எனது இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னார் .
”பல சந்தர்ப்பங்களில் உங்களின் ”ரௌத்திரம் பழகும்”…..
”
சில இடங்களில் உங்கள் அடர்மௌனமும் மிகவும் பிடித்திருக்கின்றது”என்று.
”மகிழ்ச்சி ”என்றேன்.
அவர் கபாலி படத்தை நினைத்து சிரித்துக் கொண்டார்.
அவர் அப்பால் சென்ற பின்பு ”அடர்மௌனம்”என்ற சொல் என்னை உறுத்திக் கொண்டு இருக்கின்றது.
எங்கேயோ கேட்ட அல்லது படித்த வாக்கியம் எனப்பட்டது.
பின்பு அது ஒரு கவிதைத் தொகுதியின் தலையங்கம் எனப்புரிந்தது.
அவர் சொன்னது மிகவும் உண்மைதான்.
சில விடயங்களில் இந்த அடர்மௌனம் மிக அவசியம்.
சில வேளைகளில் இந்த அடர்மௌனங்கள் இரண்டொரு மணித்தியாலங்களாக…சில வேளைகளில் இரண்டொரு நாட்களாக…சில வேளைகளில் வருடங்களாகத் தொடரும்.
முதல் மரியாதை படத்தில் சிவாஜி காலுக்குச் செருப்பு போடாதது போல இந்த ஆகஸ்ட் 11ம் திகதியுடன் 7 வருடங்களாக ஒரு அடர்மௌனத்தைக் காப்பாற்றி வருகின்றேன்.
செப்டம்பர் 11 என்பது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட தினமாக எல்லோராலும்
நினைவு கூரப்படுவது போல இந்த ஆகஸ்ட் 11 என்பது
என்னால் என்றும் நினைவு கூரப்படும் தினமாக இருக்கின்றது.
அது ஒரு தவம்!
யாரையும் வேதனையோ அல்லது காயமோ படுத்தாத ஒரு தவம்!!
இப்பொழுதெல்லாம் மாமிசம் உண்ணாமல் இருக்கின்றேன் என்பதை சரி… எதற்காக இவ்வாறு இருக்கின்றேன் என்பதைச் சரி…. யோசித்தே பார்ப்பதில்லை.!!!
பழக்கங்கள் என்பது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் பொழுது அதற்கான காரணங்கள் மறந்து போகும்.
சிறையில் இருப்பனுக்கு களியும்…இராப்பிச்சைக்காரனுக்கு பலவீட்டு உணவு ஒரு பாத்திரத்தில் சுவைப்பது போலவும்….
சுவை என்பதே நாக்கு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல –மனமும் சம்மந்தப்பட்டது!!
ஆனாலும் கோடைகாலங்களின் மாலைப் பொழுதுகளில் ஒழுங்கைகளினூடு நடந்து செல்லும் பொழுது யாரோ வீடுகளில் வாட்டும் இறைச்சியின் மணம் வந்து என்னை குழப்பிச் செல்லும்.
சிங்கப்பூர் வீதிகளில் திரியும் பொழுது நான் ரசித்து ருசித்து உண்ட ”நாசிக்கொறிங்”உணவு கண் சிமிட்டும்.
“நீ மெலிந்து போகின்றாய்…மாமிசம் உண்டால் அந்த மகிழ்ச்சியில் இன்னும் அதிக காலம் உயிர்வாழ்வேன்”, என சொன்ன அம்மாவின் முகம் வந்து போகும்.
ராஜீவ்காந்தியின் மரணத்தை ”அது ஒரு துன்பியல் சம்பவம்”என்று மிகச் சாதாரணமாகச் சொன்னது போல….
இன்னொருவர் ”அது ஒரு சின்ன accident” என்றது போல…
அவரவர்களுக்கான நியாஜங்களுடனும்…
நியாயப்படுத்தல்களுடனும்…
உலகம் மட்டும் தனது பாட்டில் உருண்டபடி…
இன்றாவது என் மகனுக்கு விடுதலை கிடைக்குமா என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காத்திருக்க…
நானும் என் அடர்மௌனத்துடன் எட்டாவது வருடத்தை நோக்கி நடந்தபடி…