இராமாயணத்தில் வனவாசம் 14 ஆண்டுகள்… மகாபாரத்ததில் வனவாசம் 12 ஆண்டுகள்…. எனக்கோ மொத்தம் 14 + 12 = 26 ஆண்டுகள்.
ஆம்!
டென்மார்க்கில் என்னை ஒத்த நண்பர்கள் சேர்ந்து சென்ற ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாடி மகிழ்ந்த பொழுது… என் கனவும் நினைவும் என் நாடும் என் கிராமமும் இந்த யாழ்ப்பாண நகரும்…. குறிப்பாக யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்டும் தான்.
எண்ணை தடவி கொப்பியினுள் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்றும்…. அம்மா உருண்டித்தரும் கடைசி உருண்டைச் சோற்றில் தான் எல்லாச் சத்தும் இருக்கிறது என்று நம்பிய வயதில் இருந்து யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் பற்றிய நினைவுகள் என்றும் அழியாத தண்ணிப்படங்கள் போல என்றும் என் நெஞ்சில் ஒட்டியிருக்கும்;. என் கொப்பிகளையும் புத்தகங்களையும் நிறைத்திருக்கும் அதிக தண்ணிப்படங்கள் வ வ் வேறு விதமான பஸ்களின் படங்களாகவே இருக்கும்.
உலகப்பிரசித்தி பெற்ற தாஜ்மகால் காலையில இளம் சிவப்பு நிறத்திலும்… மதியத்தில் வெள்ளை நிறத்திலும்… மாலையில் தங்க நிறத்திலும் நிலவு வெளிச்சத்தில் பளிங்கு போல மின்னுவது போல…. யாழ்ப்பாண பஸ் ஸடாண்டிற்கும் அதிகாலையில் ஓர் அழகும்… காலையில் இன்னோர் அழகும்… வெய்யிலில் வேர்த்து வியர்க்கும் மதியத்தில் வேறோர் அழகும்… மாலையையும் அதனைத் தொடர்ந்து வரும் இரவின் அழகு அத்தனையையும்இன்றும் என்றும் மறையாத நெஞ்சில் இட்ட கோலங்களாக நிலைத்திருக்கின்றன.
ஒவ்வோரூரின் முதல் பஸ்கள் எந்தெந்த ஊர்களில் இருந்து புறப்பட்டாலும் அதிகாiலை ஐந்து மணிக்கு யாழ்ப்பாணம் வந்து விடும். அதேபோல் கொழும்பு… கண்டி…மட்டக்களப்பு…திருகோணமலைக்கு என புறப்படம் அதிகாலை பஸ்கள் ஐந்தரைக்குப் புறப்படத் தயாராக இருக்கும்.
முதல் வணக்கம் எங்கள் முருகனில் தொடங்கி அத்தனை தேத்தண்ணிக் கடைகளிலும் பக்திக் கீதங்களுடன் தேனீரில் ஆவி பறக்கும்.
சுட்டிப்புரத்திற்கு சீர்காழி கோவிந்தராஜன் வந்து இரவு நடாத்திய கச்சேரியை அதிகாலையில் ஒலிபரப்பிய பெருமை யாழ்ப்பாண பஸ்ஸ்டான்டையே சாரும்.
பனிஸ் என்றும்… பிஸ்கட் என்றும்… காலைப் பேப்பர் அவசரப்பயணிகள் என்றும் வாங்கிக் கொண்டு நிற்பார்கள்.
இது பூபாள இராகம் என்றால் காலை எட்டு மணிக்கு தன் முழுச்சோம்பலையும் போர்வையையும் விலக்கிவிட்டு பஸ் ஸ்டான்ற் ஒரு முழிமுழிக்கும்!
நோ சான்ஸ்!
வேலையாட்கள்… பள்ளி மாணவர்கள் – மாணவிகள்…பஸ்களில் இருந்து கொட்டிக் கொண்டு இருப்பார்கள்…. வெள்ளை ஆடைகளும் விதவிதமான கழுத்துப் பட்டிகளும் பாடசாலையின் விலாசத்தை சொல்லிக் கொண்டிருக்க வீதிகளில் விரைந்து கொண்டு இருப்பார்கள்.
கவலையில்லாத அவர்களின் வயது யாழ்நகரத்திற்கே ஒரு இளமையைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
அலுவலகத்திற்குப் போக முதல் பேப்பர் கடைகளிலும் புத்தகக்கடைகளிலும ஒரு பகுதி கூடுவது போல இன்னோர் புறத்தில் காலை ஆஸ்பத்திரிக்குப் போவோர்கள் அதிகம் கிறீம் கிறாக்கற் பிஸ்கட்டுகளையும் யானைச் சோடாக்களையும் செவ்விளனிகளையும் வாங்கிக் கொண்டு நிற்பார்கள். அவர்களினது அல்லது அவர்களைச் சாந்தவர்களினது நோய்களின் வேதனைகள் முகங்களில் தெரியும்.
நகரசபை ஊழியர்கள் வீதியை சுத்திரித்திக் கொண்டு முன்னால் செல்ல தெருக்கடை வியாபாரிகள் பின்னால் தங்கள் கடைகளை விரிக்கத் தொடங்குவதைப் பார்க்க கவிதை வந்து என் பேனா முனையில் குந்தும்.
அடுத்த அத்தியாயம் காலை பத்து மணி தொடக்கம் மாலை சுமார் 3 மணி வரை.
காலைத் திரைப்படக்காட்சிக்கான பஸ்களில் வந்திறங்கும் கூட்டம்… உடுப்பு – நகைக் கடைகளுக்கு போவதற்கு வந்து இறங்குபவர்கள்… இத்தியாதி இத்தியாதி தேவைகளுக்கு வருபவர்கள்.
ராணித் தியேட்டரில் அடிமைப் பெண் எம்.ஜி.ஆரும்… பட்டிக்காடா பட்டணமா சிவாஜியும் வானுயர்ந்து நிற்பார்கள். ஒவ்வோர் இரசிகர் மன்றத்தின் கொடிகள் வேறு.
பின்னாளில் மினிவான்கள் கோலோச்சக் தொடங்கிய காலத்தில் அவர்கள் மக்களை கூவி அழைக்கும் அழகு.. ”அக்கா வாங்கோ… அண்ணா வாங்கோ… ஆச்சி வாங்கோ” பாசமழை பொழியும்.
கடைகளில் பக்திப்பாடல்களில் வீச்சு மெல்லிசைப் பாடல்களுக்கு மாறிக் கொண்டிருக்க மணிக்குரல் விளம்பர சேவையில் ஸ்பீக்கர்கள் அனைத்து பஸ் ஏறும் தரிப்பிடதினுள் ஒலிக்கத் தொடங்கும்.
மாலைப்படலம் இது மிகவும் ரம்மியமானது.
இரைதேடப் போனவை இரைமீட்க வீட்டுக்குப் போகும் ஆறுதலும் அமைதியும்.
காலையில் மட்டக்களப்பு பஸ்களின் கூரைகளில் தயிர் முட்டிகள் நிறைந்திருப்பது போல… ; மாலையில் முல்லைத்தீவுக் பக்கத்தால் வரும் வரும் பஸ்களின் கூரை முழுவதும் பாலைப்பழக்கூடைகளைச் சுற்றி காகங்களும் குருவிகளும் ஊர்வலம் வரும் அழகு யாழ்ப்பாண பஸ்ஸ்ராண்டிற்கு மேலும் அழகு சேர்க்கும்.
அதிகமானோர் கைகளில் அந்த அந்த சீசனுக்குரிய பழப்பைகள் இருக்கும். அல்லது மலையான் கபேயில் வீட்டுக்கு கட்டிக் கொண்டு போகும் பெரிய வடை – போண்டா – போளிப் பாசல்கள் இருக்கும்.
அனைத்தும் அழகே.
அடுத்த கட்டம் யாழ் பஸ்ஸ்டாண்ட் தூங்கச் செல்லும் நேரம்;.
இரவுக்காட்சி முடிந்து படபஸ் என்று சொல்லும் கடைசிபஸ் கிளம்ப பஸ்ஸ்டான்டும் தூங்கச் சென்று விடும்.
முதல் பஸ்ஸில் கடை திறக்க வந்த அதினமான கடைக்காரர் வீடு திரும்புவதும் இந்தப் படபஸ்ஸில் தான்.
சுமார் 18 மணித்தியால விழிப்பு… 6 மணித்தூக்கம்… மீண்டும் நகரம் விழித்துக் கொள்ளும்.
எல்லாப் பெரிய இதிகாசங்களிலும் சின்ன சின்னக் கிளைக்கதைகள் இருப்பது போல மகிழ்வு நிறைந்த பஸ் ஸ்டாண்டைச் சுற்றி சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும் கண்ணீர் தோய்ந்த பக்கங்களும் உண்டு.
யாழ்.நூலகமும் ஈழநாடும் பஸ்ஸ்டான்ற் கடைகளும் எரிந்த தினம் – யாழ்ப்பாணத்தினை மரணம் வந்து முத்தமிட்டுச் சென்ற நாள்.
கொள்ளிக்குடம் இன்றியே மரணவீடுகளாய் எங்கள் தெருக்கள் மாறிய நாள்.
எங்கள் நகருக்கு கறுப்பு மை பூசப்பட்ட நாள்.
’யாழ்ப்பாணம் எரிந்தநாள்’ – 24 மணி நேரத்துள்.
இத்தனையையும் தாண்டி என் பஸ்ஸ்டான்ட் என்றும் எனக்கு முதல் காதலிதான்.
சின்னக் கதைகள் காதுகளில் வந்து விழுவதுண்டும்.
பின்பும் சில சில சண்டித்தனங்கள்… சில சில தப்புத்தாளங்கள்… சில சில அஜோக்கியத்தனங்கள்… என சின்னக் கதைகள் காதுகளில் வந்து விழுவதுண்டு.
அங்கே போகத்தான் போறீர்களா என என் மனைவி நச்சரிப்பாள்.
அவள் கொழும்பு சினமன்கார்டின் பெண்.
அவளுக்கு என்ன தெரியும் என் யாழ்ப்பாண மண் வாசனை பற்றி.
அவளுக்குச் சொன்னேன்ää ”எங்குதான் தவறுகள் நடக்கவில்லை… எங்குதான் அநீதிகளும் அடக்கு முறைகளும் இல்லை… இதிகாசகாலங்களில் இருந்து இது எல்லாம் நடக்குதுகள்… ஆனால் கல்கி அவதாரத்திற்கு பிறகு அனைத்துமே அழிந்து போகும்”
”நீங்கள் வர வரச் சாமியாராய்ப் போய்க் கொண்டு இருக்கின்றியள்”
நான் சிரித்துக் கொண்டேன்.
ழூழூழூ
திட்டமிட்ட மாதிரி விமானப்பயணம்.
பின் கொழும்பில் இருந்து அதிகாலை இன்ரசிற்றியில் சுன்னாகம் போய் அங்கிருந்து அத்தாரின் காரில் தங்கை வீட்டையும் போயாயிற்று.
போய் வீட்டினுள் பைப் பூட்டி இருந்தாலும்… கிணற்றில் ஆசை தீர குளித்து விட்டு தங்கை செய்து வைத்திருந்த நண்டுக் கறியுடனும் கத்தரிக்காயுடனும் புழுங்கல் அரிசிச் சோறை சுவைத்துக் கொண்டு சொன்னேன்ää ”நாளைக் காலை நான் தனியே முதல் பஸ்சிலை யாழ்ப்பாணம் போறன். கடைசி பஸ்சிலை தான் வருவன்”.
தங்கச்சியும் அத்தாரும் மருமக்களும் அதிர்ந்து போனார்கள்.
”நீ வேண்டித்தந்த இந்தக் கார் வீட்டு முற்றத்திலை நிற்க நீ பஸ்ஸிலை ரவுணுக்கு போறீயா? அக்கம் பக்கம் என்ன நினைக்கும்”
சிரித்துக் கொண்டு என் விரும்பத்தை விளங்கப்படுததது அனைவரையும் சமாதானப்படுத்தினேன்.
ழூழூழூ
அடுத்த நாள் அதிகாலை – முதல் பஸ்.
கிட்டத் தட்ட என் 16 வயதுக்கே திரும்பி விட்டேன்.
என் மனதில் ஒட்டி இருந்த தண்ணீர்ப்படங்களை ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தேன்.
எல்லாமே கிட்டததட்ட அப்படியே தான்.
காலம் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்திருந்தாலும் அனைத்தும் அவ்வாறே தான்.
சக்கரை வியாதி இருந்தாலும் பஸ்ஸடான்ட் கடை முன்னே நின்று கிளாசில் சீனி போட்ட சூடான தேனீருடனும் பனிசுடனும் சிறிய கப்பல் வாழைப்பழத்துடனும் என் காலை ஆரம்பமாகியது.
மயிலிறகால் மனத்தை தடவியவு போல இருந்தது.
எனது யாழ்ப்பாண பஸ்ஸ்டாண்டை சுற்றிவர உள்ள றோட்டுகளை காதலியுடன் கைகோர்த்து செல்வது போல ரசித்து வந்தேன்.
நேரம் போனது தெரியவேயில்லை.
இரவு ஒன்பது மணியாகியது.
இனி பட பஸ்தான்.
பஸ்ஸ்டான்ற் அமைதியாக இருந்தது.
அதிக சனநடமாட்டம் இல்லை.
என் இரட்டை மகள்களின் வயதொத்த இரண்டு 16 வயதுப் பெண்கள் எனக்கு கிட்ட வந்தார்கள்.
”குட் ஈவினிங் அங்கிள்…
யூ மே ரேக் போத் ஒவ் அஸ்…
ஒன்லி தவுஸன்ட் பேர் கெட்…
போர் வன் அவர்…”
அதிர்ந்து போனேன்.
போதை வஸ்துக்கு அடிமையாகி இருக்கின்றார்கள்.
என் மகள்கள் முன்னால் நின்று அப்பா அப்பா என அழுவது போல் இருந்தது.
ஓடிச் சென்று ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு தங்கச்சி வீட்டுக்கு வந்து விட்டேன்.
படபஸ்சுக்கு காத்திருக்கவே இல்லை.
இது என் பஸ்ஸ்டான்டே இல்லை.
தோல்வியை மனம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் நிஜம்தான் உண்மை.
தண்ணீர்ப்படங்கள் நிஜங்கள் இல்லை என்பதை உணர எனக்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கு.