நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.

நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.

டென்மார்க்கின் மிகச் சிறந்த கோடைகாலம் இதுதான் என அனைவரும் மகிழ்ந்த அந்த வருட கோடை காலம் கடந்து போக…. பச்சை இலைகள் பழுப்பு இலைகளாகி… அவைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகும் காலத்தில் தான் இவர்களின் பெற்றோர்கள் டென்மார்க்கில் கால் வைத்தார்கள்.

இந்த இருபத்தியாறு வருடங்களில்; டென்மார்க்கும் இருபத்தியாறு கோடைகளையும், இலையுதிர்வுகளையும், பனி மழைகளையும்;, இலைதளிர்களையும் கண்டு விட்டது.
நான்கு காலத்தின் சுழற்றியும் அதற்கான எதிர்பார்ப்புகளும் வருடச் சக்கரத்தை கொஞ்சம் அதிகமாகவே நகர்த்திச் சென்று விடும்.

கொழும்பு வந்து விமானம் ஏறும் பொழுதுதான் முதன் முதலாக நீளக்காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்த சின்னத்துரை அண்ணைக்கும் தவமணி அக்காவுக்கும் இந்த டென்மார்க் வாழ்வின் வயதும் இருபத்தியாறுதான்.

இரண்டு வருடம் கழித்துப் பிறந்த பையன் ஒருவன். ஐந்து வருடம் கழித்துப் பிறந்த ஒரு பெண் ஒருத்தி.

பையன் பெயர் சுந்தர். சுந்தா என்பது செல்லப்பெயர்.

அவ்வாறே பக்கத்து டெனிஸ் கிராமத்தில் சின்னத்துரை அண்ணையையும் தவமணி அக்காவையும் ஒத்த சங்கானையோ அல்லது சண்டிலிப்பாயை சேர்ந்த இன்னோர் குடும்பம்.

இரு குடும்பமும் தங்களுக்குள் கை நனைக்கக் கூடியவர் என்று வந்த ஆறு மாதத்திலேயே கதை கொடுத்து கதை வாங்கிக் கண்டு கொண்டு விட்டார்கள்.

அந்தக் குடும்பத்திற்கும் மகள் ஒருத்தி சுமா எனப்படும் சுமதி.

*

அந்தக் கிராமப்பாடசாலையில் சுந்தா 5ம் வகுப்பை முடித்து 6ம் வகுப்புக்கு நகரப் பாடசாலைக்கு வந்த பொழுது தான் தன் வகுப்புச் சகதோழியான கரீனாவின் நட்புக் கிடைத்தது.

அப்பொழுது அவனுக்கும் 11 வயது. அவளுக்கும் 11 வயது.

பாடசாலை முடிய மாலை நேரங்களில் சக மாணவர்களுடன் சுந்தா வீட்டிற்கு கரீனா வகுப்பு நண்பர்களுடன் வந்து போவதும்…  கரீனா வீட்டிற்கு அவ்வாறே சுந்தா வந்து போவதுமாக ஆரம்பித்த உறவு அடுத்த அடுத்த வகுப்புகள் வந்த பொழுது தனியே கரீனா வீட்டிற்கு சுந்தா வந்து போகுமளவிற்கு அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது.

கரீனா தனியே வந்து போகும் பொழுது வா என்று சொல்லவும் முடியாது… வரவேண்டாம் என்று சொல்லவும் முடியாது…. சின்னத்துரை அண்ணையும் தவமணி அக்காவும் தத்தளித்துக் கொள்வார்கள்.

வருமுன் காப்போனாக சிலவேளை தங்கள் மகளையும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் அல்லது சுந்தாவுடனும் கரீனாவுடனும் சேர்ந்து கடைகளுக்கு செல்லவும் தவமணி அக்கா அனுப்பி விடுவார்.

பல மாணவர்கள் தங்கள் நண்பர்கள் நண்பிகள் வீட்டில் சனி ஞாயிறுகளில் தங்கி சந்தோசமான விடுமுறையைக் கழிக்கும் வழக்கம் இருந்தாலும் சுந்தாவுக்கு சின்னத்துரை அண்ணை சரி… தவமணி அக்கா சரி…. அந்தக் கலாச்சாரத்திற்கு பச்சைக் கொடி காட்டவேயில்லை.

பாடசாலை மாணவர்களின் களியாட்ட இரவுகள் என்று எது இருந்தாலும் இரவு பத்துமணிக்கு வெளியே நிற்கும் சின்னத்துரை அண்ணையின் காரினுள் வந்து ஏறி வீட்டிற்கு வந்து விடவேண்டும் என்பது விதிவிலக்கு பெற முடியாத தவமணியக்காவின் சட்டப்பிரிவுகளில் ஒன்று.

சுந்தாவுக்குக்கு ஊர் சுற்றவும் நண்பர்களுடன் கூடி மகிழவும் மாலை நேரச் சுதந்திரம் மட்டும் தான் – சிலவேளை தன் வீட்டுக்கு தெரிந்தும் தெரியாமலும கரீனாவின் வீட்டில் அவன் பொழுதுகள் கழியும்.

இலையுதிர் காலத்தின் மெல்லிய குளிர் பரவத் தொடங்கியிருந்த ஒரு நாள் இரவு உணவை கரீனா பெற்றாருடன் அமர்ந்து ஒன்றாக அமர்ந்து உண்ட பின்பு, தந்தையார் அன்றைய தினசரியில் மூழ்கியிருந்தார்.

தாய் சுவற்றர் பின்னிக் கொண்டும் காதில் செருகியிருந்த ஐபோனில் Karen Marie Aagaard Ørsted Andersen  என்ற ஐந்து சிறு பெயர்களை MØ என அழைக்கும் பெயரில் அடக்கிய பெண் பாடகியின் பாடலை ரசித்துக் கொண்டும் இருந்தாள்.

வீட்டின் ஹோலின் நடுவே பிரத்தியோக இயற்கை வெப்பத்தைப் பெறுவதற்காக அமைந்திருந்த எரியூட்டும் அடுப்பிற்கு வெளி விறாந்தையில் இருந்து சிறிய மரக்கட்டைகளை கொண்டு வந்து அடுக்கிய கரீனா தாயின் அருகில் வந்து மிகவும் ஒட்டியவாறு அமர்ந்து கொண்டாள்.

குளிருக்காக தாயின் கதகதப்பில ஒட்டியிருக்க விரும்புகிறாள் என நினைத்த தாய் சிறிது நேரத்தில் தகப்பனுக்கு தெரியாமல் தன்னிடம் ஏதோ பேச விரும்புகின்றாள் எனப் புரிந்து கொண்டாள்.

இருவரும் எழுந்து கரீனாவின் அறைக்குப் போனார்கள்.

”மம்….” சொற்கள் தொண்டையுள் சிக்கியது.

”சொல்லு….” மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

”நானும் சுந்தாவும் ஒருவரை ஒருவர் முத்தமிடலாமா?”

தாய் கரீனாவை மிகவும் கனிவாகப் பார்த்தாள்.

புன்னகைத்தபடியே மகளின் தலையை ஆதரவாகத் தடவி விட்டபடி ’ஆம்’ எனத் தலையாட்டி விட்டு மீண்டும் ஹோலுக்குச் சென்று தனது சுவெற்றருடனும் இசையுடனும் ஒன்ற முயன்றாள்.

தந்தை மௌனமாக தினசரி புதினப் பத்திரியையில் இருந்து தலையை நிமிர்த்தி ”என்ன?” என்று சைகையால் கேட்டார்.

”அவள் வாழ்வை அனுபவிக்க என்னிடம் அமைதி கேட்டாள். நானும் ஆம் எனத் தலையாட்டி விட்டு வந்து விட்டேன்”

அவரும் புன்னகைத்துக் கொண்டு மீண்டும் பத்திரியையுள் மூழ்கிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் என்ன நினைத்தாரோ, ”இதனை நாம் கொண்டாட வேண்டும்;” என்றவாறு ஒரு வைன் போத்தலையும் உடைத்த கச்சான் கடலை பையையும் இரண்டு கிளாஸ்களையும் கொண்டு வந்து மனைவிக்கு முன்பு வைத்தார்.

இருவரும் ”சியர்ஸ்” சொல்லிக் கொண்டார்கள்.

அன்று இரவு முழுக்க கரீனா தனது நொக்கியா 101இல் குறுஞ்செய்திகள் மூலம்; சுந்தாவுடன் உரையாடிக் கொண்டேயிருந்தாள்.

*
7ம் வகுப்பு வின்ரரை ஒட்டிய கிறிஸ்மஸ்க்கு சுந்தாவையும் அவனின் பெற்றோரையும் கரீனா குடும்பத்தினர் அழைத்திருந்தார்கள்.

சின்னத்துரை அண்ணை தவமணி அக்கா குடும்பத்தினருக்கும் கூட தங்களை ஒரு டெனிஸ் குடும்பத்;தினர் அழைத்தது ஒரு விதப் பெருமையாக இருந்தாலும் மனதினுள் ஏதோ ஒரு ’பக்’…’பக்’ இருந்து கொண்டேயிருந்தது.

மகள் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்.

வாட்டிய வாத்து… முறுகலாக பன்றி இறைச்சி… சீனிப்பாணியுள் பிரட்டி எடுத்த உருளைக் கிழங்கு… சிவத்த கோவா… இத்தியாதி இத்தியாயுடன் கிறிஸ்மஸ் பரிசுகள்.

கரீனா சுந்தாவுக்கு ஆண்கள் அணியும் உள்ளாடைகளை பரிசளித்திருந்தது தவமணி அக்காவிற்கு ஏனோ பிடிக்கவில்லை.

சின்னத்துரை அண்ணை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

அவர்கள் குடும்பத்தின் சார்பாக கரீனாக்கு அழகிய ஒரு ஆடையும் அவளின் குடும்பத்தினருக்கு மேசைக்கு பரிமாறும் கத்தி கரண்டிகள் அடங்கிய பெட்டி ஒன்றையும் அளித்திருந்தார்கள். அந்தப் பரிசு

வேறு ஒரு குடும்பம் இவர்களுக்கு அளித்தது என்பது ஒரு உதிரிச் செய்தி.

அந்த வின்ரர் கால விடுமுறையில் சுந்தாவின் அதிகமான பகல் பொழுதுகள் கரீனாவின் வீட்டிலேயே கழிந்தது. சுந்தாவின் பெற்றோருக்கு மட்டும் கன்சன் வீட்டிலும் ஜென்ஸ் வீட்டிலும் பீற்றர் வீட்டிலும் கழிவதாகச் சொல்லப்பட்டது.

ஒரு நாள் கரீனாவே சுந்தாவிடன் கேட்டாள்.

”ஏன் நீ உன் பெற்றாருக்கு பொய் சொல்லுகிறாய்”

”உண்மையைச் சொன்னால் அவர்கள் தினமும் இங்கு வர அனுமதிக்க மாட்டார்கள்”

”எவ்வாறு எங்கள் காதலை நீ சொல்லப் போகின்றாய்”

”அப்பொழுது நான் ஒரு எஞ்ஜினியராகவோ அல்லது டாக்டராகவே இருப்பேன். அச்சமயம் அவர்கள் மறுக்க மாட்டார்கள்”

”எனக்கு உங்கள் சமுதாயத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை சுந்தா”

சுந்தா பதில் சொல்லாமல் மௌனம் காத்து விட்டு தொடர்ந்தான்.

”இந்த இனிமையான பொழுதுகளை ஏன் வீணாக கதைத்து வீணாக்கி கொண்டிருக்கின்றாய்”

கரீனா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இருவர் கைகளுக்குள்ளும் இருவருமே சிறைப்பட்டுக் கொண்டார்கள்.

*
அந்த வின்ரர் விடுமுறை கழிந்து பாடசாலை தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்பு கரீனாவுக்கு மாதவிலக்கு தள்ளிப் போயிருந்தது.

கரீனாவின் தாய் ரொம்பவே கடிந்து கொண்டாள்.

”படித்து படித்துச் சொன்னேன். பாதுகாப்பு குளிகைகளை தினந்தோறும் எடு என்று. இவ்வளவு சோம்பேறியாக இருந்திருக்கிறாய்” என்று.

”சொறி அம்மா”

தாய்மை மகளை அணைத்துக் கொண்டது.

தாயே மகளை குடும்ப டாக்டரிடம் அழைத்துச் சென்றாள்.

குடும்ப டாக்டர் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டார்.

குறித்த நாளில் அவள் பக்கத்து நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காற்றின் துணை கொண்டு கர்ப்பம் வெளியே எடுத்து வீசப்பட்டது.

தாயும் தந்தையும் அன்று வேலையிடத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு அவளுக்கு ஆதரவாக இருந்து பார்த்துக் கொண்டார்கள்.

மாலையில் பாடசாலை முடிய கவலையுடன் சுந்தா ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

”இனிமேலாவது கவனமாய் இருங்கள்” தாயும் தகப்பனும் சொல்லி விட்டு வெளியே போனார்கள்.

சுந்தா கரீனாவின் கைகளை ஆதரவாக பிடித்தபடி குனிந்து நெற்றியில் முத்தமிட்டான்.

”இது உன் தவறில்லை சுந்தா. நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்”

சுந்தாவை கரீனா ஆறுதல் படுத்தினாள்.

*
பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வந்த பொழுது வந்த பொழுது கரீனா சட்டத் துறையையும் சுந்தா வைத்தியத் துறையையும் மேற்கொண்டார்கள்.

டென்மார்க்கின் வெவ்வேறு தீவுகளில் அவர்களின் பல்கலைக்கழகங்கள் அமைந்திருந்தன.

அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்த பொழுதும் கிடைத்த சந்தர்ப்பங்களில் சந்திக் கொண்டார்கள்.

பகலையும் இரவாக்கிக் கொண்டார்கள்.

பெரிய வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக் கிழமையும் கூடி வரும் ஐந்து நாள் விடுமுறைக்கு ஊருக்கு வந்த சுந்தா கரீனா வீட்டிற்கு வெளியே இருந்த தோட்டத்தில் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது நீண்டதொரு மௌனத்திற்குப் பின்பு கேட்டான்;, ”கரீனா! நான் ஒன்று சொன்னால் நீ அமைதியாக அதை ஒத்துக் கொள்வாயா?”.

கரீனாவின் தந்தையார் வாட்டிய இறைச்சியையும் இரண்டு கிளாஸ்களில் குளிந்த பியரையும் இவர்களுக்கு கொண்டு வந்து பரிமாறிவிட்டுச் சென்றார்.

தாயார் புதிதாக வாங்கிய இரண்டு அவுஸ்திரேலிய இன நாய்க்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

”சொல்” எனத் தலையாட்டினாள்.

சிறிய இறைச்சித் துண்டின் கருக்கல் நிறைந்த பகுதியை எடுத்துச் சுவைத்தபடி, ”எங்கள் இருவருக்குமே எங்களில் இருந்த ஈர்ப்பு இப்பொழுது குறைந்து போய் விட்டது போல… ஐ மீன் நோ மோ(ர்) பீலிங்ஸ் போல நீ உணரவில்லையா… ” எனக் கேட்டான்.

சிறிது நேரம் சுந்தாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”ஆம்” என்பது போல மௌனமாக தலையாட்டிக் கொண்டு பியர் கிளாசைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டாள்.

”நாங்கள் அடிக்கடி உரையாடுவது கூட மிகவாக குறைந்து விட்டது போலவும்…. எங்கள் எங்கள் பாதைகளில் தனித்தனியே போய்க்கொண்டிருக்கின்றோம் போல நீ உணரவில்லையா….”

”ஜெஸ்… ஏதோ ஒரு இடத்தில் எங்களுக்குள் இருந்த ஒரு கவர்ச்சி… நீ சொல்லுற அந்த  பீலிங்ஸ் இல்லாமல் போய் விட்டது போலத்தான் நானும் உணர்கின்றேன்…. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கேக்கை எங்களுக்குள் இருந்த சுந்தாவையும் கரீனாவையும் இப்பவும் தேடிக் கொண்டிருக்கிறன். ஐ திங் வீ காவ் லொஸ்ற் தெம் ”

சிறிது நேரம் இருவருக்கும் இடையில் மௌனம் நிலவியது.

குனிந்திருந்த கரீனாவின் தலையை அவன் எழுந்து வந்து ஆதரவாக நிமிர்த்திய பொழுது அவளின் கண்கள் கலங்கியிருந்தன.

”கரீனா…”

கலங்கியிருந்த கண்களை கைக்குட்டையால் துடைத்தபடி அவளே கேட்டாள்,

”அடுத்தது என்ன சுந்தா?”

”நீயும் நானும் புதிய ஒரு தேடலை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கடைசி வரை நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்க வேண்டும். கட்டாயம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் நீயும் நானும் ஒரு றெஸ்ரோரண்டில் ஆவது சந்தித்து உணவு உண்ண வேண்டும். கடந்து போன அந்த வருடத்தில் நீயும் நானும் சந்தித்தவைகளையும் அனுபவித்தவைகளையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கட்டாயமாக என் திருமணத்தில் நீயும் உன் திருமணத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டும்”

இருவருமே ஒருவரை ஒருவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழுந்து ஒருவரை ஒருவர் தழுவி விடைபெற்றுக் கொண்டார்கள்.

*
சுந்தாவின் தங்கைக்கு சென்ற வருடம் மிக விமரிவையாக திருமணம் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் கள்ளியங்காட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் சம்மந்தம். 30 வருடத்திற்கு முன்பே இங்கிலாந்தில் குடியேறியவர்கள்.

திருமணத்திற்கு கரீனாவின் குடும்பத்தினரையும் அழைத்திருந்தார்கள். கரீனா தன் நீக்ரோ காதலனுடன் கானாவுக்குச் சென்றிருந்தாள். அதனால் அவளால் வர முடியவில்லை. அவளின் பெற்றார்கள் மட்டும் வந்திருந்தார்கள்.

இந்த வருடத்துள் சுந்தாவுக்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்பது சின்னத்துரை அண்ணையினதும்  தவமணி அக்காவின் பெருவிருப்பம்.
பல சாதகங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

இவர்களுக்கு நன்கு தெரிந்த பக்கத்து ஊரில் இருந்த சுமாவின் சாதகம் அனைத்துப் பொருத்தங்களுடனும் பொருந்தி வந்திருந்தது.

கணினித்துறை. கை நிறையச் சம்பளம். அதைவிட பெற்றாருக்கு ஒரே பெண் பிள்ளை. சொந்த வீடு வேறு. ஆறேழு வருடங்களுக்கு முன்பே வீட்டுக் கடன் வேறு கட்டி முடித்தாயிற்று.

நல்ல நாள் குறிக்க இருபகுதிப் பெற்றோரும் பெரு விருப்பம் கொண்டிருந்தார்கள்;.

அந்தப் பெண் மட்டும் இந்தத் திருமணம் அறவே பிடிக்கவில்லை என மறுத்து விட்டாளாம்.

காரணத்தை மட்டும் கடைசிவரை அவள் யாருக்கும் சொல்லவில்லையாம்.

“அவளுக்கு என்னில் ஒரு கவர்ச்சி ஏற்படாமல் இருக்கலாம். அல்லது திருமணத்திலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்” தன் கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்தபடி சுந்தா சொன்னது சின்னத்துரை அண்ணைக்கு சரி… தவமணி அண்ணைக்கு சரி… புரியவேயில்லை.

“டொக்டரை விட திறமான மாப்பிளையை இனி எங்கை போய் தேடுறது” என தாய்க்காரி வருவோர் போவேர்களிடம் புலம்பிக் கொண்டு இருக்கிறா என காலையில் சீட்டுக் காசு வாங்க வந்த பரமண்ணை சொல்லி விட்டுப் போனார்.

தவமணி அக்காவும் மகனுக்கு நல்ல சம்மதம் வந்தால் டென்மார்க் விநாயகருக்கு கற்பூரச் சட்டி எடுப்பதாக நேர்த்திக் கடன் வைத்திருக்கின்றாவாம்.

*
இந்த வருடக் கோடை என்றுமில்லாதவாறு அதிக வெப்பமாய் இருக்கின்றது.

கடல் அமைதியாகவும்… காற்று வீசாமலும்… புழுக்கம் நிறைந்ததாயும் இருக்கின்றது என மக்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சின்னத்துரை அண்ணையின் வீட்டின் பின்னால் உள்ள சிறிய தோட்டத்தில் இருந்த செரிப்பழச் செடிகள் சரியான காலத்தில் பூத்திருந்த பொழுதும் தண்ணீர் இல்லாததால் காய்க்கவும் முடியாது பழுக்கவும் முடியாது சோர்ந்து போய் நிற்கின்றன.

சின்னத்துரையண்ணை தாம் இந்த நாட்டுக்கு வந்த முதல் வருட கோடை காலத்தையும் அதன் குளிர்ச்சியையும் நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

1 Comment on “நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.

  1. அன்புடன் ஆசிரியருக்கு , நான் என்னும் புரியாமல் இருக்கிறான் ,உங்கல் கதை முடியவில்லை ஏன் என்பதை!!

Skriv et svar til Dr.siva Annuller svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)