3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

1

 

இந்தவார இணையத்தளங்களில் அனேகமாக இடம் பெற்றிருந்த 3 செய்திகள்

1. வட மகாணத்தில் பாலியல் உறவுகள் – கலாச்சாரச் சீழிவுகள் பெருகின்றன.

2.கட்டாய ஆள்சேர்ப்புக்கு பயந்து நிகழ்ந்த திருமணங்கள் முறிந்து போகும் அபாயங்கள்.

3.விதவைகளுக்கான புலம் பெயர் மக்களின் உதவியும் கருத்தாடல்களும்.

இந்த 3 செய்திகளும் பரபரப்பாக பல இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை மூன்று செய்திகளாக இருந்தாலும் போருக்குப் பின்பான நிதர்சனம் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட 3 கறுத்த அல்லது வெள்ளை மணிகளாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

வட மகாணத்தில் பாலியல் உறவுகள் – கலாச்சாரச் சீரழிவுகள் பெருகின்றன

 

2போரில் 50.000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என கணிப்பீடுகள் சொல்லுகின்றன. விதவைகள் என்பதனை வெறும் வெள்ளைச் சேலை உடுத்த ஒரு வார்த்தையாகப் பார்க்காமல் அன்றாட வாழ்க்கைக்கு பிறர் கைகளை எதிர்பார்க்கும்… கணவன் இழந்ததைத் தவிர ஐம்புலன்களில் எப்புலன்களையும் இழக்காத பொருளாதார மாறுதல்களுக்கு ஏற்ப ஐரோப்பிய உலகமும் மற்றைய பணக்கார நாடுகளும் கற்பு என்னும் கொள்கையை தளர்த்தியும் அதற்கான வேறு விளக்கங்களுடன் வாழும் புலம் பெயர் உறவுகள் தாம் விட்டு வந்த செம்பாட்டு மண்ணில் எந்தக் களங்கமும் வந்து விடக்கூடாது என எதிர்பார்க்கும் மண்ணில் வாழும் பெண்களின் ஒரு பகுதியினராகப் பார்க்க வேண்டும்.

போராட்டக்காலகட்டத்தில் போராட்டத்திற்கு உதவிக்; கொண்டிருந்த புலம் பெயர்வு மக்களின் பொருளாதார உதவி, களவீரர்களின் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையின் தேவையை நிவர்த்தி செய்து கொண்டு இருந்தது. மற்றையோருக்கு கணவன்மாரின் ஏதோ ஒரு ஊதியம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தது.

போரின் பின்பு மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு பிரிவினரும் எந்தப் பொருளாதார உதவியும் இல்லாது, பிறரிடம் கைகளை ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

எம் சங்ககால போராட்டம் தொடக்கம் பெண்கள் சிறைப்பிடிப்பு, பாலியல் வக்கிரங்களைத் திணித்தல் என்பது நடந்து கொண்டே வந்தது. அது எங்களுக்கு சரித்திரப்படம் பார்ப்பது போல இருந்ததே அன்றி உணர்வுகளை பெரிதாக உலுக்கவில்லை. ஆனால் அன்றாடம் இந்நிகழ்வுகளை வன்னி மண்ணில் பார்க்கும் பொழுது உயிரின் அடிஆணிவேர்வரை அது உலுக்கின்றது. இது பெண்கள் மீது திணிக்கப்பட்ட அல்லது திணிக்கப்படும் நிகழ்வாக அமைகிறது.

3

வறுமை. கற்பை கண்போலப் பார்க்கின்றோம் என்று மார்பு தட்டிய இந்தியாவில் புதுமைப்பித்தனின் பொன்னகரம் சுட்டிக் காட்டியது போல சோரம் போகும் வாழ்வு மக்கள் மீது தவிர்க்க முடியாதாகின்றது. இன்றும் அரசாங்க அங்கீகாரத்துடன் பம்பாய், கல்கத்தா, ஆந்திரா போன்ற பகுதிகளில் நடப்பது போல தமிழ்நாட்டில் விபச்சாரம் ஒரு தொழிலாக இல்லாவிட்டாலும் அடிக்கடி பியூட்டி பார்களில் நடைபெறும் கைதுகளைப் பார்க்கும்பொழுது தமிழ்நாட்டிலும் இது நடைபெறுகிறது என்பதை ஒத்துக் கொண்டேதான் ஆக வேண்டும். இயல்பாக விபச்சாரத்தினால் அதிக பணம் ஈட்டலாம் என்ற ஒரு எண்ணம்

 பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகியதால் அதனையே பின் தொழிலாகக் கொண்ட நிலைமை வறுமையைத் தீர்க்க இது தவிர வழியில்லை என்ற நிலைமை இந்த மூன்றும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றது.

 எங்கள் சமுதாய அமைப்பில் சரி பல விடயங்கள் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கப்படாமல் அல்லது பார்ப்பதை அனுமதிக்காமல் காரணகரியங்களை ஆராயாமல் பல செயல்பாடுகளை அதை அதுவாகவே ஏற்று வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது.

பின் எழுத்து, வாசிப்பு என்ற வட்டத்துள் மக்கள் வந்த பொழுது உலக விடயங்களை அறிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு மக்கள் வந்தார்கள். ஆனாலும் அச்சு இயந்திரங்கள் தங்களுக்கு என்று ஒரு தார்மீகத்தை வைத்துக் கொண்டார்கள். அவ்வாறில்லாது முழுக்க முழுக்க செக்ஸ் பற்றி அறிய விரும்புவோருக்கு சில மஞ்சள் பத்திரிகைகள் இருந்து வந்தன. ஆனால் கணனியின் வருகை இந்த நதிமூல ரிஷிமூல கரைகளை எல்லாம் முற்றாக உடைத்தெறிந்து விட்டது. மேலாக பல தமிழ் இணையத்தளங்கள் உடலில் உணர்ச்சி கூடிய பகுதி எது எனத் தொட்டுக் காட்டிக் கொண்டு இருக்கின்றது

ஒரு காதல் பரிமாற்றத்திற்கு நாட்கணக்கில் சென்ற கடிதத் தொடர்பு ஒரு செக்கன் இடை வெளியில் காது மூலமும் கணனி மூலமும் பாய்ந்து சென்று உணர்வுகளைத் தொடுகிறது. இதில் கனிந்தவையை விட கண்டலாகிப் பேனவையே அதிகம். எனவே தான் கலாச்சாரப் பிறழ்வு பற்றி அதிகமாக இன்று பேசுகின்றோம். இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 18 வயதுக்கு குறைவான 75 பெண்பிள்ளைகள் வடபிரதேசத்தில் கருக்கலைப்புச் செய்தார்கள் என்றால் அதுக்கு நிச்சயமாக இராணுவத்தை மட்டும் துணைக்கு அழைக்க கூடாது. இது உலகமெங்கும் பெருகும் கலாச்சாரப் பிறள்வுகள் எங்கள் நாட்டையும் தாக்கியிருக்கின்றது என்ற கசப்பான மாத்திரையை நாம் கண்டிப்பாக விழுங்கியே ஆக வேண்டும்.

பாலியல் கல்வியை தரம் ஆறில் இருந்து போதிக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே தங்கள் மகள்மாரை தாய்கள் கருக்கலைப்புக்காக மருத்துவமனைகளுக்கு கூட்டிச் செல்லும் பொழுது பாலியல் என்பது பற்றி எதுவுமே கதைக்காமல் வெறுமே சாமத்தியச் சடங்கை மட்டும் பெரிதாகச் செய்யும் எங்கள் கலாச்சாரத்தில் இந்தப் பிறழ்வுகள் நிகழ்வதற்கு சாத்தியக் கூறுகள் மிக அதிகம். 

நக்கீரன் பாணியில் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டு இருக்காமல் ஆவனவற்றைச் செய்யாவிட்டால் இலங்கையின் தென்பகுதியில் நிகழும் எயிட்ஸ் பற்றிய பயம் வடபகுதிக்குப் பரவ அதிக நாட்கள் இல்லை.

கட்டாயஆள்சேர்ப்புக்குபயந்துநிகழ்ந்ததிருமணங்கள்முறி
ந்துபோகும்அபாயங்கள்.

5க்கு உடல் வளர்ந்த அளவு பலருக்கு உளம் வளர்வதில்லை.

இந்தியாவில் நிகழ்;த பால்ய விவாகங்களும், பருவ வயதை அடைய முன்பே மொட்டையும் அடித்து வெள்ளைச் சேலையும் போர்த்து மூளியாக்கிய கொடுமையும் மறைந்து அதிக நாட்கள் இல்லை.

பெண்ணின் திருமணவயது 18 என்று ஆட்டோக்களின் பின்னால் பதித்திருப்பதை இன்றும் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இலங்கையிலோ இறுதியுத்தம் நிகழ்ந்தமைக்கு அண்மையாக கட்டாய ஆள் சேர்ப்பு நிகழ்ந்த பொழுது திருமணமான இளைஞர்களையோ யுவதிகளையோ அதில் இணையாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி பல பெற்றார்கள் தங்கள் 18 வயதான பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அல்லது 18 வயதாகாத பிள்ளைகளை பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் மூலம் 18 வயதாக்கி திருமணம் செய்து வைத்தார்கள்.  

இந்தச் செயலால் பிள்ளைகளை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளாமல் பெற்றார்கள் பார்த்துக் கொண்டாலும் வயது முதிர்ச்சி வராத பிள்ளைகள் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டார்கள். போர் தொடர்ந்திருந்தால் இந்த திருமணங்களும் ஏதோ ஒரு கட்டாய புறநிலைக் காரணியால் நீடித்திருக்கும். ஆனல் போர் முடிந்த கட்டத்தில் இந்த திடீர் திருமணங்கள் பிசுபிசுத்துப் போவது மட்டுமின்றி பதினெட்டு வயதினிலே கையில் குழந்தைகளுடன் நிற்கும் பல குழந்தைகளை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கணவன் இறந்தால் மட்டும் வாழவெட்டி என்ற நிலை இல்லாமல் கணவன் என்ற தகுதிக்கே வராத ஆண்குழந்தைகளை தங்களுடன் இணைத்துக் கொண்ட பெண் பிள்ளைகளும் இந்த வாழவெட்டிகள் என்ற குடும்பத்தில் சேரப்போகிறார்கள் என்பது மட்டுமில்லை ”பசி வந்தால் பத்தும் பறந்திடும் நிலைக்குத் தள்ளப்பட இருக்கின்றார்கள்.

இந்த திருமணமான மாப்பிளைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு வரும் பணியில் அவர்களது மாமாக்களும் அன்ரிமார்களும் ஈடுபடுகிறார்கள் என்பது ஒரு கொசுறு செய்தி ஆயினும் அங்கே அனாதராவாக நிற்கும் அந்தக் குழந்தையினதும் குழந்தையின் கையில் கிடக்கும் மற்றக் குழந்தையினதும் வாழ்வுக்கு வழிதான் என்ன?

விதவைகளுக்கான புலம் பெயர் மக்களின் உதவியும் கருத்தாடல்களும்.
மீண்டும் மீண்டும் நான் பதிவு செய்தது போல புலம் பெயர்ந்த மக்களின் நேரடியான அன்றில் மறைமுகமான உதவிகள் எங்கள் நாட்டின் போராட்த்தை முன்னெடுத்துச் சென்றுள்ளது. இன்று அரசியல் தீர்வு காண்பவர்கள் காணட்டும். தமது இருப்புகளை தக்க வைப்பதை நோக்கமாக கொள்ளாது உண்மையில் மக்களுக்கான் தீர்வு ஒன்றை அவர்கள் காணட்டும்;. ஆனால் மேற்சொன்னமாதிரி பல கலாச்சாரப் பிறழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது இதே புலம் பெயர் தமிழரின் தார்;மீகக் கடமையாகும். இதனை நாடு தழுவிய அளவில் என்று இல்லாவிட்டாலும் தங்கள் தங்கள் கிராமங்கள் என்றளவில் ஆவது இதனை முன்னெடுக்க வேண்டும்.

தற்பொழுது தனியா7கவும் சிறய சிறிய அமைப்பாகவும் பலர் உதவிகள் செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த உதவிகள் பற்றி கணணிகளில் கருத்துப்பரிமாற்றத்தில் தொடங்கி, பின் கணனிச் சண்டையாக உருவெடுத்து இறுதியில் எழுத்தாளர் மகாநாட்டுக்கு நடந்தது போல வன்னி மக்களுக்கு உதவ வேண்டுமா? இல்லையா? என கையெழுத்து வேட்டைக்கு போகும் நிலைமைக்கு இன்னோர் தடவை போகாமல் இருந்தால் அது தான் எங்கள் இனத்திற்கு நாம் செய்யும் குறைந்த பட்ச நிவாரணமாகும்.    

தற்பொழுது நடைபெறுவது ஒன்றும் கட்டாய நிதிச் சேகரிப்பு இல்லை. குறைந்த பட்சம் ஒரு கோயிலின் அர்ச்சனைத் தட்டத்தை வேண்ட அளிக்கும் பணம் தான். எனக்கு மற்ற நாடுகள் பற்றித் தெரியாது. ஆனால் டென்மார்க்கில் ஒரு கோயிலில் பழம் பாக்கு வெற்றிலையுடன் ஒரு அலுமினியத் தட்டத்தின் விலை 100 குறோன்கள். இனி அர்ச்சகருக்கு உண்டியலுக்கு என்று ஒரு 50 குறோன்கள். அந்தக் கோயிலுக்குச் சென்று வர பெற்றோல் செலவை 100 குறோன்களையும் (தூர வித்தியாசங்கள் இருந்தாலும்) சராசரியாகப் பார்த்தால்

மொத்தம் 250 குறோன்கள். அதாவது இலங்கையின் பணத்திற்கு சுமார் 5000 ரூபாய்கள்.  அடுப்புகள் எரியும். இங்கு சக்கரைப் பொங்கல் உண்ண முடியாதவாறு பலருக்கு சக்கரை வியாதி அங்கு தேனீருடன் தொட்டுக் குடிக்க சக்கரைக்கே வழி இல்லை.

அவ்வாறேதான் எம் கொண்டாட்டங்கள். இன்று யாரை யார் முந்துவது என நடைபெறத் தொடங்கி விட்டன.

மணவறையின் வடிவமைப்பில் இருந்து கை துடைக்கும் காகிதம் வரை எங்கள் பணம் புகுந்து விளையாடுகின்றது. எங்கள் வாழ்வின் சின்ன சின்ன மகிழ்ச்சிகள் குறைந்து விடாமல் இருக்க இவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் இந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி வீடு வந்ததும் ஊர்ப்புதினங்களைப் பார்க்க இணையத்தளங்களைத் திறந்தால் கால் வயிறும் அரை வயிறும் தான் காட்சி அளிக்கின்றது. அழகிய பைகளில் திருமண மண்டபத்தில் தந்து விட்ட பலகாரத்தை மனம் ஏற்க மறுக்கின்றது. பத்தோடு பதினொன்றாக பிள்ளையார் சிலைகளை அலுமாரியில் அடுக்க மனம் கூசுகின்றது.    என் நெருங்கிய நண்பர் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை.

இந்த நாடுகள் உங்களுக்கு சவ8லால் அள்ளித் தருவதில் சிறிதை  தருகிறது. நீங்கள் சாந்தேப்பையால் அள்ளி அங்குள்ளவர்களுக்கு கொடுத்தால் கொடுங்கள் அதுவே போதும். அதனை மனது முற்றாக ஆமோதிக்கின்றது.

எங்களை நாங்கள்  மீள்பார்வை செய்யாது விட்டால் இலங்கை என்றொரு நாட்டில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்தது. இவர்கள் தென் இந்தியாவில் உள்ளவர்களைப் போல் பழக்க வழக்கம் கொண்டவர்களாய் இருந்தார்கள். தென் இலங்கையின் படைபெடுப்பினால் வடக்கு கிழக்குப் பிரதேசம் அழிந்து விட்டது என உங்கள் பூட்டப்பிள்ளைகளும் என் பேரப்பிள்ளைகளும் சரித்திரப் பாடத்தில் கல்வி கற்க வேண்டிவரலாம்;.

அன்புடன் வி. ஜீவகுமாரன்

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)