நீயா? நானாவும் . நாமும் எங்கள் கருத்துச் சுதந்திரமும்

நீயா? நானாவும் . நாமும் எங்கள் கருத்துச் சுதந்திரமும்

நான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி நடாத்தும் நீயா? நானா? என்பதாகும்.

 குறிப்;பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி வௌ;வேறு கோணங்களில் பார்வையாளர்களின் கருத்து மோதல்களும், எடுத்துக் கொள்ளப்படும் கருப்பொருளின் துறையைச் சார்ந்த மூவரின் கருத்துகளும் கேட்கப்படும். இவர்கள் பட்டிமன்றதுக்கு நடுவர்கள் போல் செயல்பட மாட்டார்கள். பதிலாக தங்கள் ஆணித்தரமான கருத்துகளை முன் வைப்பார்கள். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி வெற்றி தோல்வி என்ற நிலையில் முடிவடையாமல் பார்வைகளிடத்தில் பல எண்ணங்களை தூவிவிட்டுச் செல்லும்.

 அவ்வாறு அண்மையில் நான் பார்த்த நிகழ்ச்சியின் கருப்பொருள் குடும்பங்களில் ஆணாதிக்கம், ஆண் என்ற ”அது”, விட்டுக் கொடுப்புகள், சகிப்புத் தன்மைகள் என்பன பற்றியதாய் இருந்தன. அதில் மிகவும் சுவாரஸ்யம் யாதெனில் எதிர் எதிர் அணியில் அமர்ந்திருந்தவர்கள் சொந்த வாழ்விலும் கணவன் மனைவியியாக இருப்பவர்களே.

 ”அவர் முழிசிப் பார்ப்பார்”…”முறைத்துப் பார்ப்பார்”…”இப்ப இது தேவைதானா என அசால்டாக சொல்லுவார்”என மிகவும் சுவாரஸ்யமாக சென்ற நிகழ்சி நேரம் செல்ல செல்ல ஒவ்வொரு குடும்பத்தின் அந்தரங்க எல்லையுள் செல்லத் தொடங்கியது.

 அதன் ஆரம்பமாக திருமணத்திற்குப் பின்பு கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு எம்.ஸி. படித்த பெண் தனது கணவன் வேலையால் வரும் பொழுதுதனது பிள்ளைகளின் தலைமுடி நிலத்தில் கிடந்தால் கோபிக்க மாட்டார்; ஆனால் தனது தலைமுடி நிலத்தில் கிடந்தால் கோபிப்பார் என்ற குற்றச் சாட்டை கலங்கிய கண்களுடன் முன்வைத்ததுடன் தொடங்கியது.

 அதன் உச்சக்கட்டமாக இன்னோர் கணவன் தனது மனைவி தனக்குத் தெரியாமல் மனைவியின் தங்கைக்கு நகைகளை அடைவு வைக்க கொடுத்து அதை இப்பொமுது வட்டிக்காரன் எடுத்து விட்டான் என மனைவிமீது காரசாரமாக குற்றம் சாட்டினார். அந்தப் பெண்ணோ தன் கணவனுக்கு தெரியாமல் கொடுத்தது பிழைதான் – ஆனால் இப்பொழுது மாதாமாதம் ரியூ+சன் கொடுத்து 500 ரூபாய் உழைத்து அவருக்கு கொடுக்கின்றேன் என்று விட்டு அழத்தொடங்கி விட்டது. அதற்கு மேல் என்னால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை.

இதனை வாசிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு வேதனை உண்டானால் அந்த நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்திருந்தால் அது இந்த வேதனையின் பத்து மடங்காக இருந்திருக்கும்.

கருத்துச் சுதந்திரம் வேண்டியது தான். அதனை எப்படி அங்கு எவர் முன்னிலையில் பாவிக்க வேண்டும் என்பதை எப்பொழுது நாங்கள் கற்றுக் கொள்ளப் போகின்றோம் என்று அந்த நிகழ்ச்சி மீண்டும் ஒரு தடவை எண்ண வைத்தது. அந்த கணவனும் மனைவியும் எவ்வாறு நிகழ்ச்சி முடிய ஒன்றாகப் பேசியபடி வீட்டுக்கு செல்வார்கள் என நினைத்துக் கொண்டேன்.

இதைவிட ”சொல்வதெல்லாம் உண்மை இன்னும் மோசமாக இருக்கும். அதனுள் நான் போக விரும்பவே இல்லை.

இதேமாதிரி இல்லா விட்டாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒலிபரப்படும் வானொலிகளில் சரி, ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளில் சரி நேயர்கள் தொலைபேசியினூடாக கதைக்கும் பொழுது நாம் ஒரு வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழுகின்றோமா என்று எம்மை பார்த்து நாமே வெட்கப்படும் வகையில் அவை அமைந்திருக்கும்.

நிகழ்ச்சிகளை நடாத்தும் ஆண் அறிவிப்பாளர்கள் பெண்களிடம் கதைக்கும் விதமும் பெண் அறிவிப்பாளர்களுடன்; ஆண் நேயர்கள்; கதைக்கும் விதமும் சில நூல்வேலிகளை அறுத்து எறிந்து விட்டுச் செல்லப் போகின்றதோ என்று பயம் வருகிறது. நாம் இருவர் கதைப்பதை ஆயிரக் கணக்காணவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற எந்த எண்ணமோ கூச்சமோ இல்லாமல் உரையாடல்கள்; தொடரும்.

அதன் உச்சக் கட்டமாக சில அறிவிப்பாளரைப் பற்றி கவிதைகள் வேறு பறக்கும். அறிவிப்பாளரின் புன்னகை தொலைக்காட்சித் திரையை நிறைத்திருக்கும். (பாரதியே நீ கொடுத்து வைத்தவன்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் வாசலில் உன்னை யானை அடித்துக் கொன்று விட்டது – இறந்தாலும் வலியதொன்றால் நீ இறந்து போயிருக்கின்றாய்).

இதனை எழுதும் பொழுது முகங்கள் சிறுகதைத் தொகுப்பில் சுவிஸில் இருந்து மயிலிட்டி சிவபாலன் என்பவர் எழுதிய ”அம்மனும் அடியவரும்”என்ற கதையின் ஒரு இடம் ஞாபகத்திற்கு வந்தது.

”நாள் செல்ல செல்ல என் மனையின் பெயர் வானொலிகளிலும் ரீ.வி.களிலும் வலு பிரசித்தம் என என் நண்பர்கள் சொன்னார்கள். . .நான் வேலைக்கு போன பிறகு அவளுக்கு என்ன பிராக்கு? எந்தப் போட்டிகளையும் விட்டு வைப்பதில்லையாம். . .அதே போல் நேயர் விருப்பம், இன்றைய நேயர், பாட்டுக்கு பாட்டு, வெல்ல முடிந்தால் வெல்லுங்கள். . .எல்லாத்திலையும் அவள் வலு சூரியாம். படிச்ச பெடிச்சி தானே. என்னால் என் மனைவிக்குப் பெயர் என்பது இல்லாமல் அவளால் எனக்கு பெயர் வரத் தொடங்கியது கொஞ்சம் அருவருப்பாய் இருந்தது. அவ்வாறு இருக்கும் சில உரையாடல்கள்.

”உங்கள் கணவர் வேலைக்குச் சென்று விட்டாரா?. .அல்லது வீட்டில் இருக்கின்றாரா”என ஆரம்பிக்கும் சம்பாசணையின் நெருக்கம் அல்லது விலக்கம் நான் வீட்டில் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்திருந்ததை இரண்டொரு தரம் கண்டும் காணமல் போல் இருந்தேன்.

ஏதாவது சொல்லப் போனால் ’நறோ மைண்ட்’..’அது’…’இது’என வேண்டிக் கட்ட வரும் என விட்டு விட்டு இருந்தேன்.

ஆனால் கடைசியில் பயந்தது மாதிரி ஒரு நாள் நடந்து விட்டது.

கிளி கூட்டை விட்டுப் பறந்து விட்டது.”

புலம் பெயர்ந்த தமிழர்களினால் எங்கள் வாழ்க்கைக்கு நல்ல விடிவு கிட்டப் போகின்றது என்ற கனாவில் வாழும் எம் நாட்டு மக்களையும் நீயா நானா என எம்முள் போட்டி போடும் என் நேசத்துக்குரியவர்களையும் எண்ணியபடி…. புதுவருடத்திற்கு கோவிலில் போய் வந்த அர்ச்சனைத் தட்டில் இருந்த பாதித் தேங்காய் முடியுடனும் பெரியமாமி யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பி வைத்த புளுக்கொடியலுடனும் பார்த்தபடி இன்ற என் பொழுது கழிந்தது.

 

அன்புடன் வி. ஜீவகுமாரன்

– நினைவு நல்லது வேண்டும் –

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)