கோடை.
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்து கொண்டே போகின்றேன்.
அம்மியில்லை உரலில்லை
ஆட்டுக்கல் ஏதுமில்லை
ஈக்குப்பிடி பிடித்துக்
கூட்ட வளவில்லை.
தண்ணியள்ள கிணறில்லை
விறகெரிக்க அடுப்பில்லை.
குனிஞ்சு நிமிர்ந்து
வேலை பார்க்க நேரமில்லை.
என் உடலை
வியாதிகள்
விலை பேசிவிட்டன
பிறசர் அழுத்த
சலரோகம் துரத்த
பிடி பிடி எனக் காலன்
பின்னால் துரத்த
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்து கொண்டேயிருக்கின்றேன்.
டென்மார்க்கில் இப்போ
கோடை விடுமுறை.
ஊச்சிவெய்யில் நேரமிது
பட்டப்பகல் வானம்
பஞ்சுமிட்டாய் மேகங்கள்
கிச்சுக் கிச்சு மூட்டி
துள்ளி வரும் தென்றல்
தொட்டுவிடும் தூரத்தில்
சொர்க்கம் உண்டு என்கின்றன.
தெருவெங்கும் மக்கள்
சிட்டாகப் பறக்கும்!
சிறுசுகள் ஒரு பக்கம்!!
தள்ளாடி தள்ளாடி
நடந்தாலும் தம் சோடி
கைகோத்து நடக்கும்
முதியோர் மறுபக்கம்!!!
உடம்பெல்லாம் பச்சைகுத்தி
மனசெல்லாம் இச்சை குத்தி
நடமாடும் ஓவியமாய்
உலவிடுவோர் மறுபக்கம்
முதுகிலே பைகள்
தோள்களில் குழந்தைகள்
சூரியக் குளியலுக்காய்
கடல் மடி நாடும்
குடும்பங்கள் மறுபக்கம்
நில்லுபிள்ள
நில்லுபிள்ள
நானும் வாறன்
என்று சொல்லி
சூரியனும் என்பின்னால்
ஓடிஓடி வருகின்றான்
”அப்பப்ப மேகத்துள்
மறைந்து போவதும்
வெளியே வந்தெமை
வறுத்தெடுப்பதும்
இரவானால் கடலினுள்
மறைந்து போவதும்
பனிவந்தால் பயந்தொழிந்து
பரதேசம் போவதும்
என்ன கூத்திது?”
எனக்கொருக்கா சொல்லப்பா!
”மாற்றம் என்பது
மாறாத ஒன்றென்று
அறிந்திடு மகளே”
அது சரி
நேற்று என்பது
முடிந்த முடிபு
“ நாளை எனக்கது
தெரியாத ஒன்று
இப்போ என்பதே
என்வசம் உள்ளது.
ஆதலினால் என்னை
நடக்கவிடு” என்றேன்
”நட நட நட நட
நீ நடந்து கொண்டே கதை”
என்றவன் சொன்னான்.
“பார் ஐயா பார்
உன்னயே சுற்றி வரும்
பூமியம்மா உன் சூடு
தாங்காது வாடிப்போகின்றாள்.
துடிதுடிக்கும் அம்மாக்கு
இலைக்குடை பிடித்து
நிழல் கொடுக்கின்றன
அவள் மரப்பிள்ளைகள்.”
உன் சூடுபட்டு
நிறமிழந்தோர்
எத்தனை பேர் அறியாயோ?
முள்ளி வாய்காலில்
நீ மனிதக்கருவாடு
போட்டாயே நினைவுண்டா?
பூமியம்மாவின் பச்சைசேலை
இப்போ வெள்ளைச்சேலை ஆனதுவே
அது உன்னால் தானா?
கொடிகளில் உலர்ந்த
உடுப்புக்கள் எல்லாம்
வெளிறிப் போயின.
எங்கள் ஊரில்
கறுத்த காக்காகூட
கழுத்து வாய்
எங்கும் வெள்ளை
நிறமாகி அலைகின்றது.
வெளிநாடு வந்த
எம்தமிழ் அன்னையும்
தன் முகமிழந்து
தன் நிறமிழந்து
அடையாளஅட்டையைத்
தெலைத்துவிட்டு
அகதிமுகாமில்
சரணடைந்துள்ளாள்.
உனக்கென்ன நீ
உறுண்டு கொண்டே போ
நான் நடக்க வேண்டும்
தாகத்தில் ஒட்டிவிட்ட நாக்கு
தள்ளாடும் கால்கள்
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்து கொண்டே போகின்;றேன்.
எட்டி நாலு நடை நடந்தால்
கடல்கரை வந்துவிடும்
ஆனாலும் அங்கே
கடல் நீரைக்
குடிக்கலாமோ?
ஆனாலும் நான் நடக்கிறேன்
துள்ளிவரும் வெள்ளலையை
தொட்டு வர நடக்கின்றேன்.
கோமணத்தில் நின்மதியை
கண்டுகொள்ளும் சித்தர்களாய்
உடைகள் துறந்து
உள்ளம் துறந்து
சூரிய குளியலும்
சமுத்திர குளியலும்
உள்மனக் குளியலும்
ஒருங்கே கண்டு
உள்ளொளி பெருக்கி
ஒப்பிலா ஆனந்தமாகி
யார் இவர்கள்?
ஆபாசக் காறரா?
ஆன்மீக வாதிகளா?
நான் நடக்கின்றேன்
நடக்கின்றேன்
யாரது யாரது?
என் பின்னாலும்
சிலவேளை
என் முன்னாலும்
வருவது? யாரது?”
சொல்லப்பா ”
”நீதான் மகளே”
”என்னது ?
நானா ”
”ஓமடி மகளே
அது உன் நிழல்”
”நிழல் என்றால் என்ன?”
“அதுவும் நீதான்.”
“நான் என்றால்
நான் யாரப்பா?
நான் தமிழச்சியா?
இல்லை
தமிழச்சியானால்
இங்கு வந்திருக்கமாட்டேன்.
அப்போ டெனிஸ்காரியா?
அதுவும் இல்லை
அப்படியானால்
நீச்சலுடையில் இப்போ
நீந்தியிருப்பேன்.
எதுவும் இன்றி நான்
இரண்டும் கெட்டானா?”
“இல்லை மகளே”.
“அப்போ நான் யார் ஐயனே?”
“2கால்கள் 2கைகள்
ஒரு தலை ஒரு இதயம்
உள்ள ஒரு பிறவி.
உன் இதயம் சிகப்பு
உன் அருகில்
உன்னைப் போன்றே
மானிடர் அனைவர்
இதயமும் சிகப்பே
ஐயா சூரியா
நிற்க நாதியில்லை
நாக்கில் ஈரமில்லை
நான் போகின்றேன்
என் வீட்டுச் சமையலறையில்
என் வீட்டுக் குளியலறையில்
கங்கையம்மா
குழாய் வடிவில்
எனக்காகக்
காத்திருப்பாள்
நான் போகின்றேன்
விடை கொடு ஐயா
நீ விடை கொடு.