மானிப்பாய் இந்துக் கல்லூரி – சில ஆட்டோகிராவ்கள்

மானிப்பாய் இந்துக் கல்லூரி  – சில ஆட்டோகிராவ்கள்

mhc

 

 

 

 

 

 

(மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பசுமையான நினைவுகளுடன் என்னையும். . .எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் எனது நண்பர்களையும் இணைத்துக் கொண்டிருக்கும் அந்த வாகீசர் மண்டபம். . . செம்பருத்தி வேலிகள். . . மைதானத்தின் கரையில் நிற்கும்புளியமரம். . .அதன் பின்னால் நடந்து செல்லும் மகளிர் கல்லூரி மாணவிகள். . . இவைகளை உங்களுடன்ஆட்டோக்கிராவ்களாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்)

பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செம்பருத்தி தடியும்;

அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

பௌதிக வகுப்பு.


பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம்.


வீட்டு வேலைகள் செயய் hத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செம்பருத்திதடி பிடிங்கி வர அனுப்பினார்.

அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும். மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ ”ஜீவகுமாரன் இவர்களை தண்டிப்பதற்காக ஒரு தடி எடுத்து வாரும்” என்பார் – அந்த வகையில் தான் அவரது தமிழ் உச்சரிப்பு இருக்கும்.

பின் வளவில் வரிசையாக நின்ற செம்பருத்தி மரத்தி மரம் ஒன்றில் இருந்து ஓர் ஆள் உயர தடியைப் பிடுங்கி அதன் கிளைகள்… இலைகளை அகற்றிய பொழுது வழமையான எனது குறும்புத்தனம் எனக்குள் விழித்துக் கொண்டது.

என்னையும விட உயரமான அந்த நீண்ட செம்பருத்தி தடியின் நுனியில் இருந்த மூன்று செம்பருத்தி பூக்களை மட்டும் விட்டு விட்டு மிகுதி அனைத்தையும் உருவி விட்டு அந்த தடியை வகுப்பினுள் கொண்டு வந்த பொழுது அனைத்து மாணவர்களும் ’கொல்’ எனச் சிரித்தார்கள்.

பூபாலசிங்க மாஸ்டருக்கு முகம் சிவந்தது.

அந்த தடியை வாங்கி அது தும்பு தும்பாக. . .பூக்கள் எல்லாம ; சிதறிப் போக தன்வெப்பம்… மறைவெப்பம் அனைத்தையும் என் முதுகில் விளாசித் தள்ளினார்.

அதே பூபாலசிங்கம் ஆசிரியர்தான் எனக்கு பௌதிகத்தில் திறமைச் சித்தி கிடைக்க காரணமாய் இருந்தவர் என்பதை என் மனம் இன்றும் நன்றியுடன் எண்ணிக் கொள்ளும்.

 

அப்புலிங்க மாஸ்டரும் 3 போஸ்க்காட்டுகளும்.

கணித ஆசிரியர் அப்புலிங்க மாஸ்டரின் கதைகளைப்பற்றி இந்த மலர் முழுக்க எழுதலாம்.

தலையில் எண்ணை வைக்காமல் பறட்டைத் தலையுடன் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு வேம்பண்ணை, இலுப்பெண்ணை, ஆமெனக்கெண்ணை என ஒரு எண்ணைக் கலவையை நடுத்தலையில் ஊற்றி தேய்ப்பதன் மூலம் மானிப்பாய் கோயில் பற்றில் இருந்த அனைத்து தாய்மாரின் நல்ல அபிப்பிராயத்தை பெற்றிருந்தவர்.

9ம், 10ம் வகுப்புமாணவர்களுக்கு தூய கணிதமும், பிரயோக கணிதமும் கற்பிப்பது வழமை.

அவரது மாணாக்கர்களாய் வரும் பொழுது அனைத்து மாணவர்களும் ஆளுக்கு 3 தபால் அட்டைகள் வேண்டிக் கொடுக்க வேண்டும். மாணவரின் ஒழுக்கம், நன்மை தீமைகள் என்பன அதன் மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தப்படும். அவ்வாறே அவராக நடாத்தும் பரீட்சைத் தாள்களுக்கு 25 சதம் கொடுக்க வேண்டும்.

9ம், 10ம் வகுப்பில் தூய கணிதத்தில் திறமையான புள்ளிகள ; எடுத்திருந்தாலும் 10ம் வகுப்பில் முதல் தடவையாக (பங்குனி மாதத்தில்) எனக்கு பிரயோக கணிதத்தில ; 18 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.

அப்புலிங்கமாஸ்டர் எனது விடைத்தாளையே வீட்டுக்கு அனுப்பிவிட்டார். வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதனை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

அடுத்த நாள் வகுப்புத் தொடங்கியது.

நான் கையை உயர்த்தினேன்.

“என்ன மகனே”

“ஒரு கேள்வி கேட்கலாமா”

“சொல்லு மகனே”

“சேர். . . சோதினைப் பேப்பருக்கு காசு தந்தது நான் தானே”

“ஆம்”

“அப்படியாயின் திருத்திய பேப்பரை என்னிடம் தானே தந்திருகக் வேண்டும்”

சிறிது நேரம் யோசித்தார்.

“தவறுதான். மன்னித்துக் கொள்”

அந்தளவில் சம்பாஷணை முடிந்து வகுப்புத் தொடங்கியிருந்து.

அடுத்த நாள் வீட்டுக்கு ஒரு தபால் அட்டை வந்திருந்தது. அப்புலிங்கமாஸ்டரே எனது பெற்றாருக்கு போட்டிருந்தார்.

“உங்கள் மகனுக்கும் எனக்கும் இவ்வாறு ஒரு சம்பாஷணை நடந்தது. எனவே தயது செய்து அந்தப் பேப்பரை அவரிடம் கொடுத்து விடுங்கள்” என்று.

மீண்டும் எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

இந்த சம்பவத்தின் எதிரொலிதான் என்னை மார்கழி மாதச் சோதனையில் 78 புள்ளிகள் பெற வைத்தது.

கந்தையா ஆசிரியரும் கனகம்மா வீட்டுச் சேவல் கோழியும்

வாகீசர் மண்டபத்துக்கும் அதிபரின் அலுவலகத்துக்கும் இடையில் அமைந்திருந்த அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு உயரமான மேசையும் கதிரையும் இருப்பதை உங்களில் அதிகம் பேர் ஞாபகம் வைத்து இருக்கலாம்.

அதேவேளை தமிழ், சைவசமயம் கற்பிக்கும் கந்தையா ஆசிரியரையும் யாரும் மறக்க முடியாது. யாழ்

மாகாணத்திலேயே சிறந்த அறிவாளி. இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் சைவ நற்சிந்தனையில் அவரின் உரைகளைக் கேட்க முடியும். ஆனால் அவரின் முதுமைத் தோற்றம் மாணவர்களுக்கு கொஞ்சம் இளக்காரம். ஆதலால் மாணவரின் சின்ன சின்ன சேட்டைகளுக்கு அவர் ஆளாவதுண்டு.

அவ்வாறே ஒரு நாள் பாடசாலை தொடங்க முதல் காலையில் வகுப்புக்கு வந்த பொழுது சங்கரப்பிள்ளை வீதியில் வசித்து வந்த கனகம்மா வீட்டுச் சேவல் கோழி எங்கள் வகுப்புக்குள் வழி தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டது. நாங்கள் நாலைந்து பேராய் சேர்ந்து பிடித்து விட்டோம். அடுத்து என்ன செய்யலாம் எனப் பல விதமான யோசனைகள்.

சேவலை முடித்து விட்டு இரவு பாணும் வேண்டி சாப்பிடுவோமா. . .றவுக்கைச் சந்தையில் விற்றுவிட்டு களவாக படத்துக் போவேமா என்றது வரை பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு பயம் காரணமாக அவை கை விடப்பட்டன.

இறுதியாக. . . முதல் பாடம் கந்தையா மாஸ்டரின் பாடம் எனப் தால் அந்தச் சேவலை அந்த உயரமான மேசையுள் வைத்து மூடி விடுவோம் என முடிவெடுத்தோம்.

செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டது. மணி அடித்தது. வகுப்புககு; ள் ஆசிரியர் வந்தார்.

எல்லோரும் வலு அடக்கமாகமாகவும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதைபதப்பிலும் அமைதியாக இருந்தோம் – ஆளை ஆள் பார்த்து மெதுவாக சிரித்தபடி. கந்தையா ஆசிரியர் அந்த உயரமான கதிரையில் அமர்ந்து கொண்டு,

“மொனிற்றர் இடாப்பு எங்கே” என்றார்.

“மேசைக்குள் தான் இருக்குசார்”

கந்தையா மாஸ்டர் மேசையைத் திறக்க அடைத்து வைந்திருந்த சேவல் எழுந்து பாய்ந்து போய் வகுப்பின் அரைச்சுவரில் நின்று கூவத் தொடங்கியது.

எல்லோரும் கொல் எனச் சிரிக்க அவரின் முகத்தில் தோன்றிய அவமான உணர்வு இன்றும் என் மனதில் படிந்து என்னைத் தண்டித்துக் கொண்டிருக்கிறது. இதை அவர் அதிபருக்கு றிப்போட் செய்திருந்தால்

எங்களில் நாலு பேர் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருபN;பாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

அந்தப் பொறுமையும் மன்னிக்கும் குணமும் தான் கந்தையா மாஸட்ர்.

அவர் தந்த தமிழ்தான் நான் வெளியிட்ட நூல்களும் உங்களுடன் இப்பொழுது அளவளவாகிக் கொண்டிருக்கும் என் எழுத்துகளும்.

அதிபர் பேராயிரவரும் கண்ணப்ப நாயனாரும்;

அதிபர் பேராயிரவர் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன பல விடயங்களுக்கு இப்பொழுது தான்

அர்த்தம் புரிகிறது. அப்பொழுது அவர் சொன்ன பல விடயங்களுக்கு விளக்கத்தை புரிந்து கொள்ளாத காரணத்தாலோ என்னவோ அவர் பல பரிகசிப்புக்குள்ளானவர். அதனை யாவரும் அறிவார். அதற்காக அவரைப் பரிகசித்தவர்கள் நிச்சயம் மனம் வருந்த வேண்டும்.

இது அவரின் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று.

அப்பொழுது சரஸ்வதி பூஜை நடக்கும் பொழுது வில்லுப்பாட்டுகள ; நடைபெறும். அந்த வில்லுப்பாட்டினுள்

சில ஆசிரியர்களின் கதைகளையும் இழுத்துவிடுவதுண்டு – பேராயிரவர் உட்பட.

இதனால் அடுத்த ஆண்டில் இருந்து வில்லுப்பாட்டின் பிரதி அதிபருக்கு கொடுத்து அது அங்கீகரிக்கப்பட்ட பின்புதான் சரஸ்வதி பூஜையில் பாடமுடியும் என விதிமுறை கொண்டு வரப்பட்டது.

இதற்கு சில வகுப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமில்லாது தாம் சரஸ்வதிபூஜையை பகிஷ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்து விட்டார்கள்.

அதிபரோ பகிஷ்கரிப்பதற்கு மாணவர்களுக்கு உரிமை உண்டு . .ரஷ்யா, சீனாவிலும் மாணவர்கள் போராட்டம் நடாத்தி பல விடயங்களைச் சாதித்தார்கள். . . ஆனால் கடவுளுக்கு கட்டாயம் படைக்கும் பொருட்களை படைக்க வேண்டும். . . சரஸ்வதிபூஜையை பகிஸ்கரியுங்கள். . .ஆனால் சரஸ்வதியை பகிஸ்கரியாதீர்கள் எனச் சொல்லி விட்டு அவர் அதனை அத்துடன் விட்டு விட்டார்.

ஆனால் மாணவர்கள் விடவில்லை.

சம்பவதினம் வந்தது.

வாகீசர் மண்டபம் கூடியிருந்தது.

மேடையில் அதிபர், ஐயர், ஐயருக்கு உதவியாக பாடசாலையில் பயியாற்றும் பாலா என்ற ஊழியர்.

ஐயர் பூஜை செய்து கொண்டே படையலுக்கு கொண்டுவரப்பட்டிருந்த தட்டங்களுக்கு தண்ணீர் தெளிக்கத் தொடங்க பாலா ஒவ்வோர் தட்டங்களில் இருந்த வாழை இலையை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.

அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது.

குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் படையல் தட்டில் பாடசாலைக்கு முன்னால் சாப்பாட்டுக் கடை நடாத்தி வரும் கந்தையா கடையில் இருந்து வாங்கப்பட்டிருந்த பெரிய மரவள்ளிக் கிழங்கு போண்டா, வெஸ்லி தியேட்டருக்கு பக்கத்து சாப்பாட்டுப் படையில் இருந்து வாங்கப்பட்டிருந்த மட்டின் கொத்து, படைக்கப்பட்டிருந்தது. பாலா அந்த தட்டை உடனேயே அகற்றி விட்டார்.

பூஜை முடிய சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிபரின் அறைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

“எதுக்காக இப்படிச் செய்தனீர்கள்”

”கண்ணப்ப நாயனாரே இறைச்சி படைக்கும் பொழுது நாங்கள் செயத் து என்ன பிழை” என்று கேட்டார்கள்.

”சரி. . .நாளைக்கு அப்பா, அம்மாமாரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். . கதைப்போம்” என மேசையில் இருந்து எழுந்தார்.

”ஏன் சேர் . . .இதுக்கை எங்கடை அப்பா அம்மாவை இழுக்கிறியள்”

”உங்களுக்கு கல்யாணம் நடக்கும் பொழுது உங்களுக்கு வரும் பெண்களை கன்னிகாதானம் செய்து முதலில் உங்களிடம் தர நீங்கள் உங்கள் பெற்றோருரின் கையில் தானே கொடுக்கீர்கள். அப்பிடித்தான் ஐயரும் அர்ச்சனைத் தட்டையும் காளாத்தியையும் உங்கள் பெறN; றாரிடம் கொடுக்க விரும்புகிறார்”

அடிக்கு அடி என்பது இதுதான் – Every action has a reaction,

தனபாலசிங்கமாஸ்ட்டரின் பௌதிக ஆய்வுவுகூடமும்
ஒரு சின்ன ‘A’ ஜோக்கும்

நோட்ஸ் வழங்காமல் தமது கற்பித்து திறமையால் மாணவரையே நோட்ஸ் எடுக்கும் கலையை கற்பித்த பெருமை சாரி மாஸ்டரையும் தனபாலசிங்க மாஸ்டரையும் சேரும்.

உயர்தரக் கல்வி கற்கும் பொழுது பௌதிக ஆய்வுகூடத்தில் தொலைநோக்கி கருவி கொண்டு பல

அளவீடுகள் செய்வப்படுவதுண்டு. குவியத்தூரம், முறிவுக்குணகம். . .இத்தியாதி. . .இத்தியாதி. . .

இந்தத் தொலைநோக்கி கருவியால் பொருட்களைப் பார்க்கும் பொழுது குவியத்தூரத்திற்கு அப்பால்பட்ட பொருட்கள் தலை கீழாய் தெரியும்.

அதேவேளை மானிப்பாய் மகளிர் கல்லூரி எமது பாடசாலைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முதலே விட்டு விடும் – மாணவர்கள் மாணவிகளைத் தொல்லை செய்யாது இருப்பதற்காக.

கடைசிப்பாடமாய் எமக்கு ஆய்வுகூடத்தில் கற்பித்தல் நடைபெறும் பொழுது தொலைநோக்கியால் வெளியால் பார்த்தால் மைதானத்திற்கு வெளியே உள்ள ஒழுங்கையால் பெணப் pள்ளைகள் நடந்து போவது வடிவாகத் தெரியும். ஆனால் தலைகீழாக நடந்து கொண்டு போவார்கள்.

ஒரு நாள் எனக்குப் பக்கத்தில் நின்ற மாணவன், “மச்சான். . . பொம்பிளைப் பிள்ளையள் தலைகீழாய் நடந்து போறது சரி. . . ஆனால் அவர்களின் யூனிபோர்ம்கள ; கவிழுதில்லையே” என்றான்.

நான் பலமாய்ச் சிரித்து விட்டேன்.

பின்னால் தனபாலசிங்க மாஸ்டர்.

அன்றிலிருந்து நாமிருவரும்  பௌதிக கூடத்தின் மற்றப் பக்கத்திற்கு மாற்றப்பட்டோம்.

அட்வான்ஸ் லெவல் முடியும் வரை தோட்டத்தில் நின்ற வாழைமரங்களைத் தான் தலைகீழாய்ப் பார்த்து

ரசித்துக் கொண்டிருந்தோம்.

சுந்தரலிங்கம் மாஸ்டரும் தாவரவியலில் மதுவமும்

உயர்தரம் – 2ம் ஆண்டு.

சுந்தரலிங்கம் மாஸ்டர் தாவரவியல் பாடம் எடுப்பதும், குறிப்புச் சொல்வதும் ஒரு கலைதான். “அவ்வாறு பார்க்கும் பொழுது”. . . “மேல் எழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது”. . . “எனினும்”. . .என முன்னுக்குப் பின்னாக இந்த மூன்று வார்த்தைகளும் நோட்ஸ் கொப்பியையின் அரைவாசியை நிறைத்திருக்கும். சில வேளைகளில் அவர் ஆம் என்கிறா அல்லது இல்லை என்கிறாரா என்ற சந்தேகங்கள் வந்தாலும் வகுப்பு கடைசி மணி அடிக்கும் பொழுது அவர் சொல்ல வந்தது புரிந்து விடும்.

அவர்தான் எமக்கு தாவரவியல் ஆய்வுகூட ஆசிரியரும் ஆவார்.

அடுத்த நாள் மதுவத்தை நாம் நுணுக்குக் காட்டியினூடு பார்க்க வேண்டும்.

மதுவம் எங்கே இருக்கும்?

கள்ளில் இருக்கும்.

சிங்கம் என அனைவராலும் அறியப்பட்ட சிங்கராஜா எனும் ஆய்வுகூடப் பொறுப்பாளர் கள்ளை வேண்டி வர வேண்டும் – அல்லது யாரோ ஒருவர் கள்ளுக் கொண்டு வர வேண்டும். சிறிய தேக்கரண்டியளவு கள்ளு வகுப்பு முழுவதற்கும் போதுமானதால் ஏன் வீணாக ஒரு போத்தல் கள்ளை வேண்டுவான் என சிங்கம் அபிப்பிராயம் தெரிவித்தார்.

“சேர். . அப்பாக்கு ஒவ்வொரு நாளும் கள்ளு வாறது. . .நான் கொண்டு வருகிறேன்” என் சக தோழன் சொல்ல அது ஏற்கப்பட்டது.

அடுத்த நாள் மதிய நேரம் – ஆய்வுகூடத்தில் கூடியிருந்தோம் – சுந்தரலிங்கம் மாஸ்டர் வகுப்பிற்கு பிரசன்னமானார்.

“கள்ளுக் கொண்டு வந்தியா” என மாஸ்டர் கேட்க, “ஆம்” என்றவாறு மேசையில் தொங்கிக் கொண்டிருந்த

தனது தோள்ப்பையில் இருந்து சுமார் 5 லீற்றர் கலனை அம்மாணவர் தூக்கி வைக்க வகுப்பு “கொல்”லெனச் சிரித்தது. மாணவர்களின் சிரிப்புக்கு மேலாக மாணவிகளின் சிரிப்பு. அவனுக்கு முகம் சிவந்து விட்டது. பாவம். “ஒரு மை போத்தலுள் கொண்டு வந்திருந்தால் போதும். . . இனறு; உனக்கு வீட்டில் உரிவிழப்போகிறது” என்றவாறே சுந்தரலிங்கம் மாஸ்டர் சின்னக் குடுவை ஒன்றினுள் அன்றைய தேவைக்கு வேண்டியளவை எடுத்துக்கொண்டு மிகுதியை பின்னால் வைக்கச் சொல்லி விட்டு பாடத்தை ஆரம்பித்தார்.

இடைவேளைக்குரிய மணி அடித்தது.

இடைவேளை தொடங்கும் பொழுது நாம் மதுவங்களை நுணுக்குகாட்டியூடு பார்க்க வேண்டும்.

இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்ப இருக்கும் போது வகுப்புக்குள் அவசர அவசரமாக வந்த இரு மாணவிகள் கைகள் பட்டு மேசையில் இருந்த சின்னக் குடுவை – அதுதான் சுந்தரலிங்கம் மாஸ்டர் எடுத்து வைத்திருந்த குடுவை நிலத்தில் விழுந்து உடைந்து விட்டது.

கள்ளும் சிதறி விட்டது.

“கள்ளைப் பார்க்கவே வெறிக்குதோ” என என்றவாறே  “சிங்கம். . . பின்னாலை எடுத்து வைத்ததை எடுத்து வா” என்றார்.

“சேர். . .அதைக் காணேல்லை” – பின்னால் இருந்து சிங்கத்தின் குரல் வந்தது.

அனைவரும் ஆளை ஆள் பார்த்தார்கள்.

என்னைச் சுற்றியிருந்த சில மாணவர்களின் கண்கள் மொய்த்துக் கொண்டு இருந்தது.

சுந்தரலிங்கம் மாஸ்டருக்குப் புரிந்து விட்டது. உதட்டினிடையே சிரித்துக் கொண்டு “வெயிலுக்கு நல்லாய் புளிச்சிருக்குமே” என்றவாறு புத்தகத்தின் அடுத்து பக்கத்தை புரட்டினார்.

 இது கொஞ்சம் “ரூ மச்”

உங்களில் எத்தனை பேருக்கு “தொழில் முன்னிலைப் பாட வழிகாட்டி” என ஒரு பாடம் இருந்துது என ஞாபகம் இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கிறது.

8ம் வகுப்பின் அத்தனை பிரிவுகளையும் கட்சன் மண்டபத்தில் கூட்டி வைத்து சிவக்கொழுந்து மாஸ்டர் பாடம் எடுப்பார். ஆங்கே சரித்திர… பூகோள.. ஜனநாயக… உலகநடப்பு என அனைத்து விடயங்களும் அலசப்படும். .

.அல்லது அவர் சொல்ல நாம் எம்பாட்டில் கேட்டுக் கொண்டு எப்போது மணி அடிக்கும் என பார்த்துக் கொண்டு இருப்போம். அந்தப் பாடம் சோதனைக்கு இல்லாததால ; அப்படி ஒரு அசண்டையீனம்.

சம்பவ தினத்திற்கு முதல் கிழமை எமக்கு சிவக்கொழுந்து மாஸட் ர்; ஜனநாயகத்திற்குரிய வரைவிலக்கணத்தை நன்கு சொல்லித் தந்திருந்தார். “மக்கள். . மக்களால். . மக்களுக்காக. .மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுந்து மக்களாட்சியை அமைப்பது” என ஆபிராம் லிங்கனின் கோட்பாட்டைச்சொல்லித் தந்திருந்தார்.

அடுத்த வாரம் அந்த வகுப்பு தொடங்கியதும் ஜனநாயகம் என்றால் என்ன என்று அனைவரிடமும் கேட்ட போது அனைவருக்கும் விழி பிதுங்கியது.

அனைவருக்கும் முதல் இரண்டு மக்கள் . .மக்கள். .வந்ததே தவிர அடுத்து எதுவுமே வரவில்லை. விளைவு

அனைவரும் நன்கு வேண்டிக் கொண்டோம். அத்துடன் மக்கள் மக்களுடன் என்று தொடங்கி கொஞ்ச தூஷணத்தில் ஏச்சு வேறு.

இது அனைத்து மாணவர்களுக்கும் கொஞ்சம் மனத்தில் கறள்.

அடுத்தவாரம் மானிப்பாய் இந்துவுக்கும் யாழ். இந்துவுக்கும் நடந்த கிறிக்கட் போட்டியில் கைகலப்பு ஏற்பட பார்வையாளர்களும் களத்தில் குதித்தனர். இதில் எங்கள் சிவக்கொழுந்து மாஸ்டரும் உட்பட.

சிறிது நேரத்தில் மைதானத்தில் ஒரே கூச்சலும் – கைகலப்பு ஆரவாரமும் தான்.

கூட்டம் கொஞ்சம் கலந்த சிவக்கொழுந்து மாஸ்டரின் கையில ; ஒரு விக்கற்கம்பு இருந்தது. ஆனாலும் நெற்;றியடி வீங்கியிருந்தது.

“யாரோ ஆளைத் தெரியாமல் அடிச்சுப் போட்டான்கள்” என அடுத்தநாள் ஸ்ராவ்ரூமில் கதைத்துக் கொண்டார்கள்.

“கடைசிவரை இல்லை. . .இது எங்கடையள் செய்த வேலை” என மறுதலித்துக் கொண்டிருந்தார்.

இத்தால் யான் அறிந்து கொண்டது யாதெனில் ஜனநாயத்தால் கை சிவந்த என் சக மாணவனின்

தந்தையாரின் முகம் சிவந்ததால் அந்த மாலைப் பொழுதில் சிவக்கொழுந்து மாஸ்டரின் தலைசிவந்தது என்பது தான்.

பிற்குறிப்பு :

”Our college…” …  ”Manipay Hindu”

”What´s the colour”…  “Red and Blue

என்ற கோஷம் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்க 100வது ஆண்டு மலரின் பக்கங்களை இங்கே கருத்தில் கொண்டு இந்தக் கட்டுரையை நிறைவு செய்தாலும் நூறாண்டு விழாக்காணும்எம் கல்லூரி பற்றி நூறாயிரமாக விரியும் எனது எண்ணங்களை தொகுத்து ஒரு நூலாக படைத்திட என்மனம் அவாவுகின்றது. அவ்வாறு அது உருவம் பெறும் பொழுது அது மானி இந்துவுக்கே சமர்ப்பணம் ஆகும்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)