”இனிமேலும் காதல் என்கின்ற ஒரு பெயரில் உங்களை நான் ஏமாற்றிக் கொண்டு இருக்கவில்லை.
நான் உங்களை விட்டு பிரிந்து போகும் நேரம் வந்து விட்டது என்பதனை நன்கு உணர்கின்றேன்.
நீங்கள் இனியொரு தடவை உங்கள் வேலையிடத்திலோ…அல்லது குடும்ப நிகழ்ச்சிகளிலோ… அல்லது உங்கள் வயதான தாய் தந்தையர்கள் பார்க்கும் ஒரு பெண்ணையோ திருமணம் செய்து உங்களை நம்பி வரும் அந்தப் பெண்ணுக்கு என்னில் செலுத்திய காதலின் அளவின் ஒரு துளியைக் கூட குறையாமல் செலுத்தி நீங்களும் சந்தோசமாக இருந்து அவளையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோளும் உண்டு;. என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் என்னைச் சந்திக் நேர்ந்தால் அச்சமயம் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு அன்ரி… அது… இது … என்று அழைக்கச் சொல்லாமல் அம்மா என்று ஒருதரம் அழைக்கச் சொல்லுங்கள். நான் என் பிறப்பின் பலனை அடைந்து விட்டதாகவே அன்று எண்ணிக்கொள்வேன.
இங்ஙனம் என்றும் அன்புடன் உங்கள் சுமி”
சரியாக பத்து வருடங்களுக்கு பின்பு…. இன்று என் மனைவிக்குத் தெரியாமல் அவள் எழுதிய அந்தக் கடிதத்தை மீண்டும எடுத்து படிக்க நேரிட்டது.
*
யாழ்ப்பாண மக்கள் வங்கியில் வங்கியில் சுமியை நான் சந்தித்த பொழுது எனக்கு வயது 27. அவளுக்கு 25.
நான் வேலை செய்த வங்கியில் அவளும் காசாளராக சேர்ந்திருந்தாள்.
வங்கியில் அவளை விட 4 வருட கூடிய அனுபவம் அவளுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுப்பதற்கும் அவளுடன் சற்று நெருங்கிப் பழகுவதற்கும் காரணமாய் இருந்தது.
எல்லோர்க்கும் அந்த வயதில் வரும் இனக்கவர்ச்சி அல்லது இன்ப(ற்)க்குவேஷன் என்று சொல்லும் ஒரு காதல் எனவே முதலில் எண்ணியிருந்தேன்.
ஆனால் அவள் ஒருநாள் வேலைக்கு வராவிட்டால் தோன்றிய தவிப்பும்… வேறு யாராவது ஆண்களுடன் அவள் பேசிக்கொண்டு இருந்தால் தோன்றிய பொறாமையும் கோபமும்… என்றோ ஒரு நாள் தனது சாப்பாட்டை எனக்கு பகிர்ந்து கொடுத்தால் அதில் எழும் சந்தோசமும்… அழகான காலணிகளைச் சரி காதணிகளைச் சரி காணும் பொழுது சுமிக்கு அவை அழகாக இருக்கும் என் மனதில் எழுந்த எண்ணங்களும்… மேலாக வங்கி ஊழியர்கள் அனைவரும் கொழும்புக்குச் சென்று வெள்ளவத்தை பீச்சுக்கு போன பொழுது இதர பெண்கள் குளிக்கச் சென்ற பொழுதும் அவள் மட்டும் குளிக்கச் செல்லாமல் என் உடுப்புகளை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டு கடற்கரையில் இருந்த அழகும்… காற்றில் பறந்து கொண்டிருந்த அவளது கேசங்கள் போல என் மனதை ஆட்டி அலைத்துக் கொண்டே இருந்தது.
இது காதல்தான் என மனதும் அறிவும் சேர்ந்தே சொல்லின.
கொழும்பால் வந்து அடுத்த சனி ஞாயிறு விடுமுறை கழிய வந்த திங்கள் கிழமை என் முழுத்தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு, மதிய இடைவேளைக்கு பின்பு ஒவ்வொருவரும் தம் தம் காசுக் கணக்குகளை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது மெதுவாக அவளிடம் கேட்டேன், ”;இன்று வேலை முடிய றிக்கோ கூல்பாருக்கு வருகிறீர்களா?” என்று.
நிமிர்ந்து பார்த்தாள்.
கண்களில் அச்சம் தெரிந்தது.
“உங்களிடம் ஒரு விடயம் பேச விரும்புகின்றேன்”
“மாட்டேன்” என்பது போலத் தலையாட்டினாள்.
அந்த வினாடி நான் அனுபவித்த அல்லது எனக்குள் எழுந்த உணர்வுகளை எனக்கு சொல்லத் தெரியவில்லை.
மனம் ஒட்டாது கைவிரல்கள் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தன.
ஒவ்வோர் முறை எண்ணிய பொழுது ஒரு ஆயிரம் ரூபாய் கூடியது. அல்லது குறைந்தது.
என்னையே நான் சினந்து கொண்டிருந்த பொழுது சுமியாகவே என் காசை வேண்டி எண்ணினாள்.
கணக்கு சரியாக இருக்கின்றது எனச் சொன்னபடியே எனது காசுகளை 50 – 100 – 200 – 500 – 1000 கட்டுகளாய் கட்டித் தந்தாள்.
“தாங்ஸ்” என்றேன்.
“இதுக்கு எதுக்கு தாங்ஸ்?… நான் வரமாட்டேன் என்று சொன்னதற்கு கோபித்துக் கொள்ளாதையுங்கோ” என்றபடியே எழுந்து கொண்டாள்.
அன்றைய நாள் எனக்கு சூனியம் சூழ்ந்த நாளாகவேபட்டது.
வீட்டிற்கு போன பொழுதும் அம்மா மீதும் தங்கை மீதும் தேவையில்லாமல் எரிந்து விழுந்து கொண்டு இருந்தேன் என்பது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
அம்மா “ஏனடா.. காரணம் இல்லாமல் எரிஞ்சு விழுகிறாய்” என்ற பொழுது தங்கை அச்சொட்டாகச் சொன்னாள், “விடும்மா… அண்ணாவின்ரை அப்பிளிக்கேசனை யாரோ றியற் பண்ணிப் போட்டாளவை போல…” என்று.
கையில் இருந்த தேனீர் கோப்பையை அவளில் படாமலே அவளை நோக்கி எறிந்தேன்.
“வேண்டுறதே அரைப்போத்தல் தண்ணி கலந்த பால். அதைவேறு வீணடித்துப் போட்டார் எங்கடை ஹீரோ” என்றவாறு அந்த வாண்டு ஓடிவிட்டது.
அப்பா எதுவும் சொல்லாது மௌனமாக பேப்பரினுள் தலையை வைத்துக் கொண்டு இருந்தார்.
பின்பு நான் அவரை நான் பார்க்காத வேளையில் என்னை திரும்பிப் பார்த்தார் – நான் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றானா என்று.
பின்பு என்ன நினைத்தாரோ… “டே ஆட்டோகிராவ் பார்த்தியா… கடையிலை வேலை செய்யுற பொடியள் எல்லாம் இராத்திரி போய் பார்த்துவிட்டு வந்து நல்லபடம் எண்டு கதைச்சுக் கொண்டு நிண்டவங்கள். நீ ஒரு தரம் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லு எப்பிடி இருக்கு என்று. நானும் அம்மாவும் தங்கச்சியும் பிறகு போய்ப் பார்க்கலாம்”
அதுதான் அப்பா.
அப்பா சொன்னதுபோல் அன்று போய் படம் பார்த்து வந்தாலும் படத்தினுள் என்னால் நன்கு ஒட்ட முடியவில்லை.
சுமியே வந்து கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் எப்போது வரும் சுமியை எப்போது காண்பேன் என்பதிலேயே மனம் துடித்துக் கொண்டு இருந்தது.
ஆனால் சுமி அடுத்த மூன்று நாளும் வேலைக்கு வரவில்லை.
சுகவீனம் என அறிவித்து இருப்பதாக மனேஜர் சொன்னார்.
நான் மனதைக் கல்லாக்கி கொண்டேன் – அல்லது தினம் தினம் கட்டாயம் கையால் காசு போட்டு வங்கிக்கு கட்டவேண்டும் என்று எனக்குத் தெரியும்.
செவ்வாய் – புதன் – வியாழன்.
அர்த்தமற்ற 3 தினங்களாய் ஓடிப் போக வெள்ளி காலையில் தலையெல்லாம் மல்லிகை பூ வைத்து சிறிய சந்தனப் பொட்டும் அதன் நடுவில் இன்னும் சின்னதான குங்குமப் பொட்டும் சிறிய விபூதிக் குறியுடன் சுமி வங்கிக்கு வந்தாள்.
கோயிலுக்குப் போய் வந்திருக்க வேண்டும்.
மனத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் நான் வெளிக்காட்வில்லை.
மௌனமாக வேலை போய்க் கொண்டு இருந்தது.
அன்று வெள்ளிக்கிழமையாதலால் வங்கியிலும் கூட்டம் அதிகம்.
வேலையினிடையே மெதுவாக கேட்டேன் “இப்போ உடம்பு தேவலையா?… மருந்தெல்லாம் ஒழுங்காக எடுக்கிறீங்களா” என்று.
தலைநிமிராமலே காசை எண்ணிக் கொண்டு, ‘ஊம்’ கொட்டியவள், “சுகவீனம் என்றால்தானே மருந்து எடுக்கிறத்திற்கு” என்றாள்.
அவள் கண்கள் படபடத்தது.
”என் மீது கோபமா?” கேட்டாள்.
”ஆம் என்று சொல்லவா?… இல்லை என்று சொல்வா?”
“நீங்கள் கேட்ட றிக்கோ கூல்பாருக்கு இன்று வேலை முடிய போவோமா?”
நான் அதிர்ந்து போனேன்.
“சுமி”
வாய் அழைத்தது.
சொற்கள் வெளியில் வரவே இல்லை.
அவள் வேலையில்; துரிதமானாள்.
நானும் தான்.
அன்று கணக்கு முடித்த பொழுது ரூபாய்களில் மட்டுமில்லாது சதக் கணக்கில் கூட ஒரு சதம் கூடவும் இல்லை. குறையவும் இல்லை.
*
மாலை ஐந்து மணிபோல் றிக்கோ கூல்பாரின் ஒரு மூலையில் நேரெதிரே இருவரும் உட்கார்ந்து கொண்டோம்.
சர்வர் பையன் தினம் தினம் வரும் வழமையான காதலர்களையே பார்த்து புன்னகைப்பது போல புன்னகைத்தவாறு உணவுப்பட்டியலை நீட்டினான்.
இருவருமே றோல்ஸ்க்கும் கோப்பிக்கும் ஆடர் கொடுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.
நேரம் போய்க் கொண்டிருந்தது.
“சொல்லுங்கோ” நானே ஆரம்பித்தேன்.
“நீங்கதான் சொல்ல வேணும்? ஏன் திங்கள் கிழமை இங்கு வரக் கேட்டனீங்கள்?”
“அதுதான் நீங்கள் மாட்டன் என்று விட்டீர்களே… இன்று நீங்கதானே வரச் சொன்னனீங்கள். அதுபடியால் நீங்கள் தான் சொல்ல வேணும்”
அவள் தலையைக் குனிந்தபடி இருந்தாள்.
“சுமி”
தலையை நிமிர்த்தினாள்.
“உங்களுக்கு என்னிலை விருப்பமா?”
அவள் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
“சுமி…”
கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
‘ஆம்’ எனத் தலையாட்டினாள்.
எனக்கு அப்பாடா என்று இருந்தது.
“இதைச் சொல்ல உங்களுக்கு மூன்று நாள் காச்சல் லீவு. எனக்கு மூளைக்காச்சல் – இந்தக் கிழமை முழுக்க…”
“இல்லை…”
“என்ன இல்லை?…”
“இப்பிடி ஒன்று நடந்து விடக்கூடாது… நீங்கள் என்னிடம் கேட்டு விடக் கூடாது… கேட்டால் நானும் ‘ஆம்’ என்று சொல்லிவிடக் கூடாது என்று வேலைக்கு வந்த அடுத்த நாள் தொடக்கம் நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனாலும் நீங்கள் போன திங்கள் கிழமை….”
பையன் ஓடர் செய்தவற்றுடன் வந்தான்.
சுமி தன் கைகளை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
பின்பு இருவருமே அதிகம் பேசவில்லை.
ஆளை ஆள் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தோம்.
நேரம் ஓடிக்கொண்டு இருந்தது.
நானாக அவள் கைகளை எடுத்து என் கைகளுள் வைத்துக் கொண்டேன்.
அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அவளின் விரலுடன் நான் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
எங்கள் இருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக அன்றைய நாள் கழிந்தது.
*
பின்பென்ன?
வங்கி வாழ்க்கை மிகவும் அர்த்தப்பட்டது போலவே இருந்தது.
தினம் தினம் சின்ன சின்ன சிலுமிஷங்கள்… ஜோக்குகள்… பரிமாற்றங்கள்…
வெள்ளிக்கிழமைகளில் முனியப்பர் கோயில் அல்லது நல்லூர்.
சனிக்கிழமைகளில் சிலவேளைகளில் கூட்டம் குறைந்த ஏதோ ஒரு சினிமாக் கொட்டையின் ஒரு மூலையில்.
என் மாற்றங்களை வீட்டிலும் அவதானித்திருக்க வேண்டும்.
ஒருநாள் தங்கையே அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
“அம்மா… அண்ணா தினம் தினம் சேட்டை அயன்பண்ணிப் போடுறதைப் பார்க்க எனக்கு அம்மிச்சமாய் இருக்கம்மா”
“போடி!…. நீயும் தானே உந்தக் கண்ணாடிக்கு முன்னாலை நெடுக நிக்கிறாய்…”
“பொம்பிளைப் பிள்ளை கண்ணாடிக்கு முன்னாலை நிற்கிறது புதினமில்லை. ஆனால் எப்ப நான் உன்ரை உடுப்புகளை தோய்க்க எடுத்தாலும் எல்லாம் இரண்டு இரண்டு துண்டுகளாய் இருக்கு. அதுதான் சந்தேகம்” அம்மாவும் தங்கையுடன் சேர்ந்து கொண்டாள்.
“யார் அது?… அவனா?… இல்லை அவளா? என தங்கை கெக்கட்டம் கொட்டினாள்.
“உங்கள் இருவருக்கும் வேலை இல்லை” என்று விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வங்கிக்கு கிளம்பி விட்டேன்.
வழி எல்லாம் யோசனை.
அடுத்தபடிக்கு எப்படி எப்போது போவது என்று.
“சுமியுடன் கட்டாயம் இதுபற்றி பேச வேண்டும்”
எனக்கு கிடைத்த அதிஷ்டம் போலும்…. நான் போய் இறங்கிய பொழுது… அடுத்த கிழமை எங்கள் வங்கி ஊழியர்கள் அனைவரும் கசுரீனா பீச்சுக் போவது என்று மனேஜர் சுற்றறிக்கை விட்டிருப்பதாக அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு நின்றார்கள்.
சுமியை நான் அர்த்தம் பொழியப் பார்த்தேன்.
அவள் தலையைக் குனிந்தபடியே அப்பால் சென்று விட்டாள்.
*
பாடசாலைக் காலங்களில் வீட்டுக்கு தெரியாது எத்தனையோ தடவைகள் மாட்டிறைச்சியும் றொட்டிம் கட்டிக் கொண்டு போய் நண்பர்களுடன் கூத்தடித்த கடற்கரைதான் அது.
ஆனால் சுமியுடன் போன அன்றைய தினம் கடலில் இருந்து வந்த காற்று உயிர்தடவிப் போனது போல இருந்தது.
இடைக்கிடை வங்கி ஊழியர்களுடன் போய் கடலில் குளித்து வாட்டிய இறைச்சியில் பங்கு போட்டாலும் அதிகமான தருணங்களில் நானும் சுமியும் மரநிழல்களிலேயே ஒதுங்கினோம்.
ஒரு வள்ளத்தின் மறைவில் அமர்ந்திருந்து அவளின் கையை எனது கையினுள் வைத்துக் கொண்டு கதைக்கும் பொழுது சொன்னேன், “வெகுசீக்கிரத்தில் இதில் நான் மோதிரம் போட யோசித்திருக்கின்றேன்” என்று.
திடீரென அவள் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
“சுமி என்ன?”
அவள் சுதாகரித்துக் கொண்டாள்.
“இல்லை.. ஒன்றுமில்லை”
அவள் கண்கள் கலங்கியிருந்தது.
“கட்டாயம் இனி வீட்டிலை சொல்லத்தான் இருக்கிறன்… வீட்டாரே எங்களைப் பற்றி அறிந்து கொள்ளுறதுக்கு முதல் நாங்களே சொல்வதுதான் எங்களிருவருக்கும் மரியாதை”
அவள் எதுவும் சொல்லவில்லை.
அவளின் தோள்களை ஆசையுடன் பற்றி என்னருகில் இழுப்பதற்கு முயற்சித்தேன்.
என் கைகளைத் தட்டி விட்டு “போவோம் இங்கிருந்து” என திடீரென எழுந்து கொண்டாள்.
எனக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது.
ஆனாலும் காட்டிக் கொடுக்கவில்லை.
* அடுத்த நாள் சுமி வேலைக்கு வரவில்லை.
எனக்கு கஷ்டமாக இருந்தது.
அந்த கிழமையும் வரவில்லை.
வங்கிப் பதிவேட்டில் இருந்து அவளின் விலாசத்தை எடுத்துக் கொண்டு அவள் தங்கிருந்த வீட்டுக்கு போனேன்.
அவள் அவசர அவசரமாய் கொழும்புக்கு போய் இருப்பதாய் வீட்டுக்கு காவல் காத்துக் கொண்டிருந்த வயதான ஓர் அம்மா கூறினார்.
“எதுக்கு என்று தெரியுமா”
“தெரியேல்லை ராசா… இரண்டு நாளாய் அழுது கொண்டு இருந்தது… இரண்டும் கெட்டான் கழுதை அது”
நான் எதையும் கதைக்கும் மனநிலையில் இல்லை.
வேலையிடத்திற்கு வந்து விட்டேன்.
வெள்ளிக்கிழமை போல் மனேஜரிடம் இருந்து சுமி தனது சொந்த விரும்பத்தின் பெயரில் கொழும்பு கிளைக்கு மாறிவிட்டாள் என்று சுற்றறிக்கை வந்தது.
என்னை நான் சுதாகரிப்பதற்கு முதல் அவளிடம் இருந்து எனக்கு பதிவுத் தபாலில் ஒரு கடிதமும் வந்திருந்தது.
”இனிமேலும் காதல் என்கின்ற ஒரு பெயரில் உங்களை நான் ஏமாற்றிக் கொண்டு இருக்கவில்லை.
நான் உங்களை விட்டு பிரிந்து போகும் நேரம் வந்து விட்டது என்பதனை நன்கு உணர்கின்றேன்.
நீங்கள் இனியொரு தடவை உங்கள் வேலையிடத்திலோ…அல்லது குடும்ப நிகழ்ச்சிகளிலோ… அல்லது உங்கள் வயதான தாய் தந்தையர்கள் பார்க்கும் ஒரு பெண்ணையோ திருமணம் செய்து உங்களை நம்பி வரும் அந்தப் பெண்ணுக்கு என்னில் செலுத்திய காதலின் அளவின் ஒரு துளியைக் கூட குறையாமல் செலுத்தி நீங்களும் சந்தோசமாக இருந்து அவளையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோளும் உண்டு;. என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் என்னைச் சந்திக் நேர்ந்தால் அச்சமயம் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு அன்ரி… அது… இது … என்று அழைக்கச் சொல்லாமல் அம்மா என்று ஒருதரம் அழைக்கச் சொல்லுங்கள். நான் என் பிறப்பின் பலனை அடைந்து விட்டதாகவே அன்று எண்ணிக்கொள்வேன.
இங்ஙனம் என்றும் அன்புடன் உங்கள் சுமி”
அன்று சுகவீன லீவு எடுத்துக் கொண்டு வீட்டை போய்விட்டேன்.
*
இந்த பத்து வருடத்தினுள் எத்தனையோ மாறிவிட்டது.
இப்போதும் அதே வங்கியில் பிரதேச அபிருத்தி பகுதியின் அசிஸ்டன்ற் மனேஜராய் இருக்கின்றேன்.
அப்பா வழிச் சொந்தத்தில் ரீச்சராய் வேலை பார்த்த மேனகாவை திருமணம் செய்து எட்டு வயதில் ஒரு ஆணும் ஐந்து வயதில் ஒரு பெண்ணும்.
பையனை சென். ஜோன்ஸிலும் பெண்ணை சுண்டுக்குளி சேர்த்திருக்கிறம்.
இடைக்கிடை சுமியின் நினைவுகளும் வந்து போகாமலில்லை. அவள் என்னை விட்டுப் போன ஒரு வருடத்தினுள் எங்கள் மக்கள் வங்கியில் இருந்து இலங்கை வங்கிக்கு நல்ல பதவியில் இடமாற்றம் சென்றதாக அறிந்தேன். ஆனால் அவளைத் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்யவிரும்பவில்லை.
நேற்று இரவு நானும் மேனகாவும் இருந்து நீயா நானா நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அரவாணிப் பெண்கள் பற்றி அரவாணிப் பெண்களுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
அதில் ஒரு பெண் சொன்னாள், “எங்களுக்கும் காதல் வரும். ஆனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம். அந்த ஆண்கள் பாவம். அவர்களுடன் ஜாலியாக சுற்றியெல்லாம் திரிவோம். பெற்றார்-உற்றார்-சகோதரங்களால் புறம் தள்ளப்பட்ட எங்களில் ஒருவர் உயிராக அன்பு செலுத்துகின்றார்கள் என்பது எங்களை மகிழ்ச்சியின் உச்சிக்கோ கொண்டுபோய் வைத்துக் கொள்ளும். பிரச்சனை வருவது அவர்கள் கல்யாணப் பேச்சு எடுக்கும் பொழுது தான். அச்சமயம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை வேறு கல்யாணம் செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்து விடுவோம். சிலவேளை உண்மையைச் சொல்லி விடுவோம். சிலவேளை சொல்வதில்லை. அப்போது அவர்களிடம் கேட்பது ஒன்றுதான், “உங்கள் பிள்ளைகளைக் கொண்டு அன்ரி… அது… இது … என்று அழைக்கச் சொல்லாமல் அம்மா என்று ஒருதரம் அழைக்கச் சொல்லுங்கள்” என்று.
எனக்கு தலை எல்லாம் விறைத்துக் கொண்டு வந்தது.
ஓடிப்போய் ஒளித்து வைத்திருந்த சுமியின் கடிதத்தை எடுத்து மறுபடியும் பார்த்தேன்.
சுமி வீட்டிற்கு காவலுக்கு இருந்த கிழவி சொன்னது என் காதில் ஒலித்தது.
“இரண்டு நாளாய் அழுது கொண்டு இருந்தது… இரண்டும் கெட்டான் கழுதை”.
அப்படியே போய் அறைக்குள் படுத்து விட்டேன்.
“நல்லாய் போகுது வந்து பாருங்கோ. சிலதுகளை பார்க்க தெரியவேயில்லையப்பா. அவ்வளவு வடிவாய் இருக்குதுகள்”
என் தலையணை ஈரமாகிக் கொண்டு இருந்தது.
“சுமி!”
என் மனம் முணுமுணுத்தது.
(யாவும் கற்பனை அல்ல)