இந்தியாக்கும் இலங்கைக்கும் சிங்கப்பூர் – மலேசியாக்கும் போகும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது வீதியோரத்தில் விற்கும் கரும்புச்சாறுதான்.
அதனைச் சுவைக்கும் பொழுது சலரோகம் வந்து இதனைக் குடிக்க குடுத்து வைக்காதவர்கள் தான் போன பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் என நினைத்துக் கொள்வேன்.
என்னை அதிசயிக்க வைக்கும் இன்னோர் விடயம் எப்படி அந்த இயந்திரம் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது என்பதுதான்.
கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது. அது வெறும் சக்கை தான்.
*
இலங்கையில் சரி… போருக்குப் பயந்து இந்தியாவில் வாழ்ந்த காலங்களில் சரி…
வெள்ளிவிழா என்பதை ஏதாவது ஒரு திரைப்படத்தின் வெற்றிவிழாவுடன் மட்டும் தான் இணைத்து யோசித்திருந்தேன்.
ஒரே திரையரங்கில் ஒரு திரைப்படம் ; 25 வாரங்கள் தொடர்ந்து ஓடிவிட்டால் 175ம் நாளில் மிகப் பிரண்மாண்டமாக அதனைக் கொண்டாடுவார்கள்.
பொதுவாக சிவாஜி அல்லது எம்.ஜி.ஆரின் படங்களே இவ்வாறான வெள்ளிவிழாக்களைக் கொண்டாடின.
தினசரி நான்கு காட்சிகளின்படி 175 நாட்களும் ஓட முடியாது போனாலும் இறுதியில் சில காலங்களுக்கு ஒரு காலைக்காட்சியை மட்டும் திரையிட்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடுவார்கள். அதனை எதிhத்;தரப்பு ரசிகர்;கள் ஏளனம் செய்வார்கள்.
அவ்வாறாகச் சனம் குறைந்த திரையரங்களுக்கு வருமானமே திரையரங்க வெளிச்சம் அணைக்கப்பட்டவுடன் காலைக்காட்சிகளுக்கு வந்து அமரும் காதல் ஜோடிகள் தான்.
இலங்கையில் குத்துவிளக்கு என்ற ஒரு திரைப்படம் வெளியாகிய பொழுது அது காட்சிகளின் எண்ணிக்கையில் வெவ்வேறு ஊர்களில் 25வது நாள் வெற்றிவிழா… 50வது நாள் வெற்றிவிழா… எனச்சென்று எங்கள் ஊரில் 100வது வெற்றிவிழாவைக் கொண்டாடினார்கள்.
ஆனால் இன்றோ ஊருக்கு ஒன்றிரண்டு திரையரங்கு என்பது மாறி பெரிய பல்பொருள் வர்த்தக மையங்களினுள் பல தியேட்டர்களில் படம் ஓடுவதனால் நல்ல படங்கள் ஒரு மாதத்தினுள்ளேயே பழைய வெள்ளிவிழாக் காட்சிகளின் எண்ணிக்கையை எட்டி விடும்.
கல்லாப்பெட்டியின் நிறைவுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் அலகாக மாறிவிட்ட பின்பு யாரும் திரைப்படத்தின் வெள்ளிவிழாக்கள் பற்றியோ நூறாவது தினங்கள் பற்றியோ கவலைப்படுவதில்லை.
*
டென்மார்க் வந்த பின்பு இந்த வெள்ளிவிழாக் கொண்டாடங்கள் மக்கள் வாழ்வுடன் எவ்வாறு இணைந்துள்ளது என்பதனைப் பார்த்து பிரமித்துப் போனேன்.
18வது பிறந்த நாள் விழாவுக்குச் சரிசமனாக 25வது பிறந்த நாளை இளைய தலைமுறையினர் கொண்டாடுவதும் அவ்வாறே 30, 40, 50 என்று தொடங்கி 100வது பிறந்த நாள் வரை பிரமாண்டமாக கொண்டாடுவார்கள்.
அதிலும் 100வது பிறந்தநாளுக்கு டென்மார்க்கின் அரசி அல்லது அரசரிடம் இருந்து டென்மார்க்கின் முத்திரை பதிக்கப்பட்ட ஏதாவது ஒரு பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அதனை அந்த நகரத்தின் நகரபிதா வந்து கையளிப்பார்.
சிலவேளைகளில் அதனைப் பெறுபவருக்கு வயோதிபர் பராமரிப்பு நிலையத்தில் வாழும் அந்த முதியவருக்கு பூரண அறிவும் நினைவும் இருக்காது.
குடும்பத்தினர் மட்டும் கைதட்டி தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அண்மையில் வயோதிப நிலையத்தில் இருந்த ஒருவருக்கு குடும்பமாக ஐபோன் 12 அளித்து விட்டு அவரின் பழைய தொலைபேசியை எடுத்துச் சென்று வீசியதால் தனது பணியின் பொறுப்பு அதிகரித்து விட்டது என வைத்தியத் தாதி ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்து விட்ட ஒரு விடயம் பத்திரிகை ஒன்றின் காதுகளுக்கு அது எட்ட அதற்கு கொஞ்சம் கை கால் வைத்து மிகவும் கேலி செய்து அந்தப் பத்திரிகை ஒரு கட்டுரை வரைந்திருந்து அது பின்பு பெரிய சர்ச்சைக்கு ஆளானது வேறு ஒரு கதை.
100வது என்னும் இலக்கை அதிகமானோர் எட்டுவது கடினம் என்பதாலோ என்னவோ 25ஐ தாங்கி வரும் வெள்ளிவிழா என்பதனை எல்லா வகையிலும் எல்லோரும் கொண்டாடுவார்கள்.
சமுதாய நலன்களில் உலகத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் நிற்கும் டென்மார்க்கில் விவாகரத்துகளின் எண்ணிக்கையில்; முன்னிலையில் நிற்கும் காரணத்தாலோ என்னவோ… அதிகமான திருமணங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடுவது சந்தேகத்துக்குரியது. எனவே பன்னிரண்டரை ஆண்டு நிறைவடையும் பொழுது செப்புவிழா என்று அதனைக் கொண்டாடுவார்கள்.
காலையில் சிறிய ஒரு இசைக்குழு அவர்கள் வீட்டின் வாசலில் நின்று சுப்பிரபாதம் இசைக்க நண்பர்களும் உறவினர்களும் கைகளில் டெனிஷ் கொடியுடன் நின்று வாழ்த்துக் கோசமிட பன்னிரண்டரை வருட தம்பதியினர் முகம் மகிழ்ந்து போவார்கள்.
அதுவே 25 வருட திருமணக் கொண்டாட்டம் என்றால் அது இன்னமும் இரட்டை மடங்கு கொண்டாட்டமாக அமையும்.
வேலையிடங்களைப் பொறுத்தவரை 25 ஆண்டுக் கொண்டாட்டம் என்பது ஒரு சாதனை மிக்கதாகவே பார்க்கப்படும் ஒன்று.
அரசநிறுவனங்களில் தொடர்ந்து 25 வருடங்கள் பணிபுரிந்த ஒருவரை அன்று பாராட்டி, அரச நிறுவனமே சக ஊழியர்களுக்கு அன்று மதிய உணவு அல்லது மாலைச் சிற்றுண்டிகளை அளித்தும் கொண்டாடும்.
சில தனியார் நிறுவனங்களும் அவர்களின் யாப்புகளுக்கு ஏற்ப இதனை சிறிய அளவிலோ அல்லது பெரிதாகவோ கொண்டாடுவார்கள்.
இங்கும் நகரபிதா சமூகம் அளித்துப் பாராட்டி விழாவின் கதாநாயனுக்கு அல்லது நாயகிக்கு ஒரு மாதச்சம்பளத்துக்குரிய காசோலையைப் பரிசாக அளித்துச் செல்வார். அதேவேளையில் அந்த பணியாளருடன் இணைந்து பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்களும் அழைக்கப்படுவார்கள். அவர்களின் பரிசுப் பொருட்களால் ஒரு மேசையே நிறைந்து விடும்.
எங்கள் ஊர்களில் மொய் எழுதுவது போல அந்தப் பிரிவுக்கு காரியதரிசியாகப் பணிபுரியும் 2 பெண்கள் பரிசுப் பொருட்களின் மீது குங்குமப் பொட்டளவு 1, 2, 3 என எண்களை ஒட்டி அதே 1, 2, 3 என்று குறிப்பிட்ட நிறுவனங்களின் அல்லது தனிப்பட்டவர்களின் பெயர்களை ஒரு கொப்பியில் எழுதிக் கொண்டு இருப்பார்கள்.
பரிசுப் பொருட்கள் வர்ண நிறதாள்களினால் சுற்றப்பட்டு இருப்பதனால் தான் இந்த ஏற்பாடு.
அன்று மாலையோ அல்லது அடுத்த நாளோ அந்தப் பரிசுகளைத் திறந்து பார்த்து மகிழ்வார்கள்.
எனக்கும் என்னுடன் சேர்ந்த ஐந்து இலங்கையர்கள், பத்து டெனிஷ்காரர்கள், நான்கு அரேபிய நாட்டவர்கள், ஐந்து ஆபிரிக்கர்கள் என இருபத்தைந்து ஊழியர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில்; வேலைக்குச் சேர்ந்து 25 வருடங்கள் ஆக இருக்கின்றது. சரியாக வருகிற சம்மர் விடுமுறை நேரத்தில் அது கொண்டாடப்பட இருக்கின்றது.
மொத்தம் 100 பேர் பணியாற்றும் இறைச்சிக்கான கோழிப்பண்ணையில் தான் இந்த நாட்டுக்கு வந்தது தொடக்கம் வேலை செய்கின்றேன்.
இலங்கையில் இருந்த பொழுது முட்டை போட்டு முடிந்த கிழட்டுப் பேட்டுக் கோழியை அல்லது இறைச்சிக்குப் பதமான முற்றாத சேவல் கோழியை பெரிய மாமா வேப்ப மரத்தில் போடப்பட்ட சுருக்கு கயிற்றில் தொங்க விட்டு அதன் சிறகுகள் அடித்து அது இறப்பதை தூரத்தில் நடுங்கியபடி பயத்துடன் நின்று பார்த்தது இன்னும் நன்கு நினைவில் இருக்கின்றது.
”தண்ணியை வந்து ஊத்தடா” என மாமா கூப்பிட்டும் பொழுது பக்கத்தே சென்று கோழியின் இரைப்பையுள் உள்ள கல்லு மண்களை நீக்க தண்ணி விட்டுக், கடைசியாகச் சட்டி முழுக்க இறைச்சியை கொண்டு சென்று குசினியுள் வைக்;கும் பொழுதுதான் இதயவடிப்பு கொஞ்சமாகத் தணியும்.
மாமாவும் ஒரு போத்தல் கள்ளிற்கு அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு கள்ளுத் தவறணைக்குப் போய் விடுவார்.
ஆனால் இந்தியா வந்த பொழுது கோழிக்கொலைகள் இன்னமும் கொடுமையாக இருப்பதைக் கண்டேன்.
சந்தையில் நாம் கைகாட்டும் பேட்டுக் கோழியை அல்லது சேவலை அப்படியே அலாக்காகத் தூக்கி நிறுத்தி, பக்கத்தே உள்ள மரக்கட்டையில் வைத்துத் தலையை துடிதுடிக்க துண்டித்து, அருகே கொதிக்கும் சுடுதண்ணீருக்குள் போட இறகுகள் உதிரும்.
கோழி பையினுள் வரும்.
பணம் கோழிக்காரனிடம் போகும்.
அப்பொழுது விரும்பியோ விரும்பாமலோ டென்மார்க்கில் ஒரு கோழிப்பண்ணையுள் என் வாழ்வின் கால் நூற்றாண்டு கழியும் என நான் நினைத்திருக்கவே இல்லை.
இறைச்சிப் பருவம் வந்த கோழிகள் எங்கே செல்லுகின்றோம் எனத் தெரியாமல் வரிசையா வரிசையாக இறப்பர் பட்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது அவை முதலில் மயக்கமடையச் செய்யப்படும். மயக்கம் அடைந்த நிலையில் உள்ள ஒவ்வொன்றையும் தூக்கி அதன் இரண்டு கால்களையும் மேலாக நகரும் கம்பிகளில் கொழுவி விட வேண்டும். அடுத்த அடுத்த வினாடிகளில் நகரும் கம்பி வளையம் ஒரு இரும்புத் தூணில் சுற்றிக் கொண்டிருக்கும் வட்டவடிவான வாளில் முட்டும் பொழுது கோழிகளின் தலைகள் துண்டிக்கப்படும்.
எனக்கு மயக்கமான நிலையில் கொலை செய்யப்பட்ட என் மக்களின் முள்ளிவாய்க்கால் நினைவுகள் கூடவே வந்து போகும்.
ஆனாலும் கையறு நிலையில் வாழ்வு தொடரும்.
எங்கள் ஆறு தமிழர்களின் பணி அவற்றை தூக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கம்பிகளில் கொழுவுவது தான்.
வீட்டுக்கு வரும் பொழுது இரண்டு கைமூட்டுகளும் வலிப்பதை எழுத்தில் சொல்லி விட முடியாது.
பின் மீண்டும் அடுத்த நாள் மனம் தளராத விக்கிரமாதித்தியன் போல எங்கள் கைகள் கோழியின் கால்களைப் பிடித்து தொங்க விடத் தொடங்கும்.
சென்ற ஆண்டு எங்கள் கோழிப் பக்டறியில் 5 பேர் தங்கள் 25 வருட சேவையை முடித்த பொழுது எங்கள் கம்பனி அவர்களுக்கு ஒரு மாத லீவும் ஒரு மாதச் சம்பளமும் கொடுத்ததை பல கம்பனிகள் பார்த்துப் பெருமூச்சு விட்டன.
அரச நிறுவனத்தில் எஞ்ஜினியாராய் வேலை பாத்த என் மைத்துனன் கூட ”நீங்கள் கொடுத்து வைத்தனீங்கள்” என பெருமைப் பட்டான்.
இந்த 25 வருடத்தில் காய்ச்சல் தலையிடி என்று ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் வேலை செய்ததில் எனக்கு ஒரு பெருமை.
என் தந்தையார் ஊரில் காலம் சென்ற செய்தி அதிகாலையில் கிடைத்த பொழுதும் அன்று பகல் நான் வேலைக்குச் சென்றே வந்தேன்.
துக்கம் விசாரிக்க வந்த சிலர் மனைவி பிள்ளைகளுடன் கதைத்து விட்டுச் சென்றார்கள். சிலர் நான் மாலையில் வேலையால் வரும் வரை காத்திருந்து துக்கம் விசாரித்து விட்டுச் சென்றார்கள்.
சிலவேளை பகல் வேலைக்குச் சென்று இரவு வேலையாள் யாராவது வராது விட்டால் அடுத்த 8 மணித்தியாலம் கூட வேலை செய்து விட்டுத் திரும்புவேன்.
இதனால்தான் என்னவோ என்னில் என் முதலாளிக்கு அப்படி ஒரு பிரியம்.
யாருக்கும் எளிதில் தோளில் தட்டிப் பாராட்ட மாட்டார். ஆனால் என்னை அப்படித் தட்டிப் பாராட்டுவதும் என்னில் அவர் கொண்ட நெருக்கமும் எம்மவர் உட்படப் பலருக்குச் சின்னதொரு பொறாமையை ஏற்படுத்தியது என்பதனை நன்கு அறிவேன். ஆனாலும் காட்டிக் கொள்ளமாட்டேன்.
எனவே தான் அந்த வெள்ளி விழாப் பணத்தில் பயணம் செய்வதை நினைக்க நினைக்க எனக்கே பெருமையாக இருந்தது.
என் தோள்களை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.
ஏற்கனவே சேமித்து வைத்திருந்த அந்த ஒரு மாத பிரத்தியோக பணத்துடனும்;… வழமையான ஐந்து கிழமை விடுமுறையுடன் இந்த பிரத்தியோக விடுமுறை ஒரு கிழமையையும் சேர்த்து மொத்தம் ஆறு கிழமை இலங்கைக்கு சென்று வர முழுக் குடும்பமுமே பிரியப்பட்டது.
சின்னவன் பிறந்த பொழுது கதிர்காமத்தானுக்கு வைத்த நேர்த்திக்கடன் நிறைவேறப் போகும் மகிழ்ச்சியில் மனைவியும் மகளும் மகனும்.
என்னுடன் சேர்ந்த மற்றைய நான்கு பேரும் தாங்களும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் செல்லவே பிரியப்பட்டார்கள்.
கோடைகாலம் வரை காத்திருந்தால் விமான ரிக்கற்றுகளின் விலைகள் அதிகமாகும் என்ற காரணத்தால் வின்ரர் வந்த பொழுதே மலிவு விலையில் விமான ரிக்கற் வாங்கி விட்டோம்.
சிலர்: டென்மார்க் – கட்டார் – இலங்கை – மீண்டும் கட்டார் வழியாக டென்மார்க்.
சிலர்: டென்மார்க் – கட்டார் – இலங்கை – இந்தியா – மீண்டும் கட்டார் வழியாக டென்மார்க் எனத் திட்டமிட்டிருந்தோம்.
எனது மனைவி இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக பக்கத்தே உள்ள ஜேர்மனிக்கு போகும் பொழுதெல்லாம் பிரசித்தி பெற்ற சொக்கிலேற்றுகளையும்;… டென்மார்க்கில் வின்ரர் விடுமுறையைத் தொடர்ந்து வரும் மலிவு விலைச் சந்தைகளில் எங்கள் ஒழுங்கையில் உள்ள உறவினர்கள் அனைவருக்கும் நல்ல ஆடைகளும் என பல விதமான பொருட்களை வாங்கிச் சேகரிக்க தொடங்கி விட்டாள்.
வின்ரர் முடிந்து… பனி உருகி ஓடிப் போக… வசந்தகாலப் பூக்கள் மலர்ந்து கொண்டிருந்தன.
இன்னமும் கோடை விடுமுறைக்கு 3 மாதங்களே இருந்தன.
மணிக்கூட்டின் நேரக் கம்பி முள்ளை முன்னே நகர்த்தி, காலத்தின் அளவை ஒரு மணித்தியாலதால் கூட்டி விடும் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிற்றைக் கடந்த ஒரு திங்கள் காலையில் அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கே பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது.
வெள்ளி விழாவை நேக்கி காத்திருந்த அனைத்து ஊழியர்களும் கலவரப்பட்டுக் கொண்டார்கள்.
கடந்த ஆண்டு கம்பனிக்கு நஷ்டம் என காட்டி எங்கள் 25 பேரையும் பணிநீக்கம் செய்து விட்டார்கள் என்று டெனிஷ்காரர்கள் கூக்குரல் போட்டுக் கொண்டு நின்றார்கள்.
25 பேரும் 25 வருட பணிக்காலத்தை முடித்து விட்டால் எங்கள் 25 பேருக்கு தரவேண்டி பணம் அவர்களுக்கு மிச்சம் எனக் கணக்குப் போட்டு விட்டார்களாம்.
புதிதாக வரவிருக்கும் 25 பேருக்கும் எங்களுக்குத் தரப்படும் சம்பளமும் கொடுக்கத் தேவையில்லை. எங்கள் சம்பளத்தின் ஒரு பகுதி நாங்கள் வேலை செய்த ஆண்டுகளுக்குரிய அனுபவத்திற்கானது.
கணக்கைச் சரி செய்து இலாபத்தைக் கணிப்பதற்காகத்தானே கற்றறிந்த கணக்காளர்கள் இருக்கின்றார்கள்.
கோழியை தூக்கிக் கொழுவ அனுபவம் என்ன அனுபவம் வேண்டியிருக்கிறது?
சட்டத்தில் இருந்த ஓட்டையை நன்கு பயன்படுத்தி விட்டார்கள்.
*
விடுமுறைக்குப் பயணம் போய் கரும்;புச்சாறு குடிக்கும் மனநிலையில் இன்று நான் இல்லை.
என் மனைவி பிள்ளைகளும் என்னை வற்புறுத்தப் போவதில்லை..
அந்த இயந்திரம் தொடர்ந்தும் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது.
கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது – தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை போல.
அது சக்கை தான் –
சில குடும்ப உறவுகளில் சிலர் போலவும்….
சில நட்பு வட்டங்களில் சிலர் போலவும்…
(யாவும் கற்பனை அல்ல)