போராட்டம் – சிறுகதை
எல்லாமுமாய் இருந்து பின்
எதுவுமே இல்லை என்பது போல
உணரும் பொழுதுதான் வாழ்க்கையின்…
இல்லையில்லை… என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது!
ஆம்!
18 வருடங்கள்…
வீட்டை விட்டு ஓடிப்போய் இயக்கத்துள் சேர்ந்த பொழுது வயது 22.
இப்போ எல்லாம் முடிந்து புனர்வாழ்வு அது இது என்ற பெயரில் ஆறு வருடங்கள் மேலும் ஓடி… நேற்று விடுதலையாகி வீட்டுக்கு வந்த பொழுது வயது 40.
அப்பா நன்கு ஒடிந்து போயிருந்தார்.
பேப்பரினுள் இருந்து தலையைத் தூக்கி மெதுவாக ”சரணடைந்த பிறகு ரொம்ப தும்புறுத்தினாங்களா” என கேட்டார்.
”இல்லை” என்று ஒரு பொய்யைச் சொன்னேன்.
அம்மாவும் பெரிய ஆரவாரம் எதுவும்படவில்லை.
பெரிய துவாய் ஒன்றையும் மஞ்சள் டப்பாவையும் கற்பூரத்தையும் நெருப்பு பெட்டி ஒன்றையும் கொண்டு வந்து தந்து, ”வடிவாய் உடம்பு முழுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்து விட்டு நேரடியாய் அரசடி அம்மனிடனிட்டை போய் கற்பூரத்தைக் கொழுத்துp கும்பிட்டு விட்டு வீட்டுக்குள்ளை வா” என்றபடியே குசினிக்குள் போய்விட்டா.
தம்பியனும் தங்கச்சியும் கல்யாணம் செய்து அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்திற்கும் போய் விட்டார்கள்.
அப்பாவின் கச்சேரி சம்பளம்… பின்பு பென்சன் காசு… அம்மா சீதனமாய் கொண்டு வந்த காணி பூமிகள் இவை எல்லாம் தான் எங்களை கடன்கிடன் எதுவுமே இல்லாமல் ஊரில் தலைநிமிர்ந்து வாழ வைத்ததும்… பின்பு நான் போராட்டத்திற்கு போன பின்பும் தங்கையையும் தம்பியையும் பல்கலைக்கழகம் வரை படிப்பீத்து வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுக்கும் வரை எங்கள் குடும்பத்திற்கும் பின்பலமாக இருந்தது.
நான் போன பொழுது ”அவளை விட்டு விடுங்கோ” என தினம் தினம் அழுத கதறிய ஐயா அம்மாவின் அழுகைகள்… வீட்டில் துக்கம் விசாரிக்க என்று கூடிய ஊர்… சொந்த பந்தங்கள்… எதுவுமே நான் வீட்டை திரும்பி வந்த பொழுது என்னைக் கண்டு கொள்ளவில்லை.
வீட்டுக்கு முருங்கையிலை பிடிங்கிச் செல்ல வரும் கனகம் மாமி… ஐயாவிடம் ஆங்கில பாடத்தில் சந்தேகம் கேட்க மகளைக் கூட்டி வரும் சிவபாலன் மாமா… பின்நேரத்தில் வீட்டுக்குந்தில் இருந்து ஊர் விடுப்பு கதைக்கவும் வெங்காயம் புளி உடைக்கவும் சோடியாகவே வரும் பென்சனியர் சிவசம்பு மாஸ்டர்; பார்வதி மாமி… அம்மாக்கு மா இடிக்கவும் வறுத்திக் கொடுக்கவும் வரும் சரசு… அவள் புருசன் கதிர்காமன்… இன்னும் இன்னும் இன்னாரும்… இப்போதும் வயதின் முதிர்ச்சியுடனும் காலம் அவர்கள் முகங்களில் போட்ட கறுத்த கோடுகளுடனும் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் அப்போது என் பல்கலைக்கழக படிப்பு பற்றியும் தங்கள் பிள்ளைகள் என்ன என்ன படிக்கலாம் என்றும் பின்னேரங்களில் ரியூசன் சொல்லிக் கொடுப்பீர்களா என்று கேட்ட எவருமே எது பற்றியோ என்னிடம் எந்த கேள்ளிகளும் இல்லை.
என்னை வினோதமாக பார்த்தபடி… அல்லது வலிந்த ஒரு புன்னகையை முகத்தில் தவழ விட்டபடி…. ”பிள்ளை வந்திட்டாப் போலை…” என்று கேள்வியும் இல்லாத… பதிலும் இல்லாத ஒரு வசனத்தில் தங்கள் உரையாடலை என்னுடன் முடித்து விட்டு…. தங்கள் தேவைகளையும் வேலைகளையும் ஐயா அம்மாவுடன் முடித்துக் கொண்டு விரைவாகவே போய்விடுவார்கள்.
நானும் ஏதோ ஒரு இந்திய – இலங்கைத் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவேன்.
22 வயதில் இயக்கத்துள் போகும் போதும் சரி… 34 வயதில் சிறிலங்கா ஆமியிடம் சரணடைந்தல் என்ற பெயரில் சிறைப்பட்ட போதும் சரி அதுவரை இருந்த விவேகம்… வேகம் எல்லாமே இன்று மரத்துப் போன ஒரு உணர்வுதான்.
பல்கலைக்கழகத்திலில் இருந்து வீட்டை வராமல் மடிப்புக் குறையாத சேலையுடனும் நெஞ்சுடன் அணைத்த புத்தக கட்டுடன் இயக்க நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கமாக ஏறி அமர்ந்து வன்னிக்காட்டுக்குள் மறைந்த அதே நான்… அடுத்த 365 நாட்களில் அதே போன்ற இன்னோர் மோட்டார் சைக்கிளை போராளி உடையுடனும் கத்தரிக்கப்பட் கட்டை முடியுடனுடம் தோளில் துப்பாக்கியுடனும் அதிவேகத்துடன் ஓட்டிச் செல்வேன் என்று யார் நினைத்திருந்தது.
பூமிப்பந்தை எங்கள் கைகளில் ஏந்திநிற்கின்றோம் என எங்கள் தோள்களை நாங்களே தட்டிக் கொடுத்த நாட்கள் அவை.
சமர சுதந்திரப் பூமி என்பது மட்டும் இந்த கலைத்துறை மாணவியின் கனவாய் இருந்தது.
சில சில அடக்குமுறைகளையும்… நியாயப்படுத்தப்படும் மரணங்களையும் கண்டு கொள்ளாதீர்கள் என்று பாலபாடம் சொல்லித்தரப்பட்டது.
போரில் இழப்புகள் தவிர்க்க முடியாது என்பது தத்துவார்த்தமானது.
அமைதியான இரவுகளில் சுற்றிலும் கேட்கும் துப்பாக்கி சூடுகளில் எதிராளி ஒருத்தனை வெற்றி கொண்டிருப்போம். அல்லது எங்களுடன் அடுப்பு மூட்டி சோறுகாச்சி உண்ட தோழன் தோழிகளில் ஒருவரை வீர மரணத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்திருப்போம். அல்லது முகம் தெரியாத ஒரு துரோகிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.
எங்களுக்கு தெரிந்தவை மிகக் குறைவு. தெரியாதவை அதிகம்.
குருசேத்திர யுத்தம் போல் இது நியாயப்படுத்தப்பட்ட போர். போர்க்களத்தில் நின்று கொண்டு நியாயம் அநியாயம் பற்றி ஆராய்ச்சிகள் பட்டி மன்றம் நடாத்த எங்களுக்கு நேரம் இருப்பதில்லை.
வைலர்சில் வரும் கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் நடந்து கொண்டும் ஒளிந்து கொண்டும் ஓடிக்கொண்டு இருப்போம். எங்கு வெடி வைக்கவேண்டுமோ அங்கு வெடி வைப்போம்.
ஆம்! அது ஒரு பன்றி வேட்டை போல இது மனித வேட்டை.
சுதந்திரத்திற்கான மனித வேட்டை.
சகோதரர்களையே நோக்கி அம்புவிடும் குருசேத்திர மனித வேட்டை.
இயற்கை தரும் மூன்றுநாட்கள் விடுப்புகளில் தாக்குதல் ஏதும் இல்லாயாயின் அன்று அதிகமாக எனது இரைமீட்டல் தினங்களாக இருக்கும்.
வயதுக்கு வந்த பொழுது நல்லெண்ணையையும் முட்டையையும் வலிந்து திணித்து என்னைப் பார்த்துக் கொண்ட அம்மா… சின்ன வயதில் இருந்து சம்பளத்தினத்தில் எனக்குப் பிடித்த அம்புலிமாமாவை ஒரு கையிலும் தனக்குப் பிடித்த பூந்தி லட்டையும் பெரிய உழுந்து வடையையும் வாங்கி வரும் அப்பா… பாடசாலை வீட்டு வேலைகளை என்னைச் செய்து தரச் சொல்லி அடம் பிடிக்கும் தங்கை… கிறிக்கட் மட்டையை தன்னுடனே கைத்துப் படுக்கும் என் அன்புத் தம்பி… அட்வான்ஸ் லெவல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பஸ்சினுள் கலாய்க்கும் மாணவர்கள்… அதில் அமைதியாக புன்னகைக்கும் குமரன்…பல்கலைக்கழக அனுமதி கிடைத்த பொழுது வீட்டையே திருவிழாவாக மாற்றிய எங்கள் உறவினர்கள் ஊராவர்கள் என ஒவ்வொருவரின் நினைவுகளும் வந்து போகும்.
வயதின் கோளாறோ… அன்றி வாழ்க்கையில் இந்த கொழுகொம்பை தடவிப் படர்ந்தால் நன்றாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் அலைபாயும் மனமோ எனக்கு தெரியாது. ஆனால் குமரனுடன் என் வாழ்வை பல தடவை என் மனதினுள் இணைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன் – இயக்கத்துக்கு போகும் வரை.
ஆனால் என்றோ ஒரு நாள் ஒரு பகுதியோ அல்லது முழுமையோ முடமாகி அல்லது திறக்க முடியாத பெட்டியுனுள் நாலு போராளிகள் சுமந்து வர வீட்டுக்கு வரவிருக்கும் என் நினைப்புகள் அவனுக்கு எந்த தோல்வியையும் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
எனது போராட்டம் நாட்டுக்கு விடிவைத் தரும் என்று நான் என்னுவது போலவே அவனது கல்வி இதே நாட்டை முன்னேற்றம் காண உதவும் என்று என நம்புவன். அவனின் மனச்சஞ்சலங்களுக்கு நான் எந்த விதத்திலும் காரணமாக இருக்க கூடாது என உறுதியாகவே இருந்தேன்.
மேகங்கள் கூடிவரும் பொழுது எங்கேயோ இருந்துவரும் காற்று அனைத்தையும் கலைத்து விட்டுப் போவது போல இறுதியுத்தம் வந்தது.
கலைத்து விட்டதுமட்டுமல்ல… அடுத்ததொரு சந்ததிக்கு இந்தகைய சிந்தனையே வரக்கூடாது என்பது போல அதனை நடாத்திவிட்டுச் சென்றது.
போர்க்குற்றங்கள்… போர்க்குற்ற விசாரணைகள்… வென்றவன் தோற்றவன் இருவருமே குற்றவாளிக் கூண்டில்! விபச்சாரம் செய்தவளை ஊரே கூடிக் கல்லெறிந்தது போல இறந்த போராளிகள்… உயிருடன் இருக்கும் போராளிகள்… அங்கவீனர்களாகிய போராளிகள் அனைவர்மேலும் கல்லெறிகள் விலத்தொடங்கியது.
பலம் உள்ள பொழுதுதான் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கும் என்று அரசியல்பொறுப்பாளர் சொன்னது ஞாபகம் வருகிறது.
இப்போது எந்தப் பலமும் இல்லை.
மூலஸ்தானத்தில் இருந்த கற்சிலை இப்போது பெயர்த்தெடுக்கப்பட்டு வீதியோரத்தில் எறியப்பட்டிருக்கின்றது.
அதன் மீது காக்கைகளினதும் குருவிகளினதும் எச்சங்கள்.
நாங்கள் சென்ற பாதைகளில் இருந்த சரி… பிழைகள் எல்லாமே இப்போதுதான் தெரிகிறது. அங்கிருக்கும்வரை இலட்;சியங்கள்தான் அனைத்தும் – இருபுறம் கண்பட்டம் கட்டப்பட்ட குதிரைகள் போல ஓடிக்கொண்டு இருந்தோமே தவிர வெளியுலகம் எதையும் எங்களால் பார்க்க அவகாசமும் இருக்கவில்லை – அனுமதியும் இருக்கவில்லை.
எல்லாமே காலம் கடந்த உபதேசங்களாக… எங்கள் பூமியில் நாங்களே மீண்டும் ஒரு அகதிகளாக… மீண்டும் மேற்கு நாடுகளில் நீதிக்கும் உணவுக்கும் கையேந்தியபடி.
மேலாக கல்யாண அகதிகளாக சாதி-சம்பிருதாயம்-சாஸ்திரம் பார்த்து ஏற்றுமதி செய்யும் பெண்கள் வரிசையிலும் அப்பா என்னை பதிவுசெய்திருந்தார் – ஓர் மணமாலை இணையத் தளத்தில்.
சுவிசில் இருந்து ஒரு திருமணம் வந்திருந்தது.
போராட்டத்தின் முழுப்பணப்பலத்தையும் தாங்கியவர்கள் என்ற பெருமையையும்… போராட்டம் மௌனித்த பொழுது அதே பணபலம் கண்களை மூடிக்கொண்டது என்ற சிறுமையையும் இந்த புலம்பெயர் தமிழர்கள் மீது ஏற்படுத்தியிருந்தது.
பெருமையை விட வெறுப்பே அதிகமாகி இருக்கின்றது
இப்பொழுது அதே கூட்டத்தினுள் போய் வாழ்வதற்கு ஐயா நிர்ப்பந்திக்கின்றார்.
“நடந்த எல்லாவற்றையும் கெட்ட கனவாக மறந்திடு” என்று தினமும் அம்மாவும் ஐயாவும் திரும்பச் திரும்பச் சொல்லி… அம்மியைக் கரைய வைத்த பொழுதுதான் சுவிஸ் சம்மதம் வந்தது.
தாரம் இழந்த என் வயதொத்த ஒருவருக்கு இரண்டாம் தாரமாக.
“40” என்னும் என் வயது… இயக்கத்துக்கு போய் வந்தவள் என்ற அடைமொழி… இரண்டும என்னை இந்த “இரண்டாம் தார” ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து விட்டிருந்தது.
இடைக்கிடை குமரனின் நினைவு வந்து போகும்.
கந்சேரியில் எ.ஜி.எ ஆக இருக்கின்றாராம். திருமணமாகி இரண்டு பிள்ளைகளாம்.
நினைவுகளை பின்தள்ளி நிஜயங்கள் முன் வந்து நின்றது.
தை பிறக்கட்டும் என்று காத்திருந்த அவர்கள் குடும்பம் நேற்று என்னை பெண்பார்க்க வந்தார்கள்.
தாய் தந்தை தமக்கையருக்கு பிடித்திருந்தால் பின் அவர் ஸ்கைப்பில் பேசுவாராம்.
அம்மா காலையில் இருந்து தனியே குசினியுள் போராடினாள்; – வடை மோதகம் முறுக்கு.
ஐயா காலைச் சந்தை கூடும் பொழுதே போய் பெரிய இதih கப்பல் வாழைப்பழங்களும் இதர பழங்களும் வாங்கி வந்தார்.
வீட்டை துப்பாரவாக்குவது என் பணியாக இருந்தது.
பின்னேரம் நாலு மணிபோல் அவர்களும் கொழுக்கட்டை வாழைப்பழம் சகிதம் வந்திருந்தார்கள்.
தகப்பன் – தாய் – தமக்கை – தமக்கையின் கணவன் – அவர்களின் ஏழு வயது ஒரு சுட்டிப் பெண்;.
நல்ல குடும்பம் போல் இருந்தது.
தகப்பனாரும் தமக்கையின் கணவனாரும் மிக இயல்பாக ஐயாவுடன் அன்றைய அரசியல் தொடக்கம் இன்றைய வாழ்க்கை வரை சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
என்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் என்ற நினைப்பை மறந்து விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் சம்பாசணை இருந்தது.
தாயாரும் தமக்கையாரும் என்னை அன்புடன் உபசரித்து பேசிக்கொண்டு இருந்தாலும் அவர்களின் சம்பாசணைகள் ஊடாக ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டு இருந்தது.
அதனை என்னால் உணரத் தொடங்கினாலும் நேரடியாக கேட்காத எந்தக் கேள்விக்கு என்ன பதிலை நான் சொல்வது.
சுமார் ஒன்றரை இரண்டு மணித்தியாலம் கடந்த பொழுது அவர்கள் கிளம்ப ஆயுத்தமானார்கள்.
வந்த நேரத்தில் இருந்து ஒவ்வொருவரின் மடியிலும் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஏழு வயது சுட்டிப் பெண் இப்போது என் மடியில் உட்கார்ந்திருந்தாள்.
“மாமி உங்களிட்டை ஒன்று கேட்கட்டுமா?”
ஆம் எனத் தலையாட்டினேன்.
“நீ உன் வாலை வரப்போற மாமியிடம் ஆட்டாதே” என தாயார் எச்சரித்தாள்.
“இல்லை… நீங்கள் கேளுங்கள்” என நான் சொன்னேன்.
“உங்களுக்கு இயக்கத்தில் போய் பிரண்ட் யாராவது இருக்கவில்லையா?”
“சுகி! அடங்கமாட்டியா” தாய் உறுக்கினாள்.
“ஆமிக்காரன்கள் உங்களை எந்த தொந்தரவும் செய்யவில்லையா”
“சுகி! சட் அப்… வீட்டை வா நான் வைச்சிருக்கிறன்”
காரில் வரும் பொழுதோ அல்லது வர முன் வீட்டினுள்ளேயே எழுதப்பட்ட மூலக்கதைக்கு பிள்ளை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டு இருக்கின்றது என புரிந்தது.
“குறையாய் எடுக்காதையுங்கோ… அவள் குழந்தை… இப்பிடித்தான் ரொம்ப வாய்”
ஆளுக்கால் கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு புறப்பட்டார்கள்.
“அம்மாக்கும் மகளுக்கும் நெடுக சொல்லுறனான். குழந்தைப்பிள்ளைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு கிழட்டுக் கதையள் கதையாதையுங்கோ எண்டு” மருமகன் மாமியாரையும் மனைவியையும் மெதுவாக ஏசிக்கொண்டு காரில் போய் ஏறிக்கொண்டார்கள்.
காரில் இருந்து எழுந்த டீசல் புகை கண்களில் எரிவை உண்டாக்கியது.
அவர்கள் போன பின்பு ஐயாவோ அம்மாவோ எதுவுமே பேசவில்லை.
நான் தான் அவர்களது மௌனத்தைக் கலைத்தேன்.
“இனிமேல் நீங்களாவது எங்கள் போராளிகளை கொச்சைப்படுத்த இடம் கொடுக்காதையுங்கோ”
*
குறையொன்றும் இல்லை… மறைமூர்த்திக் கண்ணா என்ற பாடலை திரும்ப திரும்ப போட்டுக் கொண்டு என் மனதை தேற்றப் பார்த்தாலும் அலைபாயுமம் என் மனத்தை… என்னுள் எழுந்து தாழும் சமுதாய கோபத்தை… இதுக்காகவா என்ற ஆற்றாமையை அடக்க முடியாமலே இருக்கின்றது.
எல்லாமுமாய் இருந்து பின்
எதுவுமே இல்லை என்பது போல
உணரும் பொழுதுதான் வாழ்க்கையின்…
இல்லையில்லை…
என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது!
**
மிக அருமை நண்பரே