‘கடவுச்சீட்டு’’ ஒரு பார்வை – மேமன்கவி-

‘கடவுச்சீட்டு’’ ஒரு பார்வை – மேமன்கவி-

 

ஜீவகுமரானின் கடவுச்சீட்டு’’ ஒரு பார்வை

மேமன்கவி-

நண்பர் ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு’’எனும் இந்த நாவலை அறிமுகம் செய்து வைக்கும் பணி எனக்கு வழங்கியமைக்கு அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, ஒரு நூலை அறிமுகப்படுத்துவது  என்பது அன்றைய நாட்களில் நமக்கு 5 சதத்திற்கு கிடைத்த தமிழ் சினிமாப் பாடல்களின் பிரசுரத்தின் இரண்டாம் பக்கத்தில் அந்த படத்தின் கதைச்சுருக்கம் போட்டு இருப்பார்கள். அப்படியான ஒரு வேலை இல்லை என்று தெரிந்தாலும், ஒரு நூல் வெளியீட்டு அல்லது அறிமுக விழாவில் ஆழமான அகலமான விமர்சனத்தை குறிப்பிட்ட அந்த நூலை பற்றி  அந்த நூல் கொண்டிருக்கும்  பக்கங்களை விட, அதிக பக்கங்களில் கொண்டு வந்த கட்டுரையை சுருக்கமாக சில வார்த்தைகளில்  சொல்லி முடிக்கிறேன் எனக்கூறி, தலை குனிந்த நிலையில் சபையில் வீற்றிருக்கும்; பார்வையாளர்களின் மனோநிலை பற்றியோ, நேரத்தைப் பற்றியோ எந்த விதமான கவலையுமின்றி, அத்தனை பக்கங்களையும் வாசித்து முடித்து வேண்டும் என்ற மாதிரியான வேலையும் இல்லை என்பதை அறிந்து வைத்திருப்பவன் என்ற  வகையில் மிக சுருக்கமாக கடவுச்சீட்டு என்ற இந்த நாவலை பற்றி அறிமுக குறிப்பு(கவனிக்க விமர்சனம் அல்ல) என்ற பேரில் ஒரு பதிவை முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.

புலப்பெயர்வு படைப்பாளிகளில் என்னை கவர்ந்தப் படைப்பாளிகளின் பட்டியலில்;; நண்பர் ஜீவகுமாரனின் பெயரும் உண்டு. அதற்கு முதல் காரணமாக அமைந்தது புலப்பெயர்வுச் சூழலை பின்புலமாக கொள்ளாத அவரது சங்காணைச் சண்டியன் என்ற அவரது குறுநாவல் பிரதிதான். ஏனெனில் சந்திக்கு சந்தி சண்டியர்கள் சூழ வாழ்ந்த (கவனிக்க வாழ்ந்த) ஒரு நகரப் பிறவி நான் என்பதால்தான் சங்காணைச் சண்டியன் என் கவன ஈர்ப்புக்கு ஆளாகினான்.

அந்த வகையில் என்னை  கவர்ந்த படைப்பாளியான நண்பர் ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு எனும் நாவல் பற்றி பேச கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் இலக்கியத் தளத்தில் சரியான கவனத்தை பெறாத தமிழகத்தின் முக்கிய எழுத்தாளரான ப.சிங்காரம் ஞாபகார்த்தமாக நற்றிணை பதிப்பகம் வழங்கும் விருதினை பெற்ற் நாவல் என்ற செய்தி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

வாழ் நாளில்; வந்திராத, கண் காணாத ஒரு ஒரு நாட்டில் அகதி அந்தஸ்து பெற, அந்த நாட்டின் விமான நிலைய கழிப்பறையில் கிழித்துப் போடப்படும் ஒர் ஆவணமான கடவுச்சீட்டு இந்த நாவலின் தலைப்பானதால் இது புலப்பெயர்வு வாழ்வை பற்றிதான் பேசப் போகிறது என்ற தகவல் நாவலின் அட்டைப் படத்திலேயே நமக்கு கிடைத்து விடுகிறது.

புலப்பெயர்வு எனும் பொழுது பின்காலனிய சூழலில் ஈழத்து தமிழர்கள் மேற்கொண்ட இரு புலப்பெயர்வுகள் முக்கியமானவை. ஓன்று 70களில் மலையக மக்களை இந்தியாவுக்கு புலப்;பெயர வைத்த புலப்;பெயர்வு. இரண்டாவது 80களுக்கு இந்த நாட்டின் சமூக அரசியல் நிலவரங்ககளால்;; ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஈழத்து தமிழர்களால் மேலைத்தேய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வு. இவ்விரண்டில்; முதலாவது புலப்;பெயர்வு என்பது பலத்தகாரமாக மலையக மக்களை நாடு கடத்தியதன் மூலம்; நிகழ, இரண்டாவது புலப்பெயர்வு வலிந்து ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்பு. ஆனாலும் 80களுக்கு பின்னான ஈழத்தமிழர்களால்  மேலைத்தேய நாடுகளுக்கு  மேற்;கொள்ளப்பட்ட புலப்பெயர்வானது, ஈழத்தமிழர்கள் வாழ்வில் மட்டுமல்ல ஓட்டுமொத்தமான தமிழ் கலை இலக்கியத்துறையிலும் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது எனலாம்.

அத்தகைய புலப்பெயர்வானது ஈழத்தமிழர்களில் வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கங்களை மாற்றங்களை; அதிர்வுகளை அனுபவங்களை பின் வரும் முறையில் அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண் காணாத, என்றுமே வராத ஈழத்தமிழர்கள் தாம் கொண்டிருந்த கலாசார சமூக விழுமியங்ளுக்கு தலைக்கீழான  கலாசார விழுமியங்கள கொண்டிருக்கும்; மேலைத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்து பெற, தாம் பிறந்த வளர்ந்த நாட்டு கடவுச்சீட்டை, புலப்;பெயர்ந்த நாட்டின் கழிவறையில் கிழித்து எறிந்ததும்,

கடுகு வேலியையும் பனை ஒலை வேலியும் மட்டுமே பார்ந்திருந்த ஒரு சமூகம், இரும்பு கம்பி வேலிகள் அறுத்து, அகழி அகழிகளாக தாண்டி காடுகளையும் கரடு முரடாக பாதைகளையும் கடந்து பயணித்தமையும்;,

கொள்கலன்களிலும் பெட்ரோல்  பவுசர்களிலும் ஒளிந்திருந்தமையும் அவற்றிலே  சமாதி  நிலையை அடைந்தமையும்;,

ஏலவே காலனியச் சூழலில் ஆங்கில மொழியினையும் அதன் சமூக மனோபாவத்தினை மட்டுமே எதிர்கொண்டிருந்த ஒரு சமூகம், புதிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும், புதிய கலாசார சூழலுடன்; தம்மை  பொருத்திக்கொள்ளவும், பொருத்திக் கொள்ள முடியாதற்குமான போராட்டம், அதன் விளைவாக தமிழை மட்டுமே தெரிந்த மிஞ்சிப் போனால் ஆங்;கிலம் சிங்களம் மட்டுமே தெரிந்த ஈழத்தமிழர்கள் பிரெஞ்சு, ,நோர்ஜியன்; ஜெர்மனி, டெனிஸ் என்றலாம் உலக மொழிகளைத் தெரிந்த  தமிழர்களாய் மாறியதும்,

என்னதான் பரிச்சயம் இல்லாத நாடுகளுக்கு போனாலும் ஈழத்தமிழர்களில் ரத்தத்தில் ஊறிப் போன சாதியத்தைத் தொடர்ந்து பேணுதலும், அதனை நிராகரித்தமையும்,

இதே ஈழத்தமிழர்களில் புலப்பெயர்ந்த சூழலில் சாதி பார்ந்தவர்களும் சரி, பார்க்காதவர்களும்;, சரி  அவர்கள் கீழைத்தேயத்தவர்கள்; என்ற பார்வையின் அடிப்படையில் தோல் நிற அரசியலின(ளுமin ஊழடழச Pழடவைiஉள)  விளைவாக, மேலைத்தேய நாடுகளில் நிலவிய நிற துவேசத்தை எதிர் கொண்டமையும்,

இங்கு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தமிழ் இயக்கங்களின் பேரைச் சொல்லி பணம் பண்ணும் கும்பலாக சிலர் புலப்;பெயர்வு சூழலில் வளர்ந்ததும்,

இங்கிருந்து சுமந்து சென்ற, குடும்ப கட்டமைப்பைச் சார்ந்த ஒழுக்காற்று விதிகள் நெருக்கடிக்கு ஆளானதும், பாலியல், மற்றும் தமிழ்ப் பெண்கள் சம்பந்தமான கருத்துநிலைகள்; அதிர்ச்சிக்கு ஆளானதும், பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் மீதான் உரிமம் கேள்விக்குறியானதும், அதன் விளைவாக புலப்;பெயர்ந்த சூழலில் வயதுக்கு வரும் தம் பெண்கள் வெளியே செல்லும் பொழுது, கருத்தடைகள் மாத்திரைகளை மறக்காமல் வைக்கும் பெற்றோர்களாகவும், வைக்க மறக்கும் பெற்றோர்களாக மாறிப் போனதும்,

புpறந்து வளர்ந்த இந்த நாட்டு தமிழர்கள் இங்கு பேணும் கலாசார ஆன்மீக விழுமியங்களை சடங்குகளை சம்பிரதாயங்களை புலப்பெயர்வுச் சூழலிலும் விடாமல் பேணுதலும், அவற்றை எல்லாம் மறந்து துறந்து புலப்பெயர்ந்த நாட்டு கலாசார விழுமிய ஜோதியில் ஒன்டற கலைந்து விட்ட நிலையும்,

இங்கு  போர்கால கலவர நிலைவரங்களால்; உள பிறழ்வுக்கு ஆளானது போல் புலப்;பெயர்  வாழ்வு ஏற்படுத்திய பல்வேறு அதிர்வுகள் அதிர்ச்சிகளுக்கு காரணமாக இரட்டை மனோநிலையில் உழன்று திரிசாங்கு நிலையில உள நிலை பாதிப்புக்கு ஆட்படுதலும்,

அப்பாடா மூச்சு முட்டுகிறது அல்லவா? இதுதான்  80களுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வின் வரைப்படம் அல்லது நிலைமை.

புலப்பெயர்வு என்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் அனுப வெளி விரிவடைந்தது. விரிவடைந்த அந்த அனுபவத்தின் வழியாக எதிர்கொண்ட இத்தகைய மாற்றங்களை, அனுபவங்களை, அதிர்ச்சிகளை வீழ்ச்சிகளை எழுச்சிகளை,  நெகிழ்ச்சிகளை இங்கிருந்து சென்ற, அங்கு தோன்றிய இலக்கிய ஆர்மிக்கவர்கள் தமிழிலும் புலப்பெயர்ந்த நாடுகளின் மொழிகளிலும் இலக்கியங்களாய் படைத்தளித்தளர்கள.; அதன் மூலம். இது வரை காலம் நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய வளர்ச்சிக் போக்காக புலப்பெயர்வு இலக்கியம் தோற்றம் பெற வழி வகுத்தது.

புலப்பெயர்வு பற்றிய இத்துணை பிராஸ்தாபிப்பு விபரிப்பு எதற்கு என்றால் இத்தனையும் 160 பக்கத்தில் 6 பகுதிகளில் மொத்தம் குட்டியான குட்டியான 50 அத்தியாங்களில் யாழ்ப்பாண சமூக மட்டத்தில் நிலவிய சமூக அந்தஸ்துகளையும் ஏற்றத் தாழ்வுகளை தாண்டி காதலித்து திருமணம் முடித்த இளம்; யாழ்ப்பாண தம்பதிகளை மையமாக கொண்டு பேசி இருக்கும்; நாவலே ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு எனும் இந்த நாவல்.

இந்த நாவலில் புலப்;பெயர்ந்த நாடுகளில் ஒன்றான டென்மார்க்கிக்கு புலப்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் மூன்று தசாப்த கால புலப்;பெயர்வு வாழ்வியலை ஜெட் விமான வேகத்திலேயே ஜீவகுமாரன் சொல்லி இருப்பது அவரது தனித்துவம் என்றால், எம்.டி.வி இசை காணொளியின் வேகத்திலே நகரும் இந்த நாவலின் காட்சி மாற்றங்கள் காரணமாக என் வாசக அனுபவத்தில் இந்த நாவலின் முக்கிய பாத்திரங்களான தமிழும் சுபாவும் தவிர, மற்ற எல்லா பாத்திரங்ளும் அதிவேக Electric Trainயில் உடனே ஏறி உடனே இறங்கிப் போகும்; பயணிகள் போல் சிறிது நேரமும் என்னுடன் தாங்காது போய் விடுகிறார்கள். இயல்பிலேயே எல்லா எழுத்துப் பிரதிகளை வேகமாக வாசிக்கும்; என் பழக்கத்துடன் அந்த வேகம் இணைந்து ஒளி வேகமாக மாறி விடுகிறது.

கடவுச்சீட்டு எனும் இந்த நாவல் புலப்;பெயர்வு வாழ்வியலை பற்றி பிராஸ்பித்துப் போனாலும் மேலே குறிப்பிட்டது போல் யாழ்ப்பாண சமூக மட்டத்தில் நிலவிய சமூக அந்தஸ்துகளையும் ஏற்றத் தாழ்வுகளை தாண்டி காதலித்து திருமண முடித்த தம்பதிகளின் குடும்பத்தின் உருவாக்கத்தை சிதைவைப்;  பற்றியே அதுவும் அவர்தம் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகளின்; நடத்தை பிறழ்வை பற்றியே பிரதானமாக பேசி முடிந்து விடுகிறது. அது என்னவோ தெரியவில்லை புலப்பெயர்ந்த நம் சனங்களில் நம் பொடியன்களை  விட,  தொகை அளவில் அதிகமாக நம்ம பொட்டைகள்தான்( கடவுச்சீட்டில் வரும் கௌரி அன்றி தனது கணவனை விட மெகா குடிக்காரியாக இருப்பதும், தமிழ்-சுபா வின் இரு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளான சுமிதா, லக்ஸனா என்ற மாதிரி) கெட்டுப் போனவர்களாவும், ஒழுக்கப் பிறழ்வுமிக்கவர்களாகவும், இருக்கிறார்கள் என்ற கருத்து சற்று தூக்கலாக கடவுச்சீட்டில்  தெரிகிறது)

ஆனாலும் புலப்பெயர்வுக்கு ஆட்பட்ட ஈழத்தமிழர்களின் கணிசமான அனுபவங்களை எடுத்துக் காட்டும் வகையில் வகை மாதிரியான பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் இந்த நாவலில் பதித்து  இருப்பது, (உதாரணத்திற்கு டென்மார்க் போன்ற புலப்பெயர் சூழலில சொந்த மண்ணைச் சார்ந்த கணவனின்;;; கொடுமையால் பாதிக்கபட்டு மனநோய்க்கு ஆளான கோமதி என்ற ஈழத்தமிழ் பெண் ஒருத்தியின் கதையை ஏலவே கோமதி என்ற தலைப்பில் ஒரு குறுநாவலாக தந்திருக்கும் ஜீவகுமாரன் கடவுச்சீட்டில் அதே கோமதியை எட்டிப்பார்க்க வைத்திருப்பது, கோமதி போன்றவர்களின் இருப்பை நிச்சப்படுத்துகிறது. இப்படியாக அவரின் பல சிறுகதைகளும் கடவுச்சீட்டு நாவலில் வருகின்றன.)

கடவுச்சீட்டு  என்பது ஒரு நாட்டுக்கான ஆவணம் என்றாலும் அது புலப்;பெயர்வு வாழ்வுக்கான குறியீடாகவும் இருக்கிறது என்பதை இந்த நாவலுக்கான தலைப்பான கடவுச்சீட்டு  எடுத்துக் காட்டுவதாக அமைக்கிறது.  (ஜீவகுமாரன் தனது பல சிறுகதைகளில் இந்த குறியீட்டு உத்தியை கையாளகிறார்).அந்த வகையில் இந்த நாவல்  புலப்;பெயர் வாழ்வியலை; பற்றிய ஒர்  இலக்கிய ஆவணமாக  நமக்கு கிடைத்திருக்கிறது.

கடவுச்சீட்டு எனும் இந்த நாவலின் பிரதான இருபாத்திரங்களான தமிழ்-சுபா தம்பதிகளுக்கு ஒத்த தலைமுறையினர் புலப்பெயர்வுச் சூழலை விட்டு எல்லா வகையான இழப்புகளுக்கு பின்னும் அதே சூழலில் தம்மை நிரந்தரமாகி இணைத்தும் கொண்டவராகவும், கரைத்துக் கொண்டவர்களாகவும் இருக்க, அவர்களுக்கு முந்திய தலைமுறையினர் அதாவது அவர்களது அம்மா அப்பா வயதுக்கு ஒத்த தலைமுறையினர் (அதாவது பெரிசுகள்)  அவர்களுடன் அல்லது அவர்களால் புலப்;பெயர்வுக்கு Sponsor செய்யப்பட்டு வரழைக்கப்;பட்டவர்களில் புலப்;பெயர் சூழலுக்கு பழக்கப்பட்டு தம்மை மாற்றிக் கொண்டவர்களும,; உண்டு. அவர்களில் ஒரு சிலர் அந்த சூழலுடன் ஒத்துப் போக முடியாதவர்கள் பிறந்த நாட்டுக்கு திரும்பியவர்களும்; உண்டு. கடவுச்சீட்டில்  வரும் தமிழ்-சுபா தம்பதியினர் அவர்தம் வயதுக்கு வந்த இரு பிள்ளைகளை அச்சூழலுக்கு பலிக் கொடுத்து புலப்பெயர்ச் சூழலை வெறுத்து சொந்த நாட்டு கடவுச்சீட்டை அந்திய நாட்டு கழிவறையில் கிழித்துப் போட்டு புலப்;பெயர் வாழ்வை தொடங்கிய அவர்களே  சொந்த நாட்டின் கழிப்பறை ஒன்றில்; தம்மையும் தம் குடும்பத்தைச் சிதைத்து சின்னாப் பின்னமாக்கிய புலப்பெயர்ந்த நாட்டின் கடவுச்சீட்டை கிழித்து போடுவதுடன் தம் புலம்பெயர் வாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.

புலப்;பெயர்  சூழலில் சிறுகதை குறுநாவல் என்ற வடிவங்களில் பங்காற்றி வருபவர்களில் ஒருவரான நண்பர் ஜீவகுமாரன் ஏலவே மக்கள் மக்களால்; மக்களுக்காக என்ற அரசியல் நாவலை தந்திருப்பதாக அறிகிறேன். இன்னும் எனக்கு படிக்க கிடைக்காத அந்த நாவல் எந்த அரசியல் பற்றி பேசி இருக்கிறது என்ற தகவல்  முழுமையாக தெரியாத நிலையில்,

எதிர்காலத்தில் புலம்பெயர்வு வாழ்வியல் சார்ந்த அனுபவங்கள் தகவல்கள், தரவுகள் அதிக அளவில் கொண்ட, புலப்பெயர் இலக்கியத்தில் தனக்கென இடம் பிடித்து கொண்ட நண்பர் ஜீவகுமாரன் அவர்கள் புலப்பெயர் வாழ்வியலை பற்றி  குறுநாவல்கள். சிறுகதைகள் வழியாக  நமக்கு படைப்புக்களாக தந்திருப்பினும்  புலப்பெயர்வு வாழ்வியலை பற்றி விரைவான அல்ல விரிவான ஒரு மெகா நாவலை ஈழத்து புலப்பெயர் இலக்கியத்திற்கு தரவேண்டும் என்பதே எனது அவாவும் எதிர்ப்பார்ப்பும் ஆகும். எனக்கு இந்த அவாவையும் எதிர்ப்பாப்பையும் ஏற்படுத்துவதில்  நண்பர் ஜீவகுமாரனின் புலப்பெயர் வாழ்வியல் பற்றி பேசும் அவரது இதரப் படைப்புக்களை விட, கடவுச்சீட்டு என்ற  இந்த நாவலின் பங்கு அதிகம் என்பேன்.

 

memonkavi@gmail.com

 

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)