நிவேதாவும் நானும்!
நிவேதாவும் நானும்! – சிறுகதை – வி. ஜீவகுமாரன்
காகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன.
கை விரல்கள் நடுங்கின்றன.
இவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன்.
ஆனால் எதுவும் மாறவில்லை.
நிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
நானும் இராகுலனும் ரஞ்சிதாவும் என்ன என்ன பொய்களை எல்லாம் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்றும் தோற்றுக் கொண்டேயிருந்தோம்.
ஐந்து வயதுக் குழந்தையால் இந்த அறுபது வயதுக் கிழவனினதும் முப்பது வயது தந்தையினதும் இருபத்தெட்டு வயது தாயினதும் எந்த சமாதானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனை மூன்று நாட்களுக்கு முன்பே எழுதியிருக்காலாம் என ஏழை மனது சொல்லிக் கொள்கின்றது.
நாங்களாக கேட்காத போர்!
நாங்களாக கேட்காத புலம்பெயர்வு!!
நாங்களாக கேட்காத பனிப்பாறைகளுக்கு நடுவிலான அகதி வாழ்வு;!!!
இலங்கை ரூபாய்களில் தொடங்கி…. இந்திய ரூபாய்கள் என்றும்… டொலர்கள் என்றும்… பிராங்குகள் எனவும்… மார்க்குகள் என்றும்… குறோன்கள் என்றும் நாணயத்தாள்களை மாற்றி மாற்றி வந்தது போலவே இலங்கையில் இருந்து இன்றுவரை எத்தனையே தடவைகள் எங்களை மாற்றியாயிற்று!
இப்போ யூரோவுக்கு மாறவேண்டுமா அல்லது வேண்டாமா என வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அந்த அந்த நாட்டு பணத்தாள்களின் பழக்கம் நாங்கள் கடந்து வந்து நாடுகளின் பட்டியலை இட்டுத்தரும்.
உலகத்தில் காணப்படும் வெவ்வேறுபட்ட அத்தனை காலநிலைகளையும் அந்த அந்த நாட்டு எல்லைகளைத் தாண்டி வரும் பொழுது அனுபவித்துதான் டென்மார்க்கிற்கு வந்து சேர்ந்தோம்.
இன்று நிவேதாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது இருக்கும் பொழுது இதற்காகத்தானா இங்கு வந்தோம் என்று தோன்றுகிறது.
உங்களில் எத்தனை பேருக்கு சிவகார்திகேய அண்ணையைத் தெரியுமோ தெரியாது.
ரஷ்யா எல்லையைத் தாண்டும் பொழுது வலது கால்; பனிக்கிடங்கினுள் உறைந்து போனதால் டென்மார்க் அகதி முகாமிற்கு வந்து சேர்ந்த அன்றைய இரவே கணைக்காலுக்கு கீழே இறந்து போயிருந்த விரல்கள் முதலிலும் அடுத்த நாள் பாதமும்; அகற்றப்பட்டது.
பெற்றோல் வண்டியினுள் இருந்து எல்லை தாண்டும் பொழுது பெற்றோலின் கசிவினால் கோமா நிலைக்குச் சென்ற என் கிராமத்து செல்லத்துரை அண்ணையின் மரணச்செய்தி அன்றைய டென்மார்க் – ஜேர்மனி – இலங்கைப் பத்திரிகைகளை நிறைத்திருந்தது.
சந்தைவரி துண்டு போடும் சின்னராசா அண்ணையின் 16 வயது மகள் தனியே ஏஜன்ற்றுடன் சென்ரல் காம்புக்கு வந்து சேர்ந்த பொழுதுதான் அவளுக்கே தெரியும் மாதவிலக்கு தள்ளிப் போயிருக்குது என்று.
அந்த பச்சைமண்ணுக்குத் தெரியுமா மலேசியாவில் நின்றிருந்த பொழுது தங்கச்சி தங்கச்சி என்று அழைத்த ஏஜன்ற் அண்ணாவே தங்கச்சிக்கு பாலுக்குள் மயங்கமருந்து போட்டுக் கொடுத்தவன் என்று.
கருவை காற்றின் துணையுடன் உறிஞ்சி இழுத்து வெளியே எறிந்தாலும் வடுக்கள் எப்போதும் மாறும்?
முன்பின் தெரியாத அந்த பிள்ளைக்கு துணையாக அச்சமயம் அகதி முகாமில் இருந்த எனது மனைவிதான் இரண்டு நாளாக ஆஸ்பத்திரியில் நின்றது.
பின்பு சில மாதங்களுக்கு பின்பு அந்த பிள்ளை கனடாவில் உள்ள உறவினர்களிடம் போய் விட்டதாக அறிந்தோம்.
இப்போது எனக்கு ஆறுதலுக்கு என் மனைவியும் என் பக்கத்தில் இல்லை.
இன்றைய எனதும் இராகுலனினதும் ரஞ்சிதாவினதும் வேதனைகள் எல்லாம் அவளுக்கு வேண்டாம் என்றுதான் மூன்று வருடத்திற்கு முதல் ஆண்டவன் அவளை தன்னிடம் அழைத்திருக்க வேண்டும்.
அன்று நிவேதாவின் இரண்டாவது பிறந்ததினம் செய்ய ஏற்பாடாகியிருந்தது.
காலையில் என் மனைவியின் உடல் குளிர்ந்திருந்தது.
அவசரகால வைத்தியர் வந்த வேகத்திலேயே மரணச்சான்றிதழை தந்து விட்டுச் சென்றிருந்தார் – இயற்கை மரணமென.
வீட்டில் மரணம் சம்பவத்தால் ஆறுமணித்தியாலம் வரை வீட்டில் வைத்திருக்கலாம் – மீண்டும் இன்னோர் வைத்தியர் வந்து மரணத்தை உறுதி செய்யும் வரை.
அந்த ஆறு மணித்தியாலத்தினுள் எங்கள் நகரத்திலும் பக்கத்து பக்கத்து நகரங்களிலும் உள்ள தமிழ் ஆட்களால் எங்கள் வீடு நிறைந்து விட்டது.
நிவேதா அப்பம்மாவைச் சுற்றி சுற்றி வந்தாள்.
எதுவும் கேட்கவில்லை.
தன் பிறந்தநாள் இல்லாது போனது பற்றியும் எதுவும் அலட்டிக் கொள்ளவும் இல்லை.
இன்று போல் கவலைப்படவும் இல்லை.
எங்கள் நகரத்தில் பிள்ளைகளின் பிறந்தநாட்களுக்கு என்று எழுதப்படாத ஒரு நடைமுறை உண்டு.
ஒன்று அழைப்பிதழ் அச்சிட்டு அல்லது தொலைபேசியில் அனைவரையும் அழைத்து பெரிய மண்டபம் எடுத்து வீடியோ மற்றும் போட்டோக்காரரை காசுக்கு பிடித்து நடாத்துவது.
அங்கு கடைசியாக இந்தியச் சந்தைக்கு வந்த சேலைகள் மின்விளக்குகளின: ஒளிபட்டுப் பளபளக்கும்.
பாதிக்கை, முழுக்கை, முன்வெட்டு, பின்வெட்டு என்பன போய் இன்னும் புதிபுதிதாய் சட்டை வகைகள் விளம்பரத்தப்படும்.
பிறந்தநாள் குழந்தைக்கு பரிசுகளுக்கு பதிலாக மொய்கள் வந்து கொண்டு இருக்கும்.
குழந்தை அவற்றைப் பெற்று தாயிடம் கொடுத்துக் கொண்டு இருக்கும்
அதற்கான விளையாட்டுப் பொருட்கள் எதுவுமே அந்த பரிசினுள் இருப்பதில்லை.
என்னதான் குடிவகைகளை முன்னே அடுக்கி வைத்தாலும் பின் குசினியுள்ளும் அல்லது கார்களுக்குள் கொண்டுபோய் வைத்து அடித்து விட்டு மோவாயை இறுக்கி துடைத்துக் கொண்டு ஒரு சின்ன சிரிப்புடன் உலவும் நண்பர்கள் கூட்டத்துடன் இணைந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவை.
மற்றவகை யாதெனில்… பெரிதாக சொல்லிச் செய்யாவிட்டாலும் இங்கு வந்த நட்புகள் என்ற முறையில்… ஒரே பாடசாலைகளில் படிப்பவர்கள்… அல்லது ஒரே தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்கள்… ஒரே இடத்தில் சீட்டுப் போடுபவர்கள்… ஒரே சங்கத்தில் உறுப்பினர்களாய் இருப்பவர்கள் என ஏதோ ஒரு ‘ஒரே’ இணைப்பினால் இணைந்தவர்கள் என்ற முறையில் தாங்களாகவே அன்று பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சிறிய பரிசுப் பொருட்களுடன் வருவபவர்கள்.
சுமார் ஐந்திலிருந்து பத்து குடும்பத்துள் வருவார்கள்.
அதனையும் தாண்டி ஆட்கள் வந்து விட்டால் பருப்பினுள்ளும் குழம்பினுள்ளும் கொஞ்சம் பாலும் தண்ணியும் உப்பும் சேர்க்கப்படும்.
அல்லது பக்கத்து தெருவில் உள்ள சண்டிலிப்பாய் லோகனின் கடையில் பிற்ஸா ஓடர் செய்யப்படும்.
அவ்வாறுதான் இந்த ஆண்டு நிவேதாவின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஐந்து தொடக்கம் பத்து குடும்பங்களை எதிர்பார்த்து மருமகள் விதம் விதமான சாப்பாடுகளை செய்வதில் மிக மும்மரமாய் இருந்தாள்.
பென்சன் எடுத்த இந்த கிழவன் எனக்கென்ன வேலை?
நானும் என்னால் முடிந்தளவு மருமகளுக்கு ஒத்தாசையாக பகல் முழுக்க உதவி செய்து கொண்டு இருந்தேன்.
வழமை போல அதிகாலையில் இருந்து இலங்கையில் இருந்தும் பின் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் தொலைபேசி வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் டென்மார்க்கில் அக்கம் பக்கத்து வாழ்த்துகள் வராதிருந்தமை கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.
நானாக மருமகளிடம் கேட்ட பொழுது எல்லோரும் வேலைக்கு போயிருப்பினம் பின்னேரம் எடுப்பினம்… அல்லது நேரில் வருவினம் என்று சொல்லி விட்டு புதிதாய் ஒரு உணவை யூ ரியூப்பில் (YOUTUBE) பார்த்து பார்த்து செய்வதில் அவள் மும்மரமானானாள்.
ஆனால் என் மனது வீணாக சஞ்சலப்படுகின்றேன் எனத் தெரிந்தும் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருந்தது.
நிவேதா பாடசாலையில் இருந்து பகல் இரண்டு மணிக்கே வந்து பின்னேரம் வர இருக்கும் தன் நண்பர்கள் நண்பிகளுடன் விளையாடுவதற்கு தன் விளையாட்டுச் சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தத் தொடங்கி விட்டாள்.
இடைக்கிடை தாயைப் போய் ஆக்கினைப்படுத்த “அப்பப்பாவிடம் போய் கேள்” என என்னிடம் கலைத்து விடப்பட்டாள்.
பிறகென்ன அறுபதை தாண்டிய கிழவன் ஆறு வயது பையனாகவும் ஐந்து வயதுப் பேத்தி ஐம்பது வயது கிழவியாக அவளின் கட்டளைக்கு நான் கீழ் பணிந்து கொண்டிருந்தேன்.
நாலுமணிபோல் இராகுலன்; ஒரு பெரிய கரடிக்குட்டியுடன் வந்தான்.
நிவேதாவின் உயரமிருக்கும்.
அவளின் சந்தோசத்திற்கு அளவேயில்லை.
“த பெஸ்ட் பாதா இன் த வேல்ட்;” என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.
நானும் மருமகளும் இருவரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றோம்.
*
நேரம் பின்னேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.
இராகுலன் கார் விடும் கொட்டிலினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கதிரைகளை எடுத்து வந்து ஹோலுக்குள் வடிவாக அடுக்கி விட்டிருந்தான்.
அதிலிருந்த தூசுகளை நிவேதிதா சிறிய துணி கொண்டு துடைப்பதும் இடைக்கிடை வெளியே போய்ப் பார்ப்பதுமாய் இருந்தாள்.
பொதுவாக மற்றைய நேரங்களில் அதிகமானோர் இந்நேரம் வந்து விடுவார்கள்.
“யாரும் வந்தால் பிளாஸ்கில் தேனீரும் கோப்பியும் இருக்கு கொடுங்கள்” என்று விட்டு மருமகள் மேலே குளிக்கச் சென்று விட்டாள்.
எனக்கு என்னையும் அறியாமல் மனதினுள் ஒரு சின்ன ஊசலாட்டம்.
ஆண்டவா அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என் மனம் அடித்துக் கொண்டது.
அப்படி ஒன்று நடந்தால் பெரிதாக தாக்கப்படப் போவது நானோ… இராகுலனோ… அல்லது ரஞ்சிதாவோ அல்ல!
அந்தப் பச்சைமண் நிவேதாவாகத்தான் இருக்கும்.
87ல் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றிருந்த பொழுது, டென்மார்க்கில் எங்கள் மொழிப்பாடசாலை வாசலில் நின்று டென்மார்;க் வானொலி நிருபர் எங்களையெல்லாம் “சமாதானம் வந்து விட்டது… நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்” என்று ஒவ்வொருவரையும் கேள்வி கொண்டு நின்றார்கள்.
அதிகமானோர் அவர்களை விலத்தி கொண்டு போனார்கள்.
சில பேர் பார்ப்போம்… யோசிப்போம்… என அவர்களை விலத்தி விலத்தி சென்றார்கள்.
நானும் எனது மனைவியும் அவ்விடத்திற்கு வந்த பொழுது நான் கொஞ்சம் பதில் சொல்லத் தயங்கினாலும் எனது மனைவி “நாங்கள் உடனயாகவே நாடு திரும்புவோம்” என பேட்டி கொடுத்தாள்.
அந்த பேட்டி முழுத் தமிழருமே நாட்டுக் போகத் தயார் என்னும் தொனியில் ஒளிபரத்தாகியது.
முழுநாடும்… குறிப்பாக எங்கள் நகரம் முழுவதும் எங்களை தங்கள் எதிரியாகப் பார்த்தது.
வழி தெருவில் சந்தித்த பொழுதும் கட்டியிழுத்து வந்து புன்னகையே அவர் அவர்கள் முகத்தில் தோன்றி மறைந்தது.
“அது எங்களின் கருத்தே தவிர மொத்த தமிழரின் குரல் அல்ல” என எத்தனையோ விதமாக சொல்லிப்பார்த்தோம்.
அவை அனைத்தும் கேட்கும் திறன் இழந்தவன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.
ஆனால் இந்தியப் அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட பின்புதான் பலருக்கு முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் பரவத் தொடங்கியது.
நாங்கள் நாட்டுக்கு திரும்பிப் போகாமல் இருப்பதற்காகவேனும் இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்பது ஒரு சிலரின் வேண்டுதலாய் இருந்தது.
நான் மிகவும் வேதனைப்பட்ட நாட்கள் அவை!
பின்பு 2009ல் இலங்கையில் போர் காரணமாக இராகுலனில் திருமணத்தை டென்மார்க்கில் நாம் மிக எளிய முறையில் போயிலி வைத்து நடாத்திய பொழுதுதான் ஊர் எங்களுடன் மீண்டும் இணைந்து கொண்டது.
எங்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள எட்டாண்டுகள் தேவைப்பட்டிருக்கு என என் மனைவி இறுதிவரை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
ஆனால் நிவேதிதா ரஞ்சிதா வயிற்றில் வந்த மகிழ்ச்சியில் குதூகலப்பட்டவளுக்கு அவளைத் தூக்கிக் கொஞ்சும் பாக்கியத்தை கடவுள் கொடுத்து வைக்கவில்லை.
இப்போ நேரம் மாலை 6.30 ஆகிவிட்டிருந்தது.
ரஞ்சிதாவும் குளித்து வெளிக்கிட்டு கீழே வந்தாள்.
அவளுக்கும் எதுவும் புரியவில்லை.
இராகுலன் என்னையும் ரஞ்சிதாவையும் பார்த்தான்.
மூவருக்கும் யார் யாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
நிவேதிதா கொஞ்சம் கொஞ்சமாக அமைதி இழக்கத் தொடங்கிளாள்.
”ஏனப்பா ஆக்கள் இன்னும் வரவில்லை…
ஏனம்மா ஆக்கள் இன்னும் வரவில்லை…
ஏன் தாத்தா ஆக்கள் இனி வரவில்லை…” என அந்தரித்துக் கொண்டு திரிந்த பிள்ளை ஏழு மணிபோலை ”இனி யாருமே வரமாட்டார்களா” என குரல் கம்மக் கேட்டாள்.
அது என் உயிர்க்குலையை உலுப்பியது போல இருந்தது.
”அப்பா… ” இராகுலனின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல இருந்தது.
திரும்பிப் பார்த்தேன்.
”இங்கே பாருங்கள்… ” என அவன் தனது முகநூலினைக் காட்டினான்.
ஆம்!
நான் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டிருந்தது.
சென்ற கிழமை ”புலம் பெயர்நாடுகளில் சாதீயம்” என்னும் தலையங்கத்தில் ஒரு கருத்தாடல் நடைபெற்றது.
டெனிஸ் மக்களும் வந்திருந்தனர்.
அங்கு பேசியவர்கள் ஏறத்தாள ”சாதியமா?..அது எல்லாம் இலங்கையில் தான் இங்கில்லை” என டெனிஸ்மக்களுக்கு தம்மை பரிசுத்த ஆவிகளாக காட்டிக் கொண்டிருந்த பொழுது இராகுலனோ… ”எதுவும் மறையவில்லை… ஆனால் மறந்தது போல சரி சமனாக பழகிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் திருமணங்கள் என்று வரும் பொழுது அது பேசுபொருள் ஆகின்றது” என்ற உண்மையை துணிந்து முன் வைத்தான்.
தமிழ் குரல்கள் மௌனமாகியது.
அதன் பின் டெனிஷ் மக்களின் எண்ணிக்கையற்ற கேள்விகளுக்கு இராகுலன் அனைத்தையும் விளக்கமாகவும் நேர்;மையாகவும் கூறி விளங்கப்படுத்தினான்;.
அடுத்த 2-3 சந்ததிக்குப் பின்பே இதன் தாக்கம் இல்லாது போகலாம் என எதிர்வு கூறினான்.
டெனிஷ் மக்கள் அவனின் நேர்மையைப் பாராட்டினார்கள்.
இப்போது முகநூலில் ஒரு தமிழர் மற்றைய தமிழருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
”எங்களின் மானத்தை டெனிஷ்காரருக்கு விற்றவர்களின் கொண்டாட்டங்களை நாங்கள் பகிஸ்கரிக்க வேண்டும்”
எங்கள் மூவருக்கும் எல்லாம் விளங்கி விட்டது.
நானும் என் மனiவியும் பதினைந்து வருடங்களுக்கு முன் அனுவித்ததை என் மகனும் மகளும் என் பேத்தியும் அனுபவிக்கப் போகின்றார்கள் என்று மனம் வேதனைப் பட்டது.
நானே நிவேதிதாக்கு ஒரு பொய் சொன்னேன் – எங்கள் உறவினர் ஒருவர் ஊரில் இறந்து விட்டதால் இந்த வருடம் செய்யக் கூடாது. அதுபடியால் தான் ஆக்கள் வரவில்லை என்று.
பாவம்!
அந்த சின்ன மனது நம்பிவிட்டது.
தகப்பன் வாங்கிக் கொடுத்து கரடிப் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டு தூங்கிவிட்டாள்.
ஆனால் அடுத்தநாள் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்.
“என்னுடைய பேர்த்டேக்கு வராட்டிலும் ஆக்கள் எல்லாம் எங்கடை வீட்டை துக்கம் விசாரிக்க ஏன் வரவில்லை.. அம்மாம்மா செத்த போது வீடு நிறைய ஆட்களு; வந்தினம் தானே?””
கடந்த மூன்று நாட்களாக இதனையே கேட்டுக் கொண்டு இருக்கின்றாள்.
*
துணிந்து காகிதத்தில் பேனையை நன்கு அழுத்தி எழுதத் தொடங்கினேன்.
என் அன்புடன் இராகுலனுக்கு
அப்பாவின் இந்த முடிவு உனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.
என்னதான் போர் நடந்து கொண்டு இருந்தாலும் இந்தியன் ஆமி வெளியேறிய பின் உன்னை நானும் அம்மாவும் இலங்கைக்கு கொண்டு போயிருக்க வேண்டும்.
இந்த 15 ஆண்டில் எல்லாம் மாறி விட்டது என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் எதுவுமே மாறவில்லை என்று நடந்த இந்த நிகழ்ச்சி எனக்கு நல்லாய் பாடம் கற்றுத் தந்திருக்குது.
எங்கள் பரம்பரைதான் படிப்பறிவு இல்லாத சமுதாயம். மோட்டுத் தனமாய் நடக்குது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் எதுவும் மாறவில்லை.
எனது இந்த வயதில் நானோ… நீயோ செய்யாத குற்றத்திற்காக றோட்டில் வலிந்திழுத்த முகச்சிரிப்புகளுடன் இனியொரு தடவை என்னை நான் சமரசம் செய்ய விரும்பவில்லை.
அம்மா கடைசிவரை ஆசைப்பட்ட ஊர் வீட்டுக்கு நான் போகின்றேன்.
உனது வாழ்க்கை… நிவேதாவின் எதிர்காலம் எல்லாமுமே இந்த மண்ணில் வேர் விடத்தொடங்கி விட்டது.
அதனையும் பிடுங்கி கொண்டு என்னுடன் வா என நான் எந்தக் கட்டாயமும் படுத்தவில்லை.
ஆனால் ஏதோ ஒரு விடுமுறைக்கு என் பேத்தியை மட்டும் என்னிடம் கூட்டி வா.
அம்மா ஆசைப்பட்படி முற்றத்து மாமரத்தில் ஊஞ்சல்கட்டி அவளை நான் ஆட்ட வேண்டும்.
அதனை உன் அம்மாவின் ஆத்மா பார்த்து மகிழ வேண்டும்.
நிவேதாக்கு ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளி!
ரஞ்சிதா!
நீயும் இராகுலனும் தான் நிவேதாக்கு இந்த அப்பப்பாவின் இடத்தை நிரப்ப வேண்டும்.
மேலும் இன்றுவரை என்னை ஒரு மாமாவாக நடத்தாது என்னை உன் தந்தையாக நடத்தியமைக்கு என்றும் என் நன்றிகள்.
இங்ஙனம்
அப்பா – மாமா
*
எனது பாஸ்போர்ட்… பென்சன் பத்திரங்கள்… வங்கி புத்தகங்கள்… நிவேதாவுடன் எடுத்துக் கொண்ட சில படங்கள்… எல்லாவற்றையும் எடுத்தாயிற்று.
இன்னும் சில நிமிடத்தில் டாக்ஸி வந்து விடும்.
இராகுலனைப் பிரிந்து போகும் இந்த தருணத்தில் எனக்கு இரண்டு பெருமைகள்!
ஒன்று….இந்த வயதான தந்தையின் பிரிவின் நேர்மையை விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு மகனாக அவனை நான் வளர்த்திருப்பதுதான் எனக்கு பெருமை.
மற்றையது… நாளை நான் இலங்கையில் காலம் சென்று விட்டால் துக்கம் விசாரிக்கவும் நேர அட்டவணை போட்டு சாப்பாடுகள் கொண்டு வர இருக்கும் இந்த மக்களை வெறுக்கத் தெரியாத ஒரு மகனாக வளர்திருப்பதுதான் என் மனைவிக்கு பெருமை.
*
விமானம் ரன் வேயில் ஓடத் தொடங்கிறது.
சீற்றில் நன்கு சாய்ந்து கொள்கின்றேன்.
என் கண்கள் முன் சிலர் வந்து வந்து போகின்றார்கள்.
கால் விரல்களை ரஷ்யாவின் பனிமலைக் குவியலுக்குள் தன் கால்விரல்களை இழந்த சிவகார்த்திகேய அண்ணை…
பெற்றோல் வண்டியினுள் இருந்து எல்லை தாண்டும் பொழுது பெற்றோலின் கசிவினால் கோமா நிலைக்குச் சென்று பின் மரணத்தை தழுவிய என் கிராமத்து செல்லத்துரை அண்ணை….
அவளுக்கே தெரியாது அவள் வயிற்றில் ஏஜன்ற் கொடுத்த கருவைச் சுமந்து வந்த சந்தைவரி துண்டு போடும் சின்னராசா அண்ணையின் 16 வயது மகள்….
பெற்றது என்ன? இழந்தது என்ன? மனம் கூட்டிக் கழித்துப் பார்க்கின்றது.
எதுவும் புரியவில்லை – நான் நாட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றேன் என்பது மட்டும் உண்மை!
விமானம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பறந்து கொண்டு இருக்கின்றது.
*
“அப்பா… அப்பப்பா எங்கை போயிட்டார்”
“நாங்கள் விடுமுறைக்கு இலங்கைக்கு போறமில்லையா.. அதுதான் அவர் முதலே போய் வீடு வளவு எல்லாத்தையும் திருத்தி வைக்கப் போயிட்டார்”
“பிறகு எங்களோடை திரும்பி வருவாரா”
(முற்றும்)
Skriv et svar