புதுப்புலவு – சிறுகதை
புதுப்புலவு(1979ம் ஆண்டு ஆகஸ்ட் கலவரத்தின் பொழுது எழுதப்பட்டது)
‘தனியனுக்கு மதம் பிடிச்சு றோட்டுக்கு வந்து கடையள் எல்லாம் உடைச்சு எறியுதாம்”
‘வெருண்டு ஓடட்டும் எண்டு ரயரைக் கொழுத்திப் போட,அதையும் தூக்கிப் புத்தகக் கடைக்கு மேலை எறிஞ்சு போட்டுதாம். கடை பத்தி எரியுது.”
‘உந்தச் சனியனுக்கு வருஷத்துக்கு ஒருக்காவாவது மதம் வருகுது”
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அந்தக் காட்டை ஒரு கிழமைக்கு முதலே நெருப்பு வைச்சு அழிச்சு கொட்டிலும் போட்டிருந்தனர்.
கட்டைகளையும் வேர்களையும் கிளறிப் பின்னால் குவித்து விட்டிருந்தனர்.
‘இராவைக்கு நெருப்பு வைச்சால் இந்தச் சோளகக் காத்துக்கு கருகிப் போடும் பிள்ளை” காளிமுத்துக் கிழவனார் கூறினார். அந்தக் காட்டு வீரைகளையும் பாலைகளையும் விட பலமான பழுத்த கட்டை அவர்.
‘அப்பு இந்தப் போகத்துக்கு ஒரு கை பார்க்கிறது எண்டுதான் நிற்கிறியள்”, இது பேத்தி கமலா.
ஐம்பத்தெட்டுக் கலவரத்துக்கை மகளையும் மருமகனையும் சாகக்கொடுத்து விட்டு கைக்குழந்தை கமலாவுடன் காலியிருந்து புளியங்குளத்துக்கு வந்து சேர்ந்தவர் தான் காளிமுத்துக் கிழவர்.
காட்டுத்; தீ வைப்பு…கட்டையடிப்பு…விதைப்பு…அரிவு வெட்டு என கூலிவேலைக்கு சென்று. . . இந்த பதினெட்டு வருஷமாக அந்தக் காட்டையே படித்திருந்த அவருக்கு இப்பதான் புதுப்புலவு செய்யக் கடவுள் கண்ணைத் திறந்து விட்டிருக்கிறார்.
‘இந்தப் போகத்தோடை உன்னையும் ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுத்திட்டன் எண்டால் எனக்கு என்ன கவலை?. . . .உந்தக் கொள்ளியை கொஞ்சம் இஞ்சை எடு பிள்ளை” வாயில் ஓர் சுருட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.
‘நானும் கலியாணம் செய்து போட்டால் தாரப்பு உனக்குத் துணை”
‘போடி விசர்ப் பெட்டை. . . இந்தக் காட்டுக்கை தாரை நம்பி வந்தனான். இப்ப புதுப்புலவு செய்யப் போறன்”
வெட்டிக் குவித்துவிட்ட அந்தக் கட்டைகளையும் கருகிப் போன பற்றைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்த கிழவனார் ஓர் பெருமூச்சு விட்டார்.
‘என்னப்பு பெருமூச்சு விடுகிறியள்”
‘இல்லையடியாத்தை. . . உந்த விதானைமாரை கையுக்கை வைச்சுக் கொண்டு யாழ்ப்பாண வாத்திமார் இஞ்சை வந்து கமம் செய்து காணி பூமி சேர்க்க நாங்கள் தானே அடிச்சுக் குடுத்தது. . . . இந்தக் காணியள் அப்பவே எங்களுக்கு கிடைச்சிருக்க எத்தினை போகம் கண்டிப்பன் சொல்லு பார்ப்பம்”
‘சரியப்பு போனதுகளை நினைச்சு என்ன பிரயோசனம். நானும் தோட்டவேலைப் பாடத்துக்கு வாத்திமாரின்ரை காணிகளுக்கை களைபிடுங்கி திரிஞ்சனான் தானே?”
இயலாமையில் எழுந்த சோகத்தை கிடைத்த காணியைக் கொண்டு மறந்தாள் கமலா.
‘அப்பு மண்ணென்னையும் இல்லை. வேளைக்கு சாப்பிடுங்கோ. நான் சட்டி பானையளைக் கழுவி வைக்கவேணும்”
‘இல்லையடி பிள்ளை நீ தட்டுக்கை போட்டு வை. நான் கட்டையளுக்கு நெருப்பு வைச்சிட்டுத்தான் சாப்பிடுவன்”
மெதுவாக எழுந்து கட்டைக் குவியலடிக்குப் போனார்.
கட்டைகள் எல்லாம் காய்ந்து பொலபொலவென்றிருந்தது.
ஒரு கட்டையை எடுத்து தட்டவே சருகுகள் எல்லாம் உதிர்ந்தன.
‘நல்லாய் காஞ்சிட்டியள். . .பொறுங்கோ வாறன்” என தன்பாட்டில் மரக்கட்டைகளுக்கு கதை சொன்னபடி நெருப்பு பந்தந்தைக் கொழுத்தி கட்டைகள் நடுவில் செருகி விட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாய் புகையைக் கிளப்பிய அந்தக் கட்டைக் கும்பல் சிறிது நேரத்தில் மொற மொற என எரியத் தொடங்கியது.
‘அப்பு திறமாய் எரியுதனை” என சின்னக் குழந்தை போலை கமலா ஓடி வந்து கிழவனுக்கு பக்கத்தில் ஒட்டிக் கொண்டாள்.
வானத்தை நோக்கி எழும்பிய தீச்சுவாலைகள், அதோடு மேலே எழும் தீப்பொறிகள் அந்த மாலைக்கருக்கலுக்கு ஓர் அழகைச் சேர்த்தது.
பின்வளவு இலுப்பையில் நின்ற குரங்குகள் பக்கத்துக் காணிகளுக்குள் தாவி ஓடின.
‘உவை இனி இரண்டு மூண்டு நாளைக்குப் பிறகுதான் வருவினம்”
நெருப்பின் வெளிச்சத்தில் கிழவனாரின் முகத்தில் தெரிந்த அந்தப் பிரகாசம்அவரின் புதுப்புலவு செய்யப் போகும் இலட்சிய வெறியை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அந்த நெருப்புச் சுவாலைகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிழவனாரினதும் கமலாவினதும் கவனத்தை சின்னவனின் அவலுக்குரல் திடுக்கிட வைத்தது. பின்வளவில் போடப்பட்டிருந்த வேலிக்கதியால்களை தள்ளியபடி ஓடி வந்து கொண்டிருந்தான்.
‘அப்பு! தண்ணியை ஊத்தி முதலிலை இதை அணையுங்கோ. தனியனுக்கு மதம் பிடிச்சு கடையடியெல்லாம் பெரிய அல்லோலம். நெருப்பைக் காண இன்னும் வேகம் கூடுதாம்”
‘அநியாயத்தை. . . ” என தவித்த அவர்கள் அவசர அவசரமாக தண்ணியை அள்ளி வந்து எரிந்து கொண்டிருந்த கட்டைகள் மீது ஊற்றினார்கள். கறுப்பும் வெள்ளையுமாக புகை கிளம்பியது.
சாக்காட்டுக்குருவி ஒன்று வடக்கிலிருந்து தலைக்கு மேலாக தெற்கு நோக்கிப் பறந்து போனது.
‘உஸ்”என சுவாலைகள் புகையைக் கக்கி கொண்டு அணைந்து விட்டாலும் மரக்கட்டைகள் வெக்கையில் கருகிக் கொண்டிருந்தது” கிழவனாரின் மனம் போல். . . .
‘கச்சானுக்கிடையிலை விதைக்கேலாதோ அப்பு”
‘உந்த சனியனை சுட்டொழித்தால் தான் நிம்மதியாய் புலவு செய்யலாம்”
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
அடுத்தநாள் காலை சனமெல்லாம் சந்தியில் கூடிநின்று கதைப்பதும்.. வேடிக்கை பார்ப்பதும்…கடைகளில் எரிந்தவை போக எஞ்சியுள்ளவகைகளை எடுத்து வெளியில் அடுக்குவதாயும். . . .கடையடியே கலவரப்பட்டுக் கொண்டு இருந்தது.
அனேக கடைகள் முற்றாக கருகியிருந்தன.
விதானையார் அங்கு வந்து யார் யாருக்கு சேதம் எவ்வளவு என எழுதிக் கொண்டு நின்றார்.
‘விதானையார் உந்தத் தனியனைச் சுட்டுவிட்டால் பிரச்சனை இல்லைத் தானே” சனத்திடையே ஒரு குரல்.
‘அவசரப்படாதை மணியம். யானை தேசிய விலங்கு அதைச் சுடக்கூடாது”
‘அப்ப அழிக்க அழிக்க பார்த்துக் கொண்டு இருக்கிறதோ?”
‘அப்பிடியில்லை. . . . சேர்மன் இப்ப கச்சேரிக்கு கதைக்கப் போயிருக்கிறார். மேலிடத்துக்கும் முறைப்பாடு செய்வார். அவை யானையைப் பிடிச்சு மதத்தை அடக்க யோசிக்கினம்”
விதானையரைச் சுற்றிச் சனம் நின்று கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஒரு ஜீப் வந்து நின்றது.
அதிலிருந்து வெள்ளைவேட்டி சகிதம் சேர்மனும்… அவர் மனைவியும் வந்து இறங்கினார்கள். விதானையார் ஓடிப்போய்க் கூனிக்குறுகி நின்று கதைத்துவிட்டு ‘எல்லோரும் இருங்கோ. ஐயா சில விசயம் சொல்லப்போறார்” என்றார்.
அனைவரும் றோட்டுக் கரையிலும் கல்லுக் கும்பிகளிலும் குந்திக் கொண்டார்கள்.
‘அனைவருக்கும் வணக்கம். எம் பகுதியில் இப்பிடி நடந்தது மிக வேதனையான விடயமாகும். இதைப்பற்றி நாம் கச்சேரியில் கலந்துரையாடி விட்டுவீட்டிற்கும் போகாமல் நேரடியாக இங்கு வந்துள்ளோம். யானைக்கு மதம் பிடிக்காமல் வெளிநாட்டிலிருந்து ஓர் பெரிய ஊசியை வரவழைத்து அதனைப் போடவுள்ளோம். ஆகவே நீங்கள் எந்த வன்முறைகளிலும் இறங்க வேண்டாம். அகிம்சையால் தான் காந்தி இந்தியாவை வென்றெடுத்தார் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். அவ்வாறே நாமும் எதையும் அறவழியில் வெல்வோம். பாதிக்கப்பட்டோருக்கு இப்போதே நிவாரணத் தொகை கிடைக்கும்” எனப் பேசிய சேர்மன் பக்கத்தில் திரும்பி ‘கொஞ்சம் தண்ணி தாங்கோ. .. .தொண்டையை அடைக்குது” எனக்கூற’ஐயாக்கு தண்ணி வேண்டாம். நான் இளனி வேண்டிக் கொண்டு வாறன்” எனதன் கடையை எரியக் கொடுத்த ஒரு கடைக்காரர் ஓடினார்.
‘இப்போ சேர்மன் ஐயாவின் துணைவியார் அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்குவார்”என விதானையார் கூற குழுமியிருந்தவர்களின் கை தட்டல் காதைப் பிளந்தது.
காளி முத்துக் கிழவனுக்கு அதிலிருக்கப் பிடிக்காமல் எழுந்து போனார்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
காளிமுத்துக் கிழவனாரின் கொட்டிலினுள் மூன்று நான்கு வாலிபர்கள் உட்கார்ந்திருந்தனர்.
தீ வைத்து அணைத்த மரக்கும்பிகள் மீண்டும் தீ வைக்கப்படாமல் அப்படியே இருந்தன.
வாலிபர்கள் முகத்தில் விரக்தி நன்கு குடிகொண்டு இருந்தது.
‘உது சரிப்படாது. . . விதானையாரும் சேர்மனும் சனத்தைப் பேய்க்காட் நினைக்கினம். யானையின்ர மதத்தை தாராலும் அடக்க முடியாது. அது இயற்கை” என குமுறிக் கொண்டிருந்தான் ஒருத்தன்.
‘அதுக்கு மதம் வந்து ஊரை அழிச்சு அழிச்சுக் கொண்டுதான் இருக்கப் போகுது. . .
நேற்று ராத்திரி நல்லவேளை. . . உயிர்ச்சேதம் எதுவும் நடக்கேல்லை. . .நாளைக்கு அதுவும் நடக்காது எண்டது என்ன நிச்சயம். . . .சேர்மனும் செத்த வீட்டுக்கு வருவார். பெண்சாதியும் செத்தவீட்டில் பாடுவா. அத்தோடை கதை முடிஞ்சுடும். சனங்கள் கஷ்ட்டப்பட அவையள் தங்கட அவையள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுவினம். சனங்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாய் அழியவேணும்”
அது இன்னொருவனின் மனக்குறுமல்.
‘களவாச் சுடலாம். ஆனால் சேகுவராவோடை துவக்கெல்லாத்தையும் அரசாங்கத்திட்டை ஒப்படைத்தாச்சு. அப்பிடிச் சுட்டாலும் சனம் காட்டிக் கொடுத்திடுங்கள்” இது அடுத்தவன்.
சேர்மனையும் விதானையையும் நம்பக்கூடாது என்பதிலும் யானையை எப்படியோ அழிக்க வேண்டும் என்பதிலும் தீர்க்கமாக இருந்தாலும் எப்படி அதைச் செய்து முடிப்பது என்பதற்க்கு சரியான வழிதெரியாது ஆளை ஆள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காளிமுத்துக் கிழவர் ஒரு தரம் செருமி தொண்டையைக் கனைத்து விட்டுத் தொடர்ந்தார்.
‘தம்பியவை நீங்கள் நினைக்கிறது சரி தான். இனி இவையை நம்பிப் பிரயோசனம் இல்லை. இந்த பதினெட்டு வருசத்திலை இந்தக் காட்டை நல்லாய் அறிஞ்ச அனுபவத்திலை சொல்லுறன். உந்த யானையள் எல்லாம் தண்ணிக்கு குளங்களையும் ஆறுகளையும் நம்பித்தான் இருக்குதுகள். அழிவுக்குப் பதில் அழிவு தான். அகிம்சை சரி வராது. உந்த ஆறுகளுக்கையும் குளங்களுக்கையும் நஞ்சைக் கலந்து விட்டால் அதுகள் குடிக்கை வரேக்கையும் குளிக்க வரேக்கையும் அதைக்குடிச்சு செத்துப் போகுங்கள்.. . . இல்லாட்டி. . . உதுகள் அதிகமாக அண்டியிருக்கிற இடங்களிலை உள்ள பெரிய குளக்கட்டுகளையும் ஆற்று அணைக்கட்டைகளையும் உடைச்சு விடவேணும். அந்தத் தண்ணி அதுகளை அடிச்சுக் கொண்டு போகும்.”
கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞர்கள் முகத்தில் ஓர் புதுப்பிரவாகம்.
நாலு பேரும் எழுந்து கொண்டணர்.
வழியில் கிடந்த தடி தண்டுகளை தூக்கி தூர எறிந்து கொண்டு வீரநடை போட்டுக் கொண்டு சென்றனர்.
அவர்கள் சென்று மறையும் வரை கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த கிழவனார், ‘எடு பிள்ளை பந்தந்தை” என்றவாறு ஓர் புதுத்தென்புடன் அம்மரக்கட்டைகளை நெருங்கினார்.
Skriv et svar