சரியாக 7 வருடங்களுக்கு முன்பு டென்மார்க் என்ற சிறுகதையில் எள்ளல் நடையில் பின்வருமாறு எழுதியிருந்தேன்.
தங்கமணியும் சிவதம்புவும் தங்கள் மகளின் சாமத்திய வீட்டுக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக குத்து விளக்கும் இதர பல பொருட்களும் வேண்டுவதற்காக சிங்கப்பூருக்கும் இந்தியாக்கும் சென்றிருந்தார்கள்.
(இந்த இடத்தில் இது என்ன குத்துவிளக்கு கலாச்சாரம் என இலங்கை-இந்திய வாசகர்கள் திகைக்க வேண்டாம். பெயின்ற் மணம் மாறாக ஒரு பிளாஸ்ரிக் பையில் நாலைந்து காய்ந்த வெற்றிலையுடன் கொஞ்சம் சீவல் பாக்கும் ஒரு எழுமிச்சைப் பழமும் சிலவேளை ஒரு முடித்தேங்காய், பழமும் வைத்திருப்பார்களே…. அதுக்காக வந்ததுதான் இந்த குத்து விளக்குச் கலாச்சாரம். ஓவ்வொருவரின் வருவாய்களின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்த குத்துவிளக்குகளின் உயரம் சிறிதாகலாம்… அல்லது பெரிதாகலாம்)
இந்தக் கதையின் கருவே பின்நாளில் எனக்குப் பரிசைப் பெற்றுத் தந்த கடவுச்சீட்டு நாவலை எழுதக் காரணமாய் இருந்தது என்பது உப செய்தி.
பின்பு கடவுளின்நிலம் என்ற எம். எஸ். அனஸின் கட்டுரைத் தொகுப்பு பற்றி இங்கிலாந்தில் உரையாற்றும் பொழும் இதனையே வேறு வடிவத்தில் சொல்லியிருந்தேன், ”எத்தனை பிள்ளையாரைத்தான் என் வீட்டு யன்னல் கரைகளில் அடுக்கி வைப்பது”என.
இனி விடயத்துக்கு வருவோம்.
இன்று நான் ஒரு பிறந்த நாளுக்குச் சென்றிருந்தேன். வழமைபோல் வீட்டுக்குத் திரும்பும் பொழுது ஒரு சிவத்தப் பை கிடைத்தது.
திறந்து பார்த்த பொழுது சுகி. சிவம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
மனம் நிறைந்தது – அங்கு உண்ட உணவினால் வயிறு நிறைந்தது போல.
அப்பொழுதுதான் மனத்தில் நினைத்துக் கொண்டேன்.
மாற்றங்கள் வேண்டி ஓர் எழுத்தாளன் கடுகதி வேகத்தில் தன் கருத்துகளை முன்வைக்கலாம். அவை நியாயமானவை ஆயின் காலங்கள் அந்த மாற்றங்களை குட்ஸ் வண்டி போல மெதுவாக ஆயினும் கொண்டு வரும்.