கன்டோஸ் – சிறுகதை – வி. ஜீவகுமாரன்
டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை; பண்ணியிருக்கவில்லை.
கன்டோஸ்என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ், மாபோ, றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என அறிந்து கொண்டேன்.
அவ்வாறுதான் சிகரட் என்றால் திறீரோசஸ் என நினைத்திருந்த காலமும் உண்டு – பிறிஸ்டல் இலங்கையில் அறிமுகமாகும்; வரை.
அறியாத வயதில் இலங்கையில் எங்கள் வீட்டில் தொங்கிய பாரதியினதும், திருவள்ளுவரினதும், காந்தியினதும் படங்களைப் பார்த்து அவர்கள் இலங்கைச் சேர்ந்தவர்கள் என்றே நினைத்திருந்தேன். எங்கள் மாமா வீட்டின் சுவரில் சுபாஸ்சந்திரபோஸின் கம்பீரமாக வீற்றிருப்பார்.
கடந்த இருபத்தைந்து வருடமாய் மறந்திருந்த கண்டோஸை இன்று கண்ட பொழுது இந்த எண்ணங்கள் எல்லாம் என்னுள் எழுந்து வருகின்றது.
இப்பொழுது டென்மார்க்கில் உள்ள அனைத்து தமிழ் கடைகள் எல்லாவற்றிலும் அனைத்து இலங்கைச் சாமான்களையும் வாங்க முடியும்.
கலியாண வீடுகளுக்கே குலைவாழையும் செவ்விளனியும் கட்டுகின்றார்கள். மல்லிகையும் கனகாம்பரமும் பெண்களின் தலையை நிறைத்திருக்கின்றது.
மரணவீடுகளில் கூட பாடை கட்டி, சிவத்தக் கம்பளம் விரித்து பறைமேளம் அடித்து பிரேத ஊர்வலங்கள் செல்லுகின்றன.
பணமும், கணனி ஒலகத்தின் வசதியும் பெருக பெருக உலகம் மிகவும் சுருங்கித்தான் போய் விட்டது.
அது மட்டுமில்லை வேகமாகவும் ஓடிவிட்டது போலப்படுகிறது.
கம்பஸ் வாசல் கடையில் கன்டோஸை வாங்கி, கயல் என நான் அழைக்கும் கயல்விழிக்கு நீட்டியது நேற்றுப் போல் இருக்கின்றது.
அவள் முறைத்து விட்டுப் போனது…. பின் தமையன்மார் அடிபட வந்தது…. கயலுக்கு பின்னால் வந்த சுபாக்கு தான் நான் நீட்டியது என சமாளித்தது… பினபு முதலாம் ஆண்டில் திறமைச் சித்தியுடன் நான் பாஸாகிய பின்பு அதே கயலுடன் சுப்பிரமணியம் பார்க்கின் ஒரு வாங்கில் அமர்ந்து கன்டோசை பிரித்து இருவருமாய் உண்டது… இனக்கலவரம் காரணமான நான் நாடு விட்டு வெளியேற கயலுக்;கு வேறு இடத்தில் திருமணம் ஆகியது எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கின்றது.
கயலின் கலியாணச் சேதி கேட்ட பொழுது எல்லா இளைஞர்களுக்கும் அந்த வயதில் வரும் ஒரு தேவதாஸ் கவலை எனக்கும் வந்தது உண்மைதான். ஒரு கிழமைக்கு மேல் சவரம் செய்யாத தாடியுடன் என்னைக் கண்ணாடியில் பார்க்க சகிக்க முடியவில்லை. எல்லாத்தையும் வழித்து எறிந்து விட்டு புதிய கணனித்துறை வகுப்பில் இணைந்து கொண்டேன்.
கயல் இருந்த இடத்தில் கணனி உலகம்.
அதனை மிகவும் நான் நேசித்தேன். பிழையாக நான் ஏதாவது எழுதினால் இந்தத் தவறை நான் சரியாக்கும் வரை என்னுடன் கோபித்துக் கொண்டு இருக்கும். பின்பு நான் பிழையைச் சரி செய்யும் பொழுது என்னுடன் நட்புப் பாராட்டும். ஒருநாளும் தனக்குள் வைத்து சாதிக்காது.
அந்த உலகத்தினுள் சென்ற பின்பு கயல் என்பதே எனக்கு ஒரு நிழல் போலாகி விட்டது. சத்தியமாகச் சொல்லுகின்றேன். இன்றுவரை அம்பிகா அமராவதி… லைலா மன்ஜு மற்றும் இதர பல காதல் ஜோடிகளின் தர்மங்களும் புரிவதில்லை. தார்ப்பரியங்களும் தெரிவதில்லை. கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றியா? கயலை உண்மையாக காதலித்தேன் என்பதும் உண்மை. இன்று அவள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்கின்றேன் என்பதும் உண்மை.
கயலுடனான என் காதலையும் பிரிவையும் கணனித்துறையில் என் ஆர்வத்தையும் எனது வாழ்வின் பாகம் 1 என வைத்துக் கொள்ளலாம்.
* * *
முகம் கழுவும் பொழுது கண்ணாடியினுள் தெரியும் என் முகத்தை என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கின்றது.
கண்ணுக்கு கீழே கறுத்து தழும்பு போலவும் கன்னமயிர்கள் கொஞ்சமாய் நரைத்தும்… பழைய இளமைத் தோற்றத்துடன் ஒப்பிடும் பொழுது இது கொஞ்சம் கம்மிதான்; என்று தோன்றுகின்றது.
”இளமைக்காலத்தை தாண்டி இருபத்தைந்து வருடம் ஓடி விட்டது”, என்று கன்னத்தில் இயற்கை போட்டுள்ள கறுத்தக் கோடுகளை நான் ஏற்றுக் கொண்டேதான் ஆகவேண்டும்.
பவித்ராக்கு முன்முடியில் நரைவிழுந்த பொழுதும் சரி… அதை இட்டு அவளை நான் கிண்லடித்த பொழுதும் சரி அவள் அதனைப் பெரிய விடயமாகவே எடுக்கவில்லை.
”நீங்கள் வடிவாய் எனக்குப் பக்கத்தில் வாறதே எனக்குப் போதும்”, என்று விட்டு அவள் பிள்ளைகளின் வேலைகளில் ஈடுபட்டுவிடுவாள்.
எத்தனையோ தடவை தலைக்கு டை அடிக்கச் சொல்லி நான் வற்புறுத்திய பொழுதும் அவள் கேட்கவேயில்லை. மூத்த இருமகள்களின் திருமணத்தின் பொழுது கூட அவள் தன்னைப் பற்றிய எந்த வித நினைப்பும் இல்லாது, எந்தவித மேக்கப்பும் செய்யாது இரவு முழுக்க அவர்களின் பொருட்களை எடுத்து எடுத்து வைத்துக் கொண்டு திரிந்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. எங்கள் உறவுப் பெண்கள் முதன்நாளே பியூட்டிபாலருக்குப் போய் தலைமுடிகளைச் சுருட்டியும், கண் இமைகளைச் சரி செய்து வந்த போது அவர்கள் இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தான் செய்து வைத்திருந்த மல்லிகை மாலைகளை தலையில் வைத்து அழகு பார்த்தாள்.
கடைசியாக எங்கள் இளையமகனின் கல்யாணத்துக்கு நானும் அவளின் உறவினர்களும் நெருக்கிய பொழுதுதான் தலைக்கு ’டை’ அடித்துக் கொண்டாள்.
அதுவும்… நான் கொஞ்சம் கோபித்து… பின்பு அவள் கொஞ்சம் மூக்குச் சிந்தி… எப்பொழுதும் பவித்திராக்கும் அப்படி ஒரு சின்ன சின்ன போர் மூட்டம் மூழ்வதும் பின்பு காற்றடித்தால் அலையும் மேகம் போல் கலைந்து போவதுண்டு.
கயலின் நினைவுகள் என்னுள் நிழலாகி மறைந்து போனபொழுது 12 பொருத்தங்களில் வசியப் பொருத்தம் தவிர மற்றைய 11 பொருத்தங்களும் பொருத்தி வர… ஊரின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்து மிகப்பெரிய சீதனத்துடன் எங்கள் குடும்பத்தில் தரகர் சுப்பையா காலடி வைத்து எனது இரண்டு அக்காக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாய் அமைந்த பின்பு தனியே விமானம் ஏறி டென்மார்க் வந்தவள்தான் பவித்ரா.
திருமணம்… மாங்கல்யம் தந்து தானே… பந்தி… பரிமாற்றம் எல்லாம் எங்கள் நகரத்தில் வசித்திருந்த நாலைந்து குடும்பத்துடனே நடந்து முடிந்தது.
முதலிரவு என்று சொல்லுற அந்த இரவில் பவித்திராவிடம் கேட்டேன், ”இத்தனை இலட்சங்கள் கொடுத்து எங்கள் வீட்டுக்கு வந்திட்டு இப்படி அனாதை மாதிரிக் கல்யாணம் நடக்கும் பொழுது உனக்கு கவலை இல்லையா” என்று.
சின்னதாய் ஒரு புன்னகைத்து விட்டு, ”உங்களிடம் ஒன்று கேட்கட்டா?” என்றாள்.
”உம்… கேள்”
”இப்பவும் நீங்கள் கயலை மிஸ் பண்ணுறீங்களா”
”இல்லை…”
”அது போதும் எனக்கு….”
தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவளை கைகளால் அணைத்துக் கொண்டேன்.
அந்த அணைப்பின் இறுக்கம் முதல் பத்தாண்டுகளில் மிகவும் அதிகமாய் இருந்தது.
எப்படி அவளுக்கு கயலின் கதைகள் தெரியும் அது இது எதுவுமே இன்றுவரை அவளிடம் நான் கேட்கவில்லை. பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, எனது வாழ்வின் இளமைக்காலக் கதைகள் தெரிந்தும் எதுவுமே இல்லாதது போல அவளால் என்னுடன் இணைந்த பொழுது அவள் சராசரி யாழ்ப்பாணத்தின் பிரதிநிதி இல்லை என்று எனக்கு நன்கு புரிந்தது.
சராசரிப் பெண்ணாக இல்லாத அவளின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சராசரி பெண்ணாக இல்லாத காரணமே எங்களுக்குள் வீட்டினுள் சிலசில வேளைகளில் போர் மூழவும் காரணமாகி விட்டது.
மூத்தவள்…
இளையவள்…
கடைசி மகன்…
மூன்றாண்டு மூன்றாண்டு வித்தியாசத்தில் மூவருமே பிறந்த பொழுதும்… ஒவ்வோர் பிள்ளைகளின் பாடசாலைகள்… ரியூசன் வகுப்புகள்… விழாக்கள்… விளையாட்டுப் போட்டிகள்…. கோடைகாலச் சுற்றுலாக்கள் என அவர்களுடன் சேர்ந்து நானும் பவித்திராவும் ஓடத் தொடங்கிய பொழுது பல தடவை என்னால் அவர்கள் நால்வருடன் சேர்ந்து ஓட முடியாமல் போனதும் உண்டு. அவ்வாறான ஓர் நாளில் எங்கள் வீட்டில் ஒரு கலம்பகம் வெடிக்கும். பிள்ளைகள் மூவரும் நடுங்கி கொண்டு புத்தகத்தினும் தலையை வைத்துக் கொண்டு மேல் பக்கத்தால் எங்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்.
அடுத்த நாள் விடியும் பொழுது புற்களின் மேல் படிந்திருந்த பனி போல் எல்லாக் கோபமும் கரைந்து விடும். மீண்டும் காலை ஆறு மணியில் இருந்து ஐவரின் ஓட்டமும் தொடங்கி விடும்.
முதலாவது போர் வெடித்தது – மூத்தவளுக்கு டாக்டருக்கு படிக்க புள்ளிகள் போதியதாய் இருந்தும் தான் ஒரு சிகை அலங்கார நிபுணராய் வர வேண்டும் என்ற பிரியப்பட்ட பொழுதுதான்.
பவித்திரா அதனை ஆதரித்தாள்.
என்னால் அதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
”கண்ண கண்ட சாதியளுக்கு எல்லாம் முடிவெட்ட அனுப்பப் போறீயோ” என்னை மறந்து என்னுள் வெடித்த வார்த்தைகளை நினைத்து இன்றும் எனக்குள் வெட்கப்படுவதுண்டு.
கடைசியில் வென்றது தாயும் மகளும் தான்.
குடும்பத்தில் நான் கையாலாகதன் போல உணர்ந்த நாள் அது.
மூத்தவள் அந்தத் துறையில் சிறப்புத் தேர்வாகி தொலைக்காட்சி ஒப்பனை பகுதிக்கு உயர் அதிகாரியாகிய பொழுது தந்தை என்ற ஸ்தானத்தில் கோர்ட்டும் சூட்டும் போட்டுப் போய் பக்கத்தில் நின்றாலும் அவள் டாக்டருக்கு படிக்கவில்லை என்ற வருத்தம்; இன்னமும் எனக்குள் உண்டு.
அடுத்த இரண்டாவது பெண். பன்னிரண்டாம் வகுப்பு முடிய பல்கலைக்கழகம் செல்ல முதல் தனியே பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆபிரிக்காக்கு எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவி செய்யப் போகின்றேன் என்று புறப்பட்டு பொழுது வீட்டில் அடுத்த போராட்டம் நடந்தது.
அப்போதும் மகளும் தாயும் ஒரு பக்கம் தான்.
”எப்படி 3 மாதம் பொடி பெட்டையளோடை தனிய அனுப்புறது?… என்ன கூத்து அடித்து என்ன மாதிரி வந்து நிக்கப் போதுகளோ”, நான் அடுக்கிக் கொண்டே போனேன்.
”நான் கூட 83 கலவரம் நடந்த பொழுது கொழும்பு அகதி முகாம்களில் போய் வேலை செய்தனான் தானே?… அப்பாவும் விட்டவர் தானே?… நீங்கள் ஏன் பயந்;து நடுங்கீறீங்கள்… அவள் என்னுடைய பிள்iளை… அவளுக்கு எந்த தீங்கும் வராது”
பவித்திரா சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது நான் குறுக்;கிட்டு, ”அப்ப அவளை நீ வேறை தாருக்கும்…..”.
கோபத்தில் வார்த்தையை விட்ட நாள் அது.
அன்று முழுக்க பவித்திரா அழுது கொண்டே இருந்தாள்.
இளையவளும் அந்த ஆண்டு ஆபிரிக்காவுக்குச் செல்லவில்லை.
வெளிநாட்டுக்கு சென்று வேலைபார்த்த அனுபவம் இருக்கா என அவளின் பல்கலைக்கழக விண்ணப்ப படிவத்தில் கேள்வி கேட்டிருந்த பொழுது அவள் நிமிர்ந்து பார்த்து பார்வை இன்னமும் என்னுள் உறுத்திக் கொண்டு இருக்கின்றது.
அந்த ஆண்டு அவள் விரும்பிய பிரிவில் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.
இறுதியாக எங்கள் குடும்பத்தை குலைத்துப் போட்ட பிரச்சனை இளையவன் பிரதீப் ஒரு டெனிஷ் பெண்ணை தான் திருமணம் செய்யப் போகின்றேன் என்ற பொழுதுதான்.
அப்போது அவனுக்கு பத்தொன்பது வயது.
இப்போதும் பவித்திரா மகனின் பக்கம் தான்.
”எங்கடை நாட்டிலை தமிழாக்கள் சிங்களவரைக் கட்டுறேல்லையே… அப்பிடித்தானேப்பா இதுவும்”
”சிங்களத்தி எண்டாலும் கடைசிவரை இருப்பாள்… இவளவை நாளைக்கு கூடின சம்பளத்திலை ஒருவனைக் கண்டவுடனை போய்விடுவளவை….”
”கயல் மட்டும் ஓழுங்காக…” பவித்திராவை அறியாமல் வந்த வார்த்தைகள் தான் அது என எனக்கு நல்லாய் தெரியும்.
அன்று வீட்டினுள் ஒரு பிரலயமே நடந்தது.
பிள்ளைகளின் முன்னால் கயலின் பெயரை இழுத்ததற்காக பவித்திரா காலில் விழுந்து கூட மன்னிப்புக் கேட்டாள்.
என்னுடைய கோபம்… மனக் டெனிஸ்காரியைக் கட்டப் போகின்றான் என்று அவமானம்… என் இயலாமை எல்லாம் சேர்ந்து பவித்திராவையே தண்டித்தது.
வீட்டை விட்டு வெளிக்கிட்டுப் போய் விட்டேன்.
என் கைத் தொலைபேசிக்கு மூத்தவளும் இளையவளும் பிரதீப்பும்;, பவித்திராவும் அடித்துக் கொண்டே இருந்தார்கள்.
அடுத்து வந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஹோட்டலிலேயே தங்கினேன்.
மூன்றாம் நாள் வேலைக்கு வந்த பொழுது வாசலில் பவித்திரா காத்திருந்தாள்.
”பிரதீப் வீட்டை விட்டு யோய் விட்டான். நீங்கள் வாங்கோ”
எனக்கு என்னையே வெறுத்த மாதிரி இருந்தது.
நான் சராசரித் தகப்பனா? இல்லையா?? என எனக்கே தெரியவில்லை.
இதொன்றும் இலங்கை இல்லை…. பிள்ளைகளை மீண்;டும் இழுத்து வந்து எங்கள் வீட்டில் வைத்திருக்க.
அந்த ஆண்டு வின்ரர் முடிந்து அடுத்த ஆண்டு இiலையுதிர் காலம் வரை எங்கள் வீட்டினுள் நாலுபேர் நடமாடினோமே தவிர வீட்டினுள் எந்த உயிர்ப்பும் இல்லை.
பிரதீப் விட்டுச் சென்ற வெற்றிடம் வெற்றிடமாயே இருந்தது.
பவித்திரா மட்டும் மகள்மாரையும் என்னையும் எந்த விதக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
மற்றும் வேளைகளில் வீட்டினுள்உள்ள சுவாமி அறையுள் அவள் பொழுது போகும்.
அன்று இலையுதிர்கால விடுமுறை தினம்.
குளிர்காற்றும் கூதலும் வீதியின் இலைகளை எல்லாம் வாசலில் கொட்டிக் கொண்டு இருந்தது.
மங்கலாக ஒரு உருவம் கதவடியில் தெரிந்தது.
கதவைப் போய் திறந்தேன்.
பீரதீப் கண்கலங்க நின்றான்.
எனக்கும் கண் கலங்கியது.
அவனது டெனிஷ் காதலி அவனை விட்டு விட்டுப் போய் விட்டானாம்.
”நீ கவலைப்படாதை அப்பா நான் இருக்கிறன்!”, அவனுக்கு நான் ஆறுதல் சொன்னேன்.
”எதுக்கு அவன் கவலைப்பட வேணும். அவன் இப்பதான் உலகத்தை படிச்சிட்டு திரும்பி வந்து இருக்கிறான்” பவித்திரா உறுதியாகச் சொன்னதில் எவ்வளவு உண்மை இருந்தது.
அவன்; தாயின் மடியினுள் போய் படுத்துக் கொண்டு அழுதான்.
நான் பக்கத்தில் இருந்து அவன் தலையை தடவிக் கொண்டே இருந்தேன்.
அவன் மேலும் அழுதான்.
பவித்திராக்கு கண்களால் ஓடிக்கொண்டே இருந்தது.
எனக்கும் கூடத்தான்.
இந்த இல்லற வாழ்வின் போராட்டத்தை எனது வாழ்வின் இரண்டாம்; பாகம் என வைத்துக் கொள்ளலாம்.
* * *
மூன்று பிள்ளைகளும் திருமணம் முடிந்து தனித்தனியே போன பொழுது நானும் பவித்திராவும் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டது போல ஒரு உணர்வு.
மூன்று பிள்ளைகளும் தங்களுடன் வந்திருக்குமாறு வற்புறுத்தினார்கள்.
நாங்கள் இருவருமே மறுத்து விட்டோம்.
இந்த விடயத்தில்தான் பவித்திரா பி;ள்ளைகளின் பக்கம் நில்லாது எனது பக்கத்தில் நின்றது.
இந்த தனிமை கொடுத்து அந்திமக் காலத்தில்தான் பவித்திராவுடன் ஆன என்வாழ்வை என்னால் அசைபோட்டுப் பார்க்க முடிந்தது.
அதுவரை ஓட்டம்… பணத்திற்கான ஓட்டம்… பிள்ளைகளின் படிப்பிற்கான ஓட்டம்… அவர்களின் திருமணத்திற்கான ஓட்டம் என கடிகாரத்தின் சின்னமுள் பெரியமுள் போல ஒரே ஓட்டம்.
அந்த ஓட்டம் தரும் ரென்சன்… இரத்தக் கொதிப்பு.
பவித்திராவோ இடிவந்து விழுந்தாலும் எந்த அசையும் காட்டாது ஏதோ ஒரு சுலோகத்தை வாயினுள் சொல்லிக் கொண்டு என்னுடனும் பிள்ளைகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவளை நான் திரும்பிப் பார்த்த கணங்கள் குறைவென்றே எனக்குப் பட்டது.
இன்று இந்தக் கடையில் இந்தக் கன்டோஸைக் கண்டதும் அதனை வேண்டி அவளுக்கு கொடுக்க வேணும் போல் இருந்தது.
அழகாக அதனை பாசல் பண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் சின்னப் புன்னகையுடன் நுழைந்தேன்.
”என்ன பழைய சிரிப்பு”
அவளால் என்னுள் தெரியும் எந்தச் சின்ன மாற்றத்தையும் கண்டு கொள்ள முடியும் என எனக்குத் தெரியும்.
பாசலை நீட்டினேன்.
மெதுவாக பிரித்தாள்.
அவள் முகம் மலர்ந்தது.
உதட்டினுள் புன்னகைத்தபடி ”கயலை நினைத்துக் கொண்டு எனக்கு வேண்டித் தரவில்லைத் தானே”, என்னைச் சீண்டினாள்.
”கிழவிக்கு என்னோடை ஒரு சேட்டை”, என்றபடி அவளின் மூக்கை செல்லமாகத் திருகினேன்.
”ஆ… நோகுது… விடுங்கோ” எனக் கத்தினாள்.
மூக்குமின்னியில் பதித்திருந்த வைரக்கல் மின்னியது.