யாவும் கற்பனை அல்ல….
எல்லோரும் சொல்வது போல முதல் நூல் என்பது ஒரு பிரசவவலி என்றோ… வயிற்றினுள் பெரிய பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு என்றோ சொல்லும் அனுபவம் எனக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை.
அதற்கு காரணம் என் முதல் புத்தகம் வெளிவந்தது எனது 50 வயதில்.
எனவே வயதும் அதனுடன் இணைந்த வாழ்வனுபவமும் இணைந்து அந்த பெரிய பட்டாம் பூச்சியை எனது வயிற்றினுள் இருந்து வெளியேற்றியிருக்கலாம்.
மேலாக ஒரு பதிப்பாளரைத்தேடி அவர் எனது புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற நிலையில் இருந்து விலகி…முதல் நூலை வெளியிடும் பல எழுத்தாளர்கள் போல எனது முதலில் அந்த நூலை வெளியிடும் நிலைதான் இருந்தது.
2008ல் இலங்கையில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் ஆகையால் இந்தியாவில் உள்ள ஒரு பதிப்பகம் மூலம் அதனைக் கொண்டு வருவதில் பல செயல்முறைக் கஷ்டங்களை தவிர்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.
ஒரு நூலின் உள்ளடக்கம் கணதியாக இருந்தாலும் அதன் தோற்றம் தாள்களின் தராதரம் உள்அமைப்பு மிகத்தரமானதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். எனவே ஜனராஞ்சமான புத்தக வெளியீட்டார்களை நெருங்காமல் என்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களைத் தேடினேன். அவ்வகையில் என்னைப் போல இலங்கைப் பின்னணியுடன் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து கொண்டு சென்னையில் பதிப்பகத்தை நடாத்திக் கொண்டிருந்த மித்ரா பதிப்பகத்தையும் அதன் நிறுவனர் எஸ்.பொ.வையும் நாடினேன்.
இலங்கை இலக்கிய உலகில் என்னைப் பெரிதாக அறிந்திராத திரு.எஸ்.பொ. என்னை வியப்புடன் பார்த்தார்.
அன்று பின்னேரம் அவர் மதுரை செல்ல ஆயத்தமாய் இருந்தார்.
“இந்த புத்தகத்திற்கு நீங்கள் முன்னுரை எழுதித் தரவேண்டும்”, என்று கேட்பதற்குப் பதிலாக, ” இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள். அதன் பின்பு உங்களுக்கு முன்னுரை எழுதத் தோன்றின் எழுதித் தாருங்கள்”, என்றேன்.
“சரி”, என்று ஒரு புன்முறுவலுடன் அந்த தொகுப்பை தனது பயணத்தின் பொழுது எடுத்துச் சென்றார்.
மூன்றாம் நாள் அவர் பயணத்தால் வந்து தொலைபேசி எடுத்தார்.
“காலை 7 மணிக்கு வாருங்கள் காலை உணவை பதிப்பகத்தில் என்னுடன் வைத்துக் கொள்ளலாம்”; என்றார்.
சரி! முன்னுரை தயாராகப் போகின்றது என்று முடிவாயிற்று.
கதைகளை பக்கம் பக்கமாக என்னுடன் விமர்சித்தார்.
அன்று பகல் மித்ரா பதிப்பகத்துக்கு வந்த திரு. செங்கையாழினிடம் எனது வெள்ளம் என்ற சிறுகதையை எடுத்துக் கொடுத்தார்.
அவரும் மிகவும் பாராட்டியபோது எனது புத்தகம் வெளிவந்தது போல மகிழ்ந்தேன்.
திரு. செங்கையாழியனை வாழ்வில் முதல் முதல் சந்தித்ததும் அன்றுதான்.
அவர் மறைந்த பொழுது ஒரு முற்றத்து நெடிய உயர்ந்த ஒற்றைப் பனை இந்த வடலியை வாழ்த்தியதை அன்றதான் உணர்ந்து கொண்டேன் என எனது நினைவை அவர் அஞ்சலி மலரில் பகிர்ந்து கொண்டேன்.
திரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன்இ திரு. எஸ். பொ.இ விரிவுரையாளர் திரு. கந்தையா சிறிகணேசன்இ திருமதி ரேணுகா தனஸ்கந்தா ஆகியோரின் முன்னுரைஇ அணிந்துரைஇ மதிப்புரைஇ வாழ்ந்துரையுடன் அது தயாரானது.
சிறுகதைகள் – கவிதைகள் – பிறப்பு முதல் இறப்பு வரையிலான “காலங்களும் கருத்தோட்டங்களும்” என்ற உரைவீச்சு நடை என மூன்றும் இணைந்த அந்;த நூலின் தொகுப்பு வேலைகள் ஆரம்பமான பொழுது அந்த அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் டென்மார்க்கில் இருந்து மின்னஞ்சல் வழியாக இணைந்து பிழை திருத்தம் மற்றும் வடிவமைப்பில் இணைந்து பணியாற்றினேன்.
அது மிக மிகச் சுவையான அனுபவம்.
இரு பகுதியும் தமிழில் தான் கதைத்தாலும்… அதனைப் புரிந்து கொள்ளும் விதமும்… பல தபபான விளக்கங்களும்…. சரியானதைப் பிழையாக்கி மீண்டும் பிழையாக்கிய அனுபவங்கள் மறக்க முடியாது.
இறுதிப் பதிப்புக்கு முதல்நாள் பகல் ஒரிடத்தில் “பேராசிரியரின் கண் முன்னே அந்தச் சிறுவன் கோணிப்பையுடன் தோன்றினான்” என்பதை “பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்கு உயர்ந்து சென்றான்”; எனத் திருத்தி விட்டு அடைப்புக் குறியினுள் (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என எழுதி அனுப்பியிருந்தேன். அதன் அர்த்தம் எஸ.பொ. ஒரு தரம் பார்த்து அதனை அங்கீகரிக்கட்டும் என்று.
அன்று இரவு இறுதிப் பதிப்பிற்கு போவதற்று முதல் முதல் புத்தகமும் எனக்கு வந்திருந்தது.
நடுநிசியைத் தாண்டி ஏதாவது பிழைகள் இருக்கா எனத் தேடிக் கொண்டிருந்தேன்.
“பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்கு உயர்ந்து சென்றான்”; (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என இருந்தது.
இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும் என்பதை தட்டச்சுக்கு பொறுப்பானவர் நீக்கவில்லை.
ஏமாற்றம் – கோபம் இரண்டையும் தாண்டி நான் சிரிக்கத் தொடங்கினேன்.
பின்பு இதர பிழைகளும் திருத்தப்பட்டு இரண்டு நாள் பிந்தி புத்தகம் அச்சாகியது.
முதல் புத்தகத்தின் முதல் பிரதியை கொரியரில் அனுப்பவா என பதிப்பாளர்கள் கேட்டனர்.
நான் 300 புத்தகத்தையும் முழுதாக அனுப்புங்கள் என்று சொன்னேன்.
அவர்களுக்கு வியப்பாய் இருந்திருக்கலாம் – தன் முதல் புத்தகத்தை கையில் எடுத்துத் தடவி தடவிப் பார்த்து தன் குடும்பம் சுற்றம் எல்லாம் காட்டி மகிழும் உலகத்தில் இப்படி ஒரு எழுத்தாளச் சன்னியாசி இருப்பாரா என்ற வியப்பாய் இருக்கலாம்.
ஆம்!
இன்று வரை என்ன விருதுகள் கிடைத்தாலும் எத்தனை விருதுகள் கிடைத்தாலும் எழுத்துலகில் ஒரு சன்னியாசியாக இருக்கவே பிரியப்படுகின்றேன்.
அடுத்து புத்தக அறிமுகவிழா!
இதிலிருந்து நான் தப்ப முடியவில்லை.
எனது 50 வயதை ஒட்டி சுமார் 50-75 நண்பர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகாலச் சம்மர் கிறில் மாலையில் (இறைச்சி வாட்டி உண்ணும் விழா) எனது நூலை திரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன் அறிமுகம் செய்து வைத்தார்.
எனது தயார் அதனைப் பெற்றுக் கொண்டார்.
அதனையடுத்து புத்தக வெளியீடு பெரிதளவில் ஒழுங்கி செய்யப்பட்டது.
இந்தற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது டென்டார்க்கில் வானம்.டிகே என்ற இணையத்தளத்தில் சித்திரங்களுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்த இளையோர்கள் வர்ண நிறத்pல் தங்கள் கவிதைகளை ஒரு புத்தகமாக்க எனது உதவியை நாடினார்கள்.
எனது வழிநடத்தின் மூலம் மித்ரா பதிப்பகத்தினரைக் கொண்டு “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற 100 வீத வர்ண நிறத்தாள்களில் வித்தியாசமான ஓர் அளவில் அது வெளியாகியது.
புலம் பெயர் தமிழரின் இளைய சந்ததியின் கவிதைத் தொகுப்பு என்ற பெருமையை அது பெற்றது.
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அது மிகவும் கணதியான நூலாக கணிக்கப்பட்டு பல இடங்களில் அதற்கான விமர்சனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலண்டனில் இருந்து நூல்தேட்டம் திரு. என். செல்வராஜாஇ தீபம் தொலைக்காட்சியில் இருந்து திரு. திருமதி. சாம் பிரதீபன்இ மற்றும் திருமதி. சிவகாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
எனது முதல் நூல் வெளியீட்டுடன் அடுத்த தலைமுறையினரையும் என் கையுடன் கை கோர்த்து அவர்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதை இன்றும் என்னுள் நினைத்து மகிழ்வுறுகின்றேன்.
ஆம்!
“மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்பது “யாவும் கற்பனை அல்ல”.
இந்த வாக்கியம் என் முதல் கதைப்புத்தக விழாவில் இயல்பாகவே அமைந்தது.
இது என் இறுதிக் கதைப்புத்கம் வரை தொடர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.
அன்புடனும் நட்புடனும்
வி. ஜீவகுமாரன்.
Skriv et svar