60 ஆண்டுகள் இலக்கியப் பரப்பில் கொக்குவில் ஸ்டேசனில் இருந்து நயாகரா வரை பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமையின் சிறப்பிதழுக்கு 10 ஆண்டுகள் மட்டும் கடற்கன்னியின் அருகே வாசம் செய்து கொண்டும் பயணித்துக் கொண்டும் இருக்கும் எனது இந்தக் கட்டுரை அதிகப் பிரசங்கத்தனமோ நானறியேன்.
ஆனாலும் எழுத வேண்டும் என்றொரு உந்தலினால் ஒத்து ஊதுபவனின் வரிசையில் இக்கட்டுரையும் அமையுமானால் மகிழ்ச்சி அடைவேன்.
திரு. அ. முத்திலிங்கம் அவர்களை நேரில் கண்டதில்லை. தொலைபேசியில் பேசியதில்லை. மின்னஞ்சலில் இரண்டொரு தடவை தகவல்கள் பரிமாறியிருக்கின்றேன். இலங்கையில் 2011ம் ஆண்டு சர்வதேச உலக எழுத்தாளர் இலங்கையில் நடைபெற்ற பொழுது என்னால் தொகுக்கப்பட்ட ’முகங்கள்’ என்ற 18 நாடுகளில் இருந்து 50 எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பிற்கு ’முகங்கள்’ என்ற பெயரை பரிந்துரைத்தவர் அவரே.
இனியொரு தடவை கனடா செல்லும் பொழுது கட்டாயம் அவரையும் இயல்விருதினை அவருடன் இணைந்து நடாத்திக் கொண்டு இருந்த எனது ஆங்கில ஆசான் காலம் சென்ற திரு. செல்வா கனகநாயத்தின் குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்ற பெரும் ஆவல் மனத்தில் உண்டு.
எனது சங்கானைச் சண்டியன் வெளியீட்டுக்கு சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு வருகை தந்த திரு. இந்திரா பார்த்தசாரதிக்கு மேடையில் வைத்துச் சொன்னேன், ”இந்தியாவில் இனியொரு சுனாமி வந்து அனைத்து நூல்களும் அழிந்தாலும் டென்மார்க் நூலகத்தில் உங்கள் நூல்களை நீங்கள் இரவலாகப் பெறமுடியும்” என்று. அவ்வாறே ஒவ்வோர் ஆண்டும் ஸ்கண்டினேவியா நூல்கள் சார்பாக நூல்களை கொள்வனவு செய்யும் பொழுது திரு. அ. முத்துலிங்கம் எழுதிய நூல்களை வாங்கி வந்து விடுவேன். சிலவற்றை எனது தனிப்பட்ட சேகரிப்புக்காக வாங்கி வருவதுண்டு. இந்தக் கட்டுரை எழுத முதல் வைனைச் சுவைக்க முதல் அதனை கையில் எடுத்து ஒரு சிறிய சுற்று சுற்றி விட்டு அதனை முகர்ந்து விட்டு அருந்துவது போல ஒரு வாசிப்பிற்காக அவரின் அமெரிக்கக்காரியுடன் இருநாட்கள் பயணப்பட்டேன். அடடா! இந்த உவமான உவமேயம் கூட அவரிடம் இருந்து எனக்கு தொற்றி விட்டதோ?
அந்தத் தொகுதியில் உள்ள 16 கதையிலும் அவரின் வாழ்க்கை அனுபவம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. யாவும் கற்பனை என்பது போன்ற அபத்தமான பொய் உலத்தில் இருக்க முடியாது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவன் நான். எனவேதான் எனது முதல் தொகுதிக்கு கூட ’யாவும் கற்பனை அல்ல’ என நாமகரணம் சூட்டியிருந்தேன். அவ்வாறே பொதுவாக அனைத்து எழுத்தாளரும் எழுதுவார்கள் என்று நினைக்கின்றேன். ”யாவும் கற்பனை” என்பது ஒரு மார்புக் கேடயம். அவ்வளது தான்!!
அவ்வாறே திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளில் அவரின் இலங்கை – ஆபிரிக்கா – கனடா மற்றைய மற்றைய நாடுகளில் பயணப்பட்ட அனுபவங்கள், அவர் கற்றுக் கொண்ட தமிழ் – சரித்திர – விஞ்ஞான அறிவியல் நூல்கள் அனைத்தும் தனித்தனியாகவோ அல்லது ஒரு கதையினுள் அனைத்தும் அடைக்கப்பெற்ற மக்டொனால்ஸ் ஹப்பிமீல்ஸ் பக்கற் போல் அமைந்திருக்கும். மீண்டும் அவரின் உவமான உவமானங்களுக்குள் செல்லுகின்றேனா? அல்லது இரண்டு நாள் வாசிப்பு எனக்குள் ஒரு அருட்டுணர்வை ஏற்படுத்தி விட்டதா??
ஆம்! அவரின் கதைகளில் அவர் பாவித்திருக்கும் உவமான உவமேயங்கள். நோ சான்ஸ்.! கதைகளை ஒருவரி அல்லது இருவரிக்குள் அடக்கி விடலாம். ஆனால் அந்தக் கதைகளுள் பரவியிருக்கும் அவரின் வாழ்வனுபவங்களும் அவற்றை விளக்குவதற்கு அவர் தேடித் தேடி எழுதியிருக்கும் உவமான உவமேயங்கள் அவருக்கு இயல்பில் வருகின்றதா… அல்லது அதனைத் தேடி… தேடி… அதற்காக சிந்தனை செய்ய பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றாரா என ஆச்சரியப்பட்டேன். சில உதாரணங்களை விளங்கிக் கொள்பவர்களுக்கு சில வாழ்வபனுபங்கள் தேவை என்பதனை ஒரு வாசகனாக என்னால் நன்கு விளங்ககூடியதாய் இருந்தது. திரு. முத்துலிங்கம் இவர்களுக்கு இது விளங்குமோ இல்லையோ என்று எந்தக் கவலையும் படாமல் தனது பாணியில் எழுதிச் செல்லுகின்றார். விளங்குபன் விளங்கிக் கொள். அல்லது விளங்கிக் கொள்ள முயற்சி செய் என்ற போக்கே அது. அது நிச்சயம் சரியானது. அல்லது இலங்கை எழுத்தாளரின் எழுத்துகளுக்கு அடிக்குறிப்புகள் இட வேண்டும் என இந்திய எழுத்தாளர் வைக்கும் விமர்சனங்கள் போல திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் உவமான உவமேயங்களுக்கு அடிக்குறிப்பு போட்டால் கதையின் சுவாரஸ்யம் கெட்டு விடும்.
”இறால் எழுந்து நடமாடுவது போன்ற” ஒரு உவமானம். மாமிசம் உண்பவர்கள் இறந்த இறால்களையே பாத்திருப்பார்கள். படுக்கையில் இருந்தபடி வாசித்த நான் மனைவியின் நித்திரையையும் குழப்பி கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன். இறாலையே பார்த்திரா ஐயருக்கும் ஐயங்காருக்கும் இந்த உவமானம் எப்படி விளங்கும் என்று அவர் கவலைப்படவே இல்லை. முள்ளந்தண்டு இல்லாத இறாலை நடனத்துடன் எப்படி இணைந்து யோசிக்க முடிந்தது என வியந்தேன். இவ்வாறே இன்னோர் தொகுப்பில் உள்ள கதையில் குடித்து விட்டு மிகுதியாக விட்ட சோடாவைப் பற்றி எழுதும் பொழுது, ”இலையான் மூத்திரம் பெய்தது போல” ஒரு உவமானம். எப்படி இவற்றை யோசிக்கின்றார் என பல நாட்கள் யோசித்துப் பார்த்திருக்கின்றேன்.
”தோள் மூட்டுக்கு மேல் சூரியன் உயர எழம்பாத ஒரு பனிக்காலக் காலத்தின் பகல்வேளை” என்பது பனிபடர் நாடுகளில் கண்களுக்கு முன்னால் உள்ள உதாரணம். ஆனால் உச்சி வெய்யில் மட்டும் தெரிந்த வாசகர்கள் விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று விட்டு அடுத்த வரிக்குள் போய் விடுகின்றார். அப்போதுதான் வாசிப்பு ஒரு அனுபவத்தை தரும்.
இயற்கையுடனும் நடுத்தர வாழ்வுடன் பயணித்த ஒரு உதாரணம். ”ஆகாயத்தில் ஒரு ஓட்டை மட்டும் நெருப்புபோல எரிந்தது. அதுதான் சூரியனாக இருக்க வேண்டும்”. இது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. அடுத்த வரியில் ”எண்ணை குறைந்த விளக்குப் போல அதன் ஒளியும் குறையத் தொடங்கியது”. ஆச்சரியப்பட்டு விட்டேன். எத்தனை வருடங்களுக்கு இலங்கையில் இவர் இதனை அனுபவித்தார். பொருத்தமான இடத்தில் அதிபொருத்தாமான அந்த வாக்கியம் வந்து அமர்ந்திருக்கின்றது.
ஆபிரிக்க விமான நிலையத்தில் காத்திருக்கின்றார். ஆறடி உயராமான வாட்டசாட்டமான பெண்கள் தங்கள் குழந்தைகளை முதுகில் கட்டியபடி விமானநிலையத்தரையில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். ”முதல் பார்வைக்கு நூற்றுக்கணக்கான கறையான் புற்றுகள் தரையில் முளைத்து விட்டது போன்று இருந்தது”. வியந்து போனோன். எவ்வாறு கொக்குவில் கறையான் புற்றுகளை ஆபிரிக்க விமானநிலையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றார் என்று.
இன்னோர் கதையில் ஒரு அமெரிக்காவில் உள்ள ஆபிரிக்க ஆணை இவ்வாறு விபரிக்கின்றார் : கழுத்திலே சதை வட்டமாக தோன்றும் அந்தக் கறுப்பு மனிதரிடம் மீண்டும் சென்று விசாரித்தேன் என கதை நகர்கின்றது. அமெரிக்க திரைப்படங்களில் பார்த்த அந்த மனிதர்களின் புகைப்படத்தை மிக இயல்பாக பிரதிஎடுத்து கதையில் தருகின்றார். அதே கதையில் ”ஆண் தேனி போல சுருண்டு கிடந்த சிவமூர்த்தி” என்றொரு உவமானம். ஐந்தாம் வகுப்பிற்கு அரைக்காற்சட்டையுடன் போய் வந்தேன்.
அவ்வாறே அவரின் எள்ளல் நடைகளில் தனிமனிதர்களின் உருவங்களை வர்ணிப்பதும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஓரிடத்தில் எழுதியிருப்பார் ”அவளை விட அவளின் மார்பு முன்னே சென்றது” என. கண்முன்னே கதைக்களம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டது. உதட்டினுள் சிரித்துக் கொண்டேன் – மனைவியின் தூக்கத்தைக் கெடுக்காமல்.
சில விஞ்ஞான விடயங்கள் – விஞ்ஞான சஞ்சிகைகளில் படிக்கின்றாரா அல்லது வெவ்வேறு நாடுகளில் பயணிக்கும் பொழுது பெறும் வாழ்வனுபவமா என வியந்திருக்கின்றேன்.
புவியீர்ப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கதை, மதமாற்றம் செய்ய வருபவர்களிடம் அவர் நடாத்தும் உரையாடல்கள், நாடுகள் மாறும் பொழுது வெள்ளியைத் தாண்டி வரும் ஞாயிறு அல்லது மறுபாதையில் வரும் பொழுது வெள்ளியைத் தாண்டினால் வரும் இரண்டு சனி பின் அதற்குப் பின்பு ஞாயிறு இவை அனைத்திலும் அவரின் உலக அறிவும் உவமான உவமேயங்களும் தனி ஆவர்த்தனம் செய்யும்.
இந்த தொகுப்பினூடான எனது பயணம் அல்லது இலக்கியச் சுவைப்பு என்பது ஒரு முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையாக வளர்ந்து விடும் என்ற தயக்கத்தினாலும் இம்மலரில் அவரை வாழ்ந்த வரிசையில் நிற்கும் பிற எழுத்தாளர்களுக்கு இடம் விட்டு கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
முடிந்தால் அமெரிக்கக்காரியை ஒரு தடவையல்ல பலமுறை படியுங்கள் என பரிந்துரை செய்கின்றேன் – ஏழு சுடுதண்ணிக் கிணற்றில் குளித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.
இந்த நூலில் முன்னுரையில் அவர் கூறியிருக்கும் ஒரு வார்த்தை.
”எழுத்துகளே ஒரு எழுத்தாளனை உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றது”
சத்தியமான உண்மை.
அவர் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் கனடாக்காரன்களையும்;… கொக்குவில்காரிகளையும்… குண்டு போடும் பனைகளையும்… எங்கள் முன்னே கொண்டு வர அவருக்கு போதிய தேக ஆரோக்கியத்தை தருமாறு நான் வணங்கும் கண்ணனையும் கர்த்தரையும் கேட்டுக் கொண்டு அன்புடனும் ஆசிகளுடனும்…. வி. ஜீவகுமாரன்.