பொரிவிளாங்காய் – சிறுகதை

பொரிவிளாங்காய் – சிறுகதை

கிழக்கில்….

மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முதல்… இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு என நினைக்கின்றேன்.

பள்ளிக்கூட வாசலில் இருந்த கிட்டிணரண்ணையின் கடையில் பெரிய போத்தல்களை இந்த பொரிவிளாங்காய்கள் நிறைத்திருக்கும்.

பெரித்த அரிசி… அல்லது பொரித்த சோளம்… அல்லது பொரித்த இறுங்குடன் சீனிப்பாகையும் சிவத்த நிறச்சாயத்தையும் சேர்த்து பெரிய தோடம்பழ அளவில் உருட்டி வைத்திருப்பார்கள்.

சின்னக் கைகளுள் அடங்காது.

சாப்பிட்டு முடித்த பின்பு உதடுகள் எல்லாம் சிவந்து போயிருக்கும்.

மற்றவர்கள் கேலி பண்ணுகிறார்கள் என்று சேட்டின் வலது கரைப்பக்கத்தால் வாயைத் துடைத்தால் அந்தப் பக்கம் முழுக்க சிவத்துப் போயிருக்கும்.

ஒரு பொரிவிளாங்காய் உருண்டை 3 சதம். இரண்டு 5 சதம்.

இந்தக் கால வியாபார உத்தியை அந்தக் காலத்தில் கிட்டிணரண்ணைபாவித்திருந்தார்.

நான் அவரை விடக் கில்லாடி. எனது கையில் 3 சதம் இருந்தாலும் பொரிவிளாங்காய் வாங்க வரும் இன்னோர் மாணவன் அல்லது மாணவியுடன் நட்புக் கொண்டு இரண்டு பொரிவிளாங்காயை வாங்கி நானும் ½ சதத்தை மிச்சம் பிடித்து மற்றவர்களுக்கும் ½ சதத்தை மிச்சம் பிடித்துக் கொடுத்து வந்தேன்.

இதை ஒரு நாள் கிட்டிரண்ணையின் மனைவி கண்டு பிடித்து அம்மா அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.

”உங்கடை மகன் கண்ட கண்ட சாதியளோடை பொரிவிளாங்காய் வாங்கித் திண்டு கொண்டு திரிகிறான் என்று.

எனக்கு அன்று வீட்டில் செமசாத்து.

அப்போதுதான் யோசித்தேன் 1 சதத்தை தப்ப வைக்க என்ன என்ன யுத்திகளை இவர்கள் பாவிக்கிறார்கள் என்று.

பின்பு அதிகமாக அந்தக் கடைக்கு போவதுமில்லை. பொரிவிளாங்காய் வாங்குவதுமில்லை.

சின்ன வயதில் இருந்தே அப்படி ஒரு பழக்கம்.

போராடுவது அல்லது முற்றாக ஒதுங்கிப் போவது.

சனி ஞாயிறுகளில் சந்தையடிப் பக்கம் அப்பாவுடன் போனால் அங்கு ஆசையுடன் வாங்கி உண்பேன்.

இதே பொரிவிளாங்காயின் விலை சுமார் 10-15 வருடங்களுக்குப் பின்பும் 2 எடுத்தால் 5 சதம் தான். ஆனால் அளவில் சிறுத்துப் போயிருந்தது. உதடு சிவக்க முதலே உண்டு முடிந்து விடும். எள்ளுருண்டையை விட கொஞ்சம் பெரிதாய் இருந்தது என்று சொல்லலாம்.

பின்பு ஒரு கால ஓட்டத்தில் நானும் பொரிவிளாங்காயை மறந்து விட்டேன்.

காலவோட்டத்தில் அவற்றைப் பெரிதாக கடைகளில் காண்பதில்லை.

கிருட்டிணன்னையும் இறந்து போக அதில் ஒரு பலசரக்கு கடை வந்தது.

கடைக்காரர் தனது கடைக்கு இன்னுமும் சனம் வரவேண்டும் என்பதற்காக மீன் சந்தைக்கு வரும் இரண்டு மீன்காரர்களை தனது கடையடியில் மீன் விற்க அனுமதித்திருந்தார். சனங்களுக்கும் வெயிலில் ஒரு கட்டை தூரம் நடந்து போய் வாங்கத் தேவையில்லை என்பதில் மகிழ்ச்சி. மீன்காரருக்கும் நல்ல வியாபாரமானது. மேலாக சந்தைவரி கட்டத்தேவையில்லை என்பதில் இரண்டு மீன்காரருக்கும் மகிழ்ச்சியே. கடைக்காரர் தானும் மரக்கறியை வைத்து விற்றதால் அவருக்கும் வருமானம் கூடியது.

பள்ளிக்கூட வாசலில் மீன் விற்கலாமா என சமுதாயத்தில் அக்கறை உள்ள சிலர் பெற்றார் ஆசிரியர் சங்க கூட்டத்தில் ஒரு பிரச்சனையை முன்வைத்தார்கள்;. ஆனாலும் அதிக ஆசிரியர்மாரும்… ஏன் அதிபரும் கூட அந்தக் கடையில் கொப்பிக் கடன் வைத்திருந்ததால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீர்த்துப் போய் பின் மறைந்து போய் விட்டது.

இதுதான் எதுவுமே தெரியாதது போல இருந்து விடும் ‘மௌனம் காக்கும் ஜனநாயக அரசியல்’ என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் மீன் விற்க வந்தவர்களில் ஒருவனுடன் எங்கள் ஒழுங்கையில் இருந்த ஒரு பெண் பிள்ளைக்குத் தொடுப்பு ஏற்பட்ட பொழுதுதான் பாடசாலைக்கு முன்னால் மீன் விற்கும் பிரச்சனை முற்றாகத் தீர்ந்தது.

இரண்டு மீன்காரர்களுக்கும் ஊர் கூடி அடித்து, “எங்கள் ஊர்ப்பக்கம்வரக்கூடாது” என்று துரத்தி விட்டார்கள்.

கடைக்காரருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது – இனிமேல் பாடசாலைக்கு முன்பாக கடைவாசலில் மீன் விற்க கூடாது என்று.

*

அப்பொழுது தான் இன்னோர் பிரச்சனையும் ஊருக்குள் வெடித்தது.

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் கோயில்வீதிகளில் சின்னமேளம் நடக்ககூடாது என்று வாதிட்டவர்களில் என் பழைய தமிழ் வாத்தியாரும் ஒருவர்.

சின்னமேளம் வந்தால்தான் எங்களின் கோயிலுக்கு சனம் வரும்; என்று கோயில் நிர்வாகம் சொன்ன பொழுது, “கோயில் என்ற பெயரை மாற்றிவிட்டு வேறுபெயரை வையுங்கள்”, எனப் பிடிவாதமாய் நின்றார். கோயிலுக்கு சனம் கும்பிடவரவேணுமே தவிர சின்னமேளம் பார்க்க என்றிருக்கக் கூடாது எனப் பிடிவாதமாய் இருந்தார்.

பொட்டுக்கட்டி ஆண்டவனுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இனம் பின்னாளில் எவ்வாறு நடாத்தப்பட்டது என்பதற்கு கோயில்களைச் சுற்றியிருந்த பனை வடலிகள் சாட்சியம். அல்லது இரவுத் திருவிழா முடியும் சமயத்தில் வெளிவீதியில் காத்திருக்கும் வெள்ளை நிற சோமசெற் கார் சாட்சியம். அது யாழ்ப்பாண நகரசபைக்கு உட்பட்ட ஒரு விடுதிக்கு சொந்தமானது.

தஞ்சை மாநிலத்திலும் தெலுங்கு தேசத்திலும் இருந்து கூட இராமேஸ்வரம்-தலைமன்னார் பயணக் கப்பல் மூலம் யாழ்ப்பாணக் கோயிலுக்கு சின்னமேளக் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். சித்திரை தொடக்கம் ஆனி வரை 3 மாதா விசாவில் தொடர்ச்சியாக பல கோயில் திருவிழாக்களில் ஆடி விட்டு கையில் காசுடனும் உடலில் நோயுடனும் திரும்பிப் போவார்கள்.

தமிழ் வாத்தியார் சின்னமேளம் கோயி;களில் வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றிருந்ததால் நிர்வாகத்தினர் பலர் அவர் மீது ரொம்ப கடுப்பாய் இருந்தர்கள்.

ஆனாலும் கோபத்தை வெளிக்காட்ட முடியாது இருந்தார்கள்.

நிர்வாகத்தினரின் மனைவிமாரும் அதிகமான ஊர்ப் பெண்களும் தமிழ் வாத்தியார் பக்கமே.

பின்பு சாதிக்கலவரம் யாழ் மாவட்டத்தில் பெரிதாக வெடித்த பொழுது கோயில் கிணற்றில் தாழ்ந்த சாதியினர் தண்ணி அள்ள அவர் அனுமதித்ததால் ஊரே அவரை அடித்துக் கொன்றது என்பதை அறிந்தோர் அறிவார்.

இன்றுவரை எவரும் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவும் இல்லை.

யாரும் குற்றவாளியை அடையாளம் காட்ட முன்வரவில்லை. இந்தியாவில் இருந்து சின்ன மேளத்தைக் கொண்டு வந்து நடத்துபவரும் கோயில் நிர்வாகத்தில் இருந்த இரண்டொருவரும் இதில் சம்மந்தப்பட்டிருந்தார்கள் என இன்றுவரை ஊர் குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றது.

சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயல்பவர்கள் ஒவ்வோர் கால கட்டத்திலும் ஒவ்வோர் விதத்தில் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

*

 

மேற்கில்

பனி கரைந்து போக மரங்கள் துளிர் இலைகளை விடத் தொடங்கியிருந்தது.

நிலத்தினுள் உறங்கியிருந்த கிழங்குகள் சிறிய வெள்ளை நிற பூக்களை வெளியே தள்ளத் தொடங்கியது. வின்ரர் கெக் என்ற இந்தப் பூக்கள்தான் வசந்தகால வருகையை எப்போதும் அறிவிக்கும்

ரியூலிப் பூக்கள் கூட வெவ்வேறு நிறங்களில் வீதியோரங்கள் முழுக்க பூத்து நகரை அலங்கரிக்கத் தொடங்கி விட்டன.

வசந்த காலமும் பிறக்க எங்கள் பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலின் கொடியும் ஏறியது.

வீட்டில் இருந்த மாமிச உணவுகள் சமைத்தலுக்கான பாத்திரங்கள்… கரண்டிகள்.. கத்திகள்.. சாப்பிடும் கோப்பைகள்… குடிக்கும் குவளைகள் அத்தனையும் வீட்டின் பின்புறம் போய் ஒளிந்து கொண்டன… அல்லது சிறைவைக்கப்பட்டன.

இனி அடுத்த 15 நாட்களுக்கும் கொடியேறி கொடியிறங்கும் வரை வீட்டில் சைவ உணவுகளுக்கான பாத்திரங்கள் தான் பாவிக்கப்படும்.

கிழமையில் ஒரு தடவை வரும் வெள்ளிக்கிழமையையே தாண்டிச் செல்லுவற்கு

கஷ்;டப்படும் பொழுது இப்போது மொத்தம் பதினைந்து நாட்கள்.

இலங்கையில் என்றால் பெரிய பிரச்சனை இல்லை.

ஒரு மீன்கறிக்கு பதிலாக நாலைந்து மரக்கறிகளையும் பொரியல் துவையல் என வைத்துச் சமாளித்து விடலாம்.

ஆனால் இங்கு உருளைக் கிழங்குடனும் பருப்புடனும் எவ்வாறு 15 நாட்களை ஓட்டுவது என்பது தான் இங்கிருப்போரின் தலையாய பிரச்சனை.

ஐரோப்பாவில் முறையான இலங்கை இந்தியா மரக்கறியைப் பெறுவதற்கு கிழமையில் இரண்டு தரம் இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்தும் வரும் விமானத்தையே நம்பியிருக்க வேண்டும். விலையும் அதிகம். மீனினதும் இறைச்சியினதும் விலைக்குப் போட்டி போட வேண்டியிருக்கும்.

இங்கு ஒரு கிலோ கோழியின் விலை இந்திய-இலங்கை மரக்கறி விலைகளின் விலையை விட பாதியளவே. எனவே பொருளாதாரரீதியில் மாமிசம் உண்ணுதல் மலிவு.

கோயிலுக்கு தேவையான தலை வாழையிலை, முடியுள்ள தேங்காய்கள் என்பனவற்றிற்கு கூட இந்த விமானங்களின் வருகைக்காகவே காத்திருக்க வேண்டும்.

காத்திருந்தாலும் எங்கள் நகரத்தில் இருந்து 60 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்றால்தான் அவை கிடைக்கும்.

அது முருங்கைக்காய் என்றாலும் சரி… மட்டுவில் கத்தரிக்காய் என்றாலும் சரி… கரணைக்கிழங்கு என்றாலும் சரி….

அல்லது மாதத்திற்கு ஒரு முறை அதுவும் சம்பளத் தினத்திற்கு கிட்டவாக வீட்டுக்கு வீடு தமிழ் வியாபாரிகளின் மரக்கறி வான்கள் வரும். அப்பொழுதுதான் கொஞ்சம் அதிகம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.

அவர்கள் மாதத்தொடக்கத்துடன் வருவதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போதுதான் நிலுவை இல்லாது வியாபாரம் செய்ய முடியும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும். நிலுவைக்கு வியாபாரம் செய்தால் வங்கியில் கடன்பட்டு வியாபாரம் செய்யும் வான்காரர்களுக்கு வட்டிக்காசை யார்; கொடுப்பார்கள். அதனைச் சரி செய்வதற்கு அவர்களால் முடிந்தது நிறையில் கொஞ்சம் எடையை வெட்டுவது தான். அதுவும் சிலசமயங்களில் நடைபெறுவதுண்டு. இப்போது வீட்டுக்கு வீடு எலக்றோனிக் தராசு இருப்பதால் அதுவும் முடியாது. இந்த வான்காரர் இவ்வளவு எடையைக் குறைத்துப் போட்டார் என்ற விமர்சனம் அன்ரிமார்களுக்கும் அக்காமார்களுக்கும் இடையே உலாவுமே தவிர தாங்கள் கடன்பாக்கி வைத்திருந்தோம்; என்பதை வெளியில் விடமாட்டார்கள்.

எங்கே எப்படி எடிற் பண்ணி கதைக்க வேண்டும் என்பதில் பொதுவாக நாங்கள் எல்லாம் கெட்டிக்காரர்கள். எங்களில் பலர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பணி புரிந்திருக்க வேண்டிய ஆட்கள். என்ன செய்வது?

மாதத்திற்கொருமுறை வீடு தேடி வரும் இந்த வான்களுள் அனைத்து மரக்கறிகளும் சரக்குவகைகளும் இருக்கும்.

அத்துடன் அறக்குளா… நீலக்கால் நண்டு… கணவாய்ப் பெட்டி… இறாள்…. இன்னும் பிற ஐஸ்சில் போட்ட மீன்வகைகளும் இருக்கும்.

காலையில் ஐஸ்சுடன் தான் வாகனத்தில் ஏற்றியிருப்பார்கள். எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது அதுவெல்லாம் கரைந்து மீன்கள் வயோதிபர்களின் கைகால்கள் போலாகி விடும்.

அவற்றின் மணமும் மரக்கறியில் கொஞ்சம் பரவியிருக்கும்.

ஆனாலும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை. ”வாங்கியவுடனேயே ஐஸ்பெட்டியுள் போட்டு விட்டால் கிருமிகள் எல்லாம் செத்துவிடும்”, என்பது வான்காரரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

ஊரில் என்றால் கழுத்தடியில் இருக்கும் பூவைத் திறந்து நிறத்தைப் பார்த்து நல்ல மீனா நாறல் மீனா என்று பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு பிடித்தவுடனேயே ஜஸ் பெட்டியுள் போட்டு விடுவதால் பூவைப் பார்த்து மீனை கணிக்க முடியாது. கறி கொதிக்கும் பொழுது தான் மர்மமுடிச்சுகள் வெளியாகும். மீன் உதிரா விட்டால் எங்களுக்கு லாபம். மீன் உதிர்ந்தால் வான்காரனுக்கு லாபம்.

அண்மைக் காலமாக மீன் + மரக்கறி வாகனத்துடன் ஊர் செம்மறியாட்டு இறைச்சியும் உலாவத் தொடங்கி விட்டது.

பொதுவாக இந்த செம்மறியாட்டை பிள்ளைகள் விளையாடுவதற்காகவே வெள்ளைக்காரர்கள் தங்கள் தோட்டத்தில் வளர்ப்பார்கள். அதற்கு கொம்பு முளைத்து முட்ட வெளிக்கிடும் பொழுது இறைச்சிக்காக விற்று விடுவார்கள். அதனிலிருந்து வரும் மொச்சை மணம் காரணமான இந்த நாட்டுக்காரர் அதனை உண்பது மிகவும் அரிது. இலங்கையர்கள் அல்லது நீக்கிரோக்கள்தான் விரும்பி வாங்கி தமக்குள் பங்கு போடுவார்கள். ஆனால் தற்சமயம் எந்த ஆடோ மாடோ வெட்ட முதல் மிருக வைத்தியரின் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் வந்ததால் அதன் விலை எம்மவருக்கு கட்டுப்படியாவதில்லை. எனவே கொலண்டில் இருந்து வரும் இந்த மீன் + மரக்கறி வாகனத்துடன் இந்த செம்மறியாட்டு இறைச்சியும் சேர்ந்து வரும். பங்கு இறைச்சி போல ஆட்டின் அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கிய பாசலாக கட்டப்பட்டிருக்கும். இவற்றைக் கடைகளில் வைத்தும் விற்க முடியாது. பக்கற் செய்யப்பட்ட திகதி. காலாவதியாகும் திகதி. எந்தக் கம்பனியில் இருந்து வந்தது எனப் பல பல சட்டப்பிரச்சனைகள் உண்டு. கொலண்ட் தம்பையா அண்ணையின் கார் கராஜ்ஜில் வைத்து பங்கு போட்டது என்று சுகாதாரத்துறைக்கு அறிக்கை பத்திரிகை கொடுக்க முடியுமா என்ன??

மேற்கூறிய இத்தியாதி இத்தியாதிக் காரணங்களால் இந்த மீன் + மரக்கறி + இறைச்சி வாகனங்களும் எங்களின் வாழ்க்கையுடன் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டன.

இப்பொதெல்லாம் சீக்கிரமாய் அவர்களின் வாகனங்களில் வரும் பொருட்கள் தீர்ந்து விடுவதால், ”எஸ்.எம்.இல் அல்லது இ-மெயிலில் ஓடர் செய்தால் உங்களுக்கு வேண்டிய அனைத்தும் பிரத்தியோகமாக எடுத்து வைத்து விநியோகிக்கப்படும்”, என்ற அவர்களின் விளம்பரத்தால் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சிமட்டுமில்லை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரு வானில் மரக்கறியும் இன்னோர் வானில் மீன்-இறைச்சியும் வரத்தொடங்கியன. இரண்டிற்கும் முதலாளி கொலண்ட் தம்பையா அண்ணரே.

ஊரில் அதிகம் தம்பையாக்கள் இருந்ததால் கொலண்ட் என்பது அவரின் பெயருடன் இணைந்து விட்டது.

கோயில் திருவிழாக் காலம் கிட்ட வந்த பொழுது மரக்கறி ஓடர்களே அதிகமாக வந்து கொண்டிருந்ததால் மீன்-இறைச்சி வாகனம் எங்கள் பிரதேசத்தை தவிர்த்து மற்றைய பிற பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது.

இன்று வேட்டைத் திருவிழா. நாளை சப்பறத் திருவிழா. நாளையின்று தேர்த்திருவிழா. நாளை மறுநாள் தீர்த்தத் திருவிழா. கொடி இறங்கிவிடும். அடுத்த நாள் பூங்காவனம் என்றாலும் கொடியிறக்கியதால் வீட்டில் மாமிசம் உண்டாலும் குளித்து விட்டு கோயிலுக்குப் போனால் குற்றமில்லை என்பது இங்கு நிலவிய ஐதீகம்.

வேட்டைத் திருவிழாக்கு முதன் நாள் தம்பையா அண்ணையிடம் இருந்து ஒரு எஸ். எம். எஸ். வந்திருந்தது. கொலண்டில் அதிகமாக அறக்குளா மீன் பிடிபட்டு இருப்பதால் தேர் அன்று பாக்கிஸ்தான் மாம்பழப் பெட்டிகளுடனும் மரக்கறிகளுடனும் இவற்றுடன் அறக்குளா மீனையும் எடுத்து வருவதாயும்… அறக்குளா மீனை 3 கிலோ வாங்கினால் 1 கிலோ இலவசம் என்று.

எனக்கு கிட்டிணரண்ணை 2 பொரிவிளாங்காய் 5 சதத்துக்கு விற்றதுதான் ஞாபகம் வந்தது.

பதினைந்து நாளும் மரக்கறியுடன் காய்ந்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி தேவாமிர்தமாக இனித்தது.

அதேவேளை எல்லோரும் கோயிலடியில் நிற்பதால்; எவ்வாறு அவற்றை வாங்குவது என்ற இயல்பான கேள்வியும் எழுந்தது.

ஒரு பிரச்சனையும் இல்லை. கோயில் எல்லையைத் தாண்டி நகரப்பாதை விரைவுப்பாதைக்கு விலகிச் செல்லும் தரிப்பிடத்தில் தேர் முடிந்து போகும் பொழுது பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அடுத்த எஸ்.எம். எஸ். தகவல் வந்தது.

என் வாழ்நாளில் அதிகமாக கோபப்பட்ட தினம் அதுவென்றே நினைக்கின்றேன்.

நேராகப் போய் இதனை அனுமதிக்க வேண்டாம் என்று கோயில் நிர்வாகத்துடன் பேசினேன்.

“அண்ணை அந்தப் தரிப்பிடத்துக்கு கிட்டவாகத்தான் சுப்பர்மாக்கற்றும் இருக்கு. அங்கேயும் எல்லாம் விற்கிறார்கள். நாங்கள் எப்படித் தடுக்கிறது. நீங்கள் வாங்காமல் விடுங்கள். வாங்குறவர்களை நாங்கள் எப்படித் தடுப்பது?”இ அவர்கள் நியாயம் சொன்னார்கள்.

“கோயிலடியில் அவரின் மரக்கறிவான் நின்று வியாபாரம் செய்வதால் ஒரு நட்பு ரீதியில் உங்களால் எடுத்துச் செல்லமுடியும் தானே?”, எதிர் வாதிட்டன்.

புன்முறுவலுடன் சொன்னார்கள்.

“அண்ணை கோயிலுக்கு முடித்தேங்காயும் தலைவாலையிலையும் மரக்கறிகளும் கூட அவரிடமே நாங்கள் வாங்குகின்றோம். அவரை எதிர்த்து விட்டு 60 கிலோ மீற்றர் போய் நீங்களா எங்களுக்கு இதுகளை வாங்கித் தருவது? கூடவே வீதியில் அவர்கடை போடுவதால் அவர் மற்றக் கடைக்காரர் போல் காசு கட்டுகிறார். அதனை நீங்களா தருகின்றீர்கள்”

குனிந்த தலையுடன் திரும்பி வந்தேன்.

தமிழ் வாத்தியார் “இவர்களிடம் தோற்றுவிடாதே”, என்று சொல்லுவது போலத் தோன்றியது.

*

மனம் மிகவும் வலித்தது.

இவர்களிடம் தோற்றுப் போதவற்காகவா சின்ன வயதில் தீட்சை பெற்று வெள்ளிக் கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் மாமிசம் உண்ணாது ’சின்ன ஐயர்’ என்று ஊர் எல்லாம் சொல்ல ஐயருக்கு பின்னால் மணியடித்துக் கொண்டும்… ஐயர் விபூதியும் தீர்த்தமும் கொடுத்து முடிய நான் சந்தன குங்கும பூத்தட்டை ஆட்களுக்கு நீட்டிக் கொண்டும் திரிந்தேன்?

வலியுடன் கோபமும் வந்தது.

கண்ணுக்கு முன்னால் இரண்டு வழிகள் தெரிந்தன.

முதலாவது வியாபாரம் செய்ய வரும் தம்பையா அண்ணையுடன் சண்டை பிடித்து வியாபாரத்தை நிறுத்துவது. இதில் கைகலப்பு வரலாம். வாகனத்துள் உள்ள சாமான்களை தூக்கி வீதியில் எறிய வேண்டி வரலாம். நான் கூட பொலிஸ் – வழக்கு – இதுவென அலைய வேண்டி வரலாம். சிலநாட்கள் உள்ளே கூட செல்ல வேண்டி வரலாம்.

இரண்டாவது எவர்க்கும் தெரியாது இங்குள்ள சுகாதார துறைக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு மௌனமான இருக்கலாம். அவர்கள் பொலிசின் உதவியுடன் அனைத்தும் செய்வார்கள். தம்பையா அண்ணையும் கைது செய்யப்படலாம். வாகனம் பொருட்களுடன் எடுத்துச் செல்லப்படலாம். பத்திரிகைகளில் தமிழராகிய எங்களைப் பற்றிய செய்திகள் வரலாம். அதனைச் செய்வது என்பது ஏதோ கோழைத்தனம் போலப் பட்டது.

மனம் மிக சஞ்சலப்பட்டது.

எனக்கு வாழ்க்கையில் மனம் சங்கடப்படும் பொழுதெல்லாம் ஆலயத்தினுள் போய் அமர்ந்து ஆண்டவனுன் கதைப்பேன். அல்லது அதே ஆலயக் குருக்களுடன் போயிருந்து கதைப்பதுண்டு.

இன்று ஆண்டவனுடன் கதைப்பது பிரயோனம் இல்லை எனத் தெரிந்தது. இவரும் இதனைத் தெரிந்துதான் அனுமதிக்கிறாரா என்று அவர் மேலும் ஒரு சின்னக் கோபம்…. அல்லது தனக்கு கிடைக்க வேண்டிய மாலை – மரியாதைகள் – பூஜைகள் – வாகத்தில் உள் வெளி ஊர்வலங்கள் என்பன இல்லாமல் போய்விடும் என்று அரசியல்வாதிகள் போல மௌனமாக இருக்கிறாரா என்று அவரின் மீதான அனுதாபம்.

எனவே ஆலயக் குருக்களுடன் கதைப்பது என முடிவெடுத்தேன்.

பெரியதொரு பதவி கிடைத்து 3 வருடம் அமெரிக்காவில் போயிருந்து வேலைபார்க்க கூடிய சந்தர்ப்பம் வந்த பொழுது, ”அந்த 3 வருடமும் உங்கள் பிள்ளைகளுக்கு அப்பா இல்லாமால் போய் விடுவார்;”இ என என்னைத் தடுத்தவரும் அவர்தான்.

மிகவும் உலக அறிவு உடையவர்.

நிதானமாக சரி பிழையைக் கதைக்க கூடியவர்.

என்னில் மிகுந்த மரியாதையுடையவர்.

இரவு மணி 9.30.

வேட்டைத் திருவிழா முடிந்து குருக்கள் களைப்புடன் வீட்டுக்குள் போய்க் கொண்டு இருந்தார்.

வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணிணை அழுத்தினேன்.

”வாங்கோ” என்றழைத்தவாறு வந்து வாசல் விளக்கைப் போட்டார்.

எனது முகத்தைப் பார்த்து ஏதோவொன்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

”சொல்லுங்கோ” என்றார்.

மனத்தில் இருந்த அனைத்தையும் கொட்டினேன்.

”நான் மடப்பள்ளிக்கு போகேக்கை வழியில் சிலர் கதைத்துக் கொண்டு நின்றவர்கள். என்னைக் கண்டதும் கதையை நிறுத்தி விட்டார்கள்”, என்றவர் தொடர்ந்தார், ”கொஞ்சம் உங்களுக்கு ஜலம் கொண்டுவரச் சொல்லவா”.

”வேண்டாம் ஐயா”

தனது குரலைக் கொஞ்சம் செருமிக் கொண்டார்.

”தம்பி…. இதை நீர் ஆசாரம் நிறைந்த கோயில் என்று நினைக்கிறீரா”

கோயிலைச் சுட்டிக் காட்டினார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தனது தலையை ’இல்லை’ என்பது போல அவர் ஆட்டினார்.

அது எனக்கு மேலும் அதிர்ச்சியாய் இருந்தது.

”இங்கே வெளிநாட்டில் உள்ள கோயில்கள் பெரும்பாலும் பழைய பள்ளிக் கூடங்களிலும்;… கை விடப்பட்ட பக்டரிகளிலும்…. பெரிய மண்டபங்களின் பேஸ்மன்றுகளிலும் தானே நடக்குது. இவை பூமி பூஜை செய்து அறநெறியுடன் வாழும் ஆசாரியார்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இல்லைத் தானே. உள்ள கட்டிடத்தை திருத்தி விட்டு கும்பாபிசேகம் என்ற ஒன்றைச் செய்து போட்டு ஆண்டவனை வாசஸ்தனம் செய்து போட்டம் என்று சொல்லுறம்.

உண்மையிலை… ஊர்ச்சனங்கள் தாங்களே சமைத்து தாங்களே படைத்து தாங்களே பூஜை செய்யுற காவல் தெய்வங்களின் கோயில்களின் முறைகளையும்…. பூமி பூஜை செய்து கொடிக்கம்பம் வைத்து கொடியேற்றி நடாத்தும் கோயில்களின் முறைகளையும் கலந்து இங்கு வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது.

அதுபடியால்தான் மூலஸ்தானத்தில் நாங்களும் மடப்பள்ளியில் நீங்களும் நிற்கிறியள்.

குருக்கள் தண்ணியும் தெளித்து பூவும் போட்டு மந்திரத்தையும் உச்சரித்து விட்டால் எல்லாம் புனிதமாகி விடும்… கடவுள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றீர்கள்.

அங்கை இருந்து வந்து இங்கை வந்து எல்லாத்தையும் அட்ஜெஸ்ட் செய்து வாழுறதைப் போல கோயில் விடயத்தில் மனதுக்கு ஒத்து வராத எத்தனையோ அட்ஜஸ்ட்மெண்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

எத்தனையோ தடவை தலைதலையாய் அடிச்சுக் கொண்டு சொன்னனான் தேர் தீர்த்தங்களை சனி, ஞாயிறுகளில் நடாத்தையுங்கோ… அதுக்கென்று நாள் நட்சத்திரம் எல்லாம் இருக்கு என்று. எவர் கேட்கினம்? அன்றுதானாம் எல்லாருக்கும் லீவாம். என்னத்தை சொல்லுறது”.

“இவ்வளவு தெரிந்தும் ஏன் இதனோடை ஒட்டிக் கொண்டு இருக்கிறிள்?” எனக் குறுக்கிட்டேன்.

“நீர் கேட்பீர் என நினைச்சனான். இதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. இனியொன்றை படித்து வேலை பார்க்கிற வயதும் இல்லை. போங்கடா என்று சொல்லி விட்டுப் போனால் இன்னோரு ஐயர் இந்தியாவிலை இருந்தோ… இலங்கையில் இருந்தோ…வரத்தான் போறார். அதுதான் நானும் சிவனே என்று என்ரை மனக்குறையையும் அவனுக்கே சொல்லிக் கொண்டு என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறன்.

ஆனால் தம்பி!….. என் மகனுக்கு இங்கே பூணூல் சடங்கு செய்திருக்கிற போதும் என் மகனை மட்டும் இப்படியான கோயில்களில் பூஜை நான் செய்ய விடுகிறதில்லை. திருவிழாக் காலங்களில் அவனையும் உதவிக்கு கூட்டிக் கொண்டு வாங்கோ… சம்பளம் போட்டுக் கொடுக்கலாம் என்று வரச் சொல்லுறவை. நான் தான் யூனிவேசிற்றை படிப்புகள் அவனுக்கு தலைக்கு மேலே இருக்கு என்று சொல்லித் தவிர்க்கிறனான். அவனும் நல்லாய் படிக்;கிறான்;. என்ரை பிள்ளைக்கு என் போலை ஒரு இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கை வேண்டாம் என்று எப்பவே முடிவெடித்திட்டன்.”

அவர் சொல்ல சொல்ல எதுவும் திருப்பிச் சொல்ல முடியாது ’கல்’லெனச் சமைந்திருந்தேன்.

என்னை கூர்ந்து பார்த்தபடி தொடர்ந்தார்.

”நீர் விளையாட்டாய் சொல்லுற பொரிவிளாங்கள் கதை போலத்தான் எங்கடை சமயமும் வழக்கங்களும் சிறுத்துப் போச்சுது. எந்த அளவிலை எதை விற்றால் எதிலை காசு அதிகம் வரும் எண்டு எல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறம். அதுக்கு கடவுளை துணைக்கு இழுக்கிறம்.

2009க்கு முதல் அரசியலில் ஒரு வியாபாரம் இருந்தது. 2009க்கு பிறகு கோயில்களில் புதிய வியாபாரம் நடக்குது. எத்தனை புதுக்கோயில்கள் ஐரோப்பா முழுக்க? இலண்டனில் மட்டும் 50 கோயில்களுக்கு கும்பாபிசேகம் நடந்திருக்கு. எத்தனை பேரிடம் கேட்டிருப்பேன் இங்கே செலவுகளைக் குறைத்துக் கொண்டு அங்கே கஸ்டப்பட்டதுகளுக்கு அனுப்புங்கள் என்று… இங்கு பசியில்லாதவனுக்கு அன்னதானம். அதுக்கு மேலே பாயாசம், வடை, மோதகம். அங்கு பசித்தனுக்கு எதுவுமேயில்லை. இங்கை கொடுக்கிற ஒரு மோதகம் அங்கை ஒரு நேரச்சாப்பாட்டுக்கு சமன் என்று எத்தனை தடவை சொல்லிப் பார்த்தன். யார் கேட்கிறாங்கள்?

ஊருக்கு காசு அனுப்புறவன்களும் அங்கை கோயில்கள் கட்டத்தான் அனுப்புறான்கள். பனையளவு சிலைகள் அங்கை உயருது. காலடியில் சனங்கள் பிச்சை எடுக்குதுகள். ஊர் நிலைமையும் வறுமையும் அப்படியேதான் இருக்குது. யாரும் கேட்பதில்லை.

அதிகமாக கதைத்தால் ஐயருக்கு அறளை பெயர்ந்து விட்டது என்று சொல்லுவாங்கள்.

தம்பி நீங்கள் கவலைப்படாதையும். இதுதான் இண்டைய உலகம். இந்த உலகத்தை உற்றுப் பார்க்காதையுங்கோ. உற்றுப் பார்த்தால் அழுக்குதான் தெரியும். அருவருப்யாய் இருக்கும்.

கலிகாலம் என்பது இப்படித்தான் இருக்கும்.

ஐம்புலனை அடக்க கோயிலுக்கு வாறவனின் சிந்தனை கோயிலுக்கு வெளியில் இருக்கும் பொழுது அந்த கொலண்ட் வான்காரரை பிழை சொல்லி என்ன பலன்? நிர்வாகத்தைப் பிழை சொல்லி என்ன பலன்?

உங்கள் ஊர்ப் பள்ளிக்கூட வாசலிலை இரண்டு மீன்சைக்கிள்காரரை மீன் விற்க அனுமதித்த கடைக்காரனுக்கு ஒரு லாப நோக்கம் இருந்தது.

கோயில் வீதியில் சின்னமேளத்தை ஆட விட்ட கோயில்காரருக்கும் ஒரு லாப நோக்கம் இருந்தது.

இப்ப தேர்த்திருவிழா அன்று கோயிலுக்கு சற்றுத் தூரமான இடத்தில் மீன் விக்க அனுமதிக்கிறதுக்குள்ளேயும் ஒரு லாபநோக்கம் இருக்கு.

கிழக்கு என்றாலும் சரி… மேற்கு என்றாலும் சரி… வருமானமும் லாபமும் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

வாங்குறவன் இருப்பதால் தான் விற்கிறவன் வாறான்.

இப்ப நான் எதையுமே உற்றுப் பார்ப்பதில்லை. எல்லார்க்கும் ஒரு ஐயா.. அல்லது குருக்கள்… அவ்வளவுதான். தட்டிலை காசு விழுந்தால்தான் எனக்கு வாழ்க்கை. எல்லாமே மரத்துப் போச்சு”.

எனக்கு ஏதோ ஞானோதயம் வந்தது போல இருந்தது.

எழுந்து கொண்டேன்.

சரி ஐயா போயிட்டு வாறன் எனச் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

நன்கு இருட்டி குளிரும் வந்து விட்டாலும் வீட்டை போன பின்பு தலையில் தண்ணீரைக் கொட்டி முழுக வேண்டும் போல இருந்தது.

இனியொரு தேர்திருவிழா எனக்கில்லை என்பது உறுதி.

குருக்களுக்கு உள்ள பக்குவமும் எனக்கில்லை போலும்.

போராடுவது அல்லது முற்றாக ஒதுங்கிப் போவது.

நான் மாறவேயில்லை.

காலவோட்டத்தில் சிறுத்து உருத்தெரியாது போன என் விருப்பத்துக்குரிய பொரிவிளாங்காய்… சின்னமேளத்தை தடுத்த என் தமிழ் வாத்தியார்… சின்னவயதில் தீட்சை கேட்டு சின்ன ஐயர் என அனைவராலும் அழைக்கப்பட்ட நான்….

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)