முன்னை இட்ட தீ

உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் 3-4 மாதங்களே இருந்தன.

நிச்சயம் விமலன் பல்கலைக்கழகம் செல்வான் எனவே எல்லோரும் நம்பியிருந்தார்கள்.
ஆனால் என்ன? நாலு வருடப் பட்டத்தைப் பெற சிலசமயம் எட்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை.

போர்!

அது பட்டப்படிப்பின் ஆயுட்காலங்களைக் குறைத்;தும் மற்றைய அனைத்தையும் நீட்டியுமிருந்;தது.
இந்திய சமாதானப்படை வந்தும் சமாதானம் கிட்டவில்லை.
இனி எந்த நாட்டின் சமாதானப் பேச்சு விடியலைக் கொண்டு வரப் போகின்றது என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

***
வாணவேடிக்கைகள் வானமெங்கும் பரவி புதுவருடத்தின் வரவைப் பரவசமாக்கிக் கொண்டிருந்த அந்த நடுநிசியில் அறுபத்திமூன்று ஜீவன்களின் இதயஅடிப்புகள் அதி உச்சத்தை எட்டியிருந்தன.
மன்னாரில் இருந்து அத்தனைபேரையும் ஏற்றி வந்த நாலு மோட்டர் பொருத்தப்பட்ட அதிவேகப் படகு தனுஷ்கோடியின் கரையை வந்தடைந்தது.

நடுக்கடலில் வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு நாடுகளின் வாணவேடிக்கைகளையும் காணக்கூடியதாய் இருந்தது. ஆனால் மனங்கள் தான் ரசிக்கும் நிலையில் இருக்கவில்லை.
முப்பது பேருடன் மட்டும் பயணிக்கக் கூடிய அந்தப் படகில் அறுபத்திமூன்று பேரை ஏற்றிக் கொண்டு கரைதெரியும் தூரத்திற்கு வந்த பொழுதுää மன்னாரில் படகில் ஏறிய பொழுது போன உயிர் அனைவருக்கும் மீண்டும் வந்தது.

சில காலத்திற்கு முன்புதான் அனலைதீவில் இருந்து புறப்பட்ட இதே போன்ற ஒரு வள்ளம் ஐந்தாறு பேரைத் தவிர ;பந்தைந்து பேரை கடல்தாய்க்கு காவு கொடுத்து விட்டு கரைக்கு நாலு பேரை மட்டும் கொண்டு வந்து சேர்த்தது.

இன்று மண்டபத்தில் உயிர் இருந்தும் இல்லாதவர்களாக அந்த ஐந்தாறு பேரின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இலங்கையில்எங்கும் மரணபயம்.

ஏந்த மூலை முடுக்குகளிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

உயிருக்குத் தடுப்பு முகாம்களில் நேர்முகப்பரீட்சைகள் – அது இராணுவத்தின் என்றாலும் சரி…. போராட்டக்குழுக்களினது என்றாலும் சரி.

எந்தச் சந்தியில் எந்த முகமூடி அணிந்தவன் எப்படி தலை அசைக்கின்றான் என்பதில் தான் உயிர்வாழ்தல் என்பதற்கான உறுதி அல்லது உறுதியின்மை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
‘ஆம்’ என்று தலையாட்டினால் உயிர் போய்விட்டது போலிருக்கும்.

அதன் அர்த்தம் இவன் அல்லது இவள் போராட்டக் குழுவினைச் சார்ந்தவன் அல்லது சார்ந்தவள் என்பதாகும்.

அவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் பத்துப் பத்து பேராக தங்கள் தங்கள் சவக்குழிகளை தாங்களே வெட்ட வேண்டும். அதனை அடுத்துக் காத்திருக்கும் மற்றைய பத்துப் பேர் அதனை மூட வேண்டும்.

முகமூடிக்காரன் ‘இல்லை’ எனறு தலையாட்டினால் உயிர் போய் உயிர் வந்தது போல இருக்கும்.
அந்த ஊமைக்காயம் வாழ்நாள் முழுவதும் மனதில் படிந்திருக்கும்.

அந்தப் படிவுகள் மனதுள் படிந்திருந்து நடுநிசியில் நித்திரையில் இருந்து தட்டி எழுப்பி தூக்கத்தைக் கலைத்துவிட்டுப் போகும்.

உடல் எல்லாம் வியர்த்திருக்கும்.

இதய அடிப்பு அதிகமாய் இருக்கும்.

எனவே தான் முப்பது பேருடன் பாதுகாப்புடன் செல்லக் கூடிய படகில் அறுபத்திமூன்று பேர் ஆகிலும் செல்லுவதற்குச் சம்மதித்தார்கள்.

தொப்புள் கொடியின் ஈரம் காயாது வாழ்வில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் இளம் தளிர்கள் தொடக்கம்ää சுடுகாட்டுக்குச் செல்ல நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் பழுத்த இலைகள் வரை அனைவருக்கும்; அந்த படகில் பயணப்பட்டு இருந்தார்கள்.

நிலவின் வெளிச்சம் ஏதுமற்ற அந்த நடுநிசியில் கரையில் இருந்து மூன்று தரம் டோர்ச் வெளிச்சம் அடிக்கப்பட்டது.

6 பற்றிகள் போடப்பட்ட அந்த பிரகாசமான டோர்ச் வெளிச்சம் கரையில் காவல்படையினரால் பிரச்சனை இல்லை இனி நீங்கள் வரலாம் என்பதற்கான அறிகுறியே அது.

முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கும் அளவு தூரத்தில் படகின் நங்கூரத்தை கீழிறக்கினார்கள்.
பின்பு முதலில் இளைஞர்களும் பின்பு வளர்ந்த ஆண்கள்ää பெண்கள்ää சிறியவர்கள்ää பெரியவர்கள் என இறங்கிக் கொண்டார்கள்.

நடக்க முடியாத வயோதிபர்களை இரண்டு இரண்டு ஆட்களாக தூக்கிக் கொண்டு கரைக்கு வந்தார்கள். அத்துடன் படகோட்டி வந்தவர்கள் அவர்களின் பயணப் பொதிகளை எடுத்துவர உதவி செய்தார்கள்.

அனைத்தும் துரித கதியில் நடந்தன.

காரணம் நிலம் வெளிக்க முதல் படகு மன்னாருக்குத் திரும்பி விட வேண்டும்.

இந்தியக் காவல் படையினரது கண்களில் சரி…. . இலங்கைக் காவல் படையினரது கண்களில் சரி பட்டால் அவ்வளவு தான்.

முதல் கட்டம் சிறை.

அடுத்த கட்டம் யாருக்கும் தெரியாது.

மிகுதியை அந்த அந்த நேரத்தில் உள்ள அரசியலும் அவரவரின் காலபலனுமே தீர்மானிக்கும்.
அறுபத்தி மூன்று பேரும் பாதுகாப்பாக இறங்கி கரைக்குப் போனதும் நங்கூரம் மீண்டும் தூக்கப்பட்டு இரண்டு மோட்டரும் ஒன்றாக இயக்கப்பட்டது. அடுத்த இரண்டு நிமிடத்தில் மற்றைய இரண்டு மோட்டரும் இயக்கப்படும்.

கரையில் வந்தவர்களுக்கு வழிகாட்டிச் செல்ல மூவர் நின்றிருந்தார்கள்.
சற்றே தெரியக்கூடிய நிலவு வெளிச்சத்தில் முன்னே செல்பவர்களின் நிழல்களையும் அவர்கள் மெதுவாய் கதைப்பதையும் கேட்டுக் கொண்டு பின்னே மற்றவர்கள் தொடரக் கூடியதாய் இருந்தது.

ஆனால் கடற்கரையை மிகவும் ஒட்டிய அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியது. மீன் வாடையோ என நினைக்க முதல் பலரின் கால்களில் மனித மலம் அப்பியது.

ஈரமானதும் காய்ந்தும் காயாத பிறவும் ஆங்காங்கே.

வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.

”ஐயோ.. இதென்ன அரியண்டம்…. ”

”சத்தம் போடாதையுங்கோ…. . இந்தக் கடற்கரையைத் தாண்டும்வரை இப்பிடித்தான் பல இடத்தில் இருக்கும்…. பிறகு கால்களைக் கழுவிக் கொள்ளலாம்”ää வழிகாட்டியவன் சொல்லிக் கொண்டு முன்னே சென்று கொண்டிருந்தான்.

வாழ வந்த இடத்தில் மலத்தில் காலை மிதித்தது விமலனுக்கு அபசகுனமாகப் பட்டது.
இருபது வயதுவரை ஆமியின் கண்களில் இருந்தும் பல இயக்கங்களின் கண்களில் இருந்தும் தப்பி பெற்றவர்களுடன் தன்னைவிட ஐந்துவயது குறைந்த வயதுக்கு வந்த தங்கையுடனும் இங்கு வந்திருக்கின்றான்.

”எங்கடை வாழ்க்கை சகுனம் பார்த்து வாழுற கட்டங்களை எல்லாம் தாண்டிப் போட்டுது”ää இராசையா விரக்தியின் குரலில் இருந்து விடுபடாது கூறினார்.

தகப்பன் இராசையா. தாய் தங்கம்மா. தங்கை சகானாää இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு அக்கா – வதனி.

மூத்தவள் வதனி இங்கிலாந்தில் திருமணமாகிப் பருவ வயதை எட்டும் ஒரு மகளுக்குத் தாய். அவளது கணவன் ஒரு பெரிய கப்பல் கட்டும் கம்பனியில் எலக்ட்ரிஷனாக வேலை செய்து கொண்டிருந்தான்.

வதனியின் ஏற்பாட்டில் தான் அவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள்.

“அக்கா சோதினை எடுத்து அதின்ரை முடிவை பார்த்து விட்டுச் செய்யலாம். கட்டாயம் யாழ்ப்பாணத்திலேயே முதலாவதாய் வருவன் அக்கா” கெஞ்சிப் பார்த்தான் விமலன்.
“இங்கை வந்தால் யூனிவேசிட்டியை அதைவிடக் கெதியாய் படிச்சு முடிக்கலாமடா. இங்கை வர கொஞ்சம் பிந்தினாலும் இந்தியாவிலை நிம்மதியாய் இருந்து படிக்கலாம். ஐயா அம்மா சகானா எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம். நல்ல பிள்ளை எதிர்த்துக் கதையாதை. முதலிலை இந்தியாவுக்கு வாங்கோ. பிறகு ஏஜன்சிமாரைப் பிடித்து வெளிநாட்டுக்கு வரலாம்.;

தமக்கையாரின் வார்;த்தைகள் தேவவாக்கு ஆகியது.

தொடர்ந்து அனைவரும் நடந்து வந்து மண்டபம் முகாமை அடைந்தார்கள்.

அங்கே ஆண்கள் பிறம்பாகவும் பெண்கள் பிறம்பாகவும் பிரிக்கப்பட்டு அவர்களின்; உடமைகள்…. உடல்களில் காயங்கள் மற்றும் தழும்புகள்…. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் போர்ப்பயிற்சி எடுத்தவர்களா எனவும் சோதனை இடப்பட்டார்கள்;.

அவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் இலங்கையில் அதிகாரத்தில் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.

உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றையும்…. கால் வைத்தால் கண்ணி வெடிகள் வெடித்து விடுமோ… நாங்கள் அங்கவீனராகி விடுவோமா என்ற அச்சமும் இந்தியாவில் இல்லை என்பதனை மட்டும் மனத்தினுள் நிறுத்தி அனைத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

அனைத்துச் சோதனைகளும் முடியக் குடும்பமாய் வந்தவர்களுக்கு 10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட தகரத்தால் ஆன கொட்டில்களும் சமைத்து உண்ண சில அலுமினியப் பாத்திரங்களும்ää பாய் தலையணை போர்வை என்பனவும் வேறு சில சாமான்களும் கொடுக்கப்பட்டன.

சற்றுத் தள்ளி ஒரு பொதுவான கழிப்பறை. பெயரளவில் பொது மலசல கூடம். அதனுள்ளே போவதும் வெளியில் வருவதும் தான் தினசரி வேதனை. உடைந்த மரக்கதவுகள்ää அல்லது கோணிப்பையால் மறைப்புகள்ää காரை பெயர்ந்த நிலங்கள்ää தண்ணீரை ஊற்றினாலும் கீழே இறங்காத மலக்குழிகள்ää அடிக்கடி நிறைந்து விடும் கிடங்குகள்ää அதில் இருந்து எழும் துர்நாற்றங்கள்…. இத்தனையும் சகித்தேதான் வாழ்க்கையை நொண்டி நொண்டி நடக்க வேண்டிய கட்டாயம் அங்கு.

அத்துடன் காலையில் காம்புக்கு வெளியே போனாலும் மாலையினுள் வந்து விட வேண்டும் என்ற அறிவுரைகளும்ää அதை விட காம்புக்கு வெளியே தங்குவதாயின் வட்டாராய்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்து அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற தகவல்களும் சொல்லப்பட்டது.
”ஒரு திறந்த சிறைச்சாலைக்குள்ளை வந்திருக்கிறம் அப்பா”ää விமலன் விரக்தியாகக் கூறினான்.
”ஓமடா தம்பி…. . அக்காவும் சொன்னவா தானே…. . எப்பிடியும் அவள் உன்னை இங்கிலாந்துக்கு கூப்பிட்டு நல்ல வழி காட்டுவா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுவரை பொறுத்திரு ராசா!”ää எனத் தகப்பன் இராசையா சொன்னார்.

”அதுவரை நீயும் தங்கச்சியும் உங்களாலை முடிந்தளவு இங்கே நல்லாப் படியுங்கோ…. . அது எங்கே போனாலும் உங்களுக்கு கை கொடுக்கும. அதைத்தானே அக்காவும் சொன்னவள்;”ää தாய் தங்கம்மா தொடர்ந்தார்.

அங்கு வந்த பொழுது ஏற்கனவே அதிக ஆண்டுகளாக இருந்தவர்கள் சொன்ன செய்திகள் அவர்களின் விழிகளை ஆச்சரியத்தால் விரிய வைத்தன.

1987ல் முன்னைய முதல்வர் எம். ஜி. ஆரின் இறப்புவரை மண்டபத்தில் எல்லோருக்கும் இராஜ வாழ்க்கை தானாம். வந்திறங்கியவர்களுக்கு வாழை இலை போட்டு வரவேற்ற காலமாம். ஆனால் 1991ல் ராஜீவ்காந்தியின் படுகொலைக்குப் பின்பு நிலைமை மாறி விட்டதாம். மண்டபத்துக்கு வருபவர்கள் எல்லாரையும் அகதி என்று பார்ப்பதை விட குண்டு வைக்க வந்தவர்கள் எனச் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது தான் அதிகமாகி விட்டதாம். யாராவது பிரமுகர் சென்னைக்கு வந்தாலே மண்டபத்தின் கதவுகள் இரண்டு மூன்று நாட்கள் பூட்டப்பட்டு விடுமாம். யாரும் வெளியில் போகவும் முடியாது…. . உள்ளே வரவும் முடியாது.

தனுஷ்கோடி கடற்கரை தொடர்ந்தும் கள்ளக்கடத்தல்ää ஆயுதக் கடத்தல்ää போதைவஸ்துக் கடத்தல்ää மனிதக் கடத்தல் போன்ற கடத்தல்காரரின் கரையாகவே கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மண்டபத்தில் கொடுக்கப்படும் மானியப் பொருட்கள் அன்றாடம் வயிற்றைக் கழுவப் போதாது இருந்தமையால் இராசையா கூலித்தொழிலுக்கு போகத் தொடங்கினார். ஆனால் அவருக்குச் சரி…. மற்றைய மண்டபத்தில் இருந்து செல்லுபவர்களுக்குச் சரி…. அளிக்கப்பட்ட கூலி மற்றைய தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டதை விட குறைவாகவே இருந்தது.

ஆனால் நியாயம் கதைக்க முடியாது.

அதிகமாக மீன்பிடித் தொழிலே தேடி வரும்.

சொந்தமாகக் காணி பூமி வைத்து அதிகாலையில் இறைப்பும் மருந்தடியும் என பார்த்து பார்த்து தோட்டம் செய்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு ஒரு கொத்தடிமை போல அதே அதிகாலைப் பொழுதுகளில் வலையுடனும் மீன்களுடன் போராடுவது வேதனையாகவே இருக்கும்.
”இங்கிருந்து அங்கு வந்த தேயிலை தோட்டத் தொழிலாளருக்கு நாங்கள் செய்த அநியாயம் தான் இப்ப நாங்கள் அனுபவிக்கிறது” என மின்சாரத் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும் பொழுது மண்டபம் காம்பின் முற்றத்தில் இருந்து எல்லோரும் நிலாச்சோறு உண்ணும் பொழுது இராசையா கதைகதையாகச் சொல்லுவார்.;.

மழைவந்து குழப்பாவிட்டால் அந்த நிலாச்சோறு சாப்பிடுவதையே மண்டபத்தில் உள்ள அனேக குடும்பங்களும் தங்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

இலங்கையில் பல பாகங்களில் இருந்து வந்த எத்தனையோ குடும்பங்கள் ‘மண்டப அகதிகள’; என்ற அடையாள அட்டைக்கு கீழே அனைவரும் ஒருவருக்கொருவர் தாய் பிள்ளை சகோரங்களாக பழகி வந்தார்கள்.

ஆனாலும் அவரவர் ஊராக்கள் அல்லது சாதியினரை அவர்கள் இனம் கண்டு அவரவர்கள் தங்களுக்குள் ஒரு சிறு சிறு குழுவை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஏதாவது ஒரு இரவு வேளையில் இந்திய உளவுப்படையும் பொலிஸாரும் வந்து ஏதோ ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரை அல்லது அந்தக் குடும்பத்தையே கைது செய்து சிறப்பு முகாம் ஒன்றிற்கு கொண்டு செல்லும் போதுதான் அந்தக் குடும்பங்கள் பற்றிய நதிமூலங்கள் ரிஷிமூலங்கள் வெளிவரும்.

சிலவேளை அது வெளிவாராமலும் போகலாம்.

அவர்களும் அந்த முகாம்களுக்கு திரும்பி வராமலும் போகலாம்.

போதைவஸ்து கடத்தல்ää ஆட்கடத்தல்ää ஆயுதக் கடத்தல் இந்த மூன்றையும் யாராவது செய்கிறார்களா என்று இந்திய உளவுப்படை எப்பொழுதும் தன் மூக்கை நீட்டி முகர்ந்து கொண்டே இருக்கும்.

புலம் பெயர் நாட்டு அகதி முகாம்களில் யார் உண்மையான அகதிகள்ää யார் பொருளாதார அகதிகள் என்ற இரு கேள்விகள் தான் விசாரணையின் பின்னணியில் இருந்து கொண்டு இருக்கும்.
ஆனால் மண்டபத்தில் எத்தனையே பிரிவுகளில் இந்த அகதிகளை இனம் காணவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருந்தது.

இலங்கையில் இருந்த இயக்கங்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு என குறைந்திருந்தாலும் இந்தியாவில் இலங்கை இயக்கங்களின் எண்ணிக்கை பத்துப் பதினைந்து பெரிய பிரிவுகளாகவும்; அதன் கீழ் பல கிளைப்பிரிவுகளாகவும்; இயங்கிக் கொண்டு இருந்தன – விட்ட குறை தொட்ட குறையாக.

இவற்றை இந்தியாவுக்கு கூட எதிரான பிறநாட்டுச் சக்திகள் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்று இந்திய உளவுப்படை தன்னையே தான் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. அந்த எச்சரிக்கையின் செயல்பாடுகள் எத்தனையோ உண்மையான அகதிகளின் தினசரிச் செயல்பாடுகளை திணறடித்துக் கொண்டிருந்தன.

எந்த விதைகள் எந்த மண்ணில் விழுகின்றதோ அந்த நிலதிற்கு ஏற்பவும் காலநிலைகளுக்கு ஏற்பவும் தங்கள் தங்கள் வேர்களை மண்ணிலும்… இளம் குருத்துகளை வானத்ததை நோக்கியும் பரப்புவது தான் இயற்கை. அது மரம் செடிகொடிகளுக்கு மட்டுமில்லை விமலன்ää சகானா போன்ற மண்டபத்தில் இருந்த இலங்கை அகதிகளுக்கும் பொருந்தும். புலம்பெயர்ந்து போய் இங்கிலாந்தில் இருக்கும் அவர்களின் மூத்த சகோதரி வதனிக்கும் பொருந்தும்.

இலங்கையில் விமலனைச் சரி…சகானாவைச் சரி எந்த வேளையிலும் சந்தேகத்தின் பெயரில் இராணுவம் கைது செய்து கொண்டு போகலாம்ää அல்லது போராட்டத்துள் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகள் போய்விடலாம் என்ற நிலை இறுகிக் கொண்டு வந்தபோது தாய் தங்கம்மாதான் மகளுக்கு எழுதியிருந்தாள்…”தினமும் அவர்கள் ரியூஷனால் வரும்வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழுறம்””என்று.

அதற்கு வதனி பதில் கடிதம் எழுதி இருந்தாள்ää ”முதலில் இந்தியாக்கு வாங்கோ. பின்பு பார்போம் என்று”.

அதிலிருந்து தொடங்கியது தான் அவர்களின் பயணம்.

தங்களின் பெரிய தோட்டத்தையும் பெரிய உறவுகளையும் விட்டு விட்டு யாருக்கும் சொல்லாமல் ஓர் அதிகாலைப் பொழுதில் மன்னாருக்கு புறப்பட்டு பின்பு அங்கிருந்து தொடங்கியது தான் அகதிப் பயணம். படகில் வரும் போது அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே கவலை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உட்பட எந்த உறவுகளுக்கும் சரி…. உயிருக்குராய் பழகிய பள்ளித் தோழர்களுக்கும் சரி…. தங்கள் தோட்டத்தில் வந்து வேலை செய்பவர்களுக்கும் சரி… யாருக்கும் சொல்லாமல் சொந்தக் கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்ததுதான்.

நிச்சயம் அடுத்த நாள் ஊரே ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டு விட்டது போல உணர்வார்கள் தான்.

ஒவ்வொருவரின் வாழ்வு என்பது தனித்தனியே அவர்களின் வயிற்றுடன் மட்டும் சம்மந்தப்;பட்ட விடயம் அல்ல.

வாழ்ந்த வீடு… வளவு… அதில் நிற்கும் செடிகள்ää மரங்கள்… நடந்து செல்லும் ஒழுங்கைகள்… அதில் கிடக்கும் கற்கள் – முட்கள்… ஒழுங்கை நீட்டிற்கும் உள்ள சொந்த பந்தங்கள்… அவர்களின் இன்ப துன்பங்கள்… அதையும் தாண்டிச் சென்றால் அதிகாலையில் மரக்கறிச் சந்தை… அங்கே புன்னகைத்துக் கொண்டு மரக்கறியை நீட்டும் வியாபாரிகள்… பின் பத்து மணிக்கு கூடும் மீன் சந்தை… அங்கேயும் அறிமுகமான முகங்கள்… அதையும் தாண்டினால் வரும் சின்னதும் பெரிதுமான கோயில்கள்…. திருவிழாக்கள்…. அனைத்தையும் சேர்த்து கட்டியிருப்பதுதான் சொந்தங்களும்ää உறவுகளும்ää அவற்றின் மொத்தப் பலமும்.

இத்தனையையும் விட்டுவிட்டு திருடர்கள் போல் யாருக்கும் சொல்லாமல் இடம் பெயரும் போதுதான் உயிர் வலிக்கும்.

இலங்கையை விட்டு அகதிகளாய் வெளியேறும் அனைவரது நிலையும் இதுதான்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வேலை நிமித்தம் சென்றாலே ஊர் எல்லாம் அதிகாலையில் அல்லது அந்திமாலையில் வீட்டு முற்றத்தில் கூடி நின்று வழியனுப்பும்.
இன்றோ பக்கத்து கிராமத்துக்கு சென்றாலே யாருக்கும் எதுவும் சொல்லாமலே செல்லவேண்டிய நிலைக்கு போரும் அரசியலும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு இருந்தன.

***
அன்று யாழ்ப்பாணத்து நல்லூரானின் கொடியேற்றம்.

இனி கொடியிறங்கும் வரை அடுத்த இருபத்தைந்து நாட்களும் மண்டபத்தில் உள்ள பல குடும்பங்கள் விரதத்தை மேற்கொள்வார்கள். மரக்கறி உணவு மட்டும் தான்.
ஒருவேளை உணவு… இருவேளை உணவு என ஒவ்வொருவரும் தங்கள் உடல் நிலைக்கு ஏற்பவும் தங்கள் நேர்த்திக்கு ஏற்பவும் விரத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
ஆறுபடை முருகன் கோவில்கள் இந்தியாவில் இருந்தாலும் நல்லூரானும் சந்நிதியானும் கதிர்காமத்தானும் தங்கள் கலியைப் போக்குவார்கள் என மண்டபத்தில் இருந்த பலர் நம்பினார்கள்.

அங்கிருந்த சில கிறிஸ்தவர்கள் கூட மற்றைய சைவர்களுடன் சேர்ந்து விரதம் பிடிக்காவிட்டாலும் மரக்கறி உணவை மட்டும் உண்டார்கள்.

நல்லூரானின் மஞ்சத்திருவிழா அன்று மாலை மண்படத்தில் இருந்து விமலனும் சகானாவும் வெளியே போய் படிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கிடைக்கவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட கல்வி அவர்கள் இருவரின் கல்விப் பசிக்கு போதியதாக இருக்குமாப் போல் தெரியவில்லை – மண்டபத்தில் கிடைத்த உணவு போல.
அங்கு கிடைக்கவிருந்த கல்வி இலங்கையில் குழம்பிப் போன கல்வியின் வெற்றிடத்தை ஓரளவு நிரப்புமாப் போல் தெரிந்தாலும் தொடர்ந்த மேற்கல்விக்கு அது போதுமானாய் இருக்கும் என விமலனுக்குத் தோன்றவில்லை.
ஒரு நாள் விமலன் மண்டப அதிகாரியிடம் கேட்டான்ää ”எங்களை சென்னைக்கு கிட்டவாக உள்ள காம்புக்கு மாற்றுவீர்களா” என.
”எதற்காக?”
”இல்லை…. ”ää என்று தயங்கியவாறுää “அங்கு கம்பியூட்டர் எஞ்ஜினியரிங் செய்யலாம்” என்று கூறி முடிக்க முதல்ää ”உங்களுக்கு எல்லாம் கம்பியூட்டர் எஞ்ஜினியரிங் தேவைப்படுகுதா?…. பற்றியும் வயரும் வைச்சு செய்தாச்சு! இனி கம்பியூட்டரை வைச்சு செய்யப்போறீங்களா” என எள்ளலுடன் அந்த அதிகாரி கேட்ட பொழுது விமலனுக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை வியர்த்தது.
விமலன் எதுவும் பேசவில்லை.
அல்லது அவனால் எதுவும் பேச முடியவில்லை.
திரும்பி வந்து விட்டான்.

***

2091

இங்கிலாந்தில்; இருந்து விடுமுறைக்காக இந்தியாவுக்கு வந்த அவர்களுக்குச் சொகுசு விடுதி வாழ்க்கை பெரிதாகச் சுவைக்கவில்லை.
அடுத்த மூன்று கிழமைக்கு ஒரு வாடகைக்கு வீடு எடுத்து… நாங்களே பேரம் பேசி மரக்கறிகள் – மீன் – இறைச்சி; வாங்கி… நாங்களே சமைத்து சாப்பாட்டு… நாங்களே உடுப்புகளைத் தோய்த்து மொட்டை மாடியில் உலரவிட்டு… அதே மொட்டை மாடியில் வெயிலின் வெட்கை தணிய… இரவிலும் மேலாக அதிகாலையிலும் பனிக்குளிரினுள்ளும் பெரிய கைத்தறிப் போர்வையால் இழுத்துப் போர்த்தபடி தூங்கி எழுந்து… மனம் விரும்பியது.

சென்னையை அடுத்த குடிமனைப் பகுதி.

‘வீடு வாடகை’க்கு என்று தமிழிலும் ‘டூ டெல்ட’ ; என்று தமிழிங்கிலிசிலும் இருந்த வீட்டு அழைப்புமணியை அழுத்தினார்கள்.

பெரியவர் ஒருவர் வீட்டின் வெளியே வந்தார்.

இரண்டொரு வார்த்தைகள் தான் பேசியிருப்பார்.

“சிறிலங்காகாரன்களுக்கு எல்லாம் வீடு குடுக்கிறதில்லை”

முகத்தில் அறைந்தது போல சொல்லி விட்டு வீட்டினுள் சென்று விட்டார்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)