தேவதூதர்கள் – சிறுகதை

தேவதூதர்கள் – சிறுகதை

அத்தியாயம் 1: காலம் 1984

இடம் : ஐரோப்பிய ஒன்றியம்

”எங்கள் பண்ணைகளில் பன்றிகளையும் மாடுகளையும் பராமரிக்கவும்இ கோடைகாலங்களில் பழங்கள் பறிக்கவும் போதியளவு வேலையாட்கள் இல்லை.” விவசாயத்துறை கவலைப்பட்டது.

”எங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த எங்கள் நாட்டு மக்களுக்கு முதுகுவலிகள் அடிக்கடி வருவதால் சுகவீன லீவின் தொகை அதிகமாகிறது. உற்பத்தியின் அளவு குறைந்து கொண்டு போகின்றது. இளைய சந்ததியினர் கணனித் துறையை தெரிவு செய்வதால் இங்கு வேலை செய்ய போதியளவு ஆட்கள் இல்லை. பாரிய பிரச்சனை ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” தொழிற்துறையினர் தங்கள் கவலையைத் தெரிவித்தார்கள்.

”ஏன் இதனைப்பற்றிக் கவலைப்படுவான்? 60களில் செய்தது போல துருக்கி நாட்டில் இருந்து மக்களை அழைத்து வந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமே” தனது சுங்கானை நன்கு உறிஞ்சியபடி சமூக அமைச்சு தனது கருத்தை முன் வைத்தது.

”தயவு செய்து அப்படி ஒரு தவறை மீண்டும் செய்யாதீர்கள். கல்வி அறிவில்லாத அவர்களை இங்கு கொண்டு வந்ததால் பல பிரச்சனைகளை இங்கு சந்தித்து இருக்கின்றோம். இன்றும் அந்த நாட்டுப் பெண்கள் கொளுத்தும் கோடை வெயிலும் கறுத்த அங்கியையும் ஐந்தாவது ஆறாவது கர்ப்பத்தை தாங்கியபடி வீதிகளில் திரிகிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்புவதில்லை. வேலைக்கு செல்லாமல் சமூகஉதவிநிதியைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்” கல்வி அமைச்சு கூறியது.

விவசாய அமைச்சும் தொழில் அமைச்சும் அந்தக் கருத்தை ஆமோதித்தது.

”அப்பொழுது இதற்கு தீர்வுதான் என்ன?” சமூக அமைச்சின் கேள்விக்கு பதில் தெரியாமல் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள்.

”உண்டு… ”இ குடிவரவுப் பிரதேச அமைச்சு தனது தொண்டையைச் செருமியது.

அனைவரும் அவரைப் பார்த்தார்கள்.

”தற்பொழுது இனக்கலவரம் ஏற்பட்டு மீண்டும் கொஞ்சம் அமைதி… கொஞ்சம் போர்.. என தத்தளிக்கும் நாடு இலங்கை. அங்குள்ள தமிழர்களின் கல்வி அறிவு மிக அதிகம். மேலாக அவர்கள் ஆங்கில கல்வித் திட்டத்துக்கும்… ஆங்கிலக் கலாச்சாரத்துக்கும் பழக்கப்பட்டவர்கள். எனவே அவர்களை அகதி என்ற பெயரில் இங்கு அழைத்தால் நிலைமை சுபுகமாகும்”

”அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொள்ளுமா?”

”83 கலவரத்தினால்; ஏற்பட்ட சிதைவுகளுக்கு என இலங்கைக்கு நிதி ஒதுக்குவோம். ஜனாதிபதி தொடக்கம் கிராம சேவகர்கள்வரை அதனை பிரித்து எடுத்துக் கொண்டு அங்குள்ள விமானநிலையத்தின் கெடுபிடிகளைத் தளர்விப்பார்கள்”

”மிக்க நல்ல யோசனை”

அனைத்து அமைச்சும் தமது சந்தோசத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ழூ

அத்தியாயம் 2: காலம் 1984

இடம் : தலதா மாளிகை

ஐனாதிபதிஇ பிரதமந்திரி மற்றும் பிராதான மந்திரிகளுடன் தலாதாமாளிகையின் பிரதம தேரோவும் அமர்ந்திருந்தார்.

“இவ்வளவு மிகப் பரிய அளவில் தமிழர்களை அகதிகளாக வெளியே செல்ல விட்டால் இங்கு அவர்களது எண்ணிக்கை குறையும் என்பதும் போராட்டத்திற்கு என போராளிகளாக மாறுபவர்களது எண்ணிக்கையும் குறையும் என்பது எனக்குத் தெரியாதது அல்ல. ஆனால் அவர்களே எங்கள் நாட்டுக்கு எதிராக மிகப் பெரியளவில் மாறிவிடக்கூடியளவு அபாயம் உண்டாகும் எனத்தான் எனது மனது அச்சப்படுகிறது” ஜனாதிபதிபீடம் கவலைப்பட்டது.

“அதுமாத்திரமில்ல… அவர்கள் அங்கு சென்று இங்கு நடைபெறும் போராட்டத்திற்கு பெரிய பணபலம் அளிக்கும் வல்லமை பெறுவார்கள். அது எங்கள் நாட்டுக்கு தீமையாகாதா?” பிரதமந்திரி தனது கவலையைத் தெரிவித்தார்.

“83 கலவரத்திற்கு பின்னர் விமானநிலையம் வரும் பல தமிழர்கள் முதன்முதலாக இப்பொழுதுதான் நீண்ட காற்சட்டை அணிகின்றார்கள் என்பதையும் சப்பாத்து போட்டிருக்கிறார்கள் என்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதனை விடவும் அவர்கள் மலசலகூடத்தில் உள்ள கொமேட்டுகளில் சப்பாத்துக் கால்களுடன் ஏறிக் குந்தி இருப்பதையும் அவதானிக்க கூடியதாய் இருக்கிறது. இவர்களைப் போல பயணிக்கவிருக்கும் ஆயிரக்கணக்காணவர்களை எவ்வாறு பிறநாட்டு விமான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும்?.” உள்நாட்டு – பிறநாட்டு அமைச்சு தனது பங்குக்கு தனது வாதத்தையும் கேள்வியையும் ஆதங்கத்தையும் முன் வைத்தது.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பிரதான தேரோ தனது தொண்டையைச் செருமியவாறுஇ “உங்கள் அனைவரின் கவலைகள்; அர்த்தமற்றது. முதலில் அவர்களை வெளியே செல்ல விடுங்கள். அதனால் தமிழர்களது விகிதாசாரம் நாட்டில் குறைவடையும். புதிய போராளிகளின் எண்ணிக்கையும் குறைவடையும். அதேவேளை எங்கள் நாட்டுக்கு அதிக அன்னிய செலவாணி வந்தடையும்….  எல்லாவற்றிற்கும் மேலாக முதல் 25 வருட காலங்களுக்கு அவர்கள் ஐரோப்பாவில் இலங்கையர்களாக இருந்தாலும் பின் அவர்கள் முற்றாக ஐரோப்பியர்களாக மாறிவிடுவார்கள். தொடர்ந்தும் இலங்கைத் தமிழர்களாய் இருப்பவர்கள் தங்கள் தங்களுக்குள் அடிபட்டுப் பிரிந்துவிடுவார்கள். பிரிவினைகள் அதிகரிக்கும் பொழுது பலவீனம் அதிகரிக்கும்.  பலவீனம் அதிகரிக்கும பொழுது எதிரியை அழிப்பது சுலபமானது என்பதனை நீங்கள் அறியாதவர்கள் அல்ல” எனக் கூறிவிட்டு அனைவரின் முகங்களையும் நிமிர்ந்து பார்த்தார்.

ஐனாதிபதி எழுந்து சென்று மாகா தேரோவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

பக்கத்தில் இருந்த நீர்த்தடாகத்தில் மிதத்து கொண்டுடிருந்த ஒரு அல்லிமலரை எடுத்து தனது கைளால் தோரோ ஜனாதிபதிக்கு வழங்கினார்.

அதனை இரு கைகளாலும் ஜனாதிபதி வாங்கிக் கொண்டார்.

அத்தியாயம:; 3 காலம் 2009

இடம்: டென்மார்க்

இந்த 25 வருடத்தில் என்னென்னவோ நடந்து விட்டது.

இளமைக் கால கனவுகள்… முதல் காதல்கள் எல்லாமே பனிக்குளிருக்குள்ளும் பன்றி வளர்ப்பிலும் முடங்கி விட மாத முடிவில் கையில் கிடைக்கும் குறோன்களின் அளவிலும்…. அதனை ஆரம்பத்தில் 4 ரூபாயால் பெருக்கிய நாங்கள் இப்போ 22 ரூபாயால் பெருக்கிக் கொண்டிருக்கிறோமே தவிர இப்பவும் பன்றி அடைக்கும் கூடத்தின் மூத்திர வாடையில் தான் காலை விடிகிறது.

இளைஞனாக டென்மார்க்கிற்கு வந்த நான் இங்குள்ள அகாதி முகாமில் அகதி அந்தஸ்துக் கிடையாது இருந்த சிவமணியை திருமணம் பேசி வர அவளைக் கல்யாணம்; செய்து…  பின் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாகி…. போன மாதம் அப்பப்பாவாகி… வாழ்வு தொடர்கிறது.

அவ்வாறே என்னுடன் வந்த சக நண்பர்களின் வாழ்க்கையும் தொடர்கிறது.

எங்கள் பிள்ளைகள் மட்டும் யூனிவேசிற்றி அது இது என்று பெரிய படிப்பு படிக்கிறார்கள். ஆனால் அதுகள் எங்கள் பிள்ளைகளாக வளர்ந்திருக்கின்றார்களா என்ற எண்ணம் சிலவேளை எனக்;கு வருவதுண்டு. அவர்கள் கதைப்பதும் கூட சிலவேளை புரிவதில்லை. அவர்களின் பாசையை மட்டுமில்லை சிலவேளை அவர்களையே புரியமுடியாமல் இருக்கும். இதே சந்தேகம் என்னுடன் இந்த நாட்டுக்கு வந்த பரமலிங்கம்இ யோசெப்புஇ சிவசம்புஇ கணேசலிங்கம்இ கணேசக்குருக்கள் எல்லாருக்குமே உண்டு.

அவர்கள் யாரை ஏன் விரும்புகிறார்கள்… பின் ஏன் விட்டுப் பிரிகிறார்கள் என்று எதுவுமே எனக்குப் புரிவதில்லை. அதனைப் புரிந்து கொள்ள போட்டுக் கொள்ள என்னிடம் எந்தக் மூக்குக் கண்ணாடியும் இல்லை.

நாட்டிலை பிரச்சனை என்று நாங்கள் சொன்னால்இ “ஏன் உங்கடை நாட்டு ஆட்களுக்கு சந்தோசமாக இருக்கத் தெரியாது” என்று பிள்ளைகள் கேட்பார்கள். “உங்கள் நாட்டு ஆட்கள்” என்று எங்கள் பிள்ளைகள்  விழிக்கும் பொழுது நெஞ்சில் சின்னதோர் வலி எடுக்கும்.

எல்லா படித்த ஆட்களும் தான் சொல்லுகிறார்கள்இ “அதுகள் டெனிஷ்காரன்கள். அதுகளிட்டை மட்டுவிலானையும் அளவெட்டியானையும் நீ எதிர்பார்க்காதை எண்டு”.

ஆனால் அவர்களின் அறிவு சொல்வதை இந்த பட்டிக்காட்டானின் மனம் ஏற்குதில்லை.

பிள்ளை பிறந்த அடுத்த மணித்தியாலமே வைன் குடித்து விட்டுப் பால் குடுத்து வளர்த்த பிள்ளைகள் இல்லையே எங்களது. 30 நாளும் சரக்கு கறியும்… பிஞ்சுக் கோழியும்… கரைய விட்டுக் காச்சிய கைக்குத்தல் புழுங்கல் சாப்பிட்டு… பால் குடுத்து வளர்த்த பிள்ளைகள் அதுகள். அதுகளிடம் நான் என்னைத்தானே எதிர்பார்ப்பேன். அது பிழை என்கிறார்கள். எனக்குப் புரியவில்லை. அது முன்பே புரிந்திருந்தால் நிச்சயம் இந்த நாட்டுக்கு வந்திருக்க மாட்டேன்.

30 வருசத்துக்கு முதல் இங்கு நாங்கள் வாழ்ந்த வாழ்வும் இப்போது இல்லை.

வீட்டுக்கு வீடு அகலத்திரையில் அத்தனை இந்தியத் தொலைக்காட்சிகளினதும் சின்னத் திரைகள்… வீட்டுக்கு வெளியில் அக்கம் பக்கத்து டெனிஷ்காரன்களை விடவும் பெரிதானதும் அழகானதுமான சொகுசு கார்கள்… சொந்த வீடு ஒன்று… கடற்கரைப் பிரதேசங்களில் விடுமுறையைக் கழிப்பதற்கான இன்னொரு வீடு;… ஒவ்வோர் வீட்டு வரவேற்புக் கூடத்திலும் குடிக்கிறமோ இல்லையோ ஒரு அலுமாரி முழுக்க விதம் விதமான குடிவகைகள்…. அதன் முன்னால் உயரமான ஒரு வட்ட மேசையும் இரண்டு கதிரைகளும்…பிரமாண்டம் என்ற ஒன்றையே குறி வைத்து நடாத்தப்படும் திருமணவிழாக்கள்… சாமத்தி வீடுகள்… பிறந்தநாள் விழாக்கள்… சுழன்று சுழன்று படம் பிடிக்கும் கமராக்கள்…. எக்ஸ்செற்றா எக்ஸ்றா என்பவற்றுடன் சனி ஞாயிறுகள் ஓடிவிடும். ஒரு குடும்பத்தின் குறைந்த பட்ச பரிசு இலங்கை நாணயத்துக்கு பத்தாயிரத்து நூறு ரூபாயில் தொடங்கி ஐம்பதினாயிரம் வரை வளர்ந்து கொண்டு போகும். அது அது அவர்கள் முதல் விழாவில் எழுதிய மொய்ப் பணத்தைப் பொறுத்தது.

கனகதாரா ஸ்தோத்திர மந்திரத்தை உச்சரித்தால் கூரையைக் பிய்த்துக் கொண்டு பணம் ; கொட்டும் என்பது போல புலம் பெயர்ந்த தமிழருக்கு பல விதத்தில் பலவிதமான இஷ்ட தெய்வங்கள் கதவைத் தட்டிக் கொடுத்தது. அவை சமூக உதவிகளாயும் இருக்கலாம்… வரிப்பணம் கட்டாமல் செய்யம் வேலையாகவும் இருக்கலாம்… அல்லது நாற்பது வயதுக்குள்ளேயே தங்கள் நாரியையும் முழுங்கால் மூட்டுகளையும் சேதப்படுத்தும் துப்பரவு செய்யும் வேலையாக இருக்கலாம்.

பட்டுக் கம்பளத்தை வாங்கி விரித்திருக்கின்றோம். ஆனால் அதில் தூங்குவதற்குத்தான் நேரம் இல்லை.

இந்த உழைப்புகளில் ஒரு சிறிய பகுதியும் சேர்ந்துதான் எங்கள் நாட்டுப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தது… கடல் கப்பல்கள் வாங்கியது…. ஆகாயக் கப்பல்கள் வாங்கியது.

மண்ஜாடியினை பிளந்து கொண்டு எழுந்து வரும் பூதம் போல எங்களின் வளர்ச்சியும் எங்களின் ஆதரவில் வளர்ந்து சென்ற போராட்டத்தையும் உலகமே தலைநிமிர்ந்து பார்த்து ஆச்சரியப்பட்டது. ஆனால் அமெரிக்க கோபுரங்கள் தகர்ந்த போது உலகம் முழுக்க ஏற்பட்ட நடுக்கம் போல சில சமயங்களில் அடிமனது கிலி கொண்டது!

அடிக்கடி நான் வேலை செய்யும் பன்றிப் பண்ணையின் முதலாளி கேட்பார்இ “எப்பொழுது உங்கள் போராட்டம் முடியும்?…. எப்போ நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போவீர்கள்?” என்று.

முதலாவது கேள்விக்கு எப்போதுமே என்னிடம் பதில் இருக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேள்விக்கு பதில் எப்போதுமோ நாங்கள் திரும்பிப் போவப் போவதில்லை என என் மனம் சொல்லும். ஆனாலும் தலையைச் சற்றும் தாழ்த்தாமல் எங்கள் நாட்டில் அமைதி வந்ததும் திரும்பிப் போவோம் என மனமறிந்த பொய்யை சொல்லிக் கொண்டே வந்தேன்.

இலங்கையில் அமைதி என்பதும் போராட்டம் முடிவுக்கு வரும் என்பதும் எனது ஆயுட்காலத்திலும் நடக்கப் போவதில்லை என்பதே எனது மூளைக்கணனியின் கணிப்பாக இருந்தது.

எதிர்பாராமல் வந்து உலகத்தையே சுனாமி பிரட்டிப் போட்ட பொழுதுதான் எனக்கு ஒரு உண்மையே தெரிந்தது. என்னதான் பையர்வோல் போட்டு வைத்திருந்தாலும் அதனைத் தாண்டி வரும் வைரசுகள் போல சிலதுகள் நடந்தே விடுகிறது என்று. இல்லாவிட்டால் கடற்கரையில் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருந்த அத்தனை கிராமத்து இளசுகளையுமா கடல்தாய் ஒரு வினாடியில் அள்ளிக் கொண்டு போவாள். அவ்வாறே ஆடு… மாடு… கோழி… இனபேதம் நிறபேதம் சாதி பேதம் பேசிய அத்தனை வெள்ளைத் தோல்களும் கறுத்த தோல்களும்… உடல் உப்பிய …  இத்தியாதி… இத்தியாதி சாதியும் கடற்கரையில் நிம்மதியாய் தூங்கிக் கொண்டு கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்த அன்றுதான் நினைத்தேன் – எதுவும் எப்போதும் நடக்கலாம் என!

அடுத்த ஒன்பது ஆண்டுகளுள் அது ஒப்பிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் மேலாக போர் விமானங்கள் அதிகமான பறக்கத் தொடங்கியது.

இடம் பெயர்வுகள்… கந்தக மருந்துகளின் வாடைகள்… மயக்க மருந்து கொடுக்காது செய்யப்பட்ட சத்திர சிகிச்சைகள்… கொள்ளிக் குடம் உடைக்காத மரண வீதிகள்.

இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்தார்கள்.

சமாதானத்தை கைப்பிடித்துக் கொண்டு அவர்கள் இறக்குவார்கள் என நம்பினார்கள்.

எங்கள் நகரத்தில் உள்ள அனைவரும் தினம் தினம் வீதியில் நின்று கோஷம் போட்டோம்.

எங்களை நாங்கள் வீடியோவில் படம் பிடித்துக் கொண்டோம். “யாருக்கு இதனை அனுப்பவதற்கு?” என பக்கத்தில் நிற்போரைக் கேட்பேன். “பேசாமல் வந்த வேலையை மட்டும் பாருங்கோ” என மனைவி என் கையில் கிள்ளுவாள். நானும் அமைதியாகி விடுவேன்.

அவ்வாறே ஊர்வலங்கள் பக்கத்து பக்கத்து நகரங்களில்… பக்கத்து பக்கத்து நாடுகளில்… பக்கத்து பக்கத்து கண்டங்களில்… அவுஸ்திரேலியா தொடங்கி அமெரிக்கா வரை போராட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் எழுச்சிப் பாடல்கள் நடனங்கள் எல்லாமே வானைப் பிளக்கும் அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

இலங்கையில் கொத்தணிக் குண்டுகளும் தாரைதாரையாக வந்து இறங்கிக் கொண்டு இருந்தது.

வெள்ளைக் கடற்கரை மண்ணில் கறுத்த கறுத்தப் புள்ளிகள்.  கிட்டப் போய் பார்த்தால் பொன்னுக் கிழவனும் வள்ளி ஆச்சிக் கிழவியும் சிவதம்புவின் பேரனும் இன்னும் இத்தியாதி இத்தியாதி ஆயிரம் பேரும்.

போராளிகளை அழித்துக் கொண்டிருக்கின்றோம் என ரூபவானினி அறிவித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் மதியம் போல ஆயுதங்கள் மௌனமாக்கப்படுகிறது என்ற தமிழ் வானொலியின்  அறிவிப்பைத் தொடர்ந்து உலகநாடுகளில்  எங்கள் வீதிப் போராட்டங்களும் மௌனமானது.

உலகமே உறைந்து போல ஒரு இன அவலம் நடந்து முடிந்து போன போது நாங்கள் எல்லாம் மௌனமாய் இருந்தோம்.

ஏன் என எனக்கு புரியவில்லை.

சுனாமி வந்த போது வீதி வீதியாய் பணம் சேர்ந்த தொண்டர்கள் எவரையும் டென்மார்க் வீதிகளில் காணவில்லை.

மாதாமாதம் கொப்பியுடன் வாசல் கதவைத் தட்டும் யாரையும் காணவில்லை.

எனக்கு வியப்பு… வியப்புக்கு மேல் வியப்பு…

அக்கம் பக்கத்தில் கேட்டேன்.

உனக்கு அரசியல் தெரியாது அமைதியாய் இரு என்ற பதில் மட்டும் வந்தது.

என்னால் முடியவில்லை.

என்வசதிக்கு என்னால் முடிந்ததை தங்கச்சியின் புருஷனுக்கு அனுப்பி வைத்தேன் – யாருக்காவது ஏதாவது செய்யுங்கள் என்று.

முல்லைத்தீவில் ஒரு அகதி முகாமுக்கு பெரிய ஒரு தண்ணித் தொட்டியும் அங்கிருப்போருக்கு பாட்டா செருப்பும் வேண்டிக் கொடுத்ததாக ரசீதும் அனுப்பியிருந்தார்.

தெரிந்தவர்களுக்கு மட்டும் சொன்னேன் – அவர்களும் என்னைப் போல் செய்யட்டும் என்ற நப்பாசையில்!

”இவ்வளவு நாளும் குடுத்தனாங்கள் தானே” என்று விரக்தியான பதில் மட்டும் வந்தது.

அது நெஞ்சினுள் வலித்தது.

ஆனால் எனக்குள் ஒரு சுவாலை எரியத் தொடங்கியிருந்தது.

ழூ

அத்தியாயம:; 4 காலம் 2013

இடம்: டென்மார்க்

போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது வெளிநாட்டில் எவரும் கொண்டாட்டங்கள் பெரிதாக செய்யக் கூடாது என எழுதப்படாத ஒரு சட்டம் நிலவிக் கொண்டிருந்தது. அனைத்தும் எளிமையாகவே நடந்தது.

திருமணங்கள் என்றால் பொதுவாக கோயில்களிலும்… பிறந்தநாள்கள் என்றால் வீட்டினுள்ளும்.

ஆனால் எல்லாம் 2009 கடைசி வரைதான்.

ஆதன் பின்பு ஓட்டுக்குள் தலையையும் கால்களையும் இழுத்துக் கொண்ட அத்தனை ஆமைகளும் குதூகலகமாக வெளியே வந்தது.

பின்பென்ன ஒவ்வொரு விழாக்களுக்கு முன்பும் இந்தியாவில் பொத்தீசும்இ சிங்கப்பூரில் சிறங்கூன் வீதியும்; எங்கள் மக்களால் நிரம்பத் தொடங்கியது.

அப்போதுதான் எங்கள் நகரசபைத் தேர்தல் 2013 வந்தது.

இதில் நான் போட்டியிட்டு வென்றால்இ பன்றிப் பண்ணையின் வருமானத்தை தவிர்த்து மேலதிகமாக குறைந்தது ஆண்டுக்கு சுமார் 10 இலட்சம் இலங்கை ரூபாய் வரும் என ஒரு கணக்காளர் சொன்னார்.

அதனை எங்கள் நாட்டு மக்களுக்கு கொடுத்தால் என்ன என என் ஏழை மனம் சொன்னது.

ஒரு பட்டிக்காட்டு கிராமத்தானின் மனம் வேறு எப்படிச் சிந்திக்கும்.

ஒரு நாட்டுக்கு 5 அரசியல்வாதிகள் என்றால் ஆண்டுக்கு அந்த நாட்டில் இருந்து 50 இலட்சம் எங்கள் மக்களுக்குப் போகும். எத்தனை நாடுகளில் நாங்கள் இருக்கின்றோம். அத்தனை அரசியல் வாதிகளும் இதனைச் செய்தால் அது கோடிகளைத் தாண்டும்.

அப்பாவி மனம் கணக்குப் போட்டது.

எங்கள் நகரசபையில் வாழும் தமிழ் மக்கள் மட்டும் வாக்களித்தால் வெற்றி நிச்சயம் எனக் கணிப்பீடு சொன்னது.

தேர்தலில் குதித்தேன்.

எல்லோருமே கை தட்டுவார்கள் என எதிர்பார்த்தேன்.

எதுவுமே நடக்கவில்லை.

மௌனம்!

முள்ளிவாய்க்கால் மௌனம்!!

எனக்கு எதுவுமே புரியவில்லை.

தேர்தல் தினமும் வந்தது.

அடுத்தநாள் அதிகாலை 2 மணிக்கு தேர்தல் முடிவும் வந்திருந்தது.

நான் தோற்று இருந்தேன்.

மூன்றில் இரண்டு தமிழரின் வாக்குகள் மட்டும் கிடைத்திருந்தன.

தினமும் உலக அரசியலும் ஊர் விடுப்பும் கதைக்கும் என் நண்பன் கூட வேறு ஒருவருக்கு வாக்களித்திருந்தான்.

உனக்கு உலக அரசியலும் தெரியாது ஊர் அரசியலும் தெரியாது என பக்கத்து நகரத்து நண்பன் சொன்னான்.

“நீ முதலில் இங்குள்ள அமைப்புகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் தேர்தலில் நிற்பது” என்று.

“அனாதையாய் நிக்கிற சனங்களுக்கு உதவுறத்துக்க கூட இங்கு இங்கு அனுமதி கேட்க வேண்டுமா?”இ எனக்கு எதுவும் புரியாமல் கேட்டேன்.

ஆம் என அவன் தலையாட்டினான்.

அப்பொழுதுதான் புரிந்தது – ஆயுதங்கள் மட்டும் தான் மௌனமாக்கப்பட்டு இருக்கிறது என்று.

ழூ

இப்பொழுது மற்றும்படி மாவீரர் தினங்களும்… மகளிர் தின விழாக்களும்… முள்ளிவாய்க்கால் கவிதைகளும்… ஆழிப் பேரலை அவலங்களும்… கறுப்பு யூலை அஞ்சலிகளும்… வீர வணக்கங்களும் பேஸ் புக்கில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பேஸ் புக்கில் லைக் போட்டால் தமிழ் இனவாளர்கள். போடாவிட்டால் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள். இது ஒரு புதிய ஆத்திசூடி இங்கு!

அவ்வாறுதான எல்லாமே இங்கு நடக்கின்றது. கல்யாண எழுத்துப் படங்களுக்கு லைக் போடுவர்களுக்கு மட்டும் தான் கலியாண வீடுகளுக்கு சொல்லப்படுகிறது. மரணவீட்டுச் செய்திக்கு லைக் போடுவர்களுக்குத்தான் அந்தியேட்டிக்கு சொல்லப்படுகிறது.

சென்ற கிழமை ஜில்லாவும் வீரமும் பார்த்து விட்டு பிறந்தநாள் விழா ஒன்றின் பின் மண்டபத்தில் இருந்து விஜய்க்காகவும் அஜித்துக்காகவும் எல்லோரும் வாக்கு வாதப்பட்டுக் கொண்டிருந்தார்கள்;.

ஐஸ் கட்டிகள் மிதந்த விஸ்கிக்கு கோழிக்காலும் இறால் பொரியலும் மேலும் சுவை சேர்த்திருத்துக் கொண்டிருந்தது.

மேசையில் தலைகுத்தியிருந்த மனோகரனின் மனைவி சியாமளா வந்து அவனை உலுக்கி எழுப்பினாள்.

“இனிப்போதும். வாங்கோ வீட்டை போவம்”

தலை நிமிர்ந்தவன் “தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும்” என்று விட்டு மேசையில் மீண்டும் தலையைக் குத்தினான்.

சியாமளா என்னைப் பரிதாபடாகப் பார்த்தாள்.

“நீங்கள் வீட்டை போங்கோ… நான் கொண்டு வந்து விடுகிறன்” என உறுதி அளித்தேன்.

 

அத்தியாயம்: 5 காலம் 2014

இடம்: மாதகல்

மாதகலில் எழுந்திருந்த புத்தர் சிலையின் காலடியில் கண்டி மகாபீடத்தேரோவிடம் ஆசி பெற்ற அல்லி மலர்களை வைத்து ஜனாதிபதி வணங்கினார்.

பின்னால் மற்றைய மந்திரிகள்இ பிரதானிகள்.

அதன் பின் வரிசையாக மாதகலையும் அதனை அண்டிய தமிழ் மக்களும்.

“சக்தி மிக்க புத்தராம்”

ஆளுக்கால் பேசிக் கொண்டார்கள்.

சுற்றிவர நின்ற தேமாமரங்களில் வெண்மையும் செந்நிறமுமான பூக்கள் அழகாக பூத்திருந்தது.

அரசமரத்தின் கிளைகள் நன்கு நீண்டு பசிய இலைகள் துளிர்த்திருந்தது.

அத்தியாயம:; 6 காலம் 2014

இடம்: டென்மார்க்

இன்று ஐ. நா. முன்றலில் ஆர்ப்பட்ட ஊர்வலம் செல்ல ஊருடன் ஒத்து பஸ்சுக்காக காத்திருக்கின்றேன்.

முன்பு முன்பு ஊர்வலங்களுக்கு சென்ற தொகையை விட மிகக் குறைவாகவே மக்கள் கூடி நின்றார்கள்.

”செஞ்சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாக எழுவோம்” என்ற வாசகங்கள் பதாகைகளில் எழுதப்பட்டு இருக்கிறது.

அங்கு இவர்களுடன் போகாவிட்டால் இந்த முறை கிடைத்த வாக்குகளும் அடுத்த முறை கிடைக்காது போய்விடும்.

இவர்களை அனுசரித்தால் தான் எங்களைத் தேவதூதர்கள் என நம்பிக் கொண்டிருக்கும் என் அப்பாவிச் சனங்களுக்கு உதவ முடியும்.

நாலு வருசத்துக்கு அப்பால் ஆவது ஆண்டுக்கு ஒரு பத்து இலட்சம் கிடைக்கட்டும் என்ற ஒரு நப்பாசை தான்.

கை விரல் நகங்கள் இடையே மீண்டும் ஒரு போனாக நசுக்கப்படாமல் இருக்க இந்த பீனிக்ஸ் பறவைகளுடன் இந்த சமசரங்களை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

அல்லது தலையை குனிந்து போக வேண்டி இருக்கின்றது.

இன்று இரண்டாயும் மூன்றாயும் பிரிந்திருக்கும் இவர்கள் அடுத்த நாலு வருடத்தில் இன்னும் நாலாய் பிரிந்துவிடக் கூடாது என மனத்துள்
ஒரு பிரார்த்தனை.

ஊர்வலத்திற்கு போவதற்காக பன்றிப் பண்ணை முதலாளியிடம் ஒரு நாள் பிரத்தியோக லீவு பெற்று இருக்கின்றேன்.

எங்கள் ஊர் மக்கள் தான் பாவங்கள் –  செவ்வாயில் அந்தோனியார் கோயிலுக்கும்… வெள்ளியில் நல்லூருக்கும்… ஞாயிறுகளில் புத்த விகாரைக்கும் சென்றபடி… வானத்தில் இருந்து வந்திறங்க இருக்கின்ற தேவதூதர்களை இன்னமும் நம்பியபடி….  இன்னமும் அதிகாலையில் கிணற்றில் தண்ணி அள்ளி கீரைக்கன்றுகளுக்கு ஊற்றியபடி….

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)