நானும் எனது திருமணமும் – சிறுகதை

நானும் எனது திருமணமும் – சிறுகதை

திரையில் அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ்காரர்கள் பச்சை பனை மட்டையால் விளாசித்தள்ளும் போது பார்த்துக் கொண்டு இருந்த எனக்கே உடல் படபடத்தது என்றால் அந்தக் குற்றவாளிகள்…இல்லையில்லை…. குற்றவாளிகளாகப் பதிவு செய்ய பொலிசார் முயன்று கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

சிலவேளை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொண்டும்…சிலவேளைகளில் காதுகளை திறந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டும் விசாரணை என்ற அந்த திரைப்படத்தை பார்த்து முடித்தேன்.

வன்முறை…கொடுமை…நான்காம் மாடி விசாரணைகள்…இயக்கங்களின் தனியறை விசாரணணைகள் என பலப்பலவற்றை போருக்குப் பின்னான பதிவுகளில் வாசித்திருந்தாலும் இந்தக் காட்சிப்படுத்தல்கள் என்னை மிகவும் பயமுற வைத்தது.

கோல்பேசில் உப்பும் மிளகாயும் தடவிய மாங்காயும் அன்னாசிப்பழமும்; சாப்பிட்டபடி காற்று வாங்கிய சந்தோசத்துடனும் பிரேமாவுடன் வைப்பரில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்த சுகமான அனுபவத்துடனும் அறைக்குப் போயிருக்கலாம்.

வீணாக நேரம் போவதற்காக ஏன் அந்தப்படத்திற்கு போய்த் தொலைத்தேன் என இருந்தது.

ஏதாவது குழந்தைகளுக்கான ரொம் அண்ட் செறியோ (Tom & Cherry) அல்லது மிஸ்டர்.பீனோ (Mr. Bean) படம் பார்த்திருக்கலாம்.

மகிழ்ச்சியாவது நிலைத்திருக்கும்!

காலையில் கோயில் பக்கத்தைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு பகலில் பாடசாலைக்கும் பின்னேரத்தில் ரியூசன் வகுப்புகளுக்கும் வகுப்பு எடுத்து விட்டு இரவில் வீட்டு முற்றத்தில் இருந்து பக்கத்து வீட்டு அண்ணாமார்களுடனும் நண்பர்களுடனும் ஊர் அரசியியல் கதைத்துக் கொண்டும் 304 சீட்டாட்டம் ஆடிக்கொண்டும் வளர்ந்த எனக்கு இந்த உலகங்களின் நிகழ்வுகள் நம்பமுடியாதவையாகவே இருந்தன.

அறம் செய்ய விரும்பையும்…ஆறுவது சினத்தையும்…இரண்டாம் வகுப்பிலேயே சிவதீட்சை போல காதில் ஓதி பொய் சொல்லக் கூடாத பாப்பாவாக வளர்க்கப்பட்ட எனக்கு இந்த உலகத்தின் மறுபக்கங்களை பார்க்கும் மனத்தைரியத்தை எந்த மந்திரமும் கற்றுத் தந்திருக்கவில்லை.

”நான் கடவுள்” படத்தை பார்த்து விட்டு நித்திரையை தொலைத்த நாட்கள் பல உண்டு.

எங்களைத் தாண்டிய அல்லது எங்களுக்கே தெரியாத சில உலகங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதனை சில திரைப்படங்கள் காட்டி விட்டுத்தான் கடந்து செல்கின்றன.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பொழுதும் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பொழுதும் காக்கிச் சட்டைக் காவலர்களை கண்ட பொழுது என்னையே பச்சைப் பனை மட்டையால் அவர்கள் விளாசித் தள்ளுவது போன்ற மனநிலைதான் இருந்தது.

இயற்கை மரணம், அகால மரணம் என்ற இரு மரணவகைகளைத் தாண்டி…போர்க்காலத்தில் யாரைப்பார்த்து எந்த தலையாட்டிகள் தலையாட்டினாலும் அவர்களின் உலகம் இவ்வாறான ஒரு பாதாள உலகம் தான் என்ற பயத்தினால் மட்டும் நாடு விட்டு நாடு தாவி…அகதி என்றும்…குடியுரிமை வதியிடம் பெற்றவன் என்றும்…டென்மார்க் பிரஜை என்றும் பெயருக்கு முன்னால் உள்ள அடைமொழிகளாலும் அவை தந்த பொருளாதார வசதிகளாலும் கௌரவங்களை இணைத்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

2006ல் நாட்டை விட்டு ஒடும் பொழுது வயது 27. இப்போது 37.

என்னைப் பற்றி நானே மற்றிமோனியல் விளம்பரத்தில் விளம்பரம் செய்து…நானே சுயம்பரம் செய்து…நான் மறுதலித்தது பாதி…என்னை மறுதலித்தது முக்கால்வாசி எனப்போக கடைசியில் ஜேர்மனில் வசித்த என்னை விட மூன்று வயது மூத்த பிரேமாவுடன் வைப்பரிலிலும் ஸ்கைப்பிலும் பேசி…அவரின் தயாருக்கு இதுவரை குடிப்பழக்கமும் புகைப்பிடிக்கும் பழக்கமும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அது இராது என சத்தியம் செய்து…அனைத்து கூடி வர…என் திருமணத்திற்கு நானே இலங்கையில் அழைப்பிதழ் அச்சடித்து…இந்தியாவில் கூறைப்பட்டு எடுத்து…இனி இங்கே சிங்கப்பூரில் தாலிக்கொடியும் வாங்கிக் கொண்டு திரும்பிச் செல்ல வேண்டும்.

பெண் வீட்டாரும் பெண்ணும் ஜேர்மனியில் இருந்தபடி மெசேஜ் பொக்சில் ஒவ்வொன்றையும் வேண்டி வரும்படி எழுதிக் கொண்டு இருப்பார்கள்.

அல்லது ”சுகமாக இருக்கின்றீர்களா?”; எனஎன மெல்லிய சிரிப்பொலியுடன் ஒரு வரி தொலைபேசி அழைப்பில் சுகம் விசாரித்து விட்டு ஒரு பந்திச் சாமான்களின் லிஸ்ற் வரும்.

37 வயது மணமகன் என்று இளக்காரமாய் போய்விட்டதா என என் மீதும் எனக்கு கோபம் வரும்.

பெண்ணிடமும் பெண் வீட்டார் மீதும் கோபம் வரும். ஆனால் காட்டிக் கொள்வதில்லை.

இனியும் பிந்திப் போனால்,“இன்னமும் பிள்ளை இல்லையோ”, என ஒரு வருடத்துக்குள் என்னையும் மனைவியையும் துளைத்து எடுக்கப் போற உறவினர்கள் மற்றும்நண்பர்களின் கேள்விக்கு பதிலே இல்லாமல் போய்விடக் கூடும்.

முதிர்கன்னிகள் போல முதிர்ஆண்களுக்கும் வேதனைகள் உண்டு என்பதனை அதிகமாக உலகம் மறந்து போகின்றது.

இன்று ஞாயிற்றுக் கிழமை.

சிங்கப்பூரில் வருடத்தில் எந்த சந்தர்ப்பத்தில் வந்தாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிரங்கூன் என்ற குட்டி இந்தியப் பகுதிக்கு வரவே கூடாது.

பத்து நல்லூர் திருவிழாவுக்கு…அல்லது இறுதிக்கட்ட தி.மு.க. , அ.தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்திற்கு சமனான கூட்டத்தால் சிறங்கூன் பிரதான தெருவும் பக்கத்து தெருக்களும் நிரம்பி வழியும்.

காலை பத்து மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை மஹாமக கூட்டம் தான்.

வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் – இந்திய பங்களேஷ் கட்டிட தொழிலாளர்கள் – மற்றும் இதர இதர காரணங்களுக்காக சிங்கப்பூரில் தொழில் விசாப் பெற்றவர்களின் சந்திப்புகளினம் பிரிவுகளினதும் சாட்சி அந்த ஞாயிறு.சிங்களச் சிரிப்பொலிகளை தாராளமாகக் கேட்கலாம். இனத்துவேசமே தெரிவதில்லை.

அங்கீகரப்பட்ட சிவப்புவிளக்குப் பகுதியைக் கூட அத்தனை பேரும் அன்று தான் பங்கு கொள்ள வேண்டும். அந்த அனல் பறக்கும் வெயிலில்….

ரைகர் பியர் சிங்கப்பூரில் அதிகமாக விற்கும் ஞாயிறும் அன்றுதான்.

எனது கெட்ட காலம் – நான்கு நாட்களுக்கு முன்னால் வந்திருந்தாலும் தாலிக்கொடியை நான் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப் பயந்து இன்று அதனை வாங்கிக் கொண்டு இரவு பயணம் செய்யக் காத்திருந்ததுதான்.

நகைக்கடைகளில் எல்லாம் அவ்வளவு சனக்கூட்டம்.

வேண்டுமென்றே உரசல்கள்…. களவுக்கு அத்திவாரமா? அல்லது ஏதோ ஒன்றிற்கான அழைப்பா?? எனப் பிரித்தறிவது மிகக் கடினம்.

திருப்பிப் பார்த்தால் ஒரு புன்னகை.

முறைத்துப் பார்த்தால் ஒரு ”சொறி”.

இத்தனையிடையேயும் சீன நகைக்கடை வியாபாரி என்றாலும் சரி…தமிழ் நகைக்கடை வியாபாரி என்றாலும் சரி…செய்கூலியில் எம்மிடம் உள்ள பணத்தை எல்லாம் பிடிங்கிக் கொள்ள பார்ப்பார்கள். இலவசமாய் கிடைக்கும் கூல்ரிங்ஸ்சின் விலை எல்லாம் சேதாரக் கணக்கிலும் செய்கூலிச் செலவிலும் அடங்கிவிடும்.

”முஸ்தபாவில் செய்கூலி மலிவல்லவா”

”சார் அங்கு பவுண் விலை அதிகமாக போடுவார்கள்….. சார் கிட்டவாக வாங்க! உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்ல வேணும்…. உங்க நாட்டுப் போராட்டத்துக்கு நாங்கள் எவ்வளவு உதவி செய்தனாங்கள் தெரியுமா?. முஸ்தபாவா செய்தார்??”

மௌனமாகி விட்ட போராட்டத்தை எவன் எவன் எல்வாம் வைத்து எப்பிடி எப்பி பிழைப்பு நடாத்துறான்கள் உன மனம் சொன்னது.

நெருங்கிக் கொண்டு இருக்கும் பயண நேரம் என் வாயைக் கட்டிப் என்னைக் கட்டிப் போட்டது.

”சரி! கணக்கை முடியுங்கோ”

கணக்கை முடித்து நகைப்பெட்டியை வெங்கடேஸ்வராக் கோயில் பக்கம் திரும்பி நின்று கும்பிட்டு விட்டு தன் இரு கைகளாலும் என்னிடம் ஒப்படைத்தார்.

நானும் கடவுளை நினைத்தபடி என்னிரு கைகளாலும் வாங்கிக் கொண்டேன்.

சேட் பொக்கற்றில் இருந்த ஐபோன் அதிர்கிறது.

”சொல்லுங்கோ”

”நான் பிரேமாவின் அம்மா கதைக்கிறன்”

”விளங்குது…சொல்லுங்கோ”

”பிரேமாக்கு கொடியிலை புறோச்சர் கொளுவிப்போட சரியான விருப்பம். அது தான்…..”

”சரி! நான் பாத்துக் கொள்ளுறன்”

”நான் சொன்னனான் எண்டு பிரேமாக்கு சொல்லிப் போடாதையுங்கோ மாப்பிள்ளை”

”சரி”

இது மிகப்பழைய ரெக்கினிக், மகள் சொல்வதாக மாமி அப்பிளிக்கேசன் போடுவது.

மீண்டும் 1½-2 பவுண் எடையுள்ள புறோச்சரின் பேரம் தொடங்கியது.

”சார் இந்த புறோச்சர் மிக அழகாக இருக்கிறது. தாலியை எடுங்கோ கோர்த்தே தருகிறன்”

எனக்கு ’திக்’என்றது.

இப்பொழுது வாங்கிய தாலியைக் காணவில்லை.

அழகான அந்த தாலிப்பெட்டி மிக இலகுவில் தவறுவதற்கு வாய்ப்பில்லை.

கடைக்காரரும் சேர்ந்து என்னுடன் தேடினார்.

இப்போது இன்னும் அதிமாக ஞாயிற்றுக் கிழமை கூட்டம் கடையில் சேர்ந்திருந்தது.

எங்கள் பரபரபரப்பு மற்றவர்களை சங்கடப்படுத்தியதை என்னால் உணரக் கூடியதாய் இருந்தது.

ஆனாலும் 21 பவுண் கொடி.

கடைக்காரரும் என் கவலையில் உண்மையாகவே பங்கு கொண்டதை அவதானித்தேன்.

ஆனால் தேடுதல் முயற்சி எவ்வித பலனையும் தரவில்லை.

இறுதியாக கடையில் பொருத்தப்பட்ட வீடியோ கமராவில் இரு பெண்கள் அதனுடன் கடையில் இருந்து வெளியேறுவது பதிவாய் இருந்தது.

அவர்களின் பின் பக்கம் மட்டும் தெரிந்தது.

எத்திசையால் தேடி ஓடி அவர்களைத் தேடுவது?

இச்சமயம் தங்கள் உடையையே மாற்றியிருப்பார்கள். அல்லது மலேசியாவுக்குள் நுழைந்திருப்பார்கள்.

எங்கு போவது?….

தலை சுற்றிக் கொண்டு வந்தது.

கடைக்காரர் ஒரு கரையில் ஒரு கதிரையை தந்து என்னை ஆறுதலாக இருக்க வைத்து மீண்டும் ஒரு கூல்ஸ் ரிங் தந்தார்.

மனம் மாமியாரை சபித்தது.

புறோச்சர் வாங்க வெளிக்கிட்டுத்தான் தாலிக்கொடியே போனது.

இனி தாலிக் கொடிக்கு காசுக்கு எங்கே போவது.

இரண்டாம் சீட்டையே அறாக்கழிவுக்கு எடுத்துத்தான் இவ்வளவும் நடந்தது.

வட்டிக்கு கூட நம்பி காசுதார யாரும் அங்கு இல்லை –வங்கிகள் உட்பட.

அடிச்சட்டி வழித்தெடுத்து சாப்பிடுவது போல எல்லாப் பக்கத்தாலும் காசு வேண்டியாயிற்று.

திருமணம் கூட கிடைக்க இருக்கின்ற மொய்ப்பணத்தை நம்பித்தான் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.

இனி?….

“சார்…உங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்லட்டா?”

நிமிர்ந்து பார்த்தேன்.

கடைக்காரர்தான்.

”சொல்லுங்கோ…”

”இரண்டு வழி இருக்கு…ஒன்று உங்க ஐரோப்பாவிலை யாரும் தாலிக்கொடியை விக்கிறதோஅடைவு வைக்கிறதோ இல்லை. அது கலியாணத்துக்குப் பிறகு பாங் லொக்கருக்குள்ளைதான் இருக்கும். அதுபடியாலை பக்கத்திலை இருக்கிற பத்தர் கடையிலை திறமான கிலிற் கொடி இருக்கு. 5 வருசம் தாங்கும். அதை இப்ப கட்டிப் போட்டு பிறகு காசு இருக்கேக்கைமனைவிக்கே தெரியாமல் மாத்திக் கொள்ளுங்கோ”

மனம் தயங்கியது –வாழ்வினை ஒரு பொய்யில் தொடங்க வேண்டுமா என்று.

இப்போதும் இரண்டாம் வகுப்பில் என் கண் முன்னே அன்னலட்சுமி ரீச்சரும்;…முன் வாங்கு வரிசையில் நன்கு தோய்த்து அயன் பண்ணிய அரைக்கால் சட்டையுடனும் வெள்ளைச் சேட்டுடன் நானும்…. மேசைக் கரையில் தொங்கும்தண்ணீர்ப் போத்தலில் அம்மா கரைத்து தந்த தோடம்பழத் தண்ணியும்.

கடைக்காரர் தொடர்ந்தார்…..

”மற்றது நீPங்கள் எடுத்து வைத்திருக்கும் புறோச்சர் தாலிக்கும் 2 பவுண் காசுகளுக்கும் போதும். அதை ஏன் மஞ்சள் நூலிலை கோர்த்து கட்டக் கூடாது”

மனஅடிவானில் ஒரு வெள்ளிக்கீற்றுப் போலப்பட்டது.

அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“பிறகு ஒரு காலத்திலை நீங்கள் பவுணிலை தாலி செய்து அதிலை கோர்க்கலாம் தானே”

எனக்கு அது நல்ல யோசனையாக பட்டதோ இல்லையோ அதனை விட வேறு வழியில்லை என்பது மட்டும் உறுதியாய் பட்டது.

“அப்படியே செய்வம் அண்ணை”

அடுத்த பத்து நிமிடத்துள் மஞ்சள் கயிற்றில் தாலியும் இரண்டு ராஜா ராணிக்காசுகளும் இடையே ஒன்றுடன் ஒன்று முட்டாமல் தடைகளும் வைத்துப் பொருத்தப்பட்டது.

பிரேமா மஞ்சள் தாலியிலும் குங்குமப் பொட்டிலும் தலைநிறைய மல்லிகைப்பூவிலும் அழகாகத்தான் இருந்தாள்.

மீண்டும் அவர் வெங்கடேசலப் பெருமானின் கோயில் பக்கமும் தற்பொழுது பிரத்தியோகமாக வீரகாளி அம்மன் கோயில் பக்கமும் கும்பிட்டு விட்டு அவற்றை என்னிடம் கையளித்தார்.

சனக்கூட்டத்தை விலத்திக் கொண்டு றோட்டில் இறங்கினேன்.

இப்போ இன்னமும் சனக்கூட்டம் அதிகமாய் இருந்தது.

நகை வாங்க முதல் பார்த்து ரசித்த வேறு வேறு இன ஜோடிகளை எல்லாம் இப்போ பார்த்து ரசிக்க முடியவில்லை.

அவர்களின் காதல்களைக் கூட “ஏதோ அலையுதுகள்”என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் நான் பார்ப்பது போல இருந்தது.

இதில் யாரோ ஒருவர்தானே என் தாலிக்கொடியை திருடியது என்ற வெப்பிகாரத்துடன் அறைக்கு வந்து சேர்ந்தேன்.

சாப்பிட வேறு பிடிக்கவில்லை.

முதன் நாளிரவு வாங்கி வைத்திருந்த தாய்லாந்து கொய்யாக்காயையும் மலேசியா இனிப்பு மாங்காயையும் மட்டும் சாப்பிட்டு விட்டு வெளிக்கிடத் தயாரானேன்.

ஐபோன் அழைத்தது.

இப்போ முகம் பார்த்து பேச பிரேமா அழைத்திருந்தாள்.

“அம்மா ஏதோ சொன்னவாம். அதுவும் வாங்கினீங்களா?”

என் முகம் மாறியதை அவள் அவதானித்திருக்கு வேண்டும்.

“என்ன ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?… நான் வேண்டாம் என்று தான் சொன்னனான் அம்மா தான் கேட்கல்லை”

நடந்தது எல்லாத்தையும் சொன்னன்.

”மஞ்சள்கயிற்றிலை கட்டுறதோ! நோ சான்ஸ்”

பிரேமா சொல்லி முடிக்க முதல் ”எங்கடை பரம்பரையிலேயே கேள்விப்படாத கதையாக கிடக்கு”என்ற தாயாரின் பல்லவி தொடர்ந்தது.

”நானே எந்தப் பெரிய கொடி போட்டிருக்கிறன். என்ரை பிள்ளை மஞ்சள் கயிற்றிலை கட்டுறதோ?”

நானே தொலைபேசியின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன்.

அறைக்குள் அமைதியில்லாது அங்கும் இங்கும் திரிந்தபடி அறையை ஒதுக்கினேன்.

விமான நிலையத்திற்கு டக்ஸி ஏறும் நேரம் நெருங்கின்றது.

தாயிடம் இருந்து சரி…மகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இன்னும் அவர்களுக்கு கோபம் தணியவில்லைப் போலும்.

அல்லது இந்த அத்தியாயத்துக்கு அவர்கள் முடிவுரை எழுதியிருக்க வேண்டும்.

கிலிற் தாலியைக் கொண்டுபோய் கட்டியிருக்கலாமோ என் ஏழை மனமே எனக்காக இரங்கியது.

பாம்பும் ஏணியில் சறுக்கி கீழே வந்த கட்டையாக இனி 37 வயதில் மீண்டும் மற்றிமோனியல்…. திருமணப் பேச்சுகள்…ஜாதகப் பொருத்தம்…ஜாதிப் பொருத்தம் இவற்றுடன் இனியொரு பவுண் பொருத்தம் – புறோச்சர் பொருத்தத்துடன் ஒரு பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் பணம் தேடவேண்டும்.

அல்லது சிங்கப்பூரின் சில பக்கங்களை நியாஜப்படுத்திக் கொண்டு ஐரோப்பாவில் வாழத் தொடங்க வேண்டும்.

அந்த அனல் பறக்கும் ஞாயிறு வெய்யிலில் அத்தனை பேரும் அந்த தெருவை பங்குபோட இடிபட்டுக் கொண்டு நின்றார்கள்.

காலைக்காட்சி கண்முன்னே வந்து போனது.

ஏதோ ஒரு பிரமையுள் ஆழ்ந்து போகின்றேன் போலும்.

டென்மார்க் தலைநகர வீதிகளின் சந்துகளில் சிதறிப்போன ரஸ்யா நாட்டுப் பெண்கள் நின்று கை அசைக்கின்றார்கள்.

பத்து பிரேமாக்களின் அழகு.

நானும் காரின் வேகத்தைத் குறைத்து அவர்களுடன் அளவளாவுகின்றேன்.

மிக அழகான ஒருத்தி காரின் முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொள்கின்றாள்.

கார் புறப்படுகின்றது.

சிறிது நேரத்தில் காரின் பின் சீட்டில் சிரிப்பொலிகள் கேட்கின்றன.

பின் சீட் நிறைய ரஸ்யப் பெண்மணிகள்.

இரவுச் சாப்பாடும் பியரும் வாங்கித் தந்தால் போதும் என்கிறார்கள்.

கார் டென்மார்க்கின் பெரிய தொங்குபாலத்தில் பயணிக்கின்றது போலும்.

அடுத்த வினாடி….

ஏதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பலனின்றிய என் உடல்.

எனது நகரமே சூழ்ந்து நிற்கின்றது.

எல்லோர் கைகளிலும் எனது கண்ணீர் அஞ்சலிகள்…

”எலும்பொடு நரம்புகொண்டு – இடையில்
பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும்
ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு
உதிரச் சிறுபுழுக் குரம்பையை
,
மலவுடல் குடத்தைப்
பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியை… ”
ஓதுவார் பலத்த குரலில் பாடிக்கொண்டு நிற்கின்றார்.

பிரேமா தடித்ததொரு தாலிக்கொடியுடன் இரு பக்கம் இரு புறோச்சர்கள் தொங்க என்னை விட அழகான ஓர் ஆடவனுடன் வந்து எனக்கு பூங்கொத்து வைத்துப் போட்டு போகின்றாள்.என் சவப்பெட்டியைத் தாங்கிய இறுதி ஊர்வல நீண்ட கறுத்தக் கார் நான் ரஸ்ய பெண்களுடன் பயணம் செய்த தொங்கு பாலத்தில் பயணிப்பது போல இருக்கின்றது. போலும்…

காற்று வேகமாக வீசுகின்றது.

பாலம் அறுந்து விழுகின்றது.

சனங்கள் அலறுகின்றார்கள்.

நான் மட்டும் பெட்டியுள் இருந்து எழுந்து மணவறையை நேக்கிப் போகின்றேன்.

அதில் இருப்பது பிரேமா போலும் இருக்கின்றது. வேறு யாரோ போலும் இருக்கின்றது

கதவு தட்டப்படுகிறது.

நினைவுகள் தாறுமாறாக ஓட திடுக்கிட்டு எனது பிரேமையில் இருந்து மீழ்கின்றேன்.

”சார்…டக்ஸி இஸ்வெயிற்றிங் போ யூ”

அறையினுள் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்தச் சென்றேன்.

தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் புரிந்து கொண்டிருந்த தாய்லாந்து,மலேசியா,இந்தியா,இலங்கைப் பெண்களை பொலிசார் பெருமளவு கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்.அவர்களை இனி அந்த நாட்டுக் காவல் துறை எங்கு கொண்டு செல்வார்கள்? என்ன செய்வார்கள்??

எப்போதும் எங்களால் அறியப்படாத ஒரு உலகம்இருக்கத்தான் செய்கிறது –விசாரணை படம் போலவும்…நான் கடவுள் படம் போலவும்…

இதனிடையே ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் அன்னலட்வுமி ரீச்சரும் நானும் என் திருமணமும்…

(தொடரும் அல்லது முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)