ஜீவநதியில் வெளியாகிய எனது நேர்காணல்
1)புலம் பெயர்ந்து வாழும் நம்பிக்கைகுரிய எழுத்தாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் படைப்பிலக்கியத்தில் நீங்கள் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியமை பற்றியும் சுருக்கமாகக் கூறுவீர்களா?
நான் சாதாராண ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சராசரி தமிழ்ப் பெற்றோர்கள் போல கல்வி ஒன்றே குடும்ப நிலையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் என் தந்தையார் நோய்வாய்ப்புபட்ட போதும் கல்வி தடைப்படக் கூடாது என்ற பெருவிருப்பத்தில் என் தாயார் வட்டிக்கு வட்டி எடுத்து என்னையும் எனது மூன்று சகோதரர்களையும் கல்வி கற்பித்தார்கள்.
எனது ஆரம்பக் கல்வி சங்கானையில் சிவப்பிரகாச மகாவித்தியாலத்திலும் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தது.
ஏழு வட்டாரங்களை கொண்ட சங்கானையில் ஒரே காலகட்டத்தில் 10 நாடக மன்றங்கள் இருந்தமையும்… மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வருடாவருடம் நடைபெறும் நாடகப் போட்டிகள்இ பேச்சுப் போட்டிகள் எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு இருந்தது. இந்த நாடகங்களின் கதைக்கரு பொதுவாக பிரபலமான கதைகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டிருந்ததால் அதிக கதைகள் வாசிக்கத் தொடங்கினேன்.
தரப்படுத்தல் பல்கலைக்கழக அனுமதிக்கு தடையாக அமைந்த போது எனது பதினெட்டாவது வயதில் நானே தனியார் கல்வி நிறுவம் ஒன்றை நிறுவி நடாத்திக் கொண்டு இருந்தேன். கல்வி கற்பிக்கும் நேரம் அதிகாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை. பின்பு மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை. இடையில் உள்ள பகல்வேiளையை பயன் உள்ளதாக மாற்றவதற்காக கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்க தொடங்கினேன்.
அதுவரை இந்திய வாராந்த சஞ்சிகைகளில் முகம் புதைந்திருந்த எனக்கு இலக்கியத்தின் இன்னோர் பரிமாணம் தெரியத் தொடங்கியது அங்குதான். அதற்கு வித்திட்டவர்களில் ஒருவர் இன்று கனடா பல்கலைக்கழத்தில் ஆசிய மொழிகளின் பொறுப்பாளராயும் ”கனடா இயல் விருது” வழங்கும் குழுவில் அங்கம் வகிக்கும் திரு. செல்வா கனகநாயகம் ஆவார். மேலும் இலங்கையில் வசிக்கும் திரு. இராஜரட்ணம் அவர்கள்.
அந்தக் காலத்தில் என்னுடன் எனது இலக்கிய ஆர்வத்தை அதிகமாக பகிர்ந்து கொண்ட எனது வகுப்புத் தோழனாகிய கந்தையா சிறிகணேசன் தற்பொழுது யாழ்ப்பாணப் பல்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக உள்ளார். மற்ற வகுப்பு தோழியான திருமதி ரேணுகா தனஸ்கந்தா அவுஸ்திரேலியால் இலக்கியப் பணியுடன் தன்னை இணைத்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இலக்கியத்தின் மீதான பார்வை ஏற்பட்ட பொழுது அது சார்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.
1986ம் ஆண்டு அனலைதீவைச் சேர்ந்த என் சிறுவயதுத் தோழியும் யாழ். பல்கலைத்கழகத்தில் தமிழைச் சிறப்பு பாடமான கற்ற கலாநிதியை திருமணம் செய்து அந்த ஆண்டே டென்மார்க் வந்து சேர்ந்தேன். இங்கு 1988ல் இரட்டைப் பெண்பிள்ளைகளுக்கு பெற்றோராகினோம்.
டென்மார்க் வந்த காலகட்டத்தில் டென்மார்க் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் ”குயிலோசை” என்றொரு கையெழுத்துப் பிரதி ஒன்றை நடாத்தினேன். எனது மனைவியே முழப்பக்கங்களையும் கையால் எழுதுவதுடன் என்னுடன் ஒரு இணையாசிரியர் போல செயல்பட்டு வந்தார். ஒவ்வொரு மாதமும் 80 பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நாங்களே போட்டோ பிரதி எடுத்து புத்தகமாகக் கட்டி அனைத்து நகரங்களுக்கு அனுப்பி வைப்போம்.
இம்முயற்சிக்கு டென்மார்க்கில் இருந்த பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தார்கள். குறிப்பாக காலம் சென்ற முல்லையூரான்- நிலக்கிளி பாலமனோகரன்- கே. எஸ். துரை என்போரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எனது 50வது வயதில் ”யாவும் கற்பனை இல்லை” என்ற முதல் தொகுப்பை வெளியிட்டேன். பின்பு மக்கள் மக்களால் மக்களுக்காக, சங்கானைச் சண்டியன், எனது மனைவி டெனிஷ் மொழியில் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பான இப்படி அன்புள்ள அம்மா – தொகுப்பு நூல்கள் வரிசையில் மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும் – முகங்கள் என வெளியீடுகள் தொடர்ந்தன.
இதில் கலாநிதியின் இப்படிக்கு அன்புள்ள அம்மா ஐந்து மொழிகளில் வெளியாகியது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு.
அவ்வாறே எனது நாவல்கள் அனைத்திற்கும் ஏதோ ஒரு விருதும் எனது 4 சிறுகதைகளுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் தகவம் அமைப்பின் விருதும் கிடைத்தமை எனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.
2) படைப்பிலக்கியத்தில் உங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவிய பிற இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
ஆங்கிலப் படைப்பாளிகளில் சேர்க்பியல், அன்ரன் செக்கோவ், டி. எச். லோறன்ஸ் போன்றவர்களின் படைப்புகள்.
இந்திய படைப்புகளில் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன். இவர்களின் கதைகளில் பல ”கட்டுடைப்புகளை” யும் வேகத்தையும் சந்தித்து இருக்கின்றேன். அவ்வாறே சுந்தரம் ராமசாமியின் ”ஒரு புளிய மரத்தின் கதை”யில் இருந்த நிதானமும் கதைசொல்லும் பாங்கும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.
இலங்கைப்படைப்புகளில் அக்காலத்தில் மண்வாசனையை எனக்கு அறிமுகப்படுத்திய பொதுவான வீரகேசரிப் பிரசுரங்கள்இ குறிப்பாக செங்கை ஆழியானின் வாடைக்காற்றுஇ காட்டாறுஇ இரவின் முடிவில். அவ்வாறே தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் திரு. பாலமனோகரனின் நிலக்கிளி, ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரனின் குருதிப்புனல். இவற்றை திரும்ப திரும்ப பல முறை வாசித்திருக்கின்றேன் என்று சொல்வதை விட படித்திருக்கின்றேன் எனக் குறிப்பிட விரும்புகின்றேன். அவர்கள் பாவித்த சின்ன சின்ன நுட்பங்கள் என்னை வெகுவாக கவர்ந்திருந்தன.
3) உங்களுடைய எழுத்துக்களினூடாக எவற்றைச் சாதிக்க விரும்புகின்றீர்கள்?
அவ்வாறு நினைக்கும் பொழுது எனது எழுத்துகள் பிரச்சாரக மாறிவிடும்.
ஜெயகாந்தனின் வீழ்ச்சி என்பது 70இன் பிற்பகுதியில் ரஷ்ய கம்யூனிஷ்டுகளின் பிரச்சாரமாக அவரின் எழுத்துகள் மாறியதுதான் காரணம் என்ற என்னளவில் ஆன மதிப்பீடு இன்றும் என்னுள்ளேயே இருக்கிறது.
புதிய தேடல்கள், புதிய பரிமாணங்கள், புதிய கோணங்களில் வாழ்வியலைச் சொல்லும் கருவியாக பாவித்து நான் உட்பட்ட எனது சமுதாயத்தை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
எப்பொழுதும் நான் சொல்லவது போல ஒரு எழுத்தாளனின் ஜீவன் அவனது சொல்லுக்கும் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லாது இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த உறுதி தரும் பலம் என் எழுத்துகளுக்கு சில அங்கீகாரங்களை தேடித்தருகிறது என்னும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதி குறைந்த பட்சம் வேண்டுமாயின் எனது எழுத்துகள் நல்ல ஒரு வாசகனை அல்லது இன்னோர் எழுத்தாளனை உருவாக்கும் என்றால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன்.
4)இலக்கியத்தின் மீதான உங்கள் ஈடுபாடு உங்களின் தொழில் வாழ்க்கையில் தாக்கம் எதனையும் விளைவித்துள்ளதா?
இதுவரை இல்லை.
எனது நிரந்தரத் தொழில் ஒரு நகரசபையின் குறிப்பிட்ட கணனிப்பகுதிக்கு பொறுப்பாய் இருப்பது. அடுத்த இரண்டு பகுதிநேரத்தொழில்களில் ஒன்று டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்திலும் அகதிகள் சங்கத்திலும் மொழிபெயர்ப்ப்பாளராய் இருக்கின்றேன். மற்றது டென்மார்க் அரசநூலகத்தில் தமிழ்பகுதியின் ஆலோசகராகவும் கொள்முதல் செய்வபராயும் இருக்கின்றேன்.
முதலாவது கணனித்துறையில் மாற்றம் என்பது இயந்திர கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். கணனி உலகின் மாற்ற வேகத்திற்கு நான் பழகிக் கொண்டிருக்கின்றேன். மேலும் நான் எழுதுவதற்கோ அதனைத் செம்மைப்படுத்தவோ முழுக்க முழுக்க கணனியையே பயன்படுத்துகின்றேன்.
மொழிபெயர்பு தொழிலில் நான் வாழ்வில் சந்திந்திராத அல்லது கேட்டிராத வாழ்வின் சில பக்கங்களைஇ மனிதர்களைஇ குறிப்பாக ஐரோப்பாவின் கலாச்சாரங்களை அறியக் கூடியதாய் இருக்கும்.
தமிழ்பகுதி ஆலோகராக வருடம் ஒரு முறை இந்தியா, இலங்கை, சிங்கப்பூருக்கு செல்வதும் அங்கு அதிக புத்தகங்களை தரிசிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது.
இவை மூன்றும் எனக்கு உதவியே செய்கின்றது. நேரங்கள் சிலவேளை இறுக்கும். அதனை எனது நித்திரையில் இருந்து தானமாகப் பெறுகின்றேன் – ஓவர்ரைம் செய்வது போல.
இலக்கியத்தைப் பொறுத்தவரை நேர நெருக்கடியால் குறைப்பிரவேசம் செய்யக் கூடாது என்பதில் 100 வீதம் உறுதியாக இருக்கின்றேன்.
5) உங்களது சிறுகதைகள் ஏதோவொரு வகையில் வாசகனின் உணர்வில் பதிந்து மீண்டும் மீண்டும் உணர்வுகளை தட்டி எழுப்பி வாசகனை சிந்திக்க தூண்டுபவையாக உள்ளன. அவ்வாறான உணர்வோட்டமான கதைகளை படைக்கும் போது நீங்கள் செயற்படும் விதம் பற்றி கூறுங்கள்?
நான் சார்ந்த எனது சமுதாயத்தின் விமர்சனம் அல்லது பார்வை என்பதனை எந்தவித சமரசங்களும் இல்லாமல் எழுகின்றேன் என்பதுதான் உண்மை.
இந்த உண்மைக் கண்ணாடியில் வாசகர்கள் தங்கள் விம்பங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு தங்கள் வாழ்வியலைப் பார்ப்பது போல தோன்றலாம். அந்த வேளையில் குறிப்பிட்ட அந்தக் கதையில் வைக்கப்படும் கரு வாசகரின் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பலாம்.
”அவன் தோளில் கண்களை அரைவாசி மூடியபடி அவள் சாய்ந்தாள். வானத்தில் இரண்டு புறாக்கள் பறந்தன” என என்னால் சக எழுத்தாளர் பலரை விட திறமாக எழுத முடியும் என நான் சொல்வதுண்டு. ஆனால் அங்கு அந்தக் கணத்துடன் ஜீவகுமாரன் என்ற எழுத்துத் தொழிலாளியின் வேலை முடிந்து விடும். பஸ்ஸினினாலோ, றெயினினாலோ அல்லது வீட்டுத் திண்ணையினாலோ இருந்து எழும் பொழுது ஜீவகுமாரன் மறக்கடிக்கபட்டு விடுவார்.
பதிலாக படித்து முடிந்தாலும் சில மணியோ அல்லது சில காலமாவது அந்த வாசகருடன் நான் கை கோத்துக் கொண்டு அல்லது அவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என பிரியப்படுகின்றேன். அவ்வாறன கதைகளை நான் அனுபவித்து இருக்கின்றேன்.
பொன்னகரத்தில் வரும் குதிரைக்காரனின் மனைவி என்றாலும் சரி, ஜெயகாந்தனின் கங்கா ஆயினும் சரி, விஷ்ணுவர்த்தனியின் கருக்கலைப்புக் ஆளாகி மரணமடைந்து அந்தச் சகோதரியின் வலி ஆயினும் சரி நான் தனியே காரில் நீண்ட நோரம் பயணப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களும் என்னுடன் பயணிக்கிறார்கள். எனக்கு வலியைத் தருகிறார்கள். அல்லது வாழ்வின் மீது நம்பிக்கையைத் தருகிறார்கள். அவ்வாறு எனது ஒரு கதாபாத்திரம் எனது ஒரு வாசனுடன் பயணப்பட்டால் அதுவே நான் சாதிக்க விரும்புவது எனச் சொல்லலாம்.
இதை எப்படி அளக்க முடியும் என்றால் சில சந்தர்ப்பங்களில் எழுதும் பொழுது கைகள் தானான நடுங்கும். மீண்டும் வாசிக்கும் பொழுது குரல் தளதளக்கும். இப்போது தெரியும் இது எங்கேயோ யாரையோ தொடும் என்று. மனித உணர்வுகள் இன்னும் வாழுகின்றது என்று நம்பிக்கையில் நாம் வாழும் பொழுது இந்த கணிப்பீட்டின் அளவீட்டில் பெரிய மாற்றம் இருக்காது. அவ்வாறான எனது கதைகள் பலவற்றிக்கு பரிசு கிடைத்த பொழுது அந்த கணிப்பு உறுதி செய்யப்படுகிறது.
இது ஒரு நீண்ட பதில் ஆயினும் உண்மையான பதில் இதுதான்.
இது ஒரு கதை எழுதும் பொழுது பாவிக்கும் ஒருவிதமான தொழில் நுட்பம் இல்லை. பதிலாக உண்மையினதும் நேர்மையினதும் வெளிப்பாடு.
எந்த விமர்சனசனங்களுக்கோ அல்லது சமசரங்களுக்கோ தன் எழுத்துகளை தற்கொலை செய்யாமல் வாழ்வை வாழ்வாகப் பதிவு செய்யும் பொழுது அது வாசகனின் உள்ளுணர்வைத் தொடும்.
அதேவேளை கதையில் வரும் உதாரணங்கள் அல்லது வர்ணனைகளை மீண்டும் நிஜ வாழ்வில் இருந்து அல்லது மிக அருகாமையில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக அண்மையில் நான் எழுதிய சிறுகதையில் எந்தச் சந்தர்ப்பத்தில் பெண்கள் குசுகுசுப்பார்கள் என்ற பொழுது நான் அவதானிக்கும் பல விடயங்களைச் சேர்த்துக் கொள்வேன். அதனை எனது நிஜ வாழ்வில் இருந்து பெற்றுக் கொள்வேன். எனது ஒரு சிறுகதையில் ”ஐயரின் பஞ்சாலத்திக்கும் ”பஞ்சபுராணம் ஓதுக”க்கும் இடையில்” என்று ஒரு வரி எழுதிவிட்டு தனியே இருந்து சிரித்தேன். அப்போதே தெரியும் அந்த வரிகள் வாசகர்களைத் தொடும் என்று. இவ்வாறு பல சின்னசின்ன விடயங்களை சேர்க்கும் பொமுதும் கதையின் கருவும் வலுவுள்ளதாக இருக்கும் பொழுதும் அது வாசகனின் உள்ளுணர்வைத் தொடும்.
6)சிறந்ததொரு சிறுகதை எழுத்தாளராக திகழும் நீங்கள் சிறுகதைகளை எழுத முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன் முயற்சிகள் பற்றி இளம் எழுத்தாளார்களக்கு குறிப்பிடுங்கள்?
எனது இந்தப் பதிலை தயவு செய்து அடக்கம் காரணமாக சொல்கின்றேன் என எடுத்துக் கொள்ளவேண்டாம். ”சிறந்த ” அப்படி எல்லாம் ஏதுமில்லை. மேலாக இளம் எழுத்தாளர்கள் என்னும் பொழுது நானும் நான்கு அல்லது ஐந்து வருட இளம் எழுத்தாளன்தான்.
எங்களுக்குள் நாங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அடையாளம்தான் எங்கள் கதைகளின் வெளிப்பாடு அல்லது வீச்சு. அல்லது கருவின் பிரசவம். அடுத்தது விதம் விதமான ஐஸ்சிங் கேக்ககளும்இ பரதநாட்டியத்தில் பல பரீட்சார்த்த முயற்சிகள் போல அதனை அலங்கரித்து வெளியே கொண்டுவருவது தனிப்பட்டு ஒருவரின் பயிற்சியும் முயற்சியும் தான்.
இதனை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது ஒரு சந்தர்ப்பத்தில்இ அதுவே ஒரு எழுத்தாளரின் தனித்துவமான எழுத்து நடையாக உருவாகும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு நல்ல கரு கிடைத்திருன்றது கதை ஆக்குவோம் எனப் புறப்பட்டால் அது ஏதோ ஒரு நடையை போட்டோக்கொப்பி எடுப்பது போல இருக்கும். நல்ல கரு என அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் நல்ல கதை என ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
கதை என்பது எழுதுவது அல்ல. பிரசவிப்பது என்று புரிந்து கொண்டு அதற்காக வேலை செய்தால் மட்டுமே இளம் எழுத்தாளர்கள் என்றாலும் சரி, வளர்ந்த எழுத்தாளர்கள் என்றாலும் சரி நாங்கள் யாருக்காக எழுதுகின்றோமோ அவர்களுக்கு நல்ல கதைகளைக் கொடுக்க முடியும். அல்லது அது பக்கங்களை நிரப்பும் ஒரு வெற்று முயற்சியாவே இருக்கும்.
இறுதியாக எழுதி முடித்த பின்பு ஒரு வாசகனாக நாலைந்துதரம் வாசித்துப் பார்த்த பின்பும் கூட இது நல்ல கதைதான் என மனதுக்குப்பட்டால் தான் பிரசுரத்துக்கு அனுப்புவது பற்றி யோசிக்க வேண்டும். காரணம் ஒரு வாசகன் உங்களை நம்பி தனது நேரத்தை ஒதுக்கி உங்களின் பக்கத்துக்குள் நுழையும் பொழுது அவனை கொஞ்சமாவது திருப்திப்படுத்த வேண்டும். அல்லாவிடில் அடுத்த முறை உங்கள் பெயரைப் பார்க்கும்பொழுது தானாகவே அவனது கைகள் சில பக்கங்களைப் புரட்டிக் கொண்டு அப்பால் சென்று விடுவான்.
7). இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் எழுத்தாளருக்கு நீங்கள் சொல்லக் கூடிய அறிவுரை ஏதாவது?……
பேராசிரியர் திரு. மொனகுரு அவர்கள் எனக்கு சொன்ன அறிவுரையையே நான் அவர்களுக்கும் சொல்வேன்.
”ஜீவகுமாரன்… உங்களுக்கும் எனது மாணவியான கலாநிதிக்கும் ஒன்று சொல்வேன். இந்த இலக்கிய உலகம் பார்க்கும் பொழுது அமைதியான கடல் போல இருக்கும். இறங்கி நீந்தும் பொழுதுதான் அதனுள் பெரிய சுழிகள் இருப்பது தெரிய வரும். ஆந்த சுழிகளில் அகப்படாமல் நீந்திக் கரையேறுவதில்தான் உங்கள் வெற்றி உள்ளது” என்றார்.
அவர் சொன்ன பொழுது புரியாத பல விடயங்களை பின்பு புரிந்து கொண்டேன்.
எனது பார்வையில் நான் சொல்வதானால் ஒரு புதிய நகரத்துக்கு இடம் மாறிச் சொல்லும் பொழுது அந்த நகரத்து மாந்தர் அனைவருமே நல்லவர்களாகவே தென்படுவார்கள். பின்புதான் தெரியும் அங்கு ஏற்கனவே பல சண்டைகள் நடந்திருக்கும். பிளவுகள் நடந்திருக்கும்.
அங்கு எருதுடன் சேர்ந்தால் முடவனுக்கு கோபம் வரும். முடவனுடன் சேர்ந்தால் எருதுக்கு கோபம் வரும். எனது துர்ப்பாக்கியம் என்னை எருதும் கோபித்திருக்கு. முடவனும் கோபித்திருக்கின்றான். எனவே எந்தக் கட்சிகளுக்கோ அல்லது தனி நபர் நட்புகளுக்கோ இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு தனிநபர் நட்புக்கு இடம் கொடுத்தாலும் அவர்களுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் முரண்பட்டு விட்டுவிடாதீர்கள். உங்களைப் பேயாகச் சிதறிடித்து விடுவார்கள்.
மேற்குலக வாழ்வில் கருத்து மோதல்கள் அந்த தளத்திலேயோ நின்று விடும். தனிநபர் வாழ்வுவரை தொடர்வதில்லை.
ஆனால் கிழக்குலக வாழ்வின் அவ்வாறில்லை என்பது எனதுதனிப்பட்ட அனுபவம்.
8)உங்கள் இலக்கிய முயற்சிகள் பற்றி…?
இலக்கிய முயற்சிகள் என்று நேரடியாகச் சொன்னால் பசி வேட்டையில் திரியும் ஒரு விலங்கைப் போல் எப்போதும் ஒரு நல்ல கருவுக்காக காத்திருப்பேன். அது கிடைத்ததும் அதன் கறியை எவ்வளவு ருசியாக சமைக்க முடியுமோ அவ்வளவு ருசியாக சமைக்க முயற்சிக்கின்றேன்.
மற்றது: இலக்கிய மற்றும் ஒரு சமூக ஆர்வலனான எனது முயற்சிகள்:
1. புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை இலங்கைப் பாடசாலைகளுக்கும் வாசிகசாலைகளுக்கும் இலசவமாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு அதற்கு முன்மாதிரியாக செய்தும் காட்டினேன். எத்தனை பேர் அதனைத் தொடர்கிறார்கள் எனத் தெரியாது. ஆனால் நான் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு பரிசு கிடைத்த நாவலை நான் எனது பணத்தில் வாங்கி அதனை விநியோகிக்க இருக்கின்றேன்.
2. புலம் பெயர்ந்த மக்கள் எங்கள் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேன். இந்த ஆண்டு தொடக்கம் மிகச்சிறிய ஒரு தொகையை தினம் தினம் ஒவ்வொருவரும் சேர்த்து அவரவரே தங்களுக்கு விரும்பியவாறு அதனை ஏதாவது ஒரு தனிமனிதனுக்கோஇ குடும்பத்திற்கோ உதவுமாறு கேட்டிருக்கின்றேன். ஒரு ஐஸ்குச்சிக்கு செலுத்தும் பணம் தான் அது. தினம் தினம் சேர்த்தால் குறைந்தது 75 ஆயிரம் ரூபாய் சேர்க்க முடியும். நானும் என் மனைவியும் தொடங்கி விட்டோம்;. வேறு சிலரும் ஆரம்பித்து விட்டார்கள். பொங்கல் அன்று கூட ஒரு கட்டுரை எமுதியிருந்தேன் – ஒரு ஜில்லாவுக்கு, அல்லது வீரத்திற்கு டென்டார்க்கில் ஒரு குடும்பம் சென்று வர இலங்கைக் காசுக்கு 5000 முடியும். இதனுடன் ஒப்பிடும் பொழுமு வருடத்தில் 75 ஆயிரம் பெரிய தொகை இல்லை என்று. இது ஒரு இலக்கியப்பணி இல்லாவிட்டாலும் இதனை முன்வைப்பதற்கு நான் ஒரு இலக்கியக்காரன் என்ற முகம் எனக்கு நன்கு உதவியுள்ளது. இந்த சிந்தனை மாற்றங்கள் நிச்சயம் வரும். ஆனால் மெதுவாகத்தான் வரும்.
9) புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைமை பற்றிய உங்களின் கருத்து…?
புலம் பெயர்நாடுகளில் தொடர்ந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கின்றது. ஒன்றிரண்டு புத்தகங்களின் வெளியீடுகளுடன் அவர்களின் பணி முடிவடைந்த துர்பாக்கிய நிலை காணப்படுகிறது.
கட்சி அரசியல் என்பது போல கட்சி எழுத்துகளுக்குள் போய்ச் சிக்குண்ட பலரால் மீண்டும் ஒரு சம தளத்தில் நின்று எழுத முடியாது இருக்கின்றது.
வாசகர்களின் வாசிப்பின் அளவு குறைந்தும் அவர்களது கண்கள் முகநூல்களிலும் தொடர்நாடகங்களிலும் பதிந்து விட்டதால் பலருக்கு இலக்கிய உலகத்தில் என்ன நடக்கின்றது என்று தெரிவதில்லை. எனவே எழுத்தாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போதிய சமுதாய அங்கீகாரம் கிடைக்காததால் அவர்கள் சோம்பல் அடைகிறன்றார்கள்.
மாறாக எழுதுவது மட்டுமே எனது வேலை. வாசிப்பவர்கள் விரும்பிய பொழுது வாசிக்கட்டும் என நினைக்கும் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள்.
10) உங்களுடைய”கடவுச்சீட்டு” நாவலுக்கு சமீபத்தில் கிடைத்த விருது பற்றி…?
இந்த நாவல் போட்டி பற்றி எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணனின் இணையத்தளத்தில் வாசித்து அறிந்திருந்தேன். என்னுட்பட்ட இலங்கைத் தமிழரின் புலம்பெயர்ந்த வாழ்வின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் திரிபு இல்லாது ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஒரு அவா என்னுள் இருந்தது.
இந்த போட்டியைப் பற்றி அறிந்ததும் 25 வருட எழுச்சி வீழ்ச்சி என்பதை மாலைகட்டும் நூலாக வைத்து பல மலர்களை அந்த மாலையில் தொடுத்து விட்டேன். அதுதான் இந்த நாவல் உருவாகிய கதை. சிலது கண்ணுக்கு அழகாய் இருக்கும் வாசனை வீசாது. சில பிரதானமான வாசனையைக் கொண்டிருக்கும். ஆனால் அழகாக இராது. சில வாடியிருக்கும். சில அழுகியிருக்கும். இத்தனையையும் கொண்டு கட்டப்பட்டதுதான் ”கடவுச்சீட்டு” என்ற நாவல்.
இதற்கு பரிசு அறிவிக்கப்பட்டது கூட எனது முகநூல் வாசகர் ஒருவர் அறிவித்தே அறிந்து கொண்டேன். அடுத்த தினம்தான் போட்டியாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நானும் எனது முகநூலிலும் எனது 6700 மின்னுஞ்சல் வாசகர்களுக்கும் அதனை அறிவித்திருந்தேன்.
வாழ்வில் மிகச் சந்தோசமான ஒரு தருணம் அது.
11) நூல் வடிவில் வெளியாகிவை போட்டிக்கு அனுப்பப்படுவதுண்டு. இங்கு இந்திய பதிப்பாளர்கள் உலக அளவில் நடாத்திய ஒரு போட்டிக்கு கையெழுத்துப் பிரதியை அனுப்பி இதில் முதல் பரிசும் பெற்று அந்த கையெழுத்துப் பிரதியை அவர்களே நூலாக வெளியிடுவதை இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த வாசகர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்?
எனது மின்ன்ஞசலுக்கும் முக நூலுக்கும் அதிக வாழ்த்துச் செய்தி வந்த வண்ணம் இருந்தது.
பலர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள்.
எனது மனைவியின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு. விஷ்வேஸ்வரன் ஐயா அடுத்த கிழமை அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வரை இந்த நல்ல செய்தியை பலருடன் பகிர்ந்து கொண்டிருந்தாராம். அவரே கடவுச்சீட்டை மொழிபெயர்த்து தருவதாயும் ஒத்துக் கொண்டிருந்தார்.
எனது மனைவின் தாயார் (மாமியார்) ”நான் ஒரு ஆண்பி;ள்ளைப் பெற்றது போல இருக்கின்றது” என தொலைபேசியில் சொன்னது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாய் இருந்தது.
இந்த இடத்தில் கட்டாயமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும்.
மகாநதி படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் சொன்ன ஒரு வசனம் ஞாபகம் வருகிறது.
”கனகதாரா ஸ்தோத்திர மந்திரத்தைச் சொன்ன போது பணமும் கொட்டிச்சுது. தேளும் கொட்டிச்சுது”இ எனச் சொல்வார்.
அதேமாதிரி பரிசுச் செய்தியும் வந்தது. ஒரு மொட்டைக் கடிதமும் வந்தது.
ஆடுதுறை அம்பலவன்என்ற பெயரில் தமிழைக் காக்கும் அடியார் ஒருவர் பல எழுத்தாள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் ஒரு கடிதத்தை கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில் குறிப்பிட்ட மிகப்பிரதான விடயம்இ ”ஜீவகுமாரன் ஒரு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்த 50 ஆயிரம் ரூபாய் பரிசை பெற்றிருக்கிறார் என்று”.
எனது உதட்டினுள் புன்னகைத்ததை விட நான் வேறு என்ன செய்ய முடியும்?
அதற்கு அவர் பாவித்த சொல்லாடல்கள் எல்லாம் 60களின் ஸ்ரையில். என்னைப் பற்றி எழுதியதை விட அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை வாசிக்கும் பொழுது நன்கு தெரிந்தது.
”இவ்வாறுதான் அன்பர் தமிழும் தமிழ் தேசியமும் வளர்க்கின்றார்” என்று விட்டு அந்தக் கணத்துடன் அதனை விட்டுவிட்டேன்.
இதனை அறிந்திருந்தும் மரியாதை நிமித்தமாக எனக்கு தெரிவிக்காத இலக்கிய நண்பர்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்லவே இதில் குறிப்பிட்டு இருக்கின்றேன். வேறு எதற்கும் அல்ல. அழுக்கைத் தொட்டால் அழுக்கு எங்கள் கைகளில் படியும் என்று அரிச்சுவடி தெரிந்தும்இ இதனை நான் இதில் பதிவு செய்வே வேண்டும் என்பதால் குறிப்பிட்டு இருக்கின்றேன்.
எனது பலம் பரிசுகளும் விருதுகளும் அல்ல.
எனது நேர்மை எனக்குத் தரும் கர்வமே என்பதனை அவர் நன்கு அறிந்தும் அதனைச் செய்திருக்கின்றார்.
நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது பதில் நீண்டதாயும் இருந்தாலும் இதுவும் சேர்ந்ததுதான் இந்தப் பதில்.
மேடையில் பரிசு வேண்டும் பொழுதும் இவ்வாறான ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கின்றேன் என்ற வேதனை நிச்சயமாக எனக்குள் இருக்கும்.
12)உங்களின் படைப்புகள் பற்றிய சுயமதிப்பீடு யாது?
ஒரு வரியில் சொல்வதானால் ஜீவகுமாரன் என்ற ஒரு வாசகனை ஜீவகுமாரன் என்ற எழுத்தாளனின் எழுத்துகள் திருப்திப்படுத்துகின்றன.
அடுத்து எனது அண்மைக்காலக் கதைகளில் கதை மாந்தரைச் சுற்றி கதையை அமைக்காமால் கதைமாந்தரின் உள்ளுணர்வுகளுக்குள் சென்று கதையின் பெரும்பகுதியை நகர்த்திக் கொண்டு இருக்கின்றேன். அது ஒரு தியானநிலையில் இருந்து கதை எழுதுவது போல எனக்கு ஒரு உணர்வைத் தருகிறது. அது அதிகமான வாசகர்களுக்கும் பிடித்திருக்கின்றது.
வர்ணனைகள் அல்லது காட்சி விபரிப்புகளில் முடிந்தளவு யதார்த்தைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்பிச் செய்கின்றேன். குடித்து விட்டு வந்தான் என்பதனைக் காட்டிலும் அவன் குடித்திருந்த கள்ளின் வாசனை அவன் மீசையிலும், வியர்வையிலும்இ, வெற்றிலையினதும் நாறல் பாக்கினதும் நாற்றம் வாயிலும் வீசியது என்னும் போது அந்த பாத்திரத்துக்கு மிக அண்மையில் செல்லும் உணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதற்காக வேலை செய்கின்றேன்.
13)ஒரு எழுத்தாளரின் தர்மம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
இந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் சொன்னதுதான். சொல்லுக்கும், எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாது இருக்க வேண்டும்.
சக எழுத்தாளர்களை பாராட்ட வேண்டிய இடத்தில் அவர்களை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்கும் போது அது தங்களுக்கு கிடைத்ததாக மகிழ வேண்டும். உடன்பாடுகள் இல்லாதவிடத்து நட்பும் தொடர்புகளும் முறியாது சம தளத்தில் இருந்து விவாதித்து கைகுலுக்கிக் கொள்ள பழகவேண்டும்.
நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் அவற்றை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் இருப்புகளை அந்த வழிகளில் உலகத்துக்கு காட்டும் கைங்கரியங்களை செய்யக் கூடாது. அது போன்று புது முயற்சி எடுப்பவர்களும் அதனுடைய வெற்றி அல்லது தோல்வியை தங்களது வெற்றி அல்லது தோல்வி என்று எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் தோல்விகளில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டு இன்னும் பல வெற்றிகளைச் சந்திக்கலாம்.
வெற்றி என்பது தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. தோல்வி என்பது அடுத்த வெற்றிக்கான சவால். ஆகவே வெற்றியை தலைக்கும் தோல்வியை மனதுக்கும் கொண்டு செல்லாத மனப்பான்மையை எங்களுக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
14) ஈழத்துச் சிற்றிதழ்கள் பற்றி…?
இலங்கைச் சிற்றிதழ்கள்தான் எனக்கு களம் அமைத்து என்னை தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருப்பவை. அனைத்திற்கும் நான் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றேன். அத்துடன் அவற்றின் பரம்பலுக்கு என்னால் ஆன உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றேன்.
பல இதழ்களை சந்தித்து இருந்தாலும் தொடர்ச்சியாக வாசித்தது மல்லிகைஇ ஞானம்இ ஜீவநதிஇ செங்கதிர்.
இப்பொழுதும் தபால் பெட்டியைத் திறக்கும் பொழுது மல்லிகை அதனுள் இராதா என்பது எனது ஏக்கமாய் இருக்கின்றது.
ஞானம், ஜீவநதி இரண்டும் அமைப்பில் ஒற்றுமை உண்டு. பிரதம ஆசிரியர்களின் வாழ்வு அனுபமும்இ சிற்றிதழ்களின் வயது அனுபவமும் இரண்டிலும் துலக்கமாக தெரிகின்றது. அதேமாதிரி கட்டுரைத் தேர்வுகளில் காணப்படும் வேறுபாடுகள் தான் இந்த இரண்டு சிற்றிதழ்களின் தனித்துவம் என நான் நினைக்கின்றேன். இரண்டு சஞ்சிகைகளும் இரு வேறுபட்ட திசைகளில் காத்திரமான கட்டுரைகளை தெரிவு செய்கின்றீர்கள். மேலாக பொருளாதாரமும் சிற்றிதழ்களின் பரம்பலும் அவற்றின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றனவோ என்ற ஐயமும் இடைக்கிடை தோன்றி மறைகிறது.
செங்கதிர் அமைப்பிலும் எழுத்து வடிவங்களிலும் இன்னும் முன்னேறவேண்டும் என்பது எனது அவா. அதையும் தாண்டி அது ஒரு பிரதேச சிற்றிதழோ என்ற ஐயத்தை சிலவேளை ஏற்படுத்துகிறது. இது எனது தவறான கணிப்பாகவும் இருக்கலாம். அவ்வாறாயின் செங்கதிர் ஆசிரியர் என்னை மன்னிப்பாராக!
15) புலம்பெயர்நாடுகளில் நிலவும் இலங்கை அரசியல் உங்கள் எழுத்துதுறைக்கு எவ்வாறு பலம் சேர்த்துள்ளது?
நான் ஆரம்பத்தில் இருந்து இதுவரை எந்தக் கட்சியைச் சார்ந்தோ அல்லது ”இசும்”கள் சார்ந்தோ எழுதவில்லை. ஆனால் அதனுள் வரவேண்டும் என்பது பலரின் பெருவிருப்பு.
மேலாக ஆயுதங்கள் மௌனமாகும்வரை புலம்பெயர்நாடுகளுக்கு என்று பெரிய அரசியல் எதுவும் இருக்கவில்லை. இலங்கையில் இருந்து கட்டளையிடப்பட்டவை இங்கிருந்து நிறைவேற்றப்பட்டன. தற்பொழுது எங்கிருந்து கட்டளைகள் வருகின்றன எனக்குத் தெரியாது ஆனால் அரசியல் ஒரு மட்டத்தில் நிலவிக் கொண்டு இருக்கிறது. நீங்களும் லங்காசிறியில் பார்ப்பீர்கள் தானே!
எந்த குழு அரசியலிலும் நான் இல்லாததால் அவர்களது அங்கீரம் அல்லது ஆதரவு எனக்கு கிடைப்பதில்லை. அதை எதிர்பார்த்தும் நான் இல்லை. மேலாக எனக்கு பலம் சேர்க்க ஏதோ ஒன்றின் பக்கம் சாரும் பொழுது எனது எழுத்தின் பலம் போய்விடும் என்பதால் நான் நானாக இருக்கின்றேன்.
16) நாவல், குறுநாவல்இ சிறுகதைகள், கட்டுரைகள் என பல வடிவங்களில் அதற்கேற்ற சொல்லாடல்களுடன் வலம் வருகின்றீர்கள். இதில் அவற்றில் அதிகமாக உங்களது திறமை வெளிப்படுகிறது என நினைக்கின்றீர்கள்?
சிறுகதையில் தான் அதிகளவு காலம் எனக்குப் பரீட்சயம். அது ஒரு வன் டே கிறிக்கட் மச் விளையாடும் சந்தோசம். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும். அந்த விளையாட்டில் கூட ஒருவரை பல விதத்திலும் ஆ;ட்டமிழக்கச் செய்ய முடியும் என்றாலும் எனக்குப் பிடித்தது நான் எறியும் பந்து நடுவிக்கற்றைத் தகர்க்க வேண்டும் என்பது. அவ்வாறு தகர்த்தவற்றிக்கு விருதுகள் கிடைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
நாவல் என்பது ஒரு மணிநேரம் என்றாலும் பரந்து பட்ட பரப்பில் ஓடி விளையாடி கடைசியாக ஒரு கோலுக்கு வருவது. அதனது அனுபவம் வேறுபட்டது. இதற்கு பல நாட்கள் உழைப்பும் திட்டமிடுதலும் தேவை. பதினெருபேரையும் இணைத்துச் செல்வது போல பல சம்பங்களை சரியாக தொகுத்தும் இணைத்துக்கொண்டும் செல்ல வேண்டும். பிழைத்தால் சேம் சைற் கோல் போடவும் வாய்ப்புண்டு. அதனைச் சரியாகச் செய்தால் பார்வையாளர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள். எழுதி முடியும் போது பெரிய களைப்பு ஏற்படும். எனது பிற்காலம் அதிக நாவல்கள் படைப்பதில் கழியும் என நம்புகின்றேன்.
கட்டுரைகள் அந்த அந்த தேவைக்கு ஏற்ப மிகவும் வலிமையான சொற்களைத் தேர்ந்தெடுத்து மிகவும் தெளிவாக எழுதுவது. அது தேவையின் நிமித்தம் மட்டுமே என்னால் செய்யப்படுவது. அது எனது துறை இல்லை.
17). இறுதியாக வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
வாசகர்கள் முதலில் அதிகளவு வாசிக்க வேண்டும். வாசித்தவற்றைப் பற்றி அதிகம் விவாதிக்க வேண்;டும். அந்த ஆரோக்கியமான சூழ்நிலை இன்று குறைந்து வருகின்றது என நினைக்கின்றேன்.
புத்தக வெளியீடு என்று ஒரு நிகழ்வு இருந்தால் அதற்கு அடுத்த வாரமே புத்தக ஆய்வு என்ற ஒன்றை ஒழுங்கு செய்ய வேண்டும். அதில் வாசகர்கள் பங்கு கொள்ள வேண்டும். அதிகமான வெளியீட்டு விழாக்களில் மேடைப்பேச்சும் சபை மரியாதை கருதி பாராட்டு மட்டுமே நடைபெறுகிறது. ஆனால் வாசகர்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்து ஒரு மாதத்தில் வெளியான 4 புத்தகங்களையும் அதன் ஆசிரியர்களையும் இணைத்து ஒரு கலந்துரையாடல் நடாத்தினால் அது பெரிதும் நன்மை பயக்கும் என்பது எனது கருத்து. இதனை இந்தியாவில் நான் சந்தித்து இருக்கின்றேன். ஒரு புத்தக வெளியீட்டு விழாவை விட இது மிகவும் பெரியளவில் ஆரோக்கியமாக இருக்கும். இதனை வாசகர்கள் அல்லது வாசகர் வட்டங்களே செய்ய வேண்டும். நூலை எழுதிய எழுத்தாளர்கள் இதனை ஒழுங்கு செய்தால் மீண்டும் சபை மரியாதையுள் இதிகாசங்கள் திருக்குறளாக குறுகிவிடும்.
அவ்வகையில் நல்ல எழுத்துகளை எழுத்தாளர்களிடம் இருந்து பெறுவதில் வாசகர்களுக்கும் ஒரு பங்குண்டு.
17. இறுதியாக ஜீவநதி பற்றி அல்லது ஜீவநதிக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பிரபலமான 3 ஆளுமைகளை பின் புலமாகவும், இரு எழுத்தாளர்களை பக்க பலமாகவும், ஒருவரை உங்களின் பாதியாவும் வைத்திருக்கின்றீர்கள்.
இவ்வளவு பேரின் கூட்டுழைப்பின் வளர்ச்சியை நன்கு அவதானிக்க கூடியதாய் உள்ளது.
பரணீதரனின் முகநூலில் இருந்து எவ்வளவு பணப்பிரச்சனைகளுடு இதனை நடாத்துகின்றீர்கள் என தெரிகிறது. அதற்கு பரம்பல் மிக முக்கியம்.
இன்னம் ஆழமாய்ச் செல்லச் செல்ல அதன் பரம்பலும் அதிகமாகும் என நம்புகின்றேன். காரணம் பரம்பல் ஒரு சஞ்சிகைக்கு மிக முக்கியம். அதற்கு அன்றாடப் பிரச்சனைகளை இன்னும் காத்திரத்துடன் மையப்படுத்தினால் நன்றாய் இருக்கும். அதி குறைந்தது கார்டுன்; வடிவில் ஆவது அதனைச் செய்யலாம் பொழுது போக்குச் சஞ்சிகையாகவும் மாறிவிடாது அதேவேளை மிகச் சாதாரண வாசனுக்கு எட்டமாகவும் போய்விடாது ஒரு சமநிலையில் செல்லக் கூடியவாறு அதன் தோற்றம் உருப்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கணிப்பு. காரணம் இன்றைய சஞ்சிகைகள் கணனியுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.
என்னை இந்தப் பேட்டி எடுத்ததன் மூலம் என்னை இன்னும் அதிகமாக வாசகர்களுக்கு அருகே கொண்டு சென்றமைக்கு ஜீவநதிக்கு மிக்க நன்றிகள்;.
Skriv et svar