”இப்படிக்கு அன்புள்ள அம்மா”. – ஒரு பார்வை – திரு. தம்பிராஜா பவானந்தராஜா

By | 16. november 2016

ஜேர்மனியில் வசிக்கும் எனது முகநூல் நண்பர் திரு. தம்பிராஜா பவானந்தராஜாவின் பார்வையில் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”.”.

திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்களால் டேனிஷ் மொழியில் எழுதப் பட்டு திரு ஜீவகுமாரன் அவர்களால் தமிழிலில் மொழிபெயர்க்கப் பட்ட இப்படிக்கு அன்புள்ள அம்மா .என்னும் கதையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

இந்தக்கதை பற்றிப் பலரும் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்திருந்தாலும் .எனக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததால் எனது கருத்துக்கள் சிலவற்றையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் .

நமது நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் நமது இனம் அடைந்த துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை .அதுவும் போரில் தமது உறவுகளைப் பறிகொடுத்த பெண்கள் படும் துயரத்தை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கண்கலங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாதல்லவா!

அப்படி போரின் ஒரு சந்தர்ப்பத்தில் தனது முதல் மகனைப் பறிகொடுக்கும் தாயொருவர் போரில் பல்வேறு அவலங்களைச் சந்தித்தபின் டென்மார்க்நாட்டில் ஒரு முதியோர் இல்லத்தில் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்துகொண்டு தனது மகன் எங்காவது உயிரோடு இருப்பான் .என்ற நம்பிக்கையில் அவரது இறுதி மூச்சுவரை எழுதும் கடிதங்களின் தொகுப்பே இந்தக் கதை.

யசோதா அம்மா என்ற.அந்தத்தாயின் நம்பிக்கை எப்படியிருந்ததென்றால்…
”என் நாடிகளிலும் ,,நாளத்திலும் இரத்தம் ஓடும்வரை ..
இதயத்தின் சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக்கும்வரை…
சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து மூடும்வரை…
காதுகள் உன் குரலைக் கேட்கும்வரை…
கண்கள் உன்னைக் காணும்வரை…
உன் ரங்குப் பெட்டியுடன் காத்திருப்பேன் (பக் 44).

நம்பிக்கை மலைகளையும் அசைக்கும் சக்தி வாய்ந்தது என்பார்கள் .

இங்கு இந்தத்தாயின் உறுதியும் நம்பிக்கையும் நிறைவேறியதா?

அது கதையின் இறுதியில் தான் தெரியவருகிறது

ஆனால்.இங்கு கதாசிரியர் அந்தத்தாயின் நம்பிக்கையும் உறுதியையும் வெளிக்கொண்டுவர உபயோகித்துள்ள வார்த்தைகள் .எந்த ஒருவிடயத்திலும் மனிதனுக்குத் தேவை நேர்மறையான எண்ணங்களே என்பதை உணர்த்தும் அருமையான வசனங்கள்.

ஒருமனிதன் தனது வாழ்வில் முதுமைப் பராயத்தை அடையும் போதுதான் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் உடையவனாகமாறுவான் .அவனது வாயிலிருந்து வரும் வார்தைகள் கூட ஞானம் நிறைந்தவையாக இருப்பதைக் காணலாம்

இங்கு கதையின் நாயகியான யசோதா அம்மாகூட முதியோர் இல்லத்திலிருந்து கொண்டு அவர் உதிர்க்கும் வார்தைகள் கூட அவரை ஒரு ஞானமுள்ள பெண்ணாகவே அடையாளம் காட்டுகின்றன .

ஒருகடிதத்தில் அவர் இப்படிஎழுதுகின்றார்,
”மாலையில்
பக்கத்துத் தெருவில் மாதா கோவில் மணியோசை அடிக்கும்போது
அம்மாளாச்சியே என்று வாய் முணுமுணுக்கும் பக்குவம் எனக்கு வந்திட்டுதடா…
ஒரு எல்லைக்குப்பின் அந்தோனியாரும் ஒன்றுதான் அல்லாவும் ஒன்றுதான் (பக்33)

மேலும் அவர் தங்கியிருக்கும் அறையில் இருக்கும் கண்ணனின் உருவப் படம்யசோதா அம்மாவுடன் பேசுவதாக வரும் வார்தைகள், ”உலக பந்தங்கள்தான் உன்னுடைய துன்பங்களின் ஊற்று தூக்கிக் கொண்டு இருக்கும் வரைதான் பாரம். எல்லாவறையும் விட்டுவிடு . வலியும் இருக்காது பாரமும் இருக்காது . அனைத்தையும் என்னிடம் தந்துவிடு உண்மையான சந்தோசம் ஆத்மாவிலிருந்தான் பிறக்கிறது உன் ஆதார சுருதியே நான்தான் . உன் இருதயத்துள் நான் வாழ்கிறேன் என் இதயத்துள் நீ வாழ்கின்றாய்! (பக் 23)

இவை மிகுந்த ஆழமும் ஞானமும் நிறைந்தவரிகள் ஆன்மீக நூல்களைக் கற்றுத் தெளிந்தவர்களால் அல்லது .தம்மை உணந்தவர்களால் மாத்திரமே இப்படியான வரிகளை எழுதமுடியும் .

உண்மையில் யசோதா அம்மா எனும் இந்தத்தாய் தனது வாழ்வில் படாத துன்பங்களே இல்லை என்று கூறமுடியும் .

போரின் ஒருகட்டத்தில் தனது வீடுவாசலை இழக்கின்றார் .தனது முதல் மகனைப் பறிகொடுக்கின்றார் .தான் வாழ்ந்த கிராமத்தைவிட்டு புலம்பெயர்ந்து முகாமொன்றில் தங்கவேண்டியநிலையில் அவரது சகோதரி குழந்தையைப் பறிகொடுக்கிறார் .தந்தையார் தனது ஒத்தைக் காலைப் பறிகொடுக்கிறார் .இதற்கிடையில் தனது இரண்டாவதுமகன் நெருப்புக் காய்ச்சலால் புலம்புவதைக் கேட்கும் பக்கத்து முகாமில் தங்கி இருக்கும் யசோ அம்மாவின் நண்பியான விதவைப்பெண் மதி தனது கைக்குழந்தையான ஹரினியுடன் பெனடோல் குளிசை கொண்டு வந்து கொடுத்துவிட்டுத் திரும்பிச் செல்கையில் குண்டடி பட்டுச் சாகின்றாள் .இங்கு அனாதையாக்கப்படும் குழந்தையான ஹரிணியை தான் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு முன்வருவதன் மூலம் தான் ஒரு சிறந்த தாய் என்பதை அவர் நிரூபிக்கின்றார் .

அடுத்தநிமிடம் தான் வாழ்வதே நிச்சயமற்ற நிலையில் மற்றொரு ஜீவனைப் பொறுப்பேற்று வளர்ப்பதென்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமல்ல

.இந்தக் கதையில் காணப் படும் மிகச் சிறந்த சம்பவமாக இதை நான் காண்கிறேன்.இதைவிட இந்தக் கதையின் நாயகியான யசோதா அம்மா முதியோர் இல்லத்திலிருந்துகொண்டு தன்னிடமிருக்கும் ஒரு தையல் மெசின்மூலம் சிறு சிறு தையல் வேலைகள் செய்து அங்குள்ளவர்களுக்கு விற்று அதில் சேரும் பணத்தை உண்டியலில் சேகரித்து வைத்து அந்தப் பணத்தை வன்னியிலுள்ள அனாதைக் குழந்தைகள் இல்லமொன்றிற்கு மாதம் தோறும் அனுப்பிவைக்கின்றார் .புலம் பெயர்ந்தாலும் அங்கு வாழும் அனாதைக் குழந்தைகளை நினைப்பதன் மூலம் சிறந்தொரு முன்மாதிரியாக இந்தத்தாய் விளங்கு கின்றார் .

மற்றொரு கட்டத்தில் டென்மார்க்கில் வாழும் இவரது இரண்டாவது மகனான கவினின் மகள் சீத்தா தனது காதலனான டென்மார்க் நாட்டு வாலிபனை அழைத்துக்கொண்டு யசோதா அம்மாவுக்கு அறிமுகப் படுத்துவதற்காக முதன் முதலாகக் கூட்டிவருகின்றாள் . அந்த வாலிபனோ வாய்பேச முடியாதவன்கூட, அப்படிஇருந்தும் அவர்கள் இருவரும் தன்னிடம் வந்ததும் இருவரினதும் காதலை அங்கீகரிப்பதும் அவர்களை ஆசீர்வதித்து ஏற்றுக் கொள்வதும் .இந்தப் பாத்திரத்தின் மூலம் உணர்த்தப்படும் அற்புதமான சிந்தனைகள் . இறுதி நாட்களில் யசோதா அம்மாவுக்கு புற்று நோய் வந்து மரணத்தை எதிர் நோக்கி இருக்கையில் கூட தனது மகனுக்கு கடிதமெழுதுவதை நிறுத்தாமல் தொடர்வதும் தனக்குத்தானே நம்பிக்யூட்டும் வார்த்தைகளைச்சொல்லி மரணத்தைக் கூட தைரியத்துடன் எதிர்கொள்ளும் யசோதா அம்மா என்னும் இந்தக்கதாபாத்திரம் வாசிக்கும் அனைவர் மனதிலும் நிறைந்திருப்பார் என்பதுமாத்திரம் நிச்சயம். .

உண்மையில் இந்தக் கதையை வாசிக்கும் போது நான் எனக்குப் பிடித்த பல விடயங்களை அடையாளமிட்டுவைத்திருந்தேன் .முக்கியமாக .நமதுநாட்டில் நடந்த போரின் கோர முகங்களைக்காட்டும் பல சம்பவங்களை கதாசிரியர் .இந்தக் கதையில் வெளிக் காட்டியிருந்தார் .

உதாரணத்துக்கு #தெரு வோரத்தில் உலை கொதித்துக் கொண் டிருந்தது பக்கத்தில் பிணம் படுத்திருந்தது #

இப்படி அங்கு சாட்சியின்றி நடந்த போரின் காட்சிகள் ஒரு நேரடி வர்ணனை போல் வெளிக்கொண்டுவரப் பட்டுள்ளது இது நாம் வாழும் காலத்தில் எமது மண்ணில் நடந்த போரின் கொடுமைகளை வெளிக் கொண்டுவரும் கதையாக இருப்பதனால் இது மிக நீண்டகாலம் நிலைத்து நிற்கும் என்று நிச்சயம் நம்பலாம்

எமது போரின் காட்சிகளை நேரில் கண்ட பலர் நமது மண்ணிலும் புலம் பெயர் நாடுகளிலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் அனுபவங்களைத் திரட்டி இதைப்போல் இன்னும் பல கதைகளை எழுதினால் அவை சிறந்த வரவேற்பைப் பெறும் எம்மவர்களின் இப்படியான படைப்புக்களுக்கு நல்லாதரவை வழங்குவதன் மூலம் .சிறந்த படைப்பாளிகள் நம்மவர்கள் மத்தியிலிருந்து.. உருவாக ஊக்கமளிக்கமுடியும்.

இந்தக் கதையை ஒரு மொழி பெயர்ப்புக் கதை என்று தெரியாத வகையில் மூலக் கதையே இதுதானோ என்று ஐயுறும் அளவுக்கு தத்ரூபமாக .எழுதியுள்ள திரு ஜீவகுமாரன் அவர்களுக்கும் டேனிஷ் மொழியில் எழுதிய திருமதி ஜீவகுமாரன் அவர்களுக்கும் எனது மனம் நிறைத்த பாராட்டுக்கள் .

puvan

 

 

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)