நானும்…என் சின்ன மச்சாளும்…மருமகனும்!

நானும்…என் சின்ன மச்சாளும்…மருமகனும்!

எனக்கு அப்பா வழியில் மூன்று மச்சாள்களும் அம்மா வழியில் மூன்று மச்சாள்களும் இருந்த பொழுதிலும் எவருடனும் எனக்கு எந்த பிசிக்ஸ் கெமிஸ்றி எதுவும் வரவும் இல்லை… என் அம்மா அப்பா சரி… மாமாமியாட்கள் சரி என்னை எந்த மச்சாளுடனும் இணைத்து வைக்க முயற்சிக்கவும் இல்லை.

சின்ன வயதிலேயே சவுதிக்கு ரைவராக போய் விட்டதாலோ என்னவோ… பெரிய படிப்பு இல்லாதவன் என்பதாலோ… எந்த மாமா மாமியும் எங்கள் வீட்டுடன் சம்மந்தம் வைக்கவில்லைப் போலும்.

இதனை உணர்ந்த என் அப்பா அம்மாவும் அவர்கள் வீட்டு வாசலைப் போய்த் தட்டவில்லை.
ஆனால் எனக்கு மட்டும் அம்மாவழி கடைசி மச்சாளுடன் அப்படி ஒரு அன்பு!… விருப்பம்!!… ஒட்டு!!!…. நிச்சயமாக ஒரு துளியேனும் காதல் இல்லை.

அவளுக்கும் அவ்வாறேதான் என்னுடன்.

ஒவ்வோர் வருடமும் நான் ஒரு மாத விடுமுறையில் சவுதியில் இருந்து ஊருக்கு வரும் பொழுது என் அக்கா தங்கச்சிக்கு வாங்கி வரும் அத்தனையையும் என் சின்ன மச்சாளுக்கும் வாங்கி வருவேன். அதனாலோயே என் அக்காக்கும் தங்கச்சிக்கும் மற்ற மச்சாள் மாருக்கும் என்னில் ஒரு சின்னக் கோபமும் சின்ன மச்சாளில் சின்ன பொறாமையும்.

ஆனால் நாங்கள் இருவரும் அதனைப் பொருட்படுத்துவதில்லை.

அக்கா தங்கச்சியுடன் பெரிய கடைக்கு உடுப்புகள் மற்றும் சாமான்கள் வாங்கப் போகும் பொழுதெல்லாம் சின்ன மச்சாளையும் அழைத்துப் போவேன். அவளுக்கும் உடுப்புகள் வாங்கிக் கொடுப்பேன். எல்லோருமாய் நல்ல சாப்பட்டுக் கடையாய் போய் ஒரு கட்டுக் கட்டி மேலாக ஐஸ் கிறீமும் சாப்பாட்டு வருவோம்.

ரவுணில் நல்ல படம் ஏதாவது ஓடினால் அதனையும் பார்த்து விட்டு திரும்புவோம்.
சிலவேளைகளில் அக்கம் பக்கமாய் இருக்க வேண்டி வந்தால் யாரையும் பொருட்படுத்தாமல் சந்தோசமாக அருகருகே அமர்ந்து படம் பார்த்து வருவோம்.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது – ஒரு நாள் இருவருமாய் பெரிய ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போகின்றோம் என்று.
ஒவ்வோர் ஆண்டும் நான் விடுமுறையில் வரும் பொழுது பொதுவாக ஏதோ ஒரு மச்சாளுக்கு திருமணம் நடந்து புகுந்த வீட்டுக்குப் போயிருப்பார்கள்.

ஆனால் சின்ன மச்சாள் மட்டும் தன் திருமணம் நான் விடுமுறையில் வரும் பொழுதே நடை பெற வேண்டும் என்று மாமா மாமியிடம் கூறியிருந்தாள்.

அதுக்கேற்ற மாதிரியே அவளின் திருமணம் என் விடுமுறையை ஒட்டியே ஒழுங்கு செய்திருந்தார்கள்.

நானும் திருமணத்திற்கு சரியாக ஒரு கிழமைக்கு முன்பே சவுதியால் வந்திருந்தேன்.

நான் வந்து அடுத்த நாள் அவளுக்கு கூறைச்சேலை எடுக்க மாப்பிள்ளை வீட்டாருடன் என்னையும் வருமாறு அவள் வற்புறுத்திக் கேட்டதால் நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.

காலை பத்து மணிக்கு கடைகள் திறந்து வாசல் கோலம் போட நிலத்தைக் கழுவிய தண்ணீர் காய முதலே பெரியகடை வீதியில் உள்ள மிகப் பெரிய புடவைக்கடைக்குள் எங்கள் பட்டாளம் புகுந்தது.
சின்ன மச்சாளின் வருங்கால மாமியார் உட்பட ஐந்து பெண்கள் – மாப்பிள்ளைப் பையன் – நான்.
கடையின் கண்ணாடி அலுமாரியில் இருந்த அனைத்துப் புடவைகளும் ஏறக்குறைய வரிசையாக நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தன.

கடை ஊழியர்களின் பொறுமையை மனத்தினுள் நினைத்துக் கொண்டேன்.

குறிப்பாக தனது மகனைப் பற்றியும் தங்கள் பரம்பரையைப் பற்றியும் உடல் பருத்த சின்ன மச்சாளின் வருங்கால மாமியாரின் கதாகாலச்சேபத்தைக் கேட்க கட்டாயம் மிகப் பெரிய பொறுமையாளர்களாக அந்த ஊழியர்கள் இருந்திருக்க வேண்டும்.

”தம்பி… இன்றுவரை எங்கள் வயல் நெல்லுச் சோறு தான் எங்களுக்கு. அதுவும் மில்லுக்கு குடுத்தெல்லாம் இடிக்கிறேல்லை. கைக்குத்து தான். ஐந்தரிசிப் பஞ்சம் வந்த போதும் சரி… வெள்ளம் வந்து ஊர் எல்லாம் மூழ்கிய பொழுதும் சரி… நாங்கள் கடைதெருவில் அரிசி வாங்கிப் பழக்கம் இல்லை”.

அன்று தான் யோசித்தேன் எனக்கு எப்படி மனைவி வந்தாலும் இப்படி ஒரு மாமியார் வரக் கூடாது என்று.

நேரம் போய்க்கொண்டு இருந்தது.

நானும் மாப்பிள்ளையும் எப்போது இவர்களின் கூறைச்சேலைச் சுயம்வரம் முடியும் என்று கடை வாசலில் வந்து நின்று கதை;துக் கொண்டு நின்றோம்.

கடைக்காரர்களுக்கும் மற்ற வாடிக்கையாளர்களை கவனிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
ஆனால் எங்கள் மகளிர் அணி அதனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

கடைக்காரர்கள் கொண்டு வந்து கொடுத்த மோரையும் யூஸையும் அவரவர் விருப்பத்திற்கு தெரிவு செய்து குடித்த கையுடன், ”வேறை கடைகளிலும் ஒரு தடவை பார்ப்போமா?” என என் சின்ன மச்சாள் சொல்ல மாமியாரும், ”வாங்கடி நாலு கடையை போய்ப் பார்ப்பம்…. காசு என்ன சும்மாவா வருகுது? சொன்ன விலைக்கு வாங்கிப் போவதற்கு” என்றவுடன் அவரின் பின்னால் எங்கள் ஊர் வலம் பெரிய கடை வீதியில் வலம் வரத் தொடங்கியது.

அவரின் பாரிய உடம்பை சுமந்தபடி சற்றே தாண்டி தாண்டி வியர்வையையும் துடைத்தபடி நடந்து செல்லும் பொழுது பார்க்க கொஞ்சம் பாவாமாயும் இருந்தது.

”நீர் சவுதியாலை வந்த உம்மடை மச்சானையும் வீணாண் வெயிலுக்குள்ளை அலைய வைக்கின்றீர்”, என மாப்பிள்ளை சொல்ல, ”சவுதியை விட இங்கு வெய்யில் கம்மிதான். என் மச்சானும் ஒன்றும் கறுத்துப் போறளவு வெள்ளைப் பையன் இல்லை” சின்ன மச்சாள் சொல்ல எல்லோரும் ’கொல்’ எனச் சிரித்தார்கள்.

நான் என்ன நினைத்துக் கொள்வேனோ என்று எல்லோரும் சங்கடப்பட்டார்கள்.

இவளின் இந்த வெள்ளாந்திப் பேச்சும் மகிழ்ச்சியும் என்றும் நிலைக்க வேண்டும் என் என் மனம் வேண்டிக் கொண்டது.

மாலை ஐந்து மணியாகியும் கூறைச்சேலை எடுத்த பாடில்லை.

மற்றவர்களுக்கு ஓரளவு திருப்தி என்றாலும் என் சின்ன மச்சாள்தான் எதிலும் திருப்திப்படவில்லை.
மதிய உணவு, இளநீர், சர்பத், மாலை வடை – றோல்ஸ் – தேனீர் – கோப்பி – கொய்யாக்காய் – தூள் தூவிய அன்னாசித் துண்டுகள்… அனைத்தும் என் உபயம் தான். மாப்பிள்ளை பணம் கொடுக்க முயற்சித்த பொழுதும் நான் விடவில்லை.

ஒரு கடைக்காரரிடம் மெதுவாக கேட்டேன், ”அண்ணை எத்தனை மணிக்கு கடை பூட்டுவியள்”.
”எப்படியும் இரவு ஒன்பது மணி செல்லும் தம்பி. கஸ்டமேர்ஸ் உள்ளே நின்றால் பத்து மணிவரை செல்லும்”

ஆன்று இரவுச் சாப்பாடும் புடவைக்கடை வீதியில் என எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

கடைசிப்பட பஸ் இரவு 10.30 என்பதால் அதற்கிடையில் சின்ன மச்சாள் ஏதோ ஒரு கூறைச்சேலையை தெரிவு செய்து விடுவாள் என்று அனைவரும் நம்பினோம்.
*

சின்ன மச்சாளுக்கு திருமணம் நடந்த அந்த ஆண்டே கனடா போய் விட்டாள்.

எக்கவுண்டன் என்ற அவளது கணவனின் கல்வித் தகைமை கனடாவில் இலகுவாக குடியுரிமை பெற அவர்களுக்கு உதவியிருந்தது.

அடுத்த ஆண்டு எனக்கும் திருமணமாகி புது டெல்லி – லாகூர் – ஆப்கானிஸ்தான் – துருக்கி – காடு – மலைகள் – ஆறுகள் என்று தாண்டி நானும் மனைவியுமாக டென்மார்க் வந்து சேர்ந்து விட்டோம்;.
உலகம் தன்னைத் தான் சுற்றியபடியும் சூரியனை 25 தடவைகள் சுற்றயும்p வந்து விட்டது.

அவளுக்கு ஒரு ஆண் பிள்ளை. சுபாஷ். 24 வயது. போன வருடம் எஞ்ஜினிரிங் இறுதி ஆண்டு.

எனக்கு ஒரே பெண் பிள்ளை. 20 வயது.

இந்த 25 வருட காலமாக நானும் சின்ன மச்சாளும் ஒவ்வோர் ஞாயிறும் குறைந்தது தொலைபேசியில் ஒரு மணித்தியாலம் கதைப்பது எழுதப்படாத ஒப்பந்தம்.

முதலில் டெலிபோன் காட் வாங்கித் தேய்த்துக் கதைக்கத் தொடங்கி இப்போ முகத்தை முகம் பார்த்துக் கதைக்க ஐபோனும் சிமாட் போனும் வழி வகுத்திருந்தது.

பிள்ளைகளின் படிப்பு – எங்களின் வேலைகள் – உலக அரசியல் – கொறானா – கடைசியாக வந்த விஜயின் மாஸ்டர் – மோகன் லாலின் திருஷ்யம் 2 வரை எல்லாம் வந்து போகும்.

சுபாஷ் எஞ்ஜனிரியங் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது அந்த நகரிலேயே மிக அழகியும்… பரதத்தை தன் கால்களிலும் கை விரல்களிலும் கண் ஜாடைகளிலும் அணிந்து கொண்ட ரக்ஷியிடம் அவன் மனதை பறிகொடுத்தில் எந்த வியப்பும் இல்லை.

சின்ன மச்சாளின் காதுகளுக்கு செய்தி வந்த பொழுது மகன் கொஞ்சம் பொறுத்திருந்தால் ரக்ஷியை விடவும் இன்னமும் நல்ல பெண்ணாய் வாய்ந்திருக்கலாம்… அல்லது எஞ்ஜினியரிங் முடிந்தால் இன்னும் நல்ல பணக்கார இடத்தில் அவனை செய்து கொடுத்திருக்கலாம் என அவள் மனம் அடித்துக் கொண்டது.

ரக்ஷி அனைவருடனும் நன்கு ஒட்டி ஒட்டிப் பழகுவதால் சின்ன சின்ன பெட்டிச் செய்திகள் ஊரில் உலாவி வந்து கொண்டிருந்தது சின்ன மச்சாளுக்கு சின்ன ஒரு மன நெருடலாய் இருந்தது.

அடுத்து வந்த ஞாயிறு என்னுடன் கதைக்கும் பொழுது, “இங்கை பிறந்து வளர்கிற பிள்ளைகளுக்கு எதுவும் சொல்ல ஏலாது… வேறை சாதிகளிலை அல்லது வேறை இனத்திலை செய்யாமல் நாங்கள் கை நனைக்க கூடிய இடத்தில் தான் அவன் பார்த்திருக்கிறான். பறவாயில்லை” அவளே தன் மகனைப் பற்றி முறைப்பாடும் செய்து… அவளே தன்னைத் தான் சமானப்படுத்திக் கொண்டாள்.
சிலவேளை ரக்ஷனாவும் அவனுடன் வீட்டுக்கு வந்து போகின்றாள் என்றும்… இவனும் அவள் வீட்டிற்கு போய் வருகிறான் என்றும்… ஆனால் இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் தங்குவதில்லை என்றும்… அதற்கு தாமும் அவளின் பெற்றோரும் அனுமதிப்பதில்லை என்பதில் சின்ன மச்சாளுக்கு ஓரளவு ஆறுதல்.

அவர்கள் நகரத்திலும் முதலில் கிசுகிசுக்கப்பட்ட சுபாஷ் – ரக்ஷாவின் காதல் விவாகாரம் கொஞ்ச நாட்களில் அனைவருக்கும் தெரியத் தொடங்கி விட்டது. அவர்களும் அது பற்றிக் கவலைப்படவில்லை.

அந்த நகரத்தின் சில பிள்ளைகள் துருக்கிப் பிள்ளைகள் போல மொட்டாக்குப் போட்டுக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டு டிஸ்கோரெக்குகளுக்கு செல்லுமாப் போல் எந்த தேவையும் இவர்கள் இருவருக்கும் இருக்கவில்லை.

இரவு பஸ்ஓட்டும் சாரதிகளிடமும் டக்ஸி சாரதிகளிடமும் எங்கள் பிள்ளைகளின் நதிமூலத்தை அறிந்து கொள்ள முடியும். அது கனடா என்றாலும் சரி… ஐரோப்பா என்றாலும் சரி.
முதல் இரண்டு வருடங்களும் எல்லாம் நன்றாய்தான் போய்க் கொண்டு இருந்தது.
திடீரென ரக்ஷி ஒரு ஆப்கானிஸ்தான் இளைஞனுடன் சுற்றத் தொடங்கி விட்டாள்.

சுபாஷ் உடைந்து போய் விட்டான்!

என் சின்ன மச்சாளும் தான்!!

ஆனாலும் “என் பிள்ளையுடன் வாழ அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை” என தன்னையையும் தன் மகனையையும் தேற்றிக் கொண்டவைகளை ஞாயிறுகளில் எனக்கு சொல்லி அழுது கொண்டிருப்பாள்.

எனது மகளால் எங்கள் வீட்டில் எதுவும் பிரச்சனைகள் வரவில்லை என்பதில் எனக்கும் என்

மனைவிக்கும் நிம்மதியாக இருந்தது.
ஒரு நாள் சுபாஷ் மிகவும் கவலையான இருந்திருக்கின்றான்.

சின்ன மச்சாள் என்ன என்று கேட்ட பொழுது ரக்ஷி கர்ப்பமாகி இருந்ததாகவும்… அந்த
ஆப்கானிஸ்தான் இளைஞன் அவளை விட்டு விட்டு ஓடி விட்டதாகவும்… அவள் கருக்கலைப்பு செய்து விட்டு யூனிவேசிற்றிக்கு செல்லாமல் வீட்டிலேNயு அடைபட்டு இருக்கின்றாள் என தான் அறிந்ததாகவும் கவலையுடன் சொல்லியிருக்கின்றான்.

“அந்த மகராசிக்காக நீ கவலைப்படாமல் உன் படிப்பை பார்” என மகனின் தலையை ஆதரவாக கோதிவிட்டு சின்னமச்சாள் தன் வேலைகளில் மூழ்கி விட்டாள்.

அந்த ஆண்டு வின்ரர் முடிந்து உறைந்திருந்த பனிக்குவியல்கள் எல்லாம் உருகி ஒடத் தொடங்க, மரங்களில் ஸ்பிறிங் கால இலைகள் துளிர் விட்ட பொழுது சுபாஷ் பாக்கிஸ்தான் பெண் ஒருத்தியுடன் தன்னை இணைத்துக் கொண்டான்.

சின்ன மச்சாளின் காதுகளுக்கு இந்த விடயம் சாடைமேடையாக வந்த பொழுது அவள் தன்;னுள் உறைந்து விட்டாள் – மீண்டும் ஒரு பனிப்பாறையளாக. ஆனால் எதையும் வெளியில் காட்டவில்லை. காட்டியும் எதுவும் ஆகப் போவதில்லை என அவள் அறிவாள். சுபாஷிடம் எதுவும் கேட்கவில்லை.

என்னுடன் தான் எல்லாம் சொல்லிப் புலம்புவாள்.

ரக்ஷனாவும் ஒரு வெள்ளைக்காரனுடன் உலாவத் தொடங்கியிருந்தாள்.

அந்த ஆண்டு கோடைகால விடுமுறை இரு ஜோடிகளும் தங்கள் தங்கள் இணைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

சின்ன மச்சாள் இந்தக் கதைகளை சொல்ல சொல்ல என் மனைவி எங்கள் மகளையும் சீக்கிரம் ஊருக்கு கொண்டு சென்று திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று என்னை நச்சரிக்கத் தொடங்கினாள்.

நானும் அமைதி காத்தேன் – மகளின் படிப்பு முடியும் வரையும்.

சுபாஷ் எஞ்ஜினியரிங் முடித்து நல்ல கொம்பனி ஒன்றில் வேலை எடுத்த அதே மாதம் அவனது பாக்கி;ஸ்தான் காதலியின் பெற்றார்கள் அவளுடன் சின்ன மச்சாள் வீட்டுக்கு வந்து, இருவருக்கும் திருமணம் செய்ய தாம் விரும்புவதாகவும்… கனடாவில் தம் மகளின் பெயரில் வாங்கியுள்ள பங்களாவையும் பாக்கிஸ்தானில் உள்ள பல ஏக்கர் காணிகளையும் கொடுக்க விரும்புவதாயும் தெரிவித்தார்கள். அவர்;கள் பாக்கிஸ்தானில் மிகவும் கௌரவமான ’சேட்டுகள்’ பரம்பரை எனவும் தாங்கள் இலகுவில் யார்; வீட்டிலும் கை நனைப்பதில்லை எனவும் தம் குலப் பெருமைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

அத்துடன் சின்ன மச்சாள் குடும்பத்திடம் ஒரு வேண்டுகோளையும் வைத்திருகு;கிறார்கள். திருமணத்திற்கு முன் சுபாஷ் முஸ்லீம் சமுதாயத்துக்கு மாற வேண்டும் என்றும் சுபாஷின் பெயருடன் இஸ்லாம் மரபுடைய ஒரு சிறியதொரு பெயரும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள்.

அத்துடன் சுபாஷனின் காதல் அத்தியாயம் 2ம் முடிவுக்கு வந்தது.

மீண்டும் சிறிது நாட்கள் சுபாஷ் தேவதாஸ் கோலம்.

சின்ன மச்சாள் எதுவும் பேசவில்லை.

அழுதுபோட்டுக் கிடக்கட்டும் என விட்டு விட்டாள்.

என்னுடன் கதைக்கும் பொழுது மட்டும் அவனுக்காக ஒரு புது சேவிங் செற் வாங்கி வைத்திருக்கிறன் என உதட்டினிடையே சிரித்தபடி சொன்னாள்.

அடுத்த அடுத்த நாட்களில் ரக்ஷியைப் பற்றிய செய்தி அந்த நகரத்தையே குலுக்கியது.
அவளது புதுக்காதலன் போதை மாத்திரைகளை பாவித்து விட்டு பெரிய சுப்பர் மாக்கற்றினுள் வைத்து அவளை தாறுமாறாக அடித்திருக்கிறான். அந்தப் படம் வேறு அந்த நகரத்து வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

ரக்ஷியின் உதடுகளில் இரத்தம் வடிந்தும் தலை எல்லாம் கலைந்தும் இருந்தது.
”வேணும் உந்த சிறுக்கிக்கு… என்ரை பி;ள்ளையை அழ வைத்தவளுக்கு” சின்ன மச்சாள் சுபேஷனி;ன் காதுபடவே கூறினாள்.

அவன் எந்தப் பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

மூன்றாம் நாள் சுபாஷ் ரக்ஷியுடன் வீட்டு வாசலில் வந்து நின்ற பொழுது சின்ன மச்சாள் அதிர்ந்து போய் விட்டாள்.

தனியே அழைத்துச் சென்று, ”இங்கே பார்… உன்னேடை முதலிலை பழகிய பின்பு ஒருத்தனோடை போய் வயிற்றைக் கழுவி விட்டுப் வந்திருக்கிறாள்… அதோடை ஓர் தூள்காரனோடை வேறை” சின்ன மச்சாள் எச்சரித்தாள்.

”நானும் ஒரு பாக்கிஸ்தான் பெட்டையோடை இருந்திருக்கின்றன் தானே அம்மா”
சுபாஷ் உறுதியாகச் சொல்ல சின்ன மச்சாள் விக்கித்து நின்றாள்.

*

இரவு எட்டு மணியாகியும் எந்தக் கடையின் கூறைச்சேலையும் அவர்;களைத் திருப்திப்படுத்தவில்லை.

”காலமை முதல் கடையில் பார்த்த அந்த பெரிய போடர் கூறை நல்லாய்தானே இருந்தது”
மாமியார் சொல்ல சின்ன மச்சாளும் ’ஆம்’ எனத் தலையாட்டினாள்.

முதல் புடவை பார்த்த அந்தக் கடை மூட முன்பு அனைவரும் திரும்பி பெரிய கடை வீதியில் திரும்ப விரைந்தார்கள்.

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)