தாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன்

By | 8. august 2018

ஹோட்டலை விட்டு வெளியேற இன்னும் சரியாக ஒரு மணித்தியாலமே இருந்தது.

அறையுள் உள்ள பொருட்களில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் எடுத்து சூட்கேசினுள் வைத்துக் கொண்டிருந்தேன்.

சூட்கேசினுள் 23 கிலோவும் கைப்பையுள் 7 கிலோவும் வேறு இருக்க வேண்டும். அல்லது கோயில் வீதியில் சாமான்களைப் பரப்பி வைத்து தரம் பிரிப்பது போல விமான நிலையத்தில் போராட வேண்டும்.

இப்போதெல்லாம் மலிந்த விலையில் ரிக்கற் விற்கும் விமான சேவை நிறுவனங்கள் இந்த எக்ஸ்ரா எடையில் பணம் கறக்க முயற்சிக்கின்றார்கள்.

ஹோட்டலில் இருந்து வெளியேற ஒரு நிமிடம் சென்றாலும் அந்த சிங்கப்பூர் சீனத்து ரிசப்சனிஸ்ட் கிழவி சத்தம் போடுவாள் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

பதிவு செய்யும் நேரம் மாலை 2.00 மணி என்பதையும் புறப்படும் நேரம் பகல் பகல் 12.00 மணி என்பதையும் கடுமையாக கடைப்பிடிப்பவள்.

மாலை 01.30க்கு அறை காலியாக இருந்தாலும் உள்ளே போகவும் அனுமதிக்க மாட்டாள். அவ்வாறே 12.00 மணிக்கு புறப்படா விட்டால் எமது பொருட்களை எடுத்து வெளியே வைக்கவும் தயங்க மாட்டாள்.

மற்றும் படி ஒரு வரவேற்பாளராக வாடிக்கையாளருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பாள்.

மாறாத அவளின் புன்னகை மாறிப்போவது இந்த புறப்படும் நேரத் தாமதத்தின் பொழுதுதான்.

ஒரு நாள் அமைதியாக பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன்இ ”ஏன் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்கின்றீர்கள்” என்று.

அவளும் புன்னகைத்துக் கொண்டு சொன்னாள்இ ”ஐரோப்பாவில் நேரக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் நீங்கள் ஆசியாவுக்கு வந்ததும் அதனை மறந்து போய் விடுகிறீர்கள்.

இந்தமுறை அரைமணித்தியாலம் அதிகமாக தந்தால் அடுத்த முறை ஒரு மணித்தியாலத்தை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். இந்த விடயத்தில் இந்தியருக்கும் இலங்கையருக்கும் அதிக வேறுபாடே இல்லை” என்று.

”எப்படித் துள்ளியமாய் எங்களை; எடைபோட்டும் வைத்திருக்கின்றாள் என நினைத்துக் கொண்டேன்.

இளைய மகளின் தொலைபேசி அழைத்தது.

”அப்பா போன முறை அக்காக்கு வாங்கினீங்களே….”

”விசயத்தை சொல்லு…”

”அது தான் அந்த பட்டர் கலரும் பச்சைக் கலரும் சேர்ந்த…”

”பிளீஸ் அம்மா… எனக்கு கம்பாரமாயணம் கேட்கிற நேரமில்லை. திருக்குறள் மாதிரி இரண்டு வரியிலை சொல்லு”

நாலடியாரா ஒரு விண்ணப்பம் வந்து சேர்ந்தது.

சென்ற முறை தமக்கைக்கு வாங்கிய மாரிதி தனக்கும் தனது மச்சாள்காரிக்கும் 2 சுரிதார் வாங்கி வரட்டாம். நிறம்… டிசையின்… இத்தியாதி இத்தியாதி எல்லாம் வைப்பரில் வந்து சேர்ந்தது.

அடுக்கிய பெட்டியை அப்படியே வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாக தேக்கா மாக்கற்றின் மேல் மாடியை நோக்கி ஓடினேன்.

மேலே செல்லும் எக்ஸ்கலேற்றரில் தாவித் தாவி ஏறி ஓடினேன்.

”வணக்கம் மச்சான்” என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு வாடிக்கையாளரை மயக்கும் அந்த அந்த ஹிந்திக்காரனுடன் குறைந்தது

10 நிமிடம் சண்டை போட்டால் தான் 100 வெள்ளி சட்டையை 60 வெள்ளிக்கு வாங்க முடியும்.

இந்த சண்டையைக் கூட நான் ரசித்தே செய்வதுண்டு.

ஆனால் இன்று முடியாது.

சொன்ன காசை தூக்கி எறிந்து விட்டு வர வேண்டியது தான்.

இன்று அவனுடன் கதைக்கவே நேரமில்லை.

“டோன்ற் அங்கிரி மச்சான்” என என்னைத் தேற்றியபடி 20 வெள்ளி என்னிடம் கறந்து விட்டான்.

போன வேகத்தில் இறங்கிச் செல்லும் எக்ஸ்கலேற்றரில் தாவித் தாவி ஓடி இறங்கினேன்.

என்னை எல்லோரும் வியப்பாகப் பார்த்தார்கள்.

ஓடி ஓடி ஹோட்டல் வாசலை வந்த பொழுது இன்னும் எனக்கு 12 நிமிட அவகாசம் இருக்கின்றது.

ஒரு தடித்த அமெரிக்கனும் மெலிந்த ஆபிரிக்க பெண்ணும் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தான் என் அறைக்கு வரப்போகிறார்களோ என்றொரு எண்ணம்.

நிச்சயமாய் ஹோட்டல்காரனுக்கு ரொயிலற் கொமட்டை மாற்றும் செலவு வரப் போகின்றது என மனத்துள் ஒருக்கணிப்புடன் அறைக்குள் போய் அனைத்தையும் பெட்டியுள் அமுக்கிக் கொண்டு கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்.

அடக் கடவுளே!

சரதிற்கு மேலே சேட்டையும் போட்டு ரையையும் கட்டி கோட்டையும் போட்டிருக்கின்றேன்.

அவசரம் என்பது எத்தனை விளையாட்டுகளை நடாத்துகிறது.

மீண்டும் ரவுசருக்குள் நுழைந்த பின் பயணப் பெட்டியை நிறுத்துப் பார்த்த பொழுது 2-3 கிலோ அதிகமாக இருந்தது.

அடுத்த யோசனையின்றி சரம்… டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்த துவாய் மனைவி ஆசைப்படுவாள் என வாங்கி வைத்திருந்த றம்புட்டான் பழங்களை

தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நிறுத்துப் பார்த்தேன்.

முள்கம்பி 3 இடம் பின்நோக்கி வந்திருந்தது.

அனைத்தையும் முடித்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்த பொழுது சரியாக மணி பகல் 12.00.

ரிசப்சனிஸ்ட்டும் அறையை துப்பரவும் செய்யும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

பின்பு ஆறுதலாகவே லிப்ட்டுக்கு வந்தேன்.

விமானத்திற்கு இன்னும் 5 மணி நேரம் இருக்கின்றது.

இனி ஏன் எனது இரத்தக் கொதிப்பை ஏற்றிக் கொள்வான்.

ஆறுதலாக டக்ஸி ஒன்றை மறித்து அதனுள் ஏறி சிங்கப்பூர் வீதிகளில் அது மிதந்து செல்லும் பொழுது டக்ஸிக்கான் கேட்டான், “ஹாவ் யூ என்ஜோய்ட் சிங்கப்பூரியன் கேர்ள்ஸ்?”


புன்னகைத்துக் கொண்டேன்.

என் டென்மார்க் கேர்ள்ஸ்?… மகள்கள்… மனைவி…மருமகள்… சம்மந்தி… அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் சிங்கப்பூரில் என் தெரிவுகள்… இதை விட சிங்கப்பூர் கேர்ஸ்களில் ரசிக்க என்ன இருக்கப் போகின்றது.

கடைசி பத்து நிமிடமும் நான் சிரங்கூன் றோட்டில் ஓடிய ஓட்டங்களை என் இளைய மகளுக்குச் சரி… மூத்த மகளுக்குச் சரி… நடுவிலான் மகனுக்குச் சரி புரியவா போகிறது.

மூவரும் திருமணம் செய்து தனித்தினியே தங்கள் தங்கள் குடும்பத்துடன் இருந்தாலும் வருடாவருடம் இந்த அட்டவணைக்கு குறைவிருக்காது.
அவர்களை இன்று வரை நானும் திருமணம் செய்து வேறு வீட்டிற்குப் போய் விட்டவர்களாக எண்ணுவதில்லை.

என் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்ற நினைப்புத் தான் எனக்கு. எங்கள் அப்பா எங்கள் அப்பா என்ற நினைப்புத் தான் அவர்களுக்கும்.

நானும் அவர்களிடம் காசு ஏதும் கேட்பதில்லை. அவர்களும் இது என்ன விலை என்று கூட விசாரிப்பதில்லை. எனது செலக்ஷன் நல்லாய் இல்லா விட்டால் நான் அவர்களிடம் வேண்டிக் கட்ட வேண்டும்.

தவிர அப்பாக்கு ஒரு ரேஸ்ற்றும் தெரியாது… “எப்பிடியம்மா இவரைக் கட்டினாய?”, என என் மனைவியும் அவர்களிடம் வேண்டிக் கட்ட வேண்டி வரும். 

மனைவிக்காரி மிகப் பெரிய புத்திசாலி.

அவளிடம் இருந்து மட்டும் எந்த ஓடர்களும். வருவதில்லை.

“அவர் எது வாங்கியந்தாலும் நான் கட்டிக் கொள்ளுவன்” என்று சொன்னாலும் இன்னது இன்னது தான் வாங்கி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நான் கடந்த 30 வருடங்களாக நிறைவேற்றிக் கெண்டேயிருக்கின்றேன்.

இந்த உடை விவகாரத்தில் நான் மகள்மாரையும் மனைவியையும் விடக் கவனமாய் இருப்பது மருமகள் விவகாரத்தில் தான்.

எனது தெரிவுகள் சற்று ஏறுமாறாக இருந்தால் என் மகன் பேசாமல் சந்நியாசம் செல்லும் நிலைதான்.

மருமகளின் தாய்… அது தான் சம்மந்தியம்மா மிகவும் நாசூக்காக விலைகளை விசாரித்து நான் என் பிள்ளைகளின் மீதும் மருமகளின் மீதும் வைத்திருக்கும் அன்பை அளவிட முயல்வார்.

நானும் மருமகளின் ஆடைகளின் விலையில் 25 தொடக்கம் 50 வெள்ளி வரை விலைக்கூட்டியே சொல்வேன்.
அவாவும் அக மகிழ்ந்து போவா.

அவா ஒருக்கால் தனியே சிங்கப்பூருக்குப் போய் ”வணக்கம் அக்கர்” என்னும் அந்த அந்த ஹிந்திக்காரனுடன பேரம் பேசி உடைகள் வாங்கும் வரை என் செங்கோல் தப்பும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

டக்ஸி வந்து சங்கை விமான நிலையத்தில் நின்றது.

சிங்கப்பூர் விமான நிலையம் – கட்டார் விமான நிலையம் – டென்மார்க் விமான நிலையம்.

30 பாகை வெப்பநிலையில் இருந்து – 3 பாகை வெப்பநிலைக்கு வந்து சேர்ந்தாயிற்று.

நாளை வேலை தொடங்குகின்றது.

*

21 நாள்களில் வந்திருந்த இ-மெயில்கள் பாதிப்பெட்டியை நிறைத்திருந்தது.

ன்னாருக்கு சுகவீனம் – இன்னாருக்கு பிறந்தநாள் – இன்னாருக்கு பிள்ளை பிறந்தது என்பதனைத் தாண்டி குறைந்த 12 மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டி இருந்தது.

இடைக்கிடையே விடுமுறை எப்படிப் போனது அது இது என்ற சுகநல விசாரிப்புகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டே வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

மதிய இடைவேளை நெருங்க நெருங்க 7 மணித்தியால நேர இடைவெளிக் களைவேறு கண்களைச் சுழற்றியது.

இன்று சிங்கப்பூரில் நின்றிருந்தால் மதியம் கோமளவிலாசில் ஒரு கட்டுக்கட்டி பின் ஒரு சின்னத் தூக்கம் போட்டு சூர்யாவில் பெரிய வடையும் உண்டு மாலைத் தேநீரும் அருந்தி பின் சில நொறுக்குத் தீனிகளுடன் நடந்து கொண்டிருப்பேன். அல்லது ஒரு நகைவியாபாரியுடன் அல்லது வீதியோரக்காரர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

கண்களுக்கு கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரைக் காட்டி விட்டு சாப்பாட்டு பெட்டியுடன் கன்ரீனுக்குப் போனேன்.

கமீலாவின் கதையில் எல்லோரும் காதைக் கொடுத்து சுவாரஸ்யாமாகக் கேட்டுக் கொண்டும் முள்ளுக் கரண்டியாலும் கத்தியாலும் உணவுடன் போராடிக் கொண்டு அல்லது இரசித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அசல் யாழ்ப்பாணத்தான்… அல்லது அசல் திருநெல்வேலிக்காரன் என்று சொல்வது போல கமீலா அசல் டெனிஸ்காரி.

அவளைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினால் டெனிஸ்மக்களைப் பற்றிய விளக்கத்தை மற்றைய பிற நாட்டவர் புரிந்து கொள்வார்கள்.

வயது 48.

காலையில் அலுவலகத்துக்கு வரும் பொழுது விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மனம் ஒன்று வாசலில் பரவும். எனது மேற்பார்வையில் அவளின் பணிகள் இருந்தாலும் எப்போதும் எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பதில் “எங்களுக்கே எல்லாம் தெரியும்” என்று ஜன்ர விதிகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பாள்.

மதிய இடைவேளைகளின் போதான அவளின் சம்பாசணைகளில் அவளின் நாய்.. பூனை… ரி.வி. தொடர்கள் இத்தியாதி இத்தியாதி தiலையாய பாத்திரங்கள் வகிக்கும். அன்றைய அவளின் சம்பாசணையில் மகள் கதாநாயகி அவளின் மகள்.

16 வயதிலேயே தன் மகள் வீட்டை விட்டுப் போய் தனியாக வாழவேண்டும் என்று தானும் தன் கணவனும் எதிர்பார்த்தார்களாம்.

ஆனால் இப்பொழுது 19 வயது வந்த பின்புதானாம் தனியே போய் இருக்கிறாளாம்.

பகலில் கொப்பனேகன் பல்கலைக் கழத்தில் சட்டக்கல்வியும் மாலையில் சிறிய ஒரு அங்காடியில் தினமும் 3 மணித்தியாலம் வேலை செய்கின்றாளாம்.

வேலையால் வரும் பணமும் அரசாங்கம் கொடுக்கும் கல்விக்கான கடன் பணமும் ஓரளவு வாழ்க்கையை ஓட்டிச் செல்லப் போதுமானதாய் இருக்கிறதாம்.

இந்த ஆண்டு பனிக்கால விடுமுறைக்கு தானும் கணவனும் தனியே அல்ப்ஸ் மலையில் பனி சறுக்கப் போகின்றார்களாம்.

நீங்கள் வேறு உதவி ஏதும் உங்கள் மகளுக்கு செய்வதில்லையா?” – நான் கேட்டேன்.   

“வை நொற்?…”

அனைவரையும் அவளை நோக்கினார்கள்.

அவள் வீட்டில் துணி தோய்க்கும் மெசின் சரி காயப் போடும் மெசின் சரி இல்லை. கடைவீதியில் உள்ள துணி தோய்க்கும் கடைக்கு எடுத்துச் சென்றால் அவளுக்கு எப்படியும் கொஞ்சம் சிலவாகும். எனவே இரண்டு கிழமைக்கொரு தடவை வந்து எங்கள் வீட்டு மெசினில் தோய்ந்து காய வைத்துப் போகும் படி அனுமதித்திருக்கின்றேன்.

சாப்பாட்டில் இருந்த மீன் முள் தொண்டையில் குற்றியது போல இருந்தது.

எக்ஸ்கலேற்றரில் ஏறி ஏறி ஓடி… எக்ஸ்கலேற்றரில் இறங்கி இறங்கி ஓடி… சரத்திற்கு மேல் கோட்டும் ரையும் கட்டி… சாரத்தையும் துவாயையும் மனைவிக்கா வாங்கி வைத்திருந்த றம்புட்டானையும் அறையினுள்ளேயே போட்டு விட்டு…. விமானத்தில் ஏறி விமானத்தில் இறங்கி….

அனைவரும் அவள் தன் மகளுக்கு செய்யும் உதவி பெரிய உதவிதான் எனப் பாராட்டினார்கள்.

அவளும் பெருமிதப்பட்டாள்.

எனது காரியதரிசிப் பெண் கேட்டாள்.

“சார்… சிங்கப்பூரில் இருக்கிற தமிழ் கலாச்சாரத்துக்கும் இலங்கையில் இருக்கிற தமிழ் கலாச்சாரத்துக்கும் டென்மார்க்கில் இருக்கிற கலாச்சாரத்துக்கும் பெரிய இடைவெளிகள் இருக்கா?” என்று.

சிறிய புன்னகையுடன் சொன்னேன்.

”எங்கள் கலாச்சாரத்தை உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதனை எம்முடன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பார்த்தால் தான் புரிய முடியும்” என்று.

அவளுக்கு புரிந்ததோ இல்லையோ ’ஆம்’ எனத் தலையாட்டினாள். 

Thai

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)