நகரம்

இலங்கையின் குறிப்பிட்ட பகுதியை அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஆக்கிரமித்திருந்தன.
இடையிடையே இரண்டொரு சிறிய சின்ன சின்ன வீடுகள் – சிங்கப்பூரில் உள்ள வானுயர்ந்த கட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள அமைந்துள்ள தனியார் வீடுகள் போல.
அதனையும் பெரிய பண முதலைகள் வேண்டி அடுக்கு மாடிகளும் கீழ் தளத்தில் பெரிய அங்காடிகளும் கட்டி வாடகைக்கு விட போட்டி போட்டுக் கொண்டிருந்தன.
ஒவ்வோர் அடுக்கு மாடியிலும் குறைந்தது பத்து தளங்கள். தளங்கள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளாக 60 வீடுகள். 60 வீடுகளிலும் 3-4 என மனித எறும்புகள் என சுமார் 200 மனித உயிர்கள் – தவழும் குழந்தைகள் தொடக்கம் தட்டுத் தடுமாறி கைத்தடியுடன் உலாவரும் வயோதிபர்கள் வரை. அதிலும் சிலர் படுத்த படுக்கையில் – உண்ணல்… உறங்கள்… கழித்தல் அத்தனையும் அங்கேயே.
மிகுதி அனைவரும் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள் போல – காலை தொடங்கி இரவு வரை… சிலருக்கு இரவு தொடங்கி காலை வரை!

ஓட்டம்!
கல்விக்கான ஓட்டம்!
பணத் தேடலுக்கான ஓட்டம்!!
கௌரவித்திற்கான ஓட்டம்!!!
மலைஅட்டைகள் போல ஒருவரின் இரத்தத்தை மற்றவன் உறிஞ்சியபடி ஓட்டம்!!!!
ஓட்டத்தினிடையே போட்டிகள்… பொறாமைகள்…!!!!!
ஏணிகளில் ஏறியபடி மற்றவனை பாம்பின் வாயில் தூக்கிப் போட்டபடி ஓடும் ஓட்டம்!!!!!

கொலை மட்டும் செய்யக் கூடாது ஆனால் ஆளை ஆள் தள்ளி விழுத்தி வெற்றியைப் பெறலாம் என பிக்பொஸ் வைத்த சட்டத்தை ஏற்றுக் கொண்டு ஓடும் ஓட்டம்!
”பள்ளிக்கூட சாப்பாட்டுப் பெட்டிக்குள் அரைவாசிச் சாப்பாடு அப்பிடியே கிடக்கு… அதைக் கொட்டிப் போட்டு பெட்டியைக் கழுவிக் கொண்டு வரக்கூடாதோ… வெய்யில் வெக்கைக்கை புளிச்சு மணக்குது”

”ஒவ்வொரு நாளும் ஒரே சாப்பாடு போரடிக்குதம்மா… கொஞ்சம் வெறட்டியாய் செய்யக் கூடாதா”
”வெறட்டியாய் செய்து தர எனக்கும் விருப்பம் தாண்டா… அப்பா என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கிறார்?… மாதச்சம்பளத்துக்க கணக்கெழுதுற வேலை… அவர் வீட்டை சம்பளத்தோடை வரமுதல் கடனுக்கு சாமன் வாங்கிற கடைக்காரன் வாசலில் துண்டோடை நிக்கிறான். நீ வளர்ந்து உழைச்சால் தான் அம்மா வெறட்டியாய் சமைச்சு தர முடியும்”

”ஏனம்மா… அக்கா யூனிவேசிற்றிக்கு போறவா… அவாதானே முதலிலை உழைப்பா”

”அது பெட்டைக் கழுதை. படிப்பு முடிய யாரோ ஒருத்தனிட கையிலை பிடிச்சுக் கொடுக்கப்போறம்
– அதுவும் அதுவா யாரோடையும் ஓடாமல் இருந்திட்டால்….”

”ஓம்…ஓம்… தாயும் மகனுமாய் கதைக்கிறது இங்கை கேட்குது” அறைக்குள் இருந்தபடி வாணி தன்னிருப்பை உறுதிப்படுத்தினாள்.

”நீ இல்லை எனத் தெரிஞ்சு சொல்லவில்லை. எத்தினையோ தரம் சொன்னதைத்தான் திருப்பச் சொல்லுறன். இவன் இன்னும் வளரும் பொழுது இவனுக்கும் இதையே திரும்பச் திரும்பச் சொல்லுவன்…”

”ஏனம்மா நாங்கள் எடுக்கிற முடிவுகள் பிழையாகும் என்று பயமா?”
”நீங்கள் விரைவாக எடுக்கிற முடிவுகளுக்குத் தான் நாங்கள் பயப்பிடுறம். அது ஓம் என்றாலும் சரி… வேண்டாம் என்றாலும் சரி…ஓம் என்றாலும் எஸ்.எம்.எஸ்… இல்லை வேண்டாம் என்றாலும் எஸ்.எம்.எஸ்…ஒரு ஐந்து நிமிடம் யோசிக்க முதல் விரலாலை குத்திப் போட்டு இருப்பியள்.”
வாணியின் விரல்கள் விரைவாக அவளது ஐபோனின் தாளமிட்டது.
”எங்கள் இளைய தலைமுறையினர் அவரசப்பட்டு முடிவெடித்து போல அம்மா அலட்டிக் கொண்டு இருக்கின்றா… அப்பா வருகிறார் போலை இருக்கு. நாளை கம்பஸில் கதைக்கின்றேன்”
வாணியின் ஐபோன் ’கிளுக்’ என்றது.

”மாமியைப் பயப்பிட வேண்டாம் என்று சொல்லு… உன்னை இதுவரை கர்ப்பம் ஆக்காமல் வைத்திருக்கிறதுக்கு அவாதான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்”
”போடா.. பொறுக்கி” என்ற பதிலுடன் ஐபோனை அணைத்தாள்.
வாசல் கதவு திறந்து கொள்ளவும் சபேசன் உள்ளே வரவும் பின்னறையில் இருந்து சக்கர நாற்காலியில் சபேசனின் வயதான தாயார் பார்வதி அம்மா வரவும் சரியாக இருந்தது.

நடுக்ஹோலில் நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பாசணை அமைதிக்கு வந்தது.
தாயார் பார்வதியம்மா தனது நாற்பதாவது வயதிலேயே தனது கணவனுக்கு வந்த மூளைக்காச்சலிடம் தாலியைப் பறிகொடுத்து விட்டு சபேசனையும்…. தனியே நாளை அதிகாலையில் இலண்டனில் இருந்து பல காலத்திற்குப் பின்பு பிறந்த இரட்டைப் பேரப்பிள்ளைகளுடன் வர இருக்கின்ற இளைய மகளையும் வளர்த்து இருவரையும் ஒரு கரையேற்றிவர்.

பகல் முழுக்க அறையினுள்ளும் பூஜை அறையினுள்ளும் அடைந்து கிடக்கும் அவர் வெளியே வருவது சாப்பாட்டு நேரத்திற்கும் சபேசன் வேலையால் வரும் வேளையிலும் தான்.

”அப்பம்மா அறையை விட்டு வருகிறா என்றால் அப்பா வேலையால் வரப்போகின்றார்” என அர்த்தம் என பிள்ளைகள் இருவரும் அவரை கேலி செய்வது வழமை.
சபேசன் திருமணம் முடித்த தருணங்களில் தன் கையால் தன் மகனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்கவும் காலையும் மாலையும் தேனீர் கொடுக்கவும் பிடிவாதமாய் இருந்ததும்… மருமகளின் முகவாட்டங்களுக்கும் முகச்சுழிப்புகளுக்கும் அதுவே காரணமானதும்… பின்பு மகள் சொல்லி சொல்லி ஒரு வழிக்கு கொண்டு வந்ததும் அனைவரும் அறிந்த தொன்று.
ஆனாலும் குறைந்த பட்சம் சபேசன் வேலைக்குப் போக முன்பும் வேலையால் வரும் பொழுதும் தன் கண்ணில் அவனை ஒற்றத் அவர் தவறுவதேயில்லை.

”என்னம்மா சந்தோசமாய் இருக்கிறியள்”

”இருக்காதா பின்னே… நாளைக்கு என்ரை நாலு பேரப்பிள்ளைகளும் குதியம் குத்தப் போகுதுகள்…”
”விடிய 5 மணிக்குத் தான் லாண்டிங்… எப்பிடியும் அவை வெளியில் வர ஆறு மணி செல்லும். நான் நாலு மணிக்கு இங்கிருந்து போனால் சரியாக இருக்கும். எப்பிடியும் 8 மணிக்கெல்லாம் வீட்டை வந்திடலாம். என்ன மாதிரி வாலுகள் இரண்டும் என்னோடை வாறீங்களா?”

”ஜெஸ்…” ஒத்த குரலில் பதில்கள் வந்தன.

“ஏனடா… இன்னும் கொஞ்சம் வேளைக்குப் போகக் கூடாதா?”

“அம்மா… அம்மா… நான் வேளையுடன் போனால் கூட பிறிட்டிஸ் ஏயர் லைன்ஸ் நேரத்துக்கு வரமாட்டுதம்மா”

“என்னடா செய்யுறது… பெத்த மனம் கேட்குதில்லை”

***
தூக்கத்திற்கும் தூக்கமின்மைக்கும் இடையில் புரண்டு கொண்டிருந்தார் பாட்டியம்மா.
பத்தாண்டு இனிய தாம்பத்தியத்தில் சபேசனையும் வாணியையும் கொடுத்த கையுடன் வெள்ளைச்சேலையையும் பார்வதியம்மாக்கு கொடுத்து விட்டு இயற்கை மரணத்தை அவரின் கணவர் தழுவிக் கொண்டார்.

தனது நாற்பதாவது வயதில் இருந்து கைம்பெண்ணாக தனித்து இரு பிள்ளைகளையும் ஆளாக்கி இன்னும் சிலமணி நேரங்களில் பல காலத்துக்குப் பிறகு இரட்டைப் பிள்ளைகளை அரவணைத்தபடி வரவுள்ள வாணியின் நினைப்பில் அவரால் தூங்கவே முடியவில்லை.

குழலினிது யாழினது என்றாலும் சரி… சிறுகை அளாவிய கூழ் என்றாலும் சரி… பார்வதியம்மா தனித்தே நின்று கலங்கிய கண்களுடன் அனுபவித்தார்.

சபேசனுக்கு பெரிதாக படிப்பில் நாட்டம் இல்லாததால் அவனை உறவினரின் கடையொன்றில் கணக்கெழுதும் வேலைக்கு சேர்த்து விட நாளடையில் பல பிரபல கணக்காளர்களுக்கு உதவிக் கணக்காளராக உயர்ந்து விட்டான்.

வாழ்க்கை அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கிறது என்பது மாறி கணக்கெழுதும் அனுபவமே அவனுக்கு நல்ல உயர்ச்சியையும் தந்தை வழியில் நல்ல இடத்தில் வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்தது.

ஆனால் மகளிற்கு கல்வித் தெய்வம் அளவுக்கு மீறி தனது கருணையைக் காட்டி விட்டதாவோ என்னவோ திருமண வயது தள்ளிப் போவதைப் பற்றி பார்;வதியம்மா கொண்டிருந்த கவலை அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

பி.ஏ… எம்.ஏ… தொடர்ந்து பி.எச்.டி. முடித்த பின்புதான் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டினாள்.
அதன் பின்பு சாதகங்கள் பார்த்து சாதி சனம் பார்த்து குடி கிடி இல்லாத வரன் பார்த்து அவளுக்கு இலண்டன் மாப்பிள்ளை அமைந்த பொழுது வயது 35ஐ தாண்டி விட்டது.

இப்போ தனது கணவனுடனும் இரட்டைப் பெண் பிள்ளைகளுடனும் வந்திறங்கப் போகின்றாள் என்ற நினைப்பு மனமெல்லாம் நிறைந்திருக்க பார்வதியம்மாவின் கண்கள் பூத்திருந்தது – இரவு முழுக்க ஒரு கண் நித்திரை கொள்ளாமல் கண-அகள் வேறு சிவந்திருந்தது.

மறு அறையில் வாணி இன்னமும் தூங்காமல் அறை லைற்றை அணைத்து விட்டு தன் காதலுடன் மிக இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தாள்.

நித்திரைத் தூக்கமின்மை கண்களுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் காதோர ரகசியப் பேச்சு தொலைபேசியை அணைக்க அனுமதிக்கவில்லை.

அவனுடன் ஒட்டி நின்றாள்.

“மாமி வர மெதுவாக எங்கள் விடயத்தை சொல்லப்போறனடா”

“ஏன் இவ்வளவு அவசரம்? நான் என்ன உன்னை ஏமாத்தவா போறன்?”

“அது எனக்குத் தெரியும். நான் உன்னை ஏமாத்தினாலும் நீ என்னை ஏமாத்தமாட்டாய் என்று”
“அப்போ ஏன் இந்த அவசரம்”

”என்னாலை இப்பிடி களவாய்க் காதலிக்கிறது முடியேல்லையடா… கம்பஸிலை என்றாலும் சரி… வீட்டை இடைக்கிடை வாற கலியாணக்கதைகள் என்றாலும் சரி…. உன்னோடைதான் வாழப்போறன் என்ற பிறகு ஏன் இந்த நல்ல பிள்ளைப் பட்டங்கள்?”

”என்னென்டாலும் நீ செய்… இவ்வளவு நாளும் நான் காப்பாற்றி வைச்ச என் கற்புக்குத் தான் களங்கம் வரப்போகுதடி”

”போடா இவனே… மாப்பிளை ஆன பிறகு போடா எல்லாம் சொல்லக் கூடாது இல்லையா?… சொறி மாப்பிள்ளை”

”சரி நாளைக்கு பின்னேரம் இலண்டன் மாமி என்ன சொன்னவா எண்டு சொல்லு”

”ஜய… சுவீற் ரீம்”

பேச்சு அணைந்தாலும் அது கொடுத்த கதகதப்பு அவளை நிறைத்துக் கொண்டு இருந்தது.
தூங்க முடியவில்லை.

இன்னும் இரண்டு மணித்திhயலங்களுக்குள் ஏயர்போட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இன்னும் நித்திரையைத் தடுத்தது.

***
நிலம் வெளிக்கும் வேளையில் எயர்பேட்டிற்கு செல்வதற்காக சொல்லி வைத்திருந்த தனியார் கம்பனியின் மினிபஸ் வந்து நின்றது.

ஊர் உறங்கிக் கொண்டு இருந்தது.

சில சில அடுக்குமாடிகளில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

சிலர் பரீட்சைக்கு படித்துக் கொண்டு இருக்கலாம்.

சிலர் அதிகாலைப் புகையிரத்தையோ பஸ்;சையோ பிடித்து வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டு இருக்கலாம்.

சிலர் நோயின் கொடுமையால் தூக்கத்தை தொலைத்துப் போட்டு இருக்கலாம்.
இன்னும் சிலர் நாளை வரும் கடன்காரருக்கு என்ன பதில் சொல்வது என ஏங்கிக் கொண்டு இருக்கலாம்.

மினிபஸ் கடற்கரையோரமாக வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

பல வள்ளங்கள் கரையை நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தன.

சில மணி நேரங்களுக்கு முன்பு ஒட்டி என்றும்… ஓரா என்றும்… கலவாய் என்றும்… வஞ்சிரன் என்றும்… இன்னும் என்னன்னவோ பெயர்களுடன் தம் தம் இனத்துடன் கூட்டம் கூட்டாமாக மகிழ்ச்சியுடன் நீந்திக் கொண்டிருந்த அத்தனையும் சுற்றி வளைத்து ஒரு வலையினுள்… அல்லது நீரை அதிர வைக்கும் தடைசெய்யபட்ட வெடிகுண்டியால் சாகடிக்கப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

விமான நிலையம் அண்மித்துக் கொண்டிருந்தது.
விமானங்கள் இறங்குவதும் ஏறுவதும் துல்லியமாக தெரிந்தது.
வாணிக்கு கொஞ்சம் படபடப்பு அதிகமாகவே இருந்தது – மாமியாரிடத்தில் தன் காதலைச் சொல்லி தந்தையிடமும் தாயிடமும் பாட்டியிடமும் பச்சைக் கொடி பெறவேண்டும் என்ற நினைப்பு மனதைப் பாடாய்ப்படுத்தியது.

***

பார்வதிப் பாட்டியின் கன்னங்கள் யன்னல் கம்பிகளுடன் ஒட்டிக் கொண்டு இருந்தன.

”இன்னும் அரைமணி நேரத்தினுள் வந்து விடுவோம்” என சபேசன் தொலைபேசியில் சொன்னது தொடக்கம் பாட்டி பாட்டியாக இல்லை.

தன் மகளுக்கு விருப்பமான எல்லா காலைச் சாப்பாட்டையும் மருமகளைக் கொண்டு வேண்டுதலாயும் வற்புறுத்தலாயும் செய்வித்திருந்தன.

மினிபஸ்ஸினுள் குதூகலத்திற்கு குறைவே இருக்கவில்லை.
இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் இவர்களுடன் நன்கு ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.
மிகவும் சுட்டிப் பெண்களாய் இருந்தார்கள்.

வாணியின் கைகள் குறுகுறுத்தன.

இரவு பிந்திப்படுத்ததால் அவன் இப்போதும் தூங்கிக் கொண்டு இருப்பான் எனத் தெரிந்திருந்தும்ää ”பின்னேரம் போல் ஏதாவது தீசிஸ் பேப்பர் வாங்கிற சாட்டிலை வீட்டுப் பக்கம் வந்திட்டுப் போ. மாமிக்கு உன்னைக் காட்ட வேண்டும்” – குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
”என்னடி இந்தக் காலையிலை எஸ்.எம்.எஸ். ஏதாவது லவ்வா” மாமியார் உதட்டினுள் சிரித்தபடி கேட்டார்.

”யார்? இவளுக்கா??… எவன் வரப்போறான் இவளைக்கட்டி மாரடிக்க! இன்றைக்கே ஒருத்தன் வந்து வாசலில் நின்றாலும் கம்பஸ் எல்லாம் போதும் என்று கட்டிக் கொடுத்து விடுவேன்” சபேசன் முன்சீற்றில் இருந்து சொல்லிக் கொண்டு வந்தார்.

”பொறுங்கோ… பொறுங்கோ…. என் இராஜகுமாரன் பின்னேரம் வெள்ளைநிற மோட்டார் சைக்கிளில் வர இருக்கிறான். நீங்கள் ’ஓம்’ எனச் சொன்னால் என்னை அலாக்காக தூக்கி வைத்துக் கொண்டு ஓடிப்போய் விடுவான். அவனின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இந்த உலகத்தையே சுற்றி வருவேன்” மனதினுள் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

மினிபஸ் விரைவுச்சாலையில் இருந்து இவர்களின் நகரத்துக்குள் நுழைந்து கொண்டது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் இவர்களின் அடுக்குமாடி வீதிக்கு அது வந்து விட்டது.
மினிபஸ்ஸில் இருந்தபடியே தூரத்தே தெரிந்த இவர்களின் அடுக்கு மாடியை நோக்கி கையசைத்தார்கள்.

வாசலுக்கு வந்ததும் பார்வதிப்பாட்டி சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து யன்னலின் கம்பிகளை இறுகப் பிடித்து கொண்டு நிற்பது துல்லியமாகத் தெரிந்தது.
ஒரு வினாடி தான்!
பாரிய ஒரு வெடிச்சத்தம்!!

அடுக்குமாடி சரியத் தொடங்கியது!!!

இவர்களின் வாகனம் தீப்பிழம்பாகியது!!!!

தொடர்ந்து பல பாரிய வெடிச்சத்தங்கள்!!!!!

சுற்றி வர இருந்த அடுக்கு மாடிகள்… ஹோட்டல்கள்… கோயில்கள்… தேவாலயங்கள்…
மசூதிகள்….

***

வெடிவைத்த மீன்களுடன் வள்ளங்கள் கரையை வந்தடைந்திருந்தன.
மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிகளில் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.
நகரம் நரகமாகியிருந்தது

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)