வீடு – சிறுகதை

வீடு – சிறுகதை

வீடு – சிறுகதை

ஏதாவது ஒரு கோயிலின் ஒலிபெருக்கியில் இருந்து கேட்கும் சுப்பிரபாத ஒலியுடன் காலைப் பொழுது புலர்வது போலவே இன்றும் புலர்ந்திருந்தது.

இன்று அது பின்வளவு வைரவ கோயிலில் இருந்து என்பதால் அதிக சத்தமாய் இருந்தது.

உயரப் பனையில் நாலு லவுட்ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள் – நாலு திசையையும் பார்த்தபடி.

காகம் வேறு கரைந்து கொண்டு இருந்தது.

மைக்காரனின் அம்பிளிபயருக்குள் தண்ணியைக் கொண்டு போய் ஊற்றினால்தான் அடுத்த பத்து நாளும் பிள்ளைகள் ஒழுங்காக படிக்க முடியும்”குசினிக்கு பின்னால் இருந்து சட்டிகளைக் கழுவி கழுவி குசினியின் பின் தாழ்வாரத்தில் குப்புற அடுக்கி வைத்தாள் சறோ.

சறோ என்னும் சறோஜினிதேவி.

அடுத்த பத்து நாளும்… அதாவது வைரவமடை முடியும் வரை… சறோ வீட்டில் மீன் மற்றும் மாமிச வகையறாக்கள் எதுவுமே இல்லை.

தங்கராசாவும் பிள்ளைகளும் எப்போது பத்து நாள் முடியும் என தினம் தினம் எண்ணத் தொடங்குவார்கள்.

தங்கராசாவுக்குப் பறவாயில்லை. பாடசாலையில் வேலை என்பதால் இதர ஆசிரியர்களுடன் வெளியில் எங்கேயாயின் போனால் ஏதாவது மாமிச மணம் மணக்க சாப்பிடலாம்.

புpள்ளைகளுக்கு அப்படிவில்லை. பாடசாலைக்கு போகும் வழியில் உள்ள கடைக்கண்ணாடிக்குள் இருக்கும் மீன் பொரியல்களையும் குழம்பு வகையறாக்களையும் பார்த்து விட்டு வரும்வழியில் வாசலில் நின்று கன்னத்தில் போட்டு வைரவரையும் பார்த்துக் கும்பிட்டு விட்டு வீடு திரும்ப வேண்டியதுதான்.

காகம் வேறு குசினிக் கூரைக்கும் பின்பக்க வேலிக்கும் மாறி மாறி பறந்து கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தது.

இண்டைக்கு யாரோ வீட்டை வரப் போகினம் போலை கிடக்கு… காலமை தொடக்கம் ஓயாமல் இது வேறு கத்திக் கொண்டு இருக்குது….” பாரத்தில் கிளைகள் தாழ்ந்திருந்த பின்வளவு முருங்கை மரத்தில் இருந்து இலகுவாக முருங்கைக்காயைகள் மூன்றைப் பிடிங்கி கொண்டும் காகத்தையும் திட்டிக் கொண்டு வீட்டுத் தாழ்வாரத்திற்கு வந்தாள்.

சும்மா உந்தக் குந்திலை இருக்கிறது… உந்த முருங்கைக்காய்களை பத்;து பத்துக்காய் கட்டிக் கொண்டு உதிலை சந்தையில் வித்தாலும் சின்ன சின்ன சாமான் சக்கட்டியள் வேண்டலாம் தானே”

இப்ப காகத்தோடை முடிஞ்சு என்னட்டை வாறாய்… ” தங்கராசா வீரகேசரியில் இருந்து தலையைத் தூக்காமலே கேட்டான்.

இப்ப நான் ஏதோ சண்டைக்கு வாற மாதிரிக் கதைக்கிறியங்கள்…. ஓண்டும் சொல்லக் கூடாது… ”

இப்ப உனக்கு என்ன வேணும். இதிலை இருக்;காமல் ஏதாவது வளவுக்கை வேலை செய்து நாலைஞ்சு கண்டோ காலியோ வைச்சு நாலு காசு சம்பாதிக்க வேணும். அது தானே”

ஏன்… அப்பிடி செய்தால் குறைஞ்சோ போகப் போறம்… எத்தினை வாத்திமார் கிளிநொச்சிப் பக்கத்திலை பின்னேரத்திலை வயல் தோட்டம் எண்டு செய்து நல்லாய் இருக்கினம்”

அப்ப அவையிலை ஒருத்தரை நீ கட்டியிருக்க வேணும்”

எல்லாருமாப் போல நல்லாய் இருக்க வேணும் எண்டால் ஏன் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுறியள்;

இண்டைக்கு எங்களுக்கு என்ன குறை?… எல்லாம் இருக்கு… உன்னை வேலைக்கு போகச் சொல்லுறனோ?.. பிள்ளையளுக்கு கழுத்திலை கையிலை ஏதாவது இல்லாமல் இருக்குதுகளே… நல்லது கெட்டது எண்டால் நீ கொண்டு வந்த காணி இருக்கு. பிறகு ஏன் காசு காசு காலமையே குதிக்கிறாய்”

இப்ப நான் குதிக்கிற மாதிரியே இருக்கு?

நான் போயும் போய் உன்னைக்….. சனிஞாயிறும் பள்ளிக் கூடம் திறந்திருந்தால் எவ்வளவு நிம்மதி”சொல்லிக் கொண்டே சேட்டையும் மாட்டிக் கொண்டு சைக்கிளில் ஏறிக் கொண்டான்.

ஒண்டு சொல்லக் கூடாது… உடனை உரு ஏற வாகனத்திலை ஏறிவிட வேண்டியது தான்…”

ஏன் வீட்டுக்கை இருந்து உன்னோடை குத்துப்படச் சொல்லுறியோ…” என்றவாறே சைக்கிளை உந்தினான்.

அது படலையைத் தாண்டி றோட்டில் இறங்கியது.

போங்கோ… போங்கோ.. எங்கையெண்டு பார்த்துக்கொண்டு இருந்த மாதிரி… இனி ஊர் உலாத்திப் போட்டு பின்னேரகைக்கு வாங்கோ”அவனுக்கு கேளாது என்று தெரிந்தும் அவள் புறுபுறத்துக் கொண்டு இருந்தாள்.

ஏனப்பா அப்பாவை சனிஞாயிறு என்று பார்க்காமல் கரிச்சுக் கொட்டுறாய்”

பொத்திக் கொண்டு பள்ளிக்கூட வீட்டு வேலையளைச் செய்யுங்கோ… தரகுக்கு வர வேண்டாம்”

தமக்கையும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மௌனமானார்கள்.

காகம்; கத்திக் கொண்டு இருந்தது.

பொங்கலுக்கு வேண்டின வெடி எதுவும் இருந்தால் கொளுத்து போடடி. உந்தச் சனியன் துலையட்டும்”

சனியன் என்று திட்டிக் கலைக்கிறாய் அம்மா… பிறகு சனிக்கிழமை விரதத்தக்கு அதுகளைததானே கா… கா… என்று கூப்பிடுறாய்”

உங்களை படிப்பிக்கிறதே பிழை…” சறோ மீண்டும் குசினியுள் போய் விட்டாள்.

அல்லது காகத்திடம் தோற்றுவிட்டாள்.

அது இப்போ கிணற்றுக்கட்டிலில் போய்க் குந்திக் கொண்டது.

நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

மீனு… மீனு…” வாசலின் கூவியனின் குரலுக்கு சறோ வீட்டிலிருந்து பதில் வராததால் அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தான்.

அம்மா… நல்ல ஒட்டி கொண்டு வந்திருக்கிறன்… எவ்வளவு போட…”

சறோ எள்ளும் கொள்ளும் வெடித்தது போல வெளியே வந்தாள்.

சீமோன் உனக்குத் தெரியும் தானே… கோயிலிலை கொடியேறிட்டுது.. இனி எங்கடை வீட்டை பத்து நாளும் மச்ச மாமிசம் ஏதும் இருக்காது எண்டு”

தெரியும்….. ஆனால்….”

தெரியாது எண்டு சொல்லப் போறியோ”

இல்லை… தம்பியை மீன் சந்தைக்கை கண்டனான்”

என்ன?

கூழுக்கு எண்டு திருக்கையும் சின்ன நண்டும் வேண்டிக் கொண்டு நிண்டவர்….”

அது யாரும் வாத்திமாருடன் வந்திருப்பராக்கும்…”

இல்லை தனியத்தான் வந்திருந்தவர்”

சரி நான் அவர் வரக் கேட்கிறன்.. நீ போட்டு வா… இனிப் பத்து நாளைக்கு இந்தப் பக்கம் வராதை”

குசினிக்குள் திரும்பினாலும்கூழுக்கு எண்டு திருக்கையும்… சின்ன நண்டும்…” மீன்கார செமியோன் சொன்னதே காதில் கேட்டுக் கொண்டு இருந்தது.

வாத்திமார் எல்லாரும் சனிக்கிழமை தண்ணிப் பார்ட்டி நடக்குது போல என மனதைத் தணிக்கப் பார்த்தாள்.

காகம் இப்பொழுது குசினி யன்னல் கரையோரம் வந்திருந்து கத்தியது.

அப்போது தான் வடித்த சுடு தண்ணியை எடுத்து யன்னலினூடு காகத்தின் மீது கூற்றினாள்.

அது அவளின் அரவரத்தைக் கேட்டவுடனே எழுந்து பறந்து போய் மாதுள மரக் கொப்பில் உட்கார்ந்து கொண்டது.

அதன் மீது சுடு தண்ணி படவேயில்லை.

சறோவின் மனம் தான் கொதித்தது.

வெளியே ஊற்றிய கஞ்சியில் கிடந்த சோற்றப் பருக்கைகளை கொத்தி தின்பதற்காக காகம் கீழே வந்த லாவகாமாக நிலத்தில் கிடந்த சோற்றுப் பருக்கைகளை உண்ணத் தொடங்கியது.

இப்போ அதனுடன் இன்னும் இரண்டொரு காகங்களும்; சேர்ந்து கொண்டது.

காலையில் கொஞ்சம் வாயை அடக்கிக் கொண்டு இருந்திருந்தால் தங்கராசு வீட்டை விட்டு சின்னக் கோவத்துடன் போயிருக்க மாட்டோனே என மனது நினைத்தக் கொண்டது.

வாசலில் மணிச் சத்தம் கேட்டது.

இந்த நேரம் இது தபால்காரனின் மணிச்சத்தமும் இல்லை.

எழுந்து போய்ப் பார்த்தாள்.

தங்கராசுவின் உறவுக்கார மனுசனும் அவர் மனைவியும் வந்திருந்தனர்.

வாங்கோ… காலையிலை இருந்து காகம் கரைஞ்சு கொண்டு இருந்தது”

அவர்கள் கையில் திருமண அழைப்பிதழ் இருந்தது.

வீட்டினுள் அவர்கள் வந்து உட்கார்ந்திருந்தம் சின்னவளைக் கூப்பிட்டு பக்கத்துக் கடையில் ஒரு சோடா வேண்டி வர அனுப்பினாள்.

எல்லா வீட்டையும் குடிச்சுக் கொண்டுதான் வாறம்…. கொஞ்சமாய் தாங்கோ என இருவரும் கல்யாண அழைப்பிதளை சறோவிடம் நீட்டினார்கள்.

அவர் இல்லை… வாசிகசாலையடிக்கு போயிருக்கிறார்… இனி மத்pயானத்துக் கிட்டத்தான் வருவார்…”

வந்திருந்த கணவனும் மனைவியும் ஆளை ஆள் பார்த்தார்கள்.

சறோ என்ன என்பது போல அவர்களைப் பார்த்தாள்.

இல்லை… தங்கராசா எங்கடை ஊர்ப் பக்கம் தலையாட்டிப் போட்டு போறார்… “

தனியவோ… “ சறோவிடம் ஒரு துலாவல் இருந்தது.

ஓம்…”

யாரும் மாஸ்டர்மாரைப் பார்க்கவாய் இருக்கும்”

அங்கை அப்பிடி… இங்கை படிப்பீக்கிற மாஸ்டர்மார் என்று இல்லை… புனிதம் ரீச்சர்தான் இங்கை படிப்பீக்க வாறவா… சரி.. சரி… எங்களுக்கு நோரமாய்ச்சிட்டு… நாங்கள் வாறம்… பிள்ளையகளையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாய் வாங்கோ”

அவர்கள் போய் விட்டார்கள்.

சறோவுக்குள் கொதிக்கத் தொடங்கியது.

மகள்மார் இருவரும் வந்த இருவருக்கும் கொடுத்தது போக மீதியாய் இருந்த சோடாவை பகிர்ந்து குடிக்கத் தொடங்கினார்கள்.

டெய்லி… விசிற்றேஸ் வந்தால் நல்லாய் இருக்குமல்லவா அக்கா…” சின்னவள் கேட்க பெரியவள் சிரித்தாள்.

ஓம் கடைக்காரன் மாதக்கடைசியில் கடன் கொப்பியோடை வந்துநிற்கேக்கை தெரியும்”

ஏன் இப்பிடி எல்லாத்துக்கையும் தலையை ஓட்டிக் கொண்டு…” தங்கை தமக்கையின் காதுக்குள் குசுகுசுத்தாள்.

கோயிலில் இருந்து மத்தியான பூஜைக்கான மணி அடித்துக் கேட்டது.

அவர்கள் வந்திராவிட்டால் இப்பொழுது சமையலை முடித்து விட்டு சறோ இப்போ கோயில் வாசலடியில் நின்றிருப்பாள்.

மீன்காரன் போட்ட முதல் குண்டு.

இப்போ இவர்கள் போட்ட இரண்டாவது குண்டு.

இப்போது காகத்தின் கரையல் சத்தம் கேட்கவில்லை.

மனம் தானே கிடந்து கரைந்தது.

*

அவசர அவசரமாய் சமையலை முடித்து விட்டு குளித்து விட்டு பின்பக்க வெறுங்காணி வழியே கோயிலுக்கு சறோ போய்விட்டாள்.

இப்போ வசந்த மண்டபப் பூஜை நடந்து கொண்டிருந்தது.

இப்போவாவது வரக் கிடைத்ததே என மனம் அமைதி கொண்டாலும் தங்கராசாவையே மனம் சுற்றி சுற்றி வந்தது.

கோயில் கொடியேற்றம் எனத் தெரிந்தும் மாமிசம் வேண்டியிருக்கிறார்…. பக்கத்து ஊருக்குப் போய் இருக்கிறார்… அங்கு இவருடன் படிப்பீக்கும் சங்கீத ரீச்சர் ஒருவர் இருக்கிறார்… அவரின் கணவன் இறந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது… பிள்ளைகள் இல்லை…

கோயில் வாசலில் போட்டிருக்கும் புள்ளி கோலம் போல அவளின் மனமும் கோலம் போட தொடங்கியது.

அத்தனையும் அலங்கோல கோலங்களாகவே இருந்தது.

மனம் கோயிலுடன் ஒட்ட மறுத்தது.

இடைக்கிடை ஆண்கள் பக்கம் திரும்பி திருப்பி பார்த்தாள் – தங்கராசா வந்து விட்டாரா என்று.

அதிகமான திருவிழாக் காலங்களில் தங்கராசாவும் சேர்;ந்து சுவாமி காவுவது வழமை.

இன்று அவன் இல்லாதது மனதுக்கு வெறுமையான இருந்தது.

அல்லது இன்னோர் போருக்குத் தயாராகிக் கொண்டு இருந்தது.

*

செக்கல் பொழுதாகிய பொழுதும் தங்கராசா வீட்டுக்கு வரவில்லை.

பின்னேர பூஜைக்கான மணி கோயிலில் அடித்தாயிற்று.

காலையில் தொடங்கிய சுப்பிரதாத ஒலிபரப்பு மத்தியானத்திற்கு பின் திரைப்பட வசனத்திற்கு மாறி இப்பொழுது கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவர்கள் என பட்டி மன்றம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

முற்றத்தில் மகள்கள் இருவரும் நின்று கயிறு அடித்துக் கொண்டிருந்தார்கள் – மேல் மூச்சு கீழ் மூச்சு வேண்ட… ஒருத்தி இருநூறைத் தாண்டியிருந்தாள்… மற்றவள் இருநூறை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஏனக்கா… கண்ணகி கற்பில் சிறந்தவள் எண்டால் கோவலன் மாதவியிட்டை போகவேணும்”

கொடியில் உலரப் போட்டுக் கொண்டு நின்ற சறோமாதவியள் எங்கை ஆம்பிளையள் அலைஞ்சால் எந்தக் கோவலனும் தடுமாறுவான்கள் தான்”

அந்தக் கணத்தில் சின்னவளின் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தாலும் மனம் தங்கராசுவையும் சங்கீதா ரீச்சரையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்து அருவருப்புபட்டது.

பின்பு அப்படி ஒரு நினைப்பே தனக்கு வந்திருக்க கூடாது வைரவகோயிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

ஆகாயத்தில் பட்சிகள் பல சேர்ந்து தம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தது.

இவை எதையும் ரசிக்கும் மனநிலையில் சறோ இருக்கவில்லை.

தங்கராசாவைப் பற்றிய நினைப்பு என்பதை விட தங்கராசா பற்றிய துப்பறிவிலேயே மனம் நின்றிருந்தது.

கதவு திறந்த சத்தம் கேட்டது.

பக்கத்து வீட்டு பூர்ணம் கையில் கூடை நிறை பூவுடன் வந்தாள்.

உங்கடை வாழையிலை நார் கொஞ்சம் உரிச்சுத் தா… பூமாலை கட்ட வேணும்”

சறோ பின்பக்க வாழைத் தோட்டப்பக்கம் போனாள்.

என்னடி… தங்கராசாவை கோயிலடி காணேல்லை”

பள்ளிக்கூட அலுவலாய் போயிருக்கிறார்…” மழுப்பினாள்.

என்ன சனி ஞாயிறிலும் பள்ளிக் கூடமோ போ… உப்பிடித்தான் அங்கை ஒரு வாத்தி பின்னேர வகுப்பு எண்டு ஒரு பிள்ளையை இப்ப வாந்தி எடுக்க வைச்சிட்டார் எண்டு கச்சேரியிலை கதைக்கினமாம்”

சறோவிற்கு வயிற்றில் புளி வார்த்தது போலிருந்தது.

சரி நான் வாறன்… பெட்டையளை கெதியாய் அனுப்பினாய் என்றால் அதுகளுக்கும் கோயிலிலை வைத்து மாலை கட்டக் கற்றுக் குடுப்பன்” என வாழை நார்களைப் பெற்றுக் கொண்டு பூரணம் வெளியேறினாள்.

அவள் திரித்து விட்டுப் போன நார்க்கயிறு சறோவின் கழுத்தை நெரிப்பது போலத் இருந்தது.

சுவாமி விளக்கை ஏற்றி விட்டு வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள லைற்களைப் போட்டாள்.

நின்றும்… இருந்தும்… வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் கண்கள் மட்டும் அடிக்கடி வாசல் படலை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தது.

நேரம் மெதுவாக நகர்ந்தது.

இது சறோவுக்கு மிகவும் கணத்தது.

சறோவின் அடி மனதுக்கு அறிந்தவரை சறோ தங்கராசாக்கோ தங்கராசா சறோக்கோ எந்தக் குறையும் விடவில்லை.

ஆனாலும் இப்போ அடிக்கடி தங்கராசாh வீட்டை விட்டு வெளியே போகின்றான்.

ஆனாலும் வீட்டுக்குத் திரும்பி வருகின்றான்.

காரணம் மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே வாசல் படலை திறந்து கொண்டது.

தங்கராசாதான்!

ஒரு சனிஞாயிறு… விடுதலை நாள் என்றால்… மனிச சென்மங்கள் வீடு வாசல் மனுசி பிள்ளை குட்டிகளோடை சந்தோசமாய் இருக்க வேணும். இது காலமை ஊர் மேய வெளிக்கிட்டால் பகல் இராத்திரி எண்டு திரிஞ்சிட்டு பட்டியிலை அடைக்கிற நேரத்துக்கு தான் வீட்டை வாறது… என்ன மனுசப் பிறப்புகளோ…”

தங்கராசா எதுவுமே கதையாது சைக்கிளைச் சுவரில் சாற்றி விட்டு கிணற்றடியில் போய் முகம் கால்களைக் கழுவிக் கொண்டான்.

கோயிலுக்கு போனால் சனம் எல்லாம் கேட்குது உன்ரை புருசன் எங்கை எண்டு… எப்பவும் சாமி தூக்க முன் கொம்புக்கு நிற்கிற ஆளைக் காணேல்லை எண்டு….நான் என்னத்தை சொல்லுறது…” பொரிந்து தள்ளியபடியே இரவுப் பூஜைக்கு போக சேலையை மாற்றத் தொடங்கினாள்.

தங்கராசா சாய்மணைக் கதிரையை நிலவு எறிக்குத் தொடங்கிய முற்றத்தில் கொண்டு போய் போட்டான்.

ஏன் கோயிலுக்கு வரேல்லையோ….”

இல்லை…”

ஏன்… மச்சம் மாமிசம் ஏதும் சாப்பிட்டனீங்களோ”

ஓம்”

கடவுளே… ஏன் இந்த மனுசனுக்கு இந்தப் புத்தியைக் குடுத்திருக்கிறியோ… தாருக்கு நான் என்ன பாவம் செய்தனான்… யாருட்டை கண் எங்கடை குடும்பத்திலை பட்டதோ….”

இப்ப ஏன் பழையபடி கத்தத் தொடங்கீட்டாய்?

கத்தாமல் என்ன செய்யுறது… காலமை போன மனுசன் இப்ப திரும்பி வரேக்கை… அதுவும் பின்வேலிக்கை இருக்கிற கோயிலிலை கொடியேற்றம்… மீன் கடைக்கை நிற்கிறியள் எண்டு சனம் சொல்லுது”

நீ காலமையே கத்தினதாலை தான் வீட்டை விட்டுப் போனான்”

இங்கை நான் கதைச்சால் கத்துறது.. வேற ஆக்கள் கதைச்சால் சங்கீதமாய் இனிக்குதோ”

தங்கராசாக்கு ’திக்’ என்றது.

அப்பிடியில்லை… இது வீடு போலை இல்லை… ”

அப்ப இன்னும் பெரிசாய் கட்டுங்கோவன்….”

பெரிசாய் கட்டினாப் போலை என்ன மாறப் போகுது?…. வீடு எண்டது ஒரு கோயில் போல அமைதியாக இருக்க வேணும்… முன் வாசலிலையோகோஹோலுக்கையோ.. பின் விறாந்தையிலோ… எங்கை இருந்தாலும் அமைதியாய் தியானம் செய்யற மனநிலை இருக்க வேணும்… எங்கடை வீடு எப்பவும் பம்பர் வந்து விழுற ஒரு யுத்த பூமி போலை கிடக்கு”

சறோ திடீரென தனது கத்தலை நிறுத்தினாள்.

வாழ்க்கையில் முதல் தடவை தங்கராசு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.

தங்கராசுவின் மனதில் மத்தியானம் புனிதம் ரீச்சர் வீட்டில் ஒடியல் கூழும்…. அதனுள் சுவைத்த திருக்கையும் சின்ன நண்டும்மாலையில் கமுக மரங்களின் நிழலில் கிணற்றங்கட்டில் இருந்து குடித்ததேனீரும் சாப்பிட்ட கொழுக்கட்டையும் இப்போதும் இனித்தது.

*

அடுத்த நாள் காலையில் அவர்கள் வீட்டில் கரையும் காகத்தின் சத்தத்தைக் காணவில்லை.

வீட்டுக்கு வெளியேயுள்ள மின்கம்பத்தின் கீழ் அது செத்து இருந்தது.

பல காகங்கள் வந்து சுற்றி நின்று கத்த முன் அதனை எடுத்துக் கொண்டு பின் வளவினுள் சறோ கிடங்கு வெட்டி அதனுள் போட்டு மூடினாள்.

முதன்நாள் சுடுகஞ்சியை அதன்மேல் ஊற்றியதற்காக மனம் வேதனைப்பட்டது. 

 

 

 

1 Comment on “வீடு – சிறுகதை

  1. கோயில் கொடியேற்றம் எனத் தெரிந்தும் மாமிசம் வேண்டியிருக்கிறார்…. பக்கத்து ஊருக்குப் போய் இருக்கிறார்… அங்கு இவருடன் படிப்பீக்கும் சங்கீத ரீச்சர் ஒருவர் இருக்கிறார்… அவரின் கணவன் இறந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது… பிள்ளைகள் இல்லை…

    கோயில் வாசலில் போட்டிருக்கும் புள்ளி கோலம் போல அவளின் மனமும் கோலம் போட தொடங்கியது.

    இந்த வரிகளுக்குள்… கதையின் கரு…
    வரிகள்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)