கள் ரசிகர்கள். அவ்வளவுதான்! மற்ற அனைத்து விடயங்களும் அவரின் சொந்த விடயங்களே.
அவர் ஒன்றும் உலகத்தை உய்விக்க வந்த வழிகாட்டி இல்லையே.!!
ஒரு ஜனநாயக நாட்டில் அவரவர்கள் தங்களுக்கு விருப்பமானத்தை தெரிவு செய்ய அவரவருக்கு பூரண உரிமை உண்டு.
இது நடந்தது ஒன்றும் உலகின் முதலாவது உலக அதிசயம் அல்ல.
மற்றவனைக் குற்றவாளி என ஒரு விரல் சுட்டும் பொழுது மற்று மூன்று விரல்களும் எங்களைச் சுட்டிக் காட்டுவதை நாங்கள் மறந்து போகின்றோம்!
கால காலமாக இந்து சமயத்தின் போலியான பல அடக்கு முறைகளுக்குப் பயந்தும் அதனை வெறுத்தும் வேறு வேறு சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் பற்றி சரித்திரங்கள் பெருமளவில் உண்டு.
இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பெரும்பான்மைனான கிறிஸ்தவர்கள் எல்லாம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறியவர்கள் தானே?
இன்றைய பெரும்பான்மையானயான மதம்மாறிச் செய்யும் திருமணங்களில் இளைஞன் என்றாலும் சரி… யுவதி என்றாலும் சரி கிறிஸ்தவமதத்துக்கே மாறுகிறார்கள்…. அல்லது திருமணத்துக்கு பின் மாற்றப்படுகிறார்கள்.
இந்த நிலை இப்படி இருக்கும் பொழுது ஏன் இந்தக் கூப்பாடு?
முதலில் சைவசமயம் என்றால் என்ன என்ற தெளிவு முதலில் சைவமக்களுக்கு வரவேண்டும்.
வெள்ளிக் கிழமைகளில் கோயில்களுக்கு போவதால் மட்டும்…. அல்லது உனக்கு இப்படிச் செய்கிறன் எனக்கு அப்பிடித்தா எனப் பேரம் பேசுவதால் மட்டும் சைவமும் பக்தியும் வளரப் போவதில்லை.
பக்தி என்பது வேறு…. கடவுளுக்கு பயம் என்பது வேறு… இன்று சைவத்தை எங்கள் எங்கள் வசதிகளுக்கு ஏற்ப மொழிபெயர்த்து வைத்திருப்பது வேறு.
மக்களுக்கு உண்மையான பத்தி மார்க்கத்தையும் சைவ வழிகாட்டலையும் காட்ட வேண்டிய பொறுப்பு அதன் அதிகார பீடமாக விளங்கும் ஆதீனங்களுக்கும் கோயில்களுக்கும் நிறைவே உண்டு. அதனை 75 வீதமான கோயில்கள் சரிவரச் செய்கின்றனவா என்ற கேள்வி நெடுங்காலமாக எனது மனதுக்குள் உண்டு. பல கோயில்கள் இன்று வியாபார நிறுவனங்களாக மாறிவிட்ட நிலை உலகம் முழுக்க காணப்படுகிறது. எந்த ஒன்றும் நிறுவனப்படும் பொழுது அங்கு போட்டிகள் தலை தூக்கும். அப்பொழுது நியாயம் தலை குனியச் சந்தர்ப்பம் உண்டாகும்.
எனவே ”அவனருளால் அவன் தாள் வணங்கி” என்னும் நிலைக்கு மக்கள் தம்மைத் தாம் தாழ்த்தி தாமே முன்னுதாரணமாக இறைதொண்டு செய்தால் சைவம் இன்னும் தழைத்தோங்கும்.
வைச சமயம் என்பது இன்று பெரிய ஒரு ஆலவிருட்சம். அதில் இருந்து ஓர் இலை விழுவதால் எந்தப் பாதிப்பும் வந்துவிடப்போவதிதில்லை.
ஓர் இலை விழும் சமயத்தில் ஓராயிரம் இலைகள் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றது.