தவம் : சிறுகதை

தவம் : சிறுகதை

தவம் : சிறுகதை
சரியாக பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து ஜேர்மனில் வசிக்கும் தேவராஜா அண்ணையைப் பார்க்க இன்று போயிருந்தேன்.

அன்று 13-11-2002

இன்று 13-11-2015

திகதிகள் கூட ஏதோ சொல்லி வைத்த மாதிரி அமைந்திருக்கின்றது.

13-11-2002 அன்று எனது மகள் ரேணுகா, தேவராஜா அண்ணையின் மகன் கோபி, சுவீடனில் வசிக்கும் என் நண்பனின் மகள் சுபா என ஐரோப்பாவில் வசிக்கும் 13 பிள்ளைகள் ஜேர்மன் பிராங்போட் விமான நிலையத்தில் இருந்து இலங்கை நோக்கிப் போன நாள் அது.

எல்லோருக்கும் 16-17-18 வயதுதான்.

தங்கள் தங்கள் உயர்தரக் கல்வி முடிய பல்கலைக்கழகம் செல்லுவதற்கு முன்பாக நாட்டிற்;காக சேவை செய்ய என விரும்பி முன் வந்தவர்கள்.

பயணத் திகதி சரி.. பயணித்தவர்களின் எண்ணிக்கை சரி… 13 என அமைந்த பொழுது எனக்கும் என் மனைவிக்கும் அபசகுனமாகப்பட்ட பொழுதும் மற்ற எவர்க்கும் அது பற்றிய கவலை இருந்ததாக தெரியவில்லை.

அனைத்துப் பெற்றோரும் ஏதோ ஒரு வகையில் நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் அதிகமாக இருந்தவர்கள்தான்.

சிலர் தங்கள் தங்கள் நாட்டில் பிரதம அமைப்பாளர்களாக அல்லது தீவிர செயல்பாட்டாளர்களாக இயங்கி கொண்டிருந்தவர்கள் தான்.

ரேணுகா ஒரு வருடம் அங்கு போய் சேவை செய்யப் போகின்றேன் என்ற பொழுது மனைவி முற்றாக மறுத்து நின்றாள்.

நான் தான் ”எங்கள் பிள்ளையை நாங்கள் அனுப்பாவிட்டால் எப்படி மற்ற மற்ற பிள்ளைகளை நாட்டுக்கு சேவை செய்யக் கேட்பது” என்றும், ”நாங்களே மற்ற பெற்றார்களுக்கு முன்னுதாரணமாக நடக்க வேண்டும்” என்றும் சொல்லி அவளை அனுப்பி வைத்தேன்.

எங்கள் பிள்ளைகளின் கணனி அறிவும், அவற்றை அவர்கள் பாவிக்கும் துரிதமும் அங்கு தேவைப்பட்டது – மற்றவர்களைக் கற்பிக்கவும் சில சில கட்டமைப்புகளை வடிவமைக்கவும்.

ஆம்!

13-11-2002 அவர்கள் அனைவரையும் எயர்லங்கா காவிக்கொண்டு தாயத்தை நோக்கிப் பயணமாகியது.

*

இப்போ பதின்மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.

ரேணுகா அடுத்த ஆண்டே திரும்பி வந்துவிட்டாள்.

வந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் ஊர்க்கதைகளையும் போர்க்கதைகளையும் கதைகதையாக சொல்லுவாள்.

ஆனால் அவளுக்குத் தெரிந்த ’களம்’ மட்டுப்பட்டதாகவே இருந்தது.

அவளது களப்பணி கணனியில் தகவல்கள் பதிவு செய்வதும்… வெவ்வேறு ரூபங்களில் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு கணனயில் வடிவமைப்பதில்லேயே இருந்திருக்கிறது.

அவளுக்குத் தெரிந்ததைவிட அதிகமான தகவல்களை நாங்கள் இணையத்தளங்களில் அறிந்து கொண்டிருந்தோம் என நினைக்கின்றேன்.

பின்பு அவளும் பல்கலைக்கழகமாக… பி. எஸ். சி, எம். எஸ். சி, பி.எச்.டி என்று பத்தாண்டுகள் ஓடிவிட்டது.

பத்தாண்டு முடிவில் பெரிய ஒரு கம்பனியில் மிகப்பெரிய பதவி கிடைத்தது.

மிகப் பெருமையாக இருந்தது.

பின்பு படிப்புக்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளை… தொழிலுக்கேற்ற மாப்பிள்ளை…வடிவுக்கு ஏற்ற மாப்பிள்ளை… வயதுக்கு ஏற்ற மாப்பிள்ளை என எல்லா விதத்திலும் பார்த்துக் கொண்டு போக ஏதோ ஒன்றில் ஏதோ ஒன்று சறுக்கி கொண்டு போக…. அவளாக சொன்னதுதான், ”கோபியைக் கேட்டுப் பாருங்கள்” என்று.

இலங்கை சென்ற பொழுது கோபியில் மேல் இருந்தது வெறும் ஈர்ப்பு என்று தான் எண்ணியிருந்ததாயும… ஆனால் அதன்பின் கோபியுடன் நன்கு பழகும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும்… இப்போ திருமணங்கள் வந்து… வந்து… தட்டி… தட்டிக் கழிந்து கொண்டு போகும் பொழுது தான் கோபியை நினைத்துப் பார்ப்பதாயும் அவள் சொன்னாள்.

இதனை முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று விட்டு என் பழைய டையறியைத் தேடி தேவராஜா அண்ணையின் தொலைபேசி எண்ணகை; கண்டு பிடித்தேன்.

99ல் ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்டதின் பின்பு எங்களில் எவருக்கும் ஒருவருடன் ஒருவர் அதிகமாக தொடர்புகள் இருக்கவில்லை.

குறிப்பாக 2003ல் எங்கள் பிள்ளைகள் திரும்பி வந்த ஆண்டின் கிறிஸ்மஸ் விழாவின் பொழுது அந்த 13 பிள்ளைகளும் சந்தித்துக் கொண்ட பொழுது ஒரு தடவையும் 2004ல் எங்கள் உறவினரின் திருமணத்திற்கு நானும் என் மனைவியும் ஜேர்மனியில் உள்ள ’ஹம்’ அம்மன் கோவிலில் வைத்து தேவராஜன் அண்ணையையும் அவர் மனைவியையும் சந்தித்து சுகம் வலம் விசாரித்துக் கொண்டதின் பின் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

எனது கைத்தொலைபேசியில் அவரின் வீட்டு எண்ணுக்கு அழைத்தேன்.

அவரின் மனைவியே ரிசீவரை எடுத்தார்.

என்னை நான் அறிமுகம் செய்ய முதல் அவராகவே, ”எனக்கு விளங்குது ரேணுகாவின் அப்பா” என என்னை அடையாளம் கண்டு கொண்டு தேவராஜா அண்ணையைக் கூப்பிட்டார்.

”சொல்லுங்கள் தோழர்”

இவ்வாறுதான் அவர் எல்லோரையும் அழைப்பது.

”இல்லை… ரொம்ப நாட்களாக தொடர்புகள் இல்லாமல் இருந்து விட்டோம்…

இன்று ஞாபகம் வந்தது” என மழுப்பியபடியே தொடர்ந்தேன்.

ஊர்நிலைமைகள்… அண்மைய தேர்தல்கள்.. அப்படி இப்படி சுற்றி வந்து.. ரேணுகா கணனித்துறையில் பி.எச்.டி. வரை எட்டியதைச் சொல்லி விட்டு… சாடையாக ரேணுக்காக்கும் திருமணம் பார்க்கத் தொடங்கியிருக்கின்றோம் என்ற செய்தியையும் காற்றுவாக்கில் அவர்காதில் போட்டபடி ”கோபி எப்படி இருக்கிறார்?” எனக் கேட்டேன்.

மறுமுனையில் ஒரு சின்ன மௌனம்.

”அவர் நல்லாய் இருப்பார் என நம்புகின்றோம்”

அவர் குரல் கம்மியது.

எனக்கு ஏதோ தவறு நடந்துவிட்டது என விளங்கியது.

பின்பு அவராகவே தொடந்தார்.

என்னால் நம்பவே முடியவில்லை.

கோபி மற்றப் பிள்ளைகளுடன் 2003ல் திரும்பி வந்தாலும் இங்கு பல்கலைக்கழகம் சென்று கொண்டே மின்னஞ்சல்கள் மூலமாகவும் இணையத்தளம் மூலமாகவும் களப்பணி செய்து கொண்டே இருந்திருக்கின்றார்.

”2004 டிசம்பர் 24ல் சுனாமி அனர்த்தம் வந்த பொழுது நான் சேர்த்துக் கொடுத்த ”சுனாமி நிதி”யையும் எடுத்துக் கொண்டு தைப்பெங்கல் அன்று எங்களோடை பொங்கல் சாப்பிட்டுட்டு போனவன்தான்….” மீண்டும் அவர் குரல் கம்மியது.

எனக்கு தொலைபேசியில் அவரை தொந்தரவு செய்வது போலப்பட்டது.

”நீங்கள் இப்ப எதுவுமே சொல்ல வேண்டாம்… நாங்கள் இரண்டொரு கிழமைக்குள்ளை உங்களை வந்து சந்திக்கிறம்” எனக் கூற அவரும் ”வாருங்கள்” என்று மௌனமாக தொலைபேசியை வைத்தார்.

*

சென்ற வாரம் வந்த மூன்று நாள் விடுமுறையில் நான், என் மனைவி, மகள் ரேணுகா மூவரும் காரில் தேவராஜன் குடும்பத்தைச் சந்திக்கப் போனோம்.

டேன்மார்க்கில் இருந்து ஜேர்மனியில் உள்ள அவர்களின் நகருக்கு 8 மணித்தியாலக் கார் ஓட்டம்.

போகும் வழியெல்லாம் கோபியின் கெட்டிக்காரத் தன்மை பற்றியே ரேணுகா சொல்லிக் கொண்டு வந்தாள்.

களத்தில் பணியாற்றும் பொழுது தனக்கு அவிழ்;க்க முடியாத எந்த கணனி முடிச்சையும் மிக இலகுவாக கோபி அவிழ்த்து விடுவானாம் என வியந்து கொண்டே வந்தாள்.

யாருக்கும் எந்த நேரத்திலும் இரவோ பகலோ என்று பார்க்காது உதவி செய்வானாம்.

அங்கு சென்ற 13 மாணவர்களில் மேலிடத்தின் அபிமானத்தை அதிகமாக பெற்றிருந்ததும் கோபிதானாம்.

அவனது அந்த நடத்தைகள்… திறமைகள்… ரேணுக்காக்குள் சில நினைவுகளை.. எதிர்பார்ப்புகளை படர விட்டதில் எந்த தவறும் இருந்ததாக எனக்குச் சரி என் மனைவிக்குச் சரி படவேயில்லை.

நியாயமான விரும்பம்தான் அவளுடையது.

அவர்கள் வீட்டின் வாசலை அடைந்த பொழுது பகல் ஒரு மணியாகி இருந்தது.

தேவராஜா அண்ணை அடையாளம் காணமுடியாதது போல மாறியிருந்தார்.

பல வருடங்களாக சவரம் செய்யாத தாடி.

அவர் குரல் வேறு மிகவும் கட்டியிருந்தது.

எங்களைக் கண்டதும் அவர் கண்கள் வழியே கண்ணீர் ஒடியது.

மனைவி ஏறக்குறைய பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் அவ்வாறே இருந்தார்.

ஹோலின் நடுவின் கோபி தன் சகோதரங்களுடன் நின்று எடுத்த படம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்து.

மேசையில் பலவிதமான உணவுகள் பரிமாறுவதற்கு தயாராக இருந்தது.

யாரும் பெரிதாக ஏதும் கதைக்கும் மனோநிலையில் இருக்கவில்லை.

“வாங்கோ.. சாப்பிட்டிட்டு பிறகு பேசலாம்” என அவர் மனைவி அழைக்க நாம் மூவரும் போய் கைகால்களை அலம்பிக் கொண்டு வந்தோம்.

எல்லோருக்கும் நல்ல பசி.

தேவராஜா அண்ணையின் மனைவி பரிமாறத் தொடங்க ரேணுகாவும் எனது மனைவியும் அவருடன் இணைந்து கொண்டார்கள்.

தேவராஜா அண்ணை தனக்குப் பக்கத்தில் இருந்த அலுமினியப் பாத்திரத்தை திறந்தார்.

அதனுள் தாழித்த கொண்டல் கடலை.

அதனை அவராகவே எடுத்து தன் தட்டில் போட்டார்.

அவரின் தட்டில் ரேணுகா சோற்றைப் பரிமாறச் சென்ற பொழுது அவர் கை அதனைத் தடுத்தது.

“மகன் வந்த பின்புதான் தான் சோறு சாப்பிடுவது என்ற விரதத்தில் இருக்கிறார்”

எனக்கு ‘திக்’ என்றிருந்தது.

“இத்தனை வருடங்களாகவா….”

“இல்லை… 2009 வைகாசி; இருந்து”

“அதென்ன கணக்கு?”

அவரே தொடர்ந்தார்.

“சுனாமிக்கு உதவி செய்யப் போனவன் தான். பின்பு திரும்பி வரவே இல்லை. தனக்கு களப்பணி மிகவும் பிடித்துக் கொண்டது என்றும்…. தலைமைபீடம் தன்னை தம்முடனேயே இருக்கச் சொல்லி கேட்டதாயும்… தனது சேவை அவர்களுக்கு மிகவும் தேவை எனவும் உறுதியாக சொல்லிக் கொண்டான்.

கடவுளின் விருப்பமும் அதுவானால் அப்படியே இருக்கட்டும் என்று நாங்கள் இருவருமே சொல்லி விட்டோம்.

இரண்டு வருடத்திற்கு பிறகு… ஒரு பெண் போராளியுடன் ஒரு படத்தை அனுப்பியிருந்தான். மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்த பிள்ளை என்றும்… தகப்பன் கால் இழந்தவர் என்றும்… இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாயும் எழுதியிருந்தான்.

நாங்களும் சம்மதம் தெரிவிக்க அந்தப் பிள்ளையும் இடைக்கிடை எங்களுடன் தொலைபேசியில் கதைக்கும்”

ரேணுகாவின் கண்கள் கலங்கிக் கொண்டு வந்ததை அவதானித்தேன்.

சோற்றுக்குள் கை கொண்டு போனவள்;, எழுந்து டாயிலட் பக்கம் போனாள்.

“போர் தொடங்க எங்களுக்கும் பதட்டம் அதிகமாயிட்டுது. ஒரு இரண்டு மாதமாய் எந்த தொடர்பும் இல்லை…. கடைசியாக அந்தப் பிள்ளையோடை வெளியில் வந்து நின்று ஒருநாள் கதைத்தவன். தான் அவளை வெளியே கொண்டு வந்து விட வந்ததாயும்… அதன்பின்பு கட்டாயமான பணி ஒன்றைச் செய்வதற்கு திரும்பி போக இருப்பதாக சொன்னான்.

தாய் வேண்டாம் ராசா என எவ்வளவோ கெஞ்சினவா. ஆனால் அவன் கேட்கவில்லை…”

“பிறகு” நான் கேட்டன்.

“எல்லாம் முடிஞ்ச பிறகு அவனை அந்தப் பிள்ளையின் தோழி தடுப்புமுகாமுக்குள் கண்டதாம் எனச் செய்தி வந்தது. எங்களுக்கு வயிற்றிலை பாலை வார்த்தது போல இருந்தது…. ஆனால் அதுக்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை.”

அவரின் மனைவி தொடர்ந்தார்.

“எத்தனையோ பேரைப் பிடித்து என்னென்ன வழிகளில் எல்லாம் முயற்சித்துப் பார்த்தம். ஒரு பிரியோசனமும் இல்லை. எந்தச் சாத்திரியிட்டை கேட்டாலும் அவன் இருக்கிறான் என்றுதான் சொல்லினம். இவரும் அவன் வந்தால்தான் கோயிலுக்கு வைச்ச நேர்த்திக்கடனுக்கு தாடி வழிக்கிறது என்றும் பிள்ளையோடை இருந்து சோறு சாப்பிடுறது என்று விரதம் இருக்கிறார்”

“இது விரதம் இல்லை… தவம்!… ஆறு வருடங்களாக சோற்றைக் கைகளால் தொடாத தவம்!!” என என் மனது சொல்லிக் கொண்டது.

“அந்தப் பிள்ளை?” ரேணுகா கேட்டாள்.

தாயாரின் கண்கள் கலங்கியது.

“ஆறு வருடம் அந்த பிள்ளையும் காத்திருந்ததுதான். தகப்பன் தாய் நெருக்கினமாம் என ஒருநாள் டெலிபோனிலை அழுதது”

நாங்கள் மூவருமே அவரைப் பார்த்தோம் – பதில் என்னவென்று.

“நீ உன் வாழ்க்கையை இனி வீணாக்காதே என்று கல்யாணச் செலவுக்கு காசும் அனுப்பி வைச்சம்”

தேவராஜா அண்ணையிலும் அவர் மனைவியிலும் வைத்திருந்த மதிப்பு இன்னமும் கூடியது.

“இனி என்ரை பிள்ளை வந்து அவளைத் தேடேக்கைதான் அவன் பரிதவித்துப் போவான்”…. இவ்வளவு நேரமும் கல்லுப் போலை கதை சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜா அண்ணை உடைந்து அழத்தொடங்கினார்.

அவரின் கைகளை இறுக்கமாக நான் பற்றிக் கொண்டேன்.

எல்லோருக்குமே ஒரு இறுக்கமான நிலை!

*

அன்றிரவு அங்கேயே தங்கி விட்டு அடுத்தநாள் காலையில் கிளம்ப ஆயத்தமானோம்.

அன்றிரவு யாரும் பெரிதாக நித்திரை கொண்ட உணர்வு இல்லை.

தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில் நடந்து கொண்டிருந்தது போல இருந்தது.

காலையில் அவர் றவைக்கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்.

எங்களுக்கு பேக்கரியில் பாண் வாங்கிருந்தார்கள். பட்டர் – சீஸ் – ஜாம் இத்தியாதிகள்.
தொலைபேசி ஒன்று வந்தது.

மறுமுனையில் யாரோ கடினமாக பேசுவது கேட்டது.

அவரின் முகம் மாற அவரின் மனைவி தொலைபேசியுடன் அப்பால் செல்லுமாறு சைகை காட்டினார்.

அவர் போய் விட்டு பத்து நிமிடகளின் பின்பு தொங்கிய தலையுடன் தன்னை மறைத்த ஒரு புன்னகையுடன் வந்தமர்ந்தார்.

“சொல்லுங்கோ… என்ன பிரச்சனை?” நான் தான் கேட்டேன்.

அவர் கண்கள் கலங்கியது.

அவர் தயங்கினார்.

“எங்கடை ஆட்களின்டை இலட்சணத்தையும் சொல்லுங்கோவன்” மனைவி ஆவேசப்பட்டாள்.

எங்கள் மூவருக்கும் எதுவும் விளங்காது ஒருவரையொருவர் பார்த்தோம்.

“தம்பியை தேடிக்கொண்டு இருக்கும் பொழுது இப்போ டெலிபோன் எடுத்தவர்தான் தனக்கு யாரையோ தெரியும் என்று இருபது இலட்சம் கொடுத்தால்… அதாவது 13 ஆயிரம் யூரோரக்கள்… தம்பியன் எங்கள் வீட்டு வாசலிலை என்று பேரம் பேசினவர். என்னட்டை கிடந்தது… இவாட்டை கிடந்த சின்ன நகைகள் எல்லாம் சேர்த்து 10 ஆயிரம் யூரோக்கள் கொடுத்தம். மிகுதி 3 ஆயிரம் யூரோக்களையும் ஒரு மாதத்துக்கை தாறம் எண்டம்.

“இப்ப ஒரு வருடம் ஆச்சு… தம்பியனும் வரேல்லை… அந்த 3 ஆயிரம் யூரோவும் குடுபடலேல்லை… அவங்கடை திட்டும் முடியேல்லை… தான் பிணை நிண்டதுக்கு தான் கடனைப் பொறுக்க ஏலாதாம்…. இனியும் காலம் கடத்தினால் வட்டி வேறு தரவேணுமாம்…. நாங்கள் என்ன செய்யுறது. அரசாங்கத்தின்ரை பிச்சைக்காசிலை இருந்து கொண்டு பிள்ளையையும் நாட்டுக்கு குடுத்துப் போட்டு இருக்கிறம்”

இப்படியும் மனிதர்களா என மனம் என்னையே கேள்வி கேட்டது.

யாரும் எதிர்பார்த்திராத வகையில்…

“நான் தாறன் அங்கிள்!”
ரேணுகா சொல்ல எல்லோரும் வாயடைத்துப் போனோம்.

“அவள் என் பிள்ளைதான்” என என் மனம் பெருமைபட்டது.

டென்மார்க் போனவுடனேயே உங்களின்டை அல்லது அந்த ஆளின்டை பெயருக்கு காசை றான்சர் பண்ணி விடுகிறன்.

“அவர் என்ன வேலை செய்யுறார்” என் மனைவி கேட்டாள்.

“அவரும் எங்களைப் போலை பிச்சைக்காசிலைதான் இருக்கிறார். ஆனால் முன்பு வேறு ஒரு அமைப்பில் இருந்து பிறகு எங்கடை அமைப்பில் வந்து வேலை செய்தவர். அதனால் வந்த அறிமுகம்தான் அது. இப்ப எங்கடை நகரத்துக்கு தமிழ் சங்கத்துக்கு தலைவராய் இருக்கிறார். வட்டி, சீட்டுகள் என்று நல்ல காசு பணத்தோடை இருக்கிறார். யாரை நம்புறது? யாரை நம்பாமல் விடுவது??”, தேவராஜா அண்;ணை சொல்லிக் கொண்டேயிருந்தார்.
பின்பு நான் சரி.. என் மனைவி சரி.. ரேணுகா சரி… ஏதும் பேசவில்லை.

*

விரைவுப் பாதையில் எங்கள் கார் டென்மார்க்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

120 வேகத்தில் ஓட வேண்டிய வீதியில் ரேணுகா 150ல் ஓட்டிக் கொண்டு இருந்தாள்.

சில இடங்களில் இன்னும் அதிகமாக…!

ரேணுகா என்ன நினைத்துக் கொண்டு காரை ஓட்டிக்; கொண்டு இருந்தாளோ எனக்குத் தெரியாது.

எந்தச் சாத்திரங்களிலும் நம்பிக்கையில்லாத என்னை, 13 என்ற ஒரு எண்ணும்… தேவராஜா அண்ணை பற்றிய எண்ணங்களும் நிறைத்திருந்தன.

“போர் முடிந்து விட்டது என்று எப்படி ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்”

முன் சீற்றில் ரேணுகாவுக்கு பக்கத்தில் இருந்த நான் திரும்பி பின் சீற்றில் இருந்த மனைவியைப் பார்த்தேன்.

அவள் தூக்கத்தில் அலட்டிக் கொண்டு இருந்தாள்.

“பிள்ளை ஏதாவது இடத்திலை நிப்பாட்டு… அம்மாவை எழுப்பி தண்ணி, சோடா ஏதும் குடுத்திட்டு பிறகு போகலாம்”

அடுத்து வந்த 5வது கிலோ மீற்றரில் கார் தன் வேகத்தைக் குறைத்தது.

“ஏன் மெதுவாய் போறியள்” என் மனைவிதான்”

தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள் போலும்.

“இதிலை கொஞ்ச நேரம் நின்று தண்ணி குடித்து சாப்பிட்டு விட்டு போவமம்மா”  ரேணுகா வீதியில் இருந்து கண்களை விலத்தாமல் தாய்க்கு பதில் சொன்னாள்.

“தேவராஜா அண்ணையையும் கூப்பி;டு!… கொஞ்சம் சோறு குடுப்பம்.… பாவம் அவர்…சாப்பிடாமல் தவமிருக்கிறார்”

மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.

அவள் இன்னமும் தூக்கத்தில் இருந்து முற்றாக எழுந்திருக்கவில்லை.

(முற்றும்)

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)