நான் அவனில்லை – சிறுகதை (சித்திரை 2024 ஜீவநதியில் வெளியானது)

நான் அவனில்லை – சிறுகதை (சித்திரை 2024 ஜீவநதியில் வெளியானது)

”மிஸ்ஸிங் ஹோமா?… நவ் ஸ்றெயிற் கொனற்றெட் ரு யுவ ஹோம்.

handsலிபற மொபில்! இன்ரெநெற் கோலிங்…லோ கோஸ்ற்… ஹய் குவாலிட்டி…” தொலைக்காட்சியில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும் பையன்… மூக்கைத் தேய்த்தபடி ஒடர் எடுக்கும் சர்வர்;… இவர்களுக்கு
எந்தவித மாறுபாடுபாடில்லாத ஒரு சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தேன்

பத்து வருடத்துக்கு முன்பு நானும் லாவண்யாவும் சந்திக்கும் அதே யாழ்ப்பாண பஸ்ஸ்ராண்ட் முன்னுள்ள சாப்பாட்டுக்கடை. கடையின் தோற்றம் முற்றாகவே மாறியிருக்கின்றது.

அவ்வாறே முன்பிருந்தவர்களும் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கவில்லை.

நாலு முழவேட்டியுடனும் நெற்றிமுழுக்க விபூதியும் சந்தனமும் குங்குமத்துடன் அமர்ந்திருந்தவருக்குப் பதிலாக இப்பொழுது ரை கட்டியிருக்கும் ஒரு பையன். கடை கைமாறியிருக்க வேண்டும். குறைந்தது ஒரு பிள்ளையார், லக்ஷ்மி, முருகன்; இணைந்த சிவன் பார்வதி, இயேசு அல்லது மாதா, மெக்கா இந்த ஐந்து படங்களும் கல்லாப் பெட்டிக்கு பின்னே மாட்டப்பட்டு அதற்கு மாலை போட்டு அதன் முன்பு கொளுத்தியிருக்கும் சாம்பிராணியின் மணம் காலை இட்டிக்கும் தோசைக்கும் இன்னும் மணமும் ருசியும் கொடுப்பது போலத் தோன்றும்.

இப்போதும் அதே ஐந்து படங்கள் சின்னதாய் ஒரே பிறேமினுள். மின்சார விளக்கு ஒன்று முன்னே 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருந்தது. சாம்பிராணி வாசனை மிஸ்ஸிங். ஆனோல் ஏதோ ஒரு எயர் பிறசிங் கடைக்குள் அடித்திருந்தார்கள். சின்ன ஒரு சாப்பாட்டுக்கடை ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் மாறியிருந்தது.

போராட்டத்திற்குப் பிறகு அதிககடைகளின் முதலாளிமார் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில்தான் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புவிப்பது போல இருந்தது.

யுத்தமும் யுத்தத்தின் பின்னருமான சூழ்நிலையும் யாழ்ப்பாணத்தை நன்குதான் மாற்றி வைத்திருக்கு.

நான் டென்மார்க்கிற்கு போவதற்கு முன்னிருந்த யாழ்ப்பாணம் இல்லை இது.

முன்பு யார் கண்ணிலும் படாமல் அமைதியாக இருந்து ஒரு அரைமணித்தியாலத்தைப் போக்குவதற்காக நானும் லாவண்யாவும் வந்து ஆளுக்கொரு தேநீர் வேண்டிக் கொண்டு உட்கார்ந்து கொள்வோம். ஆறுதலாகக் கதைத்துக் கொண்டே அதை பருகுவோம். இன்னும் ஒரு அரை மணிநேரம் இருக்க வேண்டுமாயின் மீண்டும் ஒரு தேனீரும் வடையும் வேண்டி இரண்டாய்ப் பிரித்துக் கொள்வோம். சர்வர்; பையனும் மேசை துடைக்கும் பையனும் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.  உங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு அழகியுடன் அமர்ந்திருக்கின்றேன் என்ற பெருமையுடன் நானும் அதனைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருப்பேன்.

போர் முடிந்த பின்பு முதன் முதலாக வந்த எனது இலங்கைப் பயணம் இது.

வரும்போது மனதினுள் ஒரு சின்ன… இல்லையில்லை… மிகப்பெரிய ஆசை அல்லது எதிர்பார்ப்பு… லாவாண்யா எப்படி இருக்கின்றாள் என்று பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்றதுதான்.

அதேபோல் நான் வந்து ஒரு கிழமையால் நேற்று அவளை எதிர்பாராமல் வங்கியில் சந்தித்ததும்… இன்று இங்கு சந்திக்க காத்திருப்பதும் ஏதோ சொல்லி வைத்து நடப்பது போல இருக்கிறது.

லாவண்யா இப்பொழுது வந்திருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை.

*

எப்பொழுதும் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே லாவண்யா வந்து எனக்காக காத்திருந்த நாட்கள் பல. ஏதாவது ஒருநாள் நான் மிகப்பிந்தி வந்துவிட்டால் கண்ணும் மூக்கும் சிவக்க சண்டை பிடித்து… அது அழுகையாக மாறி… பின்பு என் வழமையான ”நீ கோவித்தாலும் அழகு… அழுதாலும் அழகு” என்ற என் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டு… பின்பு எந்த சனக்கூட்டம் குறைந்த சினிமாக்கொட்டகை அன்று இருக்கோ அங்கு போய் அவளை சமாதானமாக்கும் வரை அந்தப் போராட்டம் குறையாது. இறுதியாக எதை அன்று கதைக்க வந்தமோ அது கதைபடாமல் போய்விடும். பின்பு கடிதத்தில் சண்டை தொடர்ந்து, சமாதான ஒப்பந்தத்துக்காக ஒரு புதுநாள் தீர்மானிக்கப்படும். அன்று இருவருமே நேரத்துக்கு வந்துவிடுவதால் வரும் பஸ்களையெல்லாம் போகவிட்டுப் போகவிட்டு பஸ் ஸ்டான்ட்டில் நின்று எங்கள் கதை தொடரும்.

அதெல்லாம் ஒரு கனாக்காலம்!

திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை நாட்களில்;;; சந்திப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. சனி, ஞாயிறு நாட்களில் சந்திக்காமல் இருக்கும் பொழுது அந்த இரண்டு தினங்களும் உலகமே உருளாமல் இருப்பது போலத்தோன்றும். முதலே அவளது கால அட்டவணை தெரிந்திருந்தால் அவள் குடும்பத்துடன் போகும் கோயில் திருவிழா, அல்லது சினிமாகொட்டகைகளிலும் நான் பிரசன்னமாய் இருப்பேன். ஆனால் எல்லா சனி, ஞாயிறுகளிலும் கோயில் திருவிழாக்கள் இருந்து விடுவதில்லை. இதென்ன புலம்பெயர்ந்த நாடுகளா சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் கோயில் தேர்கள் வீதிவலம் வருவதற்கு?

இந்த சாப்பாட்டுக் கடையில் இருந்து பார்த்தால் வடிவாக வின்சர் தியேட்டர் தெரியும்.

அங்கேதான் நானும் அவளும் கடைசியாகப் படம் பார்த்தது.

அவள் கைகள் என் கையினுள் இருந்தது.

படம் ஓடிக் கொண்டு இருந்தது.

“ஒரு நாளைக்கு நான் உங்களை விட்டுட்டு வேறை யாரையும் கலியாணம் செய்து கொண்டு போனால் என்ன செய்வீங்கள்”

“ஒன்றுமே செய்ய மாட்டன்”

“உண்மையாகவா?”

“உண்மையாகத்தான்”

“உங்களுக்கு கவலை இராதா”

“இல்லை”

“ஏன்”

“அது எனது தப்பில்லையே”

“உங்களுக்கு கோபமே வராதா”

“இல்லை”

“ஏன்”

“நான் உன்னிலை வைத்திருக்கிறது உண்மையான அன்பு! அது உன்னைக் கோவிக்க விடாது”

“யூ ஆர் மை சுவிற் கண்ணா!”

“கழுத்தை விடு… பின்னாலை ஒரு குடும்பம் இருந்து படம் பார்த்துக் கொண்டு இருக்குது” மெதுவாக அவளின்; கைகளைக் கிள்ளினேன்.

“உன்னை விட ஒரு சாமியாரை லைவ் பண்ணியிருக்கலாம்” என்ற அவளின் சின்னச் சிணுங்கலுடான கோபத்துடன் அன்றைய சினிமா முடிந்து வெளியில் வந்தோம்“

அன்று நான் கற்பனைகூட பண்ணியிருக்கவில்லை அதுதான் எங்கள் கடைசிச் சினிமா என்றும் கடைசி சந்திப்பு என்றும்.

விதி… அது… இது… சாதி… சமயம்… படிப்பு…ஏற்றம்.. தாழ்வு… என்ற எதையும் காரணம் காட்டி என்னை நான் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை.

அது அவள் எனக்குச் செய்த பச்சைத் துரோகம் என்றதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ஆனால் அவளைக் கோவிக்கவோ… உன் வாழ்க்கை நாசமாய் போ என்றோ… ஒரு நாளைக்கு என் அருமை தெரியும் என்று சவால்விடவோ என் மனம் ஏகவில்லை. காரணம் நான் அந்தளவு அவளை நேசித்தது காரணமாக இருக்கலாம்.

இந்த பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நான் கண்டு வியந்த ஒரே செயல் பிள்ளைகள் பிறந்த பின்பும் பிரிந்த கணவன் மனைவி கூட கிறிஸ்மஸ் சமயத்தில் ஒருவரையொருவர் சந்தித்து தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதும்…. பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதும்…. சிலவேளை ஏதாவது உணவகத்துக்கு சென்று உணவருந்தி விட்டு பிரியும் சமயத்தில் காமம் கலக்காத முத்தத்தைப் பரிமாறிக் கொண்டு கை காட்டி விட்டு அவரவர்கள் காரில் ஏறி அவரவர்கள் இல்லம் சொல்வார்கள். தாங்கள் இருவரும் வாழ்ந்த வாழ்வுக்கு… ஒருவர் மற்றவருக்கு கொடுத்த அல்லது பகிர்ந்து கொண்ட சந்தோசத்துக்கு நன்றி சொல்லும் விதமாகவே அது அமைந்திருக்கும்.

அதேமாதிரித்தான் அந்த வயதில் ஒரு பெண்ணின் அன்பு… ஒரு பெண்ணின் ஸ்பரிசம்… ஒரு பெண்ணின் சின்ன சின்ன சின்ன கோபங்கள்… சின்ன சின்ன சிலுமிஷங்கள் அத்தனையையும் அவள் மூலமே உணர்ந்திருந்தேன்.

அந்த பசுமை இன்னும் என்னுள் நிறைந்திருக்கு.

என்னை விட்டு விட்டு… அல்லது மறந்து விட்டு… ஊரில் மிகக் காவாலியாக திரிந்த ஒருவன் சவுதி அரேபியாவுக்குப் போய் பெரிய பணக்காரனாக திரும்பி வந்து இவளைப் பெண் கேட்க என்னிடம் ஏதும் சொல்லாமல் அவனுக்கு தலையை நீட்டிய பொழுது நான் அனுபவித்த வேதனைகளும் இன்றும் என்னுள் இருக்கு.

அவளது கல்யாணத்துக்கு முதன்நாளே ஊரில் இருக்க கூடாது என்ற பிடிவாத்துடன் கொழும்புக்கு வந்து விட்டேன்.

ஆனால் கல்யாணமும் நாலாம் சடங்கும் முடிந்த பின்பும் எனக்கு ஊருக்கு திரும்பிப் போக மனம் வரவில்லை.

கொழும்பிலேயே ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையும் எடுத்து அந்தக் கடையின் மாடியின் மேல் சுவருக்கும் கூரைக்கும் இடைப்பட்ட இடைவெளியையே  என் அறைபோல பாவித்துக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன்.

அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கடிதம் போட்டார்கள். கடைசிச் சோதனையாவது எடுத்துவிட்டு போய் கொழும்பில் நில் என்று.

கொழும்பில் இருந்தே பரீட்சை எழுதுகின்றேன் என மறுத்து விட்டேன்.

பரீட்டை முடிவும் பூச்சியம்தான்.

“அவளாலைதான் என்ரை படிப்பும் நாசமாய் போனது” என அம்மா கடிதம் போட்டிருந்தா.

“இல்லை” என என் மனம் மறுத்தது.

அவளின் நினைவுகள்; அப்போதும் இனிக்கவே செய்தது.

ஒரு ஆறுமாதம் ஓடியிருக்கும்.

வெளிநாட்டு வாய்ப்பு வந்தது.

அப்பா எனக்கு என்று வைத்திருந்த பின்பக்க தென்னங்காணியை விற்று அம்மாவுடன் காசைக் கொண்டு வந்து கொழும்பில் தந்தார்.

தங்கச்சியும் தம்பியும் கூடவே வந்திருந்தார்கள்.

“எல்லாம் அந்த….”, அம்மா சபித்துக் கொண்டே இருந்தா.

“அவளைப் பேசாதையுங்கோ அம்மா”

அவர்களால் என்னைப் புரியவே இல்லை.

அந்தப் புரிதலின்மை நான் விமானம் ஏறும்வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இந்தப் பத்து வருடத்தில் தங்கச்சிக்கும் நல்ல இடத்தில் திருமணமாகி… தம்பியை நான் இருக்கும் நாட்டுக்கு அழைத்து அங்கேயே அவனுக்கு வாழ்க்கைக்கு நல்ல வழி அமைத்துக் கொடுத்து… அப்பா அம்மா இறக்கும் வரை எந்த பொருளாதார பிரச்சனையும் வராது இருப்பதற்காக அவர்களுக்கு போதிய பணத்தை நேற்று வங்கியில் இட்டுவிட்டேன்.

எதிர்பாராத விதமாக இன்று இந்தக் கணம் அவளுக்காக காத்திருக்கின்றேன்.

தங்கச்சியின் திருமணத்துக்கு லாவண்யா வீட்டுக்கு அப்பா அம்மாவை சொல்லாததால் எங்கள் குடும்பத்துடன் அவர்கள் கதைபேச்சு எதுவுமில்லை.

ஆனால் அம்மாவும் தங்கச்சியும் கதைகதையான சொல்லுவார்கள்.

“அந்த ஓடுகாலி ஒழுங்காய் இருந்தால் ஏன் இப்பிடி இருப்பான்?. நீயாவது ஒருத்தியைக் கட்டி குழந்தை குட்டியளோடை சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். இப்பவும் மாட்டன் எண்டு பிடிவாதம் பிடிக்கிறாய்…. அவள் மூண்டு பிள்ளைக்கும் பிறகும் வீட்டுக்கு வந்து  பி;ள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுக்கிற ஒரு வாத்தியார் பொடியனுக்கு பல்லைக் காட்டினதாலை இப்ப கட்டினவனும் இல்லை… வாத்தியார் பொடியனும் இல்லை… நீயும் இல்லை… நீதான் பெரிய துறவி போலை… எனக்கு வாயிலை வருகுது…”

“அம்மா அவளைத் திட்டாதையுங்கோ”

“என்னடா பிறப்பு நீ?”

அம்மாவால் என்னைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்ற வேதனை என்றுமே எனக்கு இருந்ததில்லை. ஒரு வேளை நானும் ஒரு அம்மாவாக இருந்திருந்தால் அப்பிடித்தான் இருந்திருப்பன் போல…

நான் இங்கு வந்திருக்கும் இந்த ஒரு கிழமையும் எங்கள் வீட்டுக்கு வருவபர்கள் எல்லோருமே தம்பியைக் கேட்டுச் சொல்லுங்கோ என்றபடிதான் கேற்றடியில் நின்று அப்பா அம்மாவுடன் கதைத்துவிட்டுச் செல்வார்கள்.

“முப்பத்தினான்கு வயதெல்லாம் ஒரு வயதில்லை”….அவர்கள் சொல்வது முன்விறாந்தையில் பேப்பரினுள் மூழ்கியிருக்கும் எனக்கும் காதில் கேட்கும்.

நிச்சயமாக திருமணம் செய்யக்கூடாது என்று எனக்குள் எந்தப் பிடிவாதமும் இல்லை. ஆனால் திருமணம் செய்யும் எண்ணமே அவள் போன அன்றுடன் போய்விட்டது. ஆனால் அம்மாதான் அவள் நினைப்பில் இருக்கின்றேன் என அர்த்தப்படுத்திக் கொண்டு இருக்கின்றா.

நினைப்பு என்பது வேறு. முடியாது என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள இடைவெளி பலருக்கு ஒரு நூலிடை இடைவெளி. ஆனால் எனக்கு பெரிய இரு கண்டங்களுக்கான இடைவெளியாக இருந்தது.

என்னால் இன்று வரை டிஸ்கோ ரெக்கில் ஒரு பெண்ணை இலவசமாக முத்தமிடமுடியாது இருந்தமைக்கு காரணம் எதுவோ, அதுவே இன்னோர் தமிழ்… அதிலும் எனது யாழ்ப்பாண… அதிலும் எனது சாதி சனப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது இருந்தமைக்கு காரணம்.

ஆம்! லாவண்யாவை நினைத்துக் கொண்டு இன்னோர் பெண்ணுடன் வாழ முடியாது. அல்லது வந்தவளுடன் சின்ன சின்ன நெருடல்கள் ஏற்படும் பொழுது லாவண்யாவைத்தான் மனம் தேடும். மேலாக இன்னொருத்தியுடன் இருக்கும் பொழுது லாவண்யாவின் எண்ணம் வந்தால் வந்தவள் பாவம் தானே!

நேற்று வங்கியில் அப்பா அம்மாவின் பெயரில் காசு போடச் சென்ற பொழுதுதான் லாவண்யாவைக் கண்டேன்.

அந்தக் கணத்தில் சிரிப்பதா… கதைப்பதா… என்ன கதைப்பது என என்னுள் நான் தடுமாறிக் கொண்டு நின்ற பொழுது நேரடியாக என்னிடம் வந்தாள்.

“உங்களோடை நான் தனியாக கதைக்க வேணும்”

நான் அதிர்ந்து போனன்.

“என்ன கதைக்க வேணும்” என்னுள் தயங்கிபடி கேட்டேன்.

வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கி நின்றுது போல இருந்தது.

“அதைக் கதைக்கேக்கை பேந்து சொல்லுறன்;”

அதே லாவண்யா…! அச்சொட்டும் மாறத அதே லாவண்யா!!

“சரி! எங்கே”

“முந்திப் போற சாப்பாட்டுக் கடைக்கு நாளைக்கு பத்து மணிக்கு வாங்கோ”

எனது பதிலையோ… தலையாட்டலையோ எதையுமே எதிர்பார்க்காது போய்விட்டாள்.

எதற்காக வரச் சொன்னாள் என்று என்னால் எதுவுமே ஊகிக்க முடியவில்லை.

என்னையே நான் கேள்வி கேட்டு… நானே அதற்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்ததில் மூன்று கிலோ மீற்றரில் இருந்த எங்கள் வீட்டுக்கு மூன்று நிமிடத்தில் வந்தது போல இருந்தது.

வாசலில் சைக்கிளால் இறங்கும் போது அம்மாவின் குரல் பெரிதாகவே கேட்டது.

”பத்து வருசத்துக்கு முதல் அந்த தறிகெட்ட நாய் போட்டுதெண்டால் போகட்டும் நாயே என்று விட்டுட்டு வீடு தேடி வாற எத்தனையே இராசகுமாரிகளிலை ஒன்றைக் கட்டுறது தானே. பெரிய தேவதாஸ் கோலம். தாடி ஒன்றுதான் குறைவில்லை. பாதியாய் போனான். வீட்டுக்கு தகப்பன் எண்டு இருக்கிறியள். கொஞ்சமாவது கவலை இருக்குதோ”

”அவன் வந்து நிக்கிற இந்த இரண்டு கிழமையும் அவனைத் திட்டி கழுத்து அறுக்காதை! அவனாய் விரும்பினால் கலியாணம்; செய்யட்டும். அதை விட்டுட்டு கழுத்திலை கயிறு போட்டு இழுத்துக் கொண்டு போய் ஆட்டுக்கும் மாட்டுக்கும் விடுகிற வேலை இல்லை இது”

அம்மாவிலை அதிக பாசமும் அப்பாவிலை அதிக மரியாதையும் நான் வைத்திறதுக்கு காரணம் இந்த வேறுபாடுதான்.

*

இப்பொழுது நேரம் பத்தரை ஆகிவிட்டுது.

மீண்டும் ஒரு தேனீரையும் றோல்ஸ்சையும் வரவழைத்துக் கொண்டேன்.

தேனீரை ஒரு சிப் அருந்திவிட்டு நிமிர்ந்த பொழுது வாசலில் அவளின் உருவம் தெரிந்தது.

நேராக அதே பழைய ஒரு புன்சிரிப்புடன் வந்து என் முன் அமர்ந்தாள்.

முன் தலையில் இரண்டு சுருள் மயிர்களில் மட்டும் வெள்ளி நிறம் பெயர்ந்திருந்தது.

அது அவளுக்கு மேலும் அழகை கூட்டியிருந்தது.

“சொல்லு….”

என் குரலில் ஒரு வறட்சி இருந்ததை என்னால் உணரக் கூடியதாய் இருந்தது.

“உங்களோடை சண்டை பிடிக்கத்தான் வந்திருக்கிறன்”

“எதுக்கு….”

“ஏன் நீங்கள் இவ்வளவு நாளும் கலியாணம் செய்யேல்லை”

இப்படி ஒரு கேள்வியை என்ன உரிமையில் அவள் கேட்கின்றாள் எனக்கு தோன்றியது.

“கல்யாணம் என்ற ஒன்று வேணும் என்று நான் நினைக்கேல்லை”உறுதியாகச் சொல்லும் பொழுது என்னையும் அறியாமல் என் பெருவிரல் நகங்களை என் பற்கள் கடிக்கத் தொடங்கின.

என்னை நிமிர்ந்து உற்றுப் பார்த்தாள்.

அவளிருந்து என் பார்வையைத் திருப்பியபடி அவளுக்கும் தேனிரும் றோல்ஸம் வடையும் ஓடர் செய்தேன்.

“நீங்கள் பொய் சொல்லுறியள்”, அவள் உறுதியாகச் சொன்னாள்.

“இல்லை… அதுதான் உண்மை”

நானும் உறுதியாகச் சொன்னேன்.

“எது உண்மை?”

“நான் கல்யாணம் செய்யாது இருக்கிறதுக்கு நீ காரணம் இல்லை என்பதுதான் உண்மை”

ஒரு தட்டில் வடைஇ றோல்; இ போளியும் மறுதட்டில் பால்தேனீரும் வந்தது.

“எடு”

“நீங்கள் உண்மையைச் சொன்னால்தான் நான் சாப்பிடுவன்”

அதே பிடிவாதம் கொஞ்சமும் மாறாமல் இருந்தாள்.

“உன்ரை நினைப்;போடை தினம் தினம் அழுது கொண்டு யாரையும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறன் எண்டு சொன்னால் சந்தோசமாய் இது எல்லாத்தையும் சாப்பிடுவியா?”

எனது ஏளனமான வார்த்தைகள் அவளைக் கோபப்படுத்தும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தவள் பின் என்ன நினைத்தாளோ ஒரு வடையை எடுத்து பாதியை எடுத்துக் கொண்டு மறுபாதியை என்னிடம் தந்தாள்.

மனம் பத்துவருடத்துக்கு முன் ஊஞ்சலில் பின்னால் போய் மீண்டும் முன்னே வந்தது.

நான் அந்தப் பாதி வடையை வாங்கிக் கொண்டேன்.

“நான் இப்ப அவரோடை இல்லைத் தெரியுமா”

அவளின் தலை குனிந்திருந்தது.

“தெரியும்”

“உங்களைப் பற்றி நெடுகவும் கதைப்பார்… உங்களோடை திரிஞ்சனான் என்று பேசுவார்…..”

நான் பேசாமல் கேட்டுக் கொண்டு இருந்தேன். பின்பு குரலைச் செருமியபடி கேட்டேன்.

“அதாலைதான் அவரை நீ விட்டுட்டு தனிய இருக்கிறியா?”

அவள் என் கண்களுள் ஊன்றிப் பார்த்தாள்.

“உங்கடை அம்மா, தங்கச்சி ஆக்கள் என்னைப் பற்றி ஏதும் சொன்னவையா”

“லாவண்யா எதையும் கதைச்சு உன்னைக் கவலைப்படுத்தி நீ இதிலை இருந்து அழுது கொண்டு போறதை பார்க்க நான் விரும்பேல்லை”

“ஏன்”

“முந்திச் சொன்னதுதான்… உன்மையான அன்பு இருக்கிற உள்ளங்கள் ஒன்றை ஒன்று காயப்படுத்தாது”

அவளின் இரு கண்களில் இருந்தும் கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடியது.

”கண்ணைத் துடை”

முன்னால் இருந்த கை துடைக்கும் பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டினேன்

சிறிது நேரம் மௌனமாக கழிந்தது.

“இப்பவும் என்னை விரும்புகிறிங்களா?”

“விரும்புறது என்றதை என்ன அர்த்தத்தில் நீ கேக்கிறாய் என்று எனக்கு தெரியேல்லை. ஆனால் உன்னை நான் வெறுக்கேல்லை என்றதுதான் உண்மை.”

மீண்டும் மௌனம்.

தேனீரை எடுத்துக் குடித்தாள்.

“சரி…. இப்பவே நான் உங்களோடை வருவன் என்றால் நீங்கள் என்னையும் பிள்ளைகளையும் கூட்டிப் போவீங்களா”

லாவண்யாவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று கற்பனை பண்ணியிருக்கவில்லை என்றாலும் அவளை நன்கு தெரிந்த என்னை அவளது கேள்வி ஆச்சரியப்படுத்தவில்லை.

அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சர்வர் வந்து பில்லைத் தந்தான்.

இன்னும் இரண்டு போளிக்கும் பால் கோப்பிக்கும் ஓடர் செய்தேன்.

“கெதியாய் சொல்லுங்கோ… நான் போகவேணும்”

அதே அவசரம்!

“எந்தச் சந்தர்ப்பத்திலும் உன்னோடை திரும்பி வாழவேணும் எண்டு நான் நினைத்திருக்கேல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் நீ என்னை விட்டுட்டுப் போனாலும் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்று எண்ணம் மட்டும்தான் எனக்குள்ளை இருந்தது”

அவள் முகம் வெளிறியிருந்தது.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுக் கேட்டாள்> “ஏன் நான் குப்பை என்று நினைக்கிறீங்களா?”

இல்லை எனத் தலையாட்டினேன்-

“மூன்று பிள்ளையளோடை ஒருத்தியைக் கட்டுறதைவிட ஊருக்கை கேட்டுவாற யாரோ ஒரு பணக்காரியக் கட்டலாம் என்று நினைக்கிறியளா”

இப்போதும் இல்லை எனத் தலையாட்டினேன்.

“செத்தவன் பெண்டிலைக் கட்டி னாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக் கூடாது என்று ஊர் உலகம்
சொல்;லும் எனப் பயப்பிடுகிறியளா”

“இல்லை”

“அப்ப என்னதான் எண்டதைச் சொல்லித் தொலையுங்கோ.. நான் அதையாவது கேட்டுட்டு தொலைஞ்சு போறன்”

அவள் படபடத்தாள்.

அந்த படபடக்கும் தன்மையில் சரி  அல்லது கோபப்படும் விதத்திலும் இந்தப் பத்து வருஷத்திலும் எந்த மாற்றமும் இல்லை.

“உன்னோடை இதே இடத்தில் இருந்து பாதிவடையும் தேனீரும் குடிச்ச செந்தில் இப்ப இல்லை…. உன்னிலை எனக்கு எந்த உரிமையும் இல்லை…. அந்த தியேட்டருக்ககை உன்ரை கையை என்ரை உள்ளங்கைக்குள்ளை வைத்திருக்கேக்ககை உன்னையே என் கையுள் ஏந்தி இருக்கிற நினைப்பு எனக்கு இண்டைக்கு இல்லை. அதுக்குப் பிறகு எப்பிடி உன்னேடை வாழுறது?. . .”

”ஊர் எல்லாம் என்னாலைதான் நீங்கள் கட்டாமல் இருக்கிறியள் என்று சொல்லுறது பொய்யா?”

”எனக்குள்ளை இப்பவும் எங்களின்ரை காதலின்ரை பசுமை இருக்கு. ஆனால் அதிலை நீ இல்லை எண்டதுதான் உண்மை.”

ஒரு கணம் அதிர்ந்து போனவளாய் என்னைப் பார்த்தாள்.

”நீ இருந்த அந்த இடத்திலை வேறு யாரையும் வைச்சுப் பார்க்க என்னாலை முடியேல்லை. அதாலைதான் கலியாணமே செய்யாமல் இருக்கிறன். சிலவேளை யாரோ ஒருத்தியோடை எதிர்காலத்தில் சேர்ந்து வாழலாம். அது வேறு. ஆனால்   உயிரோடை உன்ரை புருசன் இருக்கேக்கை இன்னொரு புருஷன் போலை நான் இருக்கிறது…அல்லது உன்ரை பிள்ளைகளுக்கு ஒரு அப்பா போலை நான் இருக்கிறது எல்லாம் ஒரு பொய். அது ஒரு ஒப்பந்தமாய்தான் இருக்கும். நாங்கள் வெறும் நண்பர்களாய் இருக்கலாமே தவிர கணவன் மனைவியாக இருக்க ஏலாது. அது வாழ்க்கையாயும் இராது. பி;ள்ளையளை தனியாய் வளர்க்க உதவியள் எது வேண்டும் என்றாலும் கேள். நான் இருக்கிற காலம் வரை உதவுறன்”.

கண்> முகம் எல்லாம் விம்மி வெடிக்க என்னைப் பார்த்தாள்.

அவள் கோபப்படுகிறாளா… இல்லலைக் கவலைப்படுகிறாளா என நான் தீர்மானிக்க முதல் அவளது வாயிலிருந்து வார்த்தைகள் தீப்பொறிகளாக வெளியில் வந்து விழுந்தது.

“யாருக்கு வேணும் உங்கடை பிச்சைக் காசு…. இந்தாங்கோ இப்ப குடிச்ச தேத்தண்ணிக்கும் றோல்;ஸ்க்கும் பாதி வடைக்குமான ஆன காசு”

நூறு ரூபாய் தாளை தூக்கி மேசையில் போட்டு விட்டு விறுவிறு என்று நடந்து வெளியேறினாள்.

எனக்கு ‘திக்’ என்றது.

பக்;கத்து மேசையில் இருந்தவர் என்னைப் புழுவாகப் பார்த்தார்.

என் கையில் இருந்த பாதி வடை… எண்ணையின் பிசுபிசுப்பு மணம் என்னமோ செய்தது.

மேசையைத் துடைக்க ஒரு பையன் ஊத்தைத் துணியுடனும் வந்தான்.

மேலும் இருநூறு ரூபாயை தட்டில் வைத்துவிட்டு மிகுதியை ரிப்ஸ்ஸாக வைத்திருக்கும்படி சைகை காட்டி விட்டு எழுந்து கொண்டேன்.

அவள் மாறவே இல்லை  –  மற்ற மேசையில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும் பையனைப் போலவும்… மூக்கைத் தேய்த்தபடி ஒடர் எடுக்கும் சர்வரைப் போலவும்…

ஆனல் நான் ரொம்பத்தான் மாறியிருக்கின்றேன் என எனக்குப் புரிந்தது.

கெதியாக டென்மார்க்கிற்கு திரும்ப வேண்டும் போல் இருக்கிறது.

”மிஸ்ஸிங் ஹோமா?… ”

விளம்பரத்தில் வந்த குரல் என்னை நோக்கிக் கேட்பது போல எனக்குள் ஒரு பிரமை.

(முற்றும்)

2 Comments on “நான் அவனில்லை – சிறுகதை (சித்திரை 2024 ஜீவநதியில் வெளியானது)

 1. மிக நல்ல வார்ப்பு. கடைக்குள்ளான சம்பாஷணையை குறைத்திருந்தால் இன்னும் Crispy யாக வந்திருக்கும். வேறு குறையொன்றுமில்லை. பாராட்டுக்கள்.

 2. இந்த தீபம் விளம்பரம் எங்களையும் மிகக் கவர்ந்தது.
  நீருள் நனையும் விரலும், மூக்குத் துடைப்பதும் அதுவும் ஓரு வெள்ளையர்.
  இப்போது போனாலும் சிரிப்போம் விழுந்து விழுந்து.
  சிறுகதை மிக மிக நன்று. இயற்கைளான நடை.
  காலம் மாறி, கலாச்சாரங்களும் மனிதனையும் மாற்றுகிறது. நாமும் மாறுகிறோம்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)