ஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல்.
1) ஓர் இலக்கிய வாதியாக தங்களை உருவாக்கிய குடும்பச் சூழல், இளமைப்பருவம், கல்வி போன்ற விபரங்களை முதலில் தாருங்கள்.
வாசகர்கள் அனைவருக்கும் இப்பேட்டியை எடுக்கும் திரு.ஞானசேகரனுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
ஆரம்பத்திலேயே “ஓர் இலக்கியவாதி” என்ற அடைமொழியைத் தவிர்த்து இலக்கியத்திலும் அதன் வெவ்வேறு வடிவங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் இதனை ஆரம்பிக்கின்றேன்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சங்கானையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் தான். அப்பப்பா மிகப் பெரிய ஒரு வியாபாரி எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பிறந்த காலகட்டத்தில் அவரின் தொழில் நொடிந்திருந்ததாம். ஆனால் அவரின் வாழ்வின் அந்த அடையாளங்களை இப்போதும் எங்கள் குடும்பம் பெருமையாக பேசிக்கொள்ளும். ’பிரமாண்டம்’ என்பது’அவரின் அடையாளம். அந்த பரம்பரை அலகு என்னுள்ளும் ஏதோ ஓரிடத்தில் வந்து இருக்கிறது என என் தந்தையும் தாயும் அடிக்கடி சொல்வார்கள்.
ஆரம்பக் கல்வியை சங்கானை சிவப்பிரகாச வித்தியாலத்திலும் பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தேன். விஞ்ஞான மாணவனான எனக்கு தரப்படுத்தல் காரணமாக பல்கலைக்கழகம் போகமுடியாது போனமையால் யாழ். பல்கலைக் கழகத்தின் அனுசரணையுடன் கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரில் நடாத்தப்பட்ட ஆங்கில டிப்பிளோமா வகுப்பில் இணைந்தது தான் இலக்கியத்தின் மீது பெரிய கவனத்தை ஈர்த்தது.
சிறுவயது தொடக்கம் சங்கானையில் இருந்த 10 நாடக மன்றங்களின் நாடகங்களும்… மானிப்பாய் இந்துக் கல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சு-நாடகப் போட்டிகளும்… கோயில்களில் நடைபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் பிரசங்கங்களும்… பட்டி மன்றங்களும் என்னுள் இலக்கிய விருப்பத்திக்கான தளத்தை அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை.
அவ்வாறே சுமார் 7ம் 8ம் ஆண்டு தொடக்கம் அதிகமாக நாவல்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். வாசிப்புடன் நிற்காது அது பற்றி மிகவும் மற்றவர்களுடனு; விவாதிப்பதிலும் பெரு விருப்பம் கொண்டிருந்தேன்
2) தாங்கள் எப்போது டென்மார்க் நாட்டுக்குப் புலம் பெயர்ந்தீர்கள்? டென்மார்க் நாட்டை தேர்வு செய்ததற்குக் காரணமென்ன?
அது தற்செயலாக நடந்தது. இலங்கையில் இருந்து ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற 80களின் நடுப்பகுதியில் நேர்ந்த கட்டாயத்தில் ஜேர்மனி நோக்கிய திட்டமிட்ட பயணம் அது. ஜேர்மனிய எல்லைகள் மூடப்பட்டும் டென்மார்க்கின் எல்லைகள் திறந்திருந்தாலும் இது நடந்தது – சரிந்த குடத்தில் இருந்து நீர் வெவ்வேறு திசைகளில் ஓடுவது போல…. அல்லது மூட்டையில் இருந்து விட்ட அவிழ்த்து விட்ட நெல்லிக்காய்கள் போல… டென்மார்க்கில் எமது ஓட்டப்பந்தயம் தரித்து நின்றது.
ஆனால் சரணடைந்த டென்மார்க், மனிதத்தை பெரிதும் மதிக்கும் உலக நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பது என்பதால் இங்கு வந்தது பற்றி என்றும் எனக்கு மகிழ்ச்சியே.அது மாத்திரம் இல்லை.
சட்டங்களை இயற்றும் பாராளுமன்றம்… அதனை நிறைவேற்றும் நகரசபைகள்… அதற்கு உதவும் பாதுகாப்பு துறை… அனைத்தையும் கண்காணிக்கும் நீதித்துறை இந்த நான்கு துறைகளுக்கும் இடையே நாலு பெரிய பெர்லின் மதில் சுவர்கள் உண்டு.
86-87ல் தமிழர்களின் குடும்ப இணைப்பை தன் முடிவின் பெயரில் நிறுத்தி வைத்த ஒரு நீதி அமைச்சரையும் அதனை பாராளுமன்றத்தில் மறுத்த பிரதம மந்திரியையும் பதவியில் இருந்து இறக்கி சிறைக்கு அனுப்பியதோடு பாராளுமன்றத்தையும் கலைத்த ஒரு ஜனநாயக நாடு.
மேலாக அடுத்து பிரதமராக வரவேண்டிய ஒருவர் குடிபோதையில் காரை பாதையில் நின்று மின்கம்பத்துடன் மோதியதால் அவர் எதிர்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலிலோ நகராட்சி தேர்தலிலோ நிற்கும் தகுதியைப் பறித்த ஒரு நாடு.இதனை இலங்கை-இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருத்திப் பார்த்தால் எத்தனை பேர் பாராளுமன்றத்தினுள் இருப்பார்கள் என நினைத்துச் சிரிப்பதுண்டு.
வாழ்வில் முதன்முதலாக ஜனநாயகம் என்றால் என்ன என்பதை புரிய வைத்த நாடு இது.
3) டென்மார்க் நாட்டில் தங்களது இலக்கிய முயற்சிகள் எவ்வாறு ஆரம்பமாகின?
டென்மார்க்கில் செஞ்சிலுவையின் பாதுகாப்பில் இருந்த பொழுதும…; வாழ்விட அனுமதிப் பெற்ற பின்பு டெனிஸ் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் இருந்த 18 மாத காலத்திலும்… தினமும் 3 மணித்தியால டெனிஸ் பாடசாலைக்கு செல்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்கவில்லை.
அப்பொழுதுதான் டென்மார்க் முழுக்க இருந்த தமிழர்களின் ஆதரவுடனும் டெனிஸ் அகதிகள் சங்கத்தின் அனுசரணையுடனும் 60-80 பக்கம் கொண்ட கையெழுத்து சஞ்சிகை ஒன்றை நானும் மனைவியும் இணைந்து நடாத்தினோம்.
அதன் பெயர் ’குயிலோசை’. எனது புனைபெயர் மீரா. இப்போதும் என்னை ‘குயிலி’’ அண்ணை அல்லது ‘மீரா’ அண்ணை எனவும் நினைவு கொள்வோரும் உண்டு.
இந்த கையெழுத்துப் பிரதி செய்து கொண்டிருந்த பொழுது டென்மார்க்கின் அரச நூலகத்தின் தமிழ் பகுதிக்கு ஒரு தமிழ் ஆலோசகர் தேவைப்பட்டார். அது நானாகினேன். இன்றும் அது தொடர்கின்றது.
4) 1998இல் டெனிஷ் – ஆங்கில-தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு வைத்தியக் கையேடும் அகராதியும் இணைந்த கையேட்டினை வெளியிட்டீர்கள். அதற்கான நோக்கம் என்னவாக இருந்தது?
காலத்தின் கட்டாயம் என்று சொல்வார்களே…. அது போல அது அமைந்தது. 1990ல் இருந்தே நான் வைத்தியத் துறையில் மொழிபெயர்ப்பாளராய் கடமையாற்றினேன். இந்தியாவில் தொழுநோய் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியா செல்லவிருந்த ஒரு டெனிஸ் வைத்தியருக்கு அடிப்படைத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அவரின் நட்பினாலும் பெரும் உதவியாலும் டெனிஸ் – ஆங்கில – தமிழ் அகராதியும் வழிகாட்டலும் இணைந்த நூலை நானே தொகுத்தேன்.
மிகுந்த வரவேற்பும் நல்ல பொருளாதார வருமானத்தையும் எனக்கு அளித்தது.
தற்பொழுதும்; வைத்தியதாதியர் அல்லது சுகாதார பராபரிப்பு பற்றிக் கற்;பவர்கள் என்னிடம் அதனைப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
கணிணியில் அதனை நானே தொகுத்ததனால் கணிணி பற்றி 1990ல் நன்கு கற்கவும் அது எனக்கு உதவியது.
5) டென்மார்க்கில் வாழும் இளைய சந்ததியினர் இணையத்தளங்களில் எழுதிய கவிதைகளை ‘மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற மகுடத்தில் தொகுத்து வெளியிட்டுள்ளீர்கள். அதற்கான உந்தல் தங்களுக்கு எங்கனம் ஏற்பட்டது?
எனது 50 வயதில் எனது முதல் தொகுப்பான “யாவும் கற்பனை அல்ல” என்ற தொகுப்பு வேலைகள் நடந்த பொழுது தான் டென்மார்க்கில் இளைய தலைமுறையினர் “வானம்.டிகே” என்ற இணையத்தளத்தை நடாத்தி வந்தனர்.
அவர்களில் பெரும்பாலோனேர் அழகிய சித்திரங்களுக்கு கவிதை எழுதிப் பழகுபவர்கள் ஆனவும் சிலர் தமது கவிதைகளுக்கு அழகிய படங்களை இணையத்தில் தேடி அதனை வெளியிடுபவர்களாயும் இருந்தார்கள்.
அந்த இணையத் தளத்தில் பொதுவாக அனைவரும் புனைபெயரில் எழுதி வந்தார்கள்.
நானும் “சுவீற் பிப்ரி (Sweet fifty)” என்ற பெயரில் இணைத்து அவர்களை ஊக்குவித்தும்… பிழை திருத்தம் செய்து கொடுப்பனனாயும் இருந்தேன்.
அது மிகவும் வளர்ந்து கொண்டிருந்தது.
அவ்வேளையில் எனது ஆலோசனையின்படி எனது வழிகாட்டலிலும் அவர்களது சிறிய சிறிய சேமிப்பு நிதியிலும் இருந்து வெளியாகியது தான் அனைத்துப் பக்கங்களும் வர்ணதாள்களில் வெளியாகிய “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற கவிதைத் தொகுதி.
இதில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோசமான நிகழ்வாய் இருந்ததுடன் எனக்கு இலக்கிய உலகில் நல்ல பெயரையும் ஈட்டித் தந்தது.
பின்நாளில் சில அரசியல் உட்புகுவுகள் அந்த இணையத் தளத்தையே செயல்குன்றிய நிலைக்கு கொண்டு சென்றது மிகவும் துர்ப்பாக்கியமே.
6)இலக்கிய உலகில் தங்களை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்த சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி…?
நிச்சயம் அந்தப் பெருமை ஞானம் சஞ்சிகைக்குத்தான். ஞானத்தின் 100வது மலரில் “மெயில் லோஞ்சு” என்ற சிறுகதையுடன் ஆரம்பமான என் எழுத்துகள் பின்பு ஜீவநதி… செங்கதிர்… வீரகேசரி… தினக்குரல் என ஈழத்தின் சஞ்சிகைகள் மூலமாக வெளிவரத் தொடங்கின.
தனியே என் சிறுகதைகளை வெளியீடு செய்வதுடன் நின்றுவிடாது ஞானமும் ஜீவநதியும் எனது புத்தகங்களை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியமைக்கு என்றும் நன்றியுடடையவன் ஆவேன்.
மேலாக கனடாவில் உள்ள வானெலிகளில் என் எழுத்துகள் வாசிக்கப்படுவதும்… “இசையும் கதையும்” நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுதலும்….பல புலம் பெயர் சஞ்சிகைளில் என் இணையத்தளத்தில் இருந்தும் மின்னஞ்சல்களிலும் இருந்தும் என் கதைகளை தரவிறக்கம் செய்து அதனை அவர்கள் பதிப்பித்தலும் என்படைப்புகளுக்கு கிடைக்கும் கௌரவமாகப் பார்க்கின்றேன்.
7) 2010இல் தங்களது ‘மக்கள் மக்களால் மக்களால்” என்ற நாவல் தங்களுக்குப் புகழ்தந்து இலங்கை தமிழியல் விருதினையும் பெற்றுக்கொண்டது. அந்த நாவல் தோன்றிய பின்னணியைக் கூறுங்கள்
எப்போதும் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவது ஒரு புறம் என்றால்… எதிர் வினைகளை உருவாக்கி விடுவதும் இன்னோர் புறமாயும் அமையும்.
இந்துசமயத்தின் பல அழுத்தங்கள் தான் பலர் கிறிஸ்தவ சமயத்திற்கும் இஸ்லாம் சமயத்திற்கும் மதம் மாறினார்கள் என்பதை பலரும் ஒத்துக் கொள்வார்கள்.
அவ்வாறே புலம் பெயர்நாடுகளில் எம் தமிழருக்கு புகுத்தப்பட்ட அரசியல் நெருக்கடியானது பல எதிர்வினைகளை கொடுத்தமையையும் நானறிவேன். அவ்வாறு நெருக்கடிக்குள் உள்ளானவர்களையே “தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள்”… அல்லது “துரோகிகள்” என்று அழைத்தார்கள்.
அவ்வாறு எமது போராட்டத்திற்கு தாமாகவே களங்கங்கள் பூசிய புலம்பெயர்ந்த நாட்டு களப்பணிவீரர்கள் பற்றிய கதைதான் “மக்கள்… மக்களால்.. மக்களுக்காக”.
இன்று ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பும், வேறு பொதுக்காரியங்களுக்கான பொதுப்பணிகளில் இணையுமாறு மக்களுக்கு திணிப்புகள் செய்யப்படுவதும்…. மறுப்பவர்களை ஏதோ சொல்லி சமுதாய பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகளும் நடைபெறும் பொழுது நான் “மக்கள்… மக்களால்… மக்களுக்காக” எழுதியது பற்றி மனம் பெருமை கொள்கின்றது.
8) “சங்கானைச் சண்டியன்” தொகுப்பு 2011இல் வெளிவந்தது. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதினைப் பெற்றுக் கொண்டது. அந்த நாவல் எழுந்த பின்னணியைக் கூறுங்கள்
போராட்டம் மௌனமாக்கப்பட்டவுடன் மித்ரா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. எஸ். பொ.வை தொடர்பு கொண்டு இலங்கை எழுத்தாளர்களிடம் இருந்து படைப்புகள் பெற்று “மௌனமாக்கப்பட்ட துப்பாக்கிகள்” என்ற பெயரில் ஒரு தொகுப்பு செய்யலாமே என ஆலோசனை கூறினேன்.
நல்ல ஆலோசனை என அவர் அபிப்பிராயம் சொன்னாலும் அதற்குரி நிதி நிலைமை தங்களிடம் இல்லை என வருத்தத்துடன் கூறினார்.
எனவேதான் என்னிடம் இருந்த போராட்டங்கள் பற்றிய கதைகளையும்…. அந்த நேரத்தில் புலம்பெயர் மக்களிடையே இருந்த பல சமுதாய போராட்டங்கள் பற்றிய கதைகளையும்… வெளிநாட்டுக் குடியுரிமை மட்டும் இருந்தால் நான் ‘ஆண்’ எதுவும் பெண்ணைச் செய்யலாம் என்று வகையில் போர்க்காலத்தில் இலங்கை சென்று அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்தமையால் அவர்கள் பட்ட துன்பங்களை மையமாக வைத்து எழுதிய ‘கோமதியை’யும்…. குறிப்பாக “சங்கானைச் சண்டியன்” என்ற மைய நாவலையும் எழுதி அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டேன்.
தற்பொழுது கோமதி திரைப்படம் ஆக இருக்கின்றது.
குறிப்பாக சங்கானைச் சண்டியன் என்பது எனது குறியீட்டு அரசியல் நாவல்.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்னார் தமிழர் கூட்டணியினர் “எங்களை எல்லாத் தொகுதிகளிலும் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். உங்களுக்கு தமிழீழம் பெற்றுத் தருவோம்” என்று வாக்குறுதி அளித்த கால கட்டங்களில் ஊருக்கு ஒரு சண்டியன்கள் இருந்தார்கள்.
அதில் ஒருவன் மட்டும், “எல்லாத் தொகுதிகளிலும் ஒரேயொரு சண்டியன் மட்டும் இருக்க வேண்டும்… அது நானாக மட்டும் இருக்க வேண்டும்”, என்றுவிரும்பினான். தனது உடல் பலத்தையும் மனப்பலத்தையும் நம்பிய அவனின் எழுச்சியும் வீழ்ச்சியும் தான் அந்த நாவல்.
மிகுந்த பணப்பலம் இருந்த அவனுக்கு போதியளவு அரசியல்பலம் இல்லாமல் போனது துர்ப்பாக்கியமே.
மிகுந்த பாராடடுகளையும் பரிசுகளையும் பெற்றுத் தந்த நாவல் அது.
இன்றும் ஒரு 50 வருடத்திற்கு முன்னரான தமிழ்பிரதேசங்களை கண்முன்னே காட்சிப்படுத்தக் கூடிய நாவலாய் அது அமைந்ததுடன்… குறிப்பாக இந்தியாவில் வசித்துவரும் திரு. சின்னப்பபாரதியின் விருதும் கிடைக்க காரணமாய் இருந்தது.
பின்பு இது ஹிந்தியிலும்.. மலையாளத்திலும்.. சிங்களத்திலும் மொழிhற்றம் செய்யப்பட்டது.
9) 2014 இல் கடவுச்சீட்டு என்ற நாவல் தமிழக ப. சிங்காரம் விருதுப் போட்டியில் முதற்பரிசு 50000 இந்திய ரூபாய்களைப் பெற்றுக் கொண்டது. அந்த நாவலை எழுதத்தூண்டிய பின்னணியாது?
பல இடங்களில் நான் பதிவு செய்த ஒரு விடயம்: “புலம் பெயர் வாழ்வில் நாம் பெற்றதைவிட இழந்தவைகளே அதிகம்” என்பதே.
அதனை மைய இழையாக வைத்து நான் எழுதிய பல சிறுகதைகளின் கருக்களை மணிகளாக கோர்த்த புதினம் தான் கடவுச்சீட்டு.
கடவுச்சீட்டு என்பது ஒரு பயணதஸ்தாவேஜ் என்பதைத் தாண்டி அது ஒருவனின் அடையாளம் என்பதையும்… புலம் பெயர்நாடுகளில் இந்த அடையாளச் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்று பதிவு செய்தது தான் அந்த நாவல்.
விருதுகளின் நம்பிக்கைத் தன்மை மீது கேள்சிவிகள் எழுந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நான் யார்?.. எனது முகம் யாது?… என்று தெரியாது எனக்கு வழங்கப்பட்ட அந்த விருதை என் வாழ்நாளில் கிடைத்த பெரிய விருதாக நினைக்கின்றேன்.
10) “தகவம்” பரிசில்களைப் பெற்றுக்கொண்ட தங்களது சிறுகதைகள் பற்றிக் கூறுங்கள்.
தகவம் என்பது “தமிழ் கதைஞர் வட்டம்” என்பதின் சுருக்கப்பட்ட வடிவம். எழுத்தாளர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படாமல் அவர்களுடைய படைப்புகளை மட்டும் நடுவர் கைகளில் அளித்து அதிலிருந்து முதல் இரண்டாவது மூன்றாவது படைப்பாடைகளை ஒவ்வோர் 3 மாதத்திற்கு ஒரு முறை… அதாவது ஒவ்வோர் காலாண்டுக்கு ஒரு முநை தெரிவு செய்வார்கள்.
அவ்வகைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் ஞானத்தில் வெளியாகிய 8 கதைகளுக்கும், சென்ற ஆண்டு ஜீவநதியில் வெளியாகிய,“ஆண்” என்ற கதைக்கும் சிறப்பு பரிசும் கிடைத்தது பெரிய ஒரு கௌரவம். அல்லது அடையாளம்.
பரிசு பெற்ற சிறுகதைகள் என்ற வகையில் பரிசு பெற்ற எனது அனைத்து கதைகளும் அவர்களின் தொகுப்பில் இடம் பெற்றிருந்தன.
இதே இடத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.
இந்த ஆண்டு முதல் தகவம் குழுவினர் தாம் வளர்ந்த எழுத்தாளர்கள் என கருதும் திரு. தெளிவத்தை ஜோசப், திரு. க. சட்டநாதன், கே.ஆர் டேவிட், திரு. மு. பொன்னபம்பலம் மற்றும் ஜீவகுமாரனாகிய என்னை நாம் எழுதிய ஒரு கதை மூலம் சிறப்பு பரிசு பெறுபவர்கள் என அறிவித்து இருந்தார்கள்.
மகிழ்ச்சி.
அதில் உள்ள வருத்தம் என்னவென்றால் இவ்வாறு ஒரு பிரிவுக்குள் வரும் பொழுது எதிர்வரும் காலங்களில் தகவம் தொகுக்கும் சிறந்த கதைகளுள் ஒரு கதையை விட மேலதிகமாக ஒரு நல்ல கதையை எழுதியிருந்தால் அந்தக் கதை அவர்களின் தொகுப்பில் இடம் பெறும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்குள் தள்ளப்படலாம்.
தகவத்தின் தொகுப்பு பரிசு பெற்றவர்களின் சிறுகதைகள் என்பதை விட இலங்கையின் சிறந்த கதைகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படும் பொழுது ஒரு ஆராய்சி மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ இந்தக் கதைகளை சந்திக்கும் சந்தர்ப்பம் இழக்கப்படலாம். இதனை அவர்கள் எதிர்காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
பணப்பரிசு எதுவுமின்றி அந்தக் கதைகளை அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று விரும்பு கின்றேன்.
எப்பொழுதும் ”நடுவர்களின் தீர்ப்பு” என்பதனை நூற்றுக்கு நூறு மதிப்பவன் நான்.
அவ்வகையில் சிறந்த 1-2-3 கதைகளைத் தாண்டி அந்த அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட கதைகளை கௌரவத்துக்குரிய சிறுகதைகள் என்ற வகையாறாக்களுக்குள் அடைக்கலாம் என நினைக்கின்றேன்.
உதாரணமாக நௌவாஸின் ”கவ்வாத்து-”என்ற சிறுகதை இஸ்லாம் மார்க்கத்தின் சுண்ணச் சடங்கை மிக நேர்த்தியாக சொன்னதொரு கதை. வி. ஜீவகுமாரனின் ”தவம்”என்ற கதை ”போர்க்காலத்திற்குப் பின்”என்ற வகையாறாக்களுக்குள் வர வேண்டியதொரு கதை. இவை போன்றவை பரிசுக்கு தகுதி இல்லை என அதற்கு நடுவர்களாய் இருந்தவர்களின் பார்வையில் எடுத்த முடிவை இப்போதும் நான் நூறு வீதம் மதிக்கின்றேன். ஆனால் வேறு சில பிரிவுகளுக்குள் அவை அடக்கப்படுதலால் எதிர்கால இலக்கிய வாசகனுக்கு ஒரு பெரும் உதவியாக அமையலாம்.
தகவம் என்ற ஒரு நிறுவனம் ”போட்டிகள்…பரிசுகள்…”என்ற நிலைகளைத் தாண்டி நல்ல சிறுகதைகளை உலகத்திற்கு அடையாளம் காட்டும் நிறுவனமாக மேலும் மிளிர வேண்டும் என மனமார விரும்புகின்றேன்.
11) தங்களது சிறுகதைத் தொகுப்பு முயற்சிகள் பற்றிக்கூறுங்கள்.
நாம் வாழும் காலத்திற்குப் பின்பும் எங்கள் பதிவுகள் நிலைக்க வேண்டும் என்றால் அவை தொகுப்பாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நினைப்பதுண்டு. அவ்வகையில் யாவும் கற்பனை அல்ல… சங்கானைச் சண்டியன்… ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்… ஜீவகுமாரன் கதைகள் என்பன எனது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்புகள்.
இதில் இறுதியாக வெளியிட்ட ஜேர்மனிய கரப்பான் பூச்சிகளை ஞானம் பதிப்பகத்தினரும்… ஜீவகுமாரன் கதைகளை ஜீவநதி பதிப்பகத்தினர் வெளியீடு செய்தது மகிழ்வான தருணமாயும் இந்த இரண்டு நூல்கள் மட்டும் தான் நூல்வெளியீடுகளின் பொழுது முற்றும் விற்றுத் தீர்ந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் எனக்குத் தந்தவை.
இதற்கு முகநூல்கள் வாயிலாகவும்… www.jeevakumaran.comஎன்ற எனது இணையத் தளம் மூலமாகவும்… மாதாமாதம் இலக்கியச் செய்திகளை நான் அனுப்பும் 7000 மின்னஞ்சல்கள் மூலமாகவும் தேடிக்கொண்ட நண்பர்கள் வட்டமும் ஒரு காரணமாகும்.
12) 2011இல் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தாளர் விழாவில் 18 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘முகங்கள்” என்ற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டீர்கள். அத்தொகுப்பு முயற்சியில்; பெற்ற அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்.
நான் உயர்தரம் படித்த காலகட்டத்தில் இருந்தே பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செய்தல் என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.
அவ்வகையில் முன்னெடுக்க விரும்பியது தான் ‘முகங்கள்’ தொகுப்பும்.
சர்வதேச எழுத்தாளர் விழா பற்றி எழுந்த அரசியல் அலை அனைவரையும் ஆட்டிப்படைத்த பொழுது எனக்குள் நான் உறுதியாக சொல்லிக் கொண்டது ஒன்றுதான். அடிபடுபவர்கள் அடிபடட்டும். நட்பு பாராட்டபவர்கள் நட்பு பாராட்டும். அரசியலில் நிரந்தர எதிரி போல் இங்கும் இவர்கள் நிரந்தர எதிரிகளாய் இருக்கப் போவதில்லை. ஆனால் எனது “முகங்கள்” பணியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று.
அதேபோல் காலம் சென்ற ஓவியர். திரு.கௌதமனின் பெரும் துணையுடன், னும் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியாளரும் எழுத்தாளருமான இவள்பாரதியின் உதவியுடனும் விழாவின் முதன்நாள் பின்னேரம் முகங்கள் தொகுப்பை விழாக்குழுவினரிடம் கையளித்து விட்டு டென்மார்க்கில் இருந்து என் தோளில் நானே தட்டிக் கொண்டேன்.
சென்ற வருடம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. மாலன் நாராயணனை சிங்கப்பூரில் சந்தித்த பொழுது “நீங்கள் தானே முகங்கள் ஜீவகுமாரன்” என்று என்னைப் பார்த்துக் கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
‘சர்வதேச எழுத்தளர்கள் இரு பிரிவாகப் பிரிந்து செயல்பட்டதால் முகங்கள் முயற்சிக்கு கூட எதிராக பரப்பட்ட எதிர் விமர்சனங்கள் பொருளாதார அளவில் எனக்கு சிறிது சுமையை அளித்த பொழுதும் பலரின் ‘இலக்கிய’ முகங்களை தரிசிக்க அந்தத் தொகுதி பணியிடும் வேலைத்திட்டம் எனக்கு பெரிதும் உதவியது’ என்பது தான் உண்மை.
இதனைத் தாண்டி மனத்தை மிகவும் நோகடித்த ஒரு நிகழ்வு சர்வதேச எழுத்தாளர் விழா முடிந்த பின்பு நடைபெற்றது.
அதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
13)சொல்லுங்கள்
இந்த விழா பெரும் பொருட்செலவை எதிர்பார்த்தே ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அதனைத் திரட்ட முடியாது போனது என்பதும் அறிந்தோர் அனைவரும் அறிவர்.
திரு.எஸ்.பொ. அவர்கள் கீற்று இதழிலும் மற்றும் இந்திய பத்திரிக்கைகளிலும் சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு எதிராக கொடுத்த குரலும்…அதற்கு தொடர்ந்து விழா ஒருங்கிணைப்பாளரான திரு. முருகபூபதி அவர்களின் பதில்களும் பெரிய சஞ்சலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
எழுத்துலகின் நாகரீகத்தை தாண்டி அந்தச் சச்சரவு நிகழ்ந்து கொண்டிருந்தது.
இதில் இருவரின் வாதப் பிரதிவாதங்களின் உண்மைத் தன்மைக்குள் நான் போக விரும்பாவிடினும் எதிர்பார்த்த பணத்தை விழா ஒருங்கிணைப்பாளரால் திரட்ட முடியாமல் போனது நிஜம்.
விழா முடிந்த பின் விழா ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதி அவர்கள் தனது எண்ணத்தின்படி விழாக்குழுவின் அனுமதி பெறாமல் தனது மகனின் பெயரில் இயங்கிய முகுந்தன் பதிப்பகத்தின் மூலமாக ”உள்ளும் புறமும்”என்று ஒரு நூலை வெளியிட்டார்.
அதில் மித்ரா பதிப்பகத்தின் கொள்வனவில் நான் ஏமாற்றப்பட்டதால், எனக்கும் திரு. எஸ்.பொ.க்கும் இருந்த உடன்பாடின்மை காரணமாக விஸ்வசேது பதிப்பகத்தை நான் ஆரம்பித்ததே எஸ்.பொ. இதனை எதிர்க்க காரணம் என தனது கற்பனையில் கதை வசனம் எழுதி வெளியிட்டு இருந்தார்.
இவர்கள் இருவரின் நட்பும் பகையும் கால் நூற்றாண்டுக்கு மேல் எவ்வாறு இருந்தது என்பதனை அனைவரும் அறிவர்.அவ்வாறு இருந்த பொழுதுஇருந்த பொழுது இலக்கிய உலகினுள் காலடி வைத்த என்னை திரு. முருகபூபதி இழுத்து விட்டது மிகவும் அதிர்ச்சியாயும் கவலையாயும் இருந்தது.
என்னில் கறைபூசியதற்காக அல்ல!
பதிலாக உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சர்வதேச எழுத்தாளர் விழாவின் ஒருங்கிணைப்பாளர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்திருக்கிறார் என்பதால். அன்றே யோசித்தேன் ”இனியொரு சர்வதேச எழுத்தாளர் விழாவுக்கு அதன் ஒருங்கமைப்பாளரேசாவுமணி அடித்து விட்டார் என்று.” என்று.தூய எண்ணத்திலும் அர்ப்பணிப்பிலும் அது தொடங்கியிருந்தால்… அல்லது நடந்து முடிந்திருந்தால் நிச்சயம் அது தொடர்ந்திருக்க வேண்டும்.ஆனால் இந்த ஆறேழு ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லையே!
இன்று எதிர்ப்பதற்கும் திரு. எஸ்.பொ.வும் இல்லை என்ற நிலையில் இது தொடராமல் போனதிற்கான காரணத்தை இப்பேட்டி அளித்திருக்கும் என நம்புகின்றேன்.
இது பற்றி கடிதமூலம் விழாக்குழுவிற்கு அறிவித்த பொழுது அவர் செய்தது பிழை என்று எனக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அனைவரும் கூறினார்களே தவிர அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்தார்களோ என எனக்குத் தெரியாது.
எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மௌனத்துடன் நாட்கள் நகர்கின்றன..அன்றில் இருந்து சரியோ பிழையோ வாழ்வில் ஒரு முடிவெடுத்தேன்.
படைப்பிலக்கியத்துடன் மட்டும் நான் நின்று கொள்வது என்று!கூடித்தேரிழுத்து தமிழ் வளர்க்கும் பணியை என்றாலும் சரி…ஆளுக்கு ஆள் கத்தி வாள் எடுக்கும் பணியைச் சரி மற்றவர்கள் செய்து கொள்ளட்டும் என்று.
நிச்சயமாக முகங்கள் தொகுப்பு எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!
14) டெனிஷ் மொழியில் தங்களது மனைவி எழுதிய நாவலை ‘ இப்படிக்கு அன்புள்ள அம்மா” என்றபெயரில் தமிழில் தந்துள்ளீர்கள். மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிக் கூறுங்கள்.
இது எனது மனைவியார் கலாநிதி ஜீவகுமாரன் டெனிஷ் மொழியில் Kaerlig hilsen…Mor. என்ற பெயரில் எழுதிய காவியம் தான் . டென்மார்க்கின் ஆஸ்தான கவிஞர் Benny Andersen இதற்கு முன்னுரை எழுதியதை விட இதற்கு வேறு பெருமையே தேவையில்லை.
போரில் தன் மகனை தவறவிட்ட ஒரு தாய் அவன் உயிரோடு இருக்கின்றானா?… இல்லையா.. எனத் தெரியாமல் என்றோ ஒரு நான் அவன் திரும்பி வந்தால் அவன் வாசிக்க வேண்டும் என்று எழுதிய 10 கடிதங்களின் தொகுப்புத்தான் அந்தக் காவியம்.
அதன் தமிழ் வடிவத்தை என்னை மொழிமாற்றம் செய்யும்படி என் மனைவி கேட்ட பொழுது தனியே மொழிமாற்றத்துடன் அதன் உயிரோட்டம் எந்த விதத்திலும் குறையாது சில தமிழ்நடைகளையும் இணைத்து தமிழ் வாசகர்களுக்கும் இன்னுமும் சுவையூட்டக் கூட்டக் கூடிய வகையில் செய்வோம் என தீர்மானித்து செய்யப்பட்டதே இப்படிக்கு அன்புள்ள அம்மா.
டேனிஷை விட தமிழில் எனக்கிருந்த பாண்டித்தியம் இந்த மொழிமாற்றத்தை செய்ய உதவியது என்று சொன்வேன்.
தமிழில் எழுதும் பொழுது “காகம் கொத்திச் சென்ற வடையாக மரணம் வந்து”… “ஆட்டின் முன்னே நீட்டிய குழை போல”… “கிணற்றில் மொண்டு தலையில் ஊற்றிய தண்ணி” போன்ற இடங்கள் எல்லாம் தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொழுது புகுத்தப்பட்டவையே.
இதுவே பின் ஆங்கிலத்திலம்.. ஹிந்தியிலும்… மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
15) டென்மார்க் நாட்டில் தாங்கள் இணைப்பாளராக இருந்து நடத்திய இலக்கிய விழாக்கள் மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.
முகங்கள் தொகுதி பற்றிய வினாக்குச் சொல்லப்பட்ட பதில் தான் இதற்கும். உயர்தர வகுப்பில் இருந்தே எந்த பெரிய வேலைத் திட்டங்களை விரும்பிப் பொறுப்பேற்றுச் செய்தது போலவே சென்ற ஆண்டு நாம் வாழும் தீவில் உள்ள 7 தமிழ் சங்கங்களை இணைத்துச் செய்ததே “மெல்லத் தமிழ் இனி” என்ற இலக்கிய விழா.
இலங்கையில்இருந்து திரு. திருமதி. ஞானசேகரன் தம்பதிகள், இலண்டனில் இருந்து திரு. கோபன் மகாதேவா, திரு.சித்திரவேலு கருணானந்தராஜா, ஜேர்மனியில் இருந்து திரு. புத்திசிகாமணி திரு. புவனேந்திரன் அம்லவாணன் ஆகிய இலக்கிய கர்த்தாக்களையும் பரிஸில் இருந்து நையாண்டி மேளக் கலைஞர்களான திரு. தயாநிதி தம்பையா, திரு.ஆர். தனபாலன், ஜேர்மனியில் இருந்து நடனமணி. செல்வி அனமிகா ஆகியோர்களையும் அழைத்து மிகவும் சிறப்பாகவும் பொருளாதாரத்திலும் எந்த நட்டமும் இல்லாமல் செய்து முடித்தோம்.
அனைத்தும் முடிந்த பின் ஒரு சங்க உறுப்பினர் கேட்டார் “எப்படி ஜீவா அண்ணா எந்த ஸ்ரெர்ஸ் (Stress) இல்லாமல் இருந்தீர்கள் என்று.
பதில் ஒன்றுதான் “முறையான திட்டமிடுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் அனைத்தும் இலகு” என்பதே.
16) சுமார் 7000 மின்னஞ்சல் வாசகர் வட்டத்துடன் தொடர்புகளைப்பேணி இலக்கியத்தை வளம்படுத்;தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறீர்கள். அந்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்.
இன்று நாம் வாழும் உலகத்தில் இருக்கின்ற கணிணி வசதிகள் அனைத்தையும் ஆக்க முயற்சிக்கு வழிசெய்யும் முயற்சிகளில் பயன்பட செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே உண்டு.
அவ்வகையில் எனக்கு வந்த மெயில் விலாசங்கள் அனைத்தையும் சேர்த்து சேர்த்துவந்தமையால் 2011ல் 1700 மின்னஞ்சல்களின் விலாசம் 2016ல் 7200 ஆக உயர்த்தியது. இதனை நல்ல பல விடயங்களை பகிர பயன்படுத்துகின்றேன்.
அவ்வகையில் என்னை ஏற்றி விட்ட ஞானத்தின் பரம்பலுக்கும் மற்றைய இலக்கியப் பரம்பல்களுக்கும் இதனைப் பயன்படுத்துகின்றேன்.
17) இன்றைய தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்த இலக்கிய உலகினுள் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது திரு. மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார்கள்.
“ஜீவகுமாரன்… இந்த இலக்கிய உலகம் அமைதியான கடல் போலத் தெரியும். ஆனால் இறங்கிப் பார்த்தால்தான் அதனுள் சுழிகளும் முதலைகளும் திமிங்கிலங்களும்; இருக்கும். மிகக் கவனமாக இருங்கள்;” என்றார்.
இளம் கன்று பயமறியாது என்பது போல “நாம் நேர்மையாய் இருந்தால் எவர் என்ன செய்து விட முடியும்?” என நினைப்புடன் நீந்தத் தொடக்கினேன்.
கரையில் இருந்து கொஞ்சத் தூரம் இறங்கி நீந்தத் தொடங்கவே பேராசிரியர். திரு. மௌனகுரு சொன்னது உண்மை எனக் கண்டு கொண்டேன்.
பல மனிதர்களின் ’அகமும் புறமும்’ ஒன்றில்லை என்பதை இலகுவில் அடையாளம் கண்டு கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் கரையில் நின்றபடியே, தங்களுக்குள் அடிபடும் மற்ற முதலைகளையும் திமிங்கலங்களையும் பார்த்து ரசித்தபடி அமைதியாகவும் ஆனந்தமாகவும் நீராடக் கற்றுக் கொண்டேன்.
18) உங்களின் பதிலில் ஏதோ ஒரு விரக்தி தெரிகிறது. நீங்கள் வாழும் நாட்டில் இவை எவ்வாறு இருக்கிறது?
போட்டியும் பொறாமையும் எங்கும் ஒன்றாய்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.
ஆனால் டென்மார்க்கில் எதுவும் திறந்த தளத்தில் நடைபெறும்.
உதாரணமாக இலங்கையில் சாகித்திய மண்டல போட்டி விதிகளை தெரிந்து கொள்வது நதிமூலம் ரிஷிமூலத்தை அறிந்து கொள்வது போலவே இருக்கின்றது.
வெளிநாடுகளில் இருந்தால் பங்கு பற்ற முடியாது…..
இலங்கையில் பதிப்பு செய்த நூல்களாய் இருக்க வேண்டும்……;.
இலங்கையில் பதித்திருந்தாலும் இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்……;.
அல்லது இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் ;……;.
இலங்கை கடவுச் சீட்டுடன் புலம் பெயர்நாட்டில் நிரந்தரமாய் வாழ்பவராய் இருந்தால் என்ன மாதிரி என்ற என் கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்வில்லை.
ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பங்கள் கோரும் பொழுது ஏன் முழு விதிகளும் பொதுத்தளத்தில் விளம்பரப்படுத்தப்படுவதில்லை.
அவ்வாறு விளம்பரப்படுத்தப்படுவதை முற்றிலும் கைக்கொள்கின்றோமா? அல்லது வந்தடையும் படைப்புகளுக்கு ஏற்ப விதிகளை வளைத்துக் கொள்கின்றமா என பல கேள்விகள் எழாமல் இருப்பதை தவிர்க்க முடியாது உள்ளது.
இலங்கை சாகித்திய மண்டல அமைப்பையும் தாண்டி… மொத்தத்தில் விருதுகள் வழங்கப்படும் அமைப்புகளின் உள்அரசியல்கள் காரணமாக பல எழுத்தாளர்கள் இந்த அமைப்புகளிலும் விருதுகளிலும் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.
இவ்றானான சந்தர்ப்பங்களில் காலம் சென்ற இசையமைப்பாளர் திரு. விஸ்வநாதனுக்கே இந்தியளவில் தேசிய விருது கிடையாததை நினைத்து மனம் அமைதி கொள்ள வேண்டிதுதான்.
இது ஒரு புறம் என்றால் எழுத்தாளர்கள் கூட ஒரே தடவையில் ஒரே படைப்பை சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கு அனுப்புதல்…. வேறு ஒருவரின் படைப்பை கொஞ்சம் கத்தரித்து கொஞ்சம் ஒட்டி புதுப்படைப்பாக்கும் முயற்சிகளையும் கைவிட வேண்டும்.
நான் நடுவராய் என்றும் இருக்கவிரும்புவதில்லையாயினும் தனியே தரம் பிரிக்கும் முதல் கட்டத்தில் ஒரு போட்டிக்கு வந்த கதைகளில் சுமார் 16 கதைகள் ஏற்கனவே பிரசுரமானது என்பதனை அந்த போட்டி நடாத்துபவர்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துக் கூறினேன்.
எனவே எழுத்தாளர்கள் – பதிப்பாளார்கள் – போட்டி நடாத்துபவர்கள் – விருது அளிப்பவர்கள் இவர்கள் நால்வரும் நல்ல முறையில் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க முடியும் என்பதனை இதில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
“சொல்லுக்கும் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லாது இருக்க வேண்டும்” என்று அனேகர் சொல்லுகிற அல்லது எழுதுகின்ற விடயங்களை நாம் நிஜ உலகில் காண வேண்டும்.
அல்லது “புகை பிடித்தல் உடலுக்கு தீங்கு” என சிகரட் பெட்டிகளிலும்…. “குடி குடியைக் கெடுக்கும்” என மதுபானப் போத்தல்களிலும் எழுதி வைப்பது போலாகி விடும்.
19) இன்று புலம்பெயர் இலக்கியம் அல்லது புலம் பெயர் எழுத்தாளர்கள் என்ற சொற்பதம் பல தளங்களில் பாவிக்கப்படுகிறது. நீங்கள் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
இதற்கு என்ன வரைவிலக்கணங்களைக் கொடுத்தாலும் என் சிந்தனா மொழி “இலங்கைத்தமிழாக” இருக்கும் வரை நான் என்னைச் சொல்லிக் கொள்வது இலங்கை எழுத்தாளன் என்பதுதான்.
எனது பிள்ளைகளின் சிந்தனாமொழி டெனிஷ் ஆக இருப்பதால் அவர்கள் டெனிஷ் எழுத்தாளர்கள்.
இதில் உள்ள பாதகம் என்னவென்றால் நாங்கள் டென்மார்க்கில் இருந்து கொண்டு தமிழில் எழுதுவதால் டென்மார்க் இலக்கிய உலகம் எங்களை அவர்களில் ஒருவராய் ஏற்பதில்லை.
மாறாக புலம் பெயர்ந்து அந்தநாட்டு குடியுரிமை பெற்றுவிட்டாதால் நீங்களும் எங்களை இலங்கை எழுத்தாளராக அங்கீகரிப்பதில்லை.
மொத்தத்தில் ஒரு காலத்தில் மலையக மக்களுக்கு இங்கும் உரிமை இல்லை… அங்கும் உரிமை இல்லை என்ற நிலையில்…. ஒருவகையில் இருபகுதியாலும் சாதிப்பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் இருந்து செயல்படுகின்றோம் என்பது தான் உண்மை.
இலங்கை முழுக்க எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்… எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள்… வாசகர்கள் இருக்கின்றார்கள்… ஆனாலும் எங்கோ ஓர் இடத்தில் நாடற்ற அகதி என்றமனப்பான்மையே இருக்கின்றது.
20) மிகவும் ஆழமான விடயங்களையும் சிந்திக்க வேண்டிய விடயங்களையும் தொட்டுச் சென்றிருக்கின்றீர்கள். மிக்க நன்றிகள். இந்த நேர்காணல் மூலம் ஞானம் வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்த பேட்டியின் ஆரம்பத்தில் சொன்ன விடயம்தான்… உண்மையில் வாசகர்களுக்கு ஏதாவது கூறும் தகுதியை நான் இன்னமும் அடையவில்லை…. இதனை எனது பணிவின் காரணமாகவோ அல்லது என் இயல்பான அடக்கம் காரணமாகவோ சொல்லவில்லை!
கம்பியூட்டர் துறை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்றால் ஞானத்தின் முழுப்பக்கங்களும் நிறையும் அளவிற்குப் பதில் சொல்வேன்.
ஆனால் இலக்கிய வாசகர்களுக்கு சொல்லுங்கள் என்றால் எதனையும் சொல்லும் தகுதி எனக்கிருப்பதாக நினைக்கவில்லை.
வேண்டுமென்றால் நான் இன்னமும் என்னை வளர்த்துக் கொண்டு இருப்பதற்கு காரணம் “ஆழமான வாசிப்பும்… தேடலும்… அன்றாட உலக விடயங்களை அனைத்து தளங்களிலும் இருந்து உள்வாங்கி எங்களுள் உள்ளவற்றை இன்னமும் புடம் போட வேண்டும்… ”UPDATE பண்ண வேண்டும்” என்ற செய்தியை மட்டும் அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
மேலும் எழுத்தாளானாக எதுவாய் நான் எழுதுகின்றேனோ அதுவாய் வாழ்கின்றேன் என்பதால் என் எழுத்தின் உயிரை நான் தக்க வைத்துக் கொள்கின்றேன்.
அஃதில்லையாயின் எழுத்துலகில் இருந்து தள்ளி இருப்பது சாலச்சிறந்தது. எங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வாசகர்களை குறைந்த பட்சம் ஏமாற்றாமல் இருக்க உதவும்.
இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை இல்லாவிடினும் இப்படித்தான் நான் இருக்கின்றேன் என்று சொல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் கர்வமும்.
இந்த தன்மை நல்ல படைப்புகளை உருவாக்கும்.
நல்ல படைப்புகள் நல்ல வாசகர்களை உருவாக்குவார்கள்.
நல்ல வாசகர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்.
மீண்டும் நன்றியும் வணக்கமும்.
அன்புடன்
வி. ஜீவகுமாரன்.
Skriv et svar