தெத்தெரி… தெத்தெரி – சிறுகதை

By | 27. august 2021

“தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி…
தெரி… தெரி… தெரியேல்லை…
தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி…
தெரி… தெரி… தெரியேல்லை…” ’

தெத்தெரிக் குருடன்’ டென்மார்க்கிற்கு வந்தது போல இருந்தது.

சிவமணி திடுக்கிட்டு எழுந்தார்.

பகல்நேரத் தூக்கத்தில் இருந்து எழும்பிய திகைப்பில் தெத்தெரிக் குருடனும் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதி முகாமுக்கு வந்து விட்டானோ என்றும்… எப்படி வந்தான் என்ற வியப்புடனும்; சுற்றும் முற்றும் பார்த்தார்.

அவனைக் காணவில்லை.

சிவமணியின் கனவுக்கும் பிரமைக்கும் இடையில் அவன் நின்றிருந்தான்.

அவரின் முகம் கைகால்கள் எல்லாம் வியர்ந்திருந்தன.

சேலைத் தலைப்பால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

தனது மன உளைச்சலைப் பகிர்ந்து கொள்ள அவளது கணவன் இராசநாயகமோ மகன் பாலனோ அறையில் இல்லை.

இராசநாயத்தார் பக்கத்து அறையில் இருந்த மற்ற இலங்கை ஆட்களுடன் சீட்டு விளையாடப் போயிருந்தார்.

பாலன் தன் வயதொத்த இளைஞர்களுடன் வலைப்பந்து விளையாடப் போயிருந்தான்.

தெத்தெரிக் குருடனை யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரியாதவர்களே இல்லை.

யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தாண்டி பரந்தன் கிளிநொச்சி விசுவமடு முள்ளிவாய்க்கால்வரை அனைவரும் அவனை அறிந்திருந்தார்கள்.

அவனின் நதிமூலம் ரிஷிமூலம் எதுவும் யாருக்கும் தெரியாது.பிறப்பிலேயே குருடனான அவனின் கண்கள் திறந்திருப்பது போலவே இருக்கும்.எனவே அனைவரும் அவனுக்கு கண்தெரிகிறது என்று சொல்லும் பொழுது “தெரியேல்லை… தெரியேல்லை…” எனச் சொல்லத் தொடங்கி அவனாகவே “தெத்தெரி… தெத்தெரி… தெரியேல்லை” எனச் சொல்லவும் அவனின் பெயரும் ’தெத்தெரி’ ஆகிவிட்டது.

அவன் தன் தலையை ஆட்டி ஆட்டி அவ்வாறு சொல்லியதாலோ என்னவோ அவனுக்கு தலையாட்டும் பழக்கமும் வந்து விட்டது.தேனீர் குடிக்கும் பொழுதும் சரி… சாப்பிடும் பொழுதும் சரி… தலையை ஆட்டிக் கொண்டே இருப்பான். தலை போகும் திசையை நோக்கி தேத்தண்ணிக் கோப்பை போகும். அல்லது வாயை நோக்கி சாப்பாடு போகும். சில இடங்களில் தலையாட்டித் தெத்தெரி என்றும் அழைப்பார்கள்.

அவன் என்றும் சேட்டோ பனியனோ அணிந்து யாரும் கண்டதில்லை.இடுப்பிற்கும் முழங்காலுக்கும் இடையே ஒரு சாரத்தை அணிந்திருப்பான் – தனது நடைக்கு இடைஞ்சல் இல்லாதவாறு. சாதாராண சாரம் அவனுக்கு இரண்டு சாரங்களாக பிரித்துப் பாவிக்க முடியும்;. அவனின் சாரங்களுக்கு நடுவில் இணைப்பு இராது. நாலு முழ வேட்டியைக் கட்டிக் கொள்ளுவது போல கட்டிக் கொள்வான். இடுப்பில் தங்கி நிற்பதற்காக ஒரு முடிச்சு ஒன்றைப் போட்டிருப்பான். பொதுவாக அந்த முடிச்சினுள் அவன் ஏதாவது காசை முடிந்து வைத்திருக்கின்றான் என நினைப்பார்கள். ஆனால் அப்படி அல்ல. அவனின் சாராத்தை யாராவது தோய்த்துக் கொடுக்க உதவி செய்யும் பொழுதும் அந்த முடிச்சைக் கழற்றி விட வேண்டாம் என கேட்டுக் கொள்வான்.

சில சிறுவர்கள் அவனது கண்ணுக்கு நேரே டோர்ச் லைற்றை அடித்தால் ஏதோ ஒரு கூச்ச உணர்வால் இன்னமும் தலையாட்டுவான்.“அப்போ உனக்கு கண்ணு தெரிகிறது” என்று சிறுவர்கள் பரிகாசம் செய்தால் தனது ஊன்றுகோலை சுற்றி அவர்களைக் கலைப்பான்.

அவன் செல்லும் ஊர்களில் எல்லாம் அவனுக்கு ஆதரவு கொடுக்க சுமார் பத்து பன்னிரண்டு வீடுகள் இருந்தன. இவ்வாறு 5-6 ஊர்களில் மொத்தம் ஐம்பதில் இருந்து அறுபது வீடுகள் அவனுக்கு உறவுகளாகும். ஒவ்வோர் ஊர்களிலும் அவனுக்கான தேனீர் குவளையோ அல்லது பாவித்த பால் ரின்னோ அத்துடன் எனாமல் கழன்று போன சாப்பாட்டுக் கோப்பையோ அவர் அவர்கள் வீட்டு தாழ்வாரங்களில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும்.காலைத்தேனீருக்கு… காலைச்சாப்பாட்டுக்கு… மதிய சாப்பாட்டுக்கு… மாலைத்தேனீருக்கு… இரவுச் சாப்பாட்டுக்கும் நித்திரைக்கும் என ஒவ்வோர் ஊரிலும் உள்ள அந்த பத்துப் பன்னிரண்டு வீடுகளையும் தானே பிரித்து வைத்துக் கொள்வான்.அவர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காகச் சிலவேளை இரண்டு மூன்று வீடுகளில் காலைத்தேனீர் வாங்கிக் குடிப்பான். அவ்வாறே மாலைத் தேனீரும். சிலவேளைகளில் காலைச்சாப்பாட்டு கூட இரண்டு வீடுகளில் அமைந்து விடுவதுண்டு.

அவ்வகையில் கொக்குவிலில் இரவுச் சாப்பாட்டுக்கும் இரவுத்தூக்கத்திற்கும் இராசநாயகம் –
சிவமணிவீடு.

வெள்ளிக்கிழமைகளில் அல்லது திருவிழாக்காலங்களில் மாமிச உணவுகள் கிடைக்காத வீட்டுக்காரரை “சாமியார் வீடுகள்” என பரிகாசம் பண்ணுவான்.

அவ்வாறாக மரக்கறி மற்றவர்கள் மரக்கறி சமைக்கும் நாட்களில் கிறிஸ்தவ வீடுகளைத் தேடிச்செல்வான்.

அவனுக்கு யாராவது ரோஷம் வருமாறு அவனது குருட்டுத்தன்மையைப் பற்றி அல்லது ஏழ்மையைப் பற்றி பேசிவிட்டால் பி;ன்பு அவர்கள் வீட்டுக்குப் பேகமாட்டான். அவ்வளவு ரோசக்காரன் அவன்.

முதலில் சென்ற ஊர்களில் பிச்சை எடுத்த காசை பாலனிடம் கொடுத்து எண்ணி வாங்குவான். அல்லது பாலனையே கவனமாக வைத்துக் கொள்ளும்படி கொடுப்பான்.

பாலன் இராசநாயம் சிவமணியின் ஒரே மகன். 16 வயதை எட்டிக் கொண்டு இருந்தான். எல்N;லாரையும் நம்பி அவன் தனது காசுப் பேணியை யாரிடமும் கொடுக்கமாட்டான். தெத்தரிக்கு ஊருக்கு ஒரு சேமிப்பு வங்கி. இங்கு அது இராசநாயகத்தார் வீடு. முகாமையாளர் பாலன்.

கொக்குவிலில் தங்கியிருக்கும் இரண்டு கிழமையில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் பாலனைக் கொண்டு 200 மில்லி சாராயம் வாங்கிக் குடித்து விட்டு உரத்த குரலில் பாடுவான்.”பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்புண்ணியம் மின்றி விலங்குகள் போல்”, என்ற பாடலை அபசுரத்தில் பாடுவான்.”சங்கீத வித்துவான் இனிப்பாட்டை நிற்பாட்டுங்கோ” என சிவமணிஅவனைப் பரிகாசம் செய்வார்.அதேவேளை பாலனை சாராயக்கடைக்கு அனுப்பியதற்காக தங்கம்மாவிடம் நல்ல திட்டும் வாங்குவான்.அவ்வாறே தனக்குப் பிடித்த மாட்டிறச்சி கால் கிலோவை வாங்கி பாலனைக் கொண்டு வீட்டின் வெளிவளவுக்குள் கல்லு அடுப்பு வைத்து சமைப்பித்தும் உண்பான். மாட்டிறைச்சியை எல்லாம் சிவமணி அம்மையாரின் குசினி உள்ளே அனுமதியாது. அப்பிடி ஒரு சாதிப்பிரதிஷ்டம்… அல்லது சைவப்பிரதிஷ்டம்.

பாலனே அன்று அவனுக்கு தலையில் குளிக்க வார்த்து அவனது ஊத்தைச் சாரங்களையும் துவைத்துக் கொடுப்பான். அதற்காக சிவமணியிடம் வேறு பாலன் ஏச்சு வேண்ட வேண்டி வரும். மற்ற மற்ற ஊர்க்களில்; அவன் கிணற்றடியில் தன் கச்சையுடன் குந்தியிருந்து தனது சரத்தை கும்மி கும்மி தோய்க்கும் பொழுதும் தலையில் அள்ளி ஊர்த்தும் தண்ணீரிலேயே அவன் சரத்தைத் தோய்ப்பான். சில வேளை வீட்டுக்காரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒரு சவர்க்காரத் துண்டில் சிறிய துண்டை வெட்டி அவனுக்குக் கொடுப்பார்கள். அல்லது கிட்டத்தட்ட முற்று முழுதாக தேய்ந்து போன சவர்க்காரக் கட்டியை கொடுப்பார்கள்.

அவன் பாலனிடம் நெடுகச் சொல்வது ஒன்றுதான். “மற்ற மற்ற இடத்தில் உள்ள என்ரை காசு எல்லாத்தையும் விசுவமடு விதானையார் வீட்டைதான் குடுத்து வைச்சிருக்கிறன். நான் செத்தால் நீ தான் வந்து என்னை அடக்கம் செய்ய வேண்டும். அதுக்குப் பிறகு இருக்கிற எல்லாக் காசுக்கும் சந்நதி கோவிலில் இருக்கிற பிச்சைக்காரருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்”

அவ்வளவு பாசமும், அன்பும், நம்பிக்கையும் பாலனில் அவனுக்கிருந்தது.அவன் ஒவ்வோர் வீடாகத் திரியும் பொழுது அவன் அங்கு இருக்கின்றான் என்பதை மறந்து அந்த வீட்டுக்காரர் ஏதாவது குடும்பக் கதைகள் கதைத்து விட்டால் அவன் ஊரெல்லாம் பரப்பி விடுவான். அவனுக்கு கண் தெரியாது என்று தெரிந்த மக்கள் அவனுக்கு காது கேட்கும் என்பதனை மறந்து விடுவார்கள்.பின்பு எல்லாரிடமும் நல்ல ஏச்சும் திட்டும் வாங்குவான்.பல வீடுகளின் நதிமூலம் ரிஷி மூலம் இவன் மூலமே வெளிக் கசிந்து விடுவது உண்டு – பள்ளி செல்லும் பழைய சேர்மனின் கடைசிப் பெண்ணின் வயிற்றை வீட்டில் வைத்து சின்னத்தாயி மருத்துவிச்சி கலைத்த விடயம் ஊருக்கு தெரிய வந்து அந்த பெண் தற்கொலை செய்தது ஊரறிந்த விடயம் ஆயிற்று. அன்றிலிந்து பழைய சேர்மன் வீட்டார் இவனை அங்கு சேர்ப்பதில்லை.

இராசநாயகம் குடும்பம் டென்மார்க் வருவதற்காக மலேசியா சென்று அங்கிருந்து டென்மார்க் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்த அந்தக் கிழமை இவன் அங்கு முற்றத்தில் இருந்து தன்பாட்டில் தலையையும் ஆட்டிக் கொண்டும் சிவமணி கொடுத்த முறுக்கை ஒரு பக்க வாயால் கொறித்துக் கொண்டும் இருந்த பொழுது, இவன் அங்கு இருக்கின்றான் என்பதனை மறந்து மலேசியா ஊடாக டென்மார்க்கிற்கு பயணம் செய்யவுள்ள பயணக் கதையைக் கதைத்து விட்டார்கள்.

அன்று நடுநிசி இருக்கும்.தூரத்தில் நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.தெத்தரி முணங்கி முணங்கி அழுது கொண்டிருந்தது போல இருந்திருக்கின்றது.இதுவரையும் அவன் அழுது யாரும் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை.

அவனின் இருபது வயதுப் பராயத்தில் சாவகச்சேரிச் சந்தையில் இவனுடன் தன்னை இணைத்தும் இணையாமலும் இருந்த கமலி என்ற ஒரு குருட்டுப் பெண்ணுடன் இவனுக்கு ஏற்பட்ட தொடர்பும்…. பின்பொரு நடுநிசியில் நாலைந்து குடிகாரர் அவளை வாய் பொத்தி தூக்கிச் சென்று ரயில்வே தண்டவாளத்தில் சீரழித்ததும்… அந்த வேதனையில் அடுத்த நாள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த மெயில் வண்டி முன் அவள் பாய்ந்து தற்கொலை செய்த போதும் அவன் அழவேயில்லை. சந்தையில் வரி போடும் கனகரம்மான் அவனை கைத்தாங்கலாக பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் அவளின் இறந்த உடலை தொட்டுப் பார்த்ததுடன் அவனது காதல் வாழ்வு முடிந்து விட்டது.

அப்போது கூட அழாத இவன் அழுது முணுகிய போது அவனுக்கு அடுத்த விறாந்தையில் படுத்திருந்த பாலன் அவனைத் தட்டி எழுப்பி, “தெத்தரி உனக்கேதும் காச்சாலா?” எனக் கேட்க முதல் பாலனைக் கட்டிப் பிடித்தபடி அழத்தொடங்கி விட்டான். எல்லோரும் நித்திரையில் இருந்து திகைத்து எழுந்து ஓடி வந்தார்கள்.அவன் பாலனைக் கட்டிப் பிடித்தபடி, “நீ என்னை விட்டுட்டுப் போகப் போறியோ” என பலத்த குரலில் அழுதான்.அனைவரும் திகைத்துப் போய் நின்றார்கள்.

பகலில் அவனிருந்த பொழுது தாங்கள் கதைத்தவைகளை அவன் கேட்டு விட்டான் எனப் புரிந்தது.இராசநாயகமும் சிவமணியும் அவனை அணைத்து தேற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள்.“வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் எல்லாரும் சாமியள் என்றாலும் உங்கடை வீட்டைதானே தேடி படுக்க வாறனான். இனி எங்கை போவன்”அவனின் அழுகையை அடக்க முடியவில்லை. “தெத்தரி! எங்களுக்கு இப்பிடி ஒரு யோசனை பின்னேரம் போலை இருந்தது தான். ஆனால் இப்ப அப்பிடியில்லை… அதாலை நாளைக்கு ஊரெல்லாம் சொல்லித் திரியாதே”, இராசநாயகமும் துணிந்து ஒரு பொய்யைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தினார்.அவனும் சமாதானப்பட்டவன் போலக் காணப்பட்டான்.பின்பு எல்லோரும் அமைதியாகத் தூங்கி விட்டார்கள்.

ஆனால் இன்று பகல் கனவு கண்ட பொழுது ஏதோ அவனுக்கு துரோகம் செய்து போட்டு வந்து விட்டது போல சிவமணிக்கு மனத்திற்குள் ஒரு குற்ற உணர்வு.தெத்தெரியை பலர் தங்கள் வீட்டில் ஒருவனாகப் பாசம் காட்டினாலும் யாராவது பயணம் செல்லும் பொழுது அவன் கண்ணெதிரே வருவதைத் தவிர்த்துக் கொள்வார்கள்.குருடனின் முழிவியளம் போகிற காரியத்திற்கு கூடாது என்பது அவர்களது ஐதீகம்.

எனவேதான் இன்று அவனைக் கனவில் கண்ட பொழுது சிவமணிக்கு மனம் சஞ்சலப்பட்டது.அன்று பகல் முழுக்க தெத்தெரிக் குருடனும்… ஊரில் உள்ள மற்றவர்களும்… காலையும் மாலையும் தாண்டிச் செய்யும் வைரவ கோயிலையும்;… மேலாக பயணத்திற்காக மூன்று தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீட்டை அறாவிலைக்கு வட்டிக்கார பசுபதிக்கு விற்றுவிட்டு வந்ததும்…. சிவமணியின் நினைவில் வந்து வந்து எந்த வேலையும் செய்ய விடாமல் குழப்பிக் கொண்டிருந்தன.

*****
அடுத்த நாள் மூன்று விடயங்கள் நடைபெற்றன.ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது போலவும் இருந்தது.இல்லாதது போலவும் இருந்தது.

(1)அதிகாலையில் வந்த செய்தியால் கிட்டத் தட்ட குடும்பமே ஊரில் உள்ள மற்ற உறவினர்களிம் முன்னால் தலை குனிந்து நிற்பது போல உணர்ந்தார்கள். யாருக்கும் தெரியாது மிகவும் மலிவாக எவருக்கு தங்கள் வீட்டையும் பொதுக்கிணறு இருந்த அவர்களின் காணியையும் விற்றார்களோ, அவர் மிக உயர்ந்த விலைக்கு முன்பின் தெரியாத ஒரு பகுதியினருக்கு விற்று விட்டாராம். ஊரில் உள்ள உறவினர்கள் இப்போது காணியை வாங்கிய குடும்பத்தினரின் நதிமூலம் ரிஷி மூலத்தை விசாரித்துக் கொண்டு இருக்கின்றார்களாம்.

(2) காலை பத்து மணி போல இராசநாயகம் குடும்பம் டென்மார்க் அரசாங்கத்திடம் விண்ணப்பிருந்த அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாலும் கூட மீள் விசாரணை செய்யும் தகமை இழந்த ஒரு கோரிக்கையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களின் வழக்கை மேல் அகதிகள் மன்றத்தில் முறையீடு செய்ய முடியாது என உறுதிப்பட்டிருந்தது. அவர்களை பொருளாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் அகதி அந்தஸ்து கோரும் ”பொருளாதார அகதிகள்”; பிரிவில இணைத்திருந்தார்கள். அத்துடன்; அவர்களை நாடு கடத்தும் ஏற்பாடுகளை கவனிக்கும் பொலிஸ்பிரிவினருடன் ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது

.(3)மாலையில் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பஸ் நின்று செல்லும் பெரிய நாவல் மரத்தடியில் தெத்தெரி முதல்நாள் இரவு மரணம் அடைந்திருந்தான்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)