மரணப்படுக்கை

மரணப்படுக்கை

பட்டினசபைத் தலைவரை சேர்மன் அல்லது சேர்மன் ஐயா என மற்றவர்கள் ஆங்கிலத்தில் அழைப்பதில் அவருக்கு ஒரு பெருமை.

அவ்வாறுதான் நகரசபைக் காலம் கடந்து 42 வருடங்களின் பின்பும் செல்லமுத்து தாத்தாவை மற்றவர்கள் செல்லமுத்து சேர்மன் என அழைப்பதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

78 வயதாகிய போதிலும்… அவர் தனது 36 வயதில் ஒரே ஒரு தடவை எங்கள் பட்டினசபையின் சேர்மனாய் இருந்தாலும்… செல்லமுத்து என்ற பெயருடன் ஒட்டிவிட்ட சேர்மன் என்ற பட்டப் பெயர் இன்றும் அவருடன் ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. எங்கள் நகரசபை பின்பு எத்தனையோ சேர்மன்களைக் கண்டு கொண்ட போதிலும் எங்கள் கிராமத்தில் அந்தப் பட்டம் அவருடன் மட்டும் ஒட்டிக் கொண்டு விட்டது.

எங்கள் பட்டினசபை எல்லைக்குள் அமைந்திருந்த சினிமாக்கொட்டகை ரிக்கற்றுகளின் பின்புறம் அவரின் பெயர் ரப்பர் ஸ்டாம்பினால் குத்தியிருப்பதில் அவருக்கு பெருமையோ பெருமை.
செல்லமுத்து சேர்மனின் சேடம் கடந்த மூன்று நாட்களாக இழுத்துக் கொண்டு இருந்தது.

அராலிச் சாத்திரியர் வந்து கண் இமைகளை திறந்து பார்த்து விட்டும்…. மணிக்கட்டையும் பிடித்து பார்த்து விட்டு இன்னும் 48 மணித்தியாலத்துக்கு மேலாக தாங்காது என்று சொல்லி… மூன்று தடவை பாலுடன் கலந்து கொடுக்கச் சொல்லிக் கொடுத்த ஆறு மருந்துச் சிட்டியையும் காலியாகி விட்டிருந்தன.

ஆனாலும் சீவன் இழுத்துக் கொண்டு இருந்தது.

”என்னத்தை நினைச்சு நினைச்சு இந்த சீவன் இழுத்துக் கொண்டு இருக்கோ”, சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொள்வது கிணற்றின் அடியில் இருந்து யாரோ சொல்வது போல அவருக்கு கேட்டுக் கொண்டு இருக்கின்றது.

*
பாரதப் போரின் பத்தாவது நாள்!

ஒரு இமயமே சரிந்து வீழ்ந்தது!!

அம்;புப் படுக்கையில் மரணத்தை நோக்கியிருந்த பீஷ்மர் தன் உயிரை விட்டு விட வரவிருக்கின்ற தட்சிணாயன புண்ணிய காலத்தை நோக்கி காத்திருக்கின்றார்.

காலத்தராசு அவரின் கண்கள் முன்னே.

”என் தந்தையின் காதல் இச்சைக்காக நான் பிரமச்சரிய விரதம் கொண்டிருக்காவிட்டால் இந்த பாரத யுத்தமே வந்திருக்காதல்லவா”, அம்புப்படுக்கையில் தன் மரணப்படுக்கையில் காத்திருந்தன பீஷ்மரின் மனம் நினைத்து வேதனை கொண்டது.

தம்பி விசித்திர வீரியனுக்காக காசி மன்னனின் மூன்று பெண்களையும் கவர்ந்து கொண்டு வராமல் இருந்திருக்கலாம். அம்பையின் சபதம் தானே என்னை இந்த மரணப்படுக்கையில் வீழ்த்தி இருக்கின்றது?, கலங்கின பீஷ்மரின் கண்கள்.

சாஸ்திர தோஷத்தினை அகற்றுவதற்காக காந்தாரிக்கு ஒரு ஆட்டுக்கிடாயுடன் செய்த முதல் திருமணத்தினையும்… பின் அந்த ஆட்டுக்கிடாயை கொன்ற விடயத்தையும்… முதலில் திருணம் செய்ததால் அவள் விதவையாக அஸ்தினாபுரத்தினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றாள் என்பதனை உலகம் அறியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவளின் அவளது தந்தை செவலனையும் சகுனி உட்பட்ட சகோதரர்களையும் சிறையிட்ட தவறை மனச்சாட்சி அவருக்கு உணர்த்திக் கொண்டு இருந்தது.

அவரின் பாவக்கணக்கின் உச்சக்கட்டமாக துச்சாதனன் திளெகுபதை கூந்தலைப் பிடித்திழுந்து வந்து அவளின் சேலை உரியப்பட்டுக் கொண்டிருக்கையில சரி…. துரியோதன் அவளை வந்து தன் தொடையில் அமரும்படி சொன்ன போதிலும் சரி… அவரின் கண்கள் இரத்தக் கண்ணீர் வடித்ததே தவிர கைகள் உறைவாளினை வெளியே எடுக்காத என் தவறுதான் இந்த பாரதயுத்தத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது என மனம் வெம்பினார்.

அம்பு படுக்கையை அளித்த அர்ச்சினன் அவருக்கு நிழல் அளிக்க மறந்து விட்டான்.
உச்சிக்கு வந்து சூரியன் அவரை வாட்டிக் கொண்டு இருந்தான்.

*

செல்லமுத்து சேர்மனின் பெருமுயற்சியால் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வந்த பொழுது அனைத்து ஊராரும் சேர்ந்து செல்லமுத்து சேர்மனைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
கோயில் வீதியில் பெரிய மேடை போட்டு ஆளுயர மாலை அணிவித்து அவருக்கு அளித்த வாழ்த்துகள் மின்சாரத்தைக் கண்டு பிடித்த மாமேதைகளுக்கு கூட கிடைத்திருக்குமோ என்னவோ.

”கீழிருந்து மேலாக எரியும் விளக்குகளை மேலிருந்து கீழே எரிய வைத்து எங்கள் கிராமத்தின் அமாவாசையை பௌர்ணமி ஆக்கியவர் எங்கள் சேர்மன்” எனச் சொன்னதும் சபையின் கைதட்டு வானத்தைப் பிளந்தது.

மேடையில் அமர்திருந்த பொழுது அவருக்கு வேண்டிய ஒருவர் வந்து காதினுள் கிசுகிசுத்துச் சென்றார்.

அவரது முன்னாள் காதலியான கனகம்மா வீட்டில் தனியே இருக்கின்றாள் என்ற செய்தி தான் அது.
புருஷன்காரன் விழாவுக்கு வந்து பின்னால் உள்ள பனங்காணியுள் வடிசாராயம் குடித்துக் கொண்டிருக்கின்றானாம்.

மேடைக்குப் பின்னால் சென்றவர் இருளுடன் இருட்டுடன் கலந்து கொண்டார்.
அவரின் கால்கள் பனங்கூடல்களுக்கூடாகச் சென்று கனகம்மா வீட்டை அடைய, கைகள் கனகம்மாவின் கொட்டில் வீட்டுக் கதவைத் தட்டின.

”நீங்களா?…” என விழித்த அவளினால் பின் எதுவும் பேச முடியவில்லை.

கூட்டம் முடிந்த பொழுது மீண்டும் கசங்கிய பட்டு வேட்டியைச் சரிச் செய்து கொண்டு மேடைக்கு வந்து சேர்ந்தார் காளையை அடக்கிய வீரன் போல்.

*

”இறந்தான் அசுவத்தாமன்” தலைகுனிந்த தருமனின் முதலடியில் துரோணாச்சாரியார் நிலை தளர்ந்தார்.

”என்னும் யானை” என்ற இரண்டு சொற்களை அவர் கேட்க முதலே திருஷ்டத்யும்னனின் வாள் அவரின் தலையைக் கொய்தது.

போர் வித்தையில் தேர்ந்த பரசுராமரிடம் போர்த் தந்திரங்களைக் கற்றபின்…. என்னுடடைய வித்தைகளை சத்திரியர்களுடன் பகிர்ந்து கொள்ளாதே என குரு சொன்னவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமால் துருபதனுக்கு எதிராகப் பயன்படுத்த அத்தினாபுரம் சென்று சத்திரிய இளைஞர்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து குருவின் மன வேதனக்கு ஆளாகி இருந்தார். பரசுராமனின் கண்களில் வெளிவந்து வெறுப்பின் வெப்பத்தை அவரின் உடல் உணர்ந்தது.

ஊழித்தீயினைப் போலவும்… ருத்திர தாண்டவம் போலவும் அவரின் அம்புகள் பாய்ந்து கொண்டு இருந்தாலும் மரணத்தின் நிழல்; தன்மீது விழுந்ததை உணர்ந்த துரோயாச்சாரிhரின் கண்கள் முன்னே கட்டைவிரல் இழந்த நிலையில் கைகளில் இருந்து இரத்தம் சொட்ட முழங்காலிட்டு வீழ்ந்த ஏகலைவனின் கண்கள் சொல்லிக் கொண்டிருந்த செய்தியை அறிய முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.

ஒரு வெற்றி தோல்வியாகி தனது கரங்களால் சரித்திருத்தை எழுதிக் கொண்டிருந்தது.
தன் மகன் அசுவத்தாமனை விட திறமையாளனாக… தன்னை முதலையிடம் இருந்து காப்பாற்றிய சிறந்த வீரனாகவும் முதன்மைச் சீடனாகவும் அவரே ஏற்றுக் கொண்ட அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவை தானே அமைத்த சக்கரவியூகத்தின் நடுவே நிராயுதபாணியாக நிற்க வைத்து அவனைக் கொன்ற பாவம் அவரை கண்முன்னே வந்து மிரட்டிக் கொண்டிருந்தது.
பதினைந்தாவது நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

*

செல்லமுத்து சேர்மனின் புகழ் பெரிதாகப் பேசாப்பட்டது சாதிக்கலவரம் வெடித்த பொழுது தான்.
ஆங்காங்கே தேர்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்பொழுதும் அவர் சேர்மன் பதவியிலேயே இருந்தார்.

எனவே இரு பகுதிக்கும் நல்லவராய் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் தனது பகுதி ஆட்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

பொலிஸ்மா அதிபரை கடமையின் நிமித்தம் சந்திப்பது போல சென்று சந்தித்தார்.
கூடவே போத்தல்கள்… பணம்… இரவோடு இரவாக கூட்டிச் சில சில பெண்களைப் பற்றிய விபரங்கள்.

தனது பகுதி ஆட்களை சந்தையடிப் பக்கம் மாலை 5 மணிக்கு மேல் வரவேண்டாம் என்று இரசியமாக அறிவித்தாயிற்று.

சாதிக்கலவரத்தை காரணம் காட்டி ஆறு மணிக்கு ஊர் அடங்கு உத்தரவு என பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவை திட்டமிட்டு ஊர் முழுக்க அறிவிக்காமல் விட்டார்கள். ஆனால் அறிவித்ததாக பொலிஸ் தனது பதிவேட்டில் பதிவு செய்திருந்தார்கள்.

அறிவித்தது வயல் வெளிகளிலும் பனங்கூடல்களிலும் தான்.

அதனை இரண்டொருவருக்கு கேட்கவும் வழி செய்திருந்தார்கள் – பின்னாளில் ”நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறென்றும் இல்லை” என நீதி தேவதையின் முன்னால் சாட்சி சொல்வதற்காக.

சந்தைப் பகுதி அமைதியாக இருந்ததைக் கண்டு, ”பயந்திட்டாங்களடா!” என எதிர்ப்பகுதி ஆர்ப்பரித்த பொழுது ஆறு மணிக்கு சந்தையடிக்கு வந்த பொலிஸ் ஜீப்பில் இருந்து குண்டுகள் பாய்ந்தன.

கிட்டத்தட்ட அனைத்து பெரிய தலைகள் எல்லாம் சாய்ந்தன.

அடுத்த நாள் மரணவீட்டை தானே முன்நின்று தன் செலவில் நடாத்தி முடித்தார் செல்லமுத்துச் சேர்மன்.

கூடவே கொழும்பில் இருந்து அப்புக்காத்து அரசரட்ணத்தை வரவழைத்து பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வழி செய்தார்.

எல்லோரும் அவரை வாழ்த்தினார்கள்.

மறுநாள் மாலை உத்தரதேவி புகையிரத்தின் கன்ரீனில் அப்புக்காத்து அரசரட்ணமும் பொலிஸ்மா அதிபரும் ஒன்றாக அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டு இருந்தார்கள் – பக்கத்தில் தொட்டுக்கொள்ள ஈரல் வறுவலும் இறைச்சிப் பிரட்டலும்.

*

தேர்சில்லுகள் சேற்றில் புதைந்து விட தேரோட்டியாக வகிபாகம் செய்த சல்லியனோ கர்ணனை அநாதரவாக விட்டு விட்டுச் செல்ல கர்ணன் தனித்து விடப்படுகின்றான்.

“எடு அம்பை விடு பாணத்தை” என்ற கண்ணனின் கட்டளைக்;குப் பணிந்து அர்ச்சுனனின் அம்பு கர்ணன் மேல் பாய்கின்றது.

அள்ளி முடிக்கப்படாத கூந்தலுடன் பாஞ்சாலி கர்ணன் முன்னே தெரிகின்றாள்.
“செய் புண்ணியம் அனைத்தும் தா” என்று கிருஷ்ணர் அந்தண வடிவில் வந்து யாசகம் கேட்ட பொழுது தன் இரத்தைத்தினால் தன் புண்ணியங்கள் அனைத்தையும் தாரை வார்த்து கொடுக்கும் பொழுது திரௌகுபதையே அவன் கண்கள் முன் தோன்றுகின்றாள்.
“எனைக்காக்க இச்சபையில் ஆண்மகன் யாரும் இல்லையா” எனக் பர்ஞகாலி பத்தினி கதறிய பொழுது செஞ்சோற்றுக் கடனுக்காக தன் வாயயை தானே நினைத்து அடைத்து நினைத் வருந்தினான்.

“ஐவருக்கும் பத்தினியான இவள் தாசியே” என தானே உரைத்தவையே அர்ச்சினனின் அம்பாய் தன் மீது பாய்ந்தது என எண்ணி வேதனைப்பட்டான்.

குந்தி கதறினாள்.

குந்தியின் கேட்டு பாண்டவர்கள் கதறினாள்.

கர்ணனி; உடல் விட்டு வெளியேறிய அவன் உயிர் தன் பாவத்தனை நினைத்துக் கலங்கினான்.

*

செல்லமுத்து சேர்மன் தனது பதவிக் காலம் முடிந்த பின்பும் ஊரார் எது கேட்டாலும் உதவும் பெருமகனாகவே விளங்கினார்.

கோட்டுக்கு போகாமலே பல பஞ்சாயத்துகளை முடித்து வைத்தார்.

வழக்கு கணக்குகள் என மற்றவர்களுக்கு வந்த போதும் அதுஅதுகளுக்கேற்ற வக்கீல்களை கண்டு பிடித்து கிராமக்களுக்கு உதவினார்.

பெதுவாக பல காணி வழக்குகள் செல்லமுத்து சேர்மனின் கைங்கரியத்தால் தான் நிறைவேறியது.
படிப்பு அறிவில்லாத அப்பாவி வெள்ளாந்தி மனிதர்கள்.

கை நாட்டு வைக்கச் சொன்ன இடத்து வைத்தார்கள்.

பணம் நீட்டி யாரிடமும் தன் உதவிக்கு கை நீட்ட மாட்டார்.

ஆனால் காலைக்கள்ளும் மதியத்தில் ஆட்டுப் பங்கு ஒன்றும் மாலையில் கல்லோயா சாராயமும் அவர் வீடு தேடி வந்து விடும்.

அவசர அந்தரத்துக்கு காணியை ஈடு வைத்து பணம் பிரட்ட பலர் முயன்ற பொழுது தான் தங்களின் காணிகளின் அளவுகள் குறைந்தும் செல்லமுத்தரின் காணிகளின் அளவுகள் அதிகரித்து இருந்ததையும் ஊர் கண்டு கொண்டது.

ஆனால் மௌனம்.

பயம்!

எதிர்த்து கதைக்க முடியாத அதிகாரப் பயம்!!

கூடவே உயிர்ப்பயம்!!

*

அராலிச் சாத்திரியர் கை பிடித்து பார்த்து சொன்னது பிசகவில்லை.

48 மணித்தியாலக் கணக்கு 46 மணியாலத்தில் நடந்தேறியது.

”எங்கடை சேர்மன் செல்லமுத்து ஐயா காலம் சென்று போட்டார்” என இழவு கேட்டு கிராமம் முழித்துக் கொண்டது.

தெரிந்த பக்கங்களுடனும் தெரியாத பக்கங்களுடன் வாழ்ந்து போன அவரை மரணப்படுக்கையில் இருந்து தூக்கி முற்றத்தில் போடப்பட்ட வாங்கில் கிடத்தினார்கள்.

தலைமாட்டில் ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தார்கள்.

தென்னோலைப் பந்தல் போட்டு முடிய பறைமேளகாரரும் ஒப்பாரி வைக்கும் பெண்களும் ஒன்றாக வந்தார்கள்.

நாளைக்காலை பாட்டுக்காரரும் கிரியை செய்யும் சைவமும் வரும்வரை அவரின் புகழ்தான்
இங்கு.

*

எனது மரணம் எனக்கு என்ன சொல்லி என்னைப் பயமுறுத்தப் போகுகின்றது.

சொல்லி விட்டு வரவுள்ள மரணமோ… சொல்லாமல் வரவுள்ள மரணமோ அக்கணத்தில் என்னத்தை எனக்கு சொல்ல இருக்கின்றது?

அண்மையில் சந்தித்த பல மரணங்கள் ஒவ்வொருவருக்கும் என்னத்தை சொல்லி ஆதரவாய் அவர்களின் தலையை தடவி விட்டுப் போயிருக்கும் அல்லது மிரட்டி விட்டுப் போயிருக்கும்? – ஸ்ரீபெரும்புத்தூர் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)