நிழல் வாழ்க்கை
வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது.
முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து வரும் நாய் போல பனியை காற்று வேகத்துடன் அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குள் அதிகமாக அடைந்து இருக்க நேரத்தைப் போக்குவதற்கு சின்னத்திரையும் பேஸ்புக்கும் வழி செய்து கொடுத்தது.
இவர் மடியில் ஐபாட்டை வைத்துக் கொண்டு சின்னத்திரையையும் பார்த்தபடி ஐபாட்டையும் சொறிஞ்சு சொறிஞ்சு கொண்டிருப்பார்.
சிலவேளை இந்த பேஸ்புக் என்ற ஒன்று வந்திராவிட்டால் இந்தப் பிரச்சனை இந்த நேரத்தில் இந்த ரூபத்தில் வந்திருக்கமாட்டாதே தவிர… இது ஏதோ ஒரு நாள் ஏதோ ஒரு ரூபத்தில் வரவேண்டிய ஒன்று தான்.
25 வருடங்களுக்கு முன்பு திருமணம் பேசிவந்த பொழுது கேள்விப்பட்ட விசயம் தான்.
”பொடியனுக்கு கம்பஸில் ஒரு உலாச்சல் இருந்தது. பிறகு பெட்டைக்கு வேறை இடத்தில் செய்து கொடுத்திட்டினம். அந்தப் பெடிச்சியும் கண்டியோ ஹற்றனோ…புருஷன்காரன் பள்ளிக்கூடத்திலை படிப்பீக்கிறபடியாலை அவனோடையே போட்டுது. இப்ப ஒரு தொடசலும் இல்லை”
அந்த நாளில் இதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ரியூசனுக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் பொடியள்; பண்ணாத சேட்டைகளும் கிண்டல்களும் இல்லை. தபால்கார சின்னராசுவின் மகன்…. சந்தையில் வரிபோடும் கனகுவின் மகன்…. பெரிய வாத்தியாரின் மகன் போன்றவர்கள் என்மீது கொண்ட ஈர்ப்பு போன்றதொன்றே இதுவும் என நினைத்திருந்தேன்.
இவர்களில் யாராவது ஒருவரில் எனக்கும் ஒரு ஈர்ப்பு இருந்திருந்தால் ”பொடியனுக்கு கம்பஸ்சில் ஒரு உலாச்சல் இருந்தது”என்ற வார்த்தைக்குள் இருந்த ’உலாச்சல்’என்ற சொல்லின் கனதி எனக்கு விளங்கியிருக்கும்.
அப்பா அம்மாவே கவலைப்படாத பொழுது நானும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
பெண் கேட்டு வந்த பொழுது புரோக்கர் எங்களுக்கு தந்த அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக இருந்தார்;.
நன்கு வாரியிழுக்கப்பட்ட சுருள் முடி, இரண்டு கண் இமைகளுக்கும் இடையில் சிறியதான ஒரு விபூதிக்குறி, கட்டம் போட்ட சேட், கையில் தொங்கும் மணிக்கூடு, பாதத்தடியில் அகன்ற பெல்பொட்டம் ரவுசர், மிகவும் மொத்தமான பெல்ட்.
எந்தப் பெண்தான் இவரை மாட்டன் என்று சொல்வார்கள்.
பெண் பார்த்து என்னை அவர்கள் வீட்டார் ’ஆம்’சொல்லி திருமணம் வரை அந்தப் படத்தை எத்தனை தடவை நேராக எல்லோர் முன் சில தடவைகளும் களவாக பல தடவைகளும் பார்த்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
பின் கதைப்புத்தகத்துள்…தலையணைக்கடியில்…வாழைத்தோட்டத்துள்…கொய்யா மரக்கிளையில்…மாமர ஊஞ்சலில்…கிணற்றுக் கட்டில்…அவரின் படத்தைப் பார்த்தபடியே இருப்பேன்.
ஒரு நாள் கிணற்றுக் கட்டிலில் இருந்து ’கிளுக்’கென்று சிரித்த பொழுது அம்மா செல்லமாக கண்டித்தாள்,”உன்னை மந்திகை ஆஸ்பத்திரியில் வைத்துதான் வைத்தியம் பார்க்க வேண்டி வரும் என்று”.
”அதெல்லாம் நீ பார்க்க வேண்டாம். அவர் பார்ப்பார்”என்ற பொழுது அம்மா தனக்குள் மகிழ்ந்து சிரித்தபடி தண்ணீர் வாளியைச் சுமந்து கொண்டு என்னைத் தாண்டிச் சென்றது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.
நல்ல காலம் –அம்மா சரி அப்பா சரி இப்போது உயிருடன் இல்லை.
இவர் வீட்டுக்கு சரி…இவருக்குச் சரி சீர்சிறப்பு என்று எந்தவிடத்தும் குறைவிடாது தாங்களும் ஆசைப்பட்டபடி அப்பா அம்மா திருமணத்தை வெகுசிறப்பாகச் செய்து வைத்தார்கள்.
நான் ஆசைப்படி அவர் படம் எடுத்த அதே ஸ்ரூடியோவில் என் பக்கத்தில் அவர் நின்றிருக்க…அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருக்க படம் பிடித்து எங்கள் வீட்டு ஹோலில் மாட்டியிருந்தோம்.
அவர் கோட் சூட்டுடனும் நான் கூறைச்சேலையுடனும் கறுப்பு வெள்ளைப் படத்தில் இருவரும் அழகாகத்தான் இருந்தோம்.
திருமணமான பின்பு வாழ்க்கை நன்றாகவேதான் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனாலும் சுவையான ஒரு சாப்பாட்டில் ஓதோ ஒரு இடத்தில் ஏதோவொன்று போதாது போல் தோன்றும். ஆனால் எதுவென்று தெரியாது போலிருக்கும். அது உப்பா, புளியா, உறைப்பா, உவர்ப்பா, இனிப்பா எது தேவைப்படுகிறது என்று தெரிந்தால் அதைப் போட்டு அதன் சுவையை இன்னும் நிறைவாக்கலாம். ஆனால் எது தேவை என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு குறை இருக்கின்றது என்று புரியும். அவ்வாறுதான் எங்கள் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்தது.
திருமணமான மூன்றாவது வருடம்தான் சுமி பிறந்தாள்.
எங்கள் இருவரின் கவனம் முழுக்க சுமியிலேயே திரும்பியிருந்தது.
கணவனாக அவர் எனக்கும்…மனைவியாக நான் அவர்க்கும் எந்தக் குறையும் இல்லாது வாழ்வை ஓட்டிக்கொண்டு இருந்தோம்;. ஆனால் அந்தக் கீறிட்ட ஒரு இடத்தை மட்டும் என்னால் நிரப்ப முடியாமல் இருந்தது. நிரப்ப முடியாது என்பதனை விட அது எது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருநதேன்;.
வேலை நாட்களில் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் விடுமுறை நாட்களில் எங்களுடன்தான் இருப்பார். ஆனால் எங்களுடன் அவர் இல்லாதது போல இருக்கும்.
சுமிக்கு மூன்று வயதிருக்கும்.
ஒரு வெள்ளிக் கிழமை. சன்னதி முருகனின் பூஜை முடிய…. அன்னதான மடத்தில் மதிய சாப்பாடும் உண்ட பின்பு கடற்கரையுடன் ஒட்டியிருந்த தென்னந்தோப்பு மணலில் அமர்ந்திருந்தோம்;. சுமியுடன் சேர்ந்து மணல் வீடு கட்டிக் கொண்டிருந்த பொழுது விளையாட்டாகவே ”உங்களுக்கு ஒரு உலாச்சல் இருந்ததாமே”என்று கேட்டேன்.
அவரின் முகம் இருண்டு கொண்டு வந்ததைப் பார்க்கப் பயமாய் இருந்தது.
திடீரெனக் கருமேகங்கள் கூடி மழை கொட்டுவதைப் போல் அவர் தேம்பி தேம்பி அழத்தொடங்கி விட்டார்.
பக்கத்தே எழுந்தோடிப் போய் அவரை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன்.
தேம்பி தேம்பி அழுதார்.
சுமி பயந்தது போல நின்றிருந்தாள்.
அவளையும் இழுத்து மடியில் இருத்திக் கொண்டேன்.
நேரம் செல்ல செல்ல அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
அவள் நினைவுடனேயே அவர் அந்த 3 வருடங்களும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நன்றாகப் புரிந்தது.
ஆனால் நினைவுகளில் இருந்து மீள முடியாது என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.
சாப்பாட்டில் எது குறைந்திருந்தது என்பதற்கு எனக்கு விடை தெரிந்திருந்தாலும் அதனைப் போட்டு நிரப்பும் நிலைமையில் நான் இருக்கவில்லை.
அவரும் இருக்கவில்லை.
ஆனால் எங்கிருந்து அப்படி ஒரு துணிவு எனக்கு வந்ததோ தெரியாது.
ஓன்று மட்டும் சொன்னேன்.
”அந்தப் பொம்பிளை ஏதோ ஒரு நாள் உங்களைத் தேடி வந்தால் நீங்கள் என்னை விட்டுட்டுப் போங்கோ. நான் தடுக்க மாட்டேன். சுமியை நான் பார்த்துக் கொள்வேன்”
அவர் இல்லை எனத் தலையாட்டினார்.
மனச்சாட்சி தடுத்திருக்க வேண்டும்.
அல்லது என்னில் பச்சாதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
மாலையில் சூரியனின் வெப்பம் தணிய அடர் மௌனத்துடன் வீடு திரும்பினோம்.
*
வாழ்க்கை மீண்டும் தனது கதியில் இயங்கத் தொடங்கியது.
இலங்கையில் நடந்த வெவ்வேறு கலவரங்கள் இலங்கையருக்கு ஐரோப்பா கதவைத் திறந்து விட்டிருந்ததால் அதுவே நாங்களும் டென்மார்க்கிற்கு வரக் காரணமாயிருந்தது.
டென்மார்க் வருகை அவரில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒரு வகையில் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பு இருந்தாலும் அந்த காதல் தோல்வியில் இருந்து அவரால் விடுபடாமல் இருந்திருக்கிறார் என்ற நான் அடிக்கடி புரிந்து கொள்வேன். அவ்வாறான தினங்களில் மட்டும் வாழ்க்கை நரகமாக இருக்கும்.
ஆனால் அடுத்த நாள் எல்லாம் மறந்து வாழ்க்கை ஓடத் தொடங்கி விடும்.
இந்த தடையோட்டத்தால்; எங்கள் இருவரின் வாழ்க்கை பாம்பும் ஏணியும் போல நகர்ந்து கொண்டிருந்தாலும் சுமியின் நீண்டகாலக் கல்வி… காத்திருந்த தொழில்… விரும்பிய திருமணம் என்பவை எந்தப் பாம்பின் வாயிலும் அகப்படாது ஏறுமுகமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன.
என்னைப் போல் இல்லாது… அவளை சுயமாக அவளது சொந்தக் காலில் நி;ற்க வைத்த பின்பே அவளுக்கு கல்யாணம் என்ற ஒன்று அமைய வேண்டும் என்ற விருப்பத்தை அவள் பூர்த்தி செய்தது எனக்கு மிகப் பெரிய பெருமையாய் இருந்தது.
ஆனால் சுமிக்கு மகள் பிறந்து துடக்குக் கழிவு செய்து அடுத்த மாதம் தான்; பாம்பின் வாய்வழியே பாதாளத்தில் விழுந்தது போல உணர்ந்தேன்.
அவர் முற்றாக தன்னில் இருந்து தான் விலகி விலகிப் Nபுhய்க் கொண்டிருப்பதை அவதானித்தேன்.
துடக்க கழிவுவரை எங்கள் வீட்டில் இருந்த சுமியும் பேத்தியும் தங்கள் வீட்டை போய் விட்டார்கள் என்ற கவலையில் இருக்கிறார் என்றுதான் நானும் நினைத்தேன்.
ஆனால் சுமி இங்கிருந்த பொழுதே ஏதோவொரு தேடலில் முகநூலில் அவளைச் சந்தித்திருக்கிறார்.
வெள்ளைச் சேலையில் இரண்டு வளர்ந்த மகன்களுடன்.
தனித்து தனித்து முகநூலினுள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டிருந்த அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவராகவேதான் எனக்குச் சொன்னார்.
”எனக்கு ஆளை ஒருக்கா காட்டுங்கோ”
காட்டினார்.
வெள்ளைச் சேலையிலும் வெற்று நெற்றியுடனும் அழகாகத்தானிருந்தாள்.
எதையும் நான் யோசிக்கவில்லை. துணிவாகக் கேட்டேன்.
”அவளோடை போய் வாழப் போறியளா?”
”என்னை நிமிர்ந்து பார்த்தார்”
பின்பு மௌனமாக இருந்தார்.
”உனக்கு இங்கை கிடைக்கிற பென்சன் வாழ்க்கை முழுக்த யாரிட்டையும் கை நீட்டாமல் வாழப் போதும். துணைக்கு சுமி இருக்கிறாள். பேரப்பிள்ளை இருக்குது. மருமகன் இருக்கிறார்…..”
அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்தாலும் மௌனமாகவே இருந்தேன்.
“இங்கை கிடைக்கிற என்ரை பென்சனைனோடை ஊரிலை போயிருந்தால் அது அவளுக்கும் உதவியாய் இருக்கும். அவளின்டை பிள்ளைகளுக்கும் உதவியாய் இருக்கும்”
இங்கிருந்து தன் பென்சன்காசை அவளுக்கு அனுப்பப் போகின்றன் என்றால் மகிழ்ச்சியாக என்னுடையதையும் சேர்த்து மாதாமாதம் அனுப்பச் சம்மதித்திருப்பன்.
ஆனால் அவர் இப்படி ஒன்றைச் சொல்வார் என எதிர்பார்க்கவேயில்லை.
நான் எதுவும் பேசவில்லை.
சுமிக்கு மூன்று வயதாகிய பொழுது சன்னதி மணலில் வைத்து நான் சொன்னதை மனதில் வைத்து அப்படிச் சொன்னாரோ தெரியாது.
சொன்ன வார்த்தைகள் நியமாகி வாசற்கதவைத் தட்டிய பொழுது மனதைத் திறக்கவோ, “போய் வாங்கோ”என வழியனுப்பவோ கஷ்டமாய் இருந்தது.
இல்லையில்லை…முடியாதிருந்தது.
சுமிக்கு தொலைபேசி எடுத்துச் சொன்னேன்.
அடுத்தநாள் தான் வருவதாகச் சொன்னாள்.
*
அடுத்தநாள் மதியம் போல் பேத்தியுடன் தனியே வந்திருந்தாள்.
புத்திசாலித் தனமாய் மருமகனைத் தவிர்த்து விட்டு அவள் தனியே வந்திருந்தாள்.
சிறிது நேரம் எவரும் பேசாது மௌனமாய் இருந்தோம்.
பேத்தி என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“அப்பா”என சுமி தொடங்க, “பேத்தி எழும்பி விடுவாள் இப்போது பேசாதே”, என சுமிக்கு; சைகைகாட்டி விட்டு பேத்தியை எங்கள் அறைக்கு எடுத்துச் சென்றேன்.
பேத்தி என்னைப் போலவே இருந்தாள்.
திரும்பி வர தகப்பனும் மகளும் எதுவும் பேசாது மௌனமாக இருந்து கொண்டிருந்தார்கள்.
தொலைக்காட்சியில் காரசாரமான விவாதம் போய்க் கொண்டிருந்தது.
டென்மார்க்கில் வாழும் ஒரு கறுப்பின இளம் முஸ்லீம் பெண்.
இருபது வயதிருக்கும்.
பெற்றோர்கள் அவளை டென்மார்க்கில் இருந்து ஆபிரிக்க கலாச்சாரம் கற்பிக்கவென்று தங்கள் தாய்நாடான சூடானுக்கு அனுப்பியிருக்கின்றார்கள்.
அங்கு அவளுக்கு வலுக்கட்டாயமாக பெண்ணுறுப்பில் உணர்ச்சியைத் தூண்டும் கந்து பகுதியை (clitoris) சிதைவு செய்ய முயன்றிருக்கின்றார்கள். அதுவும் மதம் என்ற பெயரில் – நாலைந்து பெண்கள். உடல் சுகத்திற்காக ஒரு பெண் ஒரு ஆடவனைத் தேடிப் போகக்கூடாது என்பதற்காகவும் பெண்ணுறுப்பு என்பது குழந்தை பெற்றுக் கொடுக்க மட்டுமே அவர்கள் கோட்பாடு. ஆனால் ஆண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் அங்கு இருந்ததில்லை. பல மனைவிகளை வைத்திருக்க மதமஇ வழிவிட்டிருந்தது.
அவள் அவர்களை அடித்து விட்டு எப்படியோ தப்பி மீண்டும் டென்மார்க்கிற்கு வந்து விட்டாள்.
அந்த அடி அங்கிருந்த நாலு பேருக்கு விழுந்த அடியில்லை.
உலகம் முழுவதையும் அவர்களின் கலாச்சாரத்தை…அல்லது கலாச்சாரமஇ என்ற பெயரில் நடக்கும் காடுடுமிராண்டித் தனத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.
மொத்த டென்மார்க்கே தொலைக்காட்சியில் ஒத்த குரலில் சொன்னது “உங்களுக்கு உங்கள் கலாச்சாரம் வேண்டுமென்றால் அங்கு போய் அங்கேயே இருந்து எதையென்றாலும் செய்யுங்கள். இங்கு பணத்திற்காக தங்கி இருந்து கொண்டு அங்கு வேறு ஒரு வாழ்க்கை வாழாதீர்கள்”என்று.
பாடசாலை மாணவ மாணவிகள்…. சட்ட வல்லுனர்கள்…. அரசியல்வாதிகள்…அனைவரும் மீண்டும் மீண்டும் சொன்னது, “இங்கு உங்களுக்கு தரும் பணம் கலாசசாரம் என்ற பெயரிலை காட்டுமிராண்டித் தனத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல”.
சுமி என்னையும் இவரையும் திருப்பி பார்த்தாள்.
பின் கொஞ்சம் கடினமான குரலில், “அப்பா இப்ப நீங்களும் இதைத்தான் செய்ய யோசிக்கிறியள்…அம்மாக்கு துரோகம் செய்து போட்டு…என்றோ எங்கேயோ உங்களை விட்டுட்டுப் போன ஒருத்தியோடை வாழ இந்த நாட்டுக் காசை மாதாமாதம் எடுத்துக் கொண்டு அம்மாவை விட்டுட்டுப் போறன் என்கிறியள்.”
சுமியை நிமிர்ந்து பார்த்தன்.
“அப்பா ஒன்று மட்டும் தெரிஞ்சு கொள்ளுங்கோ. என்றைக்கோ ஒருநாள் உங்களுக்கு இருந்த காவ் லவ் (calf love)……அல்லது இபெக்குவேஷன் (infatution) காரணமாக அம்மாவை இவ்வளவு நாளும் ஏதோ ஒரு வகையிலை தண்டிச்சுப் போட்டியள். முடிந்தால் நீங்களும் அவளும் கல்யாணம் செய்திருக்க வேணும். அல்லது அம்மாவைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருக்க வேணும். நீங்களோ அம்மாவோடை வாழ்ந்திருக்கிறயள். ஆனால் உண்மையாய் வாழ்ந்திருக்கேல்லை. அதாலைதான் இப்ப அம்மாவை விட்டிட்டு போக யோசிக்கிறியள் ”
“சுமி”என அவளை ஆசுவாசப்படுத்தப் பார்த்தன்
“கொஞ்சம் பொறுங்கோ…உங்களுக்கு அம்மாவும் நானும் என் பேத்தியும் வேண்டாம் எண்டு விட்டு நீங்கள் போகலாம். நானும் அம்மாவும் கூட உங்களை தூக்கி எறிந்து விட்டு வாழலாம். ஆனால் என்ரை பேத்திக்கு நீங்கள் வேணும். அவரிட அப்பாவை என்ரை பிள்ளைக்கு அப்பப்பா என்று காட்டும் பொழுது இதுதான் அம்மப்பா எனக் காட்ட அவளுக்கு ஒரு அம்மப்பா வேண்டும். ஸ்கைப்பிலை வாங்கோ எண்டு சொல்லிப் போட்டு அவளுக்கு நீங்கள் கை காட்டிக் கொண்டு இருக்கிற வாழ்க்கை வேண்டாம். நாளைக்கு அவளுக்கு ஒரு நல்லது கெட்டது நடக்கேக்கை கூட இன்னார்ரை பேத்தி எண்டதும் தானே சேர்ந்து வரும்”.
இது என் சுமியா என எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“இதையும் தாண்டிப் போறதெண்டால் ரி.வியிலை சொன்ன மாதிரி இந்த நாட்டிலை இருந்து ஒரு துளியையும் எடுக்காமால் போய் அங்கை இருக்கிற காணியைப் பூமியை தொத்திக் கிளறிக் கொண்டு அங்கை இருக்கிறவையோடை வாழுங்கோ. செத்த பிறகு கூட இன்னாரின் அன்புக் கணவரும் இன்னாரின் ஆருயிர் தகப்பனாரும் இன்னாரின் பேரனும் என்று போடவேண்டாம் என்று அங்கையிருக்கிறவைக்கும் சொல்லி வையுங்கோ. அம்மா இன்றுவரை வாழ்ந்தும் வாழவெட்டி போலைத் தான் வாழ்ந்திருக்கிறா. அவாவை நான் பார்ப்பன்”
அவரின் முகம் மாறிக்கொண்டிருந்தது.
அடுத்த கணம் அது தன் கட்டுடைத்தது.
பலமாக அழத் தொடங்கினார் – சன்னதி மணலில் இருந்து அழுதது போல.
ஓடிப் போய் அவரை அரணவனைத்துக் கொண்டேன்.
சுமி தன் படபடப்புக் குறையாமல் சொன்னாள்.
“நீ உன்ரை குழந்தையைத் தாலாட்டு. நான் என்ரை குழந்தை நித்திரையெண்டாலும் தூக்கி கொண்டு போறன். இனி நான் இங்கை வாறாது எண்டால் சரி…இவரை அப்பா என்று சொல்லுறது எண்டால் சரி…இவரின் பேஸ்புக் எக்கவுண்டிலை அவள் இருக்க கூடாது.
நீயும் மாதவியிட்டை போன கோவலன் திரும்பி வருவார் வருவார் எண்டு இந்த இருபத்தைந்து வருசம் காத்திருந்தது போல காத்திருக்க வேண்டாம். அவள் இல்லாத இவரோடை வாழுறது எண்டால் வாழ். இல்லாட்டை என்னோடை வந்திரு. இல்லாட்டி ஆயிரம் முதியோர் இல்லம் இருக்கு. அங்கை போயிரு. நீயும் சரி…அவரும் சரி…தியாயங்கள் செய்கிறம் இது செய்கிறம் என்று சொல்லிக் கொண்டு பொய் வாழ்க்கை வாழாதையுங்கோ.
அங்கை இருக்கிறவளுக்கு அங்கை வாழத் தெரியும். அவளுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம் – இஞ்சை ஒரு மனுசிக்கு துரோகம் செய்கிறம் எண்டு…. ஒரு கட்டுப்பாடு இல்லை…தார்மீகம் இ;ல்லை…. 24 மணித்தியாலமும் அதைச் சுரண்டி சுரண்டி…பச்சையாய் சொன்னால் இதுவும் ஒரு விபச்சாரம் – முகமூடி போட்ட விபச்சாரம்!”சுமியின் குரல் உத்தஸ்தாயியைத் தொட்டது.
குழந்தை அழ அழ குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே போனாள்.
சுமியை நினைக்கப் பெருமையாய் இருந்தது.
இவரை நினைக்கப் பாவமாய் இருந்தது.