விடியல் (சிறுகதை)

விடியல் (சிறுகதை)

விடியல் (சிறுகதை)

நேரம்: இரவு 11:00

காலம்: 31-12-2015

என் பெயர் பாஹீரா.

டென்மார்க்கில் இருந்து கட்டார் சென்று பின் அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருக்கின்ற கட்டார் விமானத்தில் ஜென்சுடன் அமர்ந்திருக்கின்றேன்.

ஊகூம்….

இதே விமானநிலையத்திற்கு எட்டு வருடத்திற்கு முதல் ஆஸிமாவுடன் பாஹீரா ஆஸிமா வாக வந்திறங்கினான்.

ஆஸிமா என்றால் பாதுகாவலனாம்! எத்தனையோ நாட்கள் இதனை நினைத்து சிரித்தும் இருக்கின்றேன். அழுதுமிருக்கின்றேன்.

இன்னும் பத்து நிமிடத்தில் வேகமெடுத்து ரன்வேயில் ஓட இருக்கின்ற இந்த விமானத்தை விட வேகமாக என் வாழ்க்கை ஓடி விட்டது என நினைக்கின்றேன்.

வெளிநாட்டு கடவுச்சீட்டும் ஆண் என்ற அங்க அடையாளம் மட்டும் கொண்டிருந்ததால் அவசர அவசரமாக நடாத்தி வைக்கப்பட்டு… டென்மார்க்கிற்கு மொழிதெரியாது… கலாச்சாரம் தெரியாதது வந்து வாழ்க்கையை ஆரம்பித்தது தான் என் வாழ்வு.

இப்போ பக்கத்தில் ஜென்சுடன்!

ஆம்! ஜென்சை எல்லாருக்கும் காட்ட வேண்டும்.

தாலிகட்டி பந்தி வைக்க முதல் கூத்தடித்த ஆஸிமின் குடும்பத்திருக்கு காட்ட வேண்டும்.

ஆஸிமுக்கு நான் ஒரு பெண் என்பதை விட இந்த பாஹீரா எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிந்திருக்கவில்லை.

அதுவும் அவன் அக்கா தங்கை போல ஒரு அப்பா அம்மா பெற்ற பெண் என்று என்றுமே தெரிந்திருக்கவில்லை.

ஊதித்தள்ளும் ஒரு சிகரட்டாயும்… கடைசிச் சொட்டையும் உறிஞ்சிவிட்டு நசுக்கி எறியும் பியர் ரின்னாகத்தான் நான் அவனுக்கு இருந்து வந்தேன்.

வயிற்றில் வந்த மூன்றாவதையும் அழிக்கச் சொன்ன பொழுது எழுந்த போராட்டம் தான் எங்கள் விவாகரத்தில் வந்து முடிந்தது.

அவன் கரு என் வயிற்றில் வளரக் கூடாது என விதி நினைத்ததோ அதுவும் இறந்தே பிறந்தது.

வயிற்றில் இருந்த பொழுதே தொப்புள் கொடிக்கும் கருப்பைக்கும் இடையே இருந்த தொடுப்பு இல்லாது போனதால் கடைசி நான்கு நாட்கள் போசாக்கும் ஒட்சிசனும் இல்லாமல் அது போய் விட்டது.

அதன்பின்பு தான் இந்த பாஹீராக்குள் ஒரு ஆத்மா இருக்கின்றதை டென்மார்க் எனக்கு காட்டித் தந்தது.

முதலில் மொழிக்கல்வி! பின்பு தொழிற்கல்வி!! பின்பு சுகாதாரத்தாதி!!! பின்பு வைத்தியத் தாதி!!!!

வீடுகளில் இருக்கின்ற நோயாளிகளை சென்று பராமரிப்பது தான் என் வேiலாயாக இருந்தது.

சரியாக ஏழு நாட்களுக்கு முதல்.

24ம் திகதி இரவு.

டென்மார்க் முழுக்க அவரவர்கள் குடும்பங்களுடன் கூடியிருந்து இரவு விருந்து உண்டு… ஆளுக்காள் பரிசுகள் பரிமாறியும்… கிறிஸ்மஸ் மரங்களைச் சுற்றியும் ஆடிப்பாடும் தினம்.

பாலன் பிறப்பைக் கொண்டாடும் தினம் என்பதை விட குடும்பங்கள் இணையும் தினமாயும் குடும்பங்கள் இல்லாத பலர் தற்கொலை செய்து கொள்ளும் நாளாயும் அமைவது அனைவருக்கும் தெரியும். இதில் எத்தனையோ கல்விமான்களைக் கூட டென்மார்க் இழந்து இருக்கின்றது.

ஜென்சுக்கு சின்னதொரு பக்கவாதம் வந்திருந்ததால் கடந்த இரண்டு வருடங்கள் அவரை நான் தான் பராமரிப்பது.

அன்று பகல் மருந்து கொடுக்கச் சென்ற பொழுது நகைச்சுவையாகச் சொன்னேன், “நீங்கள் இரவு தற்கொலை செய்யக் கூடாது” என்று.

நான் எதிர்பார்க்காதவாறு வெடித்து அழத்தொடங்கினார்.

ஓடிப்போய் கைகளைப் பிடித்த பொழுது அவர் தனது இறுதிக்கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

தனது சொத்துகள் எல்லாவற்றையும் தன்னை நன்கு கவனிக்கும் எனக்கும் மற்ற இரண்டு தாதிகளுக்கும் எழுதி வைத்திருந்தார்.

தூக்க மாத்திரைகள் எதுவும் அவர் கைகளுக்கு கிட்டவாக இல்லாதாதால் கட்டாயம் குசினிக்குள் பாவிக்கும் கத்தி கொண்டுதான்… மிகுதி என்னால் யோசிக்க முடியவில்லை!

அவரை ஓடிச்சென்று அன்பாக அரவணைத்தேன்.

இந்த அணைப்பு எனக்கு என்றும் கிடைக்குமா என இரந்து நின்றார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!

மிகுதி நாள் வேலைக்கு லீவு போட்டு விட்டு கடைத்தெருவுக்குப் போய் கிறிஸ்மஸ் மரம் உட்பட அனைத்தும் வேண்டி வந்து… அவர் வீட்டை அலங்கரித்து… அவருடன் கூடியிருந்து கிறிஸ்மஸ் கொண்டாடினேன்.

அவரும் நானும் உயிர்த்நாள் அந்த கிறிஸ்மஸ் இரவு!

இப்போ அவரும் நானும் பக்கத்தில்…. விமானத்தாதி வந்து வாசனையும் சூடும் நிறைந்த கைக்குட்டையைத் தந்து செல்லுகின்றாள்.

நான் அவரின் முகத்தை நன்கு துடைத்து விடுகின்றேன்.

“தாங்ஸ்” என குழந்தையாக சிரிக்கின்றார்.

*

நேரம்: இரவு 11:00

காலம்: 31-12-2015

என் பெயர் மரியாணி!

பரீட்சை முடிவு வரும்வரை ஐயாவின் சாப்பாட்டுக் கடையில் வந்து உதவி செய்வேன்.

பரீட்சை பெறுபேறு இப்போதே தெரிந்தது தான்.

தமிழ் பாடத்தை தவிர மற்ற அனைத்திலும் குண்டு என்பது உறுதி.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் வெள்ளப் பெருக்கு… அதனைத் தொடர்ந்த ஆளும் – எதிர்கட்சிகளின் சாடல்கள்…. சிம்புவின் ”பீப்.. பீப்” பாடல் விவகாரங்கள் என்பன இலங்கைத் தொலைக்காட்சிகளின் ஒரு பகுதியை நிறைத்திருக்க, இலங்கையிலும் அதே வெள்ளம்… தூர்வராத ஏரிகள் காரணமாக வீட்டுக்குள் வந்த முதலை தொடக்கம் ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களோடு உணவருந்தியது வரை தொலைக்காட்சியின் மறுபகுதியை நிறைத்திருக்க அனைத்து தேவாலங்களிலும் பாலன்; பிறப்பு மகிழ்ச்சியாக நடந்தேறியது.

நடுநிசியில் ஆலய மணிகள் ஒலிக்க உலகை இரட்சிக்க வந்த பாலனின் பிறப்பை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

வானத்தின் உச்சிக்கு சென்ற வாணங்கள் வெடித்துச் சிதறி வண்ண வண்ண நிறங்களில் பூமிக்கு வர்ணம் பூசின.

எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி.

”ஜீவனுள்ள காலமெல்லாம் ஜேசுவைப் பாடுவேன்

எனக்காக ஜீவன் தந்த நேசரையே நாடுவேன்

அர்ப்பணித்தேன் என்னையே

அக மகிழ்ந்தேன் அவரிலே” தேவாலய வீதிகளில் அமைந்திருந்த எங்கள் இரவுச் சாப்பாட்டுக் கடையிலும் இந்த கிறிஸ்தவகானங்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன.

ஐயாக்கு உதவியாக தேனீர் கிளாஸ்களை கழுவிக் கொண்டிருந்த என்னை சமையல் கட்டில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த செந்தில் வைத்த கண் பார்க்காது பார்த்துக் கொண்டிருந்தது போலவும்… நானும் அவனை அந்தப் பாடலை கேட்கும்படி சொல்லுமாப்போல் இருந்தது.

என்ன இது?

அவனும் புரிந்து கொண்டவனாய் இன்னும் வேகமாக தன் வேலையில் மூழ்கினான் போல் இருந்தது.

”ஜேசப்பா நீயே எனக்கு நல்ல வழியைக் காட்டு”

கழுத்தில் இருந்த குருசை எடுத்து வேண்டிக் கொண்டேன்.

என்னால் அவனில் இருந்து விலத்த முடியாது இருந்தது.

சென்ற வருடம் அம்மன் கோயில் குருக்களின் மகள் சுருதி மருந்து குடித்து தேர் முட்டியடியில் இறந்து போனதும்… முஸ்தபா வாப்பாவின் மகனை யாரோ இருட்டில் அடித்துக் கொண்டதும் இதே காதலுக்காகத் தான் இதுக்காக இந்த வேதனையை மீண்டும் ஒரு தடவை அனுபவிக்கலாம் போல இருந்தது.

அப்படி ஒரு ஈர்ப்பு செந்தில் மேல்.

அதே அவனுக்கும் என் மேல் என்பதும் எனக்குத் தெரியும்.

அடுத்தநாள் ஒன்றை மட்டும் உறுதியாக செந்தில் சொன்னான்.

”நாங்கள் இன்னும் ஐந்தாறு வருடங்கள் காத்திருந்தாலும் சரி… ஐம்பது அறுபது வருடங்கள் சரி காத்திருந்தாலும் உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் இதுக்கு சம்மதிக்க மாட்டினம்”

நான் கலக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

அவன் உறுதியாக தலையாட்டினான்.

”சமயம் வேறை என்றாலும்… சாதி வேறையென்றாலும் நாங்க படிச்சிருந்தால் எல்லாரும் கண்ணை மூடிக்கொள்ளுவினம். ஆனால் எனக்கு என்றுமே அடுப்பங்கரைதான். நீயும் இந்த முறையும் சோதனை பெயில் தான். அதுதான்….” ”அதுக்கு… ” கொஞ்சம் தயங்கியவன்… பின் உறுதியாகச் சொன்னான்.

நாங்கள் காதலிக்கிறதை நிப்பாட்ட வேணும். இல்லாட்டி வீட்டை விட்டு ஓடிப்போக வேணும்”

நான் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அழத்தொடங்கினேன். *

இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில் கொழும்பு செல்லும் கடைசி பஸ் வந்து விடும்.

இனி இந்த தேவாலயம்… புன்சிரிப்பையும் ஆசீர்வாதத்தையும் உதிக்கும் பாதிரிமார்…; சிஸ்ட்டேர்ஸகளின் நட்பு… விழாக்கோலம் கொள்ளும் வீதிகள்… பிரார்த்தனைக் கூட்டங்கள்… கடைக்கு வரும் அத்தனை உறவுகள்…. மேலாக பிள்ளை பிள்ளை என அடிக்கடி அழைக்கும் ஐயாவின் குரல்….

எல்லாவற்றையும் விட்டு விட்டு…

ஐயா ஒருநாள் திரும்பி வருவேன்.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!

*

நேரம்: இரவு 11:00

காலம்: 31-12-2015

என் பெயர் சிவசக்தி!

அவர் பெயர் சிவானந்தன்!!

பெயரிலும் கூட அப்பிடி ஒரு பொருத்தம்!!!

எல்லோரும் சொல்லுறமாதிரி எல்லாம் நிறைந்த வாழ்க்கை.

இது எனக்கு முதல் பிரவசம்!

இன்னும் கொஞ்ச நேரத்திலை… அல்லது நாளை அதிகாலைக்குள்ளே பிள்ளை பிறந்து விடும் என கைபிடித்து பார்த்து விட்டு சின்னாச்சி கிழவி போய்விட்டா.

ஆனால் நல்லா நோவு எடுக்க முதல் ஆஸ்பத்தரிக்கு கூட்டி வரவேண்டம் என்று சொல்லி விட்டார்கள்.

இவர் கிறிஸ்மஸ்சுடன் லீவு போட்டு விட்டு வந்து வீட்டோடை நிற்கிறார்.

இனி பொங்கலுடன் தான் கொழும்புக்கு போவார்.

அவருக்கு வயது இருபத்தியேழுதான். ஆனால் பெரிய ஆள் போல என்னைக் கவனமான பார்ப்பார்.

எனக்கு அவர் எப்போதும் குழந்தை போலைதான். அப்பிடித்தான் அவரை இந்த மூன்று வருடமும் பார்த்துக் கொண்டேன்.

ஐயா அம்மாவுடன் எப்பவும் சண்டை போடுவது போல இவர் போடமாட்டார்.

இன்று காலையும் ஐயா அம்மாவுடன் சண்டை.

நாளைக்கு வருடப்பிறப்பு ஆதலால் சென்று வருடம் காலம்சென்ற அம்மாம்மாவை நினைத்து அம்மாவும் அன்ரியாட்களும் முற்றத்தில் இருந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தார்கள்.

அது அம்மா குடும்பத்து ஐதீகம்.

ஐயாக்கு காலைக்கள்ளு கொஞ்சம் வேறு.

“அவள் இப்பவோ அப்பவோ என்று பிள்ளை பெறக் காத்துக்கிடக்கிறாள். உங்களுக்கு இப்பதான் ஒப்பாரி… உங்க உங்க வீட்டிலை போயிருந்து உந்த சங்கீதக் கச்சேரியை நடாத்துங்கோவான்”.

“இனி உன்ரை முற்றந்தை மிதிப்பனோ பார்” என அன்ரியாட்கள் அம்மாவை ஏசியபடி எழுந்து போய் விட்டார்கள்.

அம்மா சன்னதம் கொள்ளத் தொடங்கி விட்டா.

ஐயா போர் தொடங்கினால் விடமாட்டார்.

எல்லாவற்றிலும் அரசியல் பறக்கும்.

பழையகாலத்து காங்கிரஸ்கட்சி ஆள்.

“எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டால் அதை விட்டுட்டு நடக்க வேண்டியதுகளை பாருங்கோவன்… இண்டைக்கும் 83லை நடந்து முடிஞ்ச கலவரத்துக்கு கண்ணீர் அஞ்சலி பாடிக்கொண்டிருக்கிறமாதிரி… முள்ளிவாய்க்காலுக்கு இப்பவும் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறதை விட ஏதும் அந்த சனங்களுக்கு ஏதும் பிரியோசனமாய் செய்யலாமே! எப்ப ரி.வி. றேடியோவைத் திறந்தாலும் ஒப்பாரி… ஒப்பாரி… .இப்ப வீட்டுக்கை ஒப்பாரி… கொம்மாவை வடிவாய்தானே வைச்சு அனுப்பினனாங்கள்”

பின்பென்ன ஐயாக்கு கள்வெறி இறங்கும் வரையும்… யாழ்ப்பாணம் ரவுனுக்கு போய் இவர் கோழிக்குஞ்சுகள் வாங்கி வரும் வரையும் வீட்டில் அமர்க்களம் தான்.

*   நேரம்: இரவு 11:15

“ஆ.. ஆ… அம்மா… வயிற்றின் இடப்பக்கத்தில் கொழுவி இழுக்கிறமாதிரி இருக்கு…

இது அந்தக் குத்து இல்லை… அம்மா… அம்மா…”

எல்லோhரும் கூடி விட்டார்கள்.

“காரை பிடிச்சுக் கொண்டு வாங்கோ…”

இவர் ஓடுகின்றார்… என் கண்கள் மயங்கிக் கொண்டு போகின்றது.

*   நேரம்: இரவு 11:15

விமானத்தில் இருந்த அனைவரையும் அவசர அவசரமாக இறக்கின்றார்கள்.

“ஏதோ குண்டு வைச்சிருக்காம்”

விமான நிலையத்தில் முப்படையும் நிறைந்து போய் நிற்கின்றது.

மோப்ப நாய்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

ஜென்சின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொள்கின்றேன்.

விமான நிலைய தொலைக்காட்சியில் தலைநகரில் ஒரு குண்டு மீட்கப்பட்டுக் கொண்டிருந்து.

வெடித்திருந்தால் குறைந்தது புதுவருடக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த குறைந்தது ஆயிரம் மக்கள் சிதறியிருப்பார்கள்.

அல்லாக்கு மனம் நன்றி சொல்லிக் கொள்கிறது.

விமானம் புறப்படுமா?

நாளைய புதுவருடத்தில் வாப்பாவின் மடியிலும் உம்மாவின் மடியிலும் தiலை வைத்துப் படுக்க முடியுமா?

ஜென்சை அவர்கள் உச்சி மோந்து ஆசீர்வதிக்க முடியுமா??

மனம் போட்டு உளைந்து கொண்டிருக்கின்றது.

*   நேரம்: இரவு 11:15

இப்போது வந்திருக்க வேண்டிய கடைசி பஸ் இன்னும் வரவில்லை.

செந்தில் அமைதியின்றி பதட்டத்துடன் நிற்கின்றார்.

நான் இருட்டினுள் மரத்தின் பின்னால்…

“என்ன செந்தில் கொழும்புக்கோ… “ சூசைமாமா கேட்டபடி அவனைக் கடந்து போக என் உயிர் என் கையில் இல்லை.

நாங்கள் அகப்பட்டால் குருக்களின் மகள் சுருதியினதும் முஸ்தபா வாப்பாவின் மகனின் கதைதான்.

“கர்த்தரே எங்களை காப்பாற்றும்…

வழிதவறிப் போகும் இந்த ஆடுகளை இரட்;சியும்…

கர்தரே உமக்கு ஸ்தோத்திரம்!

கர்தரே உமக்கு ஸ்தோத்திரம்!!”

*   நேரம்: இரவு 12.00

வானத்தைக் கிழித்துக் கொண்டு வாணங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றது.

”ஹப்பி நியூ இயர் 2016” என்ற எழுத்துகள் வானத்தில் இருந்து இறங்கிக் கொண்டு இருக்கின்றது.

எங்கும் வெடிச்சத்தங்கள்.

குதூகலங்கள்!

குலுக்கிக் திறந்த சம்பயின் நுரைகளுடன் கிளாஸ்கள் நிறைகின்றன.

உலகெங்கும் டிஸ்கோரெக்குகளில் இளைஞர் பட்டாளம் நிறைந்திருந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துகின்றார்கள்.

மகிழ்ச்சி.. எங்கும் மகிழ்ச்சி…

ஆலயங்களில் மணிகள் ஒலிக்கிறன.

*

சிவசக்தியின் கைகளில் ஒரு குட்டி சிவானந்தன்.

அனைவரின் கண்களும் கலங்கியிருந்தது.

“பேராண்டி எனக்கு நாளைக்கு ஒரு போத்தில் கள்ளு வேண்டித் தாடா” என அந்த வெள்ளாந்தி மனம் மகளின் தலையைத் தடவிக் கொண்டும் மருமகனின் கையைப் பிடித்துக் கொண்டும் நின்றது.

*

பஸ் இப்போது வவுனியாவின் எல்லலைத் தாண்டி போய்க் கொண்டு இருக்கின்றது.

மரியாணி செந்திலில் தோளில் சாய்ந்து கொண்டு வயல் வெளிகளினூடு தெரியும் வானங்களின் வர்ண விளையாட்டுகளை இரசித்துக் கொண்டு இருந்தாள்.

மிகத் தூரத்தில் தெரியும் விடியல் அவள் மனக் கண்களில்.

*

ரன்வேயில் மிக வேகமாக ஓடிய விமானம் வர்ண வர்ண வாணவேடிக்கைகளுக்கு நடுவே வானத்தின் மேல் எழுகின்றது.

அனைத்துப் பயணிகளும் கை தட்டி குதூகலிக்கின்றார்கள்.

“ஹப்பி நியூ இயர்” என்னும் இசையொலி விமானத்தில் மெதுவாக படர்கிறது.

அனைத்துப் பயணிகளுக்கும் பிரத்தியோகமாக சாம்பெயின் வழங்கப்படுகிறது.

பாஹீரா தனது சாம்பெயினையும் ஜென்ஸிடம் கொடுக்கின்றாள்.

ஜென்ஸ் பாஹீராவின் கைகளை இறுகப்பற்றிக் கொள்கின்றார். விமானம் மேலும் மேலும் எழுந்து கொண்டிருக்கின்றது.

வானம் தொட்டு விடும் தூரம்தான்!

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)