மணமகள் தேவை

மணமகள் தேவை

நல்லூரைப் பிறப்பிடப்மாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட உயர் சைவ வேளாளார் குலத்தில் பிறந்து,  மனைவியை இழந்து, பிள்ளைகளின்றி தனியே வாழும்  40 வயதான ஒரு பொறியியளாருக்கு இலங்கையைச் சேர்ந்த விதவையான,பிள்ளைகள் அற்ற தமிழ் பேசும் ஒரு மணப்பெண் வேண்டும். மணப் பெண்ணின் வயது  35  தொடக்கம்  45 வரையில்  இருப்பது விரும்பத்தக்கது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: கல்யாணமாலை திருமணசேவை நிறுவனம்

*

இராகுலனின் இந்த மணப்பெண் அறிவித்தல் பலவிதமாக பல இடங்களில் அலசப்பட்டது.

குறிப்பாக, பிறந்தநாள் விழாக்களுக்கு முதன்நாள் பலர் கூடி நின்று சமைக்கும் பொழுது… திருமண வீடுகளில் படம் எடுத்துக் கொள்ள நீண்ட நேரம் கியூவில் நிற்கும் பொழுது… கோயில்களில் பஞ்சாலாத்திக்கும்  ”பஞ்சபுராணம்; அருளிபாடுக”க்கும்இடையில்… மேலாக இலவசத் தொலைபேசி கதைக்க நேரம் கிடைக்கும் பொழுது… எக்ஸ்செற்றா…எக்ஸ்செற்றா… சந்தர்ப்பங்களில் இராகுலனின் பெயரும் அவன் மனைவி சிந்துஜாவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இராகுலனின் மனைவி சிந்துஜா மூன்று வருடங்களுக்கு முன் மூளையில் கட்டி வந்து இந்த உலகத்தை விட்டுப் போன பொழுது இராகுலனின் மனைவி பற்றிய உலகத்தின் கவலைகள் மூன்றுநாட்கள் மட்டுமேஇருந்தது. நெருங்கிய உறவினர்களுக்கு காடாத்து,  எட்டுச்செலவு, அ ந்தியேட்டிவரை தொடர்ந்தது. பின்பு வருடம் ஒரு தடவை லங்காசிறி தனது நினைவாஞ்சலிப் பக்கத்தில் மூன்று நாட்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். மற்றும்படி இராகுலன் வீட்டு வரவேற்பு அறையில் சந்தனமாலையுடன் சிந்துஜா ஒரு படமாகத் தொங்கிக் கொண்டிருந்தாள் – அத்துடன் அந்த ஆன்மாவின் இவ்வுலக வாழ்வு முடிந்து விட்டது.

ஆனால் இராகுலன் மீண்டும் திருமணம் செய்யப் போகின்றான் என்ற விளம்பர அறிவிப்பு வந்தவுடன் கண்ணாடிச் சட்டத்தினுள் இருந்த அவளுக்கு அந்த நகரம் உயிர் கொடுத்து விட்டிருந்தது.

”அந்த ராசாத்தி எப்ப சாவாள் எண்டு இருந்தது போல இருந்திட்டு இப்ப இவர் புதுமாப்பிளையாகப் போறார்”

”ஓமக்கா கவனிச்சனிங்களோ… பொது இடங்களிலை அவற்றை பார்வை சரியில்லை”

”என்ரை இவர் சொன்னவர் இந்தியாவிலை கொண்டு போய்க் காட்டியிருந்தால் சுகம் வந்திருக்கும் என்று.  காசுக்கு பாத்து பிசிநாறி அவளைக் கொண்டு போட்டுது”

”தெரியுமோக்கா… இன்சூரன்சிலை நல்ல காசு வந்திருக்கும். அதுதான் இப்ப புதுப்பொம்பிளை தேடுறார்”

வேலி நீக்கல்கள் ஊடாகவும் அல்லது திண்ணையில் இருந்து புளியம்பழம் உடைக்கும் பொழுது நடைபெறும் சம்பாசணைகள,; தொனியில் எந்த மாற்றமுமின்றி இங்கு ஐபோன்களில் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.

அவ்வாறே ஆண்களும் சீட்டாட்ட மேசைகளிலும், விழா மண்டபங்களுக்கு வெளியேநின்று சு.விக்கினேஸ்வரன்  செய்தது சரியா… கச்சதீவை நாங்கள் விட்டுக் கொடுக்ககூடாது என்ற சம்பாசணைகளுக்கு நடுவே இராகுலன் பெண் தேடும் படலக்கதைகளும் வந்து போகும்.

”எங்கடையள் போய்ச் சேருதுகள் இல்லை… நாங்களும் புதுமாப்பிளையள் ஆகலாம்”

”ஏன் இவர் இப்ப விதவைப் பொம்பிளை தேடுறார்? யாரும் புருஷன் விட்ட பொம்பிளையளையும் கட்டலாம்தானே”

”நாங்களும் இந்த சிற்றியிலைதானே இருக்கிறம். சொல்லியிருந்தால் கிளிமாதிரி கொண்டுவந்து இறக்கிக் கொடுத்திருப்பம். அதை விட்டுட்டு மற்றிமோனியலிலை போட்டிருக்கிறார். என்ன சாதிசனத்திலை இருந்து கொண்டு வரப்போறாரோ பார்ப்பம்”.

*

பொதுவாக நீண்ட விமானப் பயணங்களில் இரவு உணவுக்குப் பின்பாக இராகுலன் தூங்கிவிடுவான். பிறிற்றிஸ் எயர்வேய்சின் பயணநேரமும் அவ்வாறுதான் இருந்தது. ஆனால் வந்திருந்த விண்ணப்பங்களில் தேர்ந்தெடுத்த மூன்று பெண்களின் படங்களையும் பார்த்து மனம் சுயம்வரம் நடாத்திக் கொண்டு வந்ததில் அவனால் நன்கு தூங்க முடியவில்லை.

கட்டுக் காசுக்கு வேண்டிய காரைத் திருப்பிக் கொடுத்து ஐரோப்பாவில் வேறு ஒரு கார் வாங்கும் முயற்சி இல்லையே இது.

இது வாழ்வின் இரண்டாம்பாகம். அல்லது புதுஅத்தியாயம். இனியொரு மூன்றாம் பாகமோ இன்னோர் புதிய அத்தியாயமோ வேண்டவே வேண்டாம். எனவே இதுவே இறுதியானதும் முடிவானதும். எனவே எதுவாயினும் ஆழமாக யோசித்து நல்ல முடிவாக எடுக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

சீட்டுக் கட்டின் சீட்டுகளை எடுத்துப் பார்ப்பது போல மூன்று படங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். கைகள் பின்னால் இருப்பதை முன்னாலும் முன்னால் இருப்பதை பின்னாலும் வைப்பதாயும் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்தது.

ஒரு பள்ளி ஆசிரியை. பெயர் மரில்டா. பால் வெள்ளை நிறம். சுருட்டைமுடி. மெல்லிய உடல்வாகு. தலையில் குத்தியிருந்தகிளிப், கையில் கட்டியிருந்தகை மணிக்கூடு, காலில் போட்டிருந்த சிலிப்பர் அத்தனையும் கட்டியிருந்த றோஸ் சேலைக்கும் சட்டைக்கும் பொருந்தியிருந்தது.  கற்பிப்பது ஆங்கிலம். மதம் கிறிஸ்தவம்.  இராகுலனின் அதே  40  வயது. முதலில் விவாகராத்தாகி பின் கணவன் குடியாலும் நோயாலும் இறந்திருக்கின்றான். கொழும்பில் தமக்கையின் குடும்பத்துடன் வாழுகின்றாள்.

மற்றது முன்னாள் போராளி ஒருத்தி.  தமிழ்ச்செல்வி. வயது 35. காதலித்துக் கைபிடித்த கணவன் ஐந்து வருடங்களுக்குப் முன் போரில் இறந்துவிட்டான். வந்திருந்த மூன்று படங்களில் இயற்கையான அழகு என்றால் அந்தப் பெண்ணுடையதுதான்.  மிக மெலிந்த தேகம்.  கண்களில் சின்னச்சோகம். கல்வித் தகமை எதுவும் இல்லை.

கடைசியாக வந்திருந்தது விண்ணப்பவிதி முறையை மீறிவரும் அப்பிளிக்கேசன்கள் போல ஒரு கடிதத்துடன் வந்திருந்தது.  வயது 45.  ப்ரியா. இதுவரை திருமணமாகவில்லை. திருமணமாகி கணவனை இழந்த விதவைக்கும் திருமணமாகாமலே விதவைகள் போல வாழும் ஒருபெண்ணுக்கும் இடையே நீங்கள் என்ன வித்தியாசத்தைக் காணுகின்றீர்கள்? என்ற வகையில் இந்தக்கடிதம் அமைந்திருந்தது.  பெரிய ஒரு குடும்பத்தின் மூத்தமகள் அவள்.

யாழ்ப்பாண புதிய சந்தைக் கட்டடத்தில் சுயமாக ஐந்தாறு பெண்களை வேலைக்கமர்த்தி தையல்கடை நடாத்திக் கொண்டிருக்கும் பெண் அவள். வெளிநாட்டு ஓடர்களினாலேயே அவள் கடையின் தையல் மெசின்கள் நிறைந்திருக்கும்.  நன்கு வாடிக்கையாளர்களுடன் பேசத் தெரிந்த  பொதுநிறமான பெண்.

மரில்டா, தமிழ்ச்செல்வி, ப்ரியா!

சுயம்வர மேடையில் மூவரும் அருகருகே நின்றார்கள்.

இதில் யாரிடமே சிந்துஜாவின் ஜாடை எதுவுமே இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் அந்தப் படம் ஒன்று மட்டும்தான் அவன் கையில் இருந்திருக்கும்.

இதில் யார் இராகுலன் திரும்பி வரும் பொழுது அவனருகேஇருந்து பயணம் செய்யப் போகின்றார்கள் என்று அவனுக்கே தெரியவில்லை.

மூவரையும் நேரில் சந்திப்போம். பின்பு முடிவெடுப்போம் என முடிவில்லாத ஒரு முடிவுக்கு வந்த பொழுது விமானத்தின் பின் சில்லுகள் தரையைத் தொட்டது.

நித்திரையை தொலைத்து விட்ட ஒரு இரவு கண்ணுக்கு எரிச்சலைக் கொடுக்க விமானத்தில் இருந்து வெளியேவந்தான்.

இந்த முறை கட்டுநாயாக்காவில் பெரிய கட்டுப்பாடுகள், பிரச்சனைகள் ஏதுமில்லை.  ஆனாலும் இமிக்கிரேஷனையும், கஸ்ரம்ஸ்சையும் தாண்டும்வரைஎ ல்லோருக்கும் இருக்கும் இனம் அறியாத ஒரு பயம் இராகுலனுககும் இருந்தது.

இரவு விமானத்தில் நன்றாக நித்திரை கொள்ளாத களைமட்டும் இருந்தது.

வெளியே தங்கை சுமதியின் கணவன் சிவகார்த்திகேயன் யாழ்ப்பாணத்தில் இருந்து வான்கொண்டு வந்திருந்தார். அவருடன் முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவர்.

சிவகார்த்திகேயன் அவரை இராகுலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

”இவர் மிஸ்டர். லோறன்ஸ். கொழும்பிலை பெரியவர்த்தகர். மரில்டா ரீச்சரின்டை அண்ணா”

இராகுலன்நிமிர்ந்துபார்த்தான்.

அவர்நட்புடன்கைநீட்டினார்.

இவனும் கை குலுக்கிக் கொண்டான்.

“மரில்டா ரீச்சர் பலாலி றெயினிங் கொலிச்சிலை எனக்குயூனியர். கொழும்புக்கு வருகிற நேரங்களிலை அவாமூலம் இவருடைய அறிமுகம் கிடைச்சது. இப்ப கடவுள் இப்பிடி ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். நேற்று பின்னேரம் கோல்பேஸ் கடற்கரையிலை வைச்சு நான் உங்களைக் கூட்டிப் போக வந்திருக்கிறன் என்ற பொழுதுதான் இவர் இந்த சம்பந்தக்கதையைச் சொன்னார். எனக்கு நம்பவே முடியவில்லை – என்ரை மனுசிக்கு இந்த சைவ-வேதப் பிரச்சனைகள் ஓ.கே. என்றால் எனக்கு டபிள்ஓகே. கண்ணனும் கர்த்தரும் சேர்ந்து எப்பிடி எப்பிடி எல்லாம் முடிச்சுப் போடுகிறார்கள் என்று என்னாலை நம்பவே முடியவில்லை”.

சிவகார்திகேயனின் வெள்ளந்தி மனசு அப்படியே மாறாமல் இருந்தது இராகுலனுக்கு சந்தோசமாகவும் சங்கடமாகவும் இருந்தது.

சிவகார்த்திகேயன் அடுக்கிக்கொண்டு போக இராகுலனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“காருக்கு போவமே” என இராகுலன் தனது சூட்கேசை எடுக்க குனிய முதல் மரில்டாவின் அண்ணா அதனைத் தூக்கினார்.

இராகுலனுக்கு என்னவோ போல் இருந்தது.

பெரிய ஒரு வர்த்தகர். தன் தங்கைக்கு ஒரு வாழ்வு கிடைத்திட வேண்டும் என்ற ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் அதனை தூக்கிக் கொண்டு முன்னே செல்வது இராகுலனுக்கு மிகச் சங்கடமாக இருந்தது.

லோறன்ஸ் வெளியே வந்ததும் தெலைபேசியில் றைவரிடம் காரைகொண்டு வரச்சொல்லி அழைத்தார்.

ஒரு வினாடியில் மிகப் பெரியபடகு போன்ற ஒரு கார் அவர்கள் முன்னால் வந்து நின்றது.

றைவரே இறங்கி ஓடி வந்து சூட்கேசையையும் இராகுலனின் கைப்பையையும் வேண்டி டிக்கியினுள் வைத்தான்.

அனைவரும் ஏறிக் கொள்ள கார் தென்னை மரங்களுக்கிடையான அகல வீதியில் மிதக்கத் தொடங்கியது.

“இப்ப றெயினுக்குப் போறமா?  இல்லை கொழும்பு பஸ் ஸ்ராண்டுக்கு போறமா”

“என்ன சிவகார்த்தியேகன்… மிஸ்டர் இராகுலன் ஜோக் பண்ணுறார்… “என்று விட்டு லோறன்ஸ் தொடர்ந்தார்,  “பிளீஸ் கியர் இராகுலன்… நேற்று பின்னேரம் தான் நீங்கள் வாறது உங்க அத்தார் சொல்லித் தெரியும். மல்ரிட்டாக்கு ஸ்கூலிலை தீடீரென லீவு எடுக்க முடியாமல் போயிட்டுது. அவா ஈவினிங்தான் வருவா.  என்னுடைய வைவ்தான் சமையல் செய்துவைச்சிருக்கிறா. வந்த பிறகு அவாக்கும் ஒரு ஹலோ சொல்லிப் போட்டு நீங்கள் இந்தக்காரிலையே யாழ்ப்பாணம் போங்கோ. நீங்கள் திரும்பிப் போகும் வரை காரையும் ரைவரையும் நீங்களேவை த்திருங்கள்.

இராகுலனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், “எதுக்கு உங்களுக்கு இத்தனை சிரமம்”,  என்று சொல்ல முதல் சிவகார்திகேயன் குறுக்கிட்டு, “போர்மாலிற்றி எல்லாம் பார்க்காதையுங்கோ. நானே முந்தி மல்ரீட்டா ரீச்சரிட்டை காரை இரவலாய் வேண்டிக் கொண்டு யாழ்ப்பாணம் போயிருக்கிறன்” என இராகுலனின் வாயை அடைத்து விட்டார்.

பின்பென்ன கார் நேராகா லோறன்ஸின் வீட்டு வாசலில் போய் நின்றது.

அங்கு களை போக குளிப்பு… பின் மதிய உணவு… அதற்கு மேல் பப்பாசிப் பழமும், அன்னாசிப் பழமும்… எனத் தொடர்ந்து பின்னேர வடையுடனும் தேனீருடனும் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுது மல்ரிட்டா தன் விரித்த கைக்குடை போன்ற புன்சிரிப்புடன் கதவைத்  திறந்து உள்ளே வந்தாள்.

“வெயிற்பிளீஸ்” சொன்னவாறு வீட்டின் உள்ளே சென்று அதே வேகத்துடன் அடுத்த ஐந்து நிமிடத்துள் முகம் கழுவி மிகவும் இயல்பான ஆடை அணிந்து வந்து மற்றவர்களுடன் தானும் தேனீர் அருந்தத் தொடங்கினாள்.

இராகுலனுடன் மிகவும் இயல்பாக ஒரு நண்பருடன் பேசும் தொனியிலேயே பேசினாள்.  பேச்சில் அதிகம் ஆங்கிலம் கலந்திருந்தது. சிவகார்த்திகேயனும் லோறன்ஸ்சும் வேண்டுமென்றே இவர்களைத் தனிய இருக்க விட்டுவிட்டு அவர்கள் ஸ்கொட்சைத் திறந்தார்கள்.

லோறன்ஸ்சின் மனைவி அவர்களுக்ககு ரேஸ்ற் எடுக்க உள்ளே போனாள்.

இராகுலன் தனதும் சிந்துஜாவின் இனிமையான வாழ்க்கை பற்றியும் மல்ரிட்டா தனது சோகமான கடந்த கால வாழ்க்கை பற்றியும் கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.

எந்த இடத்திலும் இராகுலன் மல்ரிட்டாக்கு எந்த நம்பிக்கை அளிக்காமலும், இந்த திருமணத்தை எந்த விதத்திலும் தான் எதிர்பார்த்து தவமிருப்பது போல மல்ரிட்டா காட்டாமலும் பேசிக்கொண்டிருந்தமை இருவருக்குமே பிடித்திருந்தது.

சற்று நேரத்தில் பின்னேரக் குளிர்காற்று வீசத் தொடங்க மல்ரிட்டா அண்ணிக்காரிக்கு இரவுச்சமையலுக்கு உதவி செய்ய உள்ளே போனாள்.

ஸ்கொட் விஸ்கி பாதித்தூரம் இறங்கியிருந்தது.

“வைடொன்ற் ஹாவ் எ பெக் இராகுலன்”

“எனக்கு பழக்கமில்லை”

“பழக்கமில்லாதவங்களுக்கு பழக்காதையுங்கோ அத்தார்” இயல்பாக மல்ரிட்டா சொன்னது இராகுலனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

லோறன்ஸ்சும் சிவகார்த்திகேயனும் தங்கள் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட பின்பு இவர்கள் மூவரும் கைகாட்ட அவர்கள் இருவரின் யாழ்ப்பாணப் பயணம் ஆரம்பமானது.

“எப்பிடி மல்ரிட்டா?… பிடிச்சிருக்கா” சிவகார்த்திகேயனுக்கு பொறுமைகாக்க முடியவில்லை.

”பொறுங்கோ அத்தார்… இன்னும் இரண்டு பேர் இருக்கினமே”

”எனக்கென்னவோ… நீங்க இருவரும் மேட் போர் ஈச் அதெர்இஸ் போல் இருக்கு!”

கார் நீ ர்கொழும்பு வீதியை நோக்கித் திரும்பி தன் வேகத்தை அதிகரித்தது.

இரவுப் பயணக்களை இராகுலனையும் அளவுக்கதிகமாக பாவித்த விஸ்கி சிவகார்த்கேயனையும் நித்திரையில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

*

அதிகாலை 3 மணிக்குமுருகண்டிவாசலில்காரைநிறுத்திவிட்டு ”ஐயா கோயிலுக்கு போகப் போறிங்களா” என ரைவர் கேட்ட பொழுது சிவபார்த்திகேயனால் கண் விழிக்கவே முடியவில்லை.

இராகுலன் மட்டும் கீழே இறங்கி முகம் கழுவி தேங்காயும் கற்பூரமும் வேண்டிக் கொண்டு ரைவரையும் வரும்படி அழைத்தான்.

”இல்லை ஐயா… வைவ் செத்து இன்னும் ஒருவருடம்ஆகேல்லை… நான் போகக் கூடாது”

இராகுலனுக்கு என்னவோ போல் இருந்தது.

தான் இவ்வாறான எதையும் இலண்டனில் கடைப்பிடித்ததாக ஞாபகம் அவனுக்கு ஞாபகமில்லை.

இராகுலன்  தனியே  போய்  தேங்காய்  உடைத்து  சுடர் விட்டெரியும் கற்பூரச் சட்டியில் கற்பூரத்தைப் போட்டு விட்டு சந்தனக் கட்டையை கல்லில் தேய்த்து பொட்டுப் போட்டுக் கொண்டு வந்தான். எட்டு வருசத்துக்கு முன்பு இலண்டனுக்கு போக முதல் சிந்துஜாவுடன் இதே இடத்தில் தேங்காய் உடைத்துக் கும்பிட்டு சென்றது ஞாபகத்திற்கு வந்தது.

”வாங்கோதேனிர்குடிப்பம்”, எனறைவரை அழைத்துக் கொண்டு தேனீர்கடைக்கு போய் அங்கு இருவரும் தேனீர் வேண்டி வெளியில் நின்று பருகினார்கள்.

காலைக் குளிருக்கு அது இதமாக இருந்தது.

”ஏன்நான்இங்கைவந்திருக்கிறன்தெரியுமா?”

”தெரியும்சார்.. ஐயாகதைக்கேக்கைதெரிஞ்சுது”

”உங்கடைமடம்எப்பிடி?”

”பத்தரைமாற்றுத்தங்கம்… ஆனால் கட்டக் கூடாத இடத்தில் கட்டி அவான்ரை வாழ்க்கை வீணாய்போச்சுது… இலட்சம் இலட்மாய் சொத்திருந்தும் என்னய்யா பலன்?”

”செய்யலாம் எண்டு சொல்லுறியள்”

”செய்தால் நீங்கள் நல்லாய் இருப்பியள்”

”நீங்க ஒரு வருடத்துக்கு பிறகாகலியாணம்செய்வியள்?”

”இல்லை ஐயா”

”ஏன்?”

”அது என்னாலை முடியாதைய்யா”

இராகுலன் பின்பு ஏதும் கேட்கவில்லை.

கார் புறப்பட்டது.

*

மானிப்பாய்க்கு வந்த பொழுது காலை ஏழுமணியாகியிருந்தது.

கார்ச் சத்தம் கேட்ட பொழுது சுமதியும் பிள்ளைகளும் காரடிக்கு ஓடிவந்தார்கள்.

சுமதி இராகுலனைக் கட்டி கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.

சுகன்யா இலண்டனில் இறந்த பின்பு இப்பொழுது தான் தமையனைக் காண்கிறாள்.

மூத்தவள் நன்கு வளர்ந்திருந்தாள்.

மற்ற இரண்டு மகனும் மாமா மாமா என இராகுலனைச் சுற்றிக் கொண்டார்கள். அவர்களே இராகுலனின் பெட்டியை காரில் இருந்து இறக்கினார்கள். சிவகார்த்திகேயனும் வந்ததே தெரியாமல் வந்திட்டம் என்றபடி காரால் இறங்கினார்.

”அப்பாக்கு நேற்று பின்னேரம் கொழும்பிலை போட்ட பெற்றோல் இப்பதான் முடிச்சிருக்குப் போலை”, மூத்தவள் சொல்ல மற்ற  அனைவரும் சேர்ந்து சிரித்தார்கள்  –  றைவர் உட்பட.

வீட்டின் நடு மாடத்தில் தகப்பனினதும் தாயினதும் படம் மாட்டப்பட்டு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சுமதி இப்போ வயதான தாயைப் போலவே காணப்பட்டாள்.

”நீ சரியா அம்மா போலவே வாறாய்”

“பின்னே வேறு யாரும் மாதிரியாய் வருவேன்?” சொல்லி விட்டுச் சிரித்தாள்.

“சரி… போய்க் குளிச்சிட்டு வாங்கோ… றைவரையும் குளிச்சிட்டு வரச் சொல்லுங்கோ… சாயினியைக் கொண்டு தோசைக்கு மா அரைப்பிச்சு வைச்சிருக்கிறன்.  நான் போய்ச் சுடுறன்…  ஏதாவது ஊத்தை உடுப்பு இருந்தாலும் தொட்டிக்கை போடு.  பின்னேரம் சாயினிவரும்”

தமையன் என்டாலும் இராகுலனை ஒருமையில் அழைப்பதுதான் சுமதியின் வழக்கம்.

“யார் அது சாயினி”

“அதுகள் இடம் பெயர்ந்து வந்து கோயிலடியிலை இருக்குதுகள். பின்னேரத்திலை எனக்கு கூட ஒத்தாசை புரியவாறது”

*

காலைச் சாப்பாட்டு முடிய ஆசைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு றவுக்கைச் சந்தைக்க போய் இராகுலனே மரக்கறி மீன் எல்லாம் வேண்டி வந்தான். இரண்டு மருமகனும் மாமனுடன் போய் வந்தார்கள்.

மீண்டும் ஊர்க்காற்று… ஊர்ச் சந்தை… அதன் மணம்… அவனுக்கு மகிழ்ச்சி ஊட்டியது.

அடுத்து நிற்கும் நான்கு நாட்களும் தானே சந்தைக்கு போவேன் என இராகுலன் சொல்லி விட்டான்.

ஆழமாகப் பதிந்து விட்ட ஆட்டோக்கிராவ் நினைவுகள் இவ்வாறு ஊருக்கு வரும் பொழுது தான் திறந்து பார்க்கப்படுகின்றது போலும். அதனால் தான் ஊர்ப் பயணங்களுக்கு இவ்வளவு கணதி போலும்.

அன்று பின்னேரமே தமிழ்ச்செல்வியைப் போய்ப்பார்ப்போம் என இராகுலனும் சிவகார்த்திகேயனும் முடிவெடுத்திருந்தார்கள். அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஆச்சரியப்படுத்தவும் எந்த போலியான மேக்கப்புகள் இல்லாமல் பெண்ணைப் பார்க்க இராகுலன் பிரியப்பட்டான்.

சுமதியையும் வரச் சொல்லி இராகுலன் கேட்டான்.

“நீயும் அத்தாரும் போய்ப் பாருங்கோ… கடைசியிலை ஏதோ ஒன்றை முடிவெடுத்த பிறகு நான் வாறன்”, சுமதிஉறுதியாகச்சொன்னாள்.

கார் மருதனாமடத்தை நோக்கிப் புறப்பட்டது.

கொஞ்சம் செக்கல்படும் நேரம்.

ஊரின் ஓரமாய் இருந்த ஒரு பனங்கானியின் நடுவில் இருந்த ஓலைவீடுதான்´தமிழ்ச்செல்வியின் வீடு என கை காட்டினார்கள்.

பெரிய படகு போன்ற கார் போய் றோட்டின் கரையில் நிற்க தென்னமட்டையில் கிறிக்கட் விளையாடிக் கொண்டிருந்த அரைக்காற் சட்டைகள் எல்லாம் காரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

சத்தம் கேட்டு பின் வளவில் கிடுகுஓலை பின்னிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி ஒன்றும் புரியாமல் முன் முற்றத்திற்கு வந்ததும் ஒரு கணம் திடுக்கிட்டு விட்டாள்.

ஒரு நிமிடத்தில் புகைப்படத்தை நினைவில் கொண்டு இராகுலனை தமிழ்ச்செல்வியும் தமிழ்ச்செல்வி இராகுலனையும் அடையாளம் கண்டுகொண்டாள்.

“வாங்கோ”  என குடிசையின் தாழ்வாரத்தில் பாயை எடுத்துப் போட்டாள்.

சிவகார்த்திகேயனும் இராகுலனும் போய் அமர்ந்தார்கள்.

ரைவர் காரினுள்ளேயே இருந்து கொண்டார்.

“தேத்தண்ணி குடிக்கிறீங்களா… சோடா வேண்டட்டுமா”

“தேத்தண்ணியே ஊத்துங்கோ”

இராகுலன் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே ஒன்று இரண்டு என்று பக்கத்து பக்கத்து காணிகளில் வசிப்பவர்கள் இராகுலனைப் பார்ப்பதற்கு முற்றத்தில் கூடிவிட்டார்கள்.

தமிழ்ச்செல்வியால் சரி,  இராகுலனால் சரி பெரிதாக எதுவும் கதைக்க முடியவில்லை.

“அப்புராசா… நீ இந்தப் பிள்ளைக்கு வாழ்க்கை குடுத்தால் உந்த மருதடியானுக்கு கோயில் கட்டி முடிச்ச புண்ணியம்  உனக்கு.  அப்பிடி அவள்  ஒரு  தங்ககட்டி எங்களுக்கு”

“யாருக்கும் ஒரு நோய் துன்பம் எண்டால் மோட்டர் சைக்கிளில் போட்டு எடுத்துக் கொண்டு ஓடுவள். அவள் எத்தினை சீவன்களைக் காப்பாற்றி இருக்கிறாள்”

“அவளை ஒருக்கா பாடச் சொல்லி கேட்டுப் பார் மேனை… உந்த சுசீலா ஜானகி எல்லாம் அவுட்”

தமிழ்ச்செல்வி எதுவும் பேசாது இராகுலனைப் பார்த்துக் கொண்டு வாசலோரம் நின்றாள்.

படத்தில் இருந்த கண்ணின் கவர்ச்சி இப்போ நேரிலும் இந்தச் செக்கல் இருட்டினுள்ளும் இருந்தது.

“நாங்கள்  போயிட்டு  வாறம்”  என சிவகார்த்கேயன் எழ முழு ஊருமே முற்றத்தில் இருந்து எழுந்தது.

“நல்ல செய்தி சொல்லி அனுப்பு மேனை” அந்தக் கிழவி கும்பிட்டு வழியனுப்பினாள்.

தமிழ்ச் செல்வி அசையாது தூணுடனேயே நின்றாள்.

கார் புறப்பட்டது.

*

வீட்டை வந்து இரவுச் சாப்பாடு முடிய பிள்ளைகள் தூங்கச் செல்ல நிலவு வெளிச்சத்தில் முற்றத்தில் கதிரையைப் போட்டுக் கொண்டு சிவகார்த்திகேயனும் இராகுலனும் மல்ரிட்டாவைப் பற்றியும் தமிழ்ச்செல்வியைப் பற்றியும் ஒப்பிட்டுக் கதைக்கத் தொடங்கினார்கள்.

சுமதியும் அடுத்தநாள் காலைச் சமையலுக்கு தேவையான வெங்காயத்தை ஒரு சின்ன சுளகில் எடுத்து தன் மடியில் வைத்து அதனை உரித்தவாறு இருவரின் கதைகளையும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

கொழும்பில் இருந்து புறப்படும் பொழுது நூறுமார்க்கும் மல்ரிட்டாக்கே என்று நிலைப்பாட்டில் நின்ற சிவகார்த்திகேயன் இப்பொழுது 50 அல்லது 55 என்றநிலைக்கு இறங்கி வந்திருந்தார்.

அதிலும் மல்ரிட்டாவின் அண்ணாவின் வர்த்தகம், குடும்ப கௌரவம் என்பதற்கே ஒரு 10 புள்ளி விழுந்திருந்தது.

இராகுலனுக்கு மல்ரிட்டாவின் பகட்டைவிட தமிழ்ச்செல்வியின் எளிமையும் அவளின் கண்களும் அதன் கவர்சியும் அதில் தெரிந்த ஒளியும் மேலாக சுற்றி நின்று அந்த ஊரே வாழ்த்தியதும் தான் அவன் கண்கள் முன் நின்றது. இராகுலனின் தராசு தமிழச்செல்வியின் பக்கமே மெதுவான சரியத் தொடங்கியிருந்தது.

ஆனால் எந்த முடிவும் நாளைக்கு தையல் கடைக்கு போன பின்னே.

இன்று போலவே திடீரென முதலில் தையல்கடைக்கு நேரடியாக போவதென்றும் பின்பு அவர்கள் அழைத்தால் கடையில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ப்ரியா வீட்டுக்குப் போய் அவளது பெற்றோரையும் சந்திப்பது என முடிவானது.

அடுத்த நான்கு நாட்களில் சதுரங்க காய்களை நகர்த்த வேண்டிய அவசரம் இராகுலனுக்கு!

“நாளைக்கு அங்கே போன பிறகு மூன்றும் கிட்டகிட்ட நின்றால் லொத்தர் போடுவியாளா? இல்லாட்டி கோயிலைலை  3  பூப்போட்டு எடுப்பிங்களா”

சுமதி கேட்டது கிண்டலா அல்லது உள்ளார்ந்த அர்த்தத்துடன் கேட்டாளா என அறியமுடியாது சிவகார்த்திகேயனும் இராகுலனும் படுப்பதற்காக உள்ளே எழுந்து போனார்கள்.

“நான் யாரையும் கலியாணம் செய்யமாட்டன் சரசு…இது சத்தியம் சரசு….”

எட்டிப் பார்த்தார்கள்.

கார் போர்ட்டிக்கோவில் படுத்திருந்த ரைவர் நித்திரையில் அலற்றிக் கொண்டு இருந்தான்.

இல்லை… அவன்  அரைத் தூக்கத்தில் இருந்தான்.

*

ஒரு பக்கம் மானிப்பாய்மருதடி,  மறுபக்கம் சுதுமலைஅம்மன், அடுத்தபக்கம் ஆனைக்கோட்டை மூத்தநயினார், இன்னோர் பக்கம் வேலக்கைப் பிள்ளையார் அத்தனை கோயில்களின் காலை மணியோசைகளுடனும் மானிப்பாய் விழித்துக் கொண்டது.

கூடவே அன்று காலை அந்தோனியார் ஆலயத்திலும் செவ்வாய்க்கிழமைப் பூஜைக்கு சைவசமயத்தவரும் கத்தோலிக்கத்தரும் கூடி இருந்தார்கள்.

இராகுலன் நித்திரையில் இருந்து எழுந்து கிணற்றடிப் பக்கம் போனான்.

ஒரு பெண் அவனது உடுப்புகளைத் தோய்த்து கொடியில் உலரப் போட்டுக் கொண்டு நின்றாள்.

தனது உடுப்புகளில் அவன் கண்கள் பதிந்த பொழுது ஒரு கணம் திக் என்றது.

அவனது உள்ளாடைகளும் தோய்க்கப்பட்டு அங்கே தொங்கிக் கொண்டு இருந்தது.

அந்தப் பெண்ணின் பின் புறமே தெரிந்;தது.

“நீங்களா இதொல்லாம் தோய்த்தது”

குரலில் கொஞ்சம் கடிமை இருந்தது.

“எல்லாம் அழுக்கு உடுப்புதானே.  அதிலை என்ன வேறுபாடு”

இராகுலனுக்கு  ‘திக்’  என்றது.

“நான் தான் கவனிக்காமல் எல்லாத்தையும் அள்ளிப் போட்டுட்டன். ஏன் வீணாய் சாயினியை வெருட்டுறாய்” என்றபடி சுமதி கிணற்றடிப் பக்கம் வந்தாள்.

சாயினி சுமதிக்கு சமையலுக்கு உதவுவதற்காக குசினிக்குள் போய் விட்டாள்.

“எத்தினை மணிக்கு நீயும் இவரும் தையல் கடைக்கு போகப் போறியள்”

“ஒரு பத்து மணி போலை…”

“சரி.. குளிச்சிட்டு சாப்பிட முதல் என்னோடைவா… அம்மா எப்பவும் விளக்கு வைச்சு கற்பூரம் கொழுத்துற அரசடி அம்மனிற்றை போயிட்டு வருவம்… .இண்டைக்கு செவ்வாய் கிழமை வேறை”

சுமதி சொன்னால் அவள் இளையவள் ஆனாலும் எப்பவும் மறு பேச்சில்லை.

இராகுலன் குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த பொழுது, கையில் கற்பூரமும் நெருப்பெட்டியும் விளக்கெண்ணையும் திரியும் எடுத்துக் கொண்டு சுமதி நின்றாள்.

“நீ அம்மாவைக் கும்பிட்டுட்டு வா,  நான் முன்னாலை போய் கோயிலைப் போய்க் கூட்டுறன் ”.

சுமதி போய் பத்துநிமிடத்தில் இராகுலன் அரசடி வாசலுக்கு வந்து சேர்ந்தான்.

தாயைப் போலவே சுமதி கோயிலை அழகாகப் பெருக்கி தண்ணியும் தெளித்திருந்தாள்.

விளக்கும் வைச்சு கற்பூரமும் கொழுத்தி விட்டு, “வடிவாய் கும்பிடு” சுமதி சொல்ல இராகுலன் கும்பிட்டான்.

“இராகுலன் நான் உனக்கு தங்கச்சிதான்.

ஆனால் அம்மா போலை இந்த இடத்திலை வைச்சு சொல்லுறன்.

நீயும் அத்தாரும் பார்க்கிற உந்த சம்பந்தங்கள் உனக்கு சரி வராது.

சுகன்யா அண்ணி செத்துப் போன பிறகு அங்கை தனிச்சு வாழுற உன்ரை வாழ்க்கைக்கு ஒருதுணை தேவை எண்டது எனக்கும் தெரியும். ஆனால் பிள்ளைகுட்டி பெறுகிற வயதைத் தாண்டிட்டம் என்று பயத்திலை, அல்லது பிள்ளையளோடை யாரையும் கட்டினால் அதாலை பிரச்சனைகள் வரும் எண்டு கணக்க கொன்டிசன்களைப் போட்டு ஒரு பொம்பிளைதேடுறாய்.

நீ படிச்ச கணக்கு பாடம் போலை தரவுகளைப் போட்டு நிறுவ வேண்டியதுகளை நிறுவப் பார்க்கிறாய்.  ஆனால் வாழ்க்கைக்கு உதெல்லாம் சரிவராது.  உனக்கு சரி, உனக்கு வாற அந்தப் பொம்பிளைக்கு சரி வயதான காலத்திலை உங்களைப் பார்க்கிறதுக்குச் சரி…,  உங்கடை அன்பைபங்கு போடச் சரி உங்களுக்கு பிள்ளைகள் வேணும். எல்லாத்துக்கும்மேலாலைஒருவிதவைப்பெண்ணுக்கு  வாழ்க்கை கொடுக்க வேணும் எண்டது ஒரு தர்மம். அதைத்தான் நீயும் ஒரு வழியிலை செய்ய விரும்புறாய். அதோடை அதுகள் பெத்த ஒன்றிரண்டுக்கும் சேர்த்து வாழ்க்கை கொடுத்தால் எங்கடை பரம்பரைக்கே எவ்வளவு புண்ணியம் தெரியுமோ?”

“சுமதி?”

“ஓம்…  நான் சாயினியைத்தான் சொல்லுறன்.  இப்ப 5 வருசமாய் எங்கடை வீட்டை தான் வேலை செய்யுது. அம்மாவை கடைசிக் காலத்திலை தூக்கிப்பார்த்தது அவள்தான். அவள் என்ன சாதிசனம் எண்டது கூட எனக்கு தெரியாது. என்ரை வீட்டை சாமியறை தொடக்கம் எல்லா இடமும் போய் வாற சுதந்திரம் அவளுக்கு இருக்கு. காரைநகரில் இருந்து இடம் பெயந்து வந்து கோயில் காணிகளிலை மூன்று சின்னப் பிள்ளைகளோடை இருக்கிறாள். அதுகளுக்கு நீ ஒரு வாழ்வு குடுத்தால் அந்த நாலு சீவன்களுக்கு வாழ்க்கை கொடுத்த புண்ணியம் உனக்கும் எங்கடை சந்ததிக்கும் எண்டைக்குமே இருக்கும்!”

இராகுலன் நிமிர்ந்து சுமதியின் கண்களைப் பார்த்தான்.

ஒன்றினுள் அம்மாவும் மற்றையதுள் அம்மனும் தெரிந்தார்கள்!

(முற்றும்)

2 Comments on “மணமகள் தேவை

  1. சொற்களிற்கிடையே இடைவெளி இல்லை. வாசிக்க முடியாமல் உள்ளது.

  2. 44.கம்பாாாா் தெரு.பழைய பல்லாாாாாவரம் .சென்னை

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)