கூடப்பிறந்ததுகள் – சிறுகதை – வி. ஜீவகுமாரன்

By | 27. februar 2022

உயர்கல்விச சான்றிதழை ஒரு கையில் வைத்துக் கொண்டும்… பிரிட்டிஷ் ஆங்கிலப் பரீட்சைக்குத் தேறிய சான்றிதழை மறுகையில் வைத்துக் கொண்டும்… ஐரோப்பாவுக்கும் அவுஸ்திரேலியாக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்து குடியுரிமை பெற்றிருந்தாலும்….

அகதி அந்தஸ்துக்கோரி நாகரீகமாக எதிலிகள் என அழைப்பட்டாலும்…. அல்லது அநாகரீகமாக கறுத்தப்பன்றிகள் என அவித்த இhறலின் நிறமொத்த வெள்ளைப் பன்றிகளின் கூக்குரல் பின்னால் கேட்டாலும்…. கோட்டுடனும் ரையுடனும் சென்னை சர்வதேச விமானநிலையத்தின் ரிக்கற் கவுண்டரில் நின்று இரண்டொரு கிலோ எக்ஸ்ரா பக்கேஜ்சுக்களுக்காகக் கெஞ்சும் நிலைமை எப்போது தான் மாறப் போகின்றதோ தெரியாது.

அந்தந்த நாட்டு கடவுச்சீட்டுகள்… தோளில் கமெரா… விசா மற்றும் மாஸ்டர் கார்ட்டுகள் கையில் பளபளத்தாலும் சற்று எடை கூடிய உடைகளை அல்லது மாசிக்கருவாட்டுப் பாசலை ஒரு பாசலில் இருந்து மற்றப்பாசலுக்கு மாற்றி மாற்றி களைத்து வியர்ப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவதிப்படும் நிலையை நான் அனுபவித்தது இது முதல் தடவை இல்லை.

தோய்க்காத உள்ளாடைகள் உட்பட நிலத்தில் பரவி இருக்க… ”சார் கொஞ்சம் கோப்பி பாருக்கு கிட்டவாக வாங்கோ. நான் வழி பண்ணுறன்” போட்டரின் தரகு வியாபாரம் ஒரு புறம்.

டென்மார்க் நகரசபையின் கணனிப் பொறுப்பாளரின் முகத்தில் அசடு வழியும்.

”என்ன பேசிக்கொண்டு நிற்கிறாய்… லைனைக் கிளியர் பண்ணு” போட்டரை நோக்கி ரிக்கற் கவுண்டரில் நிற்கும் பெண்ணின் குரல் உயரும்.

”கெதியாய் முடித்து விடு. பங்கைப் பிரித்து விடலாம்” என்பதுதான் அதன் அர்த்தம்.

மானம் போகும். 

ஒரு மாதிரி சிறிலங்கன் எயர் லைனில் கொழும்புக்குக் கொண்டு சென்று விட்டால் பின்பு கட்டார் எயர்லையினில் பிரச்சனை இல்லாது டென்hர்க்கிற்கு கொண்டு சென்று விடலாம்.

இது முதல் தடவை இல்லை. கிட்டத்தட்ட கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடைபெறும் போராட்டம்.

ஆயுதப்போராட்டம் மௌனமாகி விட்டாலும் இந்தப் போராட்டம் இன்னும் ஓயவில்லை.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக என் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க சற்றுத் தூரத்தில் என்னை ஒத்த ஒருவர் வைத்த கண் வெட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

பக்கத்தில் வெள்ளைச் சேட்டு வெள்ளை வேட்டி நெற்றி முழுக்க விபூதி அணிந்த 35 – 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் மஞ்சள் கைப்பையுடனும் பொத்தீஸ் பாக்குடனும் நின்றிருந்தார்.

எனை ஒத்தவர் என்னை நெருங்கி வந்தார்.

கண்டு பிடியுங்கள் 6 வித்தியாசம் என ஆனந்த விகடனிலும் குமுதத்திலும் வருவது போல எனக்கும் அவருக்கும் 5–6 வித்தியாசங்கள் இருந்தன.

எனது கோட- ரை சென்ற ஆண்டு எனது 25வது திருமணநாளுக்கு வேண்டியது.

அவரினதோ பல ஆண்டுகளுக்கு முன்பாக அவரின் திருமணத்தின் பொழுது வாங்கி தம்பதி சமேதராய் பாரத் ஸ்ரூடியோவில் அல்லது ஞானம் ஸ்ரூடியோவில் எடுத்த கறுப்பு வெள்ளை அல்லது மண்ணிற நிறத்தை ஒத்திருந்தது.

எனது நெற்றியில் எந்தப் பூச்சும் இல்லை.

அவரின் நெற்றியில் திருநீற்றுப்பட்டை – சந்தனம் – குங்குமம்.

அதனை விட ரைக்கு மேலாக தங்கச் சங்கிலி.

ஆவரைத் தெடர்ந்து மற்ற வெள்ளை வேட்டிக்காரரும் என்னருகில் வந்தார்.

”சார் எனக்கொரு பேபர் செய்ய முடியுமா?”

நிமிர்ந்;து பார்த்தேன்.

கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போக வழி தேடியவன் கதைதான் என் நினைவுக்கு வந்தது.

ஆனாலும்ää ”வட் ஐ கான் டூ போர் யு?”

“நத்திங் ஸ்பெசல்… இவர் எனது வைவ்வின் சகோதரர். கொழும்புக்கு போக உதவி வேண்டும். அங்கு இவரின் சகோதரியின் கணவர் நிற்பார். இவரை அவரிடம் ஒப்படைத்தால் உங்களுக்கு வேண்டிய நிறையை இவர் எடுத்து வருவார். இவரிடம் மொத்தம் 5 கிலோதான் உண்டு”

என் மனம் விரிந்தது.

கல்குலேட்டா கணக்குப் பார்த்தது. எப்படியும் இன்னும 10-15 கிலோ கொண்டு செல்லலாம்.

உள்ளே டியூட்டி பிறி சொப்பில் 2-3 சிவாஸ்ரீகலும் 2-3 பெரிய குவாலிட்டி ஸ்ரீற் ரொவியும் வாங்கலாம்.

‘ஆம்’ எனத் தலையாட்டினேன்.

“அதோடை இந்த என்பலப்பையும் இதனுள் இருக்கும் ஐந்தாயிரம் ரூபாயையும் அங்கு நிற்பவரிடம் கொடுத்து விடுங்கள்.”

என்பலப்பில் கொழும்பில் நிற்பவரின் பெயரும் கைத்தொலைபேசி எண்ணும் இருந்தது.

வெள்ளை வேட்டியுடன் நிற்பவர் மிகவும் அப்பாவியாக… அல்லது ஒரு வெள்ளாந்தி மனிதரராக காணப்பட்டார்.

பரஸ்பரக் கைக்குலுக்குலுடன் எமது இருவரின் பயணம் ஆரம்பமாகியது.

முதலில் செக்கிரட்டி செக்கிங்.

மெற்ரல் டிரக்கர் வெள்ளை வேட்டி அப்பாவியை அண்மித்த பொழுது பெரிய அலாரம் அடித்து அனைவரும் திகைக்க வைத்தது.

அந்த வெள்ளாந்தி மனிதர் அசடு வழிந்தார்.

வடநாட்டு இராணுவவீரர்கள் அவரின் வயிற்றடியை ஆராய்ந்தார்கள்.

அவரின் இடுப்பில் இருந்த அரையாண்;கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அச்சரக்கூட்டுக் குப்பியை உருவி எடுத்தார்கள்.

அதனை அவர்கள் எறிய முற்பட்ட பொழுதுää “அது அம்மா காளி ஆச்சிக்கு நேர்ந்து கட்டினது. அதுக்குள்ளை மந்திரத் தகடு இருக்குது”.

அவரின் யாழ்ப்பாணத் தமிழ் வட இந்திய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

எனக்கு வீணான ஒரு சங்கடத்தில் மாட்டுப்பட்டது போல இருந்தது.

அந்த அதிகாரியோ “பரவாயில்லை… இதனை சின்னதொரு பெட்டியில் போட்டு பெலிற்றில் அனுப்புவோம். கொழும்பில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அவரின் அரைநாண்;கொடியும் அதனுடன் இணைந்த வெள்ளியால் ஆன அச்சரக்கூட்டுக் குப்பியும் மெதுமெதுவாக நகரத் தொடங்கியது.

கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது.

வீணாக ஒரு பிரச்சனையுள் மாட்டப்பட்டு விட்டோம் என்றாலும் 10-15 கிலே எடை இலவச இணைப்பாக கிடைத்தது மகிழ்ச்சியே.

***

உள்ளே சென்று டியூட்டி பிறிக் கடையில் எனக்குப் போதியளவு பொருட்களை வாங்கி விட்டு அவருக்கும் சின்னதாக ஒரு சொக்லேற்றை வாங்கிக் கொடுத்தேன்.

சங்கேயத்துடன் பெற்றுக் கொண்டார்.

“என்ரை மருமோளுக்கு சந்தோசமாய் இருக்கும்…. அக்காவைக் கேட்டனான் ஏதும் வாங்கித்தா… சின்ன மருமகளுக்கு கொடுப்பம் என்று. அத்தார்தான் உதுகள் எல்லாம் கொண்டு போகக்கூடாது என்று வாங்கிக்தர விடேல்லை”

எனக்கு கொஞ்சம் ஆர்வம் மேலிட்டது.

அவரின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் அறிய விரும்பினேன்.

“ஒம் பாருங்கோ.. எங்களிலை 3 பேர். அக்கா – நான் – தங்கச்சி. அக்காவும் பெரிய அத்தானும் இங்கை மட்ராஸில் இருக்கினம். பிள்ளை இல்லை என்று வைத்தியம் செய்ய வந்தவை. இன்னும் பிள்ளை கிடைக்கேல்ல. மற்றது சின்னத் தங்கச்சியும் சின்ன அத்தாரும் சின்ன மருமகளும் மருமகனும் கொழும்பில் நல்லாய் இருக்கினம். அவையிட்டைதான் இப்ப போறன்.

அவரின் கதையை கேட்டபடி..  தலையை ஆட்டியபடி அவருக்கும் எனக்கும் பால் கோப்பி வாங்கினேன். அவர் தனது இரண்டு கைகளாலும் பவ்வியமாக வாங்கி சிரட்டையில் ஊதி ஊதிக் குடிப்பது போல சோபாவில் குந்தியிருந்து அதனைக் குடித்தார்.

எனக்கு எங்கேயோ நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணாத நாவல் போலவே இருந்தது.

“அம்மா கும்பிட்ட பலன். எங்களுக்கு வந்த இரண்டு மாப்பிள்ளைமாரும் சுத்த 24 கரட் தங்கங்கள். அக்காவையும் தங்கச்சியையும் தங்கத் தட்டத்தில் வைத்துப் பார்க்கினம்”

அன்பொழுக எனைப்பார்த்துச் சொன்னார்.

“அப்ப உங்களுக்கு கலியாணம் ஒன்றும் நடக்கேல்லையோ”

அவரின் முகம் கொஞ்சம் கறுத்தது.

“நடந்தது தான்.

அவா அப்பிடி ஒரு வடிவு…. பால் வெள்ளை… ஆனால் தோட்டத்துக்குத் தண்ணி இறைக்க வாற ஒருத்தனோடை கிடந்த நகை காசுகளையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போட்டா”

அவரின் கண்கள் கலங்கியது.

எனக்கும் அவ்வாறே கவலையாக இருந்தது.

“கவலைப்படாதையுங்கோ… கடவுள் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டுவார்… அவாவையும் அந்த ஆளையும் தண்டிப்பார்”

“அப்பிடிச் சொல்லாதையுங்கோ… அவள் பாவம்…. அவளின்ரை வடிவுக்கு நான் கொஞ்சம் குறைவு தான்”

எனக்கு மனம் கனத்தது.

நான் கொஞ்சம் மௌனமாக இருந்தாலும் அவர் என்னை விடுவதாயில்லை.

அத்தார்மார் படலம்… தமக்கை தங்கச்சிமார் படலம்… ஊரில் உள்ள மருமகள் படலம்… மேலாக இடைக்கிடை தன்னை விட்டு ஓடிய மனைவியின் படலம்… இத்தியாதி இத்தியாதி…கதைகள் தொடர்ந்தன. 

“பிறகு நீங்கள் கலியாணம் செய்ய யோசிக்கேல்லையே?”

“அந்தக் கூத்தை ஏன் கேட்கிறியள்? இங:கை மட்ராஸிலை அக்கா வீட்டை ஒருத்தி சமைக்க வாறவள். சரசு என்று பெயர். ஒரு கைக்குழந்தையோடை புருஷன்காரன் விட்டுட்டுப் போட்டான். போன கிழமை மெதுவாக் கேட்டன்ää “நீயும் நானும் கலியாணம் கட்டுவமோ” என்று.

அவ்வளவுதான் அவள் குளறிச் சத்தம் போட அவளின்ரை ஆட்கள் எல்லாம் அக்கா வீட்டைச் சுற்றி வந்திட்டான்கள். “

“ஏன் மாட்டன் எண்டு சொல்லிப்போட்டாளோ?”

“இல்லை… இப்பவே தன்னைக் கட்டச் சொல்லி” அவளும் அவளின்ரை ஆட்களும் அடம் பிடிக்க…

அக்காவும அத்தாரும் சின்னக்காவோடையும் சின்ன அத்தரோடையும் கதைச்சு இப்ப என்னை உங்களோடை அனுப்பினம். பெரியக்காவும் பெரிய அத்தாரும் எல்லாம் கடந்து போகும். நீ சந்தோசமாய் போட்டு வா என்று வழி அனுப்பினம்.”

“அவை அப்படி நடந்தது உங்களுக்கு கவலையில்லையோ…”

“கவலைதான்… ஆனால் எங்கடை குலம் கோத்திர மானம் என்று இருக்கல்லோ.”

பெரிய அத்தாரும் சின்ன அத்தாரும் அதிக நேரம் கதைச்சு… என்ரை ஊர்க்காணிக்கு ஐம்பதாயிரம் தந்து வாங்கிட்டினம். துங்கச்சியின்ரை கணக்கிலை போட்டிருக்கினம். இனி என்ரை சீவன் இருக்கிறவரை எனக்கு குறையில்லை.

இப்பவும் பார்த்தியளோ… தங்கமான பெரிய அத்தான் 5 ஆயிரம் கைச்செலவுக்கு என தந்து விட்டிருக்கினம்.”

ஒரு வெள்ளாந்தியின் 50 இலட்சம் பெறுமதியான காணி ஐம்பதாயிரத்துககுப்; போய் விட்டது எனக் கவலைப்பட்டேன்.

“அவை இரண்டு பேரும் இல்லாட்டி நான் நடுத்தெருவிலை தான். காளி ஆச்சி தான் துணை…. அண்ணை என்ரை அரையான் கயிறும் அட்சரக்கூடும் கொழும்பிலை கிடைக்கும் தானே?”

“கட்டாயம் கிடைக்கும். நான் அதனை எடுத்து  உங்களிட்டைத் தந்து… பிறகு உங்கடை காசையும் கடிதத்தையும் சின்ன அத்தாரிடை;டை கொடுத்து விட்டுத்தான் நான் ஊருக்குப் போவன்.

அவர் கை எடுத்துக் கும்பிட்டார்.

“ஐயுபோபவன் எம்மை உள்ளே வரவேற்றது”

இருக்கைப் பட்டியுள் எங்களை நாங்கள் இறுக்கிக் கொண்டோம்.

மீண்டும் அவரின் படலங்கள்.

மூத்த அக்காவோடை இப்ப ஆறு மாதம் இருந்தாச்சு. இனிச் சின்னத்தங்கச்சியோட  ஆறு மாதம் இருந்திட்டுப் பிறகு சென்னைக்குத் திரும்பி வருவன்.

மூத்தக்காக்குச்சரி… இளையவளுக்கும் சரி…. என்னை விட்டுட்டு இருக்கேலாது.

கிரிபத்தும் மாசிக்கருவாட்டுச் சம்பலும் வந்தது.

சுவையாக இருந்தாலும் எனக்கு வயிறு ஒரு மாதிரி இருந்தது.

கழிப்பறைக்கு போய் வருகிறன் எனச் சொல்லி எழுந்து கொள்ள “இங்கு குந்தி இருக்க முடியாது. கதிரையில் இருப்பது போலத்தான் இருக்க வேண்டும்”

எனக்கு வழிகாட்டியதில் அவருக்குச் சந்தோசம்.

கழிவறையுள் சென்ற பொழுது எனது தலைக்குள் ஒரு ‘கிளிக்’.

பெரிய அத்தார் சின்ன மச்சானுக்குக் கொடுத்து விட்டிருக்கும்; கடிதத்தில் என்னதான் இருக்கிறது என்று ஒரு துறுதுறுப்பு.

கடிதத்தை மெதுவாக பிரித்தேன்.

“தப்பு செய்யுறியே தம்பி”ää மூன்று முடிச்சின் மனச்சாட்சி சொல்வது போல இருந்தது.

அந்தக் குரல்களுக்கு செவிமடுக்காமல் வாழும் ஒரு சமுதாயத்தில் நானும் ஒருவனாய் போய் அதிக காலம் ஆகிவிட்டது.

பாம்பு தின்னும் ஊரில் நடுத்துண்டைக் கேட்டு வாங்க வேணும் என்ற சந்தர்ப்பவாத வாழ்க்கைக்கு எம்மை நாமே அர்ப்பணிåத்த பின்பு மனச்சாட்சி என்ன? மண்ணாங்கட்டி என்ன??

உள்ளே 5.000 ரூபாய்கள் இருந்தன.

அத்துடன் மிகச் சிறிய கடிதம்.

சென்னையில் உள்ள பெரிய அத்தாரும் பெரிய தமக்கையும் கொழும்பில் உள்ள சிறிய அத்தாருக்கும் சிறிய தமக்கைக்கும் எழுதியது.

“இந்தச் சனியனின் தொல்லை இன்றுடன் ஒழிந்தது”

விமானம் வானத்தில் சிதறி வெடித்தது போலிருந்தது.

***

சென்னையில் கை அளித்த தீப்பெட்டி அளவிலான சிறிய பெட்டி கொழும்பு விமான நியைத்தில் வட்டமான வளைந்து செல்லும் பெலிற்றில் மெதுமெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

காளி ஆச்சி வாறா. என்னை அவா கை விடேல்லை”

அவரின் முகம் பூரித்திருந்தது.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)