மழையிருட்டு மாலைப் பொழுதை விழுங்கி இருந்தது.
புழுக்கம் வேறு.
எப்போது மழை கொட்டித் தீர்க்கும்?… எப்போதுதான் புழுக்கம் கொஞ்சமாவது குறையும்??… என்பது போலிருந்தது.
ஐரோப்பாவில் ஐந்து நாட்கள் காலில் சில்லுகளைக் கட்டிக் கொண்டு ஓடும் வாழ்க்கையில் கொஞ்சம் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே இந்த சனி ஞாயிறு தினங்களில் தான்.
ஞாயிறு மாலை வந்து விட்டால் திங்கள் கிழமை செய்து முடிக்க வேண்டிய பணிகள் வந்து பயமுறுத்தும். எனவே சனிக்கிழமைதான் உண்மையான விடுமுறை நாள் போல இருக்கும்.
டென்மார்க்கில் குளிர் காற்று இல்லாது உண்மையான வெப்பமும் வெளிச்சமும் இருப்பதே அதிகூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான்.
அதையும் இந்த சனி மதியம் உருவான புழுக்கமும் மழையிருட்டும் குழப்பி விடும் போல் இருந்தது.
ஆனால் கனகராணி வீட்டினுள் உள்ள புழுக்கம் வெள்ளிக்கிழமை நடுச்சாமத்தின் பொழுது தொடங்கியது.
*****
கனகராணி!
வயது 52.
நான்கு பிள்ளைகளின் தாய்.
இரண்டு பெண்கள் – மூத்தவை.
இரண்டு ஆண்கள் – இளையவை
28 – 26 – 24 – 22 இரண்டு ஆண்டுக்கு ஒன்ற என்ற கணக்கு.
மூத்தவளுக்கு இந்த கோடைகால விடுமுறை முடிய திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
44 வயதில் விவாகரத்து.
பிள்ளைகளின் பெயருக்குப் பின்னாலும் கனகராணியின் பெயரின் பின்னாலும் அவளின் 24 வயதில் இருந்து ஒட்டியிருந்த செந்தில் என அழைக்கப்பட்ட செந்தில்நாதன் விவாகரத்திற்குப் பின்பு மலேசியாவுப் போன இடத்து அங்கேயே ஏதோ ஒரு நோய் வந்து மரணமானார்.
என்ன நோய் என்பது இன்னுமும் வெளிவராத சமாச்சாரமகவே இருக்கின்றது.
ஆனால் அங்கிருந்த பொழுது அவரின் வங்கிச் சேமிப்பு பூஜ்ஜியத்தைத் தொட்டது.
கனகராணிக்கு 44 வயதில் விவாகராத்து கிடைத்த அன்றே அவரின் மரணம் – காடாத்து – அந்தியேட்டி – ஆட்டத் திவேசம் அனைத்தும் நடந்து அழுது முடித்தாயிற்று.
பின்பு 46 வயதில் வந்த மரணச் செய்தி ஒரு குறுஞ்செய்தி மட்டும் தான்.
“கொள்ளி வைக்க பிள்ளைகள் வருவினமோ?” என்ற உறவினரின் கேள்விக்கு “நாங்கள் வரவில்லை” என ஆண்பிள்ளைகள் இருவருமே பதில் அளித்து விட்டு தங்கள் தங்கள் வேலைகளுக்கு சென்று விட்டார்கள்.
அவ்வாறே பெண்பிள்ளைகளின் பதிலும் அமைந்திருந்தது.
துக்கம் விசாரிக்க வந்த ஆட்களிடம் எனக்கொரு துக்கமும் இல்லை என நேர்மையாக கனகராணி சொன்னது அன்று அவரவர் வீட்டு மாலைத்தேனீருக்கு நொறுக்குத் தீனியாகியது.
சாதகங்கள் பார்த்து… குலம் கோத்திரம் விசாரித்து… அம்மி மிதித்து… பகலிலேயே கண்ணுக்குத் தெரியாத அருந்ததி நட்சத்திரதைப் பார்த்து பிணைக்கப்பட்ட உறவு… நான்கு பிள்ளைச் செல்வங்களைக் கொடுக்க… இறுதியில் டென்மார்க்கின் குடும்பநீதி மன்றத்தில் எல்லாமுமாய் இருந்த உறவு எதுவுமே இல்லாது போய்… கனடா செல்வதற்காக கோலாலம்பூரில் தங்கியிருந்த ஒன்று விட்ட தம்பிக்காரன் ஒருவன் கொள்ளி வைக்க எல்லா ஆட்டங்களும் அடங்கிப் போய் விட்டது.
அடுத்த நான்கு ஆண்டுகளும் அதிவிரைவாக ஓடியது போலவே இருந்தது – மூத்தவளை மாப்பிள்ளை வீட்டார் தாங்களாகவே பெண் கேட்டு வந்த பொழுது தான் அவளை நன்றாகவே வளர்த்திருக்கின்றேன் என கனகராணியின் மனம் பெருமைப்பட்டது.
தகப்பன் இல்லாத பிள்ளை என அவள் எந்தக் குறையும் விட்டதில்லை.
பகல் முழுக்க ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்தாலும் மாலையில் இரண்டு பாடசாலைகளில் துப்பரவு வேலையும் பிரத்தியோகமாக வீட்டில் வைத்து திருமணங்களுக்கு கேக் மற்றும் பலகாரங்கள் செய்து கொடுத்தும் வருமானத்தை சமன் செய்து கொண்டாள். இருவரின் வருமானத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கு எந்தக் குறைவும் இன்றி தன் ஒருத்தியின் வருமானத்தினால் ஈடுகட்டி வளர்த்து வந்தாள்.
துப்பரவு வேலைகளுக்கு மகன்மார் உதவி செய்கின்றோம் என முன் வந்தாலும் அவர்களின் படிப்புக் குழம்பி விடும் என அவர்களை அனுமதிக்கவில்லை. அதுவே அவர்கள் நல்ல பெறுபேறுகள் எடுக்கவும் நல்ல வேலையில் அமரவும் காரணமானது.
வுpவாகரத்து அவளுக்குப் பல சுமைகளையும் பொறுப்புகளையும் கொடுத்திருந்த போதும் அவளுக்கு பல சுதந்திரங்களைக் கொடுத்திருந்ததை அவளும் பிள்ளைகளும் வீட்டில் உணர்ந்தார்கள் – இராணுவ ஆட்சியில் இருந்து ஒரு நாடு விடுதலை பெற்றது போல.
வீட்டினுள் தளவாடங்கள் அங்கிங்கு கொஞ்சம் விலகி இருந்தால்…. படுக்கை அறையின் விரிப்பு கொஞ்சம் கசங்கி இருந்தால்… பிள்ளைகளின் பெறுபேறுகள் சற்றுக் குறைந்திருந்தால்… சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு புளி காரம் கூடிக் குறைந்து இருந்தால்…. இடி அமீனுக்கும் முசோலினிக்கும் அவள்இ பதில் சொல்லியே ஆக வேண்டி இருந்தது.
கோடை கால விடுமுறை, குளிர் கால விடுமுறை, பஸ்கா பண்டிகை விடுமுறை, இத்தியாதி இத்தியாதி விடுமுறைகளுக்காக டென்மார்க்கில் உள்ள பெற்றாரும் பிள்ளைகளும் காத்திருந்த பொழுது கனகராணியும் பிள்ளைகளும் அந்த விடுமுறைகள் வந்திருக்கவே வேண்டம் என நினைத்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு வீட்டில் அடக்குமுறை தலைவிரித்தாடும்.
மேலாக விடுமுறைக்கு செலவழிக்க உள்ள பணத்தையும் ஏதோ ஒரு சாட்டுச் சொல்லி தன் உறவினர்கள் யாருக்காவது இலங்கைக்கு அனுப்பி விடுவிவார்.
செந்தில்நாதனுக்கு டென்மார்க் வந்து ஆறாவது வருசத்தில் பக்டறியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் முள்ளந்தண்டில் ஏற்பட்ட சிறிய வளைவு காரணமாக இளவயதுக்குரிய மாதாந்த பென்சனும் கூடவே காப்பீட்டுத் தொகையாக பெரிய தொகைப் பணமும் கிடைத்தது.
அது கூட அவரின் நண்பர் ஒருவர் மூலம் கனகராணிக்கு தெரிய வந்தது தான். இருபது வருட தாம்பத்திய வாழ்க்கையில் எதனையும் கனகராணியுடன் பகிர்ந்து கொண்டதில்லை – படுக்கையைத் தவிர.
டென்மார்க்கின் நான்கு பருவநிலைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு… கோடை காலம் வரும் பொழுது மணிக்கூட்டின் சிறிய முள்ளை முன்நோக்கியும்…. பனி காலம் வரும் பொழுது அதே முள்கம்பியை பின்நோக்கியும் நகர்த்திக் கொண்டு… கனகராணி கிழமையில் 37 மணி நேரம் ஓடி ஓடி உழைத்த வருமானத்திற்கு கிட்டத் தட்ட சமமான வருமானம் இளவயதுப் பென்சனாலும் காப்பீட்டுத் தொகைக்கு வங்கி அளித்த வட்டிப் பணத்தாலும் செந்தில்நாதனுக்கு கிடைத்தது.
அதைவிட ஊர் முழுக்க கட்டிய சீட்டுக்களால் வரும் கழிவுப் பணமும்… வட்டிக் காசுகளும்… வட்டிக்கு வட்டியால் வந்த வருமானமும் அவரை ஒரு செல்வச்சீமானாக அந்த நகரம் மதிக்க காரணமானது.
காலை உணவை உண்டபடியே தொலைக்காட்சியில் இராசிபலன்… பின் பத்துமணி போல் நகரத்தைச் சுற்றி ஒரு நடைப்பயிற்சி… மதியம் வேலைக்குப் போக முதல் கனகராணி சமைத்து வைத்த உணவு… பின்பு ஒரு குட்டித் தூக்கம்…. மாலைத்தேனீர் பிஸ்கட்டுடன்… தொடர்ந்து தொலைக்காட்சி நாடகங்கள்… இரவு உணவு… படுக்கை இரவு ஒன்பது அல்லது ஒன்பது முப்பதுக்கு என… தன் வாழ்க்கையை தானே சொர்க்கபுரியில் இருப்பது போல அமைத்துக் கொண்டார்.
இடைஇடையே தொலைபேசியில் ஊர்த்துலாவாரங்கள்… வட்ஸ் அப்… வைப்பர் அது இது என.
சிலவேளை கிளுக்கென தானே சிரித்து தானே மகிழ்ந்து கைத்தொலைபேசியைக் காதலித்துக் கொண்டிருப்பார்.
அந்த வேளைகளில் தான் பி;ள்ளைகளுக்கும் கனகராணிக்கும் நிம்மதி.
அவர் தூங்கிய பின்புதான் பிள்ளைகள் சரி… கனகராணி சரி தாங்கள் விழும்பியவற்றைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியும்.
“சகிப்பின் உச்சகட்டத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் பரிசு கொடுத்தால் அது உனக்குத்தானம்மா” என தகப்பன் வீட்டில் இல்லாத வேளையில் பிள்ளைகள் தாயாரைக் கலாய்ப்பார்கள்.
பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுக் குறைந்தாலும் சரி… ஏதாவது அவர்கள் குழப்படி செய்தாலும்சரி, “என்ன பிள்ளை வளர்ப்பு வளர்க்கின்றாய்” என கனகராணியையே திட்டித் தீர்ப்பார்;.
வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது.
ஆனால் ஒரு நாள் என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியாது.
தான் இனி இலங்கையில் போய் வாழப்போறன் என்றபடி ஒரு பத்திரத்தை முன்னே எடுத்து வைத்தார்.
விவாகரத்துக் கோரும் பத்திரம்.
ஒரு கணம் நிதானித்தாள்.
அடுத்த கணம் கை எழுத்திட்டாள் கனகராணி.
அப்போது கூட கனகராணி தன்னிடம் ‘இது வேண்டர்ம்’ என கொஞ்சுவாள் என எதிர்பார்த்த செந்திலுக்கு கனகராணி அடுத்துச் செய்தது தான் ஆச்சரியமாய் இருந்தது.
அந்த விவாகரத்துப் பத்திரத்துக்கு மேல் தனது தாலியை கழற்றி வைத்தாள்.
*****
வுழமையாக மாலை ஆறு மணிக்கு மூடப்படும் கடைகள் சம்மர் விடுமுறைகளின் பொழுது மாதச்சம்பளத்துடன் ஒட்டி வரும் வெள்ளிக் கிழமைகளில் நடுநிசிவரை திறந்திருக்கும்.
நடைபாதைகளில் ஆடல்கள்… பாடல்கள்.. இரவு உணவகங்கள் எல்லாம் நடைபாதைகளில் கொட்டகை போட்டு நகரமே கோலாகலமாகக் காட்சி தரும்.
கனகராணியின் நாலு பிள்ளைகளும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றி விட்டு நடுநிசியைத் தாண்டித் தான் வீட்டுக்கு வருவார்கள்.
நடைபாதைக்கடை ஒன்றைத் தாண்டி வரும் பொழுது “அங்கே அம்மா”, என இளையவள் ஆற்றங்கரையில் அமைந்திருந்த உணவு விடுதியின் வெளியே போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசை ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.
கனகராணி ஒரு டெனிஸ்காரனுடன்; இருந்து உணவு அருந்திக் கொண்டு இருந்தாள்.
அவர்களுக்கு அண்மையில் நிலத்தில் குற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் குளிருக்கு இதமாகவும் அழகாகவும் இருந்தன.
கனகராணி கைகளில் எலும்பிச்சைச்சாறு கலந்த சோடா…. டெனிஸ்காரனின் கைகளில் உயர்தர வைன்.
பிள்ளைகள் மௌனமாக வீடு திரும்பி விட்டார்கள்.
அவர்கள் நால்வரின் மனங்களும்; தகித்துக் கொண்டிருந்தன.
இரவு இரண்டு மணி போல டெனிஸ்காரனின் காரில் வீட்டுக்கு வந்திறங்கினாள் கனகராணி.
பிள்ளைகள் தாய் வீட்டுக்குள் வந்ததும் ஹோலில் இருந்து எழுந்து தத்தம் அறைகளுக்குச் சென்றார்கள்.
ஆனால் அவர்களால் தூங்கமுடியவில்லை.
கனகராணி தூங்கிவிட்டாள்.
*****
சனி முழுக்கவும் ஞாயிறு பகலும் எதுவுமே இயல்பாக இருக்கவில்லை.
வீடு மௌனத்தில் மௌனத்தில் உறையிருந்தது.
“சொல்லித் தொலையுங்களேன்” – கனகராணியே மௌனத்தை உடைத்தாள்.
வெள்ளிமாலை அவர்கள் கண்டது தேனீர்; மேசைக்கு வந்தது.
நிதானமாக கனகராணி நாலு பிள்ளைகளின் முகத்தையும் பார்த்தாள்.
கட்டாயம் மூத்தவளின் கலியாணம் இன்னும் மூன்று மாதத்தில் முடிய உங்களுக்கு சொல்லத்தான் இருந்தேன். இதில் எந்த இரகசியமும் இல்லை. உங்களுக்கு சொல்லாமல் யாருக்கு சொல்லுவது.
நானும் றொபேட்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கிறம்.”
பிள்ளைகள் நால்வரும் அதிர்ந்து விட்டார்கள்.
வேண்டாம் என்பதற்கு பிள்ளைகளிடம் இருந்து ஆயிரம் காரணங்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு… எழுந்து போய் தனது கோப்பையுள் மீண்டும் கோப்பியை நிரப்பிக் கொண்டு வந்து கனகராணி இப்போ சாப்பாட்டு மேசையில் அமராது யன்னலடியில் சாய்ந்து கொண்டு, “நான் உங்கள் நாலு பேருக்கும் நல்ல அம்மாவாக வாழ்ந்திருக்கிறன். அப்பாக்கு கூட நல்ல மனைவியாக நடந்திருக்கிறன். ஆனால் அப்பா எனக்கு என்றுமே நல்ல கணவனாக இருக்கவில்லை”, பிள்ளைகள் நிமிர்ந்து பார்த்தார்கள்.
“வெட்கத்தை விட்டு வெளியே சொல்வதென்றால் என் பிள்ளைகள் உங்கள் நால்வரையும் நான் எனது மகிழ்ச்சியில் பெறவில்லை” என சொல்ல நினைத்தாள்.
ஆனால் சொல்ல முடியவில்லை.
கனகராணியின் கண்கள் கலங்கியன.
“அப்பாவின் அதிகாரத்தை நீங்கள் வாழ்க்கை முழுக்க பார்த்திருப்;பீர்கள் தானே. அதுதான் படுக்கை அறையிலும். என்னை ஒரு பெண் ஜன்மமாய் என்றுமே அவர் பார்த்ததில்லை”
“அம்மா” நால்வரின் வாய்களும் முணுமுணுத்தன.
“எப்போவாவது திருந்துவார் என எதிர்பார்த்துக் கொண்டு உங்களையும் வளர்த்துக் கொண்டு இருந்தேன். நீங்களும் வளர… எனக்கும் வயதாக வயதாக… அவர் வீட்டில் பகலில் தனியே இருந்த பொழுதும்… இரவில் வேளையுடன் படுக்கச் சென்ற பொழுதும் சற் என்றும்… வைப்பர் என்றும்… வட்ஸ்அப் என்றும் யார் யாருடன் என்ன கூத்துகள் அடித்துக் கொண்டிருந்தார் என எனக்குத் தான் தெரியும் – அவர் நித்திரையாகி விட்டாலும் நித்திரையாகாத அவரின் போனில் வந்ததுகளைப் பார்த்து நான் நித்திரையைத் தொலைத்த இரவுகள் ஆயிரம்”
“அம்மா எல்லாம் புரியுது…. ஆனால் இப்போ ஊர் என்ன சொல்லும்”
“என்னத்தை சொல்லும்? ஒரு தடவை வாழுற வாழ்வை எனக்கு துரோகம் செய்யாமல் வாழ நான் ஆசைப்படுகிறன.; ஒரு பெண்ணின் மன நிறைவு என்றாலும் சரி… உடல் நிறைவு என்றாலும் சரி… எல்லாத்தையும் நான் உணர்ந்தது இந்த ஆறு மாதத்தில் தான்.”
நால்வரும் எழுந்து வந்து தாயைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
ஐவரின் கண்களில் இருந்தும் ‘பொல’…’பொல’ என்று ஒழுகியது.
இருட்டியிருந்த கரிய திரண்ட முகில்களின் மீது குளிர்காற்று வீச மழை கொட்டியது.
கோடைகால வெட்கை மெதுமெதுவாகக் குறையத் தொடங்கியது.