வயதுக்கு…. (சிறுகதை) – வி. ஜீவகுமாரன்

வயதுக்கு…. (சிறுகதை) – வி. ஜீவகுமாரன்

”என்ரை பிள்ளைக்கு எனக்கு விரும்பிய மாதிரி சாமத்திய சடங்கு செய்து பார்க்கிறதுக்கு எவ்வளவு கனவோடை இருக்கிறன் தெரியுமே. ஏன்தான் இந்த கண் கெட்ட கடவுள்கள்; கண்களைத் திறக்குதுகள் இல்லையோ தெரியாது. இங்கை இருக்கிற எல்லா தெய்வங்களுக்கும் என்ன குறைவிட்டனான் சொல்லுங்கோ பார்ப்பம்?”

”ஓமக்கா… இந்த நாட்டிலை எங்கடை பிள்ளைகளின்ரை கலியாணங்கள்; எங்கடை விருப்பத்தின்படி நடக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால்… சாமத்தியச் சடங்கு மட்டும்தான் எங்கடை விருப்பத்தின்படி நடக்கும்”

”அப்பிடிச் சொல்லுங்கோ பராசக்தி அன்ரி…அதுவும் வாயை மூக்கை பொத்தினால் திறக்கத் தெரியாமல் டென்மார்க்கு வந்ததுகள் எல்லாம் கார்கள் ஓடிக்கொண்டும் தலையை கிறில் வெட்டிக் கொண்டு திரிஞ்சு கொண்டு தங்கடை பிள்ளைகளின்ரை விழாக்களை தடல்புடலாகச் செய்யேக்கை ஊரிலேயே அந்தமாதிரி வாழ்ந்த நாங்கள் எப்படி எல்லாம் செய்ய ஆசையிருக்கும்…. ஆனால் அவளுக்குத் தான்…”

ஹோலில் இருந்து தாய் கமலவதனியும் பக்கத்து வீட்டு பராசக்தி அன்ரியும் பேசிக் கொண்டிருந்தது அறையினுள் இருந்து படித்துக் கொண்டிருந்த ஸ்ரீவேணிக்குத் தலைவலியைக் கிளப்பியது.

”இந்த இரண்டு பேருக்கும் இதைவிட்டால் வேறு கதையே இல்லை” என மனதுள் நொந்தபடி போய்க் கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டாள்.

தலையணை நனைந்தது.

கமலவதனிக்கு தனது மகள் பதினைந்து வயதுக்கு வந்தும் ருதுவாகவில்லை என்பதுதான் கவலை.

”இப்பெல்லாம் முந்தி எங்கடை காலம் மாதிரி இல்லையக்கா… இங்கை ஒன்பது பத்து வயதிலேயே குந்தி விடுதுகள். எங்கடை காலத்திலை தான் 14…15…16 என்று இழுத்துக் கொண்டு போகுங்கள்;.”

கமலவதனியின் கவலைக்கு பராசக்தி அன்ரி கொஞ்சம் அதிகமாகவே சாம்பிராணியை அள்ளிப் போட்டாள்.

புகைக்க தொடங்கியது – ஹோலினுள் பராசக்தியுடன் பேசிக் கொண்டிருந்த கமலவதனிக்கும் அறைக்குள் படுத்திருந்தத ஸ்ரீவேணிக்கும் மூச்சு முட்டியது.

”கவலைப்படாதை அக்கா… ஒருக்கா அம்மனிட்;டை கூட்டிப் போ அக்கா. காரிலை கடல் கடந்து போனால் ஆக நாலு மணித்தியாலம் தானே. சக்தியுள்ள அம்மன் எண்டு சுவிஸ் கனடா சனம் எல்லாம் வந்து போகுதுகள். அம்மன் மனுசி ஒருக்கா தேசிக்காயால் தலையில் இருந்து கால்வரை தடவி வெட்டி குங்குமம் பூசி தலையிலை தேய்ச்சால் எல்லாம் சரியாய் வரும் அக்கா”

ஸ்ரீவேணிக்கு உடம்பு முழுவதும் மயிர்கொட்டிப்புழு ஊர்வது போலப் பட்டது.

”பராசக்தி அன்ரி! நீங்கள் பாருங்கோ என்ரை பிள்ளை வயதுக்கு வரேல்லை என்று காதுபடப் பேசின சனம் எல்லாம் மூக்கிலை கை வைக்கிற மாதிரி நான் என்ரை பிள்ளையின்ரை சாமத்தியச் சடங்கு செய்து காட்டுறன்”

”நீங்களும் பிள்ளையை கெலிகொப்டரிலை கொண்டு போய் மண்டபத்திலை இறக்கப் போறியளோ”

”சீ… சீ… அப்பிடி எல்லாம் செய்ய மாட்டன். மலிஞ்ச மரவள்ளிக் கிழங்கோடையும்… பொரிச்சு தாழிச்சு செத்த கத்தரிக்காயோடையும்… இரவிரவாய் கண்முழிச்சு சமைக்காமல் எல்லாம் நோர்த் இந்தியன் ஹோட்டல் ஓடர் சாப்பாடுதான். சேர்விங்;குக்கும் வெள்ளைக்காரப் பொடியளுக்கு பட்டு வேட்டி எடுக்க இருக்கிறம்.”

”வேறையக்கா?”

”நேரம் வரேக்கை அந்த நேரத்திலை எது லேட்டஸ்சோ அப்ப பார்ப்பம்”

மனதினுள் சுவிஸ் மணவறை… ஜேர்மனி மேளம்… நோர்வே ஐயர்… இலண்டன் பாட்டுக் கோஷ்;டி… ஐதராபாத் நெக்கிலஸ்கள்… டில்லி சுடிதார்கள்…. பம்பாய் பலகாரங்கள்;… குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து விதம் விதமான இறைச்சி – மீன் ருசியுடன் காயாத சோயா இறைச்சி…என அடுக்கி கொண்டு போனாலும் பரர்வதி அன்ரிக்கு கூட நிகழ்ச்சி நிரலை வெளியிடாமல் இருப்பதில் கமலவதனி மிகக் கவனமாய் இருந்தாள்.

செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தியாக பராசக்திஅன்ரி உலாவந்து விடுவார் என்பதில் கமலவதனி எச்சரிக்கையாகவே இருந்தாள்.

இனி கமலவதனியிடம் எதுவும் கறக்க முடியாது என்று உணர்ந்த பராசக்தி அன்ரியும்; ”இனி வாணி ராணி தொடங்கிற நேரம் வந்திட்டுது. நான் வாறன் அக்கா. ஆனால் சொல்லிப் போட்டன் பிள்ளைக்கு பால்ரொட்டியும் சீனியரிதரமும் நான்தான் செய்து தருவன்… என்ரை கைப்பக்குவத்துக்கு ஒருத்தரும் செய்யேலாது கண்டியோ” சொல்லிக் கொண்டே வாசலில் கழட்டி வைத்த செருப்புகளை மாட்டிக் கொண்டு வீதிக்கு இறங்கினாள்.

நிச்சயமாக பராசக்தி அன்ரி இன்னும் யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய் அங்கும் ஏதோ கிடைப்பதை மென்றுவிட்டுத்தான் தன் வீட்டுக்கு போவார் என கமலவதனிக்கு நன்கு தெரியும்.

பராசக்தி அன்ரி வீட்டை விட்டுப் போய் விட்டா என்பதனை உறுதிப்படுத்திய ஸ்ரீவேணி அறையிலிருந்து மிகக் கோபமாக தனது புத்தகம் ஒன்றைக் ஹோலினுள் எறிந்தாள்.

கொஞ்சம் விலத்தியிருந்தால் மீன் தொட்டி நொருங்கியிருக்கும்.

தாய் திரும்பிப் பார்க்க முதல் பொரியத் தொடங்கினாள்.

”அம்மா! உங்களுக்கு ஆயிரம் தடவை சொல்லிப் போட்டன்… என்ரை சாமத்தியச் சடங்கு கதை ஒருத்தரோடையும் கதைக்க வேண்டாம் எண்டு. பஸ்சுக்கு நிக்கேக்கை கூட சனமே கேட்டக் தொடங்கீட்டுது – வீட்டிலை ஏதும் விசேசம் வருமோ எண்டு…. உங்கடை தமிழ் சனத்தை நினைக்க வெட்கக் கேடாய் கிடக்குது”

”சனம் எண்டால் நாலும் கேட்கும் தானே….”

”ஓம்… பிள்ளை சாமத்தியப் படேல்லையோ… பிறகு பிள்ளைக்கு கலியாணம் பேசேல்லைNயுh… பிறகு பிள்ளை இன்னும் பிறக்கேல்லையோ… இப்பிடிக் கேட்டு கேட்டு ஒவ்வொன்றுக்கையும் தள்ளி தள்ளி விட்டுக் கொண்டு… தாங்களும் சந்தோசமாய் இல்லாமல்…. மற்றவனையும் சந்தோசமாய் இருக்க விடாமல்…”

”உலகம் என்றால் அப்பிடித்தான் பிள்ளை”

“உங்கடை அந்த உலகம் குழந்தைகள்… பச்சை மண்ணுகள்… சின்னப் பி;ள்ளையள்… எதையும் விட்டு வைக்காதுகள்… எல்லா வீட்டுகளுக்கையும் நுழைஞ்சு நுழைஞ்சு மோப்பம் பிடிக்கிறது தான் உங்கடை உலகங்கள் எண்டால் அது எதுவுமே எனக்கு வேண்டாம் அம்மா”

“நீ இப்ப படிக்கிற திமிர்…. அதுதான் அதிகமாய் கதைக்க தொடங்கீட்டாய்”

“படிக்காட்டியும் உங்கடை மானம் எல்லாம் போச்சு எண்டு நீங்கள் தானே தலைதலையாய் அடிப்பியள்”

ஸ்ரீவேணியின் குரல் ஓங்கிக் கொண்டு போய்க் கொண்டு போன பொழுது தகப்பன் வேலையால் வீட்டினுள் நுழைந்தார்.

“என்ன தாயும் மகளும் சண்டை போலை….”

“நான் ஏன் சண்டைக்கு போறன்… எல்லாம் உங்கடை மகள்தான்”

“என்னைப் பார்த்து சொல்லுங்கோ அம்மா… பராசக்திஅன்ரியோடை நீங்கள் கதைச்சுக் கொண்டு இருந்ததுகள் எவ்வளவு அநாகரிகமான வேதனையான விடயங்கள்…”

“இதிலை என்ன அரியண்டம்… அவமானம்…”

“கமலா நீ கொஞ்சம் அமைதியாய் இரு பார்ப்பம்” கணவன் குறுக்கிட்டார்.

“முதலிலை அவளை பெரியபிள்ளையாகச் சொல்லுங்கோ… நான் அமைதியாய் இருக்கிறன்”

தாய் பத்திரகாளியானாள்.

“அப்பா” என ஸ்ரீவேணி ஓடிப்போய் தகப்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

*

அன்றிரவு யாரும் சாப்பிடவே இல்லை.

ஒருவருடன் ஒருவர் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை.

அவரவருக்கான நியாயங்களுடன் அவரவர்கள் நின்றிருந்ததால் எவருமே இறங்கி வந்து ஒருவருடன் ஒருவர் கை குலுங்கிக் கொள்ளும் மனநிலையில் எவரும் இருந்திருக்கவில்லை.

தாயும் தந்தையும் தமக்குள் மெதுவாக பேசியபடியே நித்திரையில் ஆழ்ந்து போயினர்.

ஆனால் ஸ்ரீவேணியோ ஒரு புறம் தன் மனத்திடத்துடனும் மறு புறம் தாய் – தந்தை – தன் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுடனும்;… திணிப்புகளுடனும்; போராடிக் கொண்டிருந்தாள்.

கண்ணைக் கட்டி இருட்டினுள் பலர் இழுத்துக் கொண்டு போகுமாப் போல் இருந்தது.

காடுகள்… மலைகள்… ஆறுகள்… பின் வானம் வரை வளர்ந்திருந்த ஒரு பெரிய விருட்சத்தில் அவளை கயிறு கட்டி ஏற்றுவது போலவும்… பின்பு வானத்தின் உச்சியில் முகில்கள் மேல் நிற்பது போலவும்… ஸ்ரீலங்கர் பயணிகள் விமானம் ஒன்று தன்னை நோக்கி வருவது போலவும் … அதன் சிறகுகளில் தாயும் பராசக்திஅன்ரியும் உட்கார்ந்து இருப்பது போலவும்… ஸ்ரீவேணியின் சாமத்தியச் சடங்கு பற்றி கதைத்துக் கொண்டு இருப்பது போலவும்…. இதுவரை நேரமும் நின்றிருந்த முகில்கள் கலையத் தொடங்க அவள் கால்வைக்க இடம் இல்லாமல் கீழே பூமியைப் நோக்கி வருமாப் போல இருக்கப் பயந்து குழறினாள்.

தாயும் தகப்பனும் பயந்து அவளது அறைக்கு ஓடிப் போய்ப் பார்த்தார்;கள்.

ஸ்ரீவேணி நிலத்தில்விழுந்து கிடந்தாள்.

பெற்றார் வந்த பொழுது நடுநடுங்கியபடியே எழுந்தாள்.

கால்கள் வழியே இரத்தம்.

கட்டில் துணி விரிப்பிலும்.

தாய் அம்மன் கோயில் பக்கம் திரும்பி இருகரத்தையும் தலைமேல் வைத்து “அம்மாளாச்சியே என்ரை பிள்ளைக்கு நல்ல வழியைக் காட்டிப் போட்டாய்” என கும்பிட்டாள்.

ஸ்ரீவேணி மேலும் அழத் தொடங்கினாள்.

*

மனோதத்துவ வைத்தியாரின் மேசையைச் சுற்றி ஸ்ரீவேணி, பெற்றோர் மற்றும் பாடசாலை ஆசிரியை ஆகியோர் இருந்தார்கள்.

தன் குரலைச் செருமியபடி பாடசாலை மனோதத்துவ வைத்தியர், “ஒருவகையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் ஸ்ரீவேணி வீட்டினுள் மனப்போராட்டத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்திருப்பினும் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் அவளுக்கு நல்ல வழியையையே காட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாகவே அவள் இத்தனை நாட்களும் வீட்டினுள் வாழ்ந்திருக்கின்றாள்…. இனி அப்படிவாழத் தேவையில்லை”

பெற்றார்கள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

ஸ்ரீவேணி தலையை குனிந்து கொண்டு விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

வகுப்பாசிரியை அவளை தன்நெஞ்சினுடன் அணைத்துக் கொண்டு அவளின் தலையை தடவிக் கொடுத்துக்; கொண்டு இருந்தாள்;.

கமலாதேவிக்கு சரி தகப்பனுக்குச் சரி எதுவுமே புரியவில்லை.

“நீங்கள் இருவருமே நல்ல மனிதர்கள் என்பதில் எந்த சந்தேகமே இல்லை. ஆனால் அவளுக்கு நல்ல பெற்றார்களாக நடந்து இருக்கின்றீர்களா என்ற சந்தேகம் எங்கள் பாடசாலைக்கு ஏற்பட்டுள்ளது”

பெற்றார் இருவரும் நிமிர்ந்து மனோதத்துவ நிபுணரை பார்த்தார்கள்.

“நீங்கள் மிக ஆழமான நம்பிக்கை தரும் கலாச்சாரப் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை”.

தற்பொழுது பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

“உங்களின் கலாச்சாரப் பின்னண பற்றி விமர்சிக்கவோ அல்லது உங்களின் நம்பிக்கைகளில் தலையிடவோ எங்களுக்கு எந்த தகுதியோ உரிமையோ இல்லை. ஆனால் நீங்கள் அதுகளை மிகத் தவறாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறியள் என நினைக்கின்றோம். அதுவே….”

அறையினுள் கொஞ்சம் அமைதி.

“அதுவே…” விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்… “அதுவே உங்கள் பிள்ளைக்கு உடன்பாடில்லாத விடயமாக மாறும் பொழுது நீங்கள் அதனை மதிக்காமல் பிள்ளைகளுடன் ஒரு உரிமைப் போர் நடாத்த தொடங்கி இருக்கின்றீர்கள்”.

“என்ன சொல்லுகின்றீர்கள் டாக்டர்” தந்தை டெனிஸ் மொழியில் கேட்டார்.

”உங்கள் நாட்டில் பிள்ளைக்கு வழச்சடங்காக…. பிள்ளையை பெரியவளாக ஆற்றுப்படுத்துவதற்கு செய்த ஒன்றை இங்கு பிள்ளையை மறந்து… அதுக்கு அந்த நேரம் கொடுக்க வேண்டிய அரவணைப்பை மறந்து ஆடம்பரத்தை முன்னிலைப்படுத்துகின்றீர்கள்.”

ஒரு கணம் தனது பேச்சை நிறுத்தி விட்டு பெற்றோரை ஆழமாக நோக்கியபடி தொடர்ந்தார்.

“யெஸ்… மூன்று வருடங்களுக்கு முதல் உங்கள் மகள் வயதுக்கு வந்த பொழுதும் உங்கள் சடங்குகள் சம்பிருதாயங்களுக்கு பயந்து அந்தப் பிள்ளை உங்களுக்குச் சொல்லேல்லை…”

“அடிப்பாவி…” பெற்றோர் அதிர்ந்து போனார்கள்.

“தன் அறையையே தனக்கு ஒரு சிறையாக அமைத்துக் கொண்டு பெற்றோர் ஆகிய உங்களுக்கு சாதாரண ஒரு விடயத்தை சொல்லப் பயந்து தனக்குள் தான் வாழத் தொடங்கி இருக்கினறாள்;…. “

மனோதத்துவ நிபுணர் தொடர்ந்தார்.

“இங்குள்ள சக மாணவிகளுக்கு நிகழும் ஒரு சாதாரண நிகழ்வை நீங்கள் ஒரு நாடு சுதந்திரம் பெற்றது போல ஒரு நகரத்தையே திரும்பிப் பார்க்க வைக்கிற வகையிலை நடத்துறியள். ஸ்ரீவேணிக்கு அதிலை கொஞ்சமும் உடன்பாடில்லை என வகுப்பில் பல தடவைகள் வகுப்பாசிரியருக்கு கூறியிருக்கின்றாள். ஆனால் வீட்டில் கொடுத்த நெருக்கங்கள்; அவளை மனோநோயாளியாக்கி விடக்கூடிய எல்லைக் கோட்டில் கொண்டு வந்து நிற்க வைத்திருக்குது.”

பெற்றார்கள் இருவரும் உறைந்து போய் விட்டார்கள்.

“இந்த நாட்டுச் சட்டத்தின்படி உங்கள் பிள்ளையை இந்தக் கணமே அரசாங்கம் பொறுப்பேற்க முடியும். ஆனால் நீங்கள் வேண்டும் என்று எதையும் செய்யாததால் அவளை உங்களுடன் இருக்க அனுமதிக்கின்றோம்; – இனிமேல் நல்ல பெற்றாராய் இருப்பீர்கள் என்று நம்பிக்கையில்”

பெற்றார் இருவரும் அவரை கை எடுத்துக் கும்பிட்டார்கள்.

“நாங்கள் பிள்ளைக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கமாட்டம் ஐயா”

பின்பு ஸ்ரீவேணியை அணைத்தபடி வீட்டிற்குப் போனார்கள்.

*

தொடர்ந்து உயர்தரம்… பல்கலைக்கழகம்…. அங்கு நடைபெறும் பரீட்சைகள் அனைத்திலும்… ஸ்ரீவேணி முதலிடத்தில் வந்து கொண்டு இருந்தாள்.

ஸ்ரீவேணியின் எளிமை நற்பண்புகள் அனைத்தும் திருமண வயதை நெருங்கும் ஆண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் கண்களில் படத் தொடங்கின.

சிலர் ஸ்ரீவேணியின் சாதகம் நட்சத்;திரம் மேலாக செவ்வாய் தோஷம் இருக்கின்றதா போன்ற விபரங்களை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

“வீட்டுக்கு விலக்கு வராத பொம்பிளைப் பிள்ளையைக் கட்டி உங்கடை பிள்ளைக்கு மலடன் என்று பெயர் எடுக்கப் போறியளோ”

பராசக்தி அன்ரி பல இடங்களில் சொல்லிக் கொண்டு திரிகின்றாவாம்.

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)